பூனைகள் இல்லா நகரம்

6

அருண்.மோ

எங்கள் பூனை இறந்துவிட்டது. இறந்துவிட்டது என்று உங்களிடம் சொல்கிறேன், ஆனால் உண்மையில் நான் அதனை கொன்றுவிட்டேன். எங்கள் மகளும் இறந்துவிட்டாள், அவள் இறந்துவிட்டாளா, அல்லது கொல்லப்பட்டாளா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அவள் உயிரோடும் இருக்கலாம்.

நகரில் இருந்து தனித்து விடப்பட்ட, பாழடைந்த சாலையின் வெகு தொலைவில் அமைந்த ஐம்பது வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. சாலையில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால் இதற்கு தொலைநகரம் என்றே பெயருமிட்டிருந்தார்கள். நான் குடியிருப்பது மூன்றடுக்கு வீடு என்றுதான் நினைக்கிறேன். சரியாக நினைவில் இல்லை, நினைவில் வைத்திருக்கும் அளவிற்கு எனக்கு அது இப்போது முக்கியமுமில்லை. ஆனால் அங்குதான் நாங்கள் வசிக்கிறோம். இங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. மின்சாரம் நின்றுவிட்ட சில நாட்களில் அரசு தரப்பில் இருந்து ஒருவர் வந்து எங்கள் வீட்டை வெளியில் பூட்டி சாவியை எடுத்து சென்றுவிட்டார்.

ஏன், என்ன ஆனது என்று எதுவும் எங்களுக்கு சொல்லப்படவில்லை. அரசு உத்தரவு என்று மட்டுமே சொல்லப்பட்டது. சொல்லப்போனால் பூட்டியவருக்கே ஏன் இதனைச் செய்கிறோம் என்பது தெரியுமா என்று தெரியாது. தெரியா விட்டாலும் அவர் அதை செய்துதான் ஆகவேண்டும். அவர் அரசின் கைக்கூலி. அரசு சொல்வதை செய்வதைத் தவிர அவருக்கு வேறு போக்கிடமில்லை. எங்கள் வீட்டைத் தவிர அந்த நகரில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பூட்டுப் போட்டார்களா என்று தெரியாது. ஆனால் எங்கள் வீடு பூட்டப்பட்டிருந்தது. வீடு பூட்டப்பட்ட முதல் நாளில் இருந்து ஒரு வாரம் வரை வீட்டில் இருந்த பொருட்களை வைத்து நாங்களே உணவு தயார் செய்து கொண்டோம்.

அடுத்த சில நாட்கள் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எங்கள் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு விடும். அவை எங்களுக்கு பிடித்தமானவையா, அல்லது எங்களுக்குத் தேவையானவையா என்பதை அவர்களே முடிவு செய்திருந்தார்கள். நாங்கள் தினந்தோறும் கறி சமைத்துப் பழக்கப்பட்டவர்கள், ஆனால் கறி உண்ண தடை செய்யப்பட்டிருந்தது என்றார் உணவளிக்க வந்தவர். நான் பூட்டை உடைத்து வெளியே வருவேன் என்று எச்சரித்தேன், இப்படி பூட்டை உடைத்து வெளியே வந்தவர் இறந்துவிட்டார், அங்கே பாருங்கள் என்று இரண்டு வீடுகள் தள்ளியிருந்த தனித்த ஒரு வீட்டினைக் காட்டினார். ஆம்புலன்ஸ் அங்கிருந்து சப்தம் எழுப்பாமல் சென்று கொண்டிருந்தது. என்ன நடந்தது என்று ஆர்வமாகக்  கேட்டேன், வெளியே வந்தால் இறப்பீர்கள், அவ்வளவுதான் வேறொன்றும் சொல்வதற்கில்லை என்றார். குட்டையானவர், முட்டை வடிவ கண்கள், கையில் எப்போதும் பேனாவும், குறிப்பேடும் வைத்திருப்பார். நாளையில் இருந்து நீங்கள் என்னிடம் எதுவும் பேசக்கூடாது, பேசினால் விளைவு விபரீதமாகும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.


அடுத்த இரண்டு வாரங்கள் அவர்களே உணவை சமைத்து வைத்திருந்தார்கள். அந்த சமைக்கப்பட்ட உணவு எனக்கும், மனைவிக்கும், என் இரண்டு மகள்களுக்கும் போதுமானதாக இல்லை. என்றாலும் எங்கள் வீட்டில் இருந்த பூனைக்கும் அதில் பங்களித்தோம். எங்கள் பூனை மற்ற சாதாரண பூனைகளைக் காட்டிலும் விசித்திரமானது. அது மெய்னீ கூன் இனத்தைச் சார்ந்தது. நன்றாக கொழுத்த பூனை, பனிரெண்டு கிலோவிற்கும் மேல் அதன் எடை இருக்கலாம். எனது மூத்த மகள் எடுத்துக்கொள்ளும் அதே அளவு உணவை எங்கள் பூனையும் எடுத்துக் கொண்டது என்பது எங்களுக்கு இப்போது பெரும் கவலையளிக்கக்கூடிய விஷயமாக மாறிக் கொண்டிருந்தது.


நான்காவது வாரம், சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவின் அளவுகள் குறைந்தது. வீட்டில் தண்ணீர் இருப்பும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. என் மனைவி தன்னுடைய பங்கை என் இளைய மகளுக்கு விட்டுக் கொடுத்தாள். நான் என்னுடைய பங்கை எங்கள் பூனைக்கு விட்டுக் கொடுத்தேன். பூனை தன்னுடைய உணவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அடுத்த சில நாட்கள் அளவுகள் குறைந்து கொண்டே சென்றன. யாரும் யாருடைய பங்கையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கும் உடல்நிலையில் இல்லை. சில நாட்கள் வெளியே உணவு வைக்கப்பட்டிருக்காது. அடுத்த சில நாட்கள் குறைவான அளவு உணவு வைக்கப்பட்டிருக்கும். எங்கள் ஒவ்வொருவருக்கும் உடலாற்றல் குறைந்து கொண்டே வந்தது. பேசி மகிழ்வது ஒன்று மட்டுமே ஆறுதலாக இருந்த நிலை மாறி, ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், இருக்கிற ஆற்றலை பாதுகாத்துக் கொள்வோம் என்கிற நிலைக்கு மாறிவிட்டோம். நாற்பத்தைந்து நாட்கள் ஆகியும் பூட்டு கழற்றப்படவில்லை.

சில நாட்கள் தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தோம். தண்ணீர் மீதே வெறுப்பு வரும் வரை தண்ணீர் பருகியிருக்கிறோம் என்பதை அறிந்து கொண்ட இரவில் தண்ணீரும் தீர்ந்து போனது. இப்போது நாங்கள் பெரும்பசியில் இருக்கிறோம். பசியில் இருக்கிறோம் என்று சொல்வதன் மூலம் உங்களுக்கு பசியை உணர்த்திவிட முடியாது. பசியை பசி ஏற்பட்டுத்தான் உணர முடியும். முதுகு எது, வயிறு எது என்று தெரியாதவண்ணம் இரண்டும் ஒட்டிப்போய் விட்டது. எங்கள் வீட்டில் பூச்சிகள் இல்லை என்பதை இந்த பெரும்பசிதான் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறது. பூச்சிகள் இருந்திருந்தால் பசியில் இருந்து கொஞ்சம் ஆறுதல் கிடைத்திருக்கக்கூடும்.

எங்கள் வீட்டின் சமையல் அறையில் எப்போதும் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சியோ, ஊர்ந்து செல்லும் எறும்புகளோ இப்போதெல்லாம் வருவதே இல்லை. அவைகளுக்கு வேறெங்காவது உணவு கிடைத்திருக்கக்கூடுமோ என்று நாங்கள் ஆச்சர்யப்பட்டோம். திடீரென ஒருநாள் என் இளையமகள் உடலில் இருந்து உடைகள் தானே கழன்று விழுந்தது. உடையை பிடித்துக்கொள்ள அவளிடம் சதைப்பற்று இல்லை. கைகளை வைத்து பிடித்துக்கொள்ள அவளிடம் போதுமான ஆற்றலும் இல்லை. அவள் பூனை போல் சுருண்டு படுத்திருந்தாள், எனில் பூனை எப்படி படுத்திருந்தது என்பதை நான் சொல்ல வேண்டிய தேவையில்லை. மெய்னீ கூன் வகை பூனை இப்போது சாதாரண வீட்டுப்பூனையை விட மெலிந்திருந்தது. குருவிகளில் சிட்டுக்குருவி எப்படி இருக்குமோ, அப்படி இந்த பூனை சுருங்கிப்போய் இருந்ததால், என் மகள்கள் இருவரும் இதனை சிட்டுப்பூனை என்று அழைத்தார்கள்.

ஆனால் இதனை ரசிக்கும் நிலையில் பூனையில்லை. அதன் கண்களில் ஒளியில்லை. கன்னங்களில் பெரும் குழியுண்டானது. அதன் வயிறு ஒட்டிப்போனது. அதன் வாயசைந்தது, ஆனால் சப்தம் எழவில்லை.

என் மனைவியால் தரையில் உட்கார முடியவில்லை. தரையில் மட்டுமல்ல, என் வீட்டில் பாழடைந்த சோபா ஒன்றும் இருக்கிறது, அதில் கூட அவளால் உட்கார முடியவில்லை. அந்த சோபாவில் குஷன் பகுதிகள் இற்றுப்போய் கட்டைப்பகுதிகள் மட்டுமே இருந்தது. என் மனைவியும் இப்போது அந்த சோபா போலவே இருந்தாள், அவள் எலும்புகள் அவளைக் குத்திற்று. ஏதோ வெளியில் இருந்து ஆணியோ மரக்கட்டைகளோ குத்தியதுபோல் அதனை தூக்கி தூர வீச நினைத்து கைகளைப் பார்த்துவிட்டு, அய்யய்யோ என்னோட எலும்பு என்று அதிர்ச்சியாவாள்.

அடுத்தடுத்த நாட்களில் இனி உணவு வரும் என்கிற நம்பிக்கையை இழந்திருந்தோம். எங்கள் உணவை நாங்கள் தேடியாக வேண்டும். வீட்டுக்குள் இருந்த நாட்களில் என்ன கிழமை என்ன திகதி என்பதை மறந்திருந்தது போல, சமயத்தில் எங்கள் பெயரையும் மறந்திருந்தோம். உணவு வேண்டும் கடவுளே என்று என் மனைவி இறைவனை கெஞ்சினாள். ஆம் நாம் எந்த கடவுளிடம் உணவு கேட்க வேண்டும், நாம் என்ன மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவளிடம் கேட்டேன். அவளும் அதனை மறந்திருந்தாள். எங்கள் முன்னோர்களுக்கு பரலோகத்தில் இருக்கும் பிதா உணவளித்தாக பைபிளில் சொல்லியிருந்ததால் நாங்கள் இயேசுவை ரட்சிப்பவர்களாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டேன்.


பிதாவே, “வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது, என்மேல் விசுவாசம் வைக்கிறவனுக்கு தாகமே எடுக்காது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னபடி, நீங்கள் என்னைப் பார்த்தும் நம்பாமல் இருக்கிறீர்கள், என்னுடைய விருப்பத்தின்படி செய்வதற்காக அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்வதற்காகத்தான் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கிறேன். என் தந்தை எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் இழந்து போகாமல், கடைசி நாளில் அவர்கள் எல்லாரையும் நான் உயிரோடு எழுப்ப வேண்டும் என்பது என்னை அனுப்பியவருடைய விருப்பம்.

அதோடு, மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதும் என் தகப்பனின் விருப்பம்”, என்று யோவானில் நீங்கள் சொன்னதை நாங்கள் அப்படியே நம்பினோமே, பசியெடுக்காது என்று சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு பசிக்கிறது. தாகம் எடுக்காது என்று சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு தாகமும் எடுக்கிறது. நாங்கள் உங்கள் மேல் விசுவாசமாக இருந்தோமே, ஏன் எங்களை கைவிட்டீர் என்று இயேசுவை நோக்கி என் மூத்த மகள் இறைஞ்சிக் கொண்டிருந்தாள். ஆற்றலற்ற அந்த உடலில் இருந்த கொஞ்சம் ஆற்றலையும் அவள் அந்த ஜெபத்தில் வீணாக்கி விட்டாள். இப்போது மூர்ச்சையாகி கிடக்கிறாள்.

என் மனைவி அவளை ஆற்றுப்படுத்தும் விதமாக அருகில் உட்கார்ந்து கொண்டு, கிருஷ்ணா இதெல்லாம் உன்னுடைய லீலையா என்று மேல்நோக்கி பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். சாமம் கழிந்த, சுவை அற்ற, ஊசிப்போன, பழைய எச்சில் செய்யப்பட்ட, மற்றும் தூய்மை அற்றது எல்லாம் தாமச உணவு என்று கீதையில் சொன்னீர்களே, இப்போது எங்களுக்கு அந்த தாமச உணவையாவது கொடுங்கள். எங்களுக்கு பசு இறைச்சி வேண்டாம், ஒரு பூச்சியாவது கொடுங்கள் என்று கிருஷ்ணரை வேண்டிக் கொண்டிருந்தாள், என் நினைவுகள் சரியில்லை போலும், நாங்கள் இந்துக்களாகத்தான் இருந்திருக்கிறோம். ஆனால் எனக்கு சட்டென நபிகள் நாயகத்தின் ஸூரத்துல் மாயிதா வசனங்கள் நினைவுக்கு வந்தன. முஃமின்களே! நீங்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு உணவிற்காக, ஆகுமாக்கப்பட்டுள்ளன.

ஆம் இறைவன் எத்துணை பெரியவன். என் முன்னே இப்போது நாலுகால் பிராணி ஒன்று இருக்கிறது. நான் இந்துவோ, கிறித்தவனோ, முஸ்லிமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு இப்போது பசிக்கிறது. அதற்கு உணவு வேண்டும். அதுவே எனக்கு பிரதானம். என்னைப்போல இந்த பூனைக்கும் நபிகள் நாயகம், உன் முன் இரண்டு கால் மனிதன் ஒருவன் இருப்பான் என்று ஓதியிருந்தால் என்ன செய்வது என்கிற அச்சம் ஒருபக்கம் இருந்தாலும், பலம் உள்ளவன் பலமற்றவனை வெல்லட்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆம் எனக்கு இப்போது உணவு தேவை. அதற்கு அந்த பூனைதான் ஒரே  வழி.


மயக்கத்தில் இருந்து எழுந்த என் மூத்த மகள் மொத்த உடலையும் இழுத்துக்கொண்டே மேலேறிச் சென்றாள். பூனையைப்போல என் இளைய மகளும் அவள் பின்னே சென்றாள். என் மூத்த மகள் மேலே இருந்து குதித்து இறந்துவிட்டதாக இளையமகள் சொல்லித்தான் தெரிந்தது. நல்லவேளையாக நான் தப்பித்துக் கொண்டேன் என்று அவள் சொல்லியதை நாங்கள் இருவரும் பெரிதாக ரசிக்கவில்லை. பூனையை கொன்றால் இரண்டு பேருக்கு உணவு கிடைக்கலாம், அவளுக்கும் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டதே என்ன செய்வது என்று கலங்கிப் போயிருந்தோம். மகள் இறந்து விட்டாளா, நாங்கள் கொன்று விட்டோமா, அல்லது அரசு அவளை கொன்றதா என்பதை யோசிக்கும் அளவிற்கு எங்கள் மூளைக்கு ஆற்றல் இல்லை. எங்கள் மூளை இப்போதைக்கு எங்களுக்கிடும் ஒரே கட்டளை, பூனையைக்கொல், பசியைத்தீர்.

பூனை கண்களை மூடி வாயைத் திறந்து. அனேகமாக அது மியாவ் என்று சொல்லியிருக்கலாம். நான் என் மனைவியைப் பார்த்தேன், அவள் சேலையை கழற்றி தூர வீசியிருந்தாள், சேலையின் கனத்தை தாங்கும் சக்தியை அவளது எலும்புகள் இழந்திருந்தன. இளைய மகள் எதிரில் ஒடுங்கிப்போய் படுத்திருந்தாள். அவள் இப்போது ஒரு மனித குழந்தை போல் இல்லை. கால்களை மடக்கி அதன் மேல் படுத்திருந்த ஒரு எலும்புக்கூடு போல் இருந்தாள். இந்தப் பூனையை எப்படிக் கொல்வது என்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தோம். பூனையின் முன்னங்கால்கள் மிதக்கும் விலா எலும்புகளால் ஆனவை. அவற்றின் தலை நுழையும் அளவிற்கு இடமிருந்தால் போதும், அவற்றால் எத்தனை சிறிய துளையிலும் அதன் மொத்த உடலையும்  நுழைத்துவிட முடியும்.

வீட்டில் துளைகள் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தோம், துளைகள் இருந்தால்தான் அது எப்போதோ உணவைத் தேடிப்   போயிருக்குமே என்று இளையமகள் முனகினாள். அவள் மூளை அப்பேற்பட்ட பசிக்கொடுமையிலும் வேலை செய்வது கண்டு நாங்கள் திடுக்கிட்டோம். இப்போதைக்கு பெருமைப்பட எதுவுமில்லை. நாம் வாழ்வதே முக்கியமானது. அதற்கு அவள் மூளையின் சிந்திக்கும் திறன் தொந்தரவாக இருந்தால் என்ன செய்வது என்றுதான் யோசித்தேன். சரி பூனை தப்பிக்க முடியாது, ஆனால் எதிர் தாக்குதலில் ஈடுபடலாம், பூனை கழுத்து, அல்லது முதுகின் தண்டுவடத்தில் முன்னிரண்டு கோரைப்பற்களால் கடித்து நம்மை கொன்றுவிடும் அளவுக்கு ஆற்றல் பெற்றவை என்று படித்திருக்கிறேன். நம்மை வாசம் பிடிக்கும் சக்தி பூனைக்குண்டு. இப்போது நாங்கள் எங்களுக்கு எதிரில் உள்ள பூனையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


பூனை கண்களை மூடிக்கொண்டு சோபாவில் அமர்ந்திருக்கிறது. இளைய மகள் கீழே சுருண்டு கிடக்கிறாள். பூனையை தாக்கும் ஆயுதம் எதையும் பிடிக்கும் அளவிற்கு கைகளில் தெம்பு இல்லை, பூனையை விட்டு எங்கள் பார்வை அகலவில்லை. நான் மெதுவாக இடப்பக்கம் நகர முயற்சி செய்கிறேன், மனைவி அப்படியே வலப்பக்கமாக படுத்துக்கொண்டே உருண்டு சென்றாள். பூனைக்கும் எங்களுக்கும் வித்தியாசம் நாங்கள் ஐந்தடிக்கு மேல் வளர்ந்து இருக்கிறோம், பூனை இரண்டு கால்களில் நின்றால் கூட மூன்றடி தேறாது.

எங்கள் உயரம் மட்டுமே பூனையிடம் இருந்து எங்களை வித்தியாசப்படுத்திக் காட்டியது. உயரம் இல்லையென்றால் பூனை இந்நேரம் எங்களை அடித்துக்கொன்று தின்று செரித்திருக்கும். நான் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கையில், பூனை கண்களைத் திறந்தது. அது கண்களை பெரிதாக்கி சப்தமிட்டது. இப்போது அந்த மியாவ் ஒலி என் காதுகளுக்கு கேட்டுவிட்டது. அது எங்களை விட கோரப்பசியில் இருக்கிறது. நான் நகராமல் அதே இடத்தில் குத்திட்டு நின்றேன். மனைவியின் கண்கள் சொருகியது. பூனையின் பற்களை போல என் விரல்களின் எலும்புகள் நீண்டிருந்தது. பூனை தாவி வந்தால் அதனை விரல்களால் குத்திக் கொன்றுவிட வேண்டும் என்று நினைத்து விரல்களை ஆயத்தப்படுத்திக் கொண்டேன். பசி தீர எதையும் செய்வேன். பூனையும் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்கிற சிறு ஜாக்கிரதை உணர்வு அப்போதும் மூளைக்குள் குடிகொண்டிருந்தது.

நாக்கை கடித்துத் தின்னலாம் போல் இருந்தது, நாக்கு கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று கொண்டிருந்தது. ஒரு வேளை, உடல் தன்னை உயிர்த்திருக்கச் செய்ய, தன் உறுப்புகளைத் தின்றுவிடுமோ என்றுகூட அச்சப்பட்டேன். பூனை சோபாவில் இருந்து எகிறி குதித்தது. லேசாக நகரத் தொடங்கியது. நான் பூனை நகரும் திசைக்கு எதிர் திசையில் மெதுவாக நகர்ந்தேன். இப்போது பூனையின் கண்கள் என் மீதிருந்தது. அது கண்களை மூடவில்லை. அதன் மீசைகள் மீது மெல்லிய சூரியஒளி பட்டு, நெருப்பில் தீட்டப்பட்ட இரும்பு போல் காட்சியளித்தது. பழுப்பேறிய கண்கள், வெறியேறிய பார்வை என பூனை என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தது. எனக்குள் எப்போது பயம் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் பூனை ஒரு மல்யுத்த வீரன் போல என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டது. இப்போதுதான் என்னுடைய உயரம் எனக்குப் பிரச்சினையாக இருந்தது. பூனை அதன் உயரத்திற்கு தாவி என்னைக் கவ்விவிடும், ஆனால் தாவிப்பிடிக்கும் அளவிற்கு எனக்கு பயிற்சி இல்லை. என் உயரம் அதை அனுமதிக்கவும் செய்யாது.


மெதுவாக நகர்ந்த பூனை அதே இடத்தில் நின்றது. முன்பற்களைக் காட்டி என்னை மேலும் பயமுறுத்தியது. எனக்கும் அதற்கும் ஆறடி தொலைவுதான் இருக்கும். இடையில் என் இளைய மகள் படுத்திருந்தாள். ஒருவேளை இந்தப் பூனையை கொன்று தின்றால் அந்த ஆற்றலை வைத்துக்கொண்டு மேலேறிச் சென்று தற்கொலை செய்து கொள்வதுதான் என் எண்ணம், இந்தப் பூனையை விட்டால், இனி வேறொரு பூனைக்கு நான் எங்கே போவேன், பசியால் அந்த வலியால் சாவதை விட, கறியைத் தின்று, சந்தோசமாக மடிவோம் என்றுதான் மனதுக்குள் நினைத்திருந்தேன். இனி திட்டமிடவோ, பதுங்கவோ நேரமில்லை, உடலில் வலுவுமில்லை. தாமதப்படுத்தும் ஒவ்வொரு நொடியும், பூனை என்னை நோக்கி முன்னேறி வருகிறது. எனக்காவது தற்கொலை செய்துகொள்ளத் தெரியும், பூனையைத் தின்று ஆற்றலை வைத்துக்கொண்டு மேலேறிச் சென்று நான் தற்கொலை செய்துகொள்வேன்.

 ஆனால் பூனைக்கு தற்கொலை செய்துகொள்ளத் தெரியாதே. அது என்னைத் தின்று, இன்னும் எத்துணை நாள் ஜீவித்திருக்கும். உணவில்லாமல் அது வாழ்வதை விட, எனக்கு உணவாவதே மேல் என்று எண்ணிக்கொண்டு, மொத்த பலத்தையும் திரட்டி அதன் மேல் பாய்ந்தேன். குலை நடுங்கும் சப்தம் ஒன்று கேட்டது. அந்தக் குரல் பூனையின் குரல் அல்ல, அது என் இளைய மகளின் குரல். பூனை அவளின் கழுத்தை முன்னிரண்டு பற்களால் கடித்துக் கொண்டிருந்தது.

இதோ இதுதான் என் மொத்த பலம் எனப் பாய்ந்து அதன் வாயை இரண்டு கைகளால் பிடித்து முடிந்தவரை இழுத்தேன். அதன் பற்கள் என் விரல் எலும்புகள் மேல் பட்டு உயிர்போகும் வலியை ஏற்படுத்தியது. பிடியை விடாமல் அதன் குரல்வளையைக் கடித்து தலையைப் பிய்த்து எடுத்தேன்.

ரத்தம் பீறிட்டு வெளி வந்தது. மகள் இறந்து கிடந்தாள். மனைவி பூனை இறந்ததைக்கண்டு அதன் கறியைச் சாப்பிட அசைய முற்பட்டாள், நெஞ்சில் இருந்து வாய்க்கு ஒரு குரல் எழும்பி வருமுன்னே தொப்பென விழுந்தாள். இப்போது பூனைக்கறி எனக்கு மட்டுமே. அதைக் கறி என்று சொல்லமுடியாது. அதன் எலும்புகளில் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சமான சதைகளை பிய்த்து எடுத்துத் தின்றேன்.


மேலேறிச் செல்லும் ஆற்றல் கிடைத்தது. தற்கொலை செய்துகொள்ள ஒவ்வொரு படியாகக் கடந்து மேலேறி சென்றேன், அங்கே எனக்கு முன்பாக பத்திருபது பூனைகள் வரிசையில் காத்துக் கொண்டிருந்தன.

***

அருண் மோ

மாற்று திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டுடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்துகிறார்.  அநீதிக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. தொடர்புக்கு – [email protected]

6 COMMENTS

  1. பசியின் கொடூரத்தை வலியால் உணர்த்தும் கதை அருமை வாழ்த்துக்கள் சார்

  2. அபாரம் அருன்…. இது போல் நடந்து விடுமோ வரும் நாட்கள்…..

  3. கதை முயற்சிக்கு பாராட்டுகள். மொழி நடை நல்லா வந்திருக்கிறது.உள்ளடக்கம் கதை நகர்வு சுவாரசியமாக நகர்கிறது. இன்னும் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.

  4. கொரோனா காலம் பல்லாயிரக்கணக்கான மக்களை பசியால் அலையவைத்துள்ள சூழலில் இந்த கதை பசியின் குரூரத்தை பதிவு செய்துள்ளது.

  5. பசியின் கடுமையை வார்த்தைகளிலேயே உணர முடிந்தது நன்றி, வாழ்த்துக்கள்.

  6. பசியின் கொடுமையை வார்த்தைகளிலேயே உணர முடிந்தது நன்றி, வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here