நீலப்பூ

0

அகராதி

நீலக்கலர் அவனுக்கு மிகப் பிடிக்கும். உடுத்தும் பெரும்பாலான ஆடைகள் நீலக்கலரிலேயே இருக்கும்படி பார்த்துக் கொள்வாள். நீலத்தைக் கவனித்து, கவனித்து அவளுக்கும் அந்த நீலத்தின் மீது தணியாத மையல் வந்து விட்டது, நீலமே மையல் வண்ணம்தானே! நீலத்தில்தான் எத்தனை வகை! வானிலொன்று, வண்ண மயிலில் ஒன்று, கடலில் ஒன்று, கார்வண்ணனில் ஒன்று, ராணுவத்தில் ஒன்று, ராமனில் ஒன்று, விடத்தில் ஒன்று, விழியில் ஒன்று… விரிந்து கொண்டேயிருக்கும் வானின் அழகைப்போன்று திகட்டாத விந்தை இந்த நீலம்! உலகமே நீலத்தினால் ஆனது என்ற எண்ணம் அவளுக்குள் நீலச்சொட்டாய் விழுந்து உள் எங்கும் வியாபித்திருந்ததை விளக்க முடியவில்லை…

ஆளுயரக் கண்ணாடியின் முன் நிற்கையில் அவள் தோளில் முகத்தை வைத்து ஒட்டியபடி நிற்பான். இரண்டு மூன்று முறைகள் தொடர்ந்து இப்படி வந்து நின்றதன் பலன் எப்போது அவள் கண்ணாடி முன் தனித்தே நின்றாலும் அவள் முகத்திற்கு முன் அவன் முகமே கண்களில் சிரிப்புடன் தெரியும்.

வெளிர் நீலநிற ஆடை அணிந்தீர்களானால் மனம் அமைதியாயிருக்கும் என வண்ணங்களின் ஆராய்ச்சிகள் கூறியதைப் படித்திருக்கிறாள். அவனும் அவனது நீலமும் அமைதியின்மையைத்தான் கொடுக்கிறது. நீலநிற ஆடை அணிவதால் வெப்பத் தாக்குதல் குறையும். அவ்வளவு ஏன் விளையாட்டுகளுக்கான இந்திய நிறம், நோபல் விருதில், ஐ.நா சபை அலுவலகச் சின்னங்களில் எல்லாம் நீலம்தான் என்று பள்ளியிறுதி ஆண்டு விளையாட்டு விழாவில் தலைமையேற்ற சிறப்பு விருந்தினர் கூறியதை அவனிடம் கூறினாள். பல் தெரியாமல் சிரித்தான். பாராட்டுவது போன்று இருந்த அந்தச் சிரிப்பிற்காக மேலும் சில தகவல்களைத் தேடிப்படித்துக் கூறினாள். கேட்டுவிட்டு இடுப்பில் இரு கைகளையும் கோர்த்து தரையிலிருந்து நின்றவாக்கில் இரண்டடித் தூக்கி இறக்கினான். மாலைப் பொழுதொன்றில் தென்றல் வருட நீலநிற ஆகாயம் காணும் கண்களில் ஆகாயம் முழுதும் அவனது முகமும் வண்ணமுமே தெரிந்ததை நினைத்து தனக்கு டியுட்டரெனோஃபியா என்னும் நிறக்குருடு வந்து விட்டதோ எனவும் அவள் யோசித்தது உண்டு.

இங்கு வரவிருக்கும் தேதியையும் நேரத்தையும் இன்று மேலதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றிருக்கிறான்.

கொஞ்சமாய் வரையத் தெரியும். மலர்கள் பிடிக்கும். அதுவும் நீலக்கலரில் ஆழ்ந்து கிடக்கும் சங்குப்பூ மீது கூடுதல் பிரியம். வந்தவுடன் பரிசளிக்கவே இந்த ஊதாப்பூ. அதைத்தான் இம்மி இம்மியாக வரைய முற்பட்டுக் கொண்டிருக்கிறாள். மலரின் காம்பு பாகத்திலிருந்து ஆரம்பித்திருக்கவில்லை. இதழின் நுனியிலிருந்து கோடிழுத்து ஆரம்பித்தாள். இரண்டடித் தாள் முழுதும் ஒரே ஒரு சங்குப்பூ வரையத் திட்டம். அகண்டு விரிந்திருந்த நுனிப்பகுதி தீட்டும் பொழுது அந்தத் தடிமனான தாள் மீது கிட்டத்தட்ட படுத்து வரைந்து கொண்டிருந்தாள். முதன்முதலில் அவனுக்கும் அவளுக்குமான தூரம் இப்படித்தான் மையப்பகுதி விட்டு அந்தந்தப் பக்க, நுனியில் இருந்தது.
*
ஷாப்பிங் மாலில் விரைந்து கொண்டிருந்த லிஃப்ட்டிற்குள் இருக்கையில் அவன் கீழ்தளத்தில் நின்றிருந்தான். நின்றிருந்த தோரணையும் இங்கிருந்து தெரிந்த அவனது ஒரு பக்கமும் கவர்ந்தது. ஓசைப்படாமல் அதே லிஃப்ட்டில் இறங்கிப்போய் பார்க்கலாமா என்று விளையாட்டாய்க் குறுகுறுத்த மனதை நினைத்துப் புன்னகைத்துக் கொண்டாள். சங்குப்பூவின் நுனியில் இந்த ஓரத்தை தீட்டிக் கொண்டிருக்கும் போது அந்த ஓரம் எட்டாமல் மெனக்கெட வேண்டியிருந்தது. ஷாப்பிங் மாலில் அவன் ஒரு பக்கமும் இவள் ஒரு பக்கமும் சந்திக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தது போல அன்று அவன் பார்த்தது போலவும் இருந்தது பார்க்காதது போலவும் இருந்தது.

வீட்டிற்கு வந்து அவன் சிந்தனையே சுற்றியது. அவன் பார்த்திருந்து அவன் மனதிலும் இதேபோல என் நினைவு இருந்தால் திரும்பவும் சந்திப்போம். சந்திக்க வேண்டும். அந்த வியாழன் அன்று துர்க்கை அம்மனிடம் விண்ணப்பித்தாள். வெள்ளி எள் விளக்கிட்டாள். அடுத்த வாரம் அதே கிழமை, அதே இடம், அதே நேரத்திற்குச் சென்றிருந்தாள்.

இல்லை.

இரண்டாவது வாரம் திரும்பவும் போகச் சொல்லியது நினைவில் இருந்த அவன் உருவம்.

சென்றாள்.
*
பூவின் மத்தியப் பகுதிக்கு வந்திருந்தாள். பென்சிலில் கவனமாகத் தீட்டி அழுத்தமானத் தீற்றல் கொடுக்காமல் மெலிதாக அதே சமயம் நன்றாகத் தெரியும்படி தீற்றிக் கொண்டிருந்தாள். இது முடிந்த பின்தான் நீலத்தை அழுத்தமாய்க் கலக்க வேண்டும்.
*
ஷாப்பிங் மால் செல்லும் போது எந்த நம்பிக்கையில் வருகிறோம், எது நம்மை இங்கே நடத்திக்கொண்டு வருகிறது தனக்குத்தானே ஆச்சரியப்பட்டுக் கொண்டே விழிகளைச் சுழல விட்டாள். வந்திருந்தான். கறுப்பென்றால் ஒரு இடம் கூட விடாத நெருக்கமான அடர்த்தி மிகுந்த கறுப்பு. பளபளப்பான தோல். அகண்டு பரந்திருந்த தோளின் கம்பீரம் தஞ்சமடையக் கட்டளையிட்டது. சிரித்தால் திகட்டாத அந்தச் சிரிப்பு திரும்பவும் எப்போது வாயில் அமரும் என்ற எண்ணத்தைத் தோன்ற வைத்தது.. அரிதாகவே பல் தெரியச் சிரித்தான். பால் வண்ணத்தில் கரிய முகத்தின் மேல் அச்சுக் கொட்டியது போல் பற்கள். திட பசும்பால்.

மறைத்தவற்றைக் கண்டுபிடித்து விடும் கண்கள் கொண்டவன்! ஒரு தரத்துக்கு மேல் இன்னொரு தரம் பார்த்தாலே கண்டுபிடித்து கருவிழி, மேல் நின்று நகர்கிறது. துடிப்பும் உழைப்பும் சேர்ந்து வாகான உடல்..
மயிர்கள் சுருண்டிருந்த உறுதியானக் கைகளில் அணைந்து கொள்ள வேண்டும். ஒருமுறை பார்த்து நகர்ந்த பிறகும் அழிச்சாட்டியமாய் நகராமல் கண்களை நிறைத்து நின்று கொண்டது கறுப்பு வண்ணம். திரும்பிய பக்கமெல்லாம் கண் மறைத்து நின்ற வண்ணத்தை மிகுந்த முயற்சி செய்து விலக்கி விலக்கி நகர வேண்டியிருந்தது.
நெருப்பு மாதிரியல்லவா மின்னுகிறது. மஞ்சளும் செந்நிறமுமாக இருக்கிற நெருப்பை அணைத்தால் வருகிற கரியின் கருப்பு களை இழந்து போகிறது. ஆனால் இந்தக் கருப்பு மினுங்குகிறதே! மனது கரைந்து கொண்டிருந்தது.

எப்படிப் பேசுவது, என்னப் பேசுவது? ஏதேனும் பேச வேண்டுமென்று மனம் உந்தியது. அவனுக்கும் இதே போன்று எண்ணம் இருக்குமா? தெரியாமல் எப்படிப் பேசுவது? இருவரும் ஒரே வரிசையில் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “நீங்க இதே ஏரியாவா?” அவன்தான்… சட்டென்று வந்தக் கேள்வியில் திகைத்துப் போனாள்.

“இ.. இல்லைங்க”

“ஹோ ‘இல்லைங்க’க்குக் கூட இனிஷியல் இருக்கா!”

இறுக்கமும் பதட்டமும் தளர்ந்து சிரித்துப் பேசத்தொடங்கினாள். பேசினார்கள். அடுத்தடுத்த முறை என்று வேலை வைத்துக்கொண்டு அதே மாலில் சந்திப்பு தொடர்ந்தது. அதை ஒட்டிய ரெஸ்டாரெண்டில் காஃபி நேரங்கள் அதிகரித்தன. பார்க், பீச், சினிமா தியேட்டரின் நேரங்களும் போதாமல் ஒருநாள் திருமணம் செய்து கொள்ளலாமென முடிவெடுத்து அவர்களே திருமணம் பேசி ஒரு நன்னாளில் செய்து கொண்டார்கள். சுற்றம் பின்னொரு நாளில் இணைந்து கொண்டது. இணைத்துக் கொண்டது.
*
பூவின் மையக்குழிவுப் பகுதிக்கு வந்திருந்தாள். அவனுடனான தனித்த பொழுதுகள் நினைவிற்கு வந்து, மையப்பகுதியை வரைய இயலாமல் பென்சிலைக் கீழே வைத்து விட்டாள். வெளியில் சென்று சிறிது நேரம் ஆகாய நீலத்தை விழிகளில் விழுங்கினாள். தாகம் தீர்ந்த பறவைப் போன்று சிறிது ஆசுவாசம் அடைந்து உள்ளே வந்து மையப்பகுதிக்கு கணம் கூட்டக்கூட்ட விரல்கள் நெகிழ்ந்தன.
பூ கசிந்தது.
*
அவனுக்கு உடை மறைத்த இடம் ஒரு கலர், முதுகு ஒரு கலர், தொடை ஒரு கலர், வயிறு ஒரு கலர் என்றில்லை அத்தனையும் இடம் விடாமல் ஒரே அளவில் அடித்துக்கொள்ள முடியாத கறுப்பு மின்னல். மர்மப் புன்னகை! அப்படியே அவனைத் தன்மேல் அப்பிக்கொள்ளும் ஆசை வரும். ஒட்டிக்கொள்ள முடியாததால் அவளது எண்ணத்தின் வடிகாலாக கை காலென மாற்றி மாற்றி கிள்ளி வைப்பாள். சிரிப்பான். அவனுக்குத் தெரியும் கிள்ளிய இடங்களில் முத்தங்கள் கிடைக்குமென…
*
பெருமூச்சுடன் இடைவெளி விட்டு ஒருவழியாக முடித்தாள். இன்னும் சில சின்னச்சின்ன ஒழுங்குகளைச் செய்து முடித்து வண்ணம் சேர்க்கும் பணியில் சிரத்தையாயிருந்தாள். அப்படியே கண்ணனின் நிறம். லேசாகத் தீற்றியிருந்த கோடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக நீலத்தைக் கலந்தாள். நீலம் அடர்ந்தது.

வெளிர் பச்சையை நடுவில் கொடுத்து விட்டு நிமிர்ந்த போது தானே சங்குப்பூவாகி இருந்ததாய் உணர்ந்தாள். வரைந்த பூவின் மீது உடல் ஒட்டி, கன்னம் வைத்துப் படுத்துப் பார்த்தாள். இரண்டு நீலப்பூக்கள்!.. வரைந்ததை எடுத்து வைத்துவிட்டு எழுகிறாள். வரையும் மும்முரத்தில் கவனிக்காதப் புடவை கடலலை நனைத்த மணல் போல அலைந்திருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

வீட்டில் இருக்கையில் அவன் உடுத்தும் மஞ்சள் வண்ண அரைவேட்டி அலைந்திருக்கும் போது கடலோர மணலெல்லாம் மஞ்சள் வண்ணமானது போலிருக்கும்.

அவன் நினைவுக்காக இந்த மேகநிறப் புடவையை உடுத்திக் கொண்டிருந்தாள். கண்ணாடியின் முன் நின்று புடவையை சரிசெய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க, பிளவுசிலும் தோளிலும் நீலக்கலர் விரவிக் கிடக்கிறது.. கண்ணாடியில் தெரியும் தோள், அதனில் அப்பிக் கிடக்கும் நீலம். கண் விலக்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் தான் ஒரு கேள்வி போலவும் அவன் பதில் போலவும் தெரியும். பன்மையா? ஒருமையா? எனில் எது ஒருமை? எது பன்மை? பெண் உடல் கேள்வி. ஆண் உடல் பதிலென நினைத்துக் கொள்வாள். அவன் தன் தோளில் முகம் புதைத்துக் கொள்ளும் காட்சி, தனித்த பொழுதில் இதே தோளில் செல்லமாய் பற்பதித்த தருணம், முகவாய்க் கட்டையை வைத்து தாங்கியாக்கிய நேரம் எல்லாமும் மங்கலானக் காட்சியாகிக் கண்முன் சுருங்குகிறது.

கண்ணாடியில் தெரியும் தன்னைக்கண்டு தனக்குத்தானே தோழியாக்கிப் பேசிக்கொள்கிறாள். பெரிய வேலை, கை நிறைய சம்பளம் என்று வெளிநாட்டிற்குச் சென்று விட்டவன் வருவதற்குள் தனது சின்னச்சின்ன ஆசைகளும் போய் விடுமோ, இளமையும் போய் விடுமோ என நொந்து கொண்டவளாகக் கூறினாள். “அடுத்த ஜென்மத்திலயாவது என் கூடவே இருக்கணும். இதோ இப்படிக் கலைஞ்சிருக்க புடவை, ஈஷியிருக்க மை, இந்தப் பூ எல்லாமும் பக்கத்திலேயே இருந்து பாக்கணும்” பொதுவாய் ஜீன்ஸ், குர்தி, சுடி என்று அணிபவள் அவனுக்குப் பிடிக்கும் என்று அவன் நினைவில் புடவை உடுத்தியிருந்தாள். எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் பிடிவாதமாய் வீடியோ அழைப்பைத் தவிர்த்து விடுவாள். அவள் அம்மா கூட சொல்லிப் பார்த்து அலுத்து விட்டாள். ஏக்கம் இன்னும் கூடுமென உறுதியாக மறுத்து விட்டாள்.

செய்தி பரிமாற்றமெல்லாம் செவிவழி அழைப்புகளில்தான். அதனை விட்டால் மெசேஜ். அவள் குறிப்பிட்ட நேரம் வந்து விட்டது மேலதிகாரியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேனென்ற நேரம் இது. டெலிகிராம் சத்தம் குயில் கூவுவது போல் நுண்ணிய இடைவெளி விட்டு இரண்டு முறை கேட்கிறது. நாலு இலக்க பாஸ்வேர்டை நொடிக்கும் குறைவான நேரத்தில் தட்டச்சிட்டு ஓபன் செய்கிறாள்.

இந்த வருடமும் வர இயலவில்லை என்கிறது டெலிகிராம் மெசேஜ்.

கண்கள் மூட கருமை நிறம் உள்ளே அடர்ந்து பரவுகிறது. மிகத் தொலைவில் அவன் முகம் தெளிவற்று மங்குகிறது. கேள்விகள் அத்தனைக்கும் பதில் கிடைப்பதில்லை. மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டு அப்படியே வரைந்த நீலப்பூவை நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாள். உடற்சூட்டில் சங்குப்பூவின் நீலம் வெளிறத் தொடங்கியிருந்தது….

***


அகராதி
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here