பலஸ்தீனம்: இஸ்ரேலின் நிலப்பறிப்பும் அமெரிக்கத் தீர்வுத் திட்டமும்

ரூபன் சிவராஜா

கொரோனா நெருக்கடி முழு உலகையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்திகள் நெகிழ்வுப் போக்கிற்குரிய அணுகுமுறை மாற்றங்களுக்குத் தயாரில்லை. பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நிலங்களைப் பலவந்தமாக தனதாக்கிக் கொள்ளும் இஸ்ரேலின் சமகால முனைப்பு அதனையே வெளிப்படுத்துகின்றது. ஐ.ந-வும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா தவிர்த்த உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இந்த முனைப்பினைச் சட்ட விரோதமெனக் கண்டிக்கின்றன. இருப்பினும் இஸ்ரேலின் கடும்போக்கிற்கு அமெரிக்கா வழமை போல முண்டுகொடுக்கின்றது. வழமை போல என்பதற்கு மேலாக டிரம்ப் நிர்வாகம் பிரத்யேகமாக இஸ்ரேலின் நிலப்பறிப்பு அரசியலுக்கு துணை நிற்கின்றது எனலாம். இந்த ஆண்டின் (2020) ஆரம்பத்தில் இஸ்ரேலின் பங்களிப்புடன் அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப் வெளியிட்ட இஸ்ரேல்-பலஸ்தீன சமாதானத் தீர்வுத்திட்ட முன்மொழிவில் இதற்கான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. பலஸ்தீனத் தரப்பின் பங்கேற்பு முற்றிலும் இல்லாமல் உருவாக்கப்பட்ட சமாதான வரைபு அதுவாகும். அதாவது இன முரண்பாட்டில் தொடர்புப்பட்ட இரு தரப்பில், ஒரு தரப்பு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு தீர்வுத்திட்டம் வரையப்பட்டுள்ளது.

மேற்குக்கரையில் யூதக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் ஆங்கிலத்தில் ‘Annexation’ எனச் சுட்டப்படுகின்றது. அரசியல் அர்த்தத்திலும் நடைமுறையிலும் இதன் பொருள் தனது இறைமைக்கு அப்பாற்பட்ட இன்னொரு தேசத்தின் ஆட்புலத்தை (Territory) பலவந்தமாக இணைப்பதைக் குறிக்கின்றது. அடிப்படையில் இதுவொரு அப்பட்டமான இறைமை மீறல். சர்வதேச சட்ட மீறலுமாகும். உக்ரைனில் இருந்து கிறேமியா குடாவினை (Crimean Peninsula) 2014-ல் இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் ரஸ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதை மேற்குக்கரை தொடர்பான இஸ்ரேலின் இன்றைய முனைப்புடன் ஒப்பிடமுடியும்.

இந்த வலுக்கட்டாய இணைப்பினைத் தடுக்கும் நோக்கில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தயாரென பலஸ்தீனத் தன்னாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2014-க்கு பின்னர் இரு தரப்பிற்குமிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் நின்று போயிருந்தன.

“பலஸ்தீனிய பிரதேசத்தின் எந்தவொரு பகுதியையும் இணைப்பதாக இஸ்ரேல் பிரகடனப்படுத்துமானால், இஸ்ரேலுடன் இதுவரை கையெழுத்திடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளிலிருந்தும் விலகுவதாக அர்த்தப்படும்;” என பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகம் ஐ.நா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.  ‘பலஸ்தீனர்களைக் காட்டிலும் வேறெந்தத் தரப்பிற்கும் சமாதானத் தீர்வினை எட்டுவதில் அதிக அக்கறை இருக்க முடியாது. அதேபோல் சமாதானம் எட்டப்படாத நிலையில் பலஸ்தீனியர்களைப் போல் இழப்பு வேறெவருக்கும் இருக்கப் போவதில்லை’ என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல் தெரிவித்திருந்தது.

பலஸ்தீனர்களின் செய்வதறியாத விரக்தி நிலை, அரேபிய எதிர்ப்பு, சர்வதேசக் கண்டனங்களைப் புறந்தள்ளி இணைப்பு விடயத்தில் இஸ்ரேல் கடும்போக்குக் காட்டுகின்றது. அதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையின் முக்கிய மூன்று முந்நாள் உறுப்பினர்கள் மேற்குக்கரை இணைப்பு ஆபத்தான முடிவென எச்சரித்துள்ளனர். எகிப்த், ஜோர்டான் நாடுகளுடனான இஸ்ரேலின் சமாதான ஒப்பந்தங்களை இந்த இணைப்புப் பாதிக்கும் என்பது அவர்களுடைய வாதம். அத்தோடு வளைகுடாவின் இஸ்ரேல் நட்பு சக்திகளைக் கோபமூட்டுவதோடு பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தினைக் குறைமதிப்புச் செய்வதோடு, இஸ்ரேலின் ஜனநாயகத்தின் மீது கேள்வியெழுப்பும் நடவடிக்கை எனவும் அவர்கள் எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்று நீட்சியில் நடந்தேறிய நிகழ்வுகள் பலஸ்தீனர்களுக்கு எதிராக இருந்து வந்திருக்கின்றன. 70 ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைக்கெதிரான போராட்டம், 30 ஆண்டுகளுக்கு மேலான இறுதித் தரிப்பிடம் சேராத சமாதான முயற்சிகள், நிலப்பறிப்பு, ஒடுக்குமுறை, படுகொலைகள் எனப் பாரிய அவலங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களாக அவர்கள் உள்ளனர். பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகம் அதிகாரமற்ற கட்டமைப்பாக இருக்கின்றது. இஸ்ரேல் வரலாற்று ரீதியாக பலமான அதிகார மையமாக இருந்து வந்திருக்கின்றது. யூத தேசியவாதம் கூர்மை மிக்கதாகவும் பிராந்தியத்தில் பலம் பொருந்தியதாகவும் உலக வல்லரசான அமெரிக்காவின் ஆதரவுப் பின்புலத்தினைத் தக்க வைத்ததாகவும் இருந்து வருகின்றது. பலஸ்தீனர்கள் மீதான உலக ஆதரவு என்பது தார்மீக அடிப்படையிலானதும், செயல் அழுத்தங்களுக்கு வழிகோலாத அனுதாப அலைகளுமாகவே நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன.

நடைமுறை அர்த்தத்தில் இந்த இணைப்புத் திட்டம் ஜோர்டன் பள்ளத்தாக்கு (Jordan valley) உட்பட்ட மூன்றில் ஒருபகுதி மேற்குக்கரைப் பிரதேசங்களைப் பற்றியது. ‘யூத நிலத்தின் மீது யூத இறைமையை நிலைநாட்டுதல்’ என்ற கோஷத்துடன் இஸ்ரேல் களமிறங்குகிறது. யூத தேசம் (Nation) பிறந்து வளர்ந்த நிலப்பகுதிகள் அவை என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதத்திற்கும் கோஷத்திற்குமான அடிப்படை என்பது, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் கோட்பாடு சார்ந்தது. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டின் பிறப்பிடம் அவர்களது மதம். தமக்காக இறைவனால் “வாக்களிக்கப்பட்ட பூமி”  (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என்பதே அவர்களின் அந்தக் கோட்பாட்டு வியாக்கியானம். சிங்களவர்கள் மத்தியிலும் இதையொத்த கோட்பாட்டு வியாக்கியானம் உள்ளது.

பௌத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற மஹாவம்ச நம்பிக்கை பெரும்பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் வேரூன்ற வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடு நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் அரசியல் நிகழ்வுகளையும், ஆக்கிரமிப்புப் போர்களையும், சமாதான முன்னெடுப்புகளையும் கொண்டது. இவை பற்றி முன்னர் பல கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். இருப்பினும் தற்போது பேசுபொருளாகி இருக்கும் மேற்குக்கரை ஆக்கிரமிக்கப்பட்ட பின்னணி, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுவது அவசியம். சமகாலத்தைப் புரிந்து கொள்ள உதவும். 1967இல் (05.06.1967 – 10.06.1967) சிரியா, ஜோர்டான், எகிப்த் ஆகிய அரபு நாடுகள் மீது இஸ்ரேல் நடாத்திய போர் ஆறு நாள் போர் என அழைக்கப்படுகின்றது. இந்தப் போரில் எகிப்த், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளிடமிருந்து பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சினாய் குடா மற்றும் காசா ஆகியன எகிப்திடமிருந்தும், கிழக்கு ஜெருசலோம் மற்றும் மேற்குக்கரை ஜோர்டானிடமிருந்தும், கோலான் குன்றுகளை (Golan Heights) சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் கைப்பற்றியது.

1979-ல் இஸ்ரேல் – எகிப்த் இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்கு அமைய சினாய் குடாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறியது. 1993-ன் ஒஸ்லோ உடன்படிக்கையின் விளைவாக மேற்குக் கரையின் 18 வீதமான நிலப்பரப்பின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாட்டு உரிமையைப் பலஸ்தீனத் தரப்பு மீளப்பெற்றது. இருந்தபோதும்  இப்பிரதேசங்களில் இஸ்ரேல் படைகளின் பிரசன்னம் தொடர்ந்து இருந்து வருகிறது. மட்டுமல்லாது பிரதேசத்திற்கான உள்நுழைவு, வெளிச்செல்லல் சார்ந்த அனுமதிகளையும் இஸ்ரேல் படையினரே தீர்மானிக்கின்றனர். மேற்குக்கரையின் பெரும்பகுதி நீர்வள மற்றும் உட்கட்டுமான முகாமைத்துவம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து  வருகின்றன. 2005 வாக்கில் காசாவிலிருந்து யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டன. ஆயினும் காசா மீது பல தடவைகள் இராணுவ ஆக்கிரமிப்பினை இஸ்ரேல் மேற்கொண்டிருந்தது. காசாவிலிருந்து யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை அடுத்து 2007-ல் ஹமாஸ் அமைப்பு காசாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2006, 2008-2009, 2012, 2014 எனப் பல தடவைகள் காசா மீது இஸ்ரேல் படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போர் என்ற பிரகடனத்துடன் இஸ்ரேல் படையெடுப்புகளைச் செய்தது.

மேற்குக்கரை மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் சட்ட விரோதமானது என ஐ.நா பல தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தி வந்ததோடு முழு அளவிலான வெளியேற்றத்தையும் கோரி வந்துள்ளது. ஆயினும் ஐ.நாவின் உந்தத் தீர்மானங்களுக்கும் இஸ்ரேல் மதிப்புக் கொடுக்கவில்லை. ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலைக் காப்பாற்றி வந்திருக்கிறது அமெரிக்கா.

240 வரையான குடியேற்றத் திட்டங்களில், எட்டு லட்சம் வரையிலான யூதர்கள் கிழக்கு ஜெருசலோம் உட்பட மேற்குக்கரையில் வசித்து வருகின்றனர்.

பலஸ்தீனப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட யூதக் குடியேற்றங்கள், ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு (Geneva Conventions) முரணானவை. இதற்கு ஆதாரம் ஜெனிவா உடன்படிக்கையின் ‘49 ஆவது அலகு’: ‘ஒரு ஆக்கிரமிப்பு சக்தி, தான் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்திய இன்னொரு ஆட்புலத்திற்கு, தனது சொந்த மக்களின் ஒரு பகுதியை நாடு கடத்தவோ அல்லது இடம்பெயர வைக்கவோ முடியாது’. அத்தோடு ‘பாதுகாப்பு அவசியப்படுகின்ற தனிநபர் அல்லது மக்கள் திரள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதையும் நாடு கடத்தப்படுவதையும் இந்தத் தீர்மானம் தடை செய்கிறது.’

குடியேற்றங்களும் புறக்காவல் நிலையங்களும் சட்ட விரோதமானவை என்றும் அத்தகைய பிரதேசங்களில் அனைத்துவகைக் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இறுதியாக டிசம்பர் 2016 ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.  2017-ல் இஸ்ரேல் நாடாளுமன்றம், சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்ததனிகர் Michelle Bachelet ஜூன் இறுதியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், இணைப்பு சட்ட விரோதமானது என்றும், இஸ்ரேலின் முந்நாள் மூத்த அதிகாரிகளின் கருத்தினையும் உலககெங்கும் எழுகின்ற எதிர்ப்பினையும் செவிமடுத்து, இந்த ஆபத்தான பாதையைக் கைவிடுமாறு இஸ்ரேலை மேலும் கோரியிருந்தார்.

பலஸ்தீனத் தரப்பும் ஒரு சமாதான திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. படை நீக்கம் செய்யப்பட்ட காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேமைத் பலஸ்தீனத் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வு பற்றி அதில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. முழுமையான விபரம் அறியப்படாத போதும், சர்வதேச சட்ட வரையறைகளுக்கும் ஐ.நா தீர்மானங்களுக்கும் அமைவான தீர்வுத் திட்டத்தினை பலஸ்தீனத் தரப்பு முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது. புலஸ்தீனர்களின் தாயகக் கோட்பாட்டினை மறுதலிக்கும் இஸ்ரேலின் பலவந்த இணைப்பு மற்றும் அமெரிக்க தீர்வுத் திட்டத்திற்கான பதிலாக பலஸ்தீனத் தரப்பின் தீர்வுக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

டிரம்ப் நிர்வாகத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவின்படி, குடியேற்றத் திட்டங்களை அப்படியே பேணுவதும், ஜோர்டான் பள்ளத்தாக்கினை இஸ்ரேல் நிரந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. ஜோர்டான் பள்ளத்தாக்குப் பிரதேசங்கள் பலஸ்தீனியர்களின் முக்கிய விவசாயப் நிலங்களைக் கொண்டுள்ளது.  இதற்கு இழப்பீடாக பலஸ்தீனர்களுக்கு நேகேவ் பாலைவனங்களில் குறிப்பிட்ட சில நிலத்துண்டுகளை வழங்குவது தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் எகிப்த் எல்லையை அமைவிடமாகக் கொண்ட காசாவோடு இணைந்த பகுதியாகும். சமாதானத் தீர்வுத் திட்டத்தினை பலஸ்தீனத் தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் 30 பில்லியன் டொலர் நிதி எதிர்கால முதலீடுகள், அபிவிருத்திகளுக்காக பலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் இஸ்ரேலின் விட்டுக்கொடுப்புக்கு இடமற்ற தலைநகரம் என்பதற்கு அமெரிக்கத் தீர்வு முன்மொழிவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் போன்ற சிறந்த நண்பனை வெள்ளை மாளிகையில் இதுவரை இஸ்ரேல் கொண்டிருக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புகழாரம் சூடியுள்ளார்.  இஸ்ரேலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினை டெல் அவீவிலிருந்து ஜெருசலோமிற்கு மாற்றியது அமெரிக்கா. மட்டுமல்லாமல் கோலான் மலைகளை இணைப்பதற்குரிய ஒப்புதலையும் வழங்கியது. டிரம்பின் சமாதானத் திட்ட வரைபு என்பது இஸ்ரேல்-பலஸ்தீனத் தரப்பில் பலமான தரப்பாக இருக்கக்கூடிய இஸ்ரேலுக்கு ஒரு அன்பளிப்புப் பொதியாகவும் அமைந்துள்ளது.

நவம்பர் அமெரிக்கத் தேர்தல். தேர்தலில் டிரம்ப் தோற்று வேறொருவர் தெரிவு செய்யப்படும் போது இஸ்ரேலின் திட்டத்திற்குரிய ஆதரவு இல்லாமற் போக வாய்ப்புண்டு. எனவே டிரம்ப் பதவியில் இருக்கும் சில மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பு நேதன்யாகுவிற்கு இருக்கக்கூடும்.

பலவந்த இணைப்பு (Annexation), சட்டவிரோதம் (Illegal), இராணுவ ஆக்கிரமிப்பு (Military Occupation) ஆகிய சொற்பிரயோகங்களுக்கிடையிலான வேறுபாட்டினை அவற்றின் சரியான சூழமைவுகளில் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 1967-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்ட யூதக் குடியேற்றங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று சர்வதேச சட்டங்களும் ஐ.நா மற்றும் ஹாக் தீர்மானங்களும் வரையறை செய்கின்றன

இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் பலவந்த இணைப்பிற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கைகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான மக்களிடமிருந்தும், சர்வதேச மட்டத்திலிருந்தும் எழுந்தபடி இருக்கும். அந்த வகையில் இராணுவ ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தற்காலிகமானது. ஒரு கட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான தமது பிடியை ஆக்கிரமிப்பு சக்திகள் விலக்கிக்கொள்ள நேரிடுகிறது. பலஸ்தீன நிலங்களை விடுவித்தல் தொடர்பான கோரிக்கைகள், அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. 2005-ல் காசாலவிலிருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றியது மட்டுமே அழுத்தங்களுக்கு இஸ்ரேல் செவிசாய்த்த ஒரேயொரு சந்தர்ப்பம்.

இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் அரசுகளின் உத்திபூர்வப் பொறிமுறைகளில் முக்கியமானது திட்டமிட்ட குடியேற்றம். அடுத்தபடியாக சொந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான பல்வேறு உடனடி மற்றும் படிப்படியான நடவடிக்கைகள். சொந்த நிலத்திலிருந்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுதல், வதிவிட உரிமையை மறுத்தல் உட்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவற்றின் நோக்கம் மக்கட்தொகை சமநிலையைத் (Demographic balance) தமக்குச் சாதகமாக மாற்றுதல். அதாவது குறிப்பிட்ட நிலத்தின் பூர்வீக மக்களின் இயல்பான பரம்பலைக் குழப்புதல், அவர்களைச் சிறுபான்மையினராக்குதல். இது கொலனித்துவ அணுகுமுறை (Colonial approach) எனப்படும். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரை பிரதேசங்களில் இஸ்ரேல் இந்த அணுகுமுறையினைக் கைக்கொண்டு வந்துள்ளது. பெரும்பான்மையாக இருந்த பலஸ்தீன மக்கள் இப்பிரதேசங்களில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பூர்வீக மக்களைச் சிறுபான்மையினராக்குதல் போன்ற உத்திபூர்வ நடிவடிக்கைகளுக்கு இஸ்ரேலும், சிறிலங்கா அரசும் இதற்கான சமகால உதாரணங்கள். இஸ்ரேலின் பலஸ்தீன நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் யுதக்குடியேற்றங்களும், தமிழீழத்தின் கிழக்கு மற்றும் மணலாறு உட்பட்ட பிரதேசங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அந்த வகையைச் சேர்ந்தவை. 2009-க்குப் பின்னரான சூழலில் தமிழர் தாயகத்தின் வடக்கும் கிழக்கும் முற்றுமுழுதான இராணுவ மயப்பட்டுள்ளன. தமிழர்களின் நிலவுரிமையின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குரியதாகியுள்ளது. வன்னியின் கேப்பாபுலவு உட்பட்ட சில பகுதிகளில் மக்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரும் போராட்டங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

மேற்குக்கரை மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு என்பது, அதன் காலநீட்சி அடிப்படையில் ஒருவகையான நிழல் இணைப்பினை (de facto annexation) ஏலவே கொண்டிருக்கிறது என்ற கருத்தும் நிலவுகின்றது. தற்போது இஸ்ரேல் அறிவித்துள்ள இணைப்பிற்கு சர்வதேச மட்டத்திலான எதிர்ப்பு என்பது இணைப்பினைக் கைவிடவேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி இருக்கின்றது. அதன் நடைமுறை அர்த்தம் ஏற்கனவே உள்ள ‘நிழல் இணைப்பினைத்’ தொடர்வததென்பதாகும். ஏற்கனவே உள்ள நிழல் இணைப்பு சட்ட விரோதமானது. அதனையும் நீக்குவதற்குரிய அழுத்தத்தினையும் ஒருங்கே பிரயோகிப்பதே மேற்குக்கரை தொடர்பான பிரச்சினைக்குரிய இறுதித்தீர்வுக்கு வழிகோலும். பலவந்த இணைப்பு என்பது ஜெனீவா மற்றும் ஹாக் உடன்படிக்கைகளை மீறும் செயல். மறுபுறத்தில் அவை போர்க்குற்றத்திற்கு ஒப்பானவை. ஏனெனில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மீது ஒருதலைப்பட்சமாக இறைமையை நிறுவுதற்குரிய உரிமை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இல்லை.

இன்று பேசுபொருளாகியிருக்கும் இணைப்பு என்பது மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், ஜோர்டான் பள்ளத்தாக்கு உள்ளடங்கிய 30 வீதமான பலஸ்தீன பிரதேசங்கள் சார்ந்ததாகப் பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஆயினும் 1967-ல் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை படிப்படியாகத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் 30 வீதத்திற்கும் மேலான பலஸ்தீன நிலங்கள் விழுங்கப்பட்டு விட்டன. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக பலஸ்தீனத்தின் மீது திணிக்க முற்படும் தீர்வுவென்பது நிலங்களை விழுங்கிய தீர்வு. பலஸ்தீனத் தரப்பின் கூற்றுப்படி வரலாற்று ரீதியான பலஸ்தீனத் தாயக நிலப்பரப்பின் 15 வீதமான பிரதேசங்களை உள்ளடக்கியதே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத்தீர்வு. மட்டுமல்ல சர்வதேச சட்டங்களை மீறிய, ஐ.நா தீர்மான அடிப்படைகளுக்கு முரணானவை என்பதோடு, சமாதானத் தீர்வுக்கு அடிப்படையாக ஒஸ்லோ உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்ட, மற்றும் ஐ.நா தீர்மானங்களுக்கும் முரணானவை.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் தவிர கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here