Thursday, March 28, 2024
Homesliderமேகமலை

மேகமலை

மணி எம்.கே.மணி

மலை ஏறிக்கொண்டே வந்தபோது வறண்ட பகுதிகள் முடிந்து ஒரு வளைவில் எல்லாம் பச்சையாகி விட்ட மாயத்தை கவனிக்கவே செய்தான் என்றாலும் ராகுலின் அடிமனதில் அந்த தடதடப்பு போயிருக்கவில்லை. இத்தனைக்கும்  மழை வந்து விடுகிற அறிகுறியில் கருமை தொடர்ந்து கொண்டு வந்தது. ஆங்காங்கே மழைத்துளிகள் விசிறக்கூட செய்தன. நீர்நிலைகளைக் கடக்கும்போது சடங்கு போல அவைகளைப் பார்த்தான். ஓரிரு நெடிய எஸ்டேட்டுகளைக் கடந்து விருந்தினர் மாளிகைக்கு வந்து தான் இன்னாருடைய மகன் என்ற போதும் அறைகள் இல்லை என்று கைவிரித்தார்கள். உறவில் பட்ட அமைச்சரின் அந்தரங்கக் காரியதரிசியைப் போனில் பேச வைத்த போதும் ஒன்றும் நகரவில்லை. பண்டிகைக்காலம், வேண்டுமோ வேண்டாமோ வி.ஐ.பி.க்கள் புக் செய்து விடுவார்கள். ராகுலுக்குத் தெரியும், பல கும்பல்கள் குடித்து விட்டு ஆடுவதைப் பார்த்திருக்கிறான். என்ன செய்வது இப்போது? ஐந்து மணி கூட ஆகவில்லை. இருட்டி விட்டது.  நிச்சயம் மழையும் உண்டு. மிருகங்கள் இறங்கக் கூடும். திரும்பிப் போக முடியாது. காரை எடுத்துக் கொண்டு வந்து பக்கவாட்டில் இடமிருந்த வளவில் நிறுத்திக் கொண்டு தூளை கசக்கி லோட் செய்தான். முகர்ந்து கொண்டான். பாக்கெட்டில் பத்திரமாக அதை வைத்துக் கொண்டு காரை விட்டிறங்கி நின்றான். பற்ற வைத்து பூஜையில் இறங்குவதற்கு முன்னால் பத்து நிமிடம் பொறுமை காப்பது என்பது ஒரு விதமான அனுபவம். ஆனால் இன்றைய நாள் அப்படிப்பட்டதல்ல. பழக்கப்பட்ட எந்த பொழுதுபோக்குகளும் இன்று வசப்படாதோ?

தேனியில் வைத்து கல்யாணம். மணப்பெண் எமிலி இரண்டு நாள் முன்னமே கூட எல்லோரையும் வரச் சொல்லி அழைத்திருந்தாள். ஒவ்வொருவராக வந்துகொண்டும் இருந்திருக்கிறார்கள். லீலாவிடம் நீ வருகிறாயா என்பதைக் கேட்டு உறுதி பண்ணிக் கொண்டு, அப்பாவின் வேலையாக கொச்சினில் இருந்தாலும் அதை அரக்க பறக்க முடித்துக் கொண்டு அவள் வந்து விடுகிற நேரத்துக்கு இவனும் வந்து சேர்ந்தான். நிறைய பெண்களுக்கு நடுவிலிருந்து அடித்துக் கொண்டிருந்த அரட்டையை விட்டுவிட்டு ஓடி வந்து பேசினாள். ராகுலுக்கு அவளிடம் தனது காதலை சொல்ல வேண்டியிருந்தது என்றாலும், கல்லுரி முடிந்த பிறகு ஓரிரு முறை மட்டுமே அதற்கு உவக்காத இடங்களில் மட்டுமே சந்தித்துக் கொள்ள முடிந்தது. இவனுக்கு என்றில்லை, எங்கோ மிச்சமிருக்கிற ஒருவிதமான ஈர்ப்புகள் முடியாமல் தத்தளிக்கிற நட்பின் ஆர்வம் ஒன்று அவர்கள் எல்லோருக்குள்ளிலும் துடித்துக் கொண்டுதான் இருந்தது. மணப்பெண் அவ்வப்போது வந்து எல்லோரையும் குசலம் விசாரித்தாலும் அகமதுவிடம் மட்டும் ஒன்றும் பேசவில்லை என்பதை உதாரணமாக சொல்லலாம்.

நான் உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்பதை மட்டும் எப்படியோ லீலாவிடம் சொல்லி விட்டு பெருமூச்சு விடுவற்குள் அவள் கூடவே இருந்த மூன்று வருடத்தில் சொல்லாததை இப்போது என்ன சொல்லி விடப் போகிறாய் என்று கேட்டது எரிய ஆரம்பித்தது. அவள் அப்போதெல்லாம் விஜி என்கிற சீனியர் பையனோடு கை கோர்த்து நடை போட்டிருந்தாள் என்பது யாருக்குதான் தெரியாது? அவனுக்கு கல்யாணமாகி விட்டது என்றார்கள். ஒரு வழியாக வேறொரு சித்திரம் தெளிந்து வந்தது அப்போதுதான். பழசை கனவு போல வீசியடித்து விட்டு இன்று நான் உனக்காகவே காதல் சொல்ல வந்தேன் என்கிற உண்மையைச் சொல்ல அவளைத் தேடிப் போனால் சாட்சாத் விஜியுடனே நின்று பேசிக் கொண்டிருந்தாள். எங்கோ கான்பூரில் இருக்கிறான் என்றார்களே ?

பூஜையைப் போடுவோம் என்று அந்த சிகரெட்டை எடுத்து முகரும்போது ஒரு எஸ்டேட் கூலியாள் அவனைக் கடந்தார். தடுத்து நிறுத்தி அவரிடம் இரவு தங்க வேண்டும் என்று சொல்லி விசாரித்தான்.  இறக்கம் துவங்குகிற இடத்தில், சரிவிற்கு முன்னதாக ஒரு கிளப்பு கடை இருக்குமென்றும் அங்கே விசாரித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். கல்லாவில் இருந்த ஆளும், மற்றொருவரும் உட்காருங்கள் பார்க்கலாம் என்பது போல சொன்னார்கள். இவன் ஒரு பரோட்டா சிக்கன் சாப்பிட்டான். நல்ல காப்பி போட்டுக் கொடுத்தார்கள். மெல்ல காரை தாண்டி வந்து ஒரு மேட்டுக்கு ஏறி சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகையை விடும்போது குளிர் பட்டது. எங்கிருந்தோ தூரத்தில் இடியின் ஒலி கேட்ட திசையில் பார்த்தான். கண்டிப்பாக தேடிக் கொண்டிருப்பார்கள். என்ன இந்த நாட் ரீச்சபிள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவர் மற்றவரைக் கேட்டு மற்றவர் மற்றவரைக் கேட்டு கடைசியாக ராகுல் என்பவன் எங்கே போனான் என்று ஒருத்தனுக்கும் தெரியாது.

புகை அசல்.

ஜிலோவாக இருந்தது.

சின்ன உற்சாகம் குட்டி சுவரைப் போல ஒன்றைப் பற்றிக் கொண்டு மேலேறி வருகிறதோ? ராகுல் விசிலடிக்க முயன்றான்.  ஆனால் கன்னங்கள் மரத்திருந்தன. உதட்டை குவிக்க மறந்து போனான். ஒரு பாட்டை வெகு காலத்துக்கு பாடிக் கொண்டிருப்பது போல இருந்ததைக் கலைத்து பிடிவாதமாக நடந்ததுக்கு வந்தான். லீலாவிடம் ராகுல் எத்தனயோ தரம் பேசியிருக்க முடியும். ஆனால் விஜி அவளுடைய பக்கத்தில் இருக்கிறவரை அவனால் அங்கே போக முடியவில்லை. தன்னுடைய கோணல் முகத்தை சரி செய்து கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்டிருந்ததில் உள்ள நம்பிக்கைகள் எல்லாம் உதிர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு உரிமைகள் இருக்கின்றன அவளிடம்? நிறைய பரிசுகள் கொடுத்திருக்கிறான். நிறைய விஷயங்களை அவள் கேட்டு வாங்கியிருக்கிறாள். ஒருமுறை முப்பதாயிரம் ரூபாய் கூட புரட்டிக் கொடுத்திருக்கிறான். இன்று வரை அதற்குப் பதிலில்லை. ஏய், கொஞ்சம் எழுந்து வா ! கூப்பிட முடியாதா? அந்த விஜி சிறுநீர் கழிக்கக் கூட போகாமல் அடக்கி வைத்துக் கொண்டு அவளுடன் ஆவலுடன் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ராகுல் நினைத்தது சரிதான். ஒருகட்டத்தில் அவன் கழிவறையை நோக்கி ஓடுவது தெரிந்தது. அந்த இடைவெளியில் லீலாவிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்பதை சொல்வதற்கு பதிலாக, விஜி உன்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போகிறானா என்று கேட்டுவிட்டு வந்தான். அவள் திகைத்துக் கொண்டிருக்க, இவனுக்கும் தலையில் பொறி பறந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அகமதுவிடம் ஒரு கோஷ்டி நீ எமிலியிடம் பேசித்தான் ஆக வேண்டும் என்று அப்படி ஒரு பஞ்சாயத்து. அவள் இவனால் பாத்ரூமிற்கு சென்று, சென்று, சென்று அழுதுவிட்டு வருகிறாளாம் !

கடைக்காரர்கள் கூப்பிட்டார்கள்.

அவர்களுக்கு ராகுல் சினிமா ஆளா என்று ஒரு சந்தேகம். அவன் மறுக்கவில்லை. படித்தது இன்ஜினீயரிங் தான் என்றாலும் லட்சியம் சினிமாவே. சொந்தமாகவே எடுக்க இருக்கிறேன் என்பதை சொன்னான். அவனுடைய பிரில்லியன்ட் சினிமா பற்றி அவர்கள் அறிய வேண்டியிருக்கவில்லை. சர்ச்சுக்கு சொந்தமான ஒரு ஸ்டோர் ரூம் இருக்கிறது. அதில் இரண்டு பேரை நாங்கள் இரவு தங்க வைத்திருக்கிறோம், உன்னால் அங்கு தங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். மற்றும் இரவு சாப்பாட்டுக்கு , மற்றும் காலை சிற்றுண்டிக்கு எல்லாம் ஒரு தொகையை பேசவும் செய்தார்கள்.

“ சினிமால இருக்கீங்களே? சிவதாசன்னு ஒருத்தரைத் தெரியுமா? “

சிவதாசன் சொன்னார்.

“ இலேசான இருட்டு. மழ சத்தம். தூங்காம படுத்திருக்கிற சங்கர் தன்னை பாத்து ஒருக்களிச்சுப் படுத்திருக்கிற பொண்டாட்டியோட மொகத்த பாத்துகிட்டே அவளோட வயித்தை தடவுறான். மேலே போற கை அப்புறம் கீழேயும் போவுது. அவளுக்கு கண்ணு இறங்குது. மூடிக்குது. என்ன நடக்குதுன்னு அவ அனுபவிக்கிறா. அதைத் தாங்கவே தாங்காம அடுத்த கட்டத்துக்கு போறதுக்காக மெதுவா மல்லாந்துக்கறா. அது வா ன்னு அர்த்தம். அவ தன்னை வாகு பண்ணிக்கறதுக்குள்ள அவன் அவ மேல படர்ந்து தன்னை நொழைக்கறதுக்கான தேடலும் நடக்க, செட் ஆவறாங்க. அது ஒரு புழக்கம். ஈசி. அவ கண்ணுக்குள்ள தன்னோட சிரிப்பை பாத்துக்கிட்டு அவங்க மெதுவா கொஞ்ச தூரத்துக்கு போறதுக்குள்ள அவங்க ரெண்டு பேர் மொகத்து மேலயும் வீல்னு ஒரு சத்தம் !

பச்சக் கொழந்த அது, சீறி அழுவற சத்தம்.

பொண்டாட்டி தள்ளி விட்டதுல அப்டி போயி விழறான் சங்கர். அவ பாஞ்சி போயி கொழந்தைய தூக்கறா. ஜோ ஜோ ஜோ ஜோ மா . ஜோ ஜோ ஜோ ஜோ ம்மா. அதை சமாதானம் பண்றதுக்கு பாக்கறா. அதுக்கு பசி.  மழைக் காலமில்லையா, வழக்கமா பத்து மணிக்கு குடிக்கிற பால அது ஏழு மணிக்கே குடிச்சிட்டு தூங்கிருச்சி. இப்ப அதுக்கு பால் வேணும். அவ கொழந்தைய இவன்கிட்ட குடுத்துட்டு கொஞ்சம் சுடுதண்ணி வைக்கறா. அப்புறம் அந்தத் தண்ணில கொஞ்சம் சக்கரையை கலக்கறா. ஆத்தி ஆத்தி ரெண்டு பேருமா சேந்து அதக் கொழந்தைக்குக் குடுக்கறாங்க. பசி முடிஞ்ச உடனேயே ஒண்ணு ரெண்டு தடவ தன்னோட அப்பா அம்மாவ பாத்து சிரிச்சு காமிச்சுட்டு அந்தக் கொழந்த தூங்கிடுச்சு.

சக்கரை தண்ணி இருக்கே, அது ஒரு மணி நேரம் தாங்கலாம்.

எப்ப கொழந்த அழப்போவுதோன்னு பயம்.

சங்கரால தூங்கவே முடியல.

அவஸ்தை தாங்காம குடிசைக் கதவைத் திறந்து எழுந்து வெளியே வந்தா நாலு நாள் மழையில் ஓடாமல் விட்டு வைத்திருந்த ஆட்டோவை சேட்டுவின் ஆளுங்க அப்படியே பதமா சத்தம் வராம நகர்த்திகிட்டு இருக்காங்க. இவன் பேசினா அடிக்கறதுக்கு அவங்க ரெடி. பாத்துகிட்டே நிக்கறான். அவங்க அவன வாச் பண்ணிகிட்டே நகர்ரானுங்க. அவன் மனசில இப்ப இருக்கறதெல்லாம் ஒண்ணுதான். கொழந்தை முழிச்சுக்கக் கூடாதே கடவுளே !

மழை கொட்டிகிட்டு இருக்கு.

அஞ்சு மணி. பாங்கு சத்தம் கேட்டுக்கிட்டு இருக்கு.

தூரத்தில அண்ணாச்சி கடை தெறக்கிறார்.

மொத ஆளா போயி கடன் கேக்க முடியாது.

மழயில நனைஞ்சுகிட்டு நிக்கறான்.

ஒரு பைக்கு. அவன் ஒரு போலீஸ்காரன். அண்ணாச்சிக்கு பிரெண்டு. கஸ்டமர் இல்ல. சும்மா பேசிகிட்டு நிப்பான். இவன் தவிப்பா நிக்க நிக்க, அப்பறமா ஒரு பொம்பள வராங்க. வேற ஒரு சின்ன பொண்ணு வருது. ரெண்டு பேரும் எதையோ வாங்கிட்டு போனதுக்கு அப்புறம் கடை பக்கத்தில போயி பேலன்ஸ் தரேன் அண்ணாச்சி, ஒரு பாலை எடுத்துக்கறேன்னு அவர் மொகத்த பாக்காம சொல்லி விருட்டுன்னு அத எடுத்துகிட்டு அவர் கூப்பிட கூப்பிட இவன் நடக்கறான். நடந்து வந்துகிட்டே இருக்கான். வரான், வாரான், வரான், அவன் பின்னாலேயே வந்து யாரோ எட்டி ஒதைக்கறாங்க. கீழே விழறவன் வயித்திலேயும் அந்த ஒத. அவன்தான், அந்த போலீஸ்காரன் ! திருட்டுத் தேவடியா மவனேன்னு அந்தப் பால் பாக்கெட்டாலயே சங்கர் மொகத்து மேலேயே அடிச்சி அடிச்சி அந்தப் பாக்கெட் கிழிஞ்சு அவன் மொகம் ஒடம்பு கை கால் எல்லாத்திலேயும் பால் !  போலீஸ் திரும்பிப் போறான். சங்கர் வீட்டு வாசல்ல வந்து உக்கார்றான். பால் கூட ரத்தமும் மழத் தண்ணியோட சேந்து போயிகிட்டிருக்கு.

துக்கம் னு சொல்றதா, தூக்கம் னு சொல்றதா?

அவன் அப்பிடியே இருக்கான்.

இப்ப கீச்சுது அந்தக் கொழந்த.

மழ இடி எல்லாத்தையும் தாண்டி அது அப்படியே சீறுது.

ஒரு ஓட்டம் தான். அதை அவ்வளவு தான் சொல்ல முடியும். வில்லுல இருந்து அம்பு பொறப்பட்ட மாதிரி. அண்ணாச்சி மொகத்தை ஒரே மாதிரி நூறு தடவை அடிச்சி அவரை ரத்தக் களறியாக்கி மறுபடியும் அந்தப் பாலை எடுத்துக்கறான். ஒரு மாசத்துக்கு மளிகை சாமானைப் போடுன்னு கூச்சல் போட்டுட்டு பாலை கொண்டு போயி வீட்ல போட்டுட்டு சேட்டு வீட்டுக்கு ஓடறான். அவனோட பொண்டாட்டி கழுத்துல கத்தியை வெச்சு ஆட்டோவை திருப்பிக் கொண்டு வரான் ! கறிக்கடைல கறி வாங்கறான். வீட்டுல அதையும் போட்டுட்டு கத்தியோட அந்தப் போலீஸ்காரனை குத்தறதுக்குப் போறான். அவன் இவன் கிட்ட துப்பாக்கியை காட்டிகிட்டே வந்து சுடல.

கொஞ்சம் வேலைங்க இருக்கு. அத எடுத்து செய்றியா ன்னு கேக்கறான்.

அங்க தான் பின்னால அவ்ளோ பேரை கொலை செஞ்சு சாராயம் வித்து விபச்சாரம் பெருக்கி மந்திரிகளை போலீச எல்லாம் தன் ராஜாங்கத்துல இருந்து இத்தனை எபிசோடுகளில் ஆட்டிப் படைச்ச ஆட்டோ சங்கர் பொறக்கிறான்.

இப்ப சைலன்ட்ல அந்த சங்கர் தான் இதோ தொங்க விடப்படறான்.

தி எண்ட், ரோலிங் டைட்டில்ஸ்.

படத்தோட லாஸ்ட் எபிசொட் இதுதான். “

சிவதாசனும் அவருடைய நண்பரும் குடித்தார்கள். ராகுல் அவர்களிடம் இதோ வருவதாகக் கூறிவிட்டு வெளியே வந்தான். நள்ளிரவு.  அடர்ந்து பரவியிருந்த பனியில் மழை விழுவது விசித்திரமாக இருந்தது. அதிலும் அந்த மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம். சற்று ஒதுக்குப்புறமாக சென்று சிறுநீர் கழிக்கும்போது குளிரால் உடல் நடுங்கியது. ஏதாவது மறைவில் இருந்து கரடி ஏதாவது பாயுமா என்று அச்சப்பட்டான். ஒரு பாதுகாப்பான இடத்துக்கு வந்து கஞ்சாவைப் பற்றவைத்து இழுத்தான். கல்யாண மண்டபத்தில் சரக்கு பார்ட்டிக்கு யார் பொறுப்பென்று பார்த்தால் விஜி. மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம் போட ஆரம்பித்து விட்டார்கள். ராகுல் குடிப்பது கிடையாது. ஒரு சந்தர்ப்பத்தில் செல் பேசிவிட்டு விஜி நழுவுவது போலிருக்கவே இவனும் அவனைத் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அவனைக் காணவில்லை. ராகுல் யாரோ தனது நெஞ்சுக்குள் எட்டி உதைப்பது போல உணர்ந்து, பெண்கள் மருதாணி போட்டுக் கொண்டிருந்த இடத்திற்குப் பாய்ந்து சென்று லீலாவைத் தேடினான். இல்லை. எங்குமில்லை. அந்தப் பிரதேசம் முழுக்க சல்லடை போட்டு சலித்து மூச்சு வாங்கினான். எங்கே போயிருக்க முடியும்? விஜியும் அவளோடு இருக்கிறான் ! முழுவதுமாக சோர்ந்து ஒரு முழு லோடை அடித்துவிட்டு திரும்பிய பிறகு பார்த்தால் அகமது கதறி அழுது கொண்டிருக்க அவனை அணைத்துக் கொண்டு லீலா. பக்கத்தில் விஜி. மற்ற பையன்கள். பெண்கள். எல்லோரும்.

எங்கே போயிருந்தாய் என்று முடியுமான வரையில் புன்னகை செய்து லீலாவின் கண்களைப் பார்த்துக் கொண்டு கேட்க அவள் சீற்றத்துடன் ஒரு நண்பனுக்கு காதல் தோல்வி, அதைப் பார்க்காமல் நீ எங்கே கஞ்சா போட்டு சுற்றிக் கொண்டிருந்தாய் என்று கூச்சலிட்டாள்.

எல்லோரும் என்னடா என்பது போல தலையிலடித்துக் கொண்டதும் நடந்தது.

ராகுல் அவர்கள் இருவரும் எந்த அறையில் உடலுறவு கொண்டிருக்க முடியும் என்பதைக் கணக்கு போட்டுப் பார்த்துக் கொண்டு அதை விஸ்தரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் அகமது வந்து பக்கத்தில் அமர்ந்தான். உண்மையாகவே எனது மனதின் வலியைக் கண்டறிந்து, பேன்டு பாக்கெட்டில் இருந்த பூச்சி மருந்தையும் பிடுங்கிப் போட்டு ஒரு நிம்மதியைக் கொடுத்தவள் லீலா தான் என்று சொல்லிக் கொண்டிருந்தான் அவன். இவன் எதற்கோ சும்மா தலையாட்டிக் கொண்டிருந்தான். இறுதியில் அவளிடம் நான் எனது காதலை எப்படி சொல்லுவது என்று அகமது கேட்டபோது தான் மேற்கொண்டு உட்கார முடியாமல் இவன் அங்கிருந்து வெளியேறி, செல்லை அணைத்துவிட்டு காரை எடுத்தான்.

படுத்துக்கொண்டபோது மிதப்பது போலிருந்தது.

தான் அறிந்தவரையில் இதுவரை லீலாவிற்கு எத்தனை காதலர்கள் இருப்பார்கள் என்று கணக்கு போடும்போது சிரிப்பு வந்துவிட்டது.

அவர்கள் தப்பாக நினைத்து விடுவார்களோ என்கிற எண்ணம் உருவாகி விடவே, எதற்கும் இருக்கட்டும் என்று சிவதாசனைப் பார்த்து ஒருமுறை சிரித்து வைத்தான். அவர்கள் இருவரும் இப்போது கூட எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். கலவையாகப் பார்த்தால் அவர் பேசுவது கேட்பது போலவும், கேட்காமலிருப்பது போலவும் இருக்கிறது.

யாரோ ஒரு ஆட்டோக்காரர் கதை சொல்லிக் கொண்டிருந்தார் இல்லையா?

சிவதாசன் சொல்கிறார்.

“ நான் சொல்றது கொஞ்சம் முன்ன. ஒரு பெரிய காலேஜ். அங்க எப்பப் பாத்தாலும் ஸ்ட்ரைக். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம், மாநில சுயாட்சி போராட்டம் இதெல்லாம் முடிஞ்சு அந்த ருசி போவாம சின்னச்சின்ன துண்டு துக்கடா பிரச்சினைக்கு எல்லாம் ரோட்டுக்கு வந்துடறது. பஸ் மேல கல்ல விட்டு அடிக்கறது. எவ்ளோ பேருக்கு அடி. எவ்ளோ ரத்தம். அப்புறம் அந்த ரோட்ல மூணு நாளைக்கு பஸ்சு வராது. ஒரு தடவ ஒரு பஸ்ஸை பிடிச்சி நிறுத்தி கொளுத்திட்டாங்க. அந்தப் பக்கத்துக்கு ஒரு வாரம் வண்டி போவல.  அந்த காலேஜ் இருக்கற ஏரியாவோட ஒட்டி ஒரு ஸ்லம். கொஞ்சம் கூட அவங்களை யாருமே மனுஷங்களா பாக்காத காலம். இந்த ரகளையில பாதிக்கப்பட்டது பூரா அவங்க தான். ஆஸ்பிட்டலுக்கு, ரயில்வே ஸ்டேஷனுக்கு, பிரதான மார்க்கெட்டுக்கு போயி, அன்னைக்கு சோத்துக்கு வேல பாக்க முடியாம பல நாள் அவஸ்தைப்படுவாங்க.  கூட்டம் கூட்டமா மூணு மைல் நாலு மைல் நடந்து வேற எங்கயாவது இருந்து வண்டி புடிச்சி ஓடியாவணும். ஒருதடவை கல்லுவீச்சு நடந்துகிட்டிருக்கு. போலீசை வெரட்டி விட்டுட்டாங்க. அந்தக் காலேஜ்க்கு எதிர்ல ஒரு கான்வெண்டு. ஊர்மக்கள் கூட்டம் கூட்டமா அந்த ஸ்கூல்குள்ள சேந்து இவங்க பதிலுக்கு கல்லு வீச ஆரம்பிச்சாங்க. பெரிய யுத்தம் அது. சரியா மாட்டிக்கிற தோதில இருந்ததால அதில அடி இந்த மக்களுக்கு தான். பெரிய கூட்டமா போலீசு வந்து, இருட்டற நேரத்துல எல்லாம் முடிஞ்சது. பசங்க ரொம்ப ஆடிட்டாங்கன்னு நான் சொன்னனா இல்லையா? ஏழு மணிக்கு அப்புறம் கோதண்டம்னு ஒரு பையன், காலேஜ் சைடு கேட்டு வழியா வெளிய வரான், ரோட்டில நடக்கறான், அவனுக்கு எதிர்ல ஸ்கூல் உள்ள அவன வாச் பண்ணிகிட்டே நாலு பேரு அவனுக்கு இணையா நடந்து வராங்க. கூட்டத்துல கூச்சல் போட்டு டான்ஸ் ஆடி கெட்ட வார்த்த பேசி துள்ளிகிட்டே இருந்தவனா அவன்?

இல்லவே இல்லை.

அப்படியே அவனை நவுத்திகிட்டு நான் வேல கத்துகிட்டிருந்த போட்டோ ஸ்டுடியோவாண்ட தான் கூட்டிட்டு வந்தாங்க. பையன் கண்ல மாலை மாலையா கண்ணீர். டேய், நாங்க உன்ன என்ன செஞ்சுட்டோம், எதுக்கு அழற என்று ஒருத்தன் சமாதானம் செய்தான். நாங்கள் எல்லாம் சிறுநீர் கழிக்கிற அந்த படிக்கட்டுக்கு கீழே இருக்கிற இடுக்குக்கு கூட்டிப் போனார்கள். அங்கே தூங்கிக் கொண்டிருந்த தனபாலை எழுப்பினார்கள். அவனது பேன்டு பட்டனை அவிழ்க்க சொல்லி குறியை வெளியே எடுக்க சொன்னார்கள்.

கோதண்டத்தை மண்டி போட வைத்து ஊம்புடா என்றார்கள்.

தனபால் ஒரு குஷ்டரோகி.

பையன் கதறி அழுதான்.

ஸ்லம் பிள்ளைங்க எனக்குப் பழக்கமானவங்க.  அவங்க கிட்ட பேசி பேசி கடைசியாக உனக்காக விடறோம் பாத்துக்க என்று அவனை என்கிட்டே தள்ளி விட்டப்போ சரி போ ன்னு  அனுப்பினேன். அவன் ஓடின ஓட்டம், கடவுளே, ஒருத்தனால அப்பிடி ஓடவே முடியாது ! இன்னைக்கு கூட நான் மறக்கலியே? மறக்க முடியாது. இத நான் எதுக்கு சொல்றேன்னா வாழ்க்க இப்பிடி ஒரு முட்டு சந்துல மூத்திர சந்துல நிறுத்தி என்ன மண்டி போட வெச்சுருக்கு. வாய் விட்டு கதறி கோ ன்னு அழ வெச்சிருக்கு. ஓடிப்போ நாயேன்னு என்ன வெரட்டி விட்டுருக்கு. என்ன மாதிரி, உன்ன மாதிரி, அவன மாதிரி ஆயிரம் பேரை கசக்கிப் பிழிஞ்சி இல்லடா இந்த பூமிக்கு நீங்க அனுபவங்கள எடுத்துக்கறீங்க? எங்கள விட்டுரு, எங்க குடும்பத்தையாவது நாங்க பட்டினி போடாம வெச்சுக்கக் கூடாதா?  “

சிவதாசனின் வளவளப்பு எப்போது ஓய்ந்தது தெரியாது.

காலையில் எழுந்தபோது மழை இல்லை. மேக மூட்டம் அதிகம். ராகுல் இடியாப்பமும் பாயாவும் சாப்பிட்டான். கேட்ட காசுக்கு அதிகமாகவே கொடுத்து விட்டு காரை எடுத்தான். யாரோ யானைகளைப் பற்றி எச்சரித்தார்கள். மெதுவாக பதட்டமில்லாமல் இறங்கினான். இனி என்ன, இரவெல்லாம் கனவு. விஜியும் லீலாவும் அறுபத்தி நான்கு கலைகளையும் ஓட்டிக் காண்பித்து விட்டார்கள். கல்யாண மண்டபத்தில் நிச்சயமாக அதற்கான சௌகரியங்கள் இருக்கின்றன. எல்லாம் முடிந்திருக்கும். மிகவும் தெளிவு. இனி அவள் பக்கம் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. போனை ஆன் செய்தான். ஐந்து நிமிடத்தில் இசை எழுந்தது. அவளே தான், என்ன இது?

அவள் முதலில் கொஞ்ச நேரம் அழுதாள்.

அவள் தேனிக்கு வந்தது அவனுக்காகத்தானாம். எப்போது அந்தக் காதலை சொல்லப் போகிறாய் என்று விழி வைத்துக் காத்திருந்தாளாம். என்னை நீ பழி வாங்கி விட்டாய் என்றாள். உனக்கு இவ்வளவு வன்மம் வருகிற அளவில் நான் என்னதான் பாவம் செய்தேன் என்றாள். மேற்கொண்டு அவளுக்கு பேச்சு வரவில்லை. தேம்பிக் கொண்டிருந்தாள்.

காரை நிறுத்தி விட்டு அவளைத் தேற்றினான்.

உடனே எனது அப்பாவிடம் பேசி உனது வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்தான்.

யா, யா, யா என்று முழங்கிக் கொண்டு வண்டியை சந்தோஷமாக முடுக்கி வண்டியை எல்லா வளைவுகளிலும் பறக்க வைத்தான்.

சில்லிடுகிற மழை, பச்சை பசேலென்ற உலகு. ஆஹா !

சட்டென பிரேக் போட்டான். எதுவோ ஒன்று இடறி, மின்னலாக மறைந்து போயிற்றே, அது என்ன? ஒரு காட்சி அது ! என்ன காட்சி? ஆம், அவள் இவனிடம் பேசும்போது பக்கத்தில் நின்று விஜி அவள் பேச வேண்டியதை சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான். இருவரும் சிரித்தவாறு இவனை முட்டாளாக அடிக்கிறார்கள். நெஞ்சம் கீழே விழுந்தது போல இருந்தது. போனில் மெசேஜ். லீலா வெட்ஸ் ராகுல். ராகுல் வெட்ஸ் லீலா. மேட் பார் ஈச் அதர்.மேட் பார் ஈச் அதர்.

மூத்திர சந்தில் மண்டி போட்டு நின்று கொண்டிருப்பது போலிருந்தது.

உடல் அழுகின ஒருவன் ஜிப் அவிழ்க்கிற சப்தம் கேட்டது.

***

மணி எம்.கே.மணி திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் எனும் சிறுகதைத் தொகுப்பு, வேறு சில ஆட்கள், எழும் சிறு பொறி – திரைப்படங்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பு அண்மையில் மதுர விசாரம் எனும் நாவல் வெளியாகி நல்ல கவனம் பெற்றது. – தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular