பபூன்

0

சிவகுமார் முத்தய்யா

விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே துயில் கலைந்து  பபூன் நாகராசன் பரபரப்பாகிவிட்டார். தனது கூரைவேய்ந்த வீட்டின் மோட்டுவளையில் சில நாட்களாக கருமை நிறத்தில் தொங்கியும் படர்ந்தும் கிடக்கும் அத்தனை ஒட்டடைகளையும் தட்டி சரி செய்துவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள  கூத்துக்கார கோஷ்டிகளிடம் நேற்றே தன்னை நேர்காணல் செய்ய ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் இருந்து நிருபர், மற்றும் கேமராமேன் வருவதைப் பற்றிச் சொல்லி பெருமிதம் கொண்டார். அவர் சொல்லிய தோரணையை வைத்து சிலர் வியப்பாகவும், பலர் அவர் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று என்பது போலவும் பார்த்து விட்டு  நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.  ஒரு சிலர் இவர் காதுபடவே நக்கலும் நையாண்டியும் பண்ணினர்.

“இந்த ஊர்க்காரப் பயல்களே இப்படித்தான்… என்று உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.” என்று முகத்தில் அணிந்திருக்கும் முகக் கவசத்தைப் போட்டுக் கொண்டபடியே முணுமுணுத்துக் கொண்டே அவர்களை விட்டு விலகினார்.

நேர்காணல் செய்ய வருகின்றவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதோ ஒன்றை தந்து உபசரிக்க வேண்டும். காலை நேரத்தில் மலையாளத்து சேட்டன் டீக்கடையில் சூடான வெங்காய பஜ்ஜியும், வயநாடு தேயிலை தேநீரும் கிடைக்கும். அதனை வாங்கிக் கொடுக்கலாம் ஆனால் ஊரடங்கு காரணமாக கடையில்லை. என்ன செய்வது என்று யோசித்தார். இவர் பொதுவாக  டீக்கடைக்கு காலைப் பொழுதில் செல்லும்  பழக்கமில்லாதவர். சமீப காலங்களில் அடிக்கடி ஏற்படும் வயிற்றுக் கோளாறு காரணமாக டீ குடிப்பதில்லை. ஆனால் இதைவிடவும் மோசமான  குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. என்றைக்கு “பபூன்” வேடமேற்று  காலில் சலங்கையைக் கட்டினாரோ… அன்று ’கள்’ குடியாக தொடங்கியது இன்று டாஸ்மாக்கில் வந்து நிற்கிறது. அரிதாக எப்போதாவது டீக்கடையில் இவரைப்  பார்க்கும் ஊர்க்காரர்கள், “கூத்து இல்லைய்யா,, பபூன்” என்று கேட்பார்கள். இல்லையென்று கையைக் காட்டிச் சொல்வார்.அநேகமாக செய்தித்தாள் வாசிக்கவும், ஊர் நிலவரத்தை அறியவும் தான்  செல்வார். அரிதாக எப்போதாவது டிபன் சாப்பிடுவார். கூத்தில் அதகளம் காட்டும் இவர் இயல்பில் அதிகம் பேசமாட்டார்.

பிறகு குளித்துக் கொள்வோம் என்று முதலில் ஒட்டடை அடித்ததில் அப்பியிருந்த அழுக்கை கழுவிச் சுத்தம் செய்தார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இன்றி காணப்படும் கடைத்தெருவைக் காணும் ஆவலில் கிளம்பினார். பால் வாங்கிக்  கொண்டு வந்து வீட்டிலேயே டீ போட்டுவிடலாம்  என்று தோன்றியது. மளிகைக் கடை மட்டும் திறந்து இருப்பதாகச்  சொன்னார்கள். ராவுத்தர் கடையில் பால், டீத்தூள், வெல்லம் வாங்கிக் கொள்ளலாம். பேட்டி எடுக்க வருகின்றவர்கள் வரும் வரை ‘’ சூடு குறையாமல் இருக்க ஒர் பிளாஸ்க் வேண்டும், கொஞ்ச தூரம் நடந்து மேளக்காரத் தெருவுக்கு வந்தார். கையில் போட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப்  பார்த்தார் இப்பவே எட்டாகியிருந்து. வைகாசி மாதம் என்பதால் வெயில் வெப்பம் குறைந்த கடைசி வாரம்.தெருவெங்கும் நிற்கும் மரங்கள் பசுமை கொண்டிருந்தன. கடந்த சில நாட்களில் பறவைகளின் அதிகமான வருகையைக் காண முடிந்தது. அதன் துள்ளல் நிரம்பிய பாடல்களைக்  கேட்க முடிந்தது.

ஆனி தொடங்க  இன்னும்  சில நாட்கள் இருப்பதால் வானில் ஒளி குறைந்த சூரியன். சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் ஈரத்தில், தெருவோர வேலியில் நின்ற மரங்களில் பசுமை அடர்ந்திருந்தது. கிளைகளில் படர்ந்து கிடந்த தூதுவளைக் கொடிகளில் பூத்திருந்த நீல நிறப் பூக்களில் மகரந்தங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. கொடியில் சின்னஞ்சிறிய சிவப்பு நிறப் பழங்கள் பழுத்து என்னை சாப்பிட வாருங்கள் என்று அழைப்பது போலிருந்தது. தெரு முனையில் முதல் வீடாக இருந்த டக்ளஸ் வீட்டு தென்னைக் கூரையில் படர்ந்து ஓடியிருந்த பரங்கிக்கொடி காய்ந்து அதன் கொடிகள் படர்ந்து நெளிந்து வளைந்து இருப்பதை பார்த்ததும் இவருக்கு அது பூத்துக் காய்த்த அந்த பருவக்காலம் நினைவுக்கு வந்தது. இப்படித்தான் மனித வாழ்வும். பரங்கிப்பூக்கள்.. அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும். மார்கழி மாதத்தில் காலைப் பொழுதுகளில் இந்தப் பூவையும் கக்கரத்தான் ஊதா நிறப் பூக்களையும் பறித்து வந்து பெண்கள் வாசலில் கோலமிட்டு அதன் மையத்தில்  வைப்பார்கள். குட்டிமேரி அப்படித்தான் வைப்பாள். திடீரென்று குட்டிமேரி சலங்கை கட்டிய கால்களுடன் நினைவில் நடக்கத் தொடங்கினாள். தன்னைக் கட்டுப்படுத்தி அவளைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரு வித லயிப்பில் நடக்கத் தொடங்கினார்.

டக்ளஸ் வீடு உள்ளிட்ட நாலைந்து வீடுகளில் கேட்டுவிட்டார். உள்ளே வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் இல்லை என்று மட்டும் சொன்னார்கள். இவர் அணிந்திருந்த நீல நிற முகக்கவசத்தைப் பார்த்து சிலர் சிரித்தனர். எப்படியும் பத்து மணிக்குள் வந்துவிடுவார்கள். நிருபர் மற்றும், கேமராமேன் உள்ளிட்ட சிலர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.   பிளாஸ்க் வேண்டாம் என்று திரும்பி நடக்கத் தொடங்கிய போது எதிர்ப்பட்ட பெண்கள், சிறுவர்களிடம்  விஷயத்தைச் சொல்லியபடியே வேகமாக நடந்து  வீட்டிற்கு  வந்து சைக்கிளை எடுத்து அதில் ஏறினார். அப்போது கனகம் எதிரே வந்தாள்.

கூத்துக்காரர்கள் குடியிருக்க, ஒடம்போக்கியாற்றின் எதிர்ப்புறம் மேற்கும் கிழக்குமாக திடல் போலத் திட்டுத்திட்டாய் நீண்டு கிடக்கும் ஆற்றோரப் படுகையை ஒட்டித்தான் கிராமத்தினர் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறம்போக்கு இடத்தில் இவர்கள் தங்கியிருந்தபோதும் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் 1994ம் ஆண்டில் இவர்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அப்போது உள்ளூரைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் முனியாண்டி வந்து அதிகாரிகளிடம் பேசி இவர்கள் அங்கே குடியிருக்கக் கட்சி மேலிடத்தில் சொல்லி அதிகாரிகளைப் பணிய வைத்தார். அதன் பிறகு கூத்துக்கார பதினைந்து குடும்பங்களுக்கும் அவர் நிரந்தர தலைவராகிப் போனார்.அதன் பிறகு அடிக்கடி வந்து கூட்டங்களுக்கு இவர்களை ஆட அழைத்துச் செல்வார்.அது பபூன் நாகராசனுக்கு இந்த டெல்டா மாவட்டங்களைத் தாண்டியும் மற்ற இடங்களிலும்  செல்வாக்கு அதிகமாக  இருந்த காலக்கட்டம்.

ஒரு சித்திரை மாத மழை நாளில்   அதிராம்பட்டினம்  அய்யனார் கோவில் திருவிழாவின் ஆட்டத்துக்கு சென்று திரும்பியபோது, நல்ல மதிய நேரம் கோடை மழைக்குப் பிறகான நல்ல வெயில். கூத்துக்காரத் தெருவே அசமடங்கியிருந்தது. ஆட்டத்தில் குறவன் வேடமேற்று ஆடும் சக ஆட்டக்காரன் செல்வத்தின் வீட்டுக்காரி கனகம் வீட்டில் இருந்து முனியாண்டி வெளியே வருவதைப் பார்த்தார். அடச்சீ.. என்று கருவிக்கொண்டார். இது பற்றி ஊரில் சிலர் அரசல்புரசலாக பேசிக் கொண்டார்கள். கனகத்தைப் பார்த்ததும் இந்த நினைப்பு இப்போது எழுந்தது. கனகத்தை முறைக்கு  அக்கா என்றே அழைப்பார். சில நேரங்களில் அவளை கண்டிக்க வேண்டும் என்று தோன்றியபோது அவள் ஒரு மாதிரியானவள் என்று தெருக்காரப் பெண்கள் சொல்லக் கேட்ட பயத்தால் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் நாம் மட்டும் என்ன யோக்கியமா?” என்று இது போன்ற சமாச்சாரங்களில் தலையிடுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டார்.  இந்த விவகாரம் ஒரு நாள் தெரிந்து போக இரண்டு பெண் குழந்தைகளையும் தவிக்க விட்டு, செல்வம் அரளிக்காய் அரைத்து உண்டு இறந்து போனதும், கனகம் பெயர் பெத்த ஆட்டக்காரி ஆகிப்போனதும் வேறு கதை.

சைக்கிளில் ஏறினார். பெடல் சத்ததுடன் சீராக ஒடியது.செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டோமே என யோசித்தார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கடைத்தெரு இருந்தது. அப்போது ரெயில்வே தடம் தனிமையில் உறைந்து போயிருந்தது. வெட்டாற்றில் இருந்து எண்கன் வழியாகப் பிரிந்து வரும் ஒட்டக்குடியான் வாய்க்காலில் ரெயில்வே கேட், அருகே, குளிக்கரை குச்சான் உடும்பு வேட்டைக்கு ”கண்ணி” வைத்துக்கொண்டிருந்தான். வாய்க்காலில் இருந்தபடி, சைக்கிளில் வரும் இவரைக் கண்டதும் ”மச்சான்” என்று ஓங்கிய குரலில் குச்சான்  கத்தினான்.

சைக்கிளை விட்டு இறங்கி திரும்பிப் பார்த்தார், “கண்ணி”யை அங்கே போட்டுவிட்டு ஒடிவந்தான் குச்சான். “என்னுமோ டிவியில இருந்து பேட்டி எடுக்க வர்ங்கன்னு கேள்விப்பட்டேன்” என்றான் முகத்தில் மகிழ்ச்சி பொங்க.

“ஆமாய்ய இன்னக்கித்தான் வர்றாங்க.. ஆமா ஒனக்கு எப்படித் தெரியுங்குறேன்.” என்றார். “மச்சான் நேத்தி கடைத்தெருவுல பேசிக்கிட்டாங்க” என்றான்.

“அவுங்களுக்குத் தான்… டீ போட சாமன் வாங்க போறேன்… சரி இஞ்ச என்னாய்யா பண்ற” என்றார்.

“வீட்டுல சும்மா இருந்தா உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை வந்து வாய் நாறிப்போகும். அதான் கிளம்பி வந்துட்டேன். எதாவது கிடைச்சாலும் மதியம் கொழம்புக்கு ஆகுமில்ல. ஒனக்க இல்லாம சோறு இறங்க மட்டுது” என்றான் வாய்க்காலில் மண்டியிருந்த நாணல் காட்டைப்  பார்த்தபடி.

சைக்கிளில் ஏறினார். அளவுக்கு அதிகமாகக் கூட்டம் நிரம்பி வழியும் டீக்கடை பூட்டிக்கிடந்தது. கடைத்தெருவில் இலந்தைப் பழத்தை உருட்டிவிட்டது போல ஆட்கள் இறைந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர். ராவுத்தர் மளிகைக் கடை வாசலில் நின்று தவில் வித்வான் ஆவுடையப்பன் போனில் யாருடனோ பேசிக் கொண்டு நின்றார்.  அப்போது கடைவீதியில் இருந்து காளி வேஷம் போட்டு ஆடும் ஆறுமுகம் கடைக்குள் புகுந்தான். பபூன் நாகராசனைக் கண்டதும் வணக்கம் வைத்துவிட்டு, நலம் விசாரித்தான்.’ டிவியில இருந்து இன்னக்கி நம்மள பேட்டி எடுக்க வர்றாங்க” என்று அவர் அவனிடம் சொன்னார்..

“அப்படிய்ய சந்தோஷம்” என்று அவன் சொல்லிக்கொண்டே “இரண்டு கிலோ எள்ளுப்புண்ணாக்கு  போடுங்க” என்றான்.. இதனைக் கூர்ந்து கேட்ட ஆவுடையப்பன் கடைக்குள் வந்து என்ன விஷயம் என்று ஆறுமுகத்தைப் பார்த்து கேட்டார்.. “இவரைப்  பேட்டி எடுக்க வர்றாங்க” என்றான். இதனை கேட்ட ஆவுடையப்பன், ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு, “பபூன் அப்படி என்ன சாதிச்சி கிழிச்சுப்புட்டாரு…புடலங்க…போங்கட… யார்க்கிட்டே ரீல் விடுர்றீங்க” என்று சொல்லிவிட்டு ஹ…ஹ…வென சிரித்தார். அப்போது கடையில் இருந்த சிலரும் சிரித்தனர்.

நாகராசன், கடைக்கார பாயைப் பார்த்து சாமான்களை சொன்னார். அப்போது அவரது  குரலில்  கரகரப்பு கூடியிருந்தது. எல்லோர் மத்தியிலேயும் தவுல்காரன் இப்படிப் பேசிப்புட்டானே” என்று முணுமுணுத்தார். ஆவுடையப்பனுக்கும் இவருக்கும் பேச்சுவார்த்தை முறிந்து போய் வெகுநாளாகிவிட்டது.

பொருட்களை  துணிப்பையில் வைத்து சைக்கிள் ஆன்பரில் மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

இந்த தொற்று நோயால் ஒரு கூத்துக் கலைஞன்  எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை உலகுக்குச் சொல்ல  பேட்டி எடுக்க வருகிறார்களே என்ற சிறு மகிழ்ச்சியில் ஆவுடையப்பனின் வார்த்தைகள் குலைவை ஏற்படுத்தின. சட்டென்று மனம் விக்கித்தது. இத்தனைக் காலங்கள் செழுமையான ஆட்டத்தையும், பகடியான நடிப்பையும் கட்டிக் கொண்டு அழுததற்கு கிடைக்கும் சிறிய அங்கீகாரத்தைக்கூட தனது சக கூத்துக் கலையைச் சேர்ந்த அங்கத்தினன் ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்? மனம் வெதும்பினார்.

“ஆவுடையப்பன் சிறந்த தவில் வித்துவான் எனப் பேர் பெற்றவர். கோவிலுக்குள் சென்று வாசிப்பவர், அது தான் காரணமா? உள்ளுக்குள் உறைந்திருக்கும் பழைய வன்மா? அல்லது கர்வமா? நான் வெறும் சிரிப்பு நடிகன் ஆமாம். நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சியின் பபூன். வேறு அடையாளம் எனக்கு ஏது. இவர்கள் பார்வைக்கு நான் ஒரு கோமாளி. அவ்வளவுதான்…”  மனம்  விரக்தியில் புழுங்கத் தொடங்கியது.

ஏன் தன் மீது இன்னும் ஆவுடையப்பனுக்கு.. இத்தனை கோபம். மனதில் உறைந்து கிடந்த அது மேலெழும்பியது… கும்பகோணம் பட்டீஸ்வரம் கோவில் திருவிழாவில் நடந்த கூத்தில், ஆவுடையப்பன் கோஷ்டியில் நாகராசன் ஆட்டத்துக்கு போயிருந்தார். ஆவுடையப்பன் வாசித்த நையாண்டி வாசிப்பையெல்லாம், கேலிக்கூத்தாக்கியது நாகராசன் ஆட்டம். அவர் அடித்த அடியெல்லாம், பபூன் தனது குரலில் வாசித்து, அவர் வாசிப்பை தனது உடல் மொழியால் வெளிகாட்டி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். அதனையும் தாண்டி அவர் வசமிருந்த ஆட்டக்காரி மல்லிகாவை அன்று காலை அழைத்துக்கொண்டு வந்து இரண்டு நாட்கள் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கவைத்து அனுப்பி வைத்தார். இது எல்லாமே ஆவுடையப்பனுக்கு தெரிந்துபோனது. இதையறிந்த ஆவுடையப்பன்  இதே கடைத்தெருவில் வைத்து தான் அன்று தகாத வார்த்தையில் திட்டினார், அன்றைய பொழுது  அதிக போதையில் இருந்த நாகராசன் பதிலுக்கு எகிற இருவருக்கும் வார்த்தை முற்றியது. கைகலப்பு வராமல் இருவரையும் சமாதானம் செய்து கடைவீதியில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ஆவுடையப்பன் கோஷ்டியில் இருந்து நிரந்தரமாக விலகிப்போனார் நாகராசன்.

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஆவுடையப்பன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைத்தபோது அவர் மீது வெறுப்பு படர்ந்தது.

“அப்போதிலிருந்து இந்த ஆள்  இப்படித்தான் என்று தெரியும். இத்தனை வயதாகியும் அவர் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறார்.” சைக்கிளை சற்று வேகத்தில் ஓட்டினார்.

மணி ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. வீட்டுக்கு வந்து சாமன்களை வைத்து விட்டு ஓடம்போக்கி ஆற்றுக்கு வந்தார். மடுவில் தேங்கி நின்ற நீரில் மழை நீரும் தேங்கி குளம் போல் காட்சியளித்தது நீர்ப்பரப்பு. படித்துறையில் அப்போது இரண்டு பெண்கள் குளித்துவிட்டு கிளம்பினார்கள். வேகமாக இறங்கி குளித்தார். ஆவுடையப்பன் பேசியது தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட மீன் முள்ளாய் இம்சித்தது. மிலிட்டரி சின்னையன் ஞாபகம் வந்தது. மாதம் ஒரு தடவை அவர் கோட்டாவில் கிடைக்கும் ரம் பாட்டில் ஒன்றை இவருக்குத் தருவது வழக்கம். குளித்துவிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தார். விஷயத்தைச் சொல்லிவிட்டு பாட்டிலை வாங்கிக்கொண்டு திரும்பினார். வந்த வேகத்தில் பாட்டிலைத் திறந்து தம்ளரில் ஊற்றி  கடுங்கோடைக் காலத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் ஆடு  தீராத தாகத்துடன் பருகுவதைப் போல அவசரத்துடன் பருகினார். இது இப்போது தேவை என்று அவருக்கு தோன்றியது. கருமை நிறம் கொண்ட திரவம் மிகுந்த மன எழுச்சியை உருவாக்கியது.

மீண்டும் ஊற்றிக் குடித்தார். மனதில் வலிமையும் தெம்பும் ஏற்பட்டது போல உணர்ந்தார். “பிறக்கும்போதும் அழுகின்றான்.. இறக்கும் போதும் அழுகின்றான்” பாடலை சந்திரபாபுவின் குரலில் பாடினார். ஏதோ ஒன்று தொண்டையை அடைத்தது.

இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்றாலும் உடற்கட்டு இன்னும் தொப்பை விழாது பார்த்து கொண்டார். சராசரியான உயரம். தலையை கச்சிதமாக வெட்டி சாயம் ஏற்றியிருந்தார். லேசாக கன்னத்தில் மட்டும்  குழி விழுந்துவிட்டது. மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் குறையில்லை. குரல் கரகரப்பு இல்லாத நையாண்டி பேச ஏற்றது. கூத்தில் இவர் ஆட்டக்காரிகளிடம் பேசும் பாணியே புதுவிதமானது… சிரிக்காத உம்மணாம் மூஞ்சிகளையும் சிரிக்க வைத்து விடுவார். ஆபாசம் என்பது எப்போதாவது இருக்கும். பாட்டுப் பாடுவதிலும் கில்லாடி. சந்திரபாபு, சி.எஸ். ஜெயராமன் பாடல்களை அவர்கள் குரலிலேயே பாடி கைதட்டல்களையும் அன்பளிப்புகளையும் அள்ளி விடுவார். ஒரு பபுனுக்குரிய உடல்மொழி வாய்த்திருந்தது.

