Friday, March 29, 2024
Homesliderமரபுக்கு திரும்புதலே புதுமை

மரபுக்கு திரும்புதலே புதுமை

அ. வெண்ணிலா

விதையின் மரபை இருவிதங்களில் அணுகலாம். தொல்காப்பியம் தொடங்கி சங்கம், காப்பியம், அற இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், உலா, தூது, தனிப்பாடல்கள், புதுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் வடிவம் சார்ந்த மரபை கணக்கிலெடுத்துக் கொள்ளலாம். இவ்வகை மரபில் கவிதையின் வடிவம் என்பது புதுக்கவிதைக்கு முன்பு வரை செய்யுள்தான். செய்யுள் யாப்பிலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது. யாப்பில் பா வகை, அசை, சீர், தொடை என்ற உள்ளிருக்கும் இலக்கணப் பாகுபாடுகள் தனி. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் சுதந்திர கவிதைகள் என்ற புதுக்கவிதைகள் பிறந்தன.

பாரதியாரே புதுக்கவிதையின் கர்த்தா. மரபைக் கட்டுடைத்தல் என்ற மேலை சித்தாந்த அறிமுகத்தின் வழியாக பாரதி, தனக்கு மிக கைவந்த மரபுடன், வசன கவிதைகளையும் எழுதிப் பார்த்தார். காட்சிகள் என்ற தலைப்பிலான வசன கவிதைகள் தான் தமிழில் எழுதப்பட்ட யாப்பை மீறிய முதல் கவிதைகள். பிறகு வல்லிக்கண்ணன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா. போன்றவர்கள் எழுதத் தொடங்கினர். இவர்களுடன் க.நா.சு சேர்ந்தார். புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா பின்தொடர்ந்தனர். 1960 வரை மணிக்கொடி, கிராம ஊழியன், கலாமோகினி உள்ளிட்ட இதழ்களில் ஆங்காங்கு விவாதங்களையும் தாங்கிய கவிதைகள் வெளியாகத் தொடங்கியிருந்தன. புதுக்கவிதை என்ற பெயரே முகச்சுளிப்புகளைத் தாங்கியிருந்தது. சி.சு.செல்லப்பா 1959-இல் எழுத்து இதழைத் தொடங்கிய பின், புதுக்கவிதைக்கான விரிந்த களம் உருவானது. பின் வானம்பாடி காலம். சமூகப் பிரக்ஞையுடனும் கலை கலைக்காகவுமென்று எழுத வந்தவர்களுக்கு வானம்பாடி விரிந்த களம் அமைத்துக் கொடுத்தது.

தொண்ணூறுகளுக்குப் பிறகு, புதுக்கவிதை என்ற வழக்கு போய் நவீன கவிதை என்ற சொல்லாட்சி வருகிறது. நவீன கவிதை, நவீன இலக்கியம், நவீன சிந்தனை என எல்லாவற்றுக்கும் முற்சேர்க்கையாக நவீனம் சேர்ந்து கொண்டது.

இவ்விடத்தில் நிறுத்தி, மரபு, மரபில் இருந்து புதுமை, நவீனம் இவை சுட்டும் பொருளைப் பார்க்கலாம். பொதுவாக மரபு என்பது எவ்வாறு உருவாகிறது? ஓர் இனக்குழுவின் வாழ்வியல் நெறிகள், பண்பாடு, சமூக ஒழுங்கு இவையெல்லாம் காலப்போக்கில் உருத்திரண்டு வழக்கமாகின்றன. வழக்கம் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும்போது, அது ஒழுங்கு செய்யப்பட்ட ஒழுகுநெறியாகிறது. ஒழுங்கு செய்யப்படும்போது, வழக்கங்கள் ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்தைத் தன்னளவில் வயப்படுத்தி வைத்திருக்கின்றன. இவ்வொழுங்கு நெறிகள் கால ஓட்டத்தில் மரபாகின்றன.

மரபுக்குச் சாதகமான கூறுகள் அவற்றுக்குள்ளேயே இருக்கின்றன. முதல் கூறு, மரபைப் பேணுதல், மரபை ஏற்றல் என்பது தன் மூதாதையரின் வழக்கத்தை, கேள்விகளற்று ஏற்றல் என்ற நற்குணமாக அறியப்படுகிறது. இரண்டாவது, குடும்ப, சமூக நெறிகளைச் சந்தேகிக்காமல் பின்பற்றுதல். மரபை முழுமையாக ஏற்பதின் மூலம் ஓர் அமைதியை, சமூக ஒழுங்கை உருவாக்குதல். மரபை ஏற்பதென்பது, மூதாதையரின் செழுமையான அனுபவங்களின் சாரத்தை உள்வாங்குதல்.

மரபு என்ற சொல் கேட்கிற கணத்தில், கேட்பவர் மனத்தில் பழமை என்ற பொருளை உருவகித்தாலும், மரபு என்பது வெறும் பழமை மட்டுமல்ல. பலநூறு ஆண்டுகளைக் கடந்த மனித குழுவின் வாழ்வியல் திரட்சி. சரி, தவறுகளுக்கு உட்பட்ட சமகால வாழ்வியல் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டறிந்து கொள்ள உதவும் அனுபவங்களின் தொகுப்பு. நம் சிந்தனையைக் கூர் தீட்டிக்கொள்ள உதவும் வேர். நாம் மரபில் இருந்து கிளைக்கவும், மரபை மீறவும் அந்த வேரை அறிந்திருக்க வேண்டும்.

மரபு என்று சுட்டப்படும் எல்லாமே ஒரு காலத்தில் புதுமையாகத்தான் இருந்திருக்கும். உதாரணத்திற்கு, தமிழ்க்கவிதை என்பது செய்யுள். இதுவே கவிதை மரபு என்கிறோம். செய்யுள் எப்பொழுது உருவாகியிருக்கும்? தமிழில் எழுத்து வடிவம் தோன்றியவுடன், எழுதப்பட்ட கவிதை செய்யுள் வடிவத்திலா இருந்திருக்கும்? சராசரிக்கும் மேலான சிந்தனை வடிவங்களில், பேச்சு வழக்கை மீறிய வார்த்தைகள், வரிகள் அவ்வப்போது பேசப்பட்டிருக்கும். அவை உண்டாக்கிய வியப்பு, மேலதிகத் தேடலுக்கு வழிகாட்டியிருக்கும். கற்பனையும், ஓசை நயமும் சொற்களுக்குச் சேரும்போது அதை ரசனையாகச் சொல்லிப் பார்த்திருப்பார்கள். கவிதை பிறந்திருக்கும். இவ்வாறு தொடக்க காலத்தில் மக்கள் இன்று புதுக்கவிதையில் உள்ளதைப்போல், யாப்பு, அசை, சீர் என்ற எந்த இலக்கண விதிகளும் இல்லாமல்தான் கவிதைச் சொல்லியிருப்பார்கள், எழுதியிருப்பார்கள். நாட்டார் பாடல்களாக இன்று நாம் வரையறுக்கும் தளைகளற்ற பாடல்கள்தான் சங்கத்திற்கு முன்பிருந்திருக்கும். இன்றைக்கு மரபைக் கட்டுடைத்து, மரபின் தளையை மீறித் தோன்றியதாக வியக்கும் புதுக்கவிதையும் நாட்டுப்புறப் பாடல்களும் போன்ற சுதந்திரமான கவிதைகளே மரபுக்கு முந்தைய கவிதைகளாக இருந்திருக்கும்.

அவரவர் மனம்போன போக்கில் எழுதப்பட்டுக் கொண்டிருந்த கவிதைகள், குறிப்பிட்ட காலத்தில், எழுத்தறிவு மேம்பட்ட காலம் என்றும் சொல்லலாம், அப்படியான ஒரு காலத்தில் இலக்கண விதிகள் வகுக்கப்பட்டு, கவிதைகள் செய்யுள் என்ற புதுமையான வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அந்தக் காலத்தில் மரபுக்கவிதையென்பதும் புதிய கவிதை வடிவமாக, புதுமையானதாகத்தான் பார்க்கப்பட்டிருக்கும். இன்று நம் முன் நரையோடி, தளர்ந்த தோற்றத்துடன் இருக்கும் நம் தாத்தா பாட்டிக்கும் நுரைத்துப் பொங்கிய இளமையும் அழகும் இருந்திருக்கும் என்பது போல்தான். பலநேரம் அவர்களின் நரையைத் தாண்டி நாம் பார்ப்பதே இல்லை.

மரபும் புதுமையும் ஒரு வட்டத்தின் மீதான சுழற்சி. மரபு என்று சுட்டப்படும் இடத்தை புதுமையும், புதுமை என்ற இடத்தை மரபும் அதன் சுழற்சிப் பாதையில் இயல்பாகவே சந்திக்கின்றன.

இலக்கியம், கவிதைக்கு மட்டுமல்லாமல் நம் மரபின் அனைத்துக் கூறுகளுக்கும் இதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது. செய்யுள் என்ற வடிவம் வருவதற்கு முன்பு ஏராளமான வடிவத்தில் கவிதைகள் எழுதப்பட்டிருக்கக் கூடும். இவ்விடத்தில் சமூக மரபையும் புதுமையையும் உதாரணத்திற்குச் சொல்லலாம். ஆதிமனித வாழ்விலும், பின்னால் இனக்குழு வாழ்விலும் குடும்பம், சாதிய முறை, தீர்மான சடங்குகள் இருந்ததில்லை. பின் சமூகம் நிறுவனமாக, இறுகிய விதிகளுடன் இயங்கத் தொடங்கியவுடன் குடும்பத்திற்கு என்று இறுக்கமான விதிகள் உருவாக்கப்பட்டன. சாதியடிப்படையிலான பிரிவினைகள் ஆளப்பட்டன. மேல் x கீழ், உயர்வு x தாழ்வு கருத்தியல்கள் நிலைகொண்டன. இவை சமூக வாழ்வியல் மரபாக மாறின. கால மாற்றத்தில் இம்மரபு இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. குடும்ப அமைப்பு நெகிழ்வைக் கோருகிறது அல்லது குடும்பமே வேண்டாம் என்ற நவீன சிந்தனை, சாதிய வேறுபாடுகளை நீக்குதல், மேல் x கீழ், உயர்வு x தாழ்வு என்பதெல்லாம் வக்கிர மனதின் கற்பிதம் போன்ற சிந்தனைகள் நவீன சிந்தனையாக ஏற்கப்படுகின்றன. ஆனால் இவையெல்லாமே ஆதிக்குழுவின் இயல்பான வாழ்வியல். நவீனம் என்பதின் தொடக்கப்புள்ளி ஏதோ ஒரு மரபின் புள்ளியில் தான் நிற்கிறது. எனில் இங்கு புதுமை என்பது மரபை அழித்தல் அல்ல முந்தைய மரபுக்குத் திரும்புதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

மரபு, புதுமை இரண்டுமே இடம் மாறக் கூடிய நெகிழ்வுத் தன்மை கொண்டிருப்பவையே என்றாலும் நாம் புரிதலுக்காக மரபு என்பதை பழக்கத்தில் இருந்த முந்தைய நெறி என்று கொள்வோம்.

தமிழ்க்கவிதையின் மரபு என்றால் செய்யுள். செய்யுள் வடிவத்தை மீறியெழுந்தது புதுக்கவிதை என்ற புரிதலோடு, வடிவம் சார்ந்த இச்செய்தியில் இருந்து கவிதையின் பாடுபொருளுக்குள் நுழைய விரும்புகிறேன். அதற்கு முன்னால் கவிதை என்றால் என்ன? எழுதத் தொடங்கும் எல்லாருக்கும் முதலில் ஈர்க்கப்படும் வடிவமாக ஏன் கவிதையே இருக்கிறது? மூவாயிரம் ஆண்டுகளாகக் கவிதையில் எழுதாத ஒன்றை, இன்றைய புதுக்கவிஞர் (ன்,ள் இதில் எந்த விகுதியைப் போடுவது என்ற தடுமாற்றத்தில் ர் சொல்கிறேன். அவரவர் விருப்பத்திற்குப் பொருத்திக் கொள்ளலாம்.)

கவிதை என்றால் என்ன? என்ற கேள்விக்கான நிறைவான பதிலை, அவரவரே சொல்லிக்கொள்ள முடியும். எது நல்ல கவிதை என்பதற்கும் அவரவர் ஆன்மாவே கைவிளக்கு. ஒரு நல்ல கவிதை சிந்திக்க வைக்காமல் உணர்ச்சிவயப்பட வைக்க வேண்டும் என்பதையே நான் அளவுகோலாகக் கொண்டுள்ளேன். அறிவுத்தளத்திற்கு என்னை ஒரு கவிதை இழுக்குமென்றால், அக்கவிதை தன் இயல்பில் இருந்து திரிந்து, செய்யப்பட்ட ஒன்றாக, தேவைக்காக எழுதப்பட்ட ஒன்றாகப் பிறந்திறக்கிறது என்ற எளிமையான, என் ரசனையின் அடிப்படையிலான அளவுகோலையே நான் நல்ல கவிதையைக் கண்டறிவதற்காக வைத்துள்ளேன்.

உணர்ச்சிவயப்பட வைப்பது என்பது என் இதயத்தின் ஊடான பயணம். ஆன்மாவின் தரிசனம். ஆழ்மனத்தின் அடுக்குகளைச் சென்றடைவது. அறிவினால் தேடிக்கண்டடைய முடியாத உண்மைகளைக் கண்டடைவதற்கான கருவிதான் கவிதை. மனதின் மறைபொருளைக் கண்டுபிடித்தல். நம்முடைய கனத்த ரகசியங்கள் புதைந்திருக்கும் இடமே மனம். மனம் எங்கிருக்கிறது என்பது அறிவியலும் கண்டடைய முடியாத ரகசியம். ரகசிய இருப்பிடம் கொண்டுள்ள மனம்தான் நம் ரகசியங்களைப் பொதித்து வைத்திருக்கிறது என்பதில் எவ்வளவு பெரிய ஆச்சர்ய முரண் இருக்கிறது.

மனம்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையை இயக்குகிறது. வாழ்வின் தரிசனமாகிறது. மனத்தின் எண்ணங்களே நம் நடத்தை, நம் குணம், நம் அன்பு, நம் காதல், நம் காமம். இவைகளின் வழியாகத்தான் நம் குழந்தைகள் பிறக்கிறார்கள். நம்மைப் பிரதிபலிக்கிறார்கள். நமது மரபாகிறார்கள். நம் எல்லோருக்குமே பிறப்பின் வழியாகவும், வாழும் சமூகத்தின் வழியாகவும் இருவகை மரபு கிடைக்கிறது. இதை மனமே தீர்மானிக்கிறது.

மனத்தின் ரகசியங்களைக் கண்டடைய சொற்களின் வழியாக கவிதை பயணிக்கிறது. முதல் காதல் வந்தவுடன் கவிதை எழுதுபவர்களைப் பார்த்தால் இவ்வுண்மை புரியும். பதின்ம வயதில் இருக்கும் பெரும்பான்மையோர் தனக்குள் காதலுணர்வு நுழைந்த பிறகுதான் தங்களின் மனத்தைக் கூர்ந்து பார்க்கிறார்கள். காதல் உருவாக்கும் உணர்வெழுச்சிகளைப் பின்தொடர்கிறார்கள். முதன்முறையாக மனத்தைக் கூர்ந்து பார்க்க காதலும் கவிதையும்தான் உதவுகிறது. அறிவுத் தேடலுக்கு இலக்கியத்தின் பிற வகைமைகள் உதவலாம்.

பாரதியின், ஒவ்வொரு வரிகளில் விரியும் உணர்ச்சிக் கொந்தளிப்பை, நல்ல கவிதைக்கான உதாரணங்களாகப் பகிர விரும்புகிறேன். ‘சுவை புதிது, பொருள் புதிது’ என்று கவிதைக்கு விளக்கம் சொல்லும் பாரதியின் ‘தீ இனிது’ என்றொரு வரி. ‘தீ’ இச்சொல்லை நம் கண்கள் வாசிக்கும்போதே, வழக்கப்படுத்தப்பட்ட நம் மனது, ‘சுடும்’ என்ற இரண்டாவது சொல்லைக் கோர்க்கும். தீ நம்மைச் சுடும். பாரதி அக்கற்பனையை மீறுகிறான். ‘இனிது’ என்று சொல்கிறான். நம் சராசரி இயல்பு முதலில் சிறு அதிர்ச்சியைத்தான் காட்டும். தீ இனிதா என்று? உடனே நம் அறிவு தீ எப்படி இனிதாக இருக்க முடியும் என்று கொஞ்சம் குதர்க்கமான தொனியில் கேள்வி எழுப்பும். அறிவுக்குக் கையைப் பொசுக்கும் நெருப்பும், வீட்டைக் கொளுத்தும் பெருந்தீயும், காட்டை எரிக்கும் காற்றின் கோபாக்னியும் தான் முதலில் நினைவுக்கு வரும். அறிவைக் கடந்த, பிரபஞ்ச தரிசனத்தை உள்வாங்கியிருக்கும் மனதுக்கு, தீ என்றவுடன் ஞாயிறுதான் நினைவுக்கு வருகிறது. உலகத்து உயிர்களுக்கு ஜீவாதாரணமான கதிரவன், நம்பிக்கைத் தரும் வெளிச்சம், பூமி சுழற்சியின் ஆதாரம். இந்தப் பிரபஞ்ச உயிர்களையெல்லாம் வாழ்விக்கும் கடவுள்.

இக்கவிதை சங்க காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும், நவீன கவிதையாக இருந்தாலும் இந்த ஒற்றை வரி, வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் தரும் உணர்வெழுச்சி பேருவகை. இயற்கையின் தரிசனத்தைக் கண்டெடுத்த ஞானம் தரும் பரவசம். மொழியின் மேலடுக்கைப் புரட்டிப் போட்டு, மொழியைக் கடந்த உண்மையைக் கண்டறியும் பேருவகை. மரபு, புதுமை என்ற வகைப்பாட்டை கடந்து நல்ல கவிதையாக எல்லா காலத்திலும் மனத்தில் நிற்கும் அற்புதக் கவிதை. சொல்லின் நேரடி பொருளைக் கடந்து, அதன் அர்த்தத்தைக் கடந்து, வேறொரு இடத்திற்கு நம் உணர்வெழுச்சியைக் கொண்டு செல்லும் வலிமை கொண்டுள்ளது. கவிதையையன்றி வேறோர் இடத்தில், தீயின் பொருளாக இனிமையைக் கொள்ள முடியாது. கவிதையின் மரபாக இதையே நான் சொல்ல விரும்புகிறேன். கவிதை எவ்வளவு தூரம் நம் கற்பனையைத் தூண்டி, நம் மனதுக்குள் பயணிக்கச் செய்கிறது என்பதில் தான் அதன் பூரணத்துவமும், நித்தியத்துவமும் இருக்கிறது.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் ஒருவன்/ள் பார்த்த அதே நிலா, அதே சூரியன், நட்சத்திரம், மஞ்சள் கொன்றை, புன்னை, கடற்கரை, காதல், பிறப்பு, இறப்பு, கோபம், மகிழ்ச்சி, துரோகம், நட்பு, காமம்… எல்லாமே பழையதுதான். புதிதென்று இவ்வுலகில் ஒன்றுமில்லை. பிறக்கின்ற உயிர் ஒன்றே புதிது. இப்புதிய உயிரின் வழியாக, அதன் உணர்தலின் வழியாகப் பழைய பிரபஞ்சமும் உணர்வெழுச்சிகளும் புதிதாக மாறுகின்றன. ஒரே வானம்தான். எத்தனையாயிரம் பார்வைகள். ஆறு பழையது. வெள்ளம் புதிதுதானே?

இப்பழைமையில் இருந்துதான் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து நாம் ஒவ்வொருவரும் அவரவருக்கான புதிய கவிதைகளை எழுதுகிறோம். நம் பார்வையின் ஒளி சொற்களுக்குள் மாற்றும் வித்தையில் நாம் தேறினால், நம் கவிதையும் நித்தம் நவமென சுடர்விடும் கவிதையாகும்.

மொட்டவிழவும் இதழ் மூடவுமான
தேவ கணத்தில்
சூரியனுக்குப் பிந்தைய
நிலவுக்கு முந்தைய வானில்
விண்ணெங்கும் மொட்டவிழ்ந்து
நின்றது நம் நேச மலர்

-அ.வெண்ணிலா

கருக்கலில்
ஒளிரும்
வெண்ணிற மலர்
நின் காதலன்றோ

– தேவதேவன்

தேவதேவனும் நானும் ஒரே அந்தியைக் கடக்கிறோம். இருவருக்குமே காதலின் நினைவு. நான் தேவ கணம் என்கிறேன். அவர் கருக்கல் என்கிறார். விண்ணெங்கும் மொட்டவிழ்ந்து நிற்கிறது நம் நேச மலர் என்கிறேன். தேவதேவனோ அந்த வெண்ணிற மலர் நின் காதலன்றோ என்கிறார்.

காதல் நினைவை அதிகப்படுத்தும் அந்தியில் மலர்ந்த நேச மலரை, நீ என்பதோ, விண்ணில் மொட்டவிழும் மலர் என்பதோ அவரவர் அப்போதைய கவிதை. நாளையே தேவதேவனின் கவிதையை வெய்யில் எழுதலாம். வெய்யிலின் கவிதையை பிறக்கப் போகும் புதிய கவிஞர் எழுதலாம். கவிதையும் காதலும் மரபு என்றாலும், மொழி புதிது.

கவிதை நமக்குச் செய்திகளை உணர்த்தி நிற்பதில்லை. தர்க்கத்தைத் தனக்குள் வைத்திருப்பதில்லை. கவிதை நேரடியாக நம்மிடம் பேசுவதைவிட, உணர்த்திச் செல்வதைத்தான் அதிகம் நேசிக்கிறோம். மழை வரப்போவதைச் சொல்லிச் செல்லும் மண்வாசனை நிரம்பிய காற்றைப்போல், கவிதை குறிப்பால் உணர்த்தினாலே போதுமானது.

‘மயிர் நீப்பின்’ என்று வள்ளுவர் பயன்படுத்தும் மயிர் என்ற சொல், இன்றைய நவீன கவிதையில் எவ்வாறு வருகிறது என சீனிவாசன் நடராஜன் சொல்கிறார். எழுதத் தொடங்கும் எல்லோரையும் கவிதை ஈர்ப்பதற்கு இதுவே காரணம். பழகிய எளிமையான சொற்கள். நவீன, புதுக்கவிதைகளின் தோற்றத்தில் வெளிப்படும் எளிமை, வாசிக்கும் பெரும்பாலோரை எழுதவும் தூண்டும். சொற்களை மேலும் கீழும் உடைத்து உடைத்து அடுக்குதல், எளிய உணர்ச்சிகளையும் எளிய வார்த்தைகளால் கவிதை போன்ற ஒரு பாணியில் சொல்லிவிட முடிவது, வழக்கத்தில் உள்ள சொற்களைப் பயன்படுத்துதல், ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் முடிவுறா புள்ளிகளை அடுக்குதல் போன்றவை, வாசகர்களை எளிதில் ஏமாற்றி கவிதைக்குள் அழைத்து வந்துவிடக் கூடியவை. வானம்பாடிக் கவிஞர்கள் தொடங்கி, புதுக்கவிதையில் வைக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை நீக்கினாலே, அவரவர் கவிதைப் புத்தகத்தின் பக்கங்களில் கால்பகுதி குறைந்துவிடும். கவிதை, சொற்களுக்கு இடையிலான மௌனத்தின் வழியாகப் புரிந்து கொள்ளப்படுவது என்ற வரியைத் தவறாகப் புரிந்து கொண்டார்களோ என்னவோ, மௌனத்திற்குப் போகும் வழியாக மூன்று புள்ளிகளை வைத்துத்தான் கவிதை எழுதியிருக்கிறார்கள். தமிழில் நான் உட்பட மூன்று புள்ளிகளை வைத்து கவிதை எழுதாத கவிஞர்கள் மிகக்குறைவு. தலைப்பில் மூன்று புள்ளிகள் வைக்கப்பட்ட புத்தகங்களும் அதிகம்.

கவிதையின் எளிமையான தோற்றம், விளக்கின் வசீகரத்தில் கவர்ந்திழுக்கப்படும் விட்டில்களைப் போல் இழுக்கிறது. தோற்றத்தில் எளிமை என்றாலும், மொழியின் உச்சபட்ச சாத்தியப்பாடுகளை கவிதையே கொண்டுள்ளது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று சொல்ல, கணியன் பூங்குன்றனுக்குக் காலத்தை விஞ்சிய பரந்துபட்ட நேசம், மனிதர்கள் அனைவரையும் அன்பெனும் ஒற்றை குடைக்குள் அடைத்துப் பார்த்த தீர்க்க தரிசனம், நிலவெல்லை மனிதர்களுக்கிடையில் கோடுகளைப் போட்டாலும், அன்பு எல்லைகளைக் கடந்து அரவணைத்துக் கொள்ளும் புரிதல், எல்லாம் இருந்திருக்க வேண்டும். கணியன் பூங்குன்றன் இக்கவிதையைச் சொல்லிய காலத்தைவிட, இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு எவ்வளவு நுட்பமாய்ப் பொருந்திப் போகிறது? கவிஞனுக்கு மட்டுமே காலத்தைக் கடந்து சிந்திக்கும் தீர்க்க தரிசனம் நிகழும். இந்த ஒற்றை வரி, மிக எளிமைதான், ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாகப் புத்தம் புதிதாக உள்ளதே? குழந்தையின் சோப்புக்குமிழுக்குள் தெரியும் வண்ண உலகமாக, கவிஞனின் சொற்கள் குறை ஆயுளுடன் காணாமல் போய் விடக்கூடாது. சிற்பியின் உளியில் இருந்து உருவெடுக்கும் கல் சிற்பமாய் இருக்க வேண்டும்.

மரபை, புதியது கடக்கும்போது பெரும் விவாதங்கள் கிளம்பும். மீறலும், மீறலின் துணிவும் பெரும் பதற்றத்தை உண்டாக்கும். கவிதையும் அப்பதற்றத்தைச் சந்தித்திருக்கிறது. பாரதியின் வசன கவிதைகளுக்கு முகஞ்சுளித்தார்கள். பாரதிக்கு மரபில் இருந்த தேர்ச்சியினை அறிந்திருந்ததால், இம்முயற்சி கிறுக்குத்தனமாகப் பார்க்கப்பட்டது. தேவையற்ற வேலையென்றும். கு.ப.ரா., பிச்சைமூர்த்தி முதலானோர் எழுதும்போது, வசன கவிதைகளால் மரபுக் கவிதையெனும் ஆலமரத்தின் சிறு நுனியைக்கூடத் தொட முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. தளை தட்டும், யாப்பிலக்கணத்தில் அமையாததெல்லாம் கவிதையாக முடியுமா என்ற ஏளனமும். காலம், கவிதையில் இருந்து எல்லாத் தளைகளையும் உதிர்த்துத் தள்ளியது. கவிதைக்கு உண்மையின் தரிசனமும் புதுமையும் அழகியலும் மட்டுமே என்றைக்குமான அளவுகோல் என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.

சங்கப் பாடல்களில் உள்ள அடிக்குறிப்புகளையும், திணை பாகுபாடுகளையும் உதிர்த்துவிட்டுப் பார்த்தால், அவை இன்றைக்குள்ளதைப் போன்ற எளிமையான கவிதைகள்தான். சங்கப்பாடல்களுக்கான அடிக்குறிப்புகளும், திணை அடிப்படையில் தொகுக்கப்பட்டதும் தொகுப்பாளர்கள் செய்த வேலை. சங்க கவிஞர்கள் யாரும், குறிஞ்சி நிலப் பாட்டு, நெய்தல் நிலப் பாட்டு என்ற வகைப்பாட்டுக்குள் நின்று கவிதை எழுதவில்லை. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஒரு கவிஞரின் பாடலே அகத்திணையிலும் புறத்திணையிலுன் குறுந்தொகையிலும் இடம் பெற்றது, இவையெல்லாம் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் உருவாக்கிக் கொண்ட கருதுகோள்கள்தான். ஐவகை நிலம், நிலத்திற்கான பண், ஆடல், கடவுள், உணவு, தலைவன், தலைவி, இயல்பு எல்லாமே பின்னால் சேர்க்கப்பட்டவை என்று முனைவர் துளசி ராமசாமி சொல்கிறார். தொகுப்பு என்று வரும்போதே அதில் தனிநபர்களின் தேர்வு, விருப்பு வெறுப்பு, சிந்தனைத்தளம் எல்லாம் அடிப்படையாக அமைந்துவிடும். அப்படித் தொகுப்பாளர்களால், தகுதியில்லையென்று தொகுக்கப்படாமல் போன பாடல்கள் எத்தனையோ, கவிஞர்கள் எத்தனைப் பேரோ? அவ்வாறே திருக்குறளை நீதி இலக்கியத்திற்குள் சேர்த்து அதன் கவிதை அழகியலை மறைத்திருக்கிறார்கள்.

நவீன கவிஞர்கள் பலர் திருக்குறள் என்றாலே முகஞ்சுளிக்கும் அளவிற்குப் பத்து நூற்றாண்டுகளாக, அதன்மேல் நீதியின் சுமை ஏற்றப்பட்டுவிட்டது. மகிழ்ச்சியான விதிவிலக்காக, ஜெயமோகன் திருக்குறளின் அழகை வியந்தோதுகிறார். மிகக்குறிப்பான அதிகாரங்களைத் தவிர்த்து, திருக்குறளில் இருக்கும் கவிதை தரிசனம் அற்புதமானது. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்ற கேள்வி என்றாவது உயிரற்றுப் போகுமா? ‘நீரின்றி அமையாது உலகு’, ‘வான் நின்று உலகம் வழங்கி வருதலால்’ என்றைக்குமான பிரபஞ்ச உண்மைகள் அல்லவா?

சங்கப் பாடல்களின் அடிநாதமாக இருப்பவை வாழ்வியல். மனமொத்து காதலும் ஊடலும் கொண்டு வாழ்தல். சங்க காலத்தின் வாழ்வியலைப் பிந்தைய காலத்துடன் ஒப்பிட முடியாததற்குக் காரணம் அரசியல் மாற்றங்கள். சங்க காலத்தில் இருந்த இனக்குழு வாழ்க்கை, அரசர்கள் சிற்றரசர்களாக, மக்களில் இருந்து மேலெழுந்து வந்த தலைவர்களாக இருந்தார்கள். பின்வந்த காலம் பேரரசுகளின் காலம். களப்பிரர்கள், பல்லவர்கள் போன்ற பேரரசுகளின் எழுச்சியோடு, பேரளவிலான அதிகாரத்தோடு சமணமும் பௌத்தமும் தமிழ் மண்ணுக்கு வருகின்றன. அதுவரை இங்கு பெரும் மதமாக உருத்திரளாமல், வழிபாட்டு முறைகளும் சடங்குகளுமாக இருந்த வைதீக மதம் ஆட்சியாளர்களால் மொத்தமாக நசுக்கப்படுகிறது. மக்களிடமிருந்து மறைந்துபோய் விடுமோ என்ற எண்ணத்தக்க அளவில் சமணமும் பௌத்தமும் கி.பி.3-ஆம் நூற்றாண்டில் இருந்து, 6-ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் நிலைபெற்றது.

தங்களின் மரபான வைதீகச் சமயத்தை மீட்டெடுக்க, அடியார்கள் தோன்றி, வைதீக நெறிகளை முன்னெடுக்கிறார்கள். வழக்கொழிந்து போய்க்கொண்டிருந்த சமய சடங்குகளை மீட்டெடுத்து, அதைப் புதுமை படுத்துகிறார்கள். முருகும், மூதாதை தெய்வங்களும், நடுகல்லும் இருந்த இலக்கியங்களுக்குள் சிவனும் திருமாலும் உள் நுழைகிறார்கள். இலக்கியங்கள் தொகுக்கப்பட்டு, அவைகளுக்கு வைதீக மரபின் அடையாளம் தரப்படுகிறது. இறைவனுக்குத் தங்களை அடியார்களாக்கி, உருகி உருகித் தங்களையே தரும் பதிகங்கள் பாடப்பட்டன. பதிகங்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டு பன்னிரு திருமுறைகளாக்கப்பட்டன. அற இலக்கியங்கள் முதன்மைப்படுத்தப்பட்டன. முன்பு எழுதியவைகள் தொகுக்கப்பட்டன. 6-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை, கவிதை என்றாலே பதிகம் பாடுதல் என்றானது. இக்காலகட்டத்தில் தனித்து ஒலித்ததுதான் திருமூலரின் திருமந்திரம்.

சங்கப் பாடல்கள் தற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ள பட்டியல்களில் இருந்து விடுவித்து, அவைகளுக்கான அடிக்குறிப்புகள், திணை வகைப்பாடுகள் எல்லாவற்றையும் நீக்கி, கவிஞர்களின் பாடல்களாக மட்டும் வைத்துப் படிக்க வேண்டும். அவ்வாறு படித்தோமானால், சங்கத்திலும் அவர்களின் காலத்தினை மீறி எழுதிய கவிஞர்களை அடையாளம் காண முடியும். பரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவனுக்காகக் காத்திருந்து, துன்பப்பட்டு அவன் திரும்பி வந்தவுடன் அதை உலக இயல்பு என்று பெரிதுபடுத்தாமல், அவனுடன் இணைந்து காதல் வாழ்வு வாழ விரும்பும் தலைவியைப் பற்றிய கவிதைகளுக்கு மத்தியில், அரசனும் நண்பனுமான அதியமானின் நட்பை வியந்தோதுவதும், அவன் மாண்டுபோன பின், உணவு உண்ணும்போது விக்கினால் தன் தலையை அன்புடன் தடவிவிட நண்பனில்லையே என்று துயரம் கொள்ளும் அவ்வை தனித்துவமிக்கவளாக, சுதந்திரமானவளாக இருக்கிறாள். அவளின் கவிதையும் தளைகளற்ற சுதந்திரத்துடன் உள்ளன.

புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ள அவ்வையின் ‘சிறுகட் பெரினும் எமக்கீயும் மன்னே’ என்ற பாடலைப் பார்ப்போம். அதியமானை சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை போரில் வென்றுவிட்டான். சோழர்களும் பாண்டியர்களும் அதியமானுடன் உடன் போரில் நின்றும் அதியமான் நெடுமான் அஞ்சி தோல்வியடைகிறான். அதியமானின் வீழ்ச்சியை அவனுடைய தோழியான அவ்வையால் தாங்க முடியவில்லை. அவனுடைய இழப்பு எவ்விதத்திலெல்லாம் இழப்பென்று அவ்வை எழுதுகிறார். தனக்குக் கிடைப்பது கொஞ்சம் கள்ளென்றால் அதை முழுமையாக எனக்குக் கொடுப்பான். நிறைய கள் கிடைத்தால் எனக்கு வேண்டிய அளவிற்குக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள கள்ளருந்தியபடி, என்னைக் கவிதைப் பாடச்சொல்லிக் கேட்பான். கொஞ்சம் உணவு என்றால் எனக்கு. எலும்பும் தசையுமாகிய இறைச்சியை எனக்குத் தந்து நான் சாப்பிடுவதைப் பார்த்திருப்பான். நரந்தம் பூவின் வாசனை வீசும் அவன் கையால், புலால் நாற்றமடிக்கும் என் தலையைக் கோதுவான் என்று சொல்கிறாள். இதுவரை அதியமான் என்னும் நண்பனால் தான் இழக்கப்போகும் அன்பான தருணங்களைச் சொல்லிய அவ்வை, கவிதையை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறாள். அம்பும் வேலும் பாயும் இடங்களில் எல்லாம் அவன்தான் முன்சென்று நிற்பான் என்கிறாள். அரசன் தன் வீர்ர்களை முன் நிறுத்தி, தனக்குப் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொண்டு இடையிலோ பின்னாலோ நின்று போரிட மாட்டான். போர்க்களத்தில் தன் வீரர்களைக் காப்பதுபோல் அவனே முன் நிற்பான். முன்னின்ற அரசனின் நெஞ்சில் வேல் பாய்கிறது. அந்த வேல் அவன் நெஞ்சை மட்டும் துளைத்துத் தாக்கவில்லை. புரந்து வாழும் பெருமக்கள், பெற்றுப் பாடும் புலவர்கள், கை மண்டையுடன் அவனை அணுகி நிற்கும் பாணர்கள் எல்லோரின் வாழ்வையும் துளைக்கிறது. எங்களுக்குத் துணைவனாக இருந்த எந்தை இப்போது எங்கிருக்கிறானோ என்று கதறுகிறாள். ஓர் அரசன், தலைவனின் குணமாக என்றைக்கும் சொல்லக் கூடிய பாடலாக இப்பாடல் நிற்கிறது. இதில் உறைந்து நிற்கிற கவிதையின் துயரம் நூற்றாண்டுகளைக் கடக்கும் வலு கொண்டிருக்கிறது. இது மரபில் நின்றாலும் நவீனத்தின் நுட்பம் கொண்டிருக்கிறது.

இன்றைய நவீன கவிதையில் கையாளப்படும் தொன்மங்கள், மரபின் கூறுகளே. தொன்மத்தைக் கேள்வியாக்கிக் கொண்டே நவீனத்தில் கூர்தீட்டிக் கொள்ளும் கவிதைகளும் உள்ளன. “நெருப்பின் நாக்கு, நிரூபித்த கற்பை, ஒரு வண்ணானின் நாக்கு, அழுக்காக்கியது” என்ற கவிதை சமூக விமர்சனமாகத் தெரிந்தாலும் தொன்மத்தின் இடைவெளிகளையும் நிரப்புகிறது.

மரபோ, வசனமோ, புதுக்கவிதையோ கவிதை கவிதையாக இருக்க வேண்டும். கவிதையின் அகத்தில் இருந்து அக்கவிதை எந்தக் கண்ணியில் நிற்கிறது என்ற இரண்டாவது அணுகுமுறையில் இருந்தே என் பார்வையை முன்வைத்துள்ளேன். கவிதை அரசியலைப் பேசக் கூடாதா என்று கேள்விக்கு ஞானக்கூத்தன் சொல்லிய பதிலை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். “கவிதை எல்லாம் பேசலாம். கவிதை கவிதையாக இருக்க வேண்டும்.”

நல்ல கவிதைகள் மிக நீண்ட மரபுதான் நம்மில் நிலைபெற்று வந்திருக்கின்றன. காலத்தின் தேவைகளுக்கு எழுதப்பட்ட படைப்புகளைக் காலமே நிர்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறது. தீண்டாமை ஒழிப்பு, விதவைத் திருமணம், சாதிய மீறல், திராவிடம், தமிழ், தமிழர் அல்லாதவர் உள்ளிட்ட சீர்திருத்தக் காலங்களின் கவிதைகளுக்கு இன்று என்ன இடம் என்பது ஆய்வுக்குரியது. பாரதி, பாரதிதாசனின் பல கவிதைகள் இவ்வகையில் தனக்கான இடத்தை இன்னும் தக்க வைத்திருக்கிறதா? இசைப்பாடல்களான பதிகங்களின் நிலை இன்று என்னவாக இருக்கிறது? போன்ற கேள்விகளையும் முன்வைக்கிறேன்.

இறுதியாக, கவிதை மரபு என்பது முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட கடந்த காலம் அல்ல. எல்லாப் புதுமைகளின் தொடக்கப்புள்ளியே மரபு. மரபுக்குத் திரும்புதலே புதுமை. மொழியின் வழியாக உருவாகும் கவிதை, மொழியின் எல்லைகளைக் கடந்து நிற்பதைப் போல், மரபும் தன் காலத்தின் சாத்தியங்களைக் கடந்து நிற்கிறது. சங்கம் தொடங்கி நவீனம் வரை நீளும் கவிதை மரபென்பது, வடிவத்தில் இல்லை. அதன் தரிசனத்தில்தான் இருக்கிறது. யதார்த்தத்தைக் கடந்த தீர்க்க தரிசனமும், உண்மையின் தரிசனமுமே நம் கவிதை மரபு. எந்தக் கைவிளக்கேந்தியும் அதனுள் பயணிக்கலாம்.

கவிதை வடிவத்தைக் கடந்து நிற்கும் பேரொளி.

(26.06.2020 அன்று சிங்கப்பூர் கவிமாலை நிகழ்ச்சியில், கவிதை மரபு என்ற தலைப்பில் இணைய வழியில் ஆற்றிய உரையை ஒட்டிய கட்டுரை)

***

அ. வெண்ணிலா

RELATED ARTICLES

1 COMMENT

  1. மரபு என்ற சொல்லுக்கு வேறெவரையும்விட ஆழ பந்தமுடையவர்கள் நாம் என, தமிழர்கள் நாம் இயல்பிலேயே எண்ணக் கூடியவர்கள்!
    அது கவிதை புலத்தில் எவ்விதம் மலர்ந்து வந்திருக்கின்றது என்பதை தன் கவிமன ‘ஆன்மாவின் கைவிளக்கோடு’ முயன்று பதிந்திருக்கும் தோழர் அ.வெண்ணிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular