Friday, March 29, 2024
Homesliderபூமி என்கிற டைட்டானிக் கப்பல்

பூமி என்கிற டைட்டானிக் கப்பல்

நாராயணி சுப்ரமணியன்


ஆகஸ்ட் 2019ல் ஐஸ்லாந்தில் ஒரு இரங்கல் கூட்டம் நடந்தது. சுமார் 100 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஐஸ்லாந்தின் பிரதமரும் கலந்துகொண்டார். “அடுத்த இருநூறு வருடங்களில் இது அடிக்கடி நிகழக்கூடும்…..” என்ற எச்சரிக்கை வாசகத்தைத் தாங்கிய கல்வெட்டு ஒன்று அப்போது நிறுவப்பட்டது.

இரங்கல்கூட்டம் நடத்தப்பட்டது ஓகேஜாகுல் என்கிற பனிப்பாறைக்காக.

காலநிலை மாற்றத்தால் அழிந்த ஐஸ்லாந்தின் முதல் பனிப்பாறை இது. 2014 முதலே உருகிக்கொண்டிருந்த ஒகேஜாகுல், 2019 ஜூலை மாதம் அதீதமாக வெப்பநிலை அதிகரித்ததால் முற்றிலும் உருகி அழிந்தது. இந்த நிகழ்வை ஆவணப்படுத்தவும் எதிர்காலத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவும் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

“என்ன நடக்கிறது என்பதும் இதைத் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதற்காகவே இந்த நினைவிடத்தை அமைத்திருக்கிறோம். ஆனால் நாங்கள் அதை செய்தோமா இல்லையா என்பது உங்களுக்குத்தான் தெரியும்” என்று எதிர்காலத்தை நோக்கி வீசப்பட்ட அழுத்தமான சொற்களைத் தாங்கியபடி மேற்கு ஐஸ்லாந்தில் இந்தக் கல்வெட்டு மௌனசாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது.

ஆர்ட்டிக் பனிப்பாறைகள்

“அமேசான் காடு என்பது புவியின் நுரையீரல் என்று சொல்லப்படுகிறது. அந்த உருவகத்தோடு ஒப்பிட்டால் ஆர்ட்டிக் பகுதியை புவியின் சுற்றோட்ட அமைப்பு (Circulatory system) என்று சொல்லலாம்” என்கிறார் அறிவியலாளர் கெயில் வைட்மேன். காற்றின் சுழற்சி, கடல் நீரோட்டம், வெப்ப சுழற்சி போன்ற பல கூறுகளோடு ஆர்ட்டிக் பகுதி அழுத்தமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆர்ட்டிக் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் காலநிலையையே மாற்றியமைக்கும் ஆற்றல் மிக்கவை.

2020 செப்டம்பரில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான ஆய்வுக்கட்டுரையில், “கடந்த 12,000 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகத்தோடு ஆர்ட்டிக் க்ரீன்லாந்து பகுதியில் பனி உருகிக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கடைசியாக நிகழ்ந்த ஐஸ் ஏஜின் முடிவில் எந்த வேகத்தில் பனி உருகியதோ, அதே வேகத்தில் பனி உருகிக்கொண்டிருக்கிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். க்ரீன்லாந்து பகுதியில் உள்ள 234 பனிப்பாறைகளை முழுவதுமாக ஆராய்ந்து, கணிப்பொறியின் மூலமாக கணித மாதிரிகளை உருவாக்கி, இந்த பனிப்பாறைகளின் ஒட்டுமொத்த வரலாற்றைப் பிசிறில்லாமல் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாகவே உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆர்ட்டிக் பகுதியின் பனிப்பாறைகள் இருமடங்கு அதிக வேகத்தில் அழிந்துவருகின்றன.பனிப்பாறைகள் உருகும் வேகம் 2100ம் ஆண்டு வரை குறையாது என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கிறார்கள்.

சாதாரணமாக கோடைகாலத்தில் பனிப்பாறைகள் கொஞ்சம் உருகுவதும் அடுத்தடுத்த மழைக்காலம்/குளிர்காலம் வரும்போது அது ஈடு செய்யப்படுவதும் இயல்பு. ஆனால் இப்போது ஈடு செய்ய முடியாத அளவுக்கு வேகத்தில் பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருக்கின்றன என்பது உறுதியாகியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக Greenland Ice Sheet (GIS) என்ற ஒரு பனிப்பாறை அதிவேகத்தில் உருகிக்கொண்டிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பனிப்பாறை இது. இந்த பனிப்பாறையை “பனியாலான ஒரு ஆவண நூலகம்” என்று அழைக்கலாம். ஒரு லட்சம் வருடங்களாக உறைந்தபடியே உறங்கிக்கொண்டிருக்கும் பனி இது என்பதால், கடந்தகாலத்தைச் சேர்ந்த காலநிலை நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் இதற்குள் ஆதாரங்கள் புதைந்துகிடக்கின்றன. பல கோடி டன் எடையுள்ள இந்த பனிப்பாறை முழுவதுமாக உருகினால் உலகளாவிய கடல்நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும்! இதனால் எத்தனை கடலோர நகரங்கள் முற்றிலுமாக மூழ்க வாய்ப்பிருக்கிறது என்பதை நாமே கணக்கிட்டுக்கொள்ளலாம்.

பனிபாறைகள் உருகுவதிலும் அவை திரும்ப உறைவதிலும் Hysteresis என்கிற ஒரு அறிவியல் கருத்தாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பதால் ஒரு பனிப்பாறை உருகுகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த முறை வெப்பநிலை குறைந்து, உறைபனிக்கான வெப்பநிலை வந்துவிட்டது என்பதாலேயே உருகிய பனியெல்லாம் மறுபடியும் பாறையாக உறைந்துவிடாது. உருகுகிற வேகத்தோடு ஒப்பிடும்போது உறையும் வேகம் குறைவாகவே இருக்கும். ஆகவே குளிர்காலத்தில் வெப்பநிலை குறைவதால் மட்டுமே இந்த மாற்றத்தை நாம் சரி செய்துவிட முடியாது.


இன்னும் சொல்லப்போனால், ஏதோ ஒரு நிகழ்வால் ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கிவிட்டது என்றால், பெரிய அளவில் ஏதும் தடைகள் இல்லாவிட்டால் அது தொடர்ந்து உருகிக்கொண்டேதான் இருக்கும். இப்போது கிரீன்லாந்திலும் அதேதான் நடந்துகொண்டிருக்கிறது.

அண்டார்டிக் பனிப்பாறைகள்

ஜுலை 2017ல் உலகம் முழுவதும் உள்ள காலநிலை அறிவியலாளர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் A-68. அண்டார்ட்டிகாவில் லார்சன் சி பனிதொகுதியைச் சேர்ந்த ஒரு பனிப்பாறையின் பெயர் இது. ஒரு ட்ரில்லியன் டன் எடையுள்ள இந்த பனிப்பாறை, பனித்தொகுதியிலிருந்து பிரிந்து, உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியது. பனித்தொகுதிகளிலிருந்து பனிப்பாறைகள் இவ்வாறு உடைந்து பிரிவது Ice calving என்று அழைக்கப்படுகிறது. சாட்டிலைட் மூலமாக மேலிருந்து பனித்தொகுதிகளை கவனித்தால், பல பனிப்பாறைகளில் விரிசல்கள் காணப்படுகின்றன எனவும், இதுபோன்ற பனிப்பிளவுகள் இனிமேல் அதிகமாக நடக்கும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக இதுபோன்ற பனிப்பிளவுகள் நடந்தால் அதன் பின்விளைவு என்னவாக இருக்கும், சுற்றியுள்ள சூழலை அது எவ்வாறு பாதிக்கும் என்பதெல்லாம் தெளிவாகத் தெரியாமல் இருந்தது. செப்டம்பர் 2020ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை, பனிப்பாறைகள் உடையும்போது என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும் என்பதைப் பட்டியலிடுகிறது.

பனிப்பாறைகள் உடையும்போது, அந்த இடத்தில் கடற்படுகைகள் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அண்டார்ட்டிகாவில் உள்ள பனித்தொகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் தெற்கு கடல் பகுதிகளில் உள்ள நீரோட்டங்களையும் காலநிலை சார்ந்த சுழற்சிகளையும் பாதிக்கும் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒருவேளை அண்டார்டிக் பனித்தொகுதி முற்றிலுமாக உருகிவிட்டால், உலகிலுள்ள எல்லா கடல்களிலும் சராசரி நீர்மட்டம் 2.5 மீட்டர்கள் உயரும்! இதில் துயரம் என்னவென்றால், தற்போதையை பாரீஸ் ஒப்பந்தத்தை எல்லா நாடுகளும் பின்பற்றினால்கூட இந்த நிகழ்வைத் தடுக்க முடியாது என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் Hysteresis விளைவு இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

பாரீஸ் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதிலேயே முக்கியமான பல நாடுகள் சுணக்கம் காட்டிவரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகளை உலக நாடுகள் பொருட்படுத்துமா என்பது தெரியவில்லை.

சில கேள்விகள்

“எங்கேயோ இருக்கிற ஆர்ட்டிக் கடலிலும் அண்டார்டிக் கடலிலும் பனிப்பாறைகள் மூழ்குவதால் எனக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது?” – பனிப்பாறைகள் மூழ்குவதைப் பற்றிய விவாதங்கள் முன்னெடுக்கப்படும்போதெல்லாம் எழுப்பப்படும் கேள்வி இது. அதிலும் குறிப்பாக வெப்பமண்டல நாடுகளில் இந்தக் கேள்வி அதிகம்.

“எங்கேயோ இருக்கிற ஆர்ட்டிக்” என்பது தூரத்தைப் பொறுத்தவரை வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். ஆனால் ஆர்ட்டிக் பனிப்பாறைகளுக்கும் உலகின் காலநிலை சுழற்சிகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அண்டார்டிக் பனிப்பாறைகளும் அவ்வாறே இந்த உலகத்தோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன.

கடலுக்குக் குறுக்கே நமக்கு இலகுவாக இருக்கவேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் எல்லைகள் வகுத்திருக்கிறோம். ஆனால் எல்லா கடல்களும் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பனிப்பாறைகள் உருகி கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் அது எல்லா நாடுகளையுமே பாதிக்கும். பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளி நாம் வசித்தாலும், அண்டார்டிக் கடலில் உடைகிற பனிப்பாறையின் பாதிப்பு நம்வீட்டுக் கதவையும் ஒருநாள் தட்டும்.

“கடலின் நீர்மட்டம் அதிகரித்தால் கடலோர நகரங்களுக்கு மட்டும்தானே பாதிப்பு ஏற்படும். நான் கடலிலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறேன். எனக்கு என்ன ஆபத்து வந்துவிடும்?” – இது மற்றொரு முக்கியமான கேள்வி. கடலின் நீர்மட்டம் அதிகரிப்பது என்பது ஒரு பாதிப்பு மட்டுமே. புயல், வெள்ளம், அதீத வெப்பநிலை, வறட்சி ஆகியவையும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள்தான். கடலிலிருந்து வெகு தொலைவில் வசித்தாலும் இந்த பாதிப்புகளிலிருந்து நாம் தப்ப முடியாது. தவிர, காலநிலை சுழற்சியின் சீரழிவால் விவசாயமும் மீன்பிடித்தொழிலும் கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே நேரடியான பாதிப்புகளோடு மறைமுக பாதிப்புகளையும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

ஐஸ்லாந்தில் நடந்த இரங்கல்கூட்டம் ஒரு அடையாள நிகழ்வு மட்டுமே. நம் கண்ணுக்குத் தெரியாமல் தினசரி பனிப்பாறைகள் அழிவை நோக்கி மிதந்துகொண்டிருக்கின்றன. கடைசி வரை தனது கப்பல் மூழ்குவதையே ஒப்புக்கொள்ளாத டைட்டானிக் கேப்டனைப் போல பிடிவாதம் பிடிக்கின்றன உலக நாடுகள்.
ஜேம்ஸ் ஃப்ராங்கோவின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன…

  1. ப்ளேட் ரன்னர்.
    ஆர்மகெடான். த ரோட்.
    நான் வாழவிரும்புகிற ஒரு எதிர்காலத்தை முன்னிறுத்தி
    ஒரு திரைப்படத்தைக் கூட பார்க்கவில்லை நான்.
    ஒரு புத்தகத்தைக் கூட இதுவரை படிக்கவில்லை.

அதிர்ஷ்டவசமாக,
பூமி இறப்பதற்குள் நான் இறந்துவிடுவேன்.
ஆனாலும்கூட
கம்ப்யூட்டர் சிப்பில் சேகரிக்கப்பட்ட என் எதிர்கால சுயம்
விநோதமாக ஒலியெழுப்பி வாழ்வதற்கு
பிரகாசமான, சுத்தமான, மகிழ்ச்சியான ஒரு இடம் தேவை.

தரவுகள்:

  1. Iceland holds funeral for first glacier lost to Climate Change – The guardian, August 2019.
  2. Rate of mass loss from the Greenland Ice shsst will exceed Holocence values this century. Jason Briner et al, Nature, September 2020.
  3. Antarctic ecosystem responses following ice-shelf collapse and iceberg calving: Science review and future research. Jeroen Ingels et al, WIREs Climate Change, September 2020.
  4. The hysteresis of the Antarctic Ice sheet. Julius Garbe et al, Nature, September 2020.

***

நாராயணி சுப்ரமணியன்: கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: [email protected]

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular