பகல்கனவு

0

அதீதன்

யிற்றை இன்னும் கொஞ்சம் மேலேற்றிக் கட்டியிருக்கலாம். ஒருவேளை உயரம் பத்தாமல் போய்விட்டால் என்ன செய்வது” சுருக்கைத் தன் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் முன் கிருஷ்ணன் இவ்வாறு எண்ணிக் கொண்டான். காலுக்குக் கீழிருந்த ஸ்டூலைத் தள்ளிவிட்டவுடன் முழு உடலும் ஊஞ்சலாடத் தொடங்கியது. கால்களுக்கும் தரைக்கும் இடையேயான தூரம் மூன்று அல்லது நான்கடிகளுக்குள்ளாகவே இருந்தபோதும் பல்லாயிரக்கணக்கான அடிகளுக்கும் மேல் அந்தரவெளியில் கால்கள் நடனமாடுவது போலவும் உடலிலிருந்து கடைசி சொட்டு ரத்ததையும் உறிஞ்சிக் குடித்துவிட முனையும் அட்டைப்பூச்சியினைப் போல முழு உயிரையும் உறிஞ்சி எடுத்துவிடும் வேட்கையில் முகம் தெரியாத பெண்ணொருத்தியின் உதட்டிலிருந்து கழுத்திற்குள் பிரவேசிக்கும் அழுத்தமான முத்தத்தினையும் ஒருசேர உணர்ந்தான்.

உயிர் துடித்து அடங்குவதற்கும் மொபைலில் அலாரம் அடிப்பதற்கும் சரியாகஇருந்தது. சட்டென்று கண்விழித்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லாம் இயல்பாகவே இருந்தது. இப்போது கட்டிலில்தான் உட்கார்ந்திருக்கிறான். கழுத்தில் கயிற்றின் தடங்கள் எதுவும் இல்லையென்பதையும், தூக்கிட்டுக்கொள்ள பயன்படுத்திய ஸ்டூல் கூட எப்போதும் இருக்கும் மூலையிலேயே சமர்த்தாக இருப்பதையும் சற்று முன்னர் முத்தமென்னும் கொலைக்கருவியால் உருவியெடுக்கப்பட்ட உயிர்கூட தனது உடலிலேயே பத்திரமாகப் புதையுண்டிருப்பதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டான். சிலநிமிடங்கள் நிதானித்த பிறகு கடிகாரத்தின் சிறிய முள் ஏழாம் எண்ணிலும் பெரிய முள் பன்னிரண்டாம் எண் தாண்டிய மூன்றாவது கோட்டிலும் நின்றிருப்பதைக் கண்டவன் மணி 7.03 “பகல்கனவு” என மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

“பகல்கனவு” இந்த வார்த்தை அவனுக்கு நிம்மதியைத் தந்தது. மீண்டும் ஒருமுறை சத்தமாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான். இப்போது மனம் கொஞ்சம் தெளிவு பெற்றிருந்திருந்தது. சூடாக ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியதால் எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு தெரு முக்கிலிருக்கும் டீக்கடைக்குக் கிளம்பினான்.

அந்தத் தெருவில் நான்கிலிருந்து ஆறு டீக்கடைகளாவது இருக்குமென்ற போதும் தெரு முக்கிலிருக்கும் கடையில்தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். கிருஷ்ணன் கூட அங்கு டீ குடிப்பதைத்தான் பெரிதும் விரும்பினான். அதற்குக் காரணம் அந்தக் கடையில் கிடைக்கும் “தம்டீ”தான். முன்னரே தயார் செய்யப்பட்ட தேநீரை கேனில் ஊற்றி மேலே கனமான உருண்டைக் கல்லை வைத்திருப்பார்கள். டீயில் சர்க்கரைக்கு மாறாக கருப்பட்டியோ, நாட்டுச்சர்க்கரையோ தான் சேர்க்கப்பட்டிருக்கும்.

எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும் கேனில் ஏலக்காய் வாசனையுடன் கூடிய டீயை பிளாஸ்டிக் கப்புகளிலோ, கண்ணாடி டம்ளர்களிலோ அல்லாமல் அதற்கென பிரத்யேகமாக வைத்திருக்கும் கப்&சாஸரில் வாங்கிக் குடிப்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

டீக்கடைக்கு வந்தபிறகு தான் கிருஷ்ணனுக்கு தான் இன்னும் பல் துலக்கவில்லை என்கிற நினைவே வந்தது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பல்தேய்த்து விடுவான். இதுவரை ஒருநாள்கூட அதைச் செய்யாமல் டீயோ, காப்பியோ குடித்தது கிடையாது. சிறுவயதில் அம்மா சொல்லிக் குடுத்த வழக்கம் இது. இப்போதுகூட அறைக்குச் சென்று பல்துலக்கிவிட்டு வரலாம். ஆனால் நாக்கு தம் டீயின் சுவைக்காக ஏங்கியது. வாழ்வில் இந்த ஒருமுறை மட்டும் பல்துலக்காமல் டீ குடிப்பதனால் பற்சிதைவோ அல்லது வாய்புற்று நோயோ வந்துவிடப் போவதில்லை. மேலும் அம்மா சொல்லிக் கொடுத்த பழக்கங்களில் பலவற்றை விட்டொழித்தாகி விட்டது. இந்த ஒன்றை மட்டும் காப்பாற்றி என்ன புண்ணியம் என்று தனுக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டவன் அங்கு குடிதண்ணீர் என்று பெயிண்டினால் எழுதப்பட்டிருந்த ட்ரம்மிலிருந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தான். அவனைப் பார்த்த உடனேயே மாஸ்டர் கப்&சாஸரில் தயாராக வைத்திருந்த டீயை எடுத்து உறிஞ்சத் தொடங்கினான். பல் துலக்காமல் டீகுடிப்பது அவனுக்குப் புதிதாகவும் சங்கடமானதாகவும் தோன்றினாலும் சமாளித்துக் கொண்டு குடித்துவிட்டு அறைக்குத் திரும்பினான்.

அறைக்கு வந்தவுடன் கட்டிலில் அமைதியாக உட்கார்ந்தவனுக்கு காலை நடந்தவைகளை நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு கொடுங்கனவு இதற்குமுன் எப்போது வந்தது என நினைவுகூறத் தொடங்கினான்.

முதல் முறையாக பாட்டியிடம் கிருஷ்ணனை விட்டுவிட்டு அப்பாவும் அம்மாவும் வெளியூருக்குச் சென்றிருந்தனர். அப்போது அவனுக்கு எட்டு வயதிருக்கும். அதுவரை அவனைத் தனியாக விட்டுவிட்டு எங்கேயும் சென்றது கிடையாது. காலையில் எந்த நினைப்பும் இல்லாமல் விளையாடியவன் இரவில் பாதி தூக்கத்தில் எழுந்து கதறி அழத்தொடங்கினான்.. பக்கத்தில் படுத்திருந்த பாட்டி எழுந்து அழுது கொண்டிருக்கும் பேரனைத் தேற்றி விசாரித்த போதுதான் அம்மாவும் அப்பாவும் ஊருக்குச் சென்று கொண்டிருக்கும் பேருந்து விபத்திற்குள்ளாகித் தீப்பிடித்து எரிவதாகவும் அதில் அவர்களிருவரும் சிக்கிகொண்டிருப்பதாகவும் சொல்லி மீண்டும் அழத்தொடங்கினான்.

“அடப்போடா கிறுக்குப் பயலே! இதுவரைக்கும் அவுங்க ரெண்டு பேரும் உன்னத் தனியா விட்டுட்டுப் போனதில்ல. இப்போத்தான் மொதமொறையா போயிருக்காங்க. அதான் இப்பிடியெல்லாம் கண்டதையும், கெடுதலையும் நெனச்சுக்கிட்டு நடுராத்திரில அழுதுக்கிட்டுருக்க. நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். புள்ள ஏங்கிப் போயிரும் கூட்டிப் போங்கன்னு கேட்டாங்களா ரெண்டுபேரும்… இப்போ பாரு” என்று சொல்லிக்கொண்டே நெற்றியில் திருநீறு பூசிவிட்டு அணைத்துக் கொண்ட பின்தான் கொஞ்சம் தூங்கினான்.

அதற்கடுத்து வந்த நாட்களில் அதிலிருந்து மீளமுடியாமல் பயத்துடனேயே கழித்தான். மூன்று நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து அவர்களிருவரும் வந்ததுமே ஓடிச்சென்று அம்மாவை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினான். அவர்களைக் கண்ணால் பார்த்த பின்புதான் அவனால் இயல்பு நிலைக்கு வரமுடிந்தது. அம்மா ஏன் அழுகற என்று கேட்க பாட்டிதான் காரணத்தை விளக்கிச் சொன்னாள். அம்மா சிரித்துக்கொண்டே நெற்றியில் முத்தமிட்டு உன்ன விட்டுட்டு நாங்க எங்கடா கண்ணா போவோம், நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகி சந்தோஷமா இருக்கறதப் பாத்துட்டுதாண்டா செல்லம் நாங்க போவோம் என்று சொன்னாள். அவள் சொல்வது முழுதாகப் புரியவில்லையென்றாலும் இனி எங்கேயும் அவர்கள் தன்னை விட்டுவிட்டுப் போக மாட்டார்கள் என்கிற உத்திரவாதமே பெரும் சந்தோஷத்தைத் தந்தது.

கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கொடுத்த வாக்கைக் காப்பாற்றாமல் என்னைத் தனியே விட்டுப்போய் விட்டார்கள். அவர்களுக்கென நானும் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று அணிச்சையாய் வாய் முணுமுணுத்தது. அவனுக்கு மிகவும் பிடித்த பாடல் ரிங்டோனாய் ஒலிக்கத் தொடங்கி பல்லவி முடிந்து சரணத்திற்கு வந்த பின்னரே சுயநினைவுக்கு வந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்துப் பார்த்தான். அழைப்பது மணி. அவனோடு ஒன்றாகப் பணிபுரியும் நண்பன். தினமும் அவனது பைக்கில்தான் இருவரும் அலுவகத்திற்குச் செல்வார்கள். தொடுதிரையில் பச்சை நிற வளையத்தைத் தேய்த்து ம்! சொல்லுடா என்றான்.

எதிர்முனையில் “என்ன சொல்லுடா… எவ்வளவு நேரமா கால் பண்ணிக்கிட்டுருக்கேன் அட்டண்ட் பண்ணாம எங்க போயிருந்த” என்று கேட்டவனுக்கு. “ஓ! சாரிடா பாத்ரூம்ல இருந்தேன். அதான் உடனே ஃபோன எடுக்க முடியல” என்று பதிலளித்தான். “பரவால்லடா இதுக்கெதுக்கு சாரில்லாம், சரி நான் வீட்ட விட்டுக் கிளம்பிட்டேன். பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன் ரெடியா இரு” என்றான். “ம்! சரி ரெடியா இருக்கேன்” என்று சொல்லிவிட்டு காலைத் கட் செய்தவன் பத்து நிமிடத்தில் மணி வந்துவிடுவதாகச் சொல்லியிருப்பதால் எழுந்து குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வெளியே வந்தவன் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்கையில் மீண்டும் அந்தக் கனவு நினைவுக்கு வந்தது. சம்பவம் நிகழும் சமயம் நிச்சயமாக பகலோ, மதியமோ, அல்லது மாலையோ இல்லை அது இரவுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும் அது நாளையாகவோ அல்லது வேறொரு நாளாகவோ இல்லாமல் நிச்சயமாக இன்றுதான் என்பதையும் உறுதியாக உணர முடிந்தது. எனில் இந்த நாளின் ஏதோவொரு பகுதியில் நிகழக்கூடிய ஏதேனுமொரு புறக்கணிப்போ, அவமானமோ, அல்லது தோல்வியோதான் தன்னை தற்கொலைக்கு இட்டுச்செல்லக் கூடிய காரணியாக இருக்கலாம். ஆகவே இன்றைய தினத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். எப்படியேனும் இந்த ஒருநாளை மட்டும் பிரச்சனை எதுவுமில்லாமல் சமாளித்துவிட்டால் பின்னர் அந்தப் பகல் கனவு குறித்தோ அதன் தாக்கம் குறித்தோ கவலை கொள்ளத் தேவையில்லை. மாறாக மருத்துவர் ஃப்ராய்டின் கூற்றுப்படி “ஆழ்மனதின் நினைவுகள்தான் கனவுகளாக உருத்தோற்றம் கொள்கின்றன”வெனில், இதுவரை தற்கொலைக்கான எண்ணமே அவனது மனதில் வந்தது கிடையாது. அதற்கான எந்தக் காரணங்களும் இதுவரை வாழ்வில் நடந்ததில்லை. எனவே அது ஒரு பொருட்படுத்தத்தக்க கனவாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

நிற்க! வாசகர்களின் கவனத்திற்கு: இதுவரை நாம் சொல்லிக்கொண்டு வந்த கிருஷ்ணனின் தற்கொலை குறித்தான பகல் கனவைப் பற்றிய இந்தக் கதையின் மேற்சொன்ன பத்தியில் உள்ள இரண்டாவது கூற்றை அதாவது மருத்துவர் ஃப்ராய்டின் கூற்றை அடிவொற்றிய காரணத்தை நாம் எடுத்துக் கொண்டோமேயனால் இந்தக் கதையும் அந்தக் கனவைப் போலவே பொருட்படுத்தத் தேவையற்ற ஒன்றாக ஆகிவிடும். ஆனால் முதலில் சொன்ன கூற்றின்படி இந்தக் கதை தொடங்கும் நேரமும் அவன் கனவு கண்ட நேரமும் அந்த நாள் முடியக்கூடிய தருணமாக இல்லாமல் அந்த நாளின் தொடக்கமாக இருப்பதால் மீதமிருக்கக் கூடிய நாளில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்புள்ளது. ஆகவே நடப்பவைகளின் நிகழ்தகவுகளின் வழியேதான் நம்மைப் போலவே கிருஷ்ணனும் மீதமிருக்கும் நாளை தொடர வேண்டியிருக்கிறது.

கீழிருந்து பைக் ஹாரன் சத்தம் கேட்டவுடன் உடையணிந்து தயாராக இருந்தவன் வெளியே எட்டிப் பார்த்து “இதோ வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அறைக் கதவைப் பூட்டி கீழிறங்கிச் சென்று உறுமிக்கொண்டிருந்த பைக்கில் ஏறிக்கொண்டான். எப்போதுமே அலுவலகம் போகும் வழியில் இருவரும் ஏதேனும் பேசிக்கொண்டே போவது வழக்கம். பெரும்பாலும் பேச்சைத் தொடங்குவது கிருஷ்ணனாகத்தான் இருப்பான். அன்று வழக்கத்திற்கு மாறாக அவன் பேசாமலிருப்பது மணிக்கு வித்தியாசமாகப்பட்டது. வண்டி சிக்னலில் நின்றபோது திரும்பிப் பார்த்து. “ஏன்டா இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க” என்று கேட்டவனிடம் “ஒன்னுமில்ல.. நான் சாதாரணமாத்தான் இருக்கேன்” என்று பதிலளித்தான்.” எதுவுமே பேசாம இப்பிடி உம்முன்னு வரியே அதான் கேட்டேன்” என்று மீண்டும் கேட்கவும், சிக்னலில் பச்சை விழவும் சரியாக இருந்தது. கிருஷ்ணன் “பாரு சிக்னல் போட்டாங்க” என்று சொல்ல, சரி சாயுங்காலம் பேசிக்கலாம் என்று சொன்னபடியே மணி வண்டியைக் கிளப்பினான்.

அலுவலகத்தில் அவனுக்குப் பிரச்சனை தரக்கூடிய விஷயமென்று எதுவுமில்லை. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து இன்றுவரை எல்லோரிடமும் நற்பெயரையே வாங்கி வந்திருக்கிறான். மற்ற மாதங்களைப் போலவே இந்த மாதமும் தனக்குக் கொடுக்கப்பட்டிருந்த டார்கெட்டை முடித்துவிட்டான். இனி அவனுக்கு வரப்போவது எல்லாமே கூடுதல் வருமானம் தான். மேலும் இந்த மாதத்தின் சிறந்த விற்பனைப் பிரதிநிதியாகவும் அவனே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். தொடர்ந்து நான்காவது மாதமாக அவனே சிறந்த விற்பனைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் இந்த ஆண்டிற்கான சிறந்த பிரதிநிதியாக அவனே தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அதற்கான அறிவிப்பு அன்று மாலைக்குள்ளாகவே அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சகபணியாளர்கள் பேசிக்கொண்டனர்.

அதைக்கேட்டு கொஞ்சம் கூட மகிழ்ச்சியடந்ததாகவோ குறைந்தபட்சம் அதைப் பொருட்படுத்தியதாகவோ கூடத் தெரியவில்லை. மாறாக வந்திருக்கும் வாடிக்கையாளரிடம் கனிவாக நடந்து கொள்வதிலேயே குறியாக இருந்தான். அவனுக்கு வாழ்த்துச் சொல்பவர்களிடம் அவர்களைப் பார்க்காமலேயே வாடிக்கையாளரைப் பார்த்துக்கொண்டே நன்றி கூறினான். வெளிப்புறத்தில் மற்றவர்களின் பாராட்டுக்களை அங்கீகரிக்காதது போன்ற தோற்றம் இருந்தாலும் உண்மையில் வந்திருக்கும் வாடிக்கையாளரைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், அவர்களில் எவரேனும் அதனைத் தனது கௌரவக் குறைச்சலாக எடுத்துக் கொண்டு இச்சிறு விஷயத்தைப் பெரிதுபண்ணி மேலாளரிடம் ஏதேனும் புகார் தெரிவிக்கவோ, அதனையே காரணமாகக் கொண்டு தனது நற்பெயர் களங்கப்பட்டு விடலாம். மேலும் இந்த ஒரு காரணத்திற்காக அவனுக்குக் கிடைக்கக்கூடிய பாராட்டுகளும், பரிசுகளும் தட்டிப் பறிக்கப்படப் போவதில்லையெனினும் அன்றைய தினம் அது மேலாளரின் கோபத்தைத் தூண்டக் கூடியதாக அமைந்து ஏதேனும் கடுமையாகச் சொல்லிவிட்டால் அதுவே கூட தன்னுடைய கனவு பலிப்பதற்கான காரணமாக அமையலாம் என்கிற பயமே அவ்வாறு நடந்துகொள்ளச் செய்தது.

மேலாளரின் அறையிலிருந்து வெளியே வந்து கிருஷ்ணனை மேனேஜர் உள்ளே அழைப்பதாகச் சொன்ன நண்பனையே திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் “ஏய் உன்னைத்தான் உள்ள மேனேஜர் கூப்புட்றாரு” என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகச் சொன்னவுடன் தான் திடுக்கிட்டு அதனை உள்வாங்கியது போல, ‘இதோ போறேன், போறேன்’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்றவனை மணி குழப்பத்துடன் பார்த்தான்.

அறைக்குள் நுழைந்தவனை கவனிக்காமல் கம்ப்யூட்டரில் எதையோ மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்த மேலாளரின் முன் எதுவும் பேசாமல் கதவினருகிலேயே நின்று கொண்டிருந்தான். எதேச்சையாய் தலையைத் நிமிர்த்தியவர் அவன் நின்றிருப்பதைப் பார்த்து “கிருஷ்ணன் எப்போ உள்ள வந்தீங்க?” என்று கேட்டதும்தான் தான் கதவைத் தட்டி உள்ளே வருவதற்காக அனுமதி கேட்கும் குறைந்தபட்ச நாகரீகம்கூட இல்லாமல் தான் உள்ளே வந்திருப்பது உறைத்தது. பதற்றத்துடன் “சாரி சார்.. நீங்க கூப்ட்டீங்கன்னு மணி சொன்னான், நான்தான் கதவைத் தட்டாமலேயே வந்துட்டேன்” என்று சொன்னவனின் பதட்டத்தைக் கவனித்தவர் “இட்ஸ் ஓகே அதனால ஒன்னுமில்ல முதல்ல வந்து உக்காருங்க” என்றவுடன் எதிரிலிருக்கும் இருக்கையில் உட்கார்ந்தவனைப் பார்த்து “வாழ்த்துக்கள் கிருஷ்ணன் ட்ரீட் எப்போ தரப்போறீங்க? எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தவனிடம் “கிருஷ்ணன் ஆர் யூ ஆல்ரைட்” எனக் கேட்டார். சுதாரித்துக் கொண்டவன் பதட்டத்துடன் “சாரி சார் ஐ ஆம் ஆல்ரைட் சார்” என்று சொன்னான். மேலாளர் “சரி சரி பதறாதீங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்று சொல்லிக்கொண்டே தனது மேஜையிலிருந்த கண்ணாடி டம்ளரை அவன் முன் நீட்டினார். சட்டென அதை வாங்கி அதிலிருந்த தண்ணீரைக் குடித்தான். அது அப்போது மிகவும் தேவையான ஒன்றாக இருந்தது.

“அடுத்த மாசம் நடக்கப்போற நம்ம கம்பெனியோட ஆனுவல் மீட்ல உங்களத்தான் பெஸ்ட் எம்ப்ளாயீயா செலெக்ட் பண்ணிருக்காங்க. அப்போ நம்ம சேர்மேன் உங்களுக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணப்பரிசும் தரப்போறார். அதுமட்டுமில்லாம நம்ம கிளை சார்பா உங்களுக்கு ஒரு புது பைக்கும் தரப்போறோம். சந்தோஷம்தானே” என்று கேட்டதற்கு எந்தவித பாவமும் இல்லாமல் “தாங்க் யூ சார்!” என்றான். “என்ன கிருஷ்ணன் எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கேன். நீங்க எந்த ரியாக்ஷனும் இல்லாம இருக்கீங்க? எதுவும் பிரச்சனையா? இல்ல உடம்பு எதுவும் சரியில்லையா? வேணும்னா அரைநாள் லீவ் தர்றேன் போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வாங்களேன்” என்று சொல்ல, “அதெல்லாம் வேண்டாம் சார், ஐ ஆம் ஒகே, தாங்க் யூ சார்”. என்று சொல்லிக் கொண்டே வெளியேறினான்.

அவன் வரும்வரை காத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் எல்லோருக்கும் சமபிரதாயமாக மட்டும் நன்றி சொல்லி அங்கிருந்து நழுவி கழிவறைக்குள் சென்று கதவைச் சார்த்திக் கொண்டான். நீண்ட நேரம் கழித்து வெளியே வரும்போது அவரவர் அவரவர் இருக்கைகளுக்குச் சென்று பணிகளை கவனிக்கத் தொடங்கியிருந்தனர்.

மதிய உணவு இடைவேளையில் எப்பொழுதும் சில நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுபவன் அன்று எவரிடமும் சொல்லாமல் தனியே சாப்பிடச் சென்றான். அலுவலகத்தின் சூழ்நிலையிலிருந்து தப்பித்துச் செல்வது அவனுக்கு அவசியமாய் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்தவனை எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுக்கு தர்ம சங்கடத்தைக் கொடுத்தது. வேறு டேபிளுக்குப் போவதற்காக எழுந்தவனிடம் எதிர் இருக்கை ஆசாமி “நீங்க கிருஷ்ணன்தானே?” என்று கேட்டான். ஒரு அன்னிய நபர் தன்னைப் பேர் சொல்லிக் கூப்பிடுவது அவனுக்கு ஆச்சர்யத்திற்குப் பதில் பயத்தையே தந்தது. “ஆமாம். நீங்க யாரு? என் பேர் உங்களுக்கு எப்பிடித் தெரியும்” என பதில் கேள்வி கேட்டவனின் தோள்களில் ஓங்கித் தட்டிய எதிர் இருக்கை ஆசாமி “என்ன கிருஷ்ணா என்னைத் தெரியலயா! நான்தாண்டா குமரகுரு… நாம ரெண்டுபேரும் ஒன்னா பள்ளிக்கூடத்துல படிச்சோமே நியாபகம் இல்லியா” என்று கேட்டான். ஆம் குமருகுரு என்னோடு பள்ளியில் படித்தவன் என்பது நியாபகத்திற்கு வரவே பயம் கொஞ்சம் தணிந்தது. இருவரும் பரஸ்பரம் நலவிசாரிப்புகளுக்குப் பின்னர் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணனுக்குத் தன் பயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கும் நண்பனிடம் இப்படிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்துகொள்வது நன்றாக இருக்காது. மேலும் அவன் தன்னைத் தவறாக நினைக்கக்கூடும் என்ற பயத்தில் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பின்னர் அலுவலகத்திற்கு நேரமாவதாகச் சொல்லி குமரகுருவிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.

அலுவலகத்திற்குள் நுழைந்தவனின் கண்ணில் முதலில் தென்பட்டவள் மதுமிதா தான். அவள் அவனை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள். மது வேலைக்குச் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகின்றன. அவளைப் பார்த்தவுடன் கிருஷ்ணன் காதலிக்கத் தொடங்கிவிட்டான். கண்டதும் காதல். ஆனால் இதுவரை ஒருமுறை கூட இருவரும் பேசிக்கொண்டதில்லை. ஒரே அலுவலகத்தில் இருந்தும் அதற்கான சூழல் இன்னும் வாய்க்கவில்லை. வெறும் பார்வையும், சிறுசிறு புன்னகைகளும் மட்டுமே அவர்களுக்குள்ளான சம்பாஷணைகளாக இருந்திருக்கின்றன. அவள் மனதிலும் காதல் இருப்பதைச் சாத்தியப்படுத்துவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மணி பலமுறை சொல்லியிருக்கிறான். அவள் நெருங்கி வருவது அவனுக்குள் ஓர் இனம் புரியாத பதட்டத்தை அதிகரிக்கச் செய்தது. மற்ற நாளாக இருந்திருந்தால் இது மகிழ்ச்சியான ஒன்றாகவே இருந்திருக்கும். ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது.

“ஹாய் எப்பிடி இருக்கீங்க?” என்று மதுமிதா கேட்ட கேள்விக்கு, நல்லாருக்கேன் என்று ஒரு இயந்திர மனிதனைப் போல் பதிலளித்தான். இந்த வருஷத்தோட பெஸ்ட் எம்ப்ளாயீயா நீங்கதான் தேர்ந்தெடுக்கப்பட்டுருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நின்றாள்.

எந்த பதிலும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனிடம் “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் இப்போ இல்ல, இன்னிக்கு சாயுங்காலம் பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல பாக்கலாம் கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என்றதும் கிருஷ்ணனின் மனதில் முன்பு பார்த்த ஒரு சினிமாவின் காட்சிகள் ஓடத் தொடங்கின.

அதிலும் இப்படித்தான். கதாநாயகன் கதாநயகியைக் காதலிப்பான். அவளும் அவனைக் காதலிப்பதாகவே தோன்றும். உடனிருக்கும் நண்பர்களும் அதனை உறுதிப்படுத்துவார்கள். இருவரும் நண்பர்களாக நெருங்கிப் பழகத் தொடங்கியவுடன் அவள் அவன் மீது பேரதிக அக்கறை எடுத்துக் கொள்வாள். அது நிச்சயமாக காதல்தான் என்பதை நாயகன் மட்டுமல்லாது பார்வையாளராகிய நாமும் உறுதிசெய்து கொள்வோம். ஒருநாள் கதாநாயகி கதாநாயகனிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டுமெனச் சொல்லி ஒரு இடத்திற்கு வரச்சொல்லுவாள். அவனும் தன் ஆசைகளை எல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு ஏதேனும் ஒரு வெளிநாட்டில் கனவு டூயட்டையும் முடித்துக் கொண்டு அவள் சொன்ன இடத்தில் குறித்த நேரத்திற்கு முன்பாகவே வந்து காத்திருப்பான். ஆனால் அங்கோ நாயகியுடன் வேறொருவனும் வருவான். நாயகி நாயகனிடம் அந்த மூன்றாம் நபரைக் காட்டி இவர்தான் எனது காதலர், எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகவே எப்படியாவது நீங்கள்தான் எங்களைச் சேர்த்துவைக்க வேண்டும் என்று சொல்லுவாள். நம் நாயகனும் தன் காதல் சுக்குநூறாய்ப் போன வலியையும் பொருட்படுத்தாது அந்தக் கணமே அவர்களைச் சேர்த்து வைக்கும் தியாக சாகசத்திற்குத் தயாராகிவிடுவான்.

சம்மந்தமே இல்லாமல் இப்படியொரு திரைப்படக் காட்சி மனதிற்குள் ஊடாடியதும் கிருஷ்ணனின் பதற்றம் கூடி அதிகமாக வேர்த்துக் கொட்டியது. இந்த மாற்றத்தைக் கவனித்தவள் “என்னச்சு ஏன் இவ்வளவு வேர்க்குது” எனக் கேட்டாள். அவனோ ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான். அவன் நெற்றியில் கைவைத்து “உடம்புக்கு எதுவும் முடியலியா” எனக் கேட்க அவனோ “அதெல்லாம் ஒன்னுமில்ல இன்னிக்கு சாயுங்காலம்தானே நான் வரேன்” என்றான். அவள் “இல்ல பரவால்ல இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் பாத்துக்கலாம். என்னைக்கா இருந்தாலும் எதுவும் மாறப் போறதில்லை”. என்று சொல்லிவிட்டு பின்னால் சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மணியிடம் “அண்ணா அவருக்கு ஏதோ முடியல போல ரொம்ப பதட்டமா இருக்கறா மாதிரி தெரியுது, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கொஞ்சம் பாத்துக்கோங்கண்ணா” என்றாள்.

பின்னாலிருந்து வந்தவன் கிருஷ்ணனின் தோளைத் தொட்டதும் திடுக்கிட்டுத் திரும்பியவனை ஆசுவாசப்படுத்த. “ஏ.. நான்தான் பதறாத” என்று சொல்லிவிட்டு, “என்னாச்சுடா உனக்கு ஏன் எப்பிடியோ இருக்க” என்று கேட்டான். அதெல்லாம் ஒன்னுமில்லை என்கிற வழக்கமான பதில் வரவும், சற்று கோபத்துடன். “டேய் சும்மா நடிக்காதடா நானும் இன்னிக்கு காலைலேர்ந்து உன்னை கவனிச்சுட்டுதான் இருக்கேன். நீ நடந்துக்கற விதமே சரியில்ல. இபோ நான் மேனேஜர்கிட்ட போய் பெர்மிஷன் கேட்டு வர்றேன். நாம ரெண்டு பேரும் வெளியில போறோம். என்ன பிரச்சனைன்னு என்கிட்ட மறைக்காம சொல்ற” என்று சொல்லிவிட்டு தள்ளி நின்றிருந்த மதுவிடம் “நீ ஒன்னும் கவலப்படாதம்மா நான் பாத்துக்கறேன்” என்றவாறு மேனேஜர் அறைக்குள் நுழைந்தான்.

மணியும் கிருஷ்ணனும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து குளிர்சாதன வசதி கொண்ட அறைக்குள் சென்றனர். இருவரும் எதிரெதிரே உட்கார்ந்திருக்க மேஜையின் மேல் காப்பிக் கோப்பைகள் வைக்கப்பட்டன.

“என்னடா ஆச்சு உனக்கு? இன்னிக்கு காலைலேர்ந்து நீ ஆளே சரியில்ல. என்கிட்டயும் ஒழுங்கா பேசல. மேனேஜரும் உனக்கு என்னவோ ஏதோன்னு பயப்பட்றாரு, வாழ்த்து சொன்ன யாருக்குமே நீ பதில் சொல்லல. இப்போ மதுமிதாவே உன்னைத் தேடிவந்து பேசியும் நீ மனநலம் பாதிக்கப்பட்டவன் மாதிரியே நடந்துட்ருக்க. என்ன பிரச்சனை உனக்கு” என்று மணி கேட்டான். இதற்கு மேலும் தன்னால் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவன் தனது கனவைப் பற்றி விவரித்தான்.

அதைக் கேட்டதும் என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மணி “நீ சொல்றதுபடி பார்த்தால் இன்னிக்கு ஒருநாள் சமாளிச்சுட்டா உன்னுடைய அந்தக் கனவுலேர்ந்ந்து நீ வெளியில வந்துரலாம் இல்லியா” என்று கேட்டதும் ஆமாம் என்று மௌனமாகத் தலையாட்டினான். “ஏன்டா உன்னால ஒருநாள் தாக்குப் பிடிக்க முடியாதா? வெறும் இருபத்தி நாலே மணிநேரம்” என்றவனைப் பார்த்து. “இல்லை.. நீ நினைப்பது போல தற்கொலை என்பது நீண்ட நாட்களா திட்டம் போட்டுச் செய்யக் கூடிய காரியமில்லை. என்னைப் பொறுத்தவரை அது ஒருநொடிப் பொழுதில் நிகழக் கூடியது, அந்த ஒரு நொடி தூண்டக்கூடிய உணர்வெழுச்சியில் நடக்கக் கூடியது. நீ சொல்வது போல அது வெறும் ஒரு நாளாகவோ அல்லது இருபத்தி நாலு மணி நேரமாகவோ இருக்கலாம். ஆனால் அந்த இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் எண்பத்தி ஆறாயிரத்தி நானூறு நொடிகள் ஒளிந்திருக்கின்றன. இதில் என்னைத் தற்கொலைக்குத் தூண்டக்கூடிய ஒரு நொடி எதுவாயிருக்குமோவென்கிற நினைப்பில் வருவதுதான் இந்த பயமெல்லாம்” என்றான். அவன் சொல்வதில் அர்த்தம் இருப்பதாகவே தோன்றியது. “சரி அப்போ ஒன்னு பண்ணுவோம். இங்கேருந்து ஏதாவது சினிமாவுக்குப் போகலாம். அது முடிவதற்குள் இரவாகிடும். பின் எங்கயாவது சுற்றலாம். வெளியிலேயே சாப்பிட்டு தூங்குவதற்காக மட்டும் உன் அறைக்குப் போனால் போதும். மறுநாள் தூங்கி எழும்போது நீ சொன்னது போல இந்த ஒருநாளானது முடிந்து போயிருக்கும். உன் தற்கொலையும் காலாவதியாகியிருக்கும் என்ன சரிதானே” என்றிட, அதுவும் சரி என்றே பட்டது. இருவரும் கிளம்பி தியேட்டருக்குச் சென்றனர்.

தியேட்டரில் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கிருஷ்ணனின் செல்ஃபோன் ஒலித்தது. முதலில் அதைப் பொருட்படுத்தாதவன் மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே அலைபேசியை வெளியில் எடுத்தான். ஆனால் மணியோ அதைப் பிடுங்கி சைலண்ட் மோடில் போட்டுவிட்டான். படம் பார்த்து முடியும் வரை நீ எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது என்றும் சொல்லிவிட்டான். பின்னர் இருவரும் திரைப்படம் முடிந்து வெளியே வந்து பல இடங்களுக்குச் சென்று இரவு உனவையும் முடித்துக் கொண்டனர். மணி கிருஷ்ணனை அவனது அறையில் இறக்கிவிட்டு பத்திரமாக இருக்கும்படியும், ஏதேனும் தேவையெனில் தனக்கு எந்த நேரத்திலும் அழைப்பு விடுக்குமாறும் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அறைக்குத் திரும்பியதும் உடைகளை மாற்றிவிட்டு மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். ஒரே எண்ணிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள் வந்திருப்பதாகக் காட்டியது. கடிகாரத்தைப் பார்த்திட மணி இரவு 11:45 ஆகியிருந்தது. இந்நேரத்தில் தெரியாத எண்ணிற்கு அழைப்பது சரியில்லை என்பதாலும் காலையிலிருந்தே ஏற்பட்ட மன உளைச்சலும் அதனால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவனுக்கு நல்ல தூக்கம் தேவை என்பதை வலியுறுத்தின. மேலும் அந்தத் தூக்கமே தன்னை அடுத்த நாளுக்கு இட்டுச் செல்லுமென்பதால் அது ஒரு கட்டாயத் தேவை என்பதையும் உணர்ந்தான். உறங்குவதற்கு முன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்குள் சென்றான். அவனது அலைபேசி மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது,

வேக வேகமாக வெளியே வந்து கூப்பிடுவது யாரெனப் பார்த்தான், திரையரங்கில் கூப்பிட்ட அதே எண். பத்து முறை தவறியும் பதினோறாவது முறையாக அழைக்கும் அந்த எண்ணைப் பார்த்தவுடன் மீண்டும் மனதில் ஏதோ இனம்புரியாத பயம் தொற்றிக் கொண்டது. அழைப்பை ஏற்றான். எதிர்முனையில் ஒரு பெண் குரல்
”ரொம்ப நன்றி.. கடைசியாவாவது என்னுடைய அழைப்பை நீ எடுத்துட்டேல அதுக்குத்தான் நன்றி. எத்தனை முறை உன் எண்ணுக்கு அழைத்திருப்பேன், ஒவ்வொரு முறையும் என்னத் தவிர்த்துக் கொண்டேதான் இருந்தாய். என்னை உனக்குப் பிடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்று நீயும் சொல்லவில்லை, எனக்கும் தெரியவில்லை, ஆனால் உன்னை உண்மையாகத்தான் காதலிச்சேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போ நீ என்னை உதாசீனப்படுத்தி, ஏமாத்தறேன்னு தெரிஞ்சதும் எனக்கு உயிர் வாழவே பிடிக்கலை. அதனாலதான் நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன். நீ வாங்கிக் குடுத்த அதே புடவைல தூக்குப் போட்டுக்கப் போறேன். என்னோட இறப்புக்கு நீதான் காரணம்னு யார்கிட்டையும் சொல்ல மாட்டேன். அதுக்கான எந்தத் தடயத்தையும் விட்டுட்டும் போகமாட்டேன். ஆனால் என்னுடைய இந்த முடிவிற்குக் காரணம் நீதாங்கறது உனக்கு மட்டுமாவது தெரியணும். என்னுடைய காதலை அதன் மூலமாவது நீ உணரணும். அதுதான் என்னோட கடைசி ஆசையும் கூட உனக்கு என்னோட முத்தங்கள். ஐ லவ் யூ” என்று ஒரே மூச்சில் பேசி முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்தது அந்தப் பெண்குரல்.

கிருஷ்ணன் செய்வதறியாது திகைத்து நின்றான், யாரிவள்? எங்கிருந்து பேசுகிறாள்? நிச்சயமாக மதுமிதா இல்லை. யாரந்தக் காதலன்? என்னுடைய எண்ணுக்கு ஏன் இவள் அழைக்க வேண்டும்? அவள் மரணம் எனக்கு மட்டும் ஏன் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்? என்னுடைய தற்கொலையில் துவங்கிய நாள் யாரோ ஒரு பெண்ணின் தற்கொலையில்தான் முடிய வேண்டுமா? எனில் இன்று காலையிலிருந்து என்னைத் துன்புறுத்திய மரணம் என்னுடையது இல்லையா? இந்தப் பெண்ணுடையதுதானா? நான் ஏன் இந்த மாயப்புதிர் விளையாட்டில் சிக்கிக்கொள்ள வேண்டும் எனப் பல எண்ணங்கள் அவனை அலைகழித்தன. நீண்ட நேரத்திற்குப் பின்னர் சுயப் பிரக்ஞையை அடைந்தவன் ஏதோ ஒரு பொறி தட்டவே தன் அலைபேசியை எடுத்து அந்தப் பெண்ணின் எண்ணிற்கு டயல் செய்தான். அந்த எண் இப்போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

***


அதீதன்
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here