மொழுக்காவியம்

0

ஜெயசுதன்

முதல்கதை

சொலவடைத் தாத்தா மொழுக்கர் தனது இடதுகை மொழியில் ஒரு செல்லத்தட்டு தட்டி, உள்ளங்கையைத் திருப்பி “இந்தப் படத்தைப் பார்த்தாயா…?” என்று தன் பேரனிடம் காட்டினார். அந்தக் காலத்துத் திறன்பேசித் திரை போல உள்ளங்கை ஒளிர, அதில் ஒரு படம் தெரிந்தது.

ஆவலாய் எட்டிப்பார்த்த பேரன், ஒன்றும் புரியாமல் தாத்தாவின் முகத்தை ஏறிட்டான். வழுக்கைத் தாத்தா காதுகள் துடிக்கக் கண்களால் சிரித்தார். அவரது கண்களுக்குக் கீழ், முகம் ஏதுமற்று மொழுக்கென்று இருந்தது. பேரனும், அவரைப் போலவே மொழுக்காய் இருந்தான். இருவரும், தங்கள் எண்ண அலைவரிசையைப் பயன்படுத்தியே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“இது என்ன படம் தாத்தா…?”

“இதான் உன் கொள்ளுத்தாத்தா… அதாவது என்னோட அப்பா… நம்ம எதிர்தேசியவாதக் குடிவகையில் ஒரு விதிவிலக்கா இருந்தவர்…”
மொழுக்கப் பேரன் புருவத்தை உயர்த்தி அப்படத்தை நன்றாக உற்று நோக்கினான். குட்டிக்கரணம் போடக் குனிந்த வாக்கில், முட்டிக்காலுடன் தலை தரையில் ஒட்டியிருக்க, பிருட்டமானது, முச்சந்திக் கொடிமரத்திற்கு முட்டுக்கொடுத்த நிலையில் ஒரு உருவம் தென்பட்டது.
“கொள்ளுத்தாத்தா ஏன் இப்படி இருக்கார் தாத்தா…?”

“அவரு ‘பாதப்பரிசக்கேசக்குப்புறாசன’ வெற்றி முத்திரையில் இருக்கார் பேராண்டி…”

“அப்படீன்னா…?”

பெருமூச்செறிந்தவரின் கண்கள் ஒளிர, நூற்றாண்டிற்கும் மேலான அந்த வரலாற்றை மிகுந்த உற்சாகத்தோடு கூறலானார்.

ந்தக் காலத்தில், வாழைப்பழத்தைக் கொண்டு போனவ வாசப்படியில, வாயைக் கொண்டு போனவ நடுவூட்டுலங்கிற கணக்கா, மாப்பணிகாரப் பேரரசில் மகிடித்தேச்சா மொழுக்கர்களும், அவுங்க ஆளுகையின் கீழ், வெங்கம்பயலுக்கு ஒரு மாடு, அதைப் பிடிச்சுக்கட்ட ரெண்டு ஆளுங்கிற கணக்கா, தெற்கே ரெட்டைமண்டல மொழுக்கர்களும் ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்களாம்.

அவுங்க ஆட்சியில எதிர்தேசியவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகமாகிக்கிட்டே இருந்துச்சாம். இதைத் தடுக்க, எதெடுத்தாலும் ஒன்னுங்கிற கொள்கைக்கு மதிப்புக்கூட்டி, அகழியிலே விழுந்த முதலைக்கு அதுவே சொர்க்கம் ஆயிடக்கூடாதுன்னு, வந்தேறியே வெளியேறு சட்டத்தை அறிமுகப்படுத்துச்சாம் மாப்பணிகார அரசு.

பெரும்பாலான சிற்றரசுகளுக்கு இந்த சட்டத்துல உடன்பாடு இல்லையாம். இருந்தாலும், கடைந்தெடுத்த மோரிலும் குடைந்தெடுப்பாள் வெண்ணெய்ங்கிற கணக்கா, அதை ஏத்துக்காத சிற்றரசுகளிலும் இந்தச் சட்டத்தை அமுல்படுத்த ஆயத்தமாச்சாம் அகண்ட அதிகாரம் கொண்ட அரசு. அதை ஏத்துக்காம, பாதிக்கப்பட்டவுங்கள்லாம், அதெப்படி? ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டலாம்…? ன்னு போராட்டத்துல குதிச்சுட்டாங்களாம்.

அந்த நேரத்துல, எப்பவுமே கோடானுகோடி ஆண்டுகள் எடுத்து நிதானமா நடக்குற மனிதப் பரிணாம வளர்ச்சி, பொல்லாத காலம் சொல்லாம வர்ற கணக்கா, மொழுக்க மாற்றமா திடுதிப்புன்னு வந்துருச்சாம். இதென்னடா கொடுமை? முண்டச்சிக்கு வர்றதெல்லாம் மொரட்டு எழவாவுல இருக்குன்னு மெரண்டு போன அரசு, எரியுறதப் புடுங்குனா கொதிக்கிறது தானா அடங்கும்ன்னு, பொது முடக்கத்தைச் சட்டுன்னு அமுல்படுத்திருச்சாம்.

அறிவிக்கப்படாத அந்த நெருக்கடியில, மசகு தூர்ந்த அரசு எந்திரத்தை அவசரகதியில முடுக்கி விட, அது, நாயிக்கு பீயீ கடன்பட்டது கணக்கா, விதியேன்னு வேலை செஞ்சுதாம். ‘கட்டாய முகமூடி; கபசுரக் கசாயம் குடி, வீட்டுத்தனிமையா? வாசலுக்குத் தகரம் அடி; கூட்டுத்தனிமையா? வீதிக்குத் தகரம் அடி, மேட்டிமைத் தனிமைக்கு தனியார் முகாம்; மொரட்டுத் தனிமைக்கு அரசு முகாம், பறந்துபடுத்துறவன உச்சமாக் கவனி; இருந்து படுத்துறவன துச்சமாக் கவனி, வக்கில்லாதவன பசியில போடு; வடிச்சுப் போட்டவன செவுள்ள போடு, இடைவெளி பேணிச் சந்தை; இணையத் திண்ணைச் சண்டை, உள்ளவன் சாவுக்கு உன்னதச் சேவை; தண்டச்சாவுக்குத் தன்னார்வலர் சேவை’ன்னு அதகளப்படுத்திருச்சாம்.

அதுவரை இருந்த உலக நியதிகளுக்கெல்லாம் அர்த்தமில்லாமப் போச்சாம். இல்லாத சாமானியன் தரித்திரப் பிச்சைக்காரனாவும், உள்ளூரு செல்வந்தன் உலகப் பணக்காரனாவும் ஆனார்களாம்.

‘புறமயிரை உடுக்கையால் இழந்தது போல, மூக்கையும் வாயையும் முகமூடியால் இழந்துருவோமே’ ன்னு தொலைநோக்கா சிந்திச்சு, ‘இனிமே, இன்பதுன்ப நுகர்வுகள்லாம் ஒலியும்-ஒளியுமாத்தான் இருக்கப் போகுது, இப்போதிலிருந்தே மக்களை அதுக்குத் தயார் பண்ணனும்னு முடிவுக்கு வந்த அரசு, பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிக்கு அடுத்தபடியா வடைப் புரட்சியை அறிமுகம் செஞ்சதாம்.

அதன்படி, முடக்கத்துல இருக்க எல்லாரையும் ஒலியும்-ஒளியும் வெளையாடச் சொன்னுச்சாம். ஏற்றவன் குண்டிய எட்டின முட்டும் தாங்கலான்றவுங்க மகிழ்ச்சியா வெளையாட, உளறுவாயனுக்கு ஊமையனே மேலுன்றவுங்க மொழுக்குலையாமை இயக்கத்தை அறிவிச்சுப் போராட ஆரம்பிச்சுட்டாங்களாம்.

நண்டு கொழுத்தா பொந்து தங்காத சங்கத்தாரெல்லாம், விதியை மீறி வெளியே போகவும், முச்சந்தியில வச்சு முட்டியைப் பேத்தாங்களாம் காக்கி மொழுக்கருங்க. ஒட்டுமொத்த நாடும் போர்க்கோலம் பூண்டு நின்னுச்சாம்.

புலம்பெயர்ந்தோரின் இருப்பிட மாற்ற இயலாமை நாளுக்குநாள் தீவிரமாச்சாம். நாடுபெயர்ச்சி நடக்காமப் போகவும், திணைப்பெயர்ச்சி, மண்டலப்பெயர்ச்சி, குழுப்பெயர்ச்சி, குடிப்பெயர்ச்சின்னு ஆளாளுக்குக் கெளம்பிட்டாங்களாம். போறபோக்குல, தண்டவாளத்துல தலையக்குடுத்து தொடரிக் கவிழ்ப்பெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்களாம்.

எதிர்வினையாற்றிய அரசு, தண்ட யாத்திரைத் தடுப்பைக் கையிலெடுத்து, அகப்பட்டவங்களை எல்லாம் அள்ளிப்போட்டு அள்ளையிலே மிதிச்சுச்சாம்.

வடைப் புரட்சியை வலுப்படுத்தி, எதிர்கால உணவுக் கலாச்சாரத்திற்கு வித்திடும் வகையில, ‘கண்-காது வழியாகத்தான் இனி உண்கை இருக்கும்; எனவே, வேளாண்மைக்காக எதையும் வீணடிக்கக் கூடாது’ ன்னு, மண்ணுமுண்டி முன்னேற்றச் சட்டத்தை முன் மொழிஞ்சதாம் அரசு. குண்டி கொள்ளாம கோவணம் கட்டின மண்ணுமுண்டிகள்லாம் இதுக்கு ஆதரவா இருக்க, மண்டை கொள்ளாம உருமாக் கட்டின மொரண்டு புடிச்சவுங்கள்லாம், கலப்பை வண்டி ஓட்டிக் கலவரம் பண்ணினாங்களாம். ஆணி-அணைத் தடுப்பை உடைக்க, ஆணிபுடுங்கிப் போராட்டமெல்லாம் நடந்துச்சாம். சுடுகளியை நாய் புரட்டுனாப்புல அரசு இதைக் கையாளவும், அடுக்குகிற அருமை, உடைக்கிற நாய்க்குத் தெரியுமான்னு மருகி மருகி, மண்ணுமுண்டி மொழுக்கர் குலமே, காலப்போக்குல இருந்த இடம் தெரியாம வழக்கொழிஞ்சு போச்சாம்.

இதுக்கெல்லாம் உச்சமா, மப்புச் சத்தியாக்கிரகம் நடந்துச்சாம். தீவிர மப்பு மொழுக்கரான உங்க கொள்ளுத்தாத்தா கெத்தா அதுல பங்கெடுத்துக்கிட்டாராம். மனநிறைவு இல்லாதவங்க எதிரா நின்னப்ப, மப்பு மொழுக்கர்கள் மட்டுந்தான் அரசுக்கு ஆதரவா இருந்தாங்களாம். அந்த உன்னதமான உணர்வை, பால் பேதமில்லாம, பள்ளிப் பருவத்துல இருந்தே அவுங்களுக்கு ஊத்தி வளர்த்து இருந்துச்சாம் அரசு.

திடீர்ன்னு மப்பு தட்டுப்பாடாகவும், அரசு வரும்படி அதல பாதாளத்துக்குப் போயிருச்சாம். மப்பு வாடையில்லாத அந்த ஒரு மண்டலத்துல, ஏரிமேல கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாமப் போனது கணக்கா, பல மப்பு மொழுக்கர்கள் மப்பு சேவையைப் புறக்கணிச்சுட்டாங்களாம். மிஞ்சினவுங்க, சுதேசி மப்புக்காய்ச்சியும், இசிவு களியாட்டம் போட முடியாமலும், மழலை வெட்கும் மப்புக்குழறுபடை சொல்லாட முடியாமலும், பல தியாகங்களைச் செஞ்சாங்களாம்.

இதெற்கெல்லாம் நன்றிக்கடனா, ஆளுக்கு முன்னே, பொதுமுடக்கத் தளர்வு மப்பு மொழுக்கர்களுக்குக் கிடைச்சதாம். இருந்தாலும், நீதிமன்றம் அவ்வளவு எளிதா அவுங்களை மப்புச் சேவை பண்ணவிடலையாம். ஒரு நாள்ல, ஒரு எடத்துல 500 பேருக்குதான் மப்பு யாத்திரை அனுமதின்னு சொல்லி, நாளுக்கு ஒரு வண்ணம்னு வானவில் சீட்டுமுறையைக் கொண்டு வந்துருச்சாம்.

‘ஆறடி இடைவெளி வட்டம், மாட்டுச்சினைக் கிட்டி, கட்டுப்படுத்தக் காவலர், கண்காணிக்க அதிகாரி, ஒழுங்குபடுத்த ஒலிப்பெருக்கி’ எனப் பலகாத தூரம் நீண்டிருந்ததாம் அந்த மப்பு யாத்திரை.

வண்ணச்சீட்டு இலட்சினை, குடை வாள், உருமா முகமூடி சகிதம் உற்சாகமா ஆரம்பிச்ச அந்த அணிவகுப்பு, மதுரைக்குத் திருடப் போறவன் மானாமதுரையிலேயே பம்மல் போட்டது கணக்கா, முட்டி உயரத் தடைக் கிட்டியில் சிக்கிக்கிச்சாம். ஒரு கையில குடையும், மறுகையில அவுந்து விழுற வேட்டியையும் புடிச்சுக்கிட்டே, தடைக்கட்டையைத் தாண்டி, சரியா வட்டத்துல கால்வச்சு, பாண்டி ஆட்டம் வெளையாடிக்கிட்டே போனதாம்.

கடைசியில, ‘பழி பாவம் எல்லாம் எங்களுக்கு மட்டுமே’ன்னு கிருமிநாசினி கழுவிச் சத்தியம் பண்ணிட்டுத்தான் மப்புச்சேவையை நிறைவு செய்ய முடிஞ்சதாம்.

இசிவு விற்பன்னர்களுக்கு, நாற்காலியில குந்திக்கிட்டே பாண்டி வெளையாட, விசேடச் சலுகையெல்லாம் கிடைச்சதாம். முன்னிரவே பலர், அக்கிட்டியில் சோதனைத் தாவல் பண்ணி பழகி இருந்தாங்களாம். அதுபோக, குடை, செருப்பு, கல் எல்லாம் வச்சு, வட்டத்தை முன் பதிவெல்லாம் பண்ணியிருந்தாங்களாம்.
அகில ஒலகத்துலேயே, சமூக இடைவெளியைச் சரிவரக் கடைபிடிச்சது இவுங்க மட்டும்தானாம். இருந்தும், இரண்டாம் உலகப்போரில், இன அழிப்புக்கு ஆளானவுங்க கூட இவுங்க அளவுக்குக் கொடுமையை அனுபவிச்சதில்லையாம்.

இப்புடி வெற்றிகரமா மப்புச்சேவை செஞ்ச மப்பு மொழுக்கர்கள் களிப்பு மிகுதியில, மப்புக்கோவில் முன் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு, வீடுபோற வரைக்கும், விதவிதமான முத்திரைகள் போட்டு வெற்றியைக் கொண்டாடிக்கிட்டே போனாங்களாம். அப்படி, உங்க கொள்ளுத்தாத்தா, கொடிக்கம்பந்தோறும் கெலிப்புல போட்டதுதான் இந்தப் ‘பாதப்பரிசக்கேசக்குப்புறாசன’ வெற்றி முத்திரை.

***

இங்ஙனம், தாத்தா மொழுக்கர் பேரனுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அவரின் உள்ளங்கை உதறல் எடுக்க, நடுவிரலில், “கதை பேசியது போதும் உணவருந்த வாருங்கள்…” என்று ஒரு குறுஞ்செய்தி ஒளிர்ந்தோடியது.

அவசர அழைப்பிற்கிணங்கி, அடுக்களை நோக்கி அவர்கள் விரைய, அங்கே, அவ்வேளை உணவைத் தயாரிக்கும் பொருட்டு, அரசு பரிந்துரை செய்த ஐயோ நிறுவன அரிசியை, முப்பரிமாணத்தில் அச்சடித்துக் கொண்டிருந்தாள் பாட்டி மொழுக்கி.

***

ஜெயசுதன்


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here