Friday, March 29, 2024
Homeநூல் விமர்சனம்பெருந்திணைக்காரன் - விமர்சனம்

பெருந்திணைக்காரன் – விமர்சனம்

பெருந்திணைக்காரன்  


கணேச குமாரன் என்கிற G K –  அங்காங்கே சில கவிதைகளின் மூலமாகவும் கதைகளின் மூலமாகவும்  தொடர்பில் இருந்தவன். Chating  -ல் அரையும் குறையுமாக வந்து மறைந்து போகிறவனாக மட்டும் அறிமுகம் கிடைத்தவன். நேரடி அறிமுகம்: வெயில் நதி நோக்கிய பயணத்தில், இதற்கு உபயம் நிலாரசிகனும் விழியனும் தான். அந்த பயணத்தில் கற்கோட்டைக்கும் பாறைகளுக்கும் இடையில் பிடிவாதமாய் வந்து அமர்ந்து கொண்டவன், இன்றுவரை நகர மறுக்கிறான். 

தொகுப்பில் உள்ள  பெரும்பாலான கதைகளை வெளி வந்த இதழ்களிலேயே படித்திருந்தேன். மீதி கதைகளை இந்த தொகுப்பில் தான் படித்து முடித்தேன். தொகுப்பில் மொத்தம் பன்னிரண்டு கதைகள் உள்ளன. நான் இதில் நான்கு கதைகளை பற்றிய எனது பார்வையையும் தொகுப்பின் மொத்ததிலிருந்து வெளிப்படும் படைப்பு சார்ந்த எனது பொதுவான பார்வையையும் உங்களின் முன் பகிர்கிறேன். 

1 . மழை சன்னதம்  

தொகுப்பின் முன்னுரையில் சொன்னது போல் நான் வளர்ந்த ஊரிலும் இது போன்ற-இந்த கதைகளில் வரும் – மனிதர்களை கண்டு இருக்கிறேன். இந்த தொகுப்பில்  முதல் கதையில் (மழை சன்னதம்) வரும் அம்மாவை போன்று எனது நண்பனின் அம்மாவும் உண்டு. அடிக்கடி தொலைந்து போவார்கள். அவராகவே வந்தும் விடுவார். இப்படியான ஒரு தொலைதலில் ஊருக்கு மத்தியில் உள்ள குளத்தில் ஒரு மழை நாளில் விடிகாலையில் மிதந்தார். இதனை இங்கு சொல்வதற்கு காரணம் இந்த கதை படித்தவர்களுக்கு தெரியும்.கதையின் இறுதியில் மழைபேச்சியாக உருமாறும் போது எனது நண்பனின் தாயை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இப்படியாகவும் நடந்து  இருக்கலாம் என்ற அனுமானத்தை விட இப்படித்தானே என்ற  உணர்வை தருவதும்  படைப்பு தானே. அந்த விதத்தில் ஆகச் சிறந்த ஒன்று இந்த கதை. வெளிச்சம் படாத இடத்திலும் கதிரொளி பாய்ச்சுகிறான் G K . 

2 . கையறு நிலை

சில கதைகளில்/கட்டுரைகளில் ஏதேனும் மேற்கோள் கொண்டு தொடங்குவார்கள். அந்த படைப்பை முழுமையாக படித்த பின்பு அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் அந்த மேற்கோள் விளங்கும். (சிலவற்றில் முழுமையாக் படித்த பின்பும்  விளங்காது என்பது   வேறு கதை ). அப்படியான ஒரு வரலாற்று பதிவை கொண்டு தொடு(ட)ங்கும் ” கையறு நிலை” – அடுத்து வரும் சில பத்திலேயே இன்றைய நிலையை முகத்தில் அறைய வைக்கிறது.  கதையை படித்த முடித்த பிறகு கணேச குமாரனின் இடது கையை ஆறுதலாய் பற்ற வேண்டும் போல் இருந்தது .

3 .  இடது பக்க அறையிலிருந்து சில பாடல்கள் இந்த சிறுகதையில் 80  களில் இருந்த இளைஞனின் மன ஓட்டத்தையும் நிலைமையும் படம் பிடித்து காட்டுகிறது. அதே காலவாக்கில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். இப்படியான சூழலும் இளைஞனும் இன்று இல்லை  என்ற நிலைக்கு வரும்போது இந்த கதையை ஒரு ஏக்கத்துடனே மறு வாசிப்பு செய்தேன் . அப்படியான காலத்தை பதிவு செய்ததாகவே இதனை பார்க்கிறேன்.

 4 .பெருந்திணைக்காரன் 

தனது சித்தப்பாவின் மூலம் வந்த சுய இன்ப பழக்கத்தினை கொண்டு அவரை தன்னுடைய ஆதர்ஷமாக கொண்டு சுயநலத்துடன் அவரின்(சித்தப்பாவின்) மகனின் மீது வெறுப்பை உமிழ்வதும் தன்னையே மாய்த்து கொள்ளும் அளவிற்க்குக் போவது சற்று அதிகபடியாக  இருக்கிறது. ஏனோ என்னை அது ஈர்க்கவில்லை. ஆனாலும் வாசனை தரும் கிளர்ச்சி ஞாபகங்கள் , தனிமை உணர்வை மறுக்க முடியாது தான். நிறங்களுக்கும் வாசனைக்கும் அந்த பண்பு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது தான். அதன் வடிவமாக இந்த கதையை எடுத்து கொள்ளும் போது இந்த கதையை தவிர்க்க முடியாது.


பொதுவாக : 

ஒரு படைப்பில் புனைவையும் உண்மை நிலையும் பிரித்தறியா முடியாதவையாக இருக்குமானால் அதன் சிறப்பு படைப்பாளியை சாரும். புனைவையும் யதார்த்தத்தையும் சரியான விகிகத்தில் கலந்து கட்டி அடிக்கிறார்  G . K -அனேகமாக விளிம்பு நிலை மனிதர்கள் தான்  கதையில்  உலாவும்  மாந்தர்கள்  என்று  கொண்டாலும்  அவர்கள்  அந்த  நிலைக்கு  தள்ளப்பட்ட  காரணத்தையும் சில இடங்களில் சொல்லித்தான் செல்கிறார்  g k – ஆனாலும் ஒரு சந்தேகம் உண்டு சுய இன்பத்தையும் ஓரின சேர்க்கையும் ஒரு வித குற்ற உணர்வுடன் அணுகுகிறாரோ என்கிற ஒரு எண்ணம் தோன்றி மறையத்தான் செய்கிறது. நடுத்தர குடும்பத்தின் மனப்போக்கு பல இடங்களில் வெளிப்படுகிறது. அந்த இடத்திலேயே உட்கார்ந்துக்கொண்டு விளிம்பு நிலையை பார்க்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. 

‘இருள் யாசகன் ‘ நீங்கலாக. நல்ல வேலை மலையை அறிந்து கொள்ள மலை ஏறித்தான் ஆகவேண்டும் என்றில்லாமல் அதன் இறுக்கத்தை அறிந்தால் போதுமானது என்பதை உணர்த்துகிறார். G . K கவிதைகள்  எழுதிய பின்பு தான் கதைகள் எழுத தொடங்கினார் என்று நினைக்கிறேன்.பொதுவாகவே கவிதை எழுதுபவர்களின் Text  ஐ நான் சற்று உன்னிப்பாகப் படிப்பதுண்டு. அப்படி ரசித்து படித்த சில வரிகள் – (இதில் ஒரு கவித்துவம் மட்டுமில்லாமல் இயல்பு நிலையும்  இருப்பதாகவே நான் பார்க்கிறேன். )

அம்மா மாதிரி நிறைய பேர் இருந்தார்கள். அம்மா மட்டும் இல்லை.

இரு கண்களிலும் சூரியனை ப் பதித்து கொண்டு அறைக்குள் வந்து படுத்தேன் ரகசிய அவமானங்கள் வரிசையாக் தொடர்கின்றன.

ரத்தம் சொட்டச் சொட்ட மீண்டும் மீண்டும் அடித்து விளாசும் ஊரின் நாக்கு 
நீர் சூலம் எடுத்து நீரை குத்தினாள். மழையை பிடுங்கி மழையில் எறிந்தாள்

தொடர்ந்து இவரின் கதைகள் கவிதைகள் மனித உறவில கிடக்கும் ரகசியங்களையும் வெளிச்சங்களையும் சொல்லி வருகின்றன.  உள்ளாடைகளை திருடும் முகர்வில் இருந்து தெருவின் மங்கிய ஒளியில் நடக்கும் ரகசியங்கள் வரை பல புள்ளிகளை தொகுப்பில் காண முடியும் பைத்தியமாகவே பிறந்த மேரி  மகனின்  கதை எழுதபடாதது போல் வீதியெங்கும் உலாவும் மனித மனங்களின் இருள்களை அள்ளி அள்ளி  இயல்பு மாறாமல் இனியும் தருவார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

 

வேல்கண்ணன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular