Friday, March 29, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்மலையைத் திறக்கும் சன்னல்கள் - மிளகு நூல் மதிப்புரை

மலையைத் திறக்கும் சன்னல்கள் – மிளகு நூல் மதிப்புரை

ஸ்டாலின் சரவணன்

நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்குவது அவ்வளவு எளிதல்ல” என்ற கவிஞர் சச்சிதானந்தனின் புகழ்பெற்ற வரியில் காடு என்பதோடு மலையையும் மலை சார்ந்த வாழ்வையும் வைத்து எழுதினால் அது மிளகு தொகுப்புக்கான விமர்சனம் எனலாம். மலைக்காட்டுக்கும் மிளகுக்கும் இக்கவிதைகளை சமர்ப்பித்துள்ளார் கவிஞர் சந்திரா தங்கராஜ்.
திணை, காலம், பொழுதுகளை முன்வைத்து எழுதப்பட்ட கவிதைகள் மிகுந்துள்ளன. இயற்கையைப் பாடுதல் என்பது சங்க காலத்தின் தொடர்ச்சி. மனிதர்களுக்கும் இயற்கைக்குமான வாழ்வை எழுதுவது என்பது காலாதி காலத்தின் எச்சம். அதனை சமகாலத்தோடு இணைத்து பாலின அரசியல் ப்ரக்ஞையோடு எழுதியுள்ளார் சந்திரா.

மேற்குத்தொடர்ச்சி மலையில் தொலைத்த வாழ்வைத் தன் கவிதைகள் மூலமாக மீட்டெடுத்துத் தத்தளிக்கிறார் கவிஞர். நெருக்கடி மிகுந்த நகர வாழ்விலிருந்து உந்திக்கொண்டு மலையை நோக்கிப் பறக்கும் சிறகுகளைத் தன் கவிதைகளுக்கு அணிவிக்கிறார். மலைக்காட்டு வாழ்வு, சமகாலத்தின் நகரத்து நாட்கள், தான் இழந்த உரிமைகளைக் கோரும் பாடல்கள் என்று தொகுப்பை மூன்றுவிதமாக நகர்த்துகிறார்.

கவிதைகளில் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் நாடோடிக் குடும்பமாக இருக்கவே சந்திரா விரும்புகிறார். தனது கற்பனையில் மலைகள், மேகங்கள் மீது புரண்டாலும் அவரது கால்கள் என்னவோ குடிசையின் தரையில்தான் ஊன்றி இருக்கின்றன. கை கொடுக்கும் உறவோடுதான் எங்கும் செல்கிறார். தனித்துச் செல்ல நேர்ந்தாலும் இருட்டுவதற்குள் திரும்பி விடுவேன் என்ற உத்தரவாதத்தைத் தருகிறார்.

இவர் கையாளும் மொழி ஒரே லாவகத்துடன் செல்கிறது. இரவுநேர நட்சத்திர விடுதி விருந்தில் ஒலிக்கும் சீரான லயமிக்க இசையைக் கேட்பதான உணர்வை அது தருகிறது.


உரத்துப் பேசுவதும் நறுக்கென்று பேசுவதும் வேறு வேறு. சந்திராவின் கவிதைகள் இரண்டாம் ரகத்தில் அமைந்துள்ளன. அதிகாரத்தின் சட்டையைப் பிடித்து உலுக்குவதில்லை. ஆனால் அதன் கவனத்தை சாந்தமாகப் பேசியே ஈர்க்கின்றன. இந்த சிறுமியின் குரலைக் கேளுங்கள் – “அம்மா, கற்களை வீசாத தேசம் வேண்டும் / இல்லை உடையாத தலையாவது வேண்டும்”. யாரோடும் மல்லுக்கட்டாமல் அவள் ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறாள், இல்லையேல் உங்கள் வன்முறையைத் தாங்கிக்கொள்ளும் வலிமையைக் கோருகிறாள். விளிம்புநிலை மக்கள் இந்த தேசத்தில் பிழைத்தாக வேண்டிய லட்சணத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் வரிகள்.
ரோஹினி மணியின் அட்டைப்பட ஒவியம், சல்வேடர் டாலியின் குச்சிக் கால் யானை ஒவியத்தை நினைவுறுத்துகிறது. கிரேக்க மற்றும் எகிப்திய கட்டிடச் சிறப்புமிக்க நினைவுத் தூண்கள் அதன் உச்சியிலே ஒரு பிரமிட்டையும் சுமந்து செல்லும் குச்சிக் கால்கள் கொண்ட டாலியின் யானையை ஒத்த ஒரு யானை மீது ஒரு பெண் அமர்ந்து இருக்கிறாள். அந்தப் பெண் தொலைவில் பார்த்துக் கொண்டிருப்பது அவள் தொலைத்த மலை வாழ்வைத்தான் என்பதற்கான சாட்சியாகிறது.


அநாயசமான கற்பனைகள் கவிதைகளில் இறைந்து கிடக்கின்றன. டார்ஜான் மகளென மரத்துக்கு மரம், மலைக்கு மலை, நட்சத்திர மேகங்களைத் தொட்டுத் திரும்பும் சாகசப் பெண்ணானாலும் தாயின் மடியிலும் தகப்பன் தோளிலும் காதலன் கரங்களிலும் ஓய்வுபெறவே விரும்புகிறவள்.
பொதுவாக ஆண்கள் எல்லாவற்றிலும் இருந்து தப்பித்து வாழவே விரும்புவர். பெண்களோ குடும்பத்தின் தடைகளை உடைத்து அவர்களுடன் சுயமரியாதையும் சுதந்திரமும் நிறைந்த வாழ்வைப் பகிரவே விரும்புவர். இந்த மனநிலையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. பெண்களின் முதல் அரசியல் செயல்பாடு என்பது குடும்பத்துக்குள்தான் இருக்கிறது. ஒரு எல்லைக்கோட்டுக்குள் இருந்துகொண்டு அதற்குள்ளாக ஒரு சுதந்திரத்தைப் பெறுவதே பெரும்பாடாக இருக்கிறது. பல நேரங்களில் இதற்கே நேரம் சரியாகிவிடுகிறது. விதிவிலக்குகள் சில இருந்தாலும் இதுவே பெரும்பான்மையாக இருக்கிறது.


நினைத்ததையெல்லாம் பெண்கள் செய்ய முடிவதில்லை. கற்பனையான வடிவமாக, கனவாக இருந்தால் கூட, அதையும் கண்காணிக்கும் கண்கள் உள்ளன! “இரு பெண்கள்” என்ற கவிதையில் நாணயத்தின் இருபக்கமென அவளையே அவள் குடும்பத் தலைவியாகவும் நாடோடிப் பெண்ணாகவும் வரித்துக் கொள்கிறாள். அந்நியனோடு உணவருந்தக்கூட அவளுக்கு மாறுவேடம் தரப்படுகிறது. கடைசியாக அந்த நாணயம் எங்கோ உருண்டோடித் தொலைந்த பிறகுதான் அவளது வாழ்வின் சுதந்திரம் வந்து சேர்கிறது. எத்தனை பெண்களால் இப்படித் தங்களின் தோல் பைகளில் இருக்கும் இந்த நாணயங்களை வீசித் தொலைக்க முடிகிறது?!


“இன்மையில் அசைந்தாடும் நிலவெளி” என்றொரு கவிதை. அதில் அவள் இன்மையில் உட்கார்ந்து இருப்பாள். பல பெண்களின் வாழ்வு இப்படித்தான் இன்மையில் உட்கார்ந்து, சிரித்து, அழுதபடியே முடிந்துவிடுகிறது. அதே இன்மையின் கைகள்தான் ஆயிரம் கைகள் மறைத்தாலும் மறையாத ஆதவனை, செம்பரிதியை நிறுத்துவது எளிது என்கின்றன.

தரிசித்த பெண்களின் வாழ்வை தருணம் தவறாமல் பிரதியெடுக்க விரும்பும் சந்திரா, ஒரு கவிதையில், “நான் எதுவென்று சொல்கிறீர்களோ அதுவாகவே இருக்கிறேன் எப்போதும்” என்று அறிவிக்கிறார். தொடர்ந்து பன்னிரெண்டு வசந்தங்கள் கழித்து அவர்தம் பெரியம்மா சொன்ன வாக்கியமான “நீ குதிரைக்குட்டியைப் போல இருக்கிறாய்” என்ற அறிவிப்போடு குதிக்கிறார்.


மரணத்தை வேறு வேறு அனுபவங்களிலிருந்து எழுதிப் பார்க்கிறார். உயிலின் சாசனமாய் மலைவாசத்தோடு சில கவிதைகள். “சருகிலைகளில் நிழலாடும் மாய்ச்சி” கவிதையில், அம்மா தைல வாசனையோடு விறகுக்கட்டையாக நிமிர்ந்து மினுங்கி என் கைகளில் மரித்தாள் என்ற வரிகள் அதிர்வடையச் செய்கின்றன. அதே அம்மாதான் முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும் என்று தன் மகளிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். இரண்டு நிலைப்பாடுகளில் இருந்தும் எழுதப்பட்ட கவிதைகள் மரணத்தின் சாயையை அரூபமாக வரைகின்றன.

“அம்மாவின் கருவறைக்கு தூரமாகிவிட்ட பிள்ளையின் மரணம் எவ்விதமும் நிகழலாம்” என்று ஆறுதல் கூறும் சந்திரா, மரணத்தைப் பற்றிப் பேசும் கவிதைகளில் எல்லாம் அவர் வேண்டி விரும்பிக் கேட்பதெல்லாம் ஆழ்ந்த அமைதியை. இழந்துபோன நாடோடி வாழ்வையே அவர் விரும்புகிறார். அவர் தவறவிட்ட வசந்த காலத்தைக் காலச்சக்கரத்தில் ஏறி மீண்டும் சிறுமியின் ரூபத்தை அடைந்துவிடும் வேகத்தில் இக்கவிதைகளை எழுதியுள்ளார்.

மனிதர்களைக் கிளிகளாக்கி ஆடுகளை இட்லி தின்று விற்கவைக்க வைப்பதும் காலத்தின் தொலைவை 180 மில்லி லிட்டரால் அளப்பதும் சந்திராவின் கவிதைகளுக்குத் தனி புத்துணர்ச்சியைத் தருகிறது.


“எவ்வளவு நேரம் நின்று பார்த்துக்கொண்டே இருப்பாய்/மலையைப் புரட்டு/அங்கே ஓடிக்கொண்டிருக்கிறது யாரும் பருகாத நீர்” போன்ற துண்டு துண்டான கவிதைகள் பேசும் வாழ்வியல் பகுதிகளான காதல், காமம், புறக்கணிப்பு, பிரிவு, மரணம், துக்கம் ஆகியன கச்சிதமாக வார்க்கப்பட்ட வடிவங்களில் கடத்தப்படும் உணர்வுகள்.
தலைகீழாகப் பார்க்கும் பார்வைகள் சில கவிதைகளில் கூடுதல் அழகைத் தருகின்றன. “மலையின்மீது அமர்ந்துகொண்டு சமவெளியில் மின்னும் விளக்குகளை நட்சத்திரங்களென எண்ணினோம்” என்ற வரியில் அந்த அழகியல் மிகுந்திருக்கிறது. இவர் ஒரு திரைப்பட இயக்குநர் என்பதற்கான அசலான எடுத்துக்காட்டு இக்கவிதை.


பெண்களின் வாழ்வியலில் இயற்கையைப் பாடுவது என்பது ஒரு அரசியல். இயற்கையோடு வாழ்வது பெண்களுக்கே கூடுதல் உள,உடல் நலத்தைப் பேணும். இயற்கையோடு வாழ்வதோடு குடும்ப, சமூக விடுதலைக்கான குரலையும் சேர்த்து பெண்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளும் நிறைந்த தொகுப்பு இது.



அரசியல் ப்ரக்ஞையோடு தன்னையே சற்றுத் தள்ளி நின்று பார்ப்பது, நட்சத்திரங்களை சமவெளியில் மின்னச்செய்வது, பறவைகளின் அலகில் மலைகளைத் தொங்கவிடுவது என்று மொழியின் கைக்கொண்டு சாகச உணர்வோடு எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கும் அனுபவம், மலையின் பாதையில் உங்களை வழிநடத்தும்.



பெரும்பாலான கவிதைகள் நிலத்தில் ஊன்றியே நிற்கின்றன. நிலம், பெரும்பொழுது, சிறுபொழுதுகளைத் தொடர் ஓட்டம் போல வரிகளால் அமைத்து எழுதப்பட்ட”மரையா” என்ற கவிதை முதல்நாள் இரவில் தொடங்கி மறுநாள் மாலையில் முடிகிறது. தொடர் ஓட்டத்தில் ஏந்தப்பட்ட சுடரொளி குறையாது மிளிரும் இக்கவிதை நல்ல வாசிப்பனுபவம். அதே திணையை அடிப்படையாகக் கொண்ட “ஐந்திணையிலும் சொல்லப்படாத வாழ்வு” என்ற கவிதை வார்த்தைகளை அச்சில் கோர்த்த வரைவாக மட்டுமே நிற்கிறது. தலைப்பை முன்வைத்து திட்டத்தோடு எழுதப்பட்டதோ என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது. சிறு தருணத்தை வார்த்தைகளால் வைத்துவிட்டுப் பறந்துவிடும் கிளியைப் போல சில கவிதைகள் வாசிக்கத் தொடங்கும்போதே முடிந்து விடுகின்றன. சில கவிதைகள் முடிந்தும் நீண்டுகொண்டே செல்கின்றன.


குறிஞ்சித் திணையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்தத் தொகுப்பில் காலம் எதுவென்று குழப்பம் இருக்கிறது. காலத்தில் முந்தைய, பிந்தைய குறிப்புகள் வருகின்றன. ஆரெஸ்பதி தைல வாசனை என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். மலைக்காடுகளில் ஏராளமான செடிகளும் கொடிகளும் உண்டு. அதேப் போல காபித் தோட்டங்களும் வருகின்றன. ஆடு, குரங்கு, மிளகு ஆகியவை கவிதைகளில் அடிக்கடி தென்படுகின்றன. மலைக்காட்டில் யானையின் ஆளுமை இல்லாமலா போகும்?! அறிமுகப் பாடலில் வந்து போகும் கதாநாயகி போல, அட்டைப் படத்திலும் ஒரே ஒரு கவிதையிலும் வருவதோடு யானையின் வேலை முடிந்துவிடுகிறது. மலைகாட்டின் உயிர்ப்பான காட்சிகள் இல்லாமல் ஒரு பெண் தனது மலைக்காட்டு வீட்டு வாசலில் உட்கார்ந்து பார்த்த காட்சிகளாக இக்கவிதைகள் அமைந்துவிட்டனவோ என்று ஒரு தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் நாகரிகத்தால் துண்டான வாழ்வின் பிரதிகள் இவை என்பதையும் மறுக்க முடியாது.

மிளகு
கவிதைகள்
சந்திரா
எதிர் வெளியீடு (170 ரூபாய்)

***


ஸ்டாலின் சரவணன் – புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர். “ரொட்டிகளை விளைவிப்பவன்” எனும் கவிதை நூல் வெளிவந்துள்ளது.
[email protected]


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular