யாரோ தொலைத்த இசைத்தட்டு: 02

1

-தமயந்தி

ப்பா அந்த வாரமே ரொம்ப அமைதியாகிப் போனார். வாத்தியார் போனத அவரால தாங்க முடிலனு அம்மா சொல்லிட்டே இருந்தா. ஞாயித்துக்கிழமை அவருக்குனு நெஞ்செலும்பு சூப் போட்டுக் கொடுத்தா. ஆனா அப்பா அத குடிக்காமலேயே வச்சிருந்தார். அம்மாக்கு கோபம் வந்து, சாப்பிடாம இருந்தா ஒங்க வாத்தியார் வந்துடவா போறாரு?ன்னா. அப்பா அப்ப பேப்பர் படிச்சிட்டு இருந்தார். அப்பா பெரும்பாலும் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சரா வருவார்னு சொன்னார். ஜெயலலிதாவ இறுதி ஊர்வலத்துல தள்ளி விட்டப்ப அப்பா ரொம்ப மனசு கனத்துப் போனாரு. இந்த இடத்துல இதெல்லாம் தேவையா? தலவரு இறந்து கிடக்காரு.. இதெல்லாம் தேவையானு திரும்பத் திரும்ப குடிச்சபடி சொல்லிக்கிட்டே இருந்தாரு. அப்பாவோட கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு.

சித்தப்பா இதக் கேட்டுட்டு ஒன்னுஞ் சொல்லல. முன்னனா ஏதாச்சும் சொல்லிருப்பாரு. ஒரு தடவை எம்ஜிஆர் பெரிசா கருணாநிதி பெரிசானு ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஆகி அப்பா கேரம் போர்ட்டை தூக்கி விசிறி எறிஞ்சார். அன்னிக்கு பூரா சித்தி மோரைய தூக்கி வச்சிருந்துச்சு. சித்தப்பா மேல பட்ட அடி தான் காரணம்னு எல்லார மாதிரி நானும் நெனச்சேன். ஆனா அதில்ல. அவ மனசுல பட்ட அடி அது. அம்மா சாப்பிடாம இருந்த சித்திய ஆயிரம் கேள்வி கேட்டப்புறமா அவ – “இந்த வீட்ல எம் ஜிஆர, கருணாநிதிய பேசினா தான கேப்பாக”ன்னு சொன்னா.

அப்டி என்னத்தாம்டி கேக்கல?ன்னு அம்மா கேட்டதுக்கு அமைதியாருந்தா. கன்னத்துலருந்து கண்ணீர் மட்டும் வழிஞ்சிச்சு.

“என்னதாம்டி.. சொல்லு” என்றவள் என்ன பாத்து “ஏம்ல..அங்கிட்டு போ”ன்னு சொன்னா.

“அவரு..எவ போட்டோவயோ வச்சிருக்காரு..”

சித்தி கிசுகிசுப்பாத்தான் சொல்லுச்சு. ஆனா எனக்கு நல்லா கேட்டுச்சு. ஒருவேளைக்கு கடவுளே அவ என்ன சொல்லுதாம்னு எனக்கு கேக்கணும்.. வேற எல்லா சத்தத்ததும் அமுக்கிறுன்னு நான் நினச்சது கூட காரணமா இருக்கலாம்.

அம்மா எந்திரிச்சு சித்தி கூட உள்ள போச்சு. அப்றமா அம்மா மட்டும் அப்பாட்ட வேகமா வந்து தனியா கூப்டுச்சு. அப்பா சித்தப்பாவ கூப்டு படார்னு அடிச்சாரு. சித்தப்பா மறுக்கா வேகமா அறைக்குள்ள போச்சுது. “ம்மா..”ன்னு ஒரு சத்தம்

“அடிக்காரு கொழுந்தன்.. போங்க.. மலயா நின்னா ஆச்சா.. என்ன ஏதுன்னு கேக்காத கை தான் மொதல்ல திருநெவேலிக்காரனுக்கு பேசும்..போய் அந்த பிள்ளய அடிச்சி போட்டுட்டான்னு பாருங்க”

அப்பா உள்ளே போயும் போகாமலும் கூப்டார். அம்மா கெடந்து பொழிச்சு தள்ளினா. ஆனா இப்ப சித்தப்பாவால பதிலேதும் பேச முடியாத சூழல். அன்னிக்குப் பிரச்னைக்கு அப்புறமா சித்திய அப்பாவே ஊருக்கு அனுப்பி வச்சாரு. சித்தப்பா அமைதியா இருக்க “கொஞ்ச நாள் போயிட்டு வரட்டும்”னு சொன்னாரு.

சித்தி ரொம்ப இறுக்கமா இருந்தா. கன்னத்துல மட்டும் அப்புற மாதிரி ரொம்ப பவுடர் பூசியிருந்தா. அம்மாவப் பாத்து

“பாத்துக்கோங்கக்கா”ன்னா

சரில..கவலப்படாதனு அம்மா சொன்னப்ப அம்மாவ எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. பகிரப்படாத வெறுப்பை வெளிப்படுத்தாம எதிராளியோட வலிய புரிஞ்சிக்கிறது தவிர மனுஷ வாழ்க்கைல வேறொன்னுமில்லனு அப்ப அந்த நிமிஷம் தோனுச்சு. சித்தி கிளம்பிப் போன அன்னிக்கு சித்தப்பா அறைய விட்டு வரவே இல்ல.

அம்மா தான் அன்னிக்கு சித்தப்பா அறையத் தட்டி “சாப்பாட வாங்க”ன்னா

“இல்ல வேணாம் மைனி”

“அப்படி சொல்லப்படாது.. கொஞ்சமா சாப்பிடுங்க.. வயித்த காயப் போட்டா வாழ்க்கை சரியாயிடுமா என்ன?”

“பசிக்கல”

“மனசு சொன்னா வயிறு பசிக்கும்.. இதப் பாருங்க கொழுந்தா..நடந்தது நடந்திடுச்சு..”

“அவ திரும்ப வருவாளாமா?”

“இதான் மனகிலேசமா? வுட்டுத் தள்ளுங்க.. குடும்பம்னா எல்லாம் இருக்கும். அவளுக்கும் மனசு கஷ்டமாத்தான இருக்கும்.. நம்மூரு பொம்பளைங்க வாய்தான் வக்கணையா பேசுவாளுங்க.. அன்ப மட்டும் பகிர்ந்துக்க தகரியம் கெடையாது

சித்தப்பா ஒன்னுஞ் சொல்லாம அமைதியா உக்காந்திருந்தார்.. அவரோட தொண்டக்குழில வேகமா எச்சி முழுங்குற தடயம் தெரிஞ்சிது.

“நானுஞ் செஞ்சது தப்புதானனு சித்தப்பா சொன்னார். அப்ப அவரோட முகம் கருத்துக் கிடந்துச்சு. மனசுல எவ்ளோ வலியிருந்தா இவ்ளோ இறுக்கம் இருக்கும்னு எனக்குத் தோனுச்சு. சித்தியோட அப்பா எல்லாத்துக்கும் கோவப்படுற ஆளுனு சொல்லிருக்காங்க. அவங்க அம்மா இன்னிக்கு ரசம்னு சொன்னா கூட அவங்கப்பா “யாரக் கேட்டு ரசம் வச்சனு கத்துவாராம்..அதனாலயே சித்திக்கு கல்யாணம் ஆன புதுசுல சித்தப்பா அமைதியாருக்கறது ரொம்பப் புடிச்சிருந்திருக்கு.

அதை சித்தப்பாட்ட சொல்லலாம் போல இருந்துச்சு எனக்கு. ஆனா அம்மா , “ நீங்க சொந்த காரியத்துக்காக கவலப்படுதீக ..அவுகன்னா அரசியல்ல தலைவரு போயிட்டாரு.. கட்சில என்னலாமோ நடக்குனு கவல.. என்னத்த சொல்றது..“ன்னுட்டு அம்மா செம்பை நங்குனு தரைல வச்சா. அவளோட அத்தனை கோவத்தையும் ஒரு சொம்புக்குள்ள போட்டு அத போட்டு நங்குனு வச்ச மாதிரி இருந்துச்சு. சித்தப்பாக்குள்ள ஒரு சின்ன நகர்தலை நான் பாத்தேன். ஒரு நீண்ட மவுனத்துக்குப் பிறகு அவர் ” நெடுஞ்செழியன் தான் வருவார்னு நெனைச்சேன்.. ஜானகியம்மா ஆகிடுவாங்களாமே?”

“யார் வந்தா என்ன? நான் இங்கிட்டு தான்.. மெஞ்ஞானபுரத்துக்காரி அங்கிட்டு தான்”

சித்தப்பா ஒரு நிமிஷம் தயங்கி “ அவளும் இங்கிட்டு தான் மைனி”னார்

“இப்படி பேச தெரியுதில்ல.. சாப்பிடுறது?”

“கொண்டாங்க ” சித்தப்பாக்கு இப்ப இறுக்கம் குறைஞ்சிருந்துச்சு. அம்மா தட்டு வைத்து சாதம் அள்ளின “அவருட்ட சொல்லுங்க சின்னவரே..அவங்கய்யா போனப்ப கூட அவரு இப்படி பீல் பண்ணல..”

“இனியா அவரு மாறுவாரு? வாத்தியாரு அவருக்கு அய்யாக்கு மேல.. கலைஞர்ட்ட கணக்கு கேட்டவருக்கு என்னடா சப்போர்டுனு ஐயா அண்ணண்ட்ட ஆறு மாசம் பேசவே இல்ல தெரியுமில்ல?”

“என்னத்த அரசியலோ போங்க? நம்ம குடும்பம் உண்டா.. நாம உண்டானு இல்லாம இதென்ன எழவோ?”

“ஒரு காலத்துல புடிச்ச எல்லாமே கொஞ்சங் காலம் கழிச்சி எழவா தான் போயிடுது”

அம்மா இப்ப காய் அள்ளிப் போட்டு விட்டு சிரிச்சா.

“க்கும்…இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல…”

சித்தப்பாக்கு அந்த இன்னொரு பெண்ணோட ஞாபகம் வந்திருக்கும் போல. கீழ் உதட்டை உள்ளிழுத்து கடித்துக் கொண்டார். அவருக்குள்ள மனசுக்குள்ள அலை அடிச்ச மாதிரி நெறைய விஷயங்கள் ஓடிட்டு இருந்த மாதிரியே இருந்துச்சு எனக்கு.

அன்னிக்கு ராத்திரி சித்தப்பா நடுரூம்ல படுத்து பாடிட்டே இருந்தாரு…” நல்லவருக்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு –ஒன்னு மனசாட்சி-ஒன்னு தெய்வத்தின் சாட்சியம்மா.. நம்பிக்கை வைத்து கல்லையும் பாத்தா அதுவும் தெய்வத்தின் சாட்சியம்மா.. அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…”

அப்பா எழுந்து போய்- “தூங்குடா”னு சொன்னார். சித்தப்பா போர்வையால முகத்தை மூடிக்கிட்டு உடனே திரும்பிப் படுத்தார். அவர் இடுப்பு பக்கம் ஒரு பாட்டில் இருந்தது அப்பா கண்ணுல பட்டுடுச்சு

“எங்க போனான் இவன்? எப்ப இத வாங்கினான்?”னுட்டு அம்மாவ பாத்து அப்பா கேட்டார். ”எனக்குத் தெரிலயே”னு அம்மா சொன்னா. அப்பா கோவமா அந்த பாட்டில போர்வ வழியா இழுத்தெறிஞ்சு கோவப்பட்டு கத்தினாரு.

“என்ன நடக்கு இந்த வீட்டுல… பாத்துக்கனு சொல்லிட்டுதான போனேன்..”

“மைனிட்ட ஏன் கத்துத.. நான் எங்கயும் போகல.. வூட்ல இருந்ததுதான் ”சித்தப்பா எழும்பி உக்காந்து சொல்ல- அப்பா பாட்டிலை சுவரில் எறிஞ்சார். அம்மா மருண்டு தள்ள “ஒன்னுலருந்து மீண்டானு நெனைச்சா அடுத்ததுல குடி போனா என்ன? எங்கிட்டு கெடைக்கு சாராயம் ஒனக்கு?

“இது மார்த்தண்டத்துலருந்து குமரன் கொண்டு வந்தது”

அப்பா சித்தப்பாவையே வெறிச்சிப் பாத்தாரு.. “கஷ்டமாருக்குல.. இப்படி நீ செஞ்சா ஆருக்குதான் நிம்மதி சொல்லு..”

”தெரிது… அவ பழக்கம் இப்ப தான்ண்ணே… நல்லா பாடுவா… எனக்கு ஒரு பைத்தியம் பிடிச்சிட்டு..”

“என்ன மயிரு பைத்தியம்.. ஒம் பொண்டாட்டிக்கு புடிச்சா வுட்டுருவியால?”

“நான் சரினு சொல்லல…”

“அப்படி சொல்லாதிய.. வாசல்ல நின்னு அவ தல சீவினா கூட ஆள முழுங்குற மாரி யார பாக்கனு கேக்கல்லா செய்வீக கொழுந்தனாரே?” னு அம்மா கேட்டோன்ன சித்தப்பாக்கு முகம் வெளிறியது. ஓவென அழுதார்.

“என் மனசுல குத்தம் இருக்கப்போய் தான மைனி அவள குத்தம் சொன்னேன்?”

அப்பா நான் எட்டிப் பாக்குறத பாத்து “நீ போய் தூங்குல”னு சொன்னார். எனக்கு பதைபதைப்பாருந்துச்சு. கண்ணெல்லாம் கலங்கி இருந்த சித்தப்பாவ பாக்கவே எனக்குப் பிடிக்கல… அம்மாட்ட “ம்மா..பசிக்கினு சொன்னேன். அம்மா என்னை எரிச்சலோட பாத்து “இருல..ஒனக்கு இப்பதான் பசிக்கும்.. அங்கனம் பக்கத்துல முறுக்கு வச்சிருக்கேன் பாரு.. அத தின்னு”னு சொன்னா.. எனக்கு அசதியா இருந்துச்சு. அம்மா கிட்ட போக முடில. ஆனா அவ சேலை வாசம் பிடிச்சிக்கிட்டு அதுக்குள்ள சுருண்டு இருக்கணும் போல தோனுச்சு.

சட்டுனு அண்ணனும் தம்பியும் ரொம்ப அன்பா பேச ஆரம்பிக்க அம்மா எனக்கு ஏதோ ஒரு பண்டம் எடுத்துக் கொடுத்திட்டு பாட்டில் நொறுங்கினத வாரியலால பெருக்க ஆரம்பிச்சா. அது அந்த இடத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஒலிய எழுப்ப அப்பா திரும்பிப் பாத்து “சுவர் முட்டியா?”ன்னு சொன்னார்.

சித்தப்பா பதில் சொல்லாம தலயக்குனிய ”அந்தப் பாட்ட பாடுல.. நல்லாதான் பாடுன…”னார் அப்பா

சித்தப்பா மறுபடி அதப்பாட அப்பா கண்ண இறுக மூடிக்கிட்டார். அம்மா லேசா சிரிக்க பயந்து சிரிச்சபடி குப்பைக்கூடைல அந்த கண்ணாடிச் சில்லைத் தட்ட போயிட்டா. பின்னாலேயே போன என்னப் பாத்து “போன ஜென்மத்துல நீ நான் வளர்த்த நாயா தாம்ல இருந்திருப்ப”ன்னா, எனக்கு அதுல பயங்கர சந்தோஷம் இருந்துச்சு.. நான் சிணுங்கிட்டே அம்மா புறத்தால போனேன்.

அம்மா என்ன மடில போட்டு முந்தானையால என்னோட முகத்த துடைச்சா. எனக்கு அது அவ்ளோ சந்தோஷத்த தந்துச்சு. என்னோட கண்ணுல மெல்ல தூக்கம் வர அம்மா மெல்ல பாடினா. அம்மா பாடி நான் கேக்குறது முத முறை. அம்மா லேசா என்னப் பாத்து வெக்கப்பட்டுக்கிட்டே

”தூங்குடா செல்லம்”னா. அப்படி அம்மா என்னக் கூப்பிட்டா அம்மாக்கு என் மேல அன்பு பெருக்கெடுத்து ஓடுதுன்னு அர்த்தம்னு எனக்கு தெரியும்…

நான் அம்மா முகத்தை அரைக்கண்ணால பாத்துக்கிட்டே “ ம்மா… ”னேன்..

“சொல்லுடா”

“நீயும் ஒரு நா சித்தியாட்டம் வீட்டுக்கு போயிற மாட்டியே”ன்னேன். அவ அப்படியே என்ன உத்து பாத்து உடல் மடங்கி என்னை கட்டிப் பிடிச்சிக்கிட்டா…

“பெரீய்ய்ய மனுஷனாட்டம்தான் பேசுற போ”ன்னவ… காரணமே இல்லாம அழுதா.

“ஒங்கப்பா ஒன்னும் அப்படி இல்ல”ன்னு சொல்லிட்டு என்னயே வெறிச்சா.. பின்ன “அவ பாவம்லா?”னா என்னப் பாத்து..

எனக்குத் தூக்கம் வந்திச்சி. ஆனா நடுல என்னை அம்மா படுக்கைல படுக்க வச்சப்ப முழிப்பு வந்துச்சு. நான் அவ முகத்தை சுத்தி தூக்கக் கலக்கத்துலயே கைய போட்டேன்.. அப்பவும் அவ கன்னம் ஈரமா இருந்துச்சு.

  • தொடரும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here