மத்தி – நூல் விமர்சனம்

0

கண்டராதித்தன்

1980-களின் மத்தியிலும் அதன் இறுதி ஆண்டுகளிலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 90களின் தொடக்கத்தில் நிகழ்ந்த தாராளமயவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஒரு சராசரி இந்தியனின் மனதை தன்னம்பிக்கையுடையதாக, மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்கதாக மாற்றியுள்ளது. அதற்கு முன்பான சராசரி இந்தியக் குடிமகனது ஒருநாள் வாழ்வென்பது பல்வேறு சிடுக்குகளைக் கொண்டதாகவும், அவநம்பிக்கைகளை உடையதாகவும் இருந்து வந்தது. இம்மனநிலை கலை இலக்கியச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. உதாரணமாக தமிழில் 1980-ல் எழுதவந்த யூமா வாசுகி, எம்.யுவன், பா.வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட சில கவிஞர்களின் கவிதைகளைத் தவிர இன்னபிறக் கவிஞர்கள் தங்களின் படைப்புகளைச் சோதனைகளுக்கு ஒப்படைக்கத் தயங்கியும், தன் சமகாலத்தை படிபெடுப்பதில் கவனம் செலுத்தியதையும் அக்காலகட்டத்தில் தீவிரமாக இயங்கிய சில சிறுபத்திரிக்கைகளில் காணலாம். இதற்கு இறுக்கமான படிம அடுக்குகள் மற்றும் எமோஷனல் டைப் கவிதைகள், காதல் கவிதைகள் மிகவும் உதவிகரமாக இருந்தன.

அதே சமயத்தில் தினமணிக் கதிர், இந்தியா டுடே போன்ற வெகுஜன மற்றும் இடைநிலை இதழ்களில் நவீன கவிதைகளுக்கு சில பக்கங்களை ஒதுக்கவும் செய்தனர். இது புதிய வாசகர்கள் நவீனத்தின் பக்கம் திரும்ப வாய்ப்பளித்தது

இதற்குப்பிறகான வருடங்களில் சராசரி தமிழ் குடிமகனது வாழ்விலும், வாசகனது வாழ்விலும் பொருளாதார அளவில் பெரிதான மாற்றங்களேதும் ஏற்படவில்லையெனினும், வழிவழியான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எனவே உத்தேசமாக மதிப்பிட்டாலும் கூட இக்காலகட்டம் மாற்றத்திற்கானது என்றே கூறமுடியும், ஏறக்குறைய 90களின் தொடக்கம் மற்றும் மத்தியில் எழுதத் தொடங்கிய பல்வேறு கவிஞர்கள் சுயாதீனமாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு முன்னிருந்த தளைகளில் இருந்து சற்றே விடுபட்டு, உத்வேகமாக இயங்கத் தொடங்கினர். அது கவிதை பரப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 91ல் பிறந்த துரை தான் பிறந்த தசமத்தில் இயங்கிய நவீனத்துவத்தை செறிவான அளவில் உள்வாங்கியிருக்கிறார் என்பதே இத்தொகுப்பின் மூலம் காணமூடிகிறது. அதுவே அவரது பலமாகவும் தெரிகிறது. இத்தொகுப்பின் முதல் இரண்டு கவிதைகள் இப்படி இருக்கிறது

1.
எங்களின் உவர் நிலத்தில்
வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள்
ஏழடி இருப்பாள் எனக்குத் தெரிய முக்கால் ஆண்டுகளாக
ஒரே இடத்தில் அலைபாய்கிறாள்
காற்று வாங்குகிறாள்
நீராடுகிறாள்
எப்போதாவது புரண்டு படுப்பாள்
அப்போதெல்லாம் கடலும்
எதிர்திசைக்கு மாறிக்கொள்ளும்.

2.
மொத்தமாக பதுங்கு குழிகளில் வந்து விழுந்தார்கள்
‘அப்பா நாம் ஏன் பாம்பைப்போல
படுத்தபடியே நகருகிறோம்’
‘இறைவன் வானிலிருந்து
திராட்சைகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே!
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப்பிடிக்காதல்லவா’

இக்கவிதைகளில் இயங்கும் காலமும், நிலமும், வாழ்வும் இரண்டு விதமானது. முதல் கவிதையில் ‘உவர் நிலத்தில் வெட்டுண்ட காய்ந்த மரத்தி’ என்ற நில மூதாதையின் மீதான நம்பிக்கை, வாழ்க்கையையும், அதன் போக்குகளையும் முற்றிலுமாக மாற்றும் என குறியீடாக உணர்த்துகிறது.

அடுத்த கவிதையில் அதே போன்ற நிலத்தில்; ஒரு பதுங்கு குழியில் பதுங்கும் தகப்பனதும் மகளதும் உரையாடல் வாழ்வின் அபத்தத்தைக் கூறி அதிர்ச்சியளிக்கிறது.

ச.துரையின் கவிதைகளின் மொழி ஒருவித சந்தத் தன்மையுடனும், அமைதியும் ஒழுங்கும் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய மொழியின் மூலம் பெரிய அதிர்ச்சி மதிப்பீடுகளை உருவாக்கி, தம் பிம்பத்தை பிரதானப்படுத்தும் தன்மையான கவிதைகளை நோக்கி நகர வாய்பிருந்தும் துரை அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாதது ஆறுதலளிக்கிறது. எனவே கவிஞரா கவிதையா என்ற தளத்தில் துரையின் முகம் பின்னின்று கவிதை முன்னெடுக்கிறது. இத்தகையக்கூறுகள் பிற்காலத்தில் அவரை செம்மைபடுத்த உதவிடும்.

‘இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்’ என்ற கவிதையில்;
என் காதலனை நீங்கள் சந்திப்பீர்களா?
நிச்சம் மகளே,

‘விலாங்கு மீன்கள் வாங்கி வருவேன்
உணவில் கலந்தாடலாம்’ என்ற கவிதை வரிகளும்,
பக்கம் 15-ல் உள்ள ‘நாடியில் இருந்து கீழ்நோக்கி’ என்ற கவிதையின் இரண்டு வேறுவிதமான சொல்லல் கூறுமுறைகளை ‘எனக்கு தலை சுற்றுவது மாதிரி இருக்கிறது வயிறே’ என் ஒற்றை வரியில் மூலம் அக்கவிதையை நேர்கோடாக பிரித்திருப்பார். இது அவரது சமகாலக்கவிஞர்களை நிச்சயம் பொறாமைப்பட வைக்கும்.

மேலோட்டமான பார்வையில் இக்கவிதைகளில் காணக்கிடப்பவை அனைத்தும் உத்தியாகவே தோன்றும் ஆனால் உண்மை அதுவல்ல, அத்தகைய உத்திகள் பெரும்பாலும் வாசகனை மிரட்சிக்குள்ளாகுவதாகவோ, சலிப்படைய வைப்பதாகவோ இருக்கும். ஆனால் இங்கு அவை நவீனத்துவத்தின் பூரணமான கவித்துவ தொனியை எட்டியிருக்கிறது.

கரையில் அமர்ந்திருப்பவன் பேசவேயில்லை
அலைகளைப் பார்க்கிறான்,
அலைகள் குரைக்கின்றன
குரைக்கும் அலைகள் எதைத்தான் கேட்கின்றன,
அவன் எதையும் பேசவில்லை
எழுந்துபோய் தடவிக்கொடுக்கிறான்
அவை எக்கி எக்கி இடுப்புக்கு மேல்வரை நக்கிக்கொடுக்கின்றன.
என்ற கவிதையை உதாரணமாகக் காண்கிறேன்.

‘என் அன்பின் சிப்பியை யாரும் திறக்க முன்வரவில்லை அவை கடலுக்குக் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றன ஒட்டமும் நடையுமாக என்ற தேவதச்சன், தேவதேவன் போன்ற மூத்த கவிகளின் வரிகளையும் கூட எனக்கு நினைவிற்கு கொண்டு வந்தது.

தான் வாழும் நிலத்தினை பற்றி புரிதலுடன்,அங்குள்ள மனிதர்கள் மற்றும் பொருட்கள் விலங்கினங்கள், தட்பவெப்பம், உண்ணும் முறை, வணங்கும் தெய்வங்கள், அரசதிகாரம், ஆட்சியாளர்களென இந்நெய்தல் திணைக் கவிதைகளின் முலம் ச.துரை தன் நிலம் தன்மீது சுமத்தும் அத்தனை பாரங்களையும் நுண் சித்தரிப்புகளாக காட்சிப்படுத்தியிருப்பதை பின்வருமாறு பல்வேறான கவிதைகளின் வாயிலாக காணலாம்..

நெய்தல் ஆட்டிறைச்சி – உண்ணும் உணவு முறை
நெய்தல் நாய்கள் – விலங்கு
நல்ல பாடு வராதென்று இயல்பான தமிழில் பேசினார் – நிலம் சார்ந்த மொழி.
‘எப்படி இந்த ஆட்டைப் பிடித்தீர்கள்’
‘வலைவீசித்தான்’- வாழ்வியல் முறை

சார்லஸ் உயிர்தெழுந்த இந்த ஆறுமணி நேரத்தில் நான்கு வாலை மீன்களை பிடித்திருக்கிறார். இருபத்தியொரு முறை கர்த்தரை கடலில் வீசியிருக்கிறார் – வணங்கும் தெய்வங்கள் என அழகியல் தன்மையோடும், வாசிக்கவும் அதிலிலிருந்து புதியதானவொன்றைப் பெற முடியுமாறும் இருப்பது வசகனுக்கு நல்ல அனுபவப்பங்கீடாகவும், புதிய திறப்புகளுக்கான வாயிலாகவும் இருக்கும்.

’விடிவெள்ளிகளில் கடல்மீதுவிழும் வானை என்ன செய்யப் போகிறாய்? தூண்டில் போடுவேன் பெருத்த நிலச்சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு போவேன் வாங்குவோர்க்கு நிலாவை இனாமாகக் கொடுப்பேன் ஈன்ற தொகையில் முப்பொழுதும் மூன்று பக்கங்களென அசைவாடி புணர்ந்து திளைப்பேன் பின்பொருநாள் இறப்பேன் சவுக்கைக் காட்டின் வயிறு மாதிரியான திடலின்மேல் வியாபித்த வானம் பார்த்தபடியே.

இக்குரல் எனக்கு இவரின் பல முன்னோடிக் கவிஞர்களை நினைவுபடுத்துகிறது. அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை போன்ற கவிஞர்களிடமிருந்து பகடி, நுண் அரசியல், நில விவரணைகள் போன்றவற்றுடன் ஒத்துள்ளார். ஆனால் இவர்கள் அனைவருமே தங்களைக் குறிப்பிட்ட திணை எல்லைக்குள் சுருக்கிக் கொண்டவர்களில்லை. ச.துரையிடம் இது பாதகமான அம்சமாக இல்லையென்றாலும் சற்று விலகி கவனிக்க வேண்டும் மேலும் திருகல் மொழித் தன்மையில்லாத, இக்கவிதைகள் அவரை மிக்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும். நெய்தலை தன் பண்பாட்டு வெளியாகக்(Cultural Space) கருதி அதனூடான வாழ்வுமுறைகளை பதிவு செய்திருப்பதில் ச.துரை வெற்றி பெற்றிருக்கிறார் என்பதே என் அனுமானம்.

இவரது பெரும்பாலானக் கவிதைகளில் காலமும் வெளியும் (Time And Space) காணப்படுவதும், நிலமும் பொழுதும், வாழ்வியல் முறைகளும், தன்னிலை மற்றும் புறச்சூழல்களென அனைத்தும் உத்தேசமாக கலந்திருக்கிறது. இதன் மூலம் கோட்பாடு மற்றும் சித்தாந்த அமைப்புகளை நோக்கிச் செல்ல வாய்ப்பிருந்தும் அதனை எதேச்சையாக தவிர்த்திருக்கிறார் என எண்ணுகிறேன். இதனால் துரை தனித்துத் தென்படவும் செய்கிறார்.

“தவளையொன்று இருளுக்குள் பாய்ந்தது
இருளுக்குள் நுழையக் கதவுகளே இல்லை என்றார்கள்
உண்மைதான் வெளிச்சத்திலிருந்து
இருளுக்குள் நுழையக் கதவுகளேயில்லை
ஆனால் இருளுக்குள்ளிருந்து
இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு
நிறைய தடுப்பகள் இருக்கிறது” என்ற இருப்பு குறித்தான விசாரணைகளும் அங்காங்கே தென்படுகிறது. டைலர் வில்பர்ட், இவானோவிச்சின் மீன் தொட்டி, ஹென்றி அதிகாலையிலேயே தனது பியானோவை வாசிக்கத் தொடங்கிவிட்டார், ஆதியிலும் செம்மறிகள் இருந்தன, வெள்ளரிப்பிஞ்சுகளைப் பயிரிடும் ஒருத்தி இறந்து போனாள்.

ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து போன்ற கவிதைகள் தனித்து உள்ளது. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் வி.என்.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ச.துரை, ராம்சந்தோஷ், கனிமொழி.ஜி, ஸ்டாலின் சரவணன், அதீதன் சுரேன் போன்ற சில குரல்கள் தனித்து அடையாளமாவது தெரிகிறது. இத்தொகுப்பின் மூலம் துரையும் தனக்கான பதிவை தமிழ் கவிதை பரப்பில் தக்கவைத்துள்ளார்.

”கூடாரமொன்றினுள் அடுக்கிய டம்ளர் கோபுரத்தின் மீது பந்து எறியப்படுகிறது டம்ளர்கள் சரிகின்றன துளிமோதி நினைவுகள் உதிருமே அதுபோல பெரிய எலும்புத்துண்டை கவ்விய டாபர்மேனைப் போல துள்ளுகிறான் எல்லோரும் கைதட்டுகிறார்கள் கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும் பழையபடி டம்ளர்களை சோர்வோடு அடுக்கிற கிழவனே! நீதான் நீயேதான் பழஞ்சேர்த்தி ஞாபக அழுத்தி நினைவடர்த்தி மீள்மனதி”.

நல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. தன் புத்தாக்கமான இந்த கவிதைகளுக்காக ச.துரை தாராளமாக மகிழ்ச்சியடைலாம்.

***

கண்டராதித்தன்

மத்தி
சால்ட் பதிப்பகம், சென்னை

(சேலம், ’சொற்கள் ’அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை / 23.03.2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here