Monday, June 5, 2023
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 04 கே.மாதவனை நினைவு கூர்தல்

யாளி பேசுகிறது – 04 கே.மாதவனை நினைவு கூர்தல்

நினைவுகூறல் என்பது மனிதனின் மிக முக்கியமான குணாதிசயங்களில் ஒன்று. இன்றைய வரலாறு என்பது மறந்து போனவைகளின் எச்சமாகத் தான் இருக்கிறது. ஆம் நம் நினைவில் விட்டு நீங்காது என்று சொல்லிக் கொண்டிருந்த எத்தனையோ விசயங்களை முழுவதுமாக மறந்து போகும் அளவிற்கு சாத்தியமுள்ள உலகில் தான் நாம் வாழ்கிறோம். இப்போது நம் நினைவுகூறல் ஒரு மாபெரும் கலைஞனைப் பற்றி, அக்கலைஞனை நினைவு கூர்வது வெறும் மரியாதை தரும் செயலாக மட்டும் நின்று விடாமல், மீட்டெடுத்தல் அல்லது ஒப்பிட்டுப் பார்த்தல் என்ற இரண்டு விதங்களில் இன்றைய சமகலை மீதான நிலையை நிறுத்துப் பார்க்க வைக்கும். அப்படி நம் நினைவில் இருந்து அநேகமாக மறந்து போன அந்த முக்கியமான கலைஞன் தான் கே.மாதவன் .

படம் எண்:11

1960-70களில் புத்தகம், இதழ் வாசித்தவர்களுக்கு கே.மாதவன் என்று சொன்னால் கண்கள் பளிச்சென்று மாறும். அநேகமாக அவர்கள் வாசித்த அத்தனை இதழ்களிலும் முகப்பு ஓவியம் கே.மாதவனுடையதாகத் தான் இருக்கும். கே.மாதவன், மணியம், ராஜம், சில்பி, கோபுலு என்று தமிழக மக்கள் தூக்கி வைத்துக் கொண்டாடிய இதழ்களுக்கான விவரனப்பட ஓவியர்கள் (Illustrators) வரிசையில் முதன்மையானவர் கே.மாதவன். விகடன், கல்கி, சாவி, முத்தாரம்(பக்கம் எண்:11), உமா, நளாயினி, காவேரி போன்ற பல்வேறு இதழ்களில் முகப்பு ஓவியங்களாகவும், படைப்புகளுக்கான விவரனப் படங்களாகவும் வந்தன, காலண்டர்கள், பேனர்கள், சினிமா விளம்பரங்கள் என்றும் தொடர்ந்து வந்தன. நிற்க.

ஒரு பக்கம் நவீன ஓவியங்களுக்கான தொடக்கம் கே.சி.எஸ்.பணிக்கரிடமிருந்து ஒரு இயக்கமாக உருவெடுத்த காலக்கட்டம், அதே காலத்தில் வெகுஜனங்களைச் சென்றடைந்த ஒரு கலைஞரும் மிக முக்கியமானவர். ஏனெனில் ஒரு நல்ல கலை மரபினில் இது போன்ற ஒரு சமமான பயணத்தின் மூலம் தான் ஒரு சமூகம் தன்னை உயர்ந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளும். எப்படியிருந்தாலும் POPULAR ART என்பது ஓவியனை முன்னிறுத்தும் கலையாக இல்லாமல், தன் அழகியலை, செய்நேர்த்தியை, தொழில்நுட்பத்தை படைப்பின் உபப்பொருளாகவோ அல்லது விளம்பரமாகவோ தன்னை காட்டிக் கொண்டிருக்கிறது. இருந்தபோதும் popular artistகளை மக்கள் கொண்டாடிய காலம் தான் கே.மாதவனையும் மற்ற Illustratorகளையும் கொண்டாடி வந்த மரபாகத் தொடர்ந்தது.

விபரணப் படங்கள் (Illustrations):

படம் எண்: 12
படம் எண் : 14

கனடா நாட்டு கலைவரலாற்று அறிஞரான ஸ்டீஃபன் இங்க்லீஸ் தனது கட்டுரைகளில் மாதவனை ‘தென்னிந்தியாவின் நார்மன் ராக்வெல்’ என்று குறிப்பிடுகிறார். கே.மாதவனின் ஓவியங்களை உலக மேடையில் சரியான தளத்தில் கொண்டு போயிருந்தால், நார்மனை “அமெரிக்காவின் மாதவன்” என்றும் குறிப்பிட்டிருப்பார் என்று எழுதுகிறார் (ஆதாரம்:http://www.tasveerghar.net/) , இவரது கட்டுரை  நமக்கு கிட்டிய ஒரு முக்கிய ஆவனமாகும். ஒரு illustratorஐ ஒரு நவீனச் சமூகம் எப்படி மதிக்க வேண்டும் என்று உணர்த்தியது, நார்மென் ராக்வெல்லைப் போல ஏன் நம் கலைஞர்களை மதிக்கும் பண்பு வரவில்லை என்று தோன்றுகிறது.  “யார் வரைந்தது?” என்று கூட நாம் அறிந்திராமல் வருடம் முடிந்த பின்னும் நாட்காட்டி அட்டைக்கும்(காலண்டரில் வரும் பக்தி ஓவியங்கள்) பூஜை செய்யும் பழக்கம் நம்மிடையே இருந்து வருகிறது. கோயில் சிற்பங்களாகட்டும், இது போன்ற காலண்டர் ஓவியங்கள், பொம்மைச் சிலைகள் ஆகட்டும் யாருக்கும் அதன் படைப்பாளியைத் தேடி அறிய வேண்டிய நிர்பந்தம் இந்த மண்ணில் இல்லை. இந்த சூழ்நிலையிலும் மாதவன் வெகுஜனங்களைக் கவர்ந்தவராகவே இருந்தார், அது மற்ற ஓவியர்களையும் கொண்டாடுவதற்கு வெகுஜனத்தை பழக்கியிருந்தது. (படம் எண்:11,12,13).

படம் எண் : 13

 

வாழ்த்து அட்டைகள்:

கே.மாதவன் யாரென்று தெரியாமலேயே அவரது ஓவியங்களைக் கொண்டாடியிருக்கிறோம். காலண்டர் ஓவியங்களாக, சினிமா போஸ்டர்களாக, பொங்கல் வாழ்த்து அட்டை வடிவிலாக என்று, 70களுக்குப் பின்னும் 90களின் ஆரம்பம் வரை கே.மாதவனின் வாழ்த்துஅட்டை ஓவியங்கள் நமக்கு நினைவில் இருக்கலாம். ஒரு கிராமத்தின் குடும்பம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து இவர் வரைந்த ஓவியங்கள் உள்ள வாழ்த்து அட்டைகள்(படம் எண்:01) மறக்க இயலாதது. இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் சூரியனுக்குப் படைக்கும் பொங்கல் சடங்கு மட்டுமல்ல, விளைநிலங்களும் அருகித் தான் போய் விடும், அது போன்ற சூழலில் இந்த ஓவியங்கள் நாம் பொங்கலை இப்படியெல்லாம் கொண்டாடியிருக்கின்றோமா என்று வியக்க வைக்கும்.

படம் எண் :16

படம் எண்:15

அவரது நீர்வண்ணங்களில் வரையப்பட்ட கதாப்பாத்திரங்கள் மிகவும் எளிமையான, அதே சமயம் குறைவில்லா அழகோடு ஜொலித்தன, வரலாற்றுக் கதைகளிலும், சமூகக் கதைகளிலும் உச்சபட்ச அழகியலை சாத்தியப்படுத்தினார் என்று சொல்வது மிகையில்லை. கிராமங்களை இத்தனை அழகாக வேறு எங்கும் பார்க்க இயலாது என்று சொல்லும் அளவிற்கு வாழ்த்து அட்டைகளில் இவரது படைப்புகள் பெரிதும் கொண்டாடப்பட்டன. அவரது ஓவியங்கள் இன்னமும் பலரது வீட்டில் பிரதியெடுக்கப்பட்டு பூஜை அறைகளில் ஒளிர்கின்றது, கடவுளின் தோற்றமாக (படம் எண்:15) பல தலைமுறைகளுக்கு இவர் வரைந்த வடிவங்கள் தான் இருக்கும் என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இது போக அரசியல் படங்கள், நாடகத்திற்கான திரைச்சீலை ஓவியங்கள், திரைப்பட போஸ்டர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் (படம் எண்: 16) என தன் வாழ்நாள் முழுக்க இயங்கிக் கொண்டிருந்தார்.

கே.மாதவன்

இந்த நேரத்தில் அவரை நினைவு கொள்வதற்கான காரணம் இருக்கிறது, வெறும் பொங்கல் வாழ்த்து சொல்வதற்கான கட்டுரையல்ல இது. தமிழ்ச் சுழலில் இயங்கி வந்த இதழ்களில் விபரணப் படமாக வரையப்பட்டவர்களைக் கொண்டாடிய காலத்தை தான் நாம் நினைவு கொள்கிறோம். சிற்றிதழ்கள் பெருகி, நவீன ஓவியங்களையும் நாம் விபரணப் படமாகப் பார்க்கும் மரபு உருவாகி பல வருடங்களாகி விட்டது. ஆனால் அன்று இருந்த மனநிலையில் கூட இன்றைய வாசகர்கள் இல்லை, வெகு தூரம் விலகி வந்து விட்டோம். இணையத்தின் அண்மையில் நாம் எழுதி வைக்கும் ஐந்து வரி அபத்த கவிகளுக்கெல்லாம் பிகாஸோ, வான் கோவின் ஓவியங்களைப் படுத்துகிறோம். சமூகவலைதளங்களில் நமது நிலைச் செய்திகளை வேறொருவர் தன் பெயரில் பதிந்தால் கூட PLAGIARISM என்று கூச்சல் போடும் சூழலில், எத்தனையோ இதழ்கள், புத்தகங்கள் வண்ணமயமான அச்சில் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து அட்டைகள் போடுகின்றனர். ஆனால் ஓவியக் கலைக்கென தங்களை அற்பணித்துக் கொண்டவர்கள் தங்களுக்கான இடம் வேண்டும் என்று கெஞ்சப் போவதில்லை, ஆனால் உண்மையான கலைகள் நம் நிலத்தை விட்டு அகன்று விடும். நம் சமூகம் வெறுமனே டிஜிட்டல் போஸ்டர் ஒட்டும் சமூகமாகத் தான் எஞ்சியிருக்கும்.

 

RELATED ARTICLES

2 COMMENTS

  1. நல்லதொரு அறிமுகம். இவர் படங்களை எத்தனையோ முறை பார்த்த நினைவு. முகம் தெரியாமல் அடங்கிப் போன படைப்பாளிகள் இது போல் எத்தனை பேரோ என்று நெஞ்சம் பதைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments