யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்

2

தேசப் பற்று

பழைய சைக்கிளைத்துடைத்து எண்ணெயிட்டு அதன் ரிம்கள்பளபளக்க குரங்குப் பெடலில் ஓட்டுவது
பால்யத்தில் குதூகலமானது

அதுவும் என்னைப்போல ஒரு செகண்ட் ஹேண்ட் தான்
வளர்ந்த மனிதர்கள்
(அப்போது அவர்கள் மேரு மலையைப் போலிருந்தார்கள் )

நான் சைக்கிள் கற்றுக் கொண்டதை
பாராட்டினார்கள்
எவ்வளவு உற்சாகமான நம்பிக்கை
ஒரு சுமாரான மனிதனாவதற்கு அது என்னைத்தயார் செய்திருக்கிறது மேலும்
ஒரு சைக்கோ ரிஸ்ட் வாட்ச்
அதுவும் புதிதில்லை மெருகு தேய்ந்தது
இன்னொரு ரிஸ்ட்க்கு மாற்றப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்
ஓ இப்போது நான் ஒரு மனிதன்

ஒரு செகண்ட்ஹேண்ட் தேசத்தில் வளரும்
சிறிய பையன் முழு மனிதனாகும் போது
அவனிடம் ஒரு பழைய சைக்கிளும் நிக்கல் கசியும்
சைக்கோ ரிஸ்ட் வாட்சும் இருந்தால்

மகிழ்ச்சியுடன் உலகம்
தன் ஓடு பாதையில் அவனிடம் கை குலுக்குகிறது

***

ஒலிவ மரங்கள்

பால்யத்தில் உயரமான பாலத்தின் கைப்பிடிச் சுவர்மீதேறி வானம் நோக்கி
எனது சிறுநீரைப்பீச்சிய போது பின்னந்தலையில் பலமாக தாக்கப்பட்டேன்
உண்மையில் அப்போது மேகத்திற்கிடையே சூரியனும் நிலவும் வந்துபோய்க்கொண்டிருந்ததென நம்பினேன்

ஒலிவ மரத்தை அதன் வேரோடு பிடுங்கும் ஆற்றல் என்னிடம் இருந்தது
ஒரு சிறிய வில்லைக் கல்லை
பல ஆயிரம்காத மைல்களுக்கு அப்பால் போய் விழும் படி எறிந்தவன்
இடியும் மின்னலும் தெறிக்கும் போது
சிறு பறவைகளின் இதயம் நடுங்குமா என்ன

வயற்புறங்களில் நட்சத்திரங்கள் சினைப்புறும் சிறு விலங்குகளை நோக்கி கண்சிமிட்டின

தொடுவானம் நோக்கி விடாது
ஓடியோடி விண்ணும் மண்ணும் புணர்ந்திருந்தது கண்டு
நாணித் திரும்பினேன்

சாரமற்ற நிர்வாணத்தின் போதெல்லாம் கைக்குறடுகளால்
ஈறுகள் கசிய பற்கள் பிடுங்கப் பட்டேன்

பாய்ந்தேன் நெடுநாள் முணுமுணுப்புகளுக்கிடையே மேலும்
வலைகளை கண்ணிகளை
உலகின் எழுதப்பட்ட புனிதப்பத்திரங்களை கிழித்தெறிந்தேன்

தாக்கப் பட்டவர்களிடையே கூக்குரலிட்டேன்

சிறுநீர் வானம் பெருக
கடல் அலைகள் மலையின் மண்சரிவுகள்
மேலும் ஒரு நிசப்தம்

***

நவீனத் தமிழ் கவிதையில் யவனிகா ஸ்ரீராமின் கவி மொழி தனித்தது. அரசியல் கூர்மையுள்ள அவரது கவிதைகள் இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன – ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

2 COMMENTS

  1. முதல் கவிதை- நினைவுகளில் இருக்கும் பால்யத்தை நினைவுகூர்ந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here