முதல் அடி

3

சுரேஷ் பிரதீப்

னைத்து நம்பிக்கைகளும் கருகிய பிறகுதான் அவரிடம் வந்திருந்தேன். ஒரு மதுபானக்கடையில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அவர் தன்னை அசோகன் என்று அறிமுகம் செய்து கொண்டார். நான் மீள மீள எவ்வளவு கேட்டும் அவர் தன்னைப் பற்றி வேறு ஒன்றுமே சொல்லவில்லை. ஆனாலும் சற்று நேரத்திலேயே நான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன்.  வாழ்க்கையின் கடினமான காலங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு புகாரில்லாமல் கடந்தவர்களின் கனிவின் இறுக்கத்தைப் பிரதிபலிக்கும் முதிர்ந்த முகத்தைக் கொண்டவராக அவர் இருந்தார். இளமையிலும் அவர் ஒன்றும் அழகராக இருந்திருக்க வாய்ப்பில்லை. அவர் முகத்தில்,    கடற்கரை முழுதும் கிளிஞ்சல்களைப் பொறுக்கிச் சேர்த்து மணல்வீட்டினை அழகுபடுத்தும் சிறுமி போல அவர் வாழ்க்கை கொண்டு வந்து சேர்த்திருந்த விவேகத்தின் அழகு மட்டுமே மிளிர்ந்தது. அவருடைய அழகு எனக்குள் துவேசத்தை கிளப்பியது. மண் நிறத்திலான சட்டை, வெள்ளை வேட்டி, பற்கள் பாதி உதிர்ந்த வாய், நீளமான மூக்கு அதன் மேல் கண்ணாடி. இந்தக் கிழவனிடம் நான் துவேசம் கொள்ள எதுவுமே இல்லை. ஆனாலும் எனக்குள் ஊதப்படும் அனல் போல அவர் முகத்தைக் காணும் போதெல்லாம் ஆத்திரம் கனன்றது.

“இத்தனை வருஷம் உயிரோட இருந்தத நெனச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க இல்லையா?”

அவர் சற்றும் பெருமிதம் தொனிக்காத புன்னகையுடன் “அத சந்தோஷம்னா சொல்றேள். ம் உங்களுக்கு அப்படித் தோணினா நானும் அதை ஒத்துண்டு தான் ஆகணும். ஏன்னா எனக்கு முன்னாடி நிக்கிறவாளுக்குத்தானே என்னைப் பத்தி என்னை விட நல்லாத் தெரியும்”

“நீங்க ஏதும் குடிக்கலையா? எனக்கு குடிக்கிற பழக்கம் கெடையாது” என்றேன்.

“அட! பாருங்களேன். நானும் குடிக்கமாட்டேன். என் ஃபிரெண்ட் ஒருத்தன் கூட வந்தேன். அவன் பாட்டிலை வாங்கிண்டு ‘செத்த இருடா வந்திடறேன்’னு சொல்லிட்டுப் போனான். இன்னும் ஆளைக் காணல”

“நான் குடிச்சிட்டு இருக்கிறவங்களைப் பாக்கணும்னு வந்தேன்”

“என்னைக் கேட்டா அனுபவத்தைத் தேடி எழுத்தாளன் அலையக்கூடாதுன்னு சொல்வேன். அதுக்குன்னு சோம்பி ஒரு மூலையில் அவன் உட்காந்திடணும்னு அர்த்தமில்லை. அவன் தேடலில் எழுத்துக்கான விஷயம் சிக்குமான்னு அலையிறதுல ஒரு சின்ன ஆபாசம் இருக்கிறதா எனக்குத் தோண்றது”

நான் அவ்வப்போது அங்கு வருவேன். அசோகன் சொல்வது போல எனக்கு அனுபவம் திரட்டும் நோக்கம் ஏதுமில்லை. ஆனால் அவர் சொன்னதை மறுதலிக்கவும் முடியவில்லை. நானே அறியாமல் அப்படி அனுபவம் திரட்டும் எண்ணம் எனக்குள் இருந்திருக்கலாம்.  அந்த மதுக்கடையில் அன்று கூட்டம் வழக்கத்தை விடக் குறைவாகத்தான் இருந்தது. அவரை பேச்சை நோக்கி உந்த வேண்டும் என்பதற்காக

“ஹஹா மதுக்கடை யோக்கியர்கள்னு நீங்க இதை வச்சு ஒரு கதை எழுதலாம். மதுக்கடையில் குடிப்பழக்கம் இல்லாத இரண்டு பேர் தற்செயலாக அமர்ந்து உரையாடுவது நீங்க உங்க கதைகள் வழியா காட்டிட்டு இருந்த அபத்தங்களுக்கு பொருத்தமான கண்டெக்ஸ்ட் இல்லையா?” என்று சொன்னேன். என்னையறியாமலேயே அவர் படைப்புகள் பற்றி பேசும்போது ஒரு ஆங்காரம் என் குரலில் ஏறுவதை உணர்ந்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அவர் மெல்லிய புன்னகையுடன் “எனக்கு உங்களைத் தெரியும்” என்றார்.

நான் அதிர்ந்து போனேன். அவரை அனேகமாக இலக்கிய உலகில் அறியாதவர்கள் கிடையாது. காலம் முழுக்க நிதானம் தவறாது சீராக இயங்கியவர். அவருடைய படைப்புலகம் மிக விரிவானது. ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறார். பெரிதாக அங்கீகாரங்களோ வசதியோ அமையவில்லை என்றாலும் கூட அவர் எந்தக் காலத்திலும் சோர்வுறவில்லை. ஆனால் அவர் கதைகளில் சலிப்பும் சோர்வும் துயரங்களும்தான் இருந்தன. என் குழப்பத்தை உணர்ந்து கொண்டவராக அவரே தொடர்ந்தார்.

“வேணுமானா ரஜனிகாந்த் ஸ்டைலில் இப்படிச் சொல்லலாம். நீங்க என்னோட பத்துக்கதை படிச்சேள்னா நான் உங்களோட ஒரு கதையாவது படிக்க மாட்டேனா?”

அவருடைய நிதானம் என்னைச் சீண்டியது. அவரை சீண்ட விரும்பினேன்.

“நீங்க இப்படி சலனமில்லாமல் தினம் இருக்க வீட்டில் எத்தனை மணிநேரம் பிராக்டிஸ் பண்றீங்க இல்ல ஏதும் டேபிளட் எடுக்குறீங்களா?”

“நேக்கு எண்பத்தாறு வயசு ஆறது. இந்த வயசிலே உணர்ச்சிய கன்ட்ரோல் பண்ண நான் டேப்ளட் எடுத்தா நான் உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டிருக்க முடியும்னு நெனைக்கிறேளா. நீங்க சொல்றபடி நான் பிராக்டிஸ் பண்ணினா காலையில் ஏந்து பிராக்டிஸ் பண்ற வரைக்கும் சலனத்தோட இருந்துண்டு இருக்கணும் இல்லையா. வேணுமானா நீங்க என் வீட்டுக்கு விடிகாலைலேயே வாங்கோ. நான் ஏதும் பண்றேனான்னு செக் பண்ணுங்கோ”

அவர் முகத்தில் புன்னகை மாறவே இல்லை. அவர் என் கதைகளை வாசித்து இருக்கிறார் என்பது என்னைப் படபடக்க வைத்தது.

“என் கதைகள் பத்தி என்ன நினைக்குறீங்க?”

“புண்ணைக் குத்திண்டே இருந்து என்ன ஆகப்போறது. கொஞ்ச நாள் கைவைக்காம தான் இருங்களேன். அப்பவும் காயம் ஆறாம சீழ் வச்சா அப்புறம் பிதுக்கி எடுக்கலாம்”

அவர் என் எதிரே அமர்ந்து பேசினாலும் அவர் சொற்கள் என் தலையைக் கோதுவதைப் போல இருந்தது. ஆனாலும் எனக்குள் ஒரு மெல்லிய அதிர்வையும் அவர் சொற்கள் கொடுத்தன. கண்களை மூடிப் பெருமூச்சு விட்டேன். அது நான் தனியே இருக்கும் போது அடிக்கடி செய்வது என்பதால் சற்று மனம் குன்றி பக்கத்து மேசைகளைப் பார்த்தேன்.

“இங்க நீங்க வித்தியாசமா நடந்துண்டா யாரும் தப்பா நினைக்கமாட்டா. ரொம்ப நாகரிகமா இப்ப நாம செத்த முந்திவரை பேசிட்டு இருந்த மாதிரி பேசினா ஒரு மாதிரி பாப்பாளோ என்னவோ”

“உங்க நேர்காணல் ஒன்னில் , ரொம்ப நாள் முன்ன , ‘ரொம்ப வருத்தம் ஏற்படுவது சில சமயம் எழுதத் தூண்டுது. சில சமயம் எழுத்த முடக்கிடுது’ன்னு சொல்லி இருந்தீங்க. எனக்கு அந்த வார்த்தை தான் எழுதுறதுக்கான உந்ததுதலைக் கொடுத்தது. நான் ரொம்ப சோர்ந்து போகும்போதுதான் எழுதுறேன். என் சோர்வையும் பயத்தையும் வேற என்ன பண்ணி போக்கிக்கிறதுன்னு தெரியல”

“நான் உங்களுக்கு ஏதாவது சொல்லணுமா?”

“நீங்க என்ன சொன்னாலும் நான் அதை கேட்டுப்பேன்” நான் ஒரு குழந்தையைப் போலச் சொன்னேன்.

“கொஞ்ச நாள் எழுதாம இருங்கோ”

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“எழுதணும் எழுதணும்னு உள்ளுக்குள்ள நீங்க அவஸ்தைபடுறது உங்க எழுத்துல தெரியறது. அந்த அவஸ்தையை விடுங்கோ”

“ஆனா என்னால எழுதாம இருக்க முடியும்னு தோணலையே. அது ஒன்னுதான் எனக்கு இருக்கிற ஒரே சந்தோஷம்”

நான் இதைச் சொன்னதும் என்னாலேயே நான் சொன்னதை நம்ப முடியாமல் ஆனது. அவர் நிச்சயம் சலிப்படைந்திருப்பார் என்று நினைத்து அவரைப் பார்த்தேன். அவர் தன் கைகளை மேஜை மேல் கோர்த்து வைத்துக்கொண்டு என்னையே ஆர்வமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

“லவ் பண்ற ஒரு சின்ன பொண்ணுகிட்ட கேட்டா அவளும் அவள் காதலன்தான் தனக்கு உலகம், அவன் இல்லாம தன்னால இருக்க முடியாதுன்னு சொல்லுவா. அதெல்லாம் அப்பப்போ தோண்றது நேச்சுரலான விஷயம்தான்.  நம் மனசு எதுக்கு சந்தோஷப்படும் எதுக்கு துக்கப்படும்னு நம்மால கணிக்கவே முடியாது. நீங்க கடுமையான உழைச்சு ஒரு வெற்றியை அடைஞ்சா அதுக்காக சந்தோஷப்படுவீங்களா? நான் பாத்தவரை இத்தனை நாள் உழைச்சதோட இறுக்கமும் பாரமும் கொறஞ்சதை நினைச்சுத்தான் மனுஷா கொஞ்சமா சந்தோஷப்பட்டுக்கிறா. ஆனாக்க உண்மையான சந்தோஷமும் உண்மையான துக்கமும் நாம் எதிர்பாக்காத நேரத்திலே வர்றதா தான் இருக்க முடியும். நீங்க எழுதுறத நிறுத்தினா துக்கப்படமாட்டேள்னு எனக்கு தோணுது. கொஞ்சம் விடுதலை அடைஞ்சுடுவீங்களோன்னு கூட நினைக்கிறேன்”

அவர் பேச்சின் மீது எனக்கு எரிச்சல் தோன்றியது.

“எனக்கு என்னைச் சுற்றி இருப்பது எல்லாம் துக்கத்தை தருது. என் வேலை, என் குடும்பம், என் நண்பர்கள், உறவுகள் என எல்லாமும் துக்கத்தைத் தருது. என்னால எந்தவொரு வேலையையும் சரியா செய்ய முடியல. எல்லோரும் மேல ஏறிப் போயிட்டு இருக்கும்போது நான் ரொம்ப பின்தங்கிட்டனோன்னும் எனக்கு கிடைச்ச நேரங்கள சராசரி அளவுக்கும் அதிகமாக வீணடிச்சிட்டதாவும் தோணுது. எதைச் செய்யவும் பயமா இருக்கு. எதை செஞ்சாலும் தயக்கம் வருது. என்னோட தோல்வியை நானே என் கண்ணால பாத்துட்டு இருக்கிறமாதிரி இருக்கு. என்னைச் சுத்தி இருக்கிறவங்க என்னை இப்போவெல்லாம் ஈஸியா காயப்படுத்திடுறாங்க. என் மேல் யாருக்கும் மரியாதைன்னு ஏதும் இல்லாம போச்சு. நான் வெத்து வேட்டுன்னு நினைக்கிறாங்க. நான் என்னை நிரூபிக்கணும். எழுத்து வழியா என்னை நிரூபிக்கணும். ஒரு பெரிய நாவல் எழுதணும். வருஷத்துக்கு நூறு கதைகள் எழுதணும். கட்டுரைகள் எழுதணும். என்னுடைய சிந்தனைகளை தனிப்பள்ளியா வளர்த்தெடுக்கணும். இதெல்லாம் என்னால செய்ய முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா என் முன்னால ஒரு பெரிய பாறை கிடக்கு. அது கல்லால ஆனதா காத்தால ஆனதான்னு கூட எனக்குத் தெரியல. அந்தப் பாறைய நகத்திப் போட்டுட்டுப் போய்தான் நான் எதையும் செய்ய முடியும். என் எழுத்து வழியா எதுவும் சொல்ல முடியும். ஆனால் நான் திரும்பத் திரும்பப் போய் அந்த பாறையிலேயே முட்டிக்கிறேன். நான் அதை எப்படித் தாண்ட்றது? எனக்குத் தெரியல. ஆனா எனக்கு நீங்க வழி சொல்ல முடியும். ஏன்னா நீங்க அந்தப் பாறையை தாண்டிட்டீங்க. உங்களுடைய ஒவ்வொரு வரிலையும் பேச்சின் ஒவ்வொரு சொல்லிலேயும் அந்தப் பாறையைத் தாண்டின ஆசுவாசம் தெரியுது. நீங்க என்ன பண்ணீங்க? எனக்கு அது தெரிஞ்சாகணும்”

அவ்வளவு பேசிவிட்டதால் நான் சற்று பதற்றமடைந்தேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியவை இன்னமும் உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டுதான் இருந்தன. அந்தக் கொந்தளிப்பில் எண்ணெய் அள்ளிக் கொட்டுவது போல அவர் சொன்னார்.

“ஏத்துக்கோங்க. அது ஒன்னுதான் வழி”

அந்த சொற்கள் எனக்குத் தாளாத வலியைக் கொடுத்தன.

“சரி ஏத்துக்கிறேன். நீங்க இந்த நிலையை ஏத்துக்க எத்தனை நாள் ஆச்சு? எந்த கணத்தில் உங்களுக்குள் இந்த ஏற்பு நிகழ்ந்துச்சுன்னு சொல்லுங்க”

“அதை என்னால சரியா சொல்ல முடியுமான்னு தெரியல. ஆனால் நான் அப்படி ஏத்துகிட்ட பிறகு தான் எழுதத் தொடங்கினேன்”

நான் துணுக்குற்றேன்.

“அப்ப நான் எழுதத் தொடங்கி இருக்கக்கூடாது”

அவர் இப்போது மெல்லச் சிரித்தார். அந்த சிரிப்பினுள் இதுவரை இல்லாத சினேகபாவம் குடிகொண்டது.

“நல்லா யோசிச்சுப் பாருங்கோ. நீங்க எழுதத் தொடங்கினப்போ எழுதுறதுக்கு ஏத்த மாதிரிதான் உங்க மனம் இருந்திருக்கும். எதையும் யோசிக்காததா, எந்தக் கள்ளமும் இல்லாததா,  பயமும் பணிவும் கொண்டதா உங்க மனம் இருந்திருக்கும். சரியா?”

நான் பதில் சொல்வதற்கு முன்னே “என்ன நான் உங்க கதையில வர்ற ஆளாட்டம் பேசிட்டிருக்கேன்” என்று சொல்லி சிரித்தார்.

நானும் சிரித்துவிட்டேன்.

“நீங்க எழுதத் தொடங்கினப்போ உங்களிடம் ஒரு கனவு இருந்தது. அது மட்டுந்தான் இருந்தது. இன்னிக்கு இருக்கிற அளவு அறிவோ பகுத்துப் பாக்கும் திறமையோ இழப்புகளோ இழப்புகள் கொடுக்கிற கவலையோ இருந்திருக்காது. இன்னிக்கு அதெல்லாம் குப்பையாட்டம் சேர்ந்து உங்க ஓட்டத்த தடுக்கிறது. உங்க கண்ணுக்கு பாறையா படறது”

“என் துயரங்களை என்னோட ஆணவம்னு மட்டும் சொல்றீங்களா?”

“உங்க துயரம் என்ன,  கொஞ்சம் சொல்லுங்கோ”

“லௌகீகத்தில் எனக்கு எந்தத் துயரமும் இல்லை. ஏன்னா நான் பெருசா எப்பவும் எதையும் ஆசைப்பட்டது கிடையாது. ஆனா என் வீடு எனக்கு எரிச்சலைத் தருது. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல. பண்ணிக்கிற ஐடியாவும் இல்லை. ஆனா வீட்டில் இருக்கிற மற்ற உறவுகளை என்னால் தாங்கிக்க முடியல. அவங்களுக்கும் எனக்கும் இடையில ஒன்னுமில்ல. என் அம்மா அப்பா எனக்கு சோறு போட்டிருக்காங்க. திருப்பி நான் சோறு போடணும்ற நன்றிக்கடன் தாண்டி என் மனசுல ஒன்னுமே இல்லை”

“ம்ம் உங்க கதை ஒன்னுல இதையே சொல்லி இருக்கீங்க”

“அடுத்ததா பொறாமை. நல்லா வாழ்ற யாரைப் பார்த்தாலும் எனக்கு பொறாமை வர்றது இல்லை. ‘நான் நல்ல வாழ்றேன்’ பார் என்று அவங்க குறியையோ முலையையோ தொறந்து காண்பிக்கிறவங்க மேலதான் எனக்கு பொறாமை வருது. அதைப் பொறாமைன்னு கூட சொல்ல முடியுமான்னு தெரியல. அவங்கெல்லாம் அப்படியே அழிஞ்சு போயிடணும்னு நான் நினைக்கிறேன். இந்த நொடியே இல்லாம ஆயிடனும்னு நினைக்கிறேன். அப்படி நினைக்கிறதை பின்னாடி நினைச்சு நான் குற்றவுணர்வெல்லாம் அடையிறது இல்லை.”

“ம்”

“அடுத்ததா பெண்கள். சில பெண்கள் கூட செக்ஸ் வச்சிட்டு இருக்கேன். ஆனா அது எனக்கு ஒரு பெரிய விஷயமா தெரியல. பெண்களைப் பார்க்கும் போது ஒரு வகையான எரிச்சல் வருது. அவங்களோட அழகுக்காகத்தான் ஒட்டுமொத்த ஆம்பளைங்களும் நாய் மாதிரி அலையறான்னு நெனச்சு வர்ற எரிச்சல். ஒரு நல்ல விந்தை கருப்பைல வாங்கிறதுக்காக அவங்க காட்ற தளுக்கு மினுக்கு அப்படி ஒரு நல்ல வித்து கிடைக்காதபோது போடுற நாடகம் எல்லாம் எனக்கு எரிச்சலைத் தருது.”

“உங்க கதையில் ஏகப்பட்ட பெண்கள் வர்றாங்க”

“அடுத்ததா நீதி,அறம்,வரலாறு,பண்பாடுன்னு எல்லாம் பேசப்படும் விஷயங்கள். அவை கொடுக்கும் பயம். இது எல்லாம் கடந்தகாலத்தில் இருக்கு. இந்த கடந்தகாலத்தில் இருந்து எதையும் எடுத்துப் பயன்படுத்துறதில இருக்கிற பயம். நான் பார்த்தவரை மனுஷங்க அத்தனை பேரும் சினிக் தான். ஒருத்தர் கூட cynicism தாண்டி எதையும் யோசிக்கிறது இல்லை. லட்சியவாதம் சேவை மனப்பான்மை எல்லாம் புத்திசாலிங்களோட cynicism. தங்களுடைய பெயர் வரலாற்றில் நிற்கும் தங்களை ஒரு மாணவர் குழு பின் தொடரும் தனக்கு சிலை வைப்பாங்கன்னு தான் எல்லோரும் உயிரை கொடுத்து உழைக்கிறாங்க. அவங்களோட உழைப்புக்கு இணையா இங்க கொடுக்கிறதுக்கு நம்மிடம் ஒன்னுமே இல்லாததால நாம அவங்களுக்கு ஒரு உன்னதமான இடத்தைக் கொடுக்கிறோம். அந்த உன்னத இடத்துக்கான வெறியில் தான் எல்லாப் பெரிய ஆளுமைகளும் உழைக்கிறாங்க. எனக்கு இங்க பின்பற்றிப் போக ஒருத்தருமே இல்ல.”

நான் சொல்லச் சொல்ல சொல்கிறவற்றில் நம்பிக்கை இழந்தேன். ஆனாலும் சொல்லிவிட்ட நிறைவும் இன்னும் சொல்ல வேண்டும் என்ற வெறியும் எழுந்தது.

நான் சொன்னேன்.

“கடைசியாக அர்த்தம் பற்றிய பயம். ஒவ்வொருத்தரையும் கூர்ந்து பார்க்கப் பார்க்க அவங்களிடம் இருக்கும் உள்ளீடின்மை ரொம்ப பயத்த தர்றது. எதை நம்புறது யாரை பிடிச்சிக்கிறதுன்னு ஒன்னுமே புரியல. இது அத்தனையும் சேர்ந்து வலியைத் தருது. ரொம்ப ரொம்ப மோசமான வலிகளைத் தருது. இவ்வளவு வலிகளையும் ஏத்துக்கத்தான் சொல்லுது உங்க கதைகள். இது அனைத்தையும் ஏத்துக்க சொல்றதுக்கு நீங்க யாரு? உங்களுக்கு இதையெல்லாம் ஏத்துக்க சொல்ல எங்கேர்ந்து தைரியம் வருது. ஐம்பது வருஷமா நீங்க இதை மட்டுந்தான் சொல்லிட்டு இருக்கீங்க. வாழ்ந்துட்டும் இருக்கீங்க. ஒவ்வொரு நொடியும் நரகம் மாதிரி இருக்கு. முதுகுத்தோலை உரிச்சு உச்சிவெயிலில் தார் ரோட்டில் போட்ட மாதிரி இருக்கு இந்த வாழ்க்கை. மனுஷங்க கூடப் பழக தோல் வேணும். அந்த தோல் நடிப்புகளால் செய்யப்பட்டது. நூற்றாண்டுகளா நடிச்சு நடிச்சு தயார் பண்ணினது. எங்கிட்ட அந்த தோல் இல்லை. யார் எங்க தொட்டாலும் கூசி வலிக்குது. உடம்பெல்லாம் மனசெல்லாம் எரியுது. இந்த எரிச்சலும் வலியும் கட்டாயம் உங்களுக்குப் புரியும். ஆனாலும் இதையெல்லாம் அமைதியா ஏத்துக்க சொல்றீங்க. ஏன்? ஏன் ஏத்துக்க சொல்றீங்க?”

“ஏத்துக்காதவங்களுக்கு என்ன வழி இருக்குன்னு நினைக்கிறீங்க? கடவுள்? அப்படி ஒருத்தர் இருக்கிறதா நானும் நம்புறேன். நான் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடும் ஆள்தான். நான் வழிபடும் போது நன்றி சொல்றேனா என்னை காப்பாத்த சொல்றேனான்னு எனக்குத் தெரியல. ஆனால் ஆஞ்சநேயரால நான் எதுவும் சொல்லாமலேயே என்னை புரிஞ்சிண்டுட முடியும்னு ஒரு நம்பிக்கை. நூறு நூறு வருஷமா கஷ்டங்களும் அழுகையும் ஒலிச்ச காதாச்சே. இந்த எழுபது எண்பது வருஷம் வாழ்றவனின் கஷ்டம் புரியாதா என்ன ஆஞ்சநேயருக்கு? தன்னோட துக்கத்தை இறக்கி வைக்கத்தான் மனுஷன் கடவுளை கற்பனை பண்ணிகிட்டானோன்னு தோணும். கற்பனையாவே இருக்கட்டுமே. இந்த துக்கமெல்லாம் ஒரு கற்பனை சுழியை நோக்கிப் போறதாவே இருக்கட்டுமே. கஷ்டத்தையெல்லாம் சொன்ன பிறகு ஒரு தெம்பு வருதே. அது கற்பனை கிடையாதே. இப்படி கற்பனையில் இருந்து யதார்த்தத்துக்கு ஒரு கோடு இழுக்க முடியும்னா கற்பனைகள் இங்க இருக்கிறதுல என்ன குத்தம் வந்துடும்? என்னை மாதிரி கிழவனுக்கு நாமக்கல் ஆஞ்சநேயர் மாதிரி எளிமையான கற்பனை. உங்களை மாதிரி அறிவுஜீவிகளுக்கு இன்னும் கொஞ்சம் சிக்கலான கற்பனை. நீட்சே, கான்ட், ஹெகல், புத்தர் மாதிரி. நீங்க இன்னும் உங்க கற்பனையை கண்டுபிடிக்கல. அதனாலதான் இருக்கிற கற்பனையை எல்லாம் பொய்யின்னு சொல்றேள். நிச்சயமா பொய்தான். ஆனா உங்களுக்கு பொய்யின்னு படறது இன்னொருத்தனுக்கு உண்மையா இருக்கட்டுமே.”

“அப்ப இந்த துக்கங்களுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?”

என் தொனி ஏறக்குறைய இரைஞ்சலாக மாறி இருந்தது.

“துக்கம் துக்கம்னு சொல்றேள். துக்கம் யாருக்கில்ல. இன்னும் சரியா சொன்னா எதுக்குதான் துக்கமில்ல. நிலத்தை சிதைச்சு வெதச்சு அறுத்து சாப்பிடறோம். ஆடு கோழிய வளத்து அடிச்சு திங்கிறோம். அதுகளுக்கு துக்கமில்லையா? உங்க துக்கம் அதுகளையும் சேத்துகிட்டதா இருக்கலாம். ஆனா நாம ஒருத்தன் துக்கத்தை அவனோட இடத்தில் இருந்து பார்க்கிறமா? இல்லை நம்முடைய இரக்கத்தில் இருந்து பார்க்கிறமா? ரெண்டாவததான் உங்களைமாதிரி அறிவுப்பூர்வமா யோசிக்கிறவா தேர்ந்தெடுக்கிறான்னு தோண்றது எனக்கு. உங்களுக்கு ஒரு உடம்பு இருக்கு. அதுக்கு பசி வலி எல்லாம் உண்டு. உங்க பசியையும் வலியையும் வச்சு உலகத்தோட பசியையும் வலியையும் புரிஞ்சிக்க முயற்சி பண்றது சரியா? துக்கம் வாழ்க்கையோட ஒரு பகுதியா இருக்கக்கூடாதுன்னு சொல்றீங்களா?”

“இல்லை. நான் சீர்திருத்த சிந்தனை கொண்டவன் கிடையாது. என் துக்கம் வெறும் ஆணவம் இல்லன்னு நான் நம்புறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“உங்களைப் பத்தி நீங்க நினைக்கிறதைத் தாண்டி நான் என்ன நினைச்சுட முடியும்?”

“என்னோட கடவுள் கிட்ட நான் எப்படி போறது?”

“துக்கப்பட்டு துக்கப்பட்டு போய்ச்சேருங்கோ. உங்க துக்கத்தை உங்களால புரிஞ்சிக்க முடியல. அழுதுண்டே இருந்தேள்னா கொஞ்ச நாளில் உங்க துக்கத்தை சரியா கண்டுபிடிச்சிடுவீங்க. அதை எங்க சொல்லி இறக்க முடியுதோ அதுதான் உங்க கடவுள். உங்க துக்கத்தின் மூர்த்தி. உங்க துக்க சொரூபமே ஆன மூர்த்தி.”

அந்தப் புள்ளியில் எங்கள் உரையாடல் முடிந்தது. நான் எழப்போனேன். ஏதோ சொல்லத் தோன்ற மீண்டும் அமர்ந்தேன்.

“உங்க வயசில் உங்களைப் போலவே புகார்கள் இல்லாதவனா நான் இருப்பேன். ஒருவேளை உங்களைப் போலவே எந்த ஞானத்தையும் அடையாதவனாவும் இருக்கலாம்.”

அவர் முகத்தில் ஒரு மெல்லிய அடியினை ஏற்ற அதிர்ச்சி கடந்துபோனது. ஆனாலும் மீண்டும் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு எனக்கு விடை கொடுத்தார்.

“உங்களை சந்திச்சது சந்தோஷம். போயிட்டு வாங்கோ. நிறைய எழுதணும்.”

சுரேஷ் பிரதீப் – திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்கால எழுத்தாளர்களில் அதிகம் கவனிக்கப்படும் புனைவுகளை எழுதி வருபவர் சுரேஷ் பிரதீப். இவரது நாவல் ஒளிர் நிழல், சிறுகதை – நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள் ஆகியவ வெளிவந்துள்ளன. [email protected]

3 COMMENTS

  1. நல்லா இருக்கு. சில இடங்களை ரசிச்சு கடந்தேன்

  2. என் மனதோடு நானே பேசுவதுபோலவே இருந்தது. அருமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here