யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

0

பெட்ரோ பராமா

கை ரிக்ஷாக்காரர்கள்
கனவான்களை அமர வைத்து
சாலையில் இழுத்துக் கொண்டு ஒருகாலத்தில்
ஓடினார்கள்
பின்னர் வானுயர் சிலைகள்
மந்திர்கள் மசூதிகள் கனரக லாரிகள்
இனிப்பு வாலாக்கள்
அன்றும் இன்றும்தலைநகரின் வணிகத்தெருக்களில்
மூத்திரம்பெய்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம்
தெருவிற்கு நாலு வந்தேறி வணிகச் சண்டியர்கள் சத்திரங்கள்
ஊரைச்சுற்றி தூதரகங்கள் கல்லறைகள்
இரண்டு ரொட்டிச் சால்னா பாவ் பாஜி உள்ளங்கையில் புகையிலை வைத்துக் கசக்கிகடைவாயில் அதக்கும் தம்பக் நகரம்
அங்கே தெரு முழுக்க எச்சில்
மெல்லிய பருத்தியில் வடிவமைத்த குர்தாக்கள் ஜெய் காளி சூலங்கள்
ராணா பிராதாப் சிங்கோ
சுல்தான்களோ இரஜ புத்திரர்களோ
தலைநகரின் திசை வடக்கு
மூன்று பானிபட் யுத்தங்கள்
எழுநூறு ஆண்டுகளாய் அது ஒரு புற நகரம்
மேலும் எல்லோரும் இறந்து போனவர்கள் அல்லது
இன்னும் கொல்லப்பட வேண்டியவர்கள்
அவர்கள் பழங்கதைகளைப் இறந்தவர்கள் மொழியில் இன்னும் சொல்வார்கள்
கொலைநகரம் தில்லி
இஸுலாமியர்களை இசுலாமியர்களே போரில் வென்றார்கள்
இந்துக்கள் இந்துக்களையே வென்றார்கள்
கிறித்துவர்கள்டச்சுக்காரர்களை பிரஞ்சுக்காரர்களை
கடவுள்கள் கடவுள்களையே கொன்றார்கள்
ஒரு பவுண்ட் பாண்
மற்றும் கலால்வரிகள் ஆக்ட்ராய் எனும் வணிக நுழைவுவரி என
மாட்சிமைதாங்கிய ஜார்ஜ் எல்லா நாணயங்களையும் செல்லாதாதாக்கினான்
தில்லியை இங்கிலாந்தின் காலனியாக்கிய ரிப்பன் பிரபு எங்கள் அப்பன்
தீபகற்பத்தின் தென் பகுதியில் தில்லிக்கப்பாலும் மக்கள் இருக்கிறார்கள்
என்பதைக் கண்ட வைஸ்சிராய்கள் சில மண்கோட்டைகளை தகர்த்தார்கள்
வெப்ப மண்டல அம்மை கண்டு
குளிர்பிரதேசங்களில் குடி யிருந்து கொண்டார்கள்
தில்லியில்வைத்துதான் திரும்பியது
தன்னாட்சி
ஒருவன் மகாபாரதத்தைமறுபடியும்எழுதுகிறான்
சிலர்இராமாயணத்தை உபதேசிக்கிறார்கள்
பாவப்பட்ட இந்தியா காசியில் ஓய்வெடுக்கிறது
அங்கே நிகழும் கூட்டு மரணம்
பிறகு கொஞ்சம் தலை மழிக்கப்பட்டபெண்களின் காதல் கதைகள்
சாம்பல் தடவியசடைமுடி நிர்வாணிகளில் நர மாமிசினிகள் மேலும் புண்ணியவான்கள்
ருல்போ இத்தாலியை இறந்தவர்களின் நகரம் என்றான்
இறந்தவர்களின் வன்மத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்
அதிகம் மக்கள் தில்லியில்
ஜார்ஜ் அதை புதுதில்லியாக்கினான்
அவன் இந்தியாவை இந்துக்களை முசல் மான்களை சீக்கியர்களை இறுதியாக ஜந்தர் மந்திரில் வைத்து ஒடுக்கி ப்போனான்
பல்லாயிரம் காலம்தொடரும் பழைய கொலைமுறை யூனியன் காலனிக் கலவரங்கள்
தெற்கிலிருந்து பலகாதம் கொண்ட தொழுவம் இருக்குமிடம்
ஆம் அது ஒரு பெட்ரோபரோமா

***

யவனிகா ஸ்ரீராம்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here