Friday, March 29, 2024
Homeஇலக்கியம்நேர்காணல் - கடங்கநேரியான்

நேர்காணல் – கடங்கநேரியான்

நீங்கள் தமிழ் தேசியவாதியா?

பொருளாதாரமயமாக்கல் தனித்த தேசிய இனங்களின் அடையாளங்களை அழித்து தனக்கான சந்தையை நிர்மாணிக்கும் திட்டத்தோடு ஒற்றை உலகை நிர்மாணிக்க முயற்சிக்கிறது. அதன் பொருட்டு பூர்வகுடிகளின் மீது பண்பாட்டு ரீதிரியாகவும் பொருளாதார ரீதியாகவும் போர் தொடுக்கின்றன. உதாரணமாக ஜல்லிக்கட்டு மீதான தடை , கள் இறக்குவதற்கு தடை விதித்திருக்கும் அரசு தான் டாஸ்மாக் நடத்துகிறது. மீத்தேன் , நியூட்ரினோ , அணு உலைகள் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். என் நிலத்தையும் அதன் மீதான மனிதர்களின் உரிமையையும் காக்கவே போராட வேண்டிய சூழலில் தமிழ்த் தேசியவாதியாக செயல்படுவதுதான் நியாயமாகும்.

உங்களின் இலக்கியச் செயற்பாடுகள் அதிகமான கறார் தன்மை கொண்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு உண்டல்லவா?

அதிகாரக் குவிமையத்திற்கு எதிராகப் பயணிப்பது தான் கலை என்பதை திடமாக நம்புகிறேன். அதுவே அப்படியான எனது கறார்த் தன்மைக்கு காரணமாகிறது. ஏனெனில் இங்கே தம்மை இலக்கிய பீடங்களாக நிலைநிறுத்த தனி மனிதர்கள் துவங்கி பதிப்பகங்கள் மற்றும் NGOக்கள் வரை விருதுகள் கொடுக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விருதுகளும் அங்கீகாரங்களும்  அரசியல் நீக்கப்பட்ட படைப்புகளுக்கே போய்ச் சேர்கின்றன மேலும் லாபி செய்தால் போதும் எதனையும் வாங்கிவிடலாம் என நினைப்பது இலக்கியத்தை அழிக்கத்தானே செய்யும். நீங்கள் கறார் என்று சொல்வதை “சமரசமற்ற” என்று பொருள்கொள்கிறேன். நான் இலக்கிய செயற்பாடுகளின் வழியாக எனது எதிர்ப்புக் குரலை காத்திரமாகவே ஒலிக்கிறேன். ஒலிப்பேன்.

கலைவெளிச் செயற்பாடாக  உங்கள் கவிதைகள் இருக்கின்றன. நீங்கள் நிலத்தோடும் மரபோடும் கவிதைகளை மீட்டுருவாக்கம் செய்கிறீர்களா?

ஆம். விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் , பணி நிமித்தமாக ஊர்சுற்றிக் கொண்டிருப்பவன் .ஆகவே இயல்பாகவே என்னுடைய கவிதைகளில் நிலமும் அதன் அரசியலும் இருக்கிறது.  நாம் நிலத்தால் ஆனவர்கள்.  நிலத்தை இழப்பதோ அல்லது சிதைப்பதோ மாபெரும் துயரம்.  அதனை பல்வேறு வடிவங்களில் உணர்ந்தாலும் எதுவும் செய்ய  இயலாது கவிதைகளில் எழுதுகிறேன்.

ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து தமிழகத்தின் சில எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் எதிர்மறையான கருத்துகளுக்கு பின்னால் பொருளாதாரத் தேவைகள் ஔிந்திருக்கிறது என ஒரு முறை எழுதியிருந்தீர்கள். அப்படியானவர்கள் நிறைந்திருக்கிறார்கள் இல்லையா?

சிங்கள பேரினவாதம் நிகழ்த்திய இனப்படுகொலைக்குப் பின்பு தமிழகத்தின் சில ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரும் தொகையை சிங்கள அரசு வழங்கியது. தமிழக எழுத்தாளர்கள் ஒரு சிலர் அதற்கு விலை போனார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஒண்டிப்புலி சர்பத் என்கிற கவிதை எங்கள் இனத்தின் ரத்தத்தை கேலி செய்த வன்மம். அது கிட்டத்தட்ட மாபெரும் இலக்கிய அநீதி. அதற்கு எதிராக குரலெழுப்பிய  உங்களுக்கு எதிராகவே அறிக்ககைளும் கையெழுத்துகளும் நிரம்பிக்கொண்டிருந்தன.

எப்படி அந்தக் காலத்தைக் கடந்தீர்கள்?

கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்றை தங்களுக்கு சாதகமாக மட்டுமே பயன்படுத்துவர் தமிழக கலைச் செயல்பாட்டாளர்கள். மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழர்களை பல வல்லரசுகளுடைய உதவியுடன்  கொன்று குவித்தது சிங்கள அரசு. தமிழனாக பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் மனித குலத்திற்கு எதிரான அந்த அநியாயத்தை உலகில் உள்ள அத்தனை கலைஞர்களும் எதிர்ப்பது தான் அறம். ஆனாலும் தமிழில் எழுதும் சில பிழைப்புவாத எழுத்தாளர்கள் அப்படுகொலையை மறந்தும் கண்டிக்காமல் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது முழுக்க முழுக்க   தனிநபர் பொருளாதார நோக்கிலேயே. அதனை எதிர்ப்பது என்னுடைய கடமையோடு கூடிய அறம். அதற்காக என்னை பாசிஸ்ட் என்றார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவன் எனச் சொல்லி கண்டன அறிக்கையெல்லாம் கொண்டுவந்தார்கள்.

ஆனாலும் மனிதம் பேசக்கக்கூடிய அத்தனை தமிழ்ப் படைப்பாளிகளும் அக் கவிதையை கண்டித்தார்கள் . அவர்களுடைய அந்த அறிக்கை என்னை பலவீனப் படுத்தவில்லை மாறாக என்னையும் என் சொற்களையும்  கூர்மைப்படுத்தியது .

தமிழ் இலக்கியச்சூழலில் பீடையாகக் கிடக்கும் குழுவாதம் பற்றி தொடர்ச்சியாக உங்கள் முகநூலில் எழுதி வருகிறீர்கள். அதற்கு கடுமையான வசவுகள் உங்களை நோக்கி வந்து கொண்டேயிருக்கும். இலக்கிய குழுவாதம் என்பது எதன் அடிப்படையில் ஒன்று சேர்க்கப்படுகிறது?

சாதிய ரீதியாகவும் , பதிப்பகம் சார்ந்தும் , மாற்றி மாற்றி சொரிந்து கொள்ளும் சிறு குறு நண்பர்கள் வட்டத்தாலும்இலக்கியக் குழுக்கள் வளர்கின்றன . அரசியல் நீக்கம் செய்யப்பட அழகியல் சார்ந்து எழுதிய மூத்தவர்கள் தங்களையும் / தங்களது படைப்புகளையும்நிலைநிறுத்திக் கொள்ள அதே பாணியிலான படைப்புகளை ஊக்கப் படுத்துவதில் பொருட்டு விமர்சனங்கள் / அங்கீகாரங்களை /கொடுக்கின்றனர் .

மேலும் தங்களை அதிகார பீடமாக நிறுவிக் கொள்ளும் பொருட்டு கொடுக்கும் விருதுகளின் வழியே தமக்கான அடிமைக்கு கூட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர் தமிழ் இலக்கிய உலகில் விருதுகளை ஏற்றுக்கொள்வது அவமானம் என்றெண்ணிய சூழல் போய் விருதுகளை பெற சகல விதங்களிலும் முயற்சிக்கிறது இளைய தலைமுறை .

இவையெல்லாம் குழுக்களாக இயங்கக் காரணமாகின்றன . என்னளவில் கலை என்பது அதிகாரக் குவிமையத்திற்கு எதிரானது . ஆகவே அதிகாரத்தின் அங்கீகாரத்தை நோக்கிச் செல்பவர்களை விமர்சிக்கிறேன் .

எனக்குதமிழ் இலக்கியவாதிகள் மற்றும் இலக்கிய அதிகார மையங்களிடத்தில் யாதொரு எதிர்பார்ப்பும் இல்லை . ஆகவே துணிந்து இவர்களை விமர்சிக்கிறேன் . அதனால் நிகழும் யாவற்றையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன் .நீரோட்டத்திற்கு எதிர்த்த திசையில் நீந்தித்தான் மீன்கள் வாழ்ந்தாக வேண்டும் .

ஜெயமோகன் தன்னுடைய பதிவில் கடங்கநேரியான் என்பவர் ஆணா? பெண்ணா ? என்று எழுதியிருந்தார். உங்கள் மீது ஏன் இவ்வளவு பெரிய ஒவ்வாமை ?

முந்தைய கேள்விக்கான பதிலில் இதற்கான பதிலும் இருக்கிறது . ஜெயமோகன் தன்னை தமிழ் இலக்கிய உலகின் அதிகார மையமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த நினைப்பில் அவர் நிகழ்த்துவது அனைத்தும் ஆகப்பெரிய நகைச்சுவைகள்.எதனையும் வாசிக்காமலேயே அதெல்லாம் ஒரு படைப்பா என்ற அளவிற்கு கீழிறங்கி அடித்தாடுவார்.வாருங்கள் விவாதிக்கலாம் என்றால் வரமாட்டார். சமூகப் பொறுப்பற்ற அவருடைய எழுத்துக்களை யமுனா ராஜேந்திரனோடு சேர்ந்து தீவிரமாக விமர்சித்திருக்கிறேன் . அதுதான் இப்படி எழுதத் தூண்டுகிறது.கடைசியில் மூக்கறுபடுவது அவர் தான் .

அந்திமழை என்னை சமூக ஊடகங்களில் இயங்குபவர்களில் நம்பிக்கை நட்சத்திரம் என்றெழுதியது. அதனைப் பொறுக்காமல் என்னுடைய கவிதைகளையும் வாசிக்காமல் “கடங்கநேரியானுடைய கவிதைகள் அறிவுமதியின் கவிதைகளை போலானவை என்றார். அறிவுமதியின் கவிதைகளுக்கும் எனது கவிதைகளுக்கும் வடிவ ரீதியாகவும் சொல்லும் முறை ரீதியாகவும் யாதொரு சம்மந்தமுமில்லை என்பதனை வாசித்தவர்கள் அறிவர்.

நானும் ஜெயமோகனை வாருங்கள் பொது மேடையில் என்னுடைய கவிதைகள் குறித்து விவாதிக்கலாம் என அழைத்தேன், அதற்கு பதிலாக அவர் எழுதியது தான் நீங்கள் கேட்ட கேள்வி.

வாருங்கள் ஜெமோ ! நாம் ஒரு டேட்டிங் போகலாம் , நீங்கள் வாயாடி நான் ஆணா பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள் என்றழைத்தேன்.இதுவரை பதில் இல்லை.நீங்களாவது கேட்டுச் சொல்லுங்கள் .

சொக்கப்பனை கவிதை நூலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை இது எனது துணிபு. அதுவொரு புதிய மொழிதல் கொண்ட நிலத்தின் கவிதைகள். சொக்கப்பனையை உங்கள் கவிதை இயக்கத்தில் ஒரு திருப்பம் என்று சொல்லலாமா?

யாரும் பேசுவார்கள், அங்கீகரிப்பார்கள் என்பதற்காக நான் எழுதவில்லை . நான் கண்டதைஉணர்ந்ததை பதிவு செய்கிறேன். “சொக்கப்பனை ” நிலத்தின் அழகியலாலும் அரசியலாலும் ஆனது. மைய இழையாக காமமும்,நீர் மேலாண்மையும் அதன் அவசியமும் இருந்தது . அது குறித்து ஒருசிலர் பேசினாலும் நூலில் பேசப்பட்டிருக்கும்  அரசியல் குறித்து பேசுவதைத் தவிர்த்தனர்.  ஏனெனில் என் கவிதைகளின் அரசியல் பேசும்போது அவர்களுடைய கவிதைகளின் தோல்வியை ஒப்புக் கொள்கின்றனர் என்பது போலாகிவிடுகிறது. என்னுடைய குரல் தனித்த குரல்.

அது வனாந்தரத்தில் பட்டு எதிரொலித்துஎன்னுடைய நிலத்திற்கு கேட்டால் போதும் .சொக்கப்பனை ” என் வாழ்வில் மிக முக்கியமானது . எரிப்பதும்  எரிந்துகொண்டிருப்பதும் தானே என் வாழ்வு ? சிற்றாற்றங்கரையில் சாம்பல் பூக்களாக நான் மலருமட்டும் என் வாழ்விற்கான  எண்ணையை ஊற்றும் கவிதைகள்.  மேலும் நான் மனிதர்களை நம்புவதை விட சொற்களையே நம்புகிறேன்.

கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு அசாதாரணமான அமர்வுகளை நிகழ்த்தியிருக்கிறது. இனப்படுகொலையும் இலக்கியமும் என்கிற ஒரு நாள் அமர்வு மிக முக்கியமானது. கூழாங்கற்கள் குறித்துச் சொல்லுங்கள் ?

வாசித்தவற்றை பகிர்ந்துகொள்ளவும் பாராட்டவும் தான் நண்பர்கள் சேர்ந்து கூழாங்கற்களை துவக்கினோம் ,. அது மெல்ல மெல்ல தனக்கான திசையையும் அரசியலையும் தீர்மானித்துக் கொண்டது . தீபா நாகராணி , மே.அருணாச்சலம் , டிராக்டர் முருகன் , ரெங்கா கருவாயன், ஹரிஷ்குமார் பாண்டியன், பழனி குமார், பரமசிவம் சைக்கிள் சிவா, ரேவா, ஹூபேர்ட், போன்ற நண்பர்கள் பக்க பலமாக இருந்து முன்னெடுத்துச் சென்றனர் .

மொழி தனக்கான ஆயுதமாக கூழாங்கற்களைப் பயன்படுத்திக்கொண்டது.

”விற்ற விதை நெல்./திரும்பக் கிடைத்தது/வாய்க்கரிசியாக.”    இந்தக் கவிதை “யாவும் சமீபித்திருக்கிறது” என்கிற உங்கள் தொகுப்பில் உள்ள கவிதை. இன்றைய தமிழகத்தின் சூழலுக்கு பொருந்திப்போகிற துயரம். எந்த உணர்வு நிலையில் இத்தனை எழுதினீர்கள் என்று நினைவுண்டா ?

இந்தப் பதிலை எழுதிக்கொண்டிருக்கும் நாளில் பன்னிரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு வருடங்களுக்கு முன்பாக இதனை எழுதும் போது விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருந்த போது மரபணு மாற்ற விதைகளுக்கு அனுமதி கொடுப்பது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. விவசாயிகளை வேறு தொழில்களை பார்க்கச் சொன்னார் மன்மோகன்சிங் ஏனெனில் பொருளாதார நிபுணரான மன்மோகன்சிங் பார்வையில் விவசாயம் என்பது லாபம் கொழிக்கும் தொழில் அல்ல . அதே நேரம் விவசாயம் என்பது எங்களுக்கு தொழில் அல்ல வாழ்வு முறையின் நெறி. .

விதை நெல்லை சேமிப்பிலிருந்து எடுத்த காலம் மாறி கடைகளில் வாங்கும் காலத்தை பொருளாதாரமயமாக்கல் நிர்பந்தித்து விட்டது .

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்களுக்கும் விவசாயத்தை வாழ்வியலாகக் கொண்டவர்களுக்குமிடையேயான போராட்டம் தான் அக்கவிதை .

உங்கள் கவிதையை மனுஷ்யபுத்திரன் கையாடல் செய்துவிட்டார் என குற்றம்சாட்டினீர்கள். அதனை நீங்கள் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் உங்களின் எந்தக்கவிதையை எவ்வாறு கையாடல் செய்திருக்கிறார் ?

இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தேன் . அப்போது கல்லிடைக்குறிச்சியில் மொத்தம் நான்கே நான்கு பேர் பங்கேற்ற இறுதியாத்திரைஒன்று சென்று கொண்டிருந்தது . அப்போது நான் மதுரையில் வசித்துக் கொண்டிருந்தேன் . என்னுடைய கிராமத்திற்கும் கல்லிடைக்குறிச்சிக்கும் முப்பது கிலோமீட்டர் தொலைவு தான் . அந்தக் காட்சி மனதை வெகுவாக பாதிக்க அம்பாசமுத்திரம் ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டு தாமிரபரணியை பார்த்தவாறே புகைத்துக் கொண்டிருந்தேன் . அப்போது ஆற்றில் ஒற்றை மாலை மட்டும் மிதந்து வந்தது . வலிமிகுந்த இந்த இரண்டு காட்சிகளும் தான் “இறுதி யாத்திரை ” எனும் கவிதையாக பிறந்தது .

“சாவுக்கொட்டுச் சத்தமில்லை
சாராயமருந்தி யாரும்சலம்பவுமில்லை
முன்னும்பின்னும்யாரும் வரவும் இல்லை.
தனியேதூக்கிச் செல்கிறதுநதி ,
மயானம் வரை
பிணம் சுமந்து வந்தமாலையை … ..”

***

கீழே மனுஷ்யபுத்திரனின் கவிதை …

உடன் வருபவர்கள் இல்லை
தாரை தப்பட்டைகள் இல்லை
குடிகாரர்களின் ஆட்டம் இல்லை
வழி நெடுக்கக் கசியும்
பிரிவின் துயரங்கள் இல்லை.
அமரர் ஊர்தியில்போர்த்திய மாலைகளிலிருந்து
மலர்கள் நீர் வழியெங்கும்
அவ்வளவு தனிமையுடன்
உதிர்ந்து கொண்டிருக்கின்றன …..

ஒரே காட்சி / கருப்பொருள் இரண்டு கவிஞர்களின் கவிதைக்குள் வரலாம் , ஆனால் அது இப்படி வார்த்தைக்கு வார்த்தை வரைக்கும் ஒன்று போல இருக்காது .நான் புதியவன் . அவர் அறியப்பட்ட கவிஞர் . நாளையே அவருடைய கவிதையை நான் பிரதியெடுத்து விட்டதாக அவருடைய பலத்தை பயன்படுத்தி யாரையாவது எழுத வைக்கலாம் . ஆக இதனை பதிவு செய்வது என்னுடைய கடமையாகிறது .

ஈழ இலக்கியத்தில் வெளிவரும் படைப்புக்களை தொடர்ச்சியாக வாசிப்பவர் நீங்கள் அண்மையில் நீங்கள் வாசித்த ஈழப்படைப்புக்கள்?

உங்களுடைய “இரண்டாம் லெப்ரினன்ட் “தீபச்செல்வனின் பேரினவாதத் தீ “, வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி ” , தமிழ் நதியின் பார்த்தீனியம் ,  கவியழகனின் அப்பால் ஒரு நிலம் . சேனனின் லண்டன்காரர் .

எல்லா இலக்கிய சண்டைகளுக்கும் தலையை நீட்டுபவர் நீங்கள் எனும் குற்றச்சாட்டு தொடர்கிறதே ?

இலக்கியம் என்பது பொதுவானது தானே ? அதன் பெயரால் நிகழும் நல்லவற்றை ஆதரிக்கும் அளவிற்கு கெட்டவற்றை எதிர்க்கிறேன் அவ்வளவே . இங்கு எல்லோருக்கும் புகழும் பாராட்டும் அங்கீகாரமும் விருதும் தேவையாயிருக்கிறது . அதனை லாபி செய்து பெறும்போது நாம் எதிர்த்துத்தான் ஆகவேண்டும் . நல்லவற்றிக்காகத்தானே சண்டை போடுகிறோம் .

இயல்பாகவே என்னுடைய சொற்கள் கூர்மையானவை. முதுகெலும்பற்ற பிழைப்பு வாதிகளுக்கு எதிராக அது இன்னும் கூர்மையாகிறது . அதனில் காயமடைபவர்கள் தான் என்னைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் .வெறுமனே சண்டைக்கு அலைபவனிடம் கலை ஒரு போதும் தங்காது என்பதை நம்புகிறேன் . என்னுடைய எழுத்திற்கு உண்மையாக இருக்கிறேன் அது போதுமெனக்கு .

தமிழகத்தில் ஈழ இனப்படுகொலைக்கு பின்னர் உருவான பல்வேறு தமிழ்தேசிய இயக்கங்களுள் எந்தவொரு அமைப்புக்கும் இலக்கிய அமைப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அது மாபெரும் குறைபாடல்லவா?

முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு தன்னியல்பாக  இளைஞர்களிடம் ஏற்பட்ட உணர்வெழுச்சியை யாரும் கூர்தீட்டவில்லை என்பது உண்மை . மே 17, கலகம் போன்ற அமைப்புகள் கலை, இலக்கியம் பக்கம் செலுத்தும் கவனம் போதுமானதாக இல்லை. ஈழப் படைப்புகளை மக்களிடையே கொண்டு சேர்த்தாலே போதும் மக்கள் மிகப் பெரும் விழிப்புணர்வு அடைவார்கள் . மாறாக சிங்களப் பேரினவாதத்தின் நிதிநல்கையில் திளைக்கும் பதிப்பகங்களின் பொய்யான படைப்புகளுக்கு மறுப்பு எதிர்ப்பு தெரிவிப்பதிலேயே சக்தியை விரையமாக்குகிறோம் .

நீங்கள் நாம் தமிழர்கட்சிக்கு பிரச்சார வேலைகளில் ஈடுபட்டீர்கள். நாம் தமிழர் கட்சியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிற இடத்தை சொல்லமுடியுமா?

நான் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவன் இல்லை . கடங்கநேரியில் நாம் தமிழர் கட்சிக்கு கொடியோ கிளையோ கிடையாது . தேசிய /திராவிட / இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் பிடிக்காத இன உணர்வு கொண்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆதரவாக செயல்படலாம் எனக் கேட்டார்கள் சரி எனச் சொல்லி வாக்குச் சாவடி பிரதிநியாக செயல்பட்டேன் . சாதி வெறி பீடித்த கிராமத்தில் இனவுணர்வை கொண்டு சேர்த்தது நாம் தமிழர் . முதன்முறையாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது . தேசபிதா(பிரபாகரன்) பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறார்கள். இவையெல்லாம் நாம் தமிழரால் தான் கடங்கநேரியில் சாத்தியப்பட்டது.

நீங்கள் கவிதைகளை எழுதுவதைப் போல கட்டுரைகளை எழுதவேண்டும் என்று நினைப்பவன் நான். கட்டுரைகள் எழுதினால் இன்னும் உங்களுக்கு சவால்கள் கூடிவிடுமல்லவா?

ஆம் , நிறைய கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது . கட்டுரைகளில் கவனம் செலுத்தினால் புனைவுகளை பாதிக்கும் என நினைக்கிறேன் . கடங்கநேரியைப் பற்றிய நாவல் ஒன்றை எழுதி முடித்த பின் கட்டுரைகளில் கவனம் செலுத்துவேன் . .

 

நேர்காணல் – சந்திப்பு – அகரமுதல்வன்

 

(நன்றேது, தீதேது – மோக்லி பதிப்பகம்  நூலிலிருந்து)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular