நொண்டி படையல்

2

மாரி.கிருஷ்ணமூர்த்தி

நாளைக்கு போகி பொங்கல். ஊரில் எல்லோரும் தங்கள் நிலத்தில் உள்ள கிணற்றடியில் பொங்கல் வைத்து படைப்பார்கள்.குறிப்பாக தம் குடும்பங்களில் இறந்து போன கட்டு கழித்திகளுக்கு மஞ்சள் ரவிக்கையும்,பச்சை  வளையலும் வைத்து நொண்டி படையல் வைப்பார்கள். சாயந்திரம் வீட்டிலிருந்து வண்டியை எடுத்துக் கிளம்பும்போது அம்மா திண்ணையில் சாணி மொழுகிய கையோடு வந்து படையலுக்குக்கான சாமானை வாங்கிவரச் சொன்னாள். சனிமூலை திண்ணையில் குழி விழுந்த பள்ளத்தை தன்  பிஞ்சுக் கரங்களால் கொட்டாங்குச்சியில் மண்ணெடுத்து வந்து  மூடிக்கொண்டிருந்தாள் மகள் அர்ச்சனா.

இரண்டு நாட்களாய் தூக்கமில்லாமல் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து விட்டு மதியம் மூணுமணிக்கு தான் வந்து படுத்தேன்.கண்கள் ரெண்டும் பீளை ஒட்டிப்போய் திறக்கமுடியாமல் வலித்தது. அந்தி வெளிச்சத்தைக் கூட பார்க்கமுடியாத அளவிற்கு கண் எரிந்தது. கண்ணை நிமிட்ட நிமிட்ட எரிபூச்சி விழுந்தது போல் காந்தியது.

உள் ரோட்டிலிருந்து பிரிந்து மலைசுற்றும் பாதையில் ஏறியபோது மேலகுப்பம் காத்தாயி பாட்டி ஆட்டோவிலிருந்து வளையல் கூடைகளை இறக்கிக்கொண்டிருந்தாள். பின்னாடியே இன்னொரு கூடையைத் தூக்கியபடி பாந்தமான அழகில் அவள் மருமகளும் அவளோடு இறங்கினாள்.அவள் கால்களில் மஞ்சள் பூசி விரலோரங்களில் மருதாணி வைத்திருந்தாள்.அது சாமந்தி பூந்தோட்டத்தில் செவ்வான  ஒளி வீசியது போல் இருந்தது.அக்காட்சி எரிந்துகொண்டிருந்த கண்களில் குளிர்ச்சியான காற்று  தொட்டுச் சென்றதுபோல் இருந்தது.

சந்திரலிங்கத்துக்கு பக்கத்திலிருக்கும் கும்பகோணம் காபி கடையில் ஆர்டர் சொல்லிவிட்டு உட்கார்ந்திருந்தபோதுதான் குமார் மாமா வந்து எதிர் சேரில் உட்கார்ந்தார். அவர் முகம் பிடிங்கிப்போட்ட மல்லாட்டை செடியாய் வாடிப்போயிருந்தது.என்னைப் பார்த்ததும் சங்கடமாக உணர்ந்தவர் முகத்தில் புன்னகையை வரவழைக்க முயன்று தோற்றுப்போய் திரும்பிக்கொண்டார்.

நடந்து முடிந்த உள்ளாட்சிமன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு சொற்ப ஓட்டில் தோற்றுப்போயிருந்தார். எல்லோரையும் அரவணைத்துப் போகிற மனிதர்தான். ஆனால் ஜெயிப்பதற்கு அது மட்டும் போதவில்லை .அவரது நம்பிக்கை வேர்கள் அத்தனையும் இத்துப்போன பிறகு அவர் வந்து போகிற இடம் இந்த காபிகடை மட்டுமானதாக சுருங்கிப் போய் இருந்தது. மனதிலிருந்த அலைக்கழிப்பின் பிரதியாய் அவரின் கண்கள் அங்குமிங்குமாக பரிதவித்துக்கொண்டேயிருந்தது.சட்டென எதையோ உணர்ந்தவர் போல எங்களுக்கு எதிரே உயர்ந்து நிற்கிற மலையின் பக்கம் பார்வையை திருப்பினார்.அவர் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நிதானமடைய ஆரம்பித்தது. நான் திரும்பிப் பார்த்தபோது மலையில் பட்ட அந்தி வெளிச்சத்தில் கிழக்குப் பக்கமாய் எந்த சலனமும் இல்லாமல் மலையின் நிழல் கொஞ்சம்  கொஞ்சமாக   உயர்ந்துகொண்டே வந்தது .

காரில் மலை சுற்றி வந்த குடும்பம் ஒன்று இறங்கி எங்களைக் கடந்து கடைக்குள்ளே போனார்கள். அவர்களின் முகம் ஆந்திர சாயலில் இருந்தது.அவர்கள் போட்டிருந்த வாசனைத் திரவியம் கடைக்குள்ளே இருந்த எல்லோரையும் வெளியே போக வைத்தது.நான் எழுந்து போய் நடைமேடை ஓரம் கொன்றைமரத்துக்குக் கிழே போட்டிருந்த சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டேன் .பக்கத்தில் ஒரு இளைஞன் போனில் சத்தமாக சீமானின்  ரெளத்திரமான பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.அது எனக்குக்  கேட்காத அளவிற்கு கொஞ்சம்  தள்ளி உட்கார்ந்துகொண்டேன்.

பகல் முடிந்து இரவு கலக்க ஆரம்பித்திருந்த நேரம். மலைமுழுக்க இருள் சூழ்ந்து நிழலாய்த் தெரிய அதைச் சுற்றி உள்ள வீடுகளின் மின்னொளி  அடிவாரத்தை மட்டும் வெளிச்சப்படுத்தியிருந்தது.

அப்பொழுதுதான் பின்னால் தம்பி என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தபோது திகிர் என்றிருந்தது. ஒரு அம்மா சிலை மாதிரி கொன்றை மர நிழலில் இருந்து எழுந்து நின்றாள். அந்தக் கணம் ஏதோ கண்ணுக்குப் புலனாகாத உள் நரம்புகளில் பதட்டம் பீறிட்டு உச்சி முடியில் சிலிர்ப்பான அதிர்வு எழுந்ததுபோல் இருந்தது.

அவள் உதடு லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. குளிர் இறங்கியது போல அவள் கைகால்கள் துடித்துக் கொண்டிருந்தது. பதட்டமும், சோர்வும் கலந்து அவள் கண்கள்   வெளிறிப் போய்க் கிடந்தன. அவள் என்னைப் பார்த்ததும் தயங்கி முன்னகர்ந்து போய் பக்கத்தில் இருந்தவனுக்குப் பின்னால் நின்றுகொண்டாள். மூப்பு தொடுகிற வயதாய் இருந்தாலும்  வெளியுலகம் தெரியாமல் வாழ்நாளெல்லாம் நிலத்தில் மட்டுமே உழைத்து வாழ்கிற அப்பழுக்கற்ற   சம்சாரியாய்த் தெரிந்தாள். அவள் முகம் இருளில் இற்று விழுந்து போயிருக்கிற மஞ்சனத்திப் பூவாய் வாடிப்போயிருந்தது. அவளைப் பார்க்கப் பார்க்க மனதில் தாங்கமுடியாத கனம் ஏறுவதுபோல் இருந்தது.பக்கத்தில் இருந்தவனை யாருக்கும் கேட்காத ஒலியில்  ‘’தம்பி’’ என்று  கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டது அவனுக்கு கேட்கவில்லை. அவனை நான் தொட்டுக் கூப்பிட்டு சொன்ன பிறகுதான் பார்த்தான். அவன் திரும்பி என்ன என்பது போலப் பார்த்தான். 

“ரெண்டு வட”என்றாள்.

அவன் கடையை நோக்கிக் கை காட்டினான்.

அதற்கு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் எதுவும் சொல்லாமல் மவுனமாகத் தரையைப் பார்த்தாள்.

அப்பொழுதுதான் சூழலே புரிந்தது எனக்கு. இத்தீப நகரில் எவ்வளவோ பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறேன். தொடர் பாவனையான ஒரு பரிதாபக் குரல் அவர்களிடம் பாசி படிந்த குளம்போல ஒட்டியிருக்கும். ஆனால் இவளிடம் அதன் சிறு சாயல் கூட இல்லை.

அந்த இளைஞன் பையில் துழாவி சில்லறைகளைப் பொறுக்கி அவளிடம் போடப் போனான்.அவள் கைவிரல்கள்  தீயில் சுட்ட ரணம் போலத் துடித்துக்கொண்டிருந்தது. கையறுந்த நிலையில் கூட  ரோஷத்தின்  ஒரு சொல் அவள் உள்ளிருந்து ஞாபகப்படுத்திருக்கும் போல. சட்டென கையை இழுத்துக்கொண்டாள். எந்த வசையும் இல்லாத கனன்றெரியும்  ஒரு பார்வையைப் பார்த்துவிட்டு மலைப்பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.வாழ்நாள் எல்லாம் இறுக்கிச் சுற்றியிருந்த பிடிமானத்தின்   வைராக்கியம் அவள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியிலும் ஆழப் பதிவதுபோல் இருந்தது.எனக்குள் கைதவறி விழுந்த அந்த  சில்லறையின் சத்தம் குற்ற உணர்ச்சியின் சாவு மணிபோல துளைத்துக்கொண்டேயிருந்தது.

நான் வண்டியைத் திருப்பி வீட்டுக்கு விட்டேன்.எடுத்த எடுப்பிலேயே வண்டியின் வேகத்தை நான்காவது கியருக்கு மாற்றினேன். வேகம் போகப் போக மரங்கள்,மனிதர்கள்,காலங்கள் எனப் பின்னோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.கண்ணில் வாமடையாய் தேங்கிப் போயிருந்த கண்ணீர்  உடைந்து கொட்ட ஆரம்பித்திருந்தது.

அது ஒரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாள். அப்பொழுது ஏழாவது படித்துக்கொண்டிருப்பேன்.  உற்சவர் மலைசுற்றி வருவார். சாமி வரும்போது மாவளி சுற்றி வரவேற்போம். அதுதான் எங்களுக்கான திருவிழா. அதற்காகப் பசங்களோடு சேர்ந்து பனையேறி முற்றின பனம்பூக்களைப் பறித்து வந்து சுட்டுக் கரியாக்கி துணியில் கட்டி ஓணான்கொடியில்  முக்காலி இணைத்து அதில் வைத்துச்  சுற்றுவோம். அதனை  செய்து எடுத்துக்கொண்டு வீடு திரும்புபோது லேசாக இருட்டியிருந்தது. அம்மா திண்ணைக்கும்,தெருவுக்குமாய் பதட்டத்தோடு நடந்து கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகம் கொஞ்சம் தெளிய ஆரம்பித்தது.

“அப்பாவை வழியில் எங்கனா பார்த்தியா” என்றாள்.

நான் “இல்லை” என்று சொல்வதற்குள்ளே கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்.

 அப்பா மலைக்கு நெய்க்குடம் தூக்கப் போயிருந்தார். தீபம் எரிகிற பதினோரு நாளும் எங்கள் பங்காளிகள்தான் நெய்க்குடம் தூக்குவார்கள். பரம்பரையாக தொடர்ந்து வருகிற முறை. காலையில் போனவர் இன்னும் வீடு திரும்பவில்லை.ஊரே கூடி நின்று எதிர்த்தாலும் தனியாக நின்று சமர் செய்யக் கூடியவள் தான் ஆனால் இருட்டு, சுடுகாடு, துர்கனவுகளுக்குப் பயப்படுவாள். இரவில் கண்ட கனவை நினைத்து விடிகாலையில் நடுக்கூடத்தில் ஒப்பாரி வைத்து அழுவாள். அம்மாதிரியான  நாட்களில் சிந்தி வீசும் சளி உள் முற்றத்துத் தூண்களில் துயரம் வடிந்ததற்கான சாட்சியாய்க் காய்ந்து போய் ஒட்டியிருக்கும். அதற்காக அப்பனிடம் அடியும்,உதையும் வாங்கியிருக்கிறாள்.

என்னை இழுத்துக்கொண்டு எங்கள் கொல்லைக்குப் போகும் மண் பாதையில் போய்க்கொண்டிருந்தாள். நான் எதுவும் புரியாமல் அவள் பின்னாடியே ஓடிக்கொண்டிருந்தேன்.

 எங்கள்  கிணறு ஊரிலேயே பெரிய கிணறு. பதினோரு பங்காளிகளுக்கும் கூட்டுக்கிணறு என்பதால் சேரம் பராமரிக்கப்படாமல் இடிந்து போய் அதில் புதர்ச்செடிகளும் வெப்பை, கொடுக்காபலி, பீவேலிகள் முளைத்து பாழடைந்திருந்தது. மின்சார மையமாகி விட்ட இந்த காலத்தில் கூட கிணற்றைச் சுற்றி ஆறு ஆயில் இன்ஜின் வைத்து இறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஈசான்ய மூலையில் இருக்கும் வேப்பமரத்தடியில் இடுப்பளவுக்கு புற்று வளர்ந்து புதர்ச்செடியில் மறைந்துபோயிருக்கிறது. போதாக்குறைக்கு கிணற்றை ஒட்டியே சுடுகாடு வேறு. அந்த  கிணற்றையும் சுடுகாட்டையும் பிரிக்கும் கோடு போல ஒத்தையடிப் பாதையிருக்கும். அதன் தொடக்கத்தில் விரிசடையாய்ப் பெருத்த ஒரு புங்கமரம் எல்லோரையும் பயமுறுத்தி  வரவேற்கும் .அது சுடுகாடு என்று யாராவது இறந்தால்தான் ஞாபகமே வரும். மத்த நாட்களில் பயிரிடப்படாமல் முள்ளு முளைத்திருக்கிற காடாகத்தான் தெரியும்.

 மண் ரோடு முடிந்து ஒத்தையடிப் பாதையில் இறங்கியவுடன் அம்மா பயத்தில் அப்படியே  நின்றுவிட்டாள். பக்கத்தில் வந்து ஆள் நின்றால் கூட தெரியாத அளவிற்கு இருட்டு சூழ்ந்திருந்திருந்தது. கீழ்வானில் சோம்பலாக நிலவு எழுந்திருந்தது. தூரத்தில் மாட்டு சலங்கை சத்தம் கேட்டு அம்மா பயத்தில் உறைந்துபோய் நின்றுவிட்டாள் . அதற்குள் நிலா வெளிச்சம் சாண் தூரம் ஏறியிருந்தது. புகையிலிருந்து வெளிவருவதுபோல ஒத்தையடிப் பாதையில் ஏர் மாட்டை ஓட்டிக்கொண்டு பெரியப்பா வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் அம்மா நிதானத்துக்கு வந்தாள்.

 பெரியப்பா தன்  கனத்த குரலில் ”என்னாச்சி” என்றார்.

அம்மா யாருக்கோ சொல்வதுபோல ”சாயந்திரம் வேலை முடிச்சிட்டு தொட்டியில் முகம் கழுவும் போது சுருக்குப் பையை தொட்டி மேல வச்சவ மறந்து வந்துட்டேன். இந்த மனுசன வேற இன்னும் காணல” என்றாள்.

 பெரியப்பாவுக்கும் எங்களுக்கும் கோர்ட்டில் கேஸ் போய்க்கொண்டிருக்கிறது. வாய்ப்பேச்சு அத்துப்போய் பல வருஷமாச்சு.

“அவன் மலை இறங்கி வந்து கூட்டுக்காரங்களோடு சேர்ந்து சினிமா கொட்டகைக்கு ஏறிட்டான். வர பாதி ராவு ஆவும்” என்றார்.

 மாட்டின் கயிறை அம்மாவிடம் கொடுத்துவிட்டு என்னைக் கூப்பிட்டார்.  அவர் கூட வந்த தைரியத்தில் முன்னாடி ஓடினேன். மனதில் வேறு மாவளி திருவிழாவின்  ஞாபகமாகவே இருந்தது.

 அந்த ஒத்தையடிப் பாதை மலைப்பாம்பு சேற்றில் போன தடம் போல வளைந்து வளைந்து நீண்டிருந்தது. சுடுகாட்டு வரப்போரம் இருந்த புங்க மரத்தோரம் போனபோது மரத்துக்கு அடியில் உட்கார்ந்திருந்த உருவத்தைப் பார்த்து ஓவென்று  கத்தியே விட்டேன். ஒரு நொடி நெஞ்சே நின்று விட்டதுபோல் இருந்தது. சத்தம் கேட்டுக் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த உருவம் தலையுய ர்த்திப் பார்த்தது. தழையெல்லாம் உதிர்ந்து ஈர்க்குச்சியாய் விரவியிருக்கும் கிளைகள் வழியாக விழுந்த நிலா வெளிச்சத்தில் அவள் முகம் கோட்டோவியம் போல நிழல் பதிந்திருந்தது .நெற்றியிலும் முன்  வகிடிலும் வைத்திருந்த குங்குமம் மட்டும் அகல் சுடர்ந்தெரிவதாய்ப்பட்டது. சாவதானமாக ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு கையில் வைத்திருந்த சாணி உருண்டையைப் புங்க சருகில் ஒத்தி வரட்டி தட்டினாள்.

அவளைக் கடந்து தொட்டிப் பக்கம் ஓடினேன். அம்மாவின் சுருக்குப்பை கல் தொட்டி மேலே கிடந்தது . எடுத்துக்கொண்டு திரும்பி ஓடியபோது பெரியப்பா ஒத்தையடிப் பாதையில் பாதி வழியில் வந்துகொண்டிருந்தார்.

அம்மா என் கையில் வைத்திருந்த சுருக்குப்பையைப் பார்த்தவுடன் மலையில் எரிந்துகொண்டிருந்த தீபத்தை கைகூப்பினாள். சுருக்குப்பையைத் திறந்து கத்தையாக உருட்டி வைத்திருந்த பணத்திலிருந்து ஒன்றை உருவி இடுப்பில் சொருகியிருந்த மஞ்சத்துணியில் நேர்த்தி காசு முடிந்து வைத்தாள்.

 இரண்டு நாள் கழித்து ஊரே கிணற்றைச் சுற்றிக் கூடியிருந்தது. ஆட்களை விலக்கி  உள்ளே பார்த்தபோது பூப்போட்ட கலர் சேலை உப்பி மிதந்து கொண்டிருந்தது. நான் பயந்துபோய் தூரமாய் நின்று கொண்டேன். யாரோ உள்ளே குதிக்கும் சத்தம் கேட்டது. வெளியே தூக்கிவரும் போது கூட்ட மறைப்பில் பின்னங்கால் மட்டும் வெளிராய்த் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது பிரட்டிப்போட்ட தவளையாட்டம் ஊதிப்போய் பெருத்திருந்தது. கைகால்கள் எல்லாம் மீன்கள் கொத்தி புண்ணாயிருந்தது. முகம் மட்டும்  சிதையாமல் நெற்றியில் குங்குமம் தீற்றித் தீற்றி கருத்துப்போயிருந்த தடம் அழியாமல் தெரிந்தது. தூரத்தில் அம்மா வருவதைப் பார்த்து ஓடிப்போய் சொன்னேன்.

    முதுகில் சுளீர் என்று விளாசினாள்.

“பாவிப்பயலே ஒத்த வார்த்த கூட சொல்லலையே ஐயோ அவளக் கொன்ன பாவம் நம்மளையும் சுத்துமே” என்று அலறினாள்.

அன்று இரவு உட்கார்ந்திருந்த அந்த புங்க மரத்தடியிலேயே அவள் உடல் வெகு நேரம் தனியாகக் கிடந்தது. போலீஸ் வந்து தூக்கிப் போன போது காத்தாயி கிழவி ”முதமுறையா சுடுகாட்டிலிருந்து பொணம் ஊர் நோக்கிப் போகுது” என்றாள்.  ”அவ உசுர நிறுத்தி வைக்கிற ஒரு சொல்லு கூட இல்லாத  முகமாக கருகிப் போச்சா இந்த பூமி” என்று இரவெல்லாம் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தாள் அம்மா.

 ஒரு நாள் சாயங்காலம் பள்ளியிலிருந்து வீட்டுக்குப் போனபோது திண்ணையில் கூட்டம் கூடியிருந்தது.  கொலைகாரப்பாவி என்று அம்மா ஆங்காரமாக கத்திக்கொண்டிருந்தாள். தூரத்தில் பார்த்தபோது  தெருவில் பேண்டு சட்டை போட்டிருந்த ஒருவர் தலைகுனிந்து நின்றிருந்தார். அவர் பக்கத்தில் என் வயதொத்த சிறுமி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவள் கையில் நைந்து போன அவள் அம்மாவின் புகைப்படம் இருந்தது. ஏதோ ஞாபகம் வந்தவள் போல உள்ளே போய் அடுக்களையிலிருந்து ஒரு தாலியை எடுத்து வந்து அவர் மீது வீசினாள். அன்றிரவு இறந்துபோனவள் அதைத்தான் சாணியில் வைத்து வரட்டி தட்டியிருந்திருக்கிறாள்.

  அவர்கள் தெருவைக் கடந்து புள்ளியாய் மறையும் வரை  பார்த்துக்கொண்டிருந்தோம்.  அந்த சிறுமி திரும்பித்  திரும்பி பார்த்தபடியே போய்க்கொண்டிருந்தாள். அவள் கையில் வைத்திருந்த புகைப்படம் மங்கலாக என் நினைவில் அப்படியே தங்கிவிட்டது.

வெளியே வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே போனபோது கிழக்கு வானில் மேகம் இருட்டிக்கொண்டு வந்தது.  அம்மா திண்ணையில் அர்ச்சனாவுக்கு சோறூட்டிக்கொண்டிருந்தாள். நான் எதுவும் பேசாமல் கனத்துப் போய் அறையில் தாளிட்டு படுத்துக்கொண்டேன். நடுச்சாமத்தில் சன்னமாகப்  பாடல் கேட்டு எழுந்துபோய் வெளியே பார்த்தபோது திண்ணையில் விளக்கேற்றி அதன் முன்னால் முழந்தாளிட்டு பாடிக் கொண்டிருந்தாள். வெளியே மழை வலுத்திருந்தது.

     மாரி…..தெறந்துடுச்சி கேணி கயிர் தூங்கிடுச்ச்சி……..
    சோலை திறந்திடுமே சோத்து பானை ரெம்பிடுமே
    உசுரு போகாத ஒத்த சொல்லு முளைத்துடுமே………
சேதாரம் இல்லாம சேத்து புடுச்சி காத்திடும்மா
    சேந்து கிணத்தோரம் சேலை துணி நா படைக்கேன்………..

கிழக்கு வானில் வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் இருளிட்டிருந்த மலை ஒரு கணம் வெளிச்சமாகியது.

***

  • மாரி.கிருஷ்ணமூர்த்தி – திருவண்ணாமைலையில் வாசித்து வரும் இவர். சிறுகதைகள் எழுதிவருகிறார். தொடர்புக்கு [email protected]

2 COMMENTS

  1. மிக அழகாக உள்ளது உங்கள் நடையும் கதை சொல்லும் உத்தியும் .
    நன்றிகள் தல …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here