திரவம் இறங்கிய சில நிமிடங்களில் உற்சாகத்தில் சத்தமாக சில பாடல்களை பாடினார். காவியமா? இல்லை ஒவியமா? பாடலைப் பாடியபோது மனதில் நெருடல்.இந்தப் பாடல் குட்டிமேரிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆட்ட நிகழ்ச்சிகளை விட இருவரும் தனித்திருக்கும் பொழுதுகளில் அவள் பாடச்சொல்லி அதிகம் கேட்பாள். மிகச் சிறந்த ஆட்டக்காரி. பார்வையாளர்களின் ரசனையை தனது இடுப்பு வளைவுகளின் வழியே பூர்த்தி செய்துவிடுவாள். அவள் ஆடுவதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுவிட்டதை அறிந்த கூத்துக்கார கோஷ்டிகள் முகம் சுளித்தனர். எண்கண் முருகன் கோயில் வைத்து குட்டிமேரியை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சிகளுக்கு ஆடப்போனார்கள். ஆனால் கோஷ்டி ஆட்கள் இவரைப் பற்றி குட்டிமேரியிடம் பொய்யான செய்திகளை சொன்னார்கள். அதனை நம்பிய குட்டிமேரி, இவரிடம் அது பற்றிய  விளக்கம் கேட்கத் தொடங்கினாள். இது தொடர் கதையாகியது. ஆட்டமில்லாத நாட்களில் இவர்கள் வாக்குவாதம் முற்றியது. இவர்களின் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக செல்ல விடவில்லை அவர்கள். இவர் வீட்டில் இல்லாத பொழுதுகளில் சில ஆட்கள் குட்டிமேரியிடம் வலிய வந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் நோக்கமெல்லாம் வேறு மாதிரியாக இருந்தது. ஒன்றரை வருடங்கள் மல்லுக்கட்டி ஒட்டினார். ஒரு நாள் இவருக்குத்  தெரியாமல் கிளம்பிப் போய்விட்டிருந்தாள் குட்டிமேரி. கலங்கிப் போனார். எங்கே போனாள் என்று தெரியவில்லை. சில வருடங்கள் கழித்து, மதுரையில் நாதஸ்வரம் வாசிக்கும் பெரோஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு குட்டிமேரி இருப்பதாகவும் ஆடப் போவதில்லை என்றும், திருச்சி காட்டூரில் ஆட்டத்துக்குப்  போனபோது கருமாரி கோஷ்டியை சேர்ந்த காத்து சொன்னான். இதனைக்  கேள்விப்பட்டதில் இருந்து தான் அதிகக் குடி அவரை ஆட்கொண்டது.

 இது நடந்து முப்பது வருடங்கள் ஒடிவிட்டன. ஆனால் குடித்தால் இது தான் இவருக்கு முதலில் நினைவு எழும். இல்லையென்றால் எதையும் நினைக்காமல் அமைதியாக இருந்து விடுவார்.

இப்போது விசிலில் ஒரு பாட்டைப் பாடினார். கண்ணாடியை எடுத்து தனது முகத்தைப் பார்த்தார்.  சூட்கேசைத் திறந்து பபூன் ஆடைகளை எடுத்தார். சலங்கையை எடுத்து ஆட்டிப்பார்த்தார். அவை சலசலத்தன, ஆட்டத்துக்குப் போய் சில மாதங்கள் ஆகிவிட்டன. குறைவான சேமிப்பை வைத்துப் பார்த்து பார்த்து செலவு செய்து நாட்கள் நகர்ந்து கொண்டிக்கின்றன. வருடத்தின் மொத்த வருமானமும் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நடக்கும் கூத்துகளில் சம்பாதிப்பது வழக்கம். அதனை வைத்துத் தான் மற்ற மாதங்கள் நகரும். ஆனால் அது நடக்கவில்லை. தொற்றுநோயால் திருவிழாவுக்கு தடை. எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. தனி ஒருவனுக்கே இந்த நிலை என்றால் குடும்பத்துடன் வாழ்பவர்களின் நிலை? இதனை நினைத்தபோது என்னமோ போலிருந்தது அவருக்கு. கண்களில் பிசுபிசுப்பு. பிழைப்புக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நோயால் சாவதை விடப் பசியால் செத்துவிடுவோமா?

புலியூரில் சிறு வயதில் அப்பா, அம்மாவை  இழந்து பத்து வயது சிறுவனாக நின்றபோது  சின்னக்கண்ணு மாமா தான்  அடைக்கலம் அளித்தார். அவர் வீட்டில் பிள்ளைகுட்டிகள் அதிகம் இருந்தும் அரவணைத்துக் கொண்டார். இவரும் சேர்ந்து கொண்டதால் சுமை அதிகரிக்கும் என்று மாமாவின் மனைவி வேம்பு அத்தை அஞ்சினாள். அப்போது மாமா இவரை மூன்றாவது தெருவில் இருந்த பூவாண்டி மேளக்கார கோஷ்டியில் எடுபுடி வேலைகளுக்கு அனுப்பி வைத்தார். கச்சேரி காலங்களில் கிடைத்த சொற்ப பணத்தை அப்படியே கொண்டு வந்து அத்தையிடம் கொடுத்துக் கொண்டிருந்தார் நாகராசன். மேளக்கார கோஷ்டியில் இருந்தாலும் அவருக்கு தவில் வாசிப்பதிலும், நாதஸ்வரத்திலும் ஈடுபாடு இல்லாது போயிற்று. ஆடுவதிலும் பாடுவதிலும் ஆர்வம் கொண்டு திரிந்தார். கூத்தில் குறவன் வேடமேற்று ஆடிப் புகழ் பெற்றிருந்த சீனிக்குட்டி பபுனிடம் சிஷ்யனாக சேர்ந்து நாட்டுப்புற கலையைக் கற்றுக்கொண்டார்.

பெட்டியில் இருந்து எடுத்து பபூன் ஆட்ட ஆடையை அணிந்து கொண்டார். சந்திரபாபு பாணியிலான மீசையை வரைந்து கொண்டார். பெட்டியில் மறைந்து கிடந்த லிப்ஸ்டிக்கை தேடினார். அப்போது மற்றொரு பெட்டியில் இருந்த தமது இளம்வயது புகைப்படங்களின் ஞாபகம் வந்தது அதனை பேட்டி எடுக்க வருபவர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவசர அவசரமாக உதட்டில் சாயத்தை தடவிக் கொண்டே வேறு ஒரு சூட்கேஸ் பெட்டியை திறந்தார். பிரேம் செய்து வரிசையாக சிலவற்றை அதில் அடுக்கியிருந்தார்.  முதன் முறையாக வேடமேற்று ஆடி பதினைந்து வயதில் எடுத்தது தொடங்கி நாற்பது வயது வரை பல கால கட்டங்களில் பத்துக்கும் குறையாதவற்றை எடுத்து பத்திரப்படுத்தியிருந்தார் அதில் புகழ்பெற்ற ஆட்டகாரி தஞ்சை லெட்சுமியும் இவரும் ஜோடியாக எடுத்தது வரை இருந்தது.

லெட்சுமி போட்டோவிலும் நல்ல வாட்டம் சாட்டமாக தெரிந்தாள். இயல்பிலும் அப்படிதான் என்றாலும் இந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் அப்படியொரு வசீகரம். அவள் ஆட்டத்தின்போது கெட்ட வார்த்தையில் ஏக வசனம் பேசி கலகலப்பு ஏற்படுத்துவது அத்தனை பிரசித்தம் அது மட்டுமல்ல. இரட்டை அர்த்தம் தொனிக்க பேசுவதில் பெரும் பண்டிதனும் தோற்கும் அளவுக்கு ருசிகரம் மிக்கவள். குலுக்கல் ஆட்டம் போட்டு முரட்டு வாலிபர்களை வசப்படுத்திய  இவள் போட்டோவில் வெட்கப்பட்டிருந்தாள். இது லெட்சுமியின் அரிதான அழகு என்று தோன்றியது.

 முதன் முதலாக லெட்சுமியை வேதாரண்யம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் ஆடப்போனபோது தான் சந்தித்தார். அதன் பிறகு தொடர்ந்து கோடைக்கால திருவிழாக்களில் சந்திக்க நேர்ந்தபோது நெருக்கம் கூடியது. லெட்சுமி தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். எனக்கு எவருமில்லை. வயதான அம்மா மட்டும் தான் என்றாள். சில வார யோசிப்புக்கு பிறகு, அவள் வார்த்தையை நம்பிதான் லெட்சுமியையும் அவளது தாயாரையும் அழைத்துக் கொண்டு வந்தார். சில மாதங்களிலேயே லெட்சுமியின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளூர் முனியாண்டி தொடங்கி யார் யாரோ வந்து போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். இவர் நினைத்தது போல் லெட்சுமி இல்லை என்பதை அறிந்ததும் அவர்களை வெளியேற்றினார். இரண்டாவதும் சரியாக அமையவில்லை என்றபோது விரக்தியில் உறைந்து போனார். ஆனால் அவருக்கு உள்ளுக்குள் ஒரு ஆசை இருந்தது நடவுப்பாட்டு பாடும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அது மாமாவுக்கு பிறகு சாத்தியமற்றுப் போனது.

வேடத்துடன் வெளியே வந்தார். நேரத்தைப் பார்த்தார். பத்து மணிக்கு மேலாகியிருந்தது. பசிப்பது போலிருந்தது. வாசலில் நின்று ஊரின் முகப்பில் இருந்து இருசக்கர வாகனங்கள் எதுவும் வருகிறதா என்று பார்த்தார். பபூன் வேடமேற்று வாசலில் நிற்பதைப் பார்த்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் இவர் அருகே ஒடிவந்து ஏதோ சொல்லி சிரித்தார்கள். அவர்களை ”போங்கடா” என்று விரட்டினார்.

போதை இறங்கியது போலிருந்தது. பாட்டிலைத் திறந்து திரவத்தை ஊற்றினார். ஆவுடையப்பன் பேசியது நினைவுக்கு வந்தது. சமீபகாலமாக தெருவில் உள்ள கோஷ்டிக்கார ஆட்கள் கூட இவரிடம்  சரிவரப் பேசாமல் இருக்கிறார்கள். வயதாகிவிட்டது. ”கிழவனால் இனி ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறார்களா? நான் ஆடாத ஆட்டமா? பாடாத பாட்டா? என் எசப்பாட்டுக்கு எதிரே நிற்பார்களா இவர்கள்”

அவர்களை நினைத்தபோது சிரிப்பாக வந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தார். பேட்டியெடுக்க அவர்கள் வருவதாகச் சொன்ன நேரம் கடந்து பதினோரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. செல்போனை எடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தார் முடியவில்லை. திண்ணையோரத்தில் அமர்ந்து பாட்டிலைத் திறந்து, சரக்கை ஊற்றினார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தான் தனிமையாகி விட்டதாக உணரத் தொடங்கினார். “நான் கோமாளியல்ல ஏமாளி” என்று சொல்லிக்கொண்டார்.  மாமா சிவக்கண்ணு தலைமூச்சாக அடித்துக்கொண்டார், “நமக்கு ஏத்த மாரி நடவு நடுற பொண்ணு பாக்குறேன் கட்டிக்கடா” என்று இவர் செவி சாய்க்கவில்லை. “அவர் சொன்னதைக் கேட்டு இருக்கலாம்” என்று நினைத்தபோது கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது.

ஒரு லிட்டர் ரம் பாட்டிலையும் காலி செய்திருந்தார். செல்போனை எடுத்து பேட்டியெடுக்க வருபவர்களுக்கு போன் செய்தார். நீண்ட ரிங் போய் கட் ஆகியது. நாலைந்து தடவை முயற்சித்துப் பார்த்தார். எந்த பதிலும் இல்லை. அவர்கள் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லியபடி உச்சகட்ட  போதையில் தலைகவிழ்ந்து கிடந்தார். அவரது குறட்டை சீழ்க்கையொலி எழுப்பியது. வீட்டுக்கு எதிரே இருந்த தூங்குமூஞ்சி மரத்தில் அமர்ந்து கருங்குயில் ஒன்று அவரது குறட்டைக்கு எதிர்ப்பாட்டு பாடியது.

சிவகுமார் முத்தய்யா – ஆசிரியர் தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here