மாம்பூவே

2

தென்றல் சிவக்குமார்

இந்த சென்னை மாநகரிலே செம்பருத்திப் பூவைக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கிறது? பாப்பாவின் மூன்றாம் வகுப்பு விஞ்ஞான செயல்திட்டத்துக்காக தேடி அலைந்தோம். தெரிந்த வீடுகளில் எங்கும் காணோம். “அப்பா.. ப்ளீஸ்.. பூக்காரப் பாட்டி கிட்ட கேக்கலாமாப்பா?” என்றாள் பாப்பா. செம்பருத்தி விற்று பார்த்ததேயில்லை நான். பிள்ளையார் கோவிலை ஒட்டிய பூங்காவில் இருந்தது ஒரு செம்பருத்திச் செடி. அந்த பிள்ளையாரிடமே செடியில் ஒரு பூவேனும் இருக்க வேண்டுமென்றும் அதை பறித்துக்கொள்ள அனுமதி கிடைக்க வேண்டுமென்றும் வேண்டிக் கொண்டோம்.

ஐந்தாறு பூக்கள் இருந்தன. சந்தன நிறத்தில் செந்தீற்றல்களோடு அழகாய் தான் இருந்தது. பாப்பாவுக்குச் சிவப்பாக இல்லையே என்று கவலை. ஆனாலும் பரவாயில்லை என்று பறித்தாள். இன்னொன்று வேண்டும் என்று கேட்டு அனிதாவுக்கும் சேமித்துக் கொண்டாள்.

அம்மாவிடம் சொன்னால் அப்படியே உன் குணம்தான் என்பாள். அடுத்த முறை வருகையில் செம்பருத்திக் கிளையோடு (அதுவும் பாப்பா கேட்ட சிவப்பு நிறத்தில்) வந்து செயலில் இறங்கி விடுவாள்.

***

பூக்களாலானது அம்மாவின் உலகம். “அப்படியில்லை.. உலகத்தில் எல்லாவற்றையும் பூக்களாய்ப் பார்க்கலாம்” என்பாள்.

எல்லாவற்றையுமே பூக்களால்தான் அடையாளப்படுத்துவாள். குளிர் பெட்டியில் பூ சேமிக்கவென்று தனித்தனியே டப்பாக்கள் வைத்திருப்பாள். “சாமந்தி டப்பாவுக்கு மேலே இருக்கு பாரு… அதுதான் அடைமாவு” என்று தான் விளக்குவாள். சுபா அடைமாவு கிண்ணத்தைக் கொண்டு சாமந்திப்பூ டப்பாவை கண்டு கொள்வாள். அம்மாவுக்கு நேரெதிர்.

சேலை வாங்கப் போனால், அம்மா கத்தரிப்பூ கலர், சங்குப்பூ கலர், கற்பகம் கலர் என்று கேட்டு கடைக்காரரைக் குழப்புவாள்.  சுபா வெகு இயல்பாக “அதாம்மா… பொங்கல் சுடிதார்.. சிமெண்ட் கலர்… அதைப் போட்டுக்கவா?” என்பாள்.

பூ தொடுப்பதிலும் சூடிக்கொள்வதிலும் அம்மாவுக்கு அவ்வளவு ஆர்வம். கதம்பத்தில் சேர்த்துத் தொடுக்க மருதாணிப்பூ வேண்டும் என்பதற்காகவே மண்டும் மருதாணிப் புதரை அப்படி பராமரிப்பாள். சுபாவுக்கு செண்பகப்பூ குழையும் நேரத்திலும், நித்ய மல்லி பழுக்கும் நேரத்திலும் தலைவலி வந்துவிடும். சரியான சமயத்தில் அப்புறப்படுத்தி விடுவாள்.

அம்மா பூத்தொடுக்க ஊஞ்சலில் அமர்ந்தால், நான் இரண்டிரண்டாக எடுத்து பலகையில் வைப்பேன்.

சுபாவுக்கு பூக்கள் மேல் பெரிதாக அன்பிருந்ததாக நினைவில்லை, அல்லது இருந்திருந்தாலும் அவள் வெளிப்படுத்த வேண்டிய அவசியமே வந்ததில்லை.

சுபாவும் சுந்தராகிய நானும் இரட்டையர்கள். எங்களது உண்மையிலேயே ‘சம’காலம்தான். அம்மாவின் பூக்களை அம்மாவைப் போலவே பார்ப்பதில் எனக்கும், அவற்றைப் பார்த்துக் கொள்வதில் சுபாவுக்கும் ஆர்வம் இருந்திருக்கும் என்று இப்போது யோசித்தால் புரிகிறது.

வீட்டில் மராமத்து வேலைகள், இன்னும் கொஞ்சம் விஸ்தரித்து கட்டுமான வேலைகள் எது நடந்தாலும் செடிகளை எப்படியோ காப்பாற்றி விடுவாள். யார் வீட்டுக்குப் போனாலும் அம்மா எதுவும் கேட்கும் முன்னம் அவர்களாகவே செடி புராணம் தொடங்கி விடுவார்கள். சோமவார அமாவாசையில் அம்மா அரசு வேம்பு சுற்றப் புறப்படுவாள். நான் அம்மாவுடனே கிளம்பி விடுவேன். மற்றவர்களெல்லாம் 108 எண்ணிக்கையில் மஞ்சளோ, மிட்டாயோ எடுத்து வந்திருக்க, அம்மா மட்டும் 108 பூக்கள் எடுத்து வந்திருப்பாள். ராக்கொடியைச் சுற்றி சூட்டவென்று தொடுப்பதுபோல் ஒருபுறமாய் தொடுத்து, சுற்றி முடிக்கையில் கோவிலில் கொடுத்துவிட்டு வந்து விடுவாள். அன்று மாலை வரையில் அது அம்மன் கழுத்தில் கிடக்கும். நாங்கள் வீடு திரும்பிய பின் சுபாவும் அப்பாவும் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு மாலையை பார்த்துவிட்டு வருவார்கள்.

அக்கம் பக்கத்திலோ, நெருங்கிய உறவுக்குள்ளோ இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அம்மாவின் கையால் சடை தைத்துக்கொள்ள காத்திருப்பார்கள்.  அம்மா மனசுக்குள் வரைபடம் தயாரித்து விதவிதமாய்ப் பூ சடைகள் தயாரிப்பாள். தாழம்பூ, மல்லி, ரோஜா என்று ஒருமுறை செய்ததுபோல் மறுமுறை இல்லாமல்.

பலரது சீமந்த ஆல்பத்தில் இந்த புகைப்படமும் இருக்கும்.

எப்போதாவது உற்சாகமாக இருந்தால், மெல்லிய குரலில் “மாம்பூவே…” பாடுவாள். அபூர்வமாய் ஒரு கல்யாணக் கச்சேரியில் அந்தப் பாடல் ஒலித்தபோது, முதல் வரியை “மாம்பூவே.. சிறு மைனாவே…” என்று பாடகர்தான் தப்பாகப் பாடுகிறார் என்று நினைத்தேன். ஒவ்வொரு முறையும் அப்படியே பாடவும் அம்மாவைப் பார்த்தேன். நீள்புன்னகை ஒன்றை அளித்தாள். அம்மா எப்போதும் “மாம்பூவே.. சிறு மாம்பூவே…” என்றுதான் பாடுவாள்.

***

பூ கிடைத்து விட்டதாகவும், அனிதா வீட்டுக்குப் போய் வருவதாகவும் தகவல் சொல்ல கவிதாவை அலைபேசியில் அழைத்த போது நிம்மதியாக, “அப்பாடா…” என்றாள்.

கல்லூரியில் மூன்றாமாண்டில் நான் கொடுத்து கவிதா மறுதலித்த ஒற்றை சிவப்பு ரோஜாவை அம்மாவிடம் தான் கொண்டு வந்து கொடுத்தேன். “கோவப்பட மாட்டியே…?” என்று கேட்டுவிட்டு சத்தமாகச் சிரித்தாள். நான் முறைத்தேன். “இல்லடா சுந்தர்.. யோசிச்சிப் பாரேன்.. இப்டி ஒரு பூவைக் குடுக்குறவன வேணாம்னு சொல்றது யாருக்கு நஷ்டம்…?” என்றாள். அம்மா.

பிற்காலத்தில், கவிதா சம்மதித்தபோது 108 சுற்றுகளின் நற்பலனோ, அல்லது அம்மா சொன்ன அந்தச் சொல்லை ஏதோ ஒரு தேவதை கவியிடம் கடத்திற்றோ என்று நினைத்தேன்.

ஃபோனில் சொன்னபோது சுபா சத்தமாகச் சிரித்தாள், “ம்க்கும்… அவ 108 சுத்தாதது தான் காரணமாயிருக்கும்.” கவி இன்னும் பெரிய புன்னகையுடன், இன்னும் சின்னதாகச் சொன்னாள்.. “காதல்.”

எங்கள் இருபத்திரண்டாம் வயதில் சுபாவுக்கான முதல் ஜாதகம் வீடுதேடி வந்தது. வெகுதூரத்து உறவில் பெங்களூரிலிருந்து ஒரு வரன். வாணி சித்தி, அம்மாவின் தங்கை, பெங்களூரில் இருப்பதால் சித்தப்பாவை விட்டு மாப்பிள்ளை பற்றி விசாரிக்கச் சொன்னார்கள்.  அவர் திருப்தியை தெரிவித்ததும் பெண் பார்க்க வரச்சொன்னோம். ஒரு நல்ல நாளில் சித்தி, சித்தப்பாவும் உடன் வர ரகு வீட்டார் வந்து பார்த்துச் சென்றார்கள்.

எல்லாருக்கும் எல்லாரையும் பிடித்து போயிற்று. அடுத்த வாரம் நாங்கள் பெங்களூர் சென்று “மாப்பிள்ளை வீடு” பார்க்கும் சடங்கை நிறைவேற்றிய கையோடு நிச்சயதார்த்த, திருமணத் தேதிகளை முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து அறிவிக்கப்பட்டது.

சுபாவையும், சித்தி மகள் ராஜியையும் மட்டும் சித்தி வீட்டில் விட்டுவிட்டு நாங்கள் ரகு வீட்டுக்குப் போனோம். வீடெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு, லௌகீகங்கள் பேசியான பின் சில தேதிகளை ஷார்ட் லிஸ்ட் செய்து கொண்டு கிளம்பினோம். சித்தப்பாவின் காருக்குள் அமர்ந்தபடி தலையை வெளியில் நீட்டி கையசைத்த அம்மா சட்டென்று “இந்த இடம் வேண்டாம்” என்றாள்.

நாங்கள் நாலு பேரும் அதிர்ந்தோம் என்பதை வேறெப்படிச் சொல்ல? சித்தப்பா சட்டென்று காரை நிறுத்தினார். ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் பார்த்துக் கொள்வதற்குள் பின்னிருந்து ஒரு லாரி ஒலியெழுப்பத் தொடங்கிற்று. மீண்டும் கிளம்பினோம்.

மாற்றி மாற்றி கேட்டுப் பார்த்தோம். பிடிவாதமாக வேண்டாம் என்று மட்டும் சொன்னாளேயொழிய காரணம் சொல்லவே இல்லை. அப்பா அதட்டி, மிரட்டி, வாதாடி, கெஞ்சி, சலித்துப் போகையில் சித்தி வீடு வந்திருந்தது.

எனக்கே எரிச்சல் வந்துவிட்டது. சுபா அழுத்தமாக அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சித்தப்பா, ராஜியை அழைத்துக்கொண்டு ஏதோ வாங்கி வருகிறேன் என்று ஒரு சாக்கு தேடிக் கண்டுபிடித்து வெளியேறினார்.

