மணம்

0

காலத்துகள்

உடலெங்கும் மலம், சிறுநீரின் மணம். படுக்கையில் அமர்ந்திருந்தவர் எழுந்திருந்த போது தடுமாறியவர், வலது கையை முன்னே நீட்டியபடி இரண்டடி எடுத்து வைத்தார். இப்போது நாற்றமெடுக்கவில்லை. அறையெங்கும் மலங்கழித்தது இன்று காலையில் தானே. திரும்பிப் படுக்கையில் அமர்ந்தவர் கண்களை இடுக்கிக் கொண்டு அலைபேசியை பார்த்தார். நேரம் பதினாறு இருபத்தியைந்து. காலை மாலை பன்னிரண்டு. பன்னிரெண்டாகப் பிரிப்பார்கள், பதினாறில் மீதி நான்கு, இப்போது மணி நான்கு இருபத்தியைந்து. உள்ளங்காலில் பிசுபிசுப்பாக மலம். காலை நகர்த்தினார். இல்லை, அப்போதே அறையை சுத்தம் செய்து விட்டார்கள். மகன்தான் குளிப்பாட்டியும் விட்டான். அவன் சிறுவனாக இருக்கையில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கும் போது இவர் குளித்து விட்டு உடை உடுத்தும் போது அவனை வெளியே அனுப்பி விடுவார். அவனையும் ஏழெட்டு வயதில் தனியாக குளிக்கச் செய்தார்கள். அவனுக்கு இப்போது அறுபத்தியோரு வயது, இல்லை அறுபத்தியிரண்டா? இன்று முழு நிர்வாணமாக என்னைப் பார்த்திருக்கிறான்.

மீண்டும் படுக்கையிலிருந்து எழுந்தவர் அறையின் கழிப்பறைக்குச் சென்று பேஸ்ட்டை எடுத்தார்.

‘என்னப்பா பண்ற’

குரல் கேட்டு திரும்பினார். என் முகம் என் எதிரே, இருபது முப்பது வருடத்திற்கு முந்தையது.

‘ஏன் சாயங்காலம் பல் தேய்க்கறப்பா?’

‘சாயங்காலமா’ யார் இவன்.

‘மணி நாலே முக்கால்’

என் மகன்.

‘காத்தாலன்னு நினைச்சுட்டேன்டா’

‘பார்த்து வா, விழுந்துடாத’

‘ஒக்காரு, படுத்துக்கறையா’

தலையசைத்தார்.

‘இப்ப எப்படியிருக்கு’

மீண்டும் தலையசைப்பு.

‘பக்கத்துலையே வாட்டர் பாட்டில் வெச்சிருக்கு, ரூம் கதவு தொறந்திருக்கட்டும், ஏதாவது வேணும்னா கூப்பிடு’ என்று கூறிவிட்டுச் சென்றான். அவன் நடையிலும் கொஞ்சம் தடுமாற்றம். அறுபத்தியைந்து வயதாகிவிட்டது, இல்லை அறுபத்தியிரண்டு தான். எனக்கு இருபத்தெட்டு வயதிருக்கும் போது பிறந்தான்… என் வயதென்ன… நயன்டீன் தர்ட்டி ஒன் தானே? நான் அல்லது முப்பத்தி இரண்டா? எழுபது ப்ளஸ் இருபது, தொண்ணூறு. அதில் இருபத்தெட்டு கழித்தால்… அறுபதுகள் கண்டிப்பாக ஆரம்பித்திருக்கும் அவனுக்கு.

இடுப்பு வலியெடுக்க திரும்பி அமர்ந்தார். அறையெங்கும் பினாயில் மணம். அதனூடே, அழுகிய பழத்தின், இல்லை.. கெட்டித்தட்டிப் போன மலத்தின் வாசம். ஏப்பம் காரமாக எழுந்தடங்கியது, நெஞ்சில் எரிச்சல். ஆசிட் ரிப்லக்ஸ் வேறு வந்து விட்டதா. மூன்று நாட்களுக்கு முன் எப்போதும் போல் காலை நாலரை மணிக்கு எழுந்தவர் தடுக்கி விழுந்ததில் ஆரம்பித்தது. பேரனும் மகனும் தூக்கிப் படுக்க வைத்தார்கள். வலி தாளவில்லை.

‘இப்ப டாக்டர் கிட்ட எங்க கூட்டிட்டுப் போறது’

‘மொதல்ல கிளினிக் தொறந்துருக்கான்னு பாக்கணும்’

டெலி மெடிகேஷன். விடியோ கால் செய்யச் சொன்ன மருத்துவரிடம் இடுப்பை காட்ட, அவர் மருந்துகள் பரிந்துரைத்தார்.

‘இந்தா தாத்தா’ என்று படுக்கையில் மருந்தை வைத்து விட்டு அவசரமாக வெளியே சென்றான் பேரன். முகம், கைகால் கழுவிக்கொள்ள வேண்டும். ஒரு வருடமாக வீட்டிலிருந்து தான் வேலை செய்கிறான், வாரமொருமுறை மட்டும் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வருவான். இரண்டு வாரங்களுக்கு முன்தான் அவன் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தாலும், அதற்குப் பிறகும் தொற்று ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். கைக்குழந்தை வேறு அவனுக்கு, என்னால் அனாவசியமாக வெளியே செல்லும்படியாகி விட்டது. மகனும், மருமகளும் மார்ச் மாதத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டபோது நானும் சென்றிருக்கலாம், அப்போது தயங்கியது தவறோ?

மலங்கழிக்கும் உணர்வேற்பட்டு கழிவறைக்குச் சென்றார். மூன்று நான்கு முக்கல்களில் கொஞ்சம் சிறுநீர் மட்டும். ஆனால் ஆசன வாயிலில் மலம் தொக்கிக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இடது கையை வைத்து தடவிப் பார்த்தார். சதையா, மலமா?. மூக்கருகே விரல்களை கொண்டு வந்தும் என்ன மணம் என்று உறுதியாக கூற முடியவில்லை.

‘என்னப்பா பண்ற, ட்வென்டி மினிட்ஸுக்கு மேல உள்ள இருக்க’

இது மகனின் குரல் தான். எழுந்தார். கழுவிக்கொள்ள வேண்டுமா? குனிய முடியாது, கையை மட்டும் சுத்தப்படுத்திக் கொண்டார்.

‘கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்பா இருக்கும், மெடிசன் சைட் எபெக்ட்’

வலிக்கு மருந்து சாப்பிட ஆரம்பித்த பின் மலச்சிக்கல். முதல் நாள் பொறுத்துக் கொண்டவர், நேற்று மகனிடம் கூறினார்.

‘டாக்டர் கிட்ட கேட்டேன், லாக்சேடிவ் எடுத்துக்கச் சொல்லியிருக்கார்’

மீண்டும் பேரன் தான் கடைக்குச் சென்றான்.

மலமிளக்கியை நேற்றிரவு எடுத்துக் கொண்ட பின்பும் சரியாகவில்லை. இன்று காலை ‘நல்லெண்ணெய வயத்துல தடவி பார்க்கலாம்’ என்றாள் மருமகள்.

‘நானே தடவிக்கறேன்டா’

‘ஒன்னால ஒனக்கே முடியாதுபா’

மருமகள், பேரன், அவன் மனைவி, அவள் கையில் இரண்டு வயது குழந்தை எல்லோரும் இவர் அறையில்.

‘வேணாம்டா, மத்தியானம் வரைக்கும் பார்க்கலாம்’

‘நீங்க போங்க’

‘..’

‘சட்டைய தூக்குப்பா’

‘கொஞ்ச நேரம் சேர்ல ஒக்காந்திரு’

அவன் தடவிச் சென்ற பத்து நிமிடங்களுக்குள் அடிவயிற்றில் கலக்க ஆரம்பித்து இவர் நாற்காலியிலிருந்து எழுவதற்குள் கழிந்து விட்டார். கழிவறையை அடைவதற்குள் பெர்முடாவின் கால்வழியாக வழிந்த இரண்டு நாட்களின் மலம் தரையெங்கும் திட்டுத்திட்டாக.

உடைகளைக் களைய ஆரம்பிக்கும் போது,

‘என்ன தாத்தா ஹால் வரைக்கும் நாத்தம்’

‘…’

‘அப்பா இங்க வாங்க’

பேரன் பிடித்துக் கொள்ள மகன்தான் நடுங்கும் கைகளுடன் தண்ணீர் ஊற்றி உடலை கழுவினான்.

‘மொதல்ல தாத்தாவை ஹால்ல ஒக்கார வைச்சுட்டு ரூமை க்ளீன் பண்ணலாம்’

‘திருப்பி கழிஞ்சுடார்னா, ஹால் …’

‘வேற எங்க ஒக்காற வைக்கறது’

மாற்று பெர்முடாவைப் போட குனிந்த போது இடுப்பு வலித்தது.

‘போட்டு விடணுமா’

‘வேணாம்’

‘நாலு இட்லி, சட்னி வெச்சிருக்கேன், காரமில்லாம அரைச்சிருக்கேன்’

இவள் யார்?.

‘இப்பத் தானே சாப்ட்டேன்’

‘அது மத்தியானம், இப்ப நைட் ஆயிடுச்சு’

‘மணி என்ன’

‘ஏழரை.’

‘..’

‘வேறேதாவது வேணும்னா கூப்பிடுங்க’

‘…’

இது என் மருமகள், பெயர் என்ன?. மகனுக்கு திருமணம் முடிந்தவுடனேயே ஒரே வீட்டில் வசித்தாலும் கொஞ்சம் விலகியே இருப்பது என்ற முடிவுக்கு இயல்பாகவே இவரும் மனைவியும் வந்தார்கள். இத்தனை ஆண்டுகளில் மருமகளுடன் பெரிதாக எந்த  சண்டையும் ஏற்பட்டதில்லை, எந்தக் கட்டாயப்படுத்தலும் இல்லை.  பேரனின் படிப்பு, திருமணம் குறித்து மகனும், மருமகளும் முடிவு செய்ததை ஏற்றுக்கொண்டார்கள். மூன்று குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்ற இந்த ப்ளாட்டை வாங்கும் போது இவரும் பணம் தந்தார்.

‘லோன் போட்டிருக்கேன் தாத்தா’

‘அது இருக்கட்டும் டா, என்னால முடிஞ்சது’

‘நீங்க பணம் குடுக்கலைனா வெச்சுக்க மாட்டோமா என்ன, அவ்வளவு கேவலமாவா எங்களை நினைக்கறீங்க’ என்று கேட்ட மருமகள் தான் என்றாலும் தன் கணவனையும், மகனையும்  இப்படிப் படுத்துவது  அவளுக்கு எரிச்சலூட்டக் கூடும்.

தக்காளிச் சட்னியின் நிறம் சிகப்பா மஞ்சளா? ஜீரணமாகாமல் மலத்தில் சிலநேரம் ஒட்டியிருக்கும் கருவேப்பிலை போல் சட்னியிலும் சில இலைகள். காலருகே மஞ்சள், பழுப்பு நிற தீற்றல்கள். இட்லியை வாயருகே கொண்டு வந்தபோது நாற்றம் குமட்டியது. மெதுவாக மென்று உண்டு முடித்தவர் அறையிலிருந்த தொலைக்காட்சியை இயக்கினார்.

‘மத்த கிழடுங்க மாதிரி நாமளும் நொய்யு நொய்யுனு மத்தவங்களைப் படுத்தக் கூடாது, அட்வைஸ் பண்றேன்னு அவங்க விஷயத்துல மூக்க நுழைக்கறது, எதையும் செய்யக் கூடாது’

‘உங்க சேவிங்க்ஸ் இருக்கு, அதுபோதும் நமக்கு. அதுக்கும் மேல தேவைப்பட்டா பார்த்துக்கலாம்’

மகனுக்கு செலவு வைக்காமல் போய் சேர்ந்து விட்டாள். இன்று அவள் இருந்திருந்தால் அவளே குளிப்பாட்டித் துடைத்து விட்டிருப்பாள். வயதடைந்த பின் அவளைத் தவிர யாரும் என் நிர்வாணத்தைப் பார்த்ததில்லை, இன்று இருவர். தோல் சுருக்கங்கள், சுருங்கிய குறி, விரைகளின் வெளுத்த முடிகள், பிருஷ்டத்தின் மீது படிந்துள்ள கருப்புத் திட்டுக்கள் அவர்களுக்குக் குமட்டலைத் தந்திருக்கும்.

தொலைகாட்சியை அணைத்தவர் அலைபேசியை எடுத்து மனைவியின் புகைப்படத்தைப் பார்த்தார். அவள் நினைவு நாள் இரண்டு மாதத்தில், அதுவரை தாக்குப் பிடிப்பேனா? இந்த ஒன்றரை வருஷமா எந்த சிறு உடல்நலக் குறைவும் ஏற்படக் கூடாது என்று மிகவும் ஜாக்கிரதையாக இருந்தும் இப்போது இந்தப் பிரச்சனை. இதற்காக டாக்டரிடம் செல்ல நேரிட்டு, க்ளினிக்கில் தங்கவேண்டி வந்துவிட்டால் இந்த சூழலில் யார் கவனித்துக் கொள்வார்கள். அப்படியில்லாவிட்டாலும் மருத்துவரை நேரில் சென்று பார்ப்பதே இப்போது அபாயகரமான விஷயம் அல்லவா,    தொற்றேற்பட்டு விட்டால்? இறப்பதற்குள் இவர்களனைவரையும் படுத்தி எடுத்து விடுவேனோ. தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம்.  மனைவி உடனிருந்திருந்தால் கொரோனா காலத்தை இன்னும் தைரியமாக எதிர்கொண்டிருப்பேன், எந்த தடுப்பூசி சிறந்தது என்று ஆராய்ச்சி செய்து  கொண்டிருக்காமல், கிடைப்பதை செலுத்திக்  கொண்டிருப்பேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் தாம்பத்தியம், அவள் இறந்த பின்பு நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டுமென்று ஒருமுறை கூட தோன்றவில்லை.  

‘ஒம்போது மணிக்கு பால் தரட்டுமா… இல்ல…’ மருமகள் கேட்க,

‘வேண்டாம்’ என்றார். பால் கழியச் செய்யும்.

அலைபேசியில் நேரத்தை பார்த்தார். இருபது இருபத்தியேழு… எட்டு இருபத்தியேழு.

‘மாத்திரைலாம் சாப்ட்டியா’

‘ம்’

‘லாக்சேடிவ் இனி வேணாம்னு சொல்லிட்டார் டாக்டர். வலி மாத்திரை கூட நாளையோட ஓவர்’ மகன் கையில் புடைத்த பை.

‘..’

‘டாக்டர் தான் சொன்னார். வயசானவங்களுக்கு தனியா டயப்பர் இருக்கு, அதை போட்டுக்கலாம்னு’ என்று அந்தப் பையை நீட்டியபடி கூறினான்.

‘..’

‘நைட் ஒனக்கு திருப்பி கழிஞ்சுதுன்னா கஷ்டம் இல்லையா’

‘..’

‘ரேஷஸ்லாம் எதுவும் வராதாம்’

‘..’

‘போட்டுக்கறியா. இன்னிக்கு ஒரு நைட் மட்டும், அப்பறம் பாத்துக்கலாம்’

கையை நீட்டினார்.

‘பிரிச்சு வெச்சிருக்கேன், நீ கட்லாம் பண்ண வேணாம்’

முதிய ஆணும்,பெண்ணும் சிரிக்கும் படம். டயப்பர் போட்டுக் கொண்டு இவ்வளவு உற்சாகமாக இருக்க முடியுமா என்ன? ஒரு டயப்பரை எடுத்து முகர்ந்தார். மலத்தின் மணம். படுக்கையின் மீது வைத்துவிட்டு மீண்டுமெடுத்து முகத்தின் அருகே கொண்டு சென்றார். இல்லை, வேறேதோ மெல்லிய வாசம். டயப்பர் நாற்றமெடுக்கக்  கூடாது என்று ஏதாவது ரசாயனத்தைச் சேர்த்திருக்கக் கூடும். டயப்பருக்குள் இரு விரல்களை விட்டு விரித்துப் பார்த்தார், இடுப்பிற்குப் பொருந்தும்.

கதவை மூடி விட்டு பெர்முடாவை அவிழ்த்து, டயப்பரை அணிய குனிந்தபோது இடுப்பில் வலிக்க, நிமிர்ந்தவருக்கு மூச்சு வாங்கியது. மீண்டும் குனிய முயன்றார், வலி. மகனை அழைக்கலாமா? அசிங்கம். படுக்கையில் அமர்ந்து இரு கால்களையும் நீட்டி டயப்பருக்குள் நுழைக்க முயன்று சரிந்தவர், மெதுவாக எழுந்து டயப்பரை கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘கதவ சாத்தாதீங்க’ என்றபடி உள்ளே வந்தவள் தரையிலிருந்த பெர்முடாவையும், அவர் கையிலிருந்த டயப்பரையும் பார்த்துவிட்டு விலகி கதவை மூடினாள். இது  மருமகளா, பேரனின் மனைவியா? டி-ஷர்ட்டை குறியை மறைக்குமாறு இழுத்துவிட்டுக் கொண்டார். டயப்பர் போட முடியாவிட்டாலும் பரவாயில்லை, வேறு யாரும் வருவதற்குள் பெர்முடாவை அணிந்து கொள்ள வேண்டும்.

‘என்னப்பா போட முடியலையா’

‘குனிஞ்சா வலிக்குது’

‘எழுந்து நில்லு, நான் போட்டு விடறேன்’

‘வேணாம்டா’

‘பரவாயில்ல’

மகன் வயதுக்கு அவனால் மட்டும் எளிதாக குனிய முடியுமா, பேரனால் முடியும், அவனை ஏன் அழைக்கவில்லை. அல்லது அவனிடம் கேட்டு மறுத்திருப்பானோ?.

எழுந்து நின்றவர் முன் மகன் குனிய, அவன் தோளைப் பற்றிக் கொண்டு ஒவ்வொரு காலாக தூக்க டயப்பரை நுழைத்தான்.

‘போதும்’ என்றவர் தொடை வரை அதை இழுத்துக் கொண்டார்.

‘பெர்முடா…’

ஒரு கையால் டி-ஷர்ட்டையும், மறுகையால் டயப்பரையும் பிடித்துக் கொண்டே ‘நானே பாத்துக்கறேன், நீ போ’ என்றார்.

மகன் வெளியே சென்ற பின் டி-ஷர்ட்டை மேலேற்றி டயப்பரை இடுப்பு வரை இழுத்து அணிந்து கொண்டவர் அறைக்குள் நடந்து பார்த்தார்.

இருபத்தியொன்று நாற்பது… ஒன்பது நாற்பது. சிறுநீர் கழிக்க வேண்டும். இப்போதே டயப்பரில் போய் விட்டால் நள்ளிரவிற்குள் நிரம்பி விடும். டயப்பரை கழற்றி, கழிப்பறைக்குப் போய் வந்தபின் அணிந்து  கொள்ளலாமா, ஆனால் இன்னொருவர் உதவியில்லாமல் முடியாது. பேரன் உறங்கியிருக்க மாட்டான், அவனிடம் கேட்கலாம். வேண்டாம், இன்னும் சிறிது நேரம் பொறுத்துக் கொண்டால் உறக்கம் வந்து விடும்.

முழிப்பு தட்டியவுடன் அலைபேசியில் நேரத்தைப் பார்த்தார். ஒன்று பதிமூன்று. மெதுவாக எழுந்தமர்ந்தார். டயப்பர் கனமாக இருந்தது. சிறுநீரின் வாசம். மலங்கழிக்கும் உந்துதல் உண்டான கணமே டயப்பரின் பின்பகுதியின் நிரம்ப ஆரம்பித்தது. மலத்தின் மீது அமர்ந்திருப்பதை போன்ற உணர்வெழ எழுந்து நின்றார். டயப்பரிலிருந்து வழியுமோ. இல்லை, அப்படி நேராமல் இருக்கும்படி தான் வடிவமைத்திருப்பார்கள். டயப்பரை மாற்றிவிட வேண்டும், ஆனால் யார் உதவிக்கு உள்ளார்கள். கழிவறை வரை நடந்து திரும்பினார். தொடைகளுக்கிடையில் பிசுபிசுப்பது வியர்வையாகத் தான் இருக்கும்.

அருவருப்பாக இருந்தது. வெளியே வழியாவிட்டாலும் கழிவுகளின்  வாசத்தை டயப்பரால் மறைக்க முடியவில்லை, நாற்றம் அறையை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இப்படியொரு வாழ்வை வாழ்வதற்கு இறந்து விடலாம். இப்போது மரணித்தால் பத்துபேர் கூட வரமாட்டார்கள். இந்த சிறு பிரச்சனை தவிர உடல் நன்றாகத்தான்  உள்ளது. இப்போது இலகுவாகவே மலம் கழித்திருக்கிறேன், உடல் சரியாகிக் கொண்டிருக்கிறது என்றுதானே அதற்கு அர்த்தம். நாளை சரியாகி விடும். ஒன்று நாற்பத்தி ஆறு. இன்னும் நான்கு மணிநேரத்தில் எழுந்து விடுவார்கள், கழற்றி விடலாம். மீண்டும் படுத்தார்.

பின்னந் தொடையில் கசிகிறதோ. மணி இரண்டு ஏழு. காலை டயப்பரை கழற்றும் போது நாற்றம் குமட்டி எடுக்கப்போவதை மகன் எப்படிப் பொறுத்துக் கொள்வான். அறைக்குள் முழுவதுமாக நிரம்பிக் கொண்டிருக்கும் மலத்தின் மணத்தில் மூச்சு முட்டி இறந்து விட்டால் கூட நல்லது தான். கழிவுகளில் புரண்டு கிடப்பதை விட அது மேல்.  இல்லை, இன்று மட்டும் தான் இந்தப் பிரச்சனை, நாளை சரியாகி விடும், அப்படியில்லாவிட்டாலும் கூட, இரவு பத்து மணியளவில் டயப்பரை அணிந்து கொண்டால் சரியாக இருக்கும். மீண்டும் கழிந்தார். இந்த முறை படுத்துக்கொண்டே. இப்போதே பழக ஆரம்பித்து விட்டது. அடுத்த சிலமணி நேரத்திற்கு மட்டும் இந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டால் போதும். வெந்நீர் போட்டு நன்றாகக் குளித்தால் மணம் நீங்கி விடும். தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா என்று  டாக்டரிடம் நாளை கேட்கச் சொல்ல வேண்டும்.

***

காலத்துகள் சொல்வனம், பதாகை இணைய இதழ்களில் எழுதி வரும் இவரது முதல் நூல் “இயர் ஜீரோ” நாவல் யாவரும் வெளியீடாக வெளிவந்துள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here