அப்பா முகமெல்லாம் சிவந்து கேட்டார், “ஒரே ஒரு காரணம் சொல்லு?”

அம்மா சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள். அப்பாவும் நானும் சோபாவில். சித்தி அம்மா அருகில். சுபா எதிர்ப்புற சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.

அம்மா நிதானமாகச் சொன்னாள், “சொல்லணும்தான்… இப்ப சொல்லணும்தான்… அவங்க வீட்ல அரளிச்செடி இருக்கு.”

நான் இதென்ன கூத்து என்பதாய் அப்பாவைப் பார்த்தேன். அவர் முதுகை நிமிர்த்தி உட்கார்ந்து, தலையைக் கவிழ்த்துக் கொண்டார்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா தலையை நிமிர்த்தவேயில்லை. அம்மா புன்னகைக்கு முந்தைய தீர்க்கமான பார்வை ஒன்றை என் பக்கம் வீசிவிட்டுப் மிச்சமிருந்த இருவாட்சியை உணவு மேசை மேல் கொட்டி தொடுக்கத் துவங்கினாள்.

எனக்கு இரண்டு பக்கமும் ஒருவரே ஆடும் சதுரங்கத்தைப் பார்ப்பது போலிருந்தது. தெளிவு உள்ளங்கைக்குள் இருந்தாலும் மனம் குழம்பவே ஆசைப்பட்டது. “அப்படியெல்லாம் இருக்காது” என்று மனசுக்குள் ஒலிக்கத் துவங்கிய குரலை எப்படி மௌனிக்கச் செய்வதென்று புரியவில்லை. ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து, பூக்களை இரண்டிரண்டாக எடுத்து அடுக்கத் தொடங்கினேன். சுபாவை நிமிர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யவே முடியவில்லை. அப்பா ஒருமுறை நிமிர்ந்து என்னைப் பார்த்தார். அதன்பிறகு அவரிடம் நான் பேசவில்லை.

சுபா, பல ஆண்டுகளுக்குப் பின், என் தோளில் கை வைத்து அழுத்தினாள். நிமிர்ந்து பார்த்தேன். அவள் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“துர்க்கைக்கு உகந்ததும்மா.. அரளிப்பூ… மூனு மணிநேரத்துல இங்கிருந்து மைசூர் சாமுண்டி கோவிலுக்குப் போயிரலாம்ல.. ஏசி கார்ல அரளி வாடாதுல்ல?”

அம்மா பூ தொடுப்பதை நிறுத்திவிட்டு சுபாவை வாஞ்சையோடு பார்த்தாள். கண்ணோரம் நீர் காத்திருந்தது.

“அரளிச்செடியில பூவைத்தான்மா நான் பாப்பேன்” என்ற சுபாவை நெற்றியில் முத்தமிட்டாள் அம்மா.

***

சந்தனச் செம்பருத்தியின் செந்தீற்றலைப் பார்த்தவாறே சொன்னேன், “திடீர்ன்னு அப்பாகிட்ட பேசணும்னு தோனுது கவி”

அவள் புன்னகைத்திருப்பாள்.

“மாம்பூவே.. ஒருவழியா நீ மெச்சூர் ஆயிட்டே.” என்றாள்.

****

தென்றல் சிவக்குமார் – சென்னை வசித்து வருகிறார். “எனில்” எனும் கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளியானது. மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் என வெளியாகி இருக்கிறது.

2 COMMENTS

  1. “அரளிச்செடியில பூவைத்தான்மா நான் பாப்பேன்” என்ற சுபாவை நெற்றியில் முத்தமிட்டாள் அம்மா.//💜

  2. அருமையான எழுத்து. அப்படியே கை பிடித்து உடன் நடத்தி செல்வதைப்போன்ற மொழிநடை. மிகவும் ரசித்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here