நீலநதியில் நீந்திய மீனின் சிறகுகள்

0

சித்ரன்

லக்ஷ்மி சரவணக்குமாருடனான நட்பை எழுதுவதென்பது இலக்கியத்தைத் தவிர வேறு எதையும் பொருட்படுத்தாது, மொழியை வசமாக்கும் அக்கலையின் மீதான பிரம்மிப்பில் உழன்ற நாட்களைப் பற்றிய ஒரு இனிய நினைவு கூறலே. லக்ஷ்மி உடனான அறிமுகத்திற்கு நண்பன் கலைவாணனே காரணம். அப்போது தாம்பரம் சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எஸ். ராமகிருஷ்ணன் விகடனில் கதாவிலாசம் எழுதியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த எழுத்தாளர்களைத் தேடி நானும் கலைவாணனும் வாசித்த காலகட்டம். அவன் ஆதம்பாக்கம் நூலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து வருவான். நான் வாசிப்பின் பித்தேறி தாம்பரம் நூலகத்தைப் பயன்படுத்த வேண்டி கல்லூரி விடுதியிலிருந்து வெளியேறினேன். கலைவாணனுக்கு திடீரென சினிமா வெறி தொற்றிக் கொண்டது. அவன் மாலைக் கல்லூரி முடிந்த பின் சவுத் இண்டியன் ஃபிலிம் சேம்பரில் தினமும் ஒரு திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான். தன் சக பார்வையாளரான சாரு நிவேதிதாவுடன் ஏற்பட்ட பழக்கம் வேறு அவனைத் தீவிரமாய் சினிமாவில் உழலச் செய்தது.

அன்றைய நாட்களில் மதுரையில் நிகழ்ந்த ஒரு குறும்படப் பயிற்சி பட்டறையில் சந்தித்த சரவணக்குமார் என்ற நபரைப் பற்றி கலை பிரமிப்பாய் பேசியிருந்தான். அவரிடமிருந்து எஸ். ராமகிருஷ்ணனின் நடந்து செல்லும் நீரூற்று சிறுகதைத் தொகுதியை வாங்கி வந்திருந்தான். அதை நானும் வாசித்த பின் உரிமையாளருக்கு கூரியர் செய்திருந்தேன். கூரியர் உறையிலிருந்த எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சரவணக்குமார் புத்தகம் கிடைத்த தகவலைச் சொன்னார். அந்த சரவணக்குமார் ஒரு வேலை விசயமாய் சென்னைக்கு வந்தபோது கலைவாணன் மூலம் தாம்பரத்திலிருந்த எங்கள் அறைக்கு வந்தார்.

மீசை அரும்பியிராமல் நோஞ்சான் உடம்புடன் அசாத்திய தன்னம்பிக்கையுடன் திகழ்ந்த சரவணனைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. எனக்கு படைப்புகள் அளிக்கும் நிகர்வாழ்க்கையே அப்போது முக்கியமாய் தெரிந்தது. வைரமுத்துவை கல்லூரி முதலாமாண்டு வாசித்து உணர்ச்சிப் பெருக்கில் திரிந்து அப்படியே நாஞ்சில் நாடனின் என்பிலதனை வெயில் காயும் நாவலை வாசித்ததன் மூலம் எது நல்ல இலக்கியம் என்பதை உள்ளுணர்வில் அறிந்திருந்தேன். ஆனால் அதை எப்படி வரையறுப்பது என்றோ ஒரு படைப்பை விமர்சிக்கத் தேவையான கலைச்சொற்களோ எதையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆகவே எந்தப் படைப்பையும் நிராகரித்ததில்லை. ஆனால் சரவணக்குமார் ஒரு படைப்பை நிராகரிப்பதும் அதற்கான காரணங்களைச் சொல்வதும் எனக்குப் புதியதாய் தெரிந்தன. மூன்று வருடங்கள் இலக்கியம் வாசித்திருந்தாலும் எந்த தீவிர வாசகனையும் அதற்குமுன் நான் சந்தித்திருக்கவில்லை. எங்களுக்கு ஆதர்சமான எஸ். ராமகிருஷ்ணனை சந்திக்க கலைவாணன் பலமுறை அழைத்திருந்தும் நான் மறுத்துவிட்டேன். அப்போது எழுத்தாளர்களை அதிமானுடர்கள் என்றே கருதியிருந்தேன். அவர்கள் எப்படி ஆழ்மனதை எழுத்தாக்குகிறார்கள் என்பதும் நம் மனதின் எல்லா சில்லறைத்தனங்களையும் அறிந்திருக்கிறார்கள் என்பதும் என்னை மிரட்சியடையச் செய்திருந்தது. கோணங்கியைப் பற்றிய கட்டுரையை விகடனில் வாசித்த கலை நாம் வாழ நினைக்கும் வாழ்வை ஏற்கனவே ஒருவர் வாழ்ந்து வருவதாய் சொல்லியிருந்தான். சரவணா கோணங்கியை தனிப்பட்ட விதத்தில் அறிந்திருந்தார். மேலும் சரவணாவிற்கு சில எழுத்தாளர்களுடனிருந்த நட்பும் அவர்களுடன் நிகழ்த்திய உரையாடல்களையும் கேட்கையில் சிற்றிதழ் உலகமெனும் ரகசியக் குழுவுக்குள் என்னையும் ஒருவனாய் உணரத் தொடங்கினேன்.  அந்நாட்களில் சரவணக்குமார் இரா. சரண் என்ற பெயரில் சில கட்டுரைகளை நாளிதழ்களுக்கு எழுதியிருந்தார். எங்களைச் சந்தித்த சில மாதங்களில் புதிய காற்றில் ‘எஸ். திருநாவுக்கரசிற்கு இருபத்தைந்து வயதான போது….’ சிறுகதையும் புதுவிசையில் ‘உமா சித்தியும் சாம்பல்நிற சர்ப்பக் குட்டிகளும் சிறுகதையும் லக்ஷ்மி சரவணக்குமார் என்ற பெயரில் பிரசுரமாகின. எஸ். ராமகிருஷ்ணனின் உலகிற்கு நெருக்கமாயிருந்த உமா சித்தியும் சாம்பல்நிற சர்ப்பக் குட்டிகளும் சிறுகதை எனக்குப் பிடித்திருந்தது. இருபத்தோரு வயதில் மொழி இவ்வளவு தூரம் வசப்படும் என்பதே எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. நான் அதுவரை கவிதை எனும் பெயரில் “எந்த நட்சத்திரங்களிலிருந்து கடன் வாங்கி வந்தாய் உன் கண் சிமிட்டும் அழகை” எனக் காதலாய் கசிந்துருகிக் கொண்டிருந்தேன்.

சில மாதங்களுக்குப் பிறகு கல்கியில் வேலைக்குச் சேர்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காய் எங்கள் அறைக்கு வந்திருந்தார். அப்போதுதான் ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ நாவலை வாசிக்கத் தந்தார். அதன் பிறகு எந்த உடல் உறுப்புக் குறைபாடுடைய பிச்சைக்காரரைக் கண்டாலும் என்னைத் தெறித்து ஓடவைத்த ஏழாம் உலகம். பிறகு தமிழ் ஈழ விவகாரங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை பேசிக் கொண்டிருந்த லக்ஷ்மியுடன் நான் முரண்பட்டு தீவிரமாய் விவாதித்த பின் ஷோபாசக்தியின் ம் தந்தார். இப்படியாக என் வாசிப்பு வேகத்திற்கு ஏற்ப லக்ஷ்மியின் மூலம் புத்தகங்கள் கிடைத்தன. அதற்கு முக்கிய காரணம் மதுரை திருமங்கலம் கிளை நூலகத்தின் நவீன இலக்கிய புத்தகங்கள் லக்ஷ்மி வசமே இருந்தன. அந்த நூலகருக்கு கள் வாங்கித் தந்து பாதி நூல்களை தன் வீட்டிற்கு இடம் மாற்றியிருந்தார். மேலும் புதுஎழுத்து, கல்குதிரை, மணல்வீடு என சிற்றிதழ்களும் லக்ஷ்மி மூலம் வாசிக்கக் கிடைத்தன.             

பள்ளிப் படிப்பை முறையாய் முடித்திராமல் சிறையில் இருக்கும் தந்தையின் மீதான வெறுப்பைச் சுமந்து இலக்கிய வாசிப்பு தந்த ஆணவத்தோடு அலைந்து திரிந்த லக்ஷ்மி ஒருவகையில் கனவு பிம்பம்தான். லக்ஷ்மியிடமிருந்த முதிராத் தன்மைகளும் தன் இருப்பை இலக்கியத்தில் நிலைநிறுத்த அவருக்கிருந்த வேட்கையும் ரசிப்புக்குரியவையே. தன்னைச் சூழ்ந்திருப்பவர்களை எதையாவது சொல்லி அதிர்ச்சியடைய வைப்பது லக்ஷ்மியின் குணநலன்களில் ஒன்று. நான் முதல்முறை சந்தித்த போதே தன் தற்கொலை முயற்சியைப் பற்றிச் சொன்னார். எங்கள் அறைக்கு வந்திருந்த ஜூனியர் பையன்கள் எங்கள் சீனியர் ஒருவரைப் பற்றி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர் சற்று அழகான பையன்களாய் பார்த்து தம்பி என அன்பைப் பொழிவார். பின் சிலநாட்களில் அவர்களின் அலைபேசிக்கு நள்ளிரவில் “உன் முத்தத்திற்காய் நான் காத்திருக்கிறேன்” எனக் குறுஞ்செய்தி அனுப்புவார். அதுபோல் அவர் காதல்கணைகள் தொடுத்த ஒவ்வொருவரும் தங்கள் அனுபவங்களைச் சொல்லிச் சிரிக்க, லக்ஷ்மி பொறுமையாய் அனைத்தையும் கேட்டுவிட்டு பொங்கியெழுந்தார். எங்கள் அனைவரையும் அந்த சீனியரின் அன்பைப் புரிந்துகொள்ளவியலா மனநோயாளிகள் என அவர் அழைக்க ஜூனியர் பையன்கள் அடைந்த திகைப்பு இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது.

நான் கல்லூரி நான்காமாண்டு படித்த காலகட்டங்களில் லஷ்மியின் ஊர்க்காரரான கவின் திருமங்கலத்திலிருந்து வேலை நிமித்தமாய் சென்னையில் தங்கியிருந்த அறைக்கு இடம்பெயர்ந்தார். திருமங்கலத்திலிருந்த கவினின் வீட்டில் தான் லக்ஷ்மி சரவணக்குமாரின் அம்மா வீட்டுவேலை செய்து வந்தார்கள். சென்னைக்கு வந்ததும் லக்ஷ்மி சினிமாவில் உதவி இயக்குனராய் சேர்வதற்கான முயற்சியில் இருந்தார். அவ்வப்போது எங்கள் அறைக்கு வந்து செல்வார். பிறகு கல்கியிலிருந்தும் விலகியிருந்தார். கவினின் வீட்டில் சிலமாதங்கள் தங்கியிருந்தவர் கவினுக்குத் திருமணமான பின் எங்கள் அறைக்கு நிரந்தரமாய் இடம்பெயர்ந்தார். என் வாழ்க்கையில் அது மிகமுக்கியமான நிகழ்வு. ஏனெனில் நூலகத்தில் இருநூறு ரூபாய்க்கு மேற்பட்ட நூல்கள் அனைத்தும் மேற்கோள் பிரிவில் மட்டுமே இருக்கும். யோசித்துப் பாருங்கள் ஜெயமோகனின் முக்கிய நாவல்கள் எதையும் நாம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல இயலாது. அதோடு யூமாவாசுகியின் ‘ரத்த உறவை’ அவர்கள் மருத்துவப்பிரிவில் வைத்திருந்தார்கள். லக்ஷ்மி சொன்ன பிறகுதான் அது புனைவு நூல் எனத் தெரிந்து கொண்டேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போல திருமங்கல நூலகத்தின் நவீன இலக்கிய நூல்களின் உரிமையாளரான லக்ஷ்மியிடமிருந்து நான் விருப்பப்பட்ட நூல்களை என்னால் வாசிக்க முடிந்தது. ஒவ்வொரு முறை லக்ஷ்மி ஊருக்குச் செல்லும் போதும் விஷ்ணுபுரத்தை எடுத்துவரச் சொல்வேன். “யோவ் அது மண்ட தண்டிக்கு இருக்கும்யா… அதைப் பையில வச்சா பெறகு எடம் பத்தாதுயா” என்பார். நான் விடாமல் தொடர்ச்சியாய் நச்சரித்து விஷ்ணுபுரத்தை வரவழைத்தேன். அப்புத்தகத்தை வாசித்த போது தான் என் கல்லூரி நண்பன் சுனில் கிருஷ்ணன் என் கையிலிருந்த விஷ்ணுபுரம் எனத் தலைப்பிட்ட நூலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். அதற்கு முந்தைய மாதத்தில் பகத்சிங் பற்றிய நூலொன்றை என் கையில் வைத்திருப்பதைப் பார்த்து என்னைத் தீவிரவாதி எனக் கிண்டல் செய்திருந்தான். நான் சுனிலிடம் ஜெயமோகனைப் பற்றியும் விஷ்ணுபுரத்தைப் பற்றியும் சொன்னேன். ஆக, சுனில் கிருஷ்ணன் ஜெயமோகனின் பெயரை அறிய நேர்ந்ததில் லக்ஷ்மிக்கும் கணிசமான பங்கு உள்ளது. இன்று அனைத்தையும் யோசித்துப் பார்கையில் வாழ்க்கை விநோதமானதாகவும் வேடிக்கையாகவும் தெரிகிறது. விஷ்ணுபுரத்தை வாசிப்பதற்கு முன்பு எங்கள் பேராசிரியர்களை வம்பிழுப்பதற்காய் வெள்ளிக்கிழமை கருப்புச் சட்டை அணிந்து கல்லூரிக்கு வரும் கலைவாணன் இன்று தியான வகுப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான்.

லக்ஷ்மியின் ஆரம்ப காலப் புனைவுகளில் ஜி. நாகராஜனின் பாதிப்பு மிகுதியாய் இருக்கும். ஒருவேளை ஜி. நாகராஜன் அவ்வுலகை எழுதியிராதிருந்தால் லக்ஷ்மியே அவ்வுலகில் பயணித்த முதல் தமிழ் எழுத்தாளனாய் இருந்திருப்பார். ‘இருள், மூத்திரம், கடவுளின் பட்டுக் கௌபீகத் துணி கதையை எழுதுவதற்கு முன்பே பாண்டிச்சேரி அல்லயன்ஸ் பிரான்சிஸில் அக்கதையை அவர் வாயால் சொல்லக் கேட்டிருக்கிறேன். அக்கதை மணல்வீட்டில் பிரசுரமான பின்பு பொதியவெற்பன் அக்கதையை புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையுடன் ஒப்பிட்டு மணல்வீடு ஆசிரியர் ஹரிகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார். லக்ஷ்மியின் அலைபேசியில் தொடர்பு கொண்டு அக்கதையைச் சிலாகித்த சாருநிவேதிதா பின்னர் லக்ஷ்மியை தன் இலக்கிய வாரிசாய் அறிவித்தார். புதுஎழுத்தில் வெளியாகியிருந்த லக்ஷ்மியின் ‘14.06.2008 அன்று இறந்து போனவனைப் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லை கதையைப் பற்றி என்னிடம் பேசிய கோணங்கி அவங்கிட்ட பெரிய void இருக்குடா அந்த சப்வே இருட்டுக்குள்ள முயங்குறது வெறும் உடல்கள் மட்டுமில்ல அவனோட void- நிரப்புற முயற்சிதான் என்றார்.

அன்றைய நாட்களில் லக்ஷ்மி பெருங்களத்தூரிலிருந்த தாயுமானவன் என்பவரிடம் உதவி இயக்குனராய் சேர்ந்திருந்தார். அவர் புற்றுநோயில் இறப்பதற்கு முன் தன் முதல் திரைப்படத்தை இயக்கிவிடும் முயற்சியில் இருந்தவர். ஆனால் அது நிகழவில்லை.

எங்களுக்கு திரைப்பட விழாக்களில் அறிமுகமாயிருந்த மணி என்ற நண்பருடன் லக்ஷ்மி அவ்வப்போது சில வேலைகளுக்குச் சென்று வந்தார். மணிக்கு ஹாலிவுட் சென்று மனோஜ் நைட் சியாமளானிடம் உதவி இயக்குனராய் சேரவேண்டுமென்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதுவரை சென்னையில் நிறைய சில்லறை வேலைகளைச் செய்து வந்தார். அதில் முக்கியமான ஒன்று Act பாப்கார்ன் மார்க்கெட்டிற்கு வரும் முன்பு அதை பிரபலப்படுத்திய வேலை. ஷாப்பிங் மாலுக்கு வெளியேயும் திருமண மண்டப வாசல்களிலும் அதை வாடிக்கையாளர்களுக்கு உண்ணக் கொடுத்து சிறிய இலவச பாக்கெட்டுகளைத் தருவது. ஒரு நாளைக்கு நூற்றம்பைதோ இருநூறோ சம்பளம் கிடைக்கும். பலநாட்களில் லக்ஷ்மி கொண்டுவரும் மீதமான பாப்கார்ன் பாக்கெட்டுகளை வைத்து வயிறு நிரப்பியிருக்கிறோம். மணி மனோஜ் நைட் சியாமளானைக் கவர வேண்டி நூலகங்களுக்குச் சென்று விநோதமான நூல்களை வாசித்து விசித்திரமான கருதுகோள்களை உருவாக்கியிருந்தார். அவற்றிலொன்று போரும் பஞ்சங்களும் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டி இயற்கையே கண்டறிந்த வழிமுறை. ஆகவே ஈழப்போர் நிகழும் இக்காலகட்டத்தில் அதற்கெதிராய் போராடுவது இயற்கைக்கு எதிரான செயல். நான் பொங்கிய கோபத்தை கட்டுப்படுத்தியவனாய் “ஏன் மணி உங்க வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் சண்டை. பக்கத்து வீட்டுக்காரன் உங்க அப்பாவ அருவாளால வெட்ட வரான் அப்ப நீங்க அவனத் தடுப்பீங்களா இல்ல மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துற இயற்கையோட வழிமுறைன்னு அமைதியா இருப்பீங்களா” என்றேன். நான் தடுப்பேன் என்று சொன்னவர் இறுதிவரை ஈழப்போருக்கு எதிராய் போராடுவது இயற்கைக்கு எதிரான செயலன்றே வாதாடினார். அப்படிப்பட்ட மணியுடன் லக்ஷ்மி ஒன்றாய் வேலைக்கு சென்று வந்தது இந்நூற்றாண்டின் அதிசயங்களில் ஒன்று.

லக்ஷ்மிக்கு தன்னைச் சுற்றியும் ஒரு புனைவை உருவாக்கும் இயல்புள்ளதோ எனத் தோன்றும். ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப் பேருந்தில் பயணம் செய்துவருகையில் ஏதேனும் ஒரு பயணக்கதை தயாராய் இருக்கும். அவர் அருகில் எப்படியும் ஒரு பெண் அமர்ந்து விடுவாள். மெய்தீண்டல் கதைகள் மெய்யா என்ற ஆராய்ச்சியெல்லாம் எதற்கென நாங்கள் சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருப்போம். ஆனால் என் பயணங்களில் யாரேனும் தொப்பையைத் தள்ளிக்கொண்டு என்மீது தூங்கிவிழும் போது மட்டும் அக்கதைகள் நினைவுக்கு வந்து எரிச்சலைக் கிளப்பும். அந்நாட்களில் நாங்கள் தஞ்சைப் பிரகாஷைப் பற்றி தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருந்தோம். தஞ்சைப் பிரகாஷின் ‘கடைசிக்கட்டி மாம்பழம் நாங்கள் அதிசயித்த கதைகளில் ஒன்று. லக்ஷ்மியின் புனைவுலகிலும் பேச்சிலும் தஞ்சைப் பிராகாஷின் பாதிப்பு நிறைய உண்டு. தஞ்சைப் பிராகாஷின் மீனின் சிறகுகள் நாவலில் வரும் கதாப்பாத்திரமான ரங்கமணியைத் தான் நான் அவருக்கு பட்டப்பெயராய் சூட்டியிருந்தேன்.

ஒவ்வொரு புனைவை வாசித்த பிறகும் அதுகுறித்து நாங்கள் தீவிரமாய் விவாதித்துக் கொண்டிருப்போம். அப்போது எங்கள் வாசிப்பு வேகம் இன்று நினைக்கையில் மலைப்பூட்டுகிறது. உயிர்மையில் வெளியாகியிருந்த ஜெயமோகனின் குறுநாவல்கள் முழுத்தொகுப்பை விஜய் மகேந்திரனிடமிருந்து வாங்கி வந்த லக்ஷ்மி மூன்றாம் நாள் அதை அவருக்குத் திருப்பித் தந்தார். அதற்குள் வாசித்துவிட்டீர்களா என அவர் அதிசயப்பட்டதற்கு என் அறை நண்பனும் அதை வாசித்துவிட்டான் என்ற பதிலின் மூலம் அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியிருந்தார். கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’த் தொகுப்பையும் கொல்லனின் ஆறு பெண் மக்கள்’ தொகுப்பையும் லக்ஷ்மி மூலமே நான் வாசித்திருந்தேன். அக்கதைகளிலிருக்கும் ஒரு சாசுவதத் தன்மை, மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் அம்மொழியின் ஈர்ப்பு. மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதியைப் போல் அழகானது என்று அவர் எழுதும் போதும் ஓலை வேய்ந்த நிரைசலுக்குள் ஈஸ்வரி அக்கா தினமும் குளிக்கும் சாயந்திரத்தில் ஊர் முழுதும் மறையாத மஞ்சள் வெயில் என்ற வரிகள் குறித்தும் எவ்வளவு அதிசயித்திருக்கிறோம். ஒருவேளை ஈஸ்வரி அக்காள் மாலை ஒளியை மஞ்சளாய் தன் உடலில் பூசியிருப்பாளோ?

எங்கள் வாசிப்பினூடாக பிரேம்–ரமேஷை தமிழின் ஆகச்சிறந்த கதை சொல்லிகளாய் நாங்கள் கண்டடைந்தோம். அவர்களின் மிகு புனைவுகளின் தொகுப்பான மகாமுனி தமிழில் ஈடு இணையற்றது. அவர்களின் கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகளுக்கு’ நிகராய் ஒரு கதையை எழுதிவிட்டால் இத்தலைமுறை எழுத்தாளனும் இனிவரும் தலைமுறை எழுத்தாளனும் காலரைத் தூக்கிவிட்டு ஒய்யாரமாய் சவப்பெட்டிக்குள் படுத்து நிம்மதியாய் கண்மூடலாம்.

நான் 2009 மே இறுதியில் என் ஆறு வருட கல்லூரி வாழ்வு முடிந்தபின் புதுக்கோட்டைக்கு கிளம்பினேன். லக்ஷ்மி வேறு அறைக்கு இடம்பெயர்ந்தார். அப்போது ‘நீலநதி’ மட்டும் வெளியாகியிருந்தது. 2010-ற்குப் பிறகான காலகட்டத்தில் ஏற்பட்ட மிகை இணையப் பயன்பாடு கணிசமான இளைஞர்களை உலக சினிமா பார்க்கச் செய்திருந்தது. அவர்களில் பலர் இலக்கியத்திலும் வாசகர்களாய் மாறியிருந்தனர். 2011 புத்தகக் கண்காட்சியில் ‘உப்புநாய்கள்’ வெளியானது. நான் லக்ஷ்மியிடம் அந்நாவல் சுவாரசியமான நிகழ்வுகளின் தொகுப்பாய் உள்ளதென்றும் நாவலுக்கான அக உலகு இன்னும் கைகூடவில்லை என்றும் கூறினேன். லக்ஷ்மி அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. புதிதாய் வாசிக்கத் தொடங்கியுள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதை எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஏழு வருடங்கள் கடந்தபின் என்னை அழைத்தவர் யோவ் உனக்கு என் கதையோட லிங்க் அனுப்பிருக்கேன்யா படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு என்றார். நிறைய பேர் வாசிச்சுட்டு நல்லா இருக்குங்குறாங்க ஆனா ஒன்னும் புரியலங்குறாங்க என வருத்தப்பட்டார். நான் அக்கதையை வாசித்து அதிலிருக்கும் சிக்கல்களைச் சொன்னேன். பொறுமையாய் கேட்டுக் கொண்டார். லக்ஷ்மியின் எழுத்து இலக்கியத்திலிருந்து திரைமொழியை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருவேளை தன் வாசகர்களுக்கும் அவருக்குமான ஒரு புரிந்துணர்வாய் அது இருக்கலாம். ஆனால் நான் அறிந்த சரவணன் – லக்ஷ்மி சரவணக்குமார் எனும் புனைப்பெயரில் இதுவரை பிரசுரமாகியிருப்பவற்றை விட மேம்பட்ட எழுத்தாளனே. என் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு நண்பர்கள் யாரையும் நான் அழைத்திருக்கவில்லை. லக்ஷ்மி இரண்டு நாட்கள் முன்பாக என்னை தொடர்புகொண்டு விழாவிற்கு வருகிறேனா எனக் கேட்டார். வரேன் நீங்க வரீகளா? என்றேன். “யோவ் நான் வராம எப்படி என்றார். ஆமாம் லக்ஷ்மி சரவணக்குமார் வராம எப்படி சரிதானே என நினைத்துக் கொண்டேன்.

ஒருமுறை சுனிலிடம் 2000-க்குப் பிறகு எழுதவந்த எழுத்தாளர்கள் கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’யைப் போன்றோ ஜெயமோகனின் ‘படுகை’யைப் போன்றோ எஸ்.ராமகிருஷ்ணனின் ‘தாவரங்களின் உரையாடலை’ப் போன்றோ மொத்த சூழலையும் திரும்பிப் பார்க்கச் செய்த கதைகள் எதையும் எழுதவில்லையென்றேன். அதற்கு அவன் லக்ஷ்மி சரவணக்குமாரின் ‘மயான காண்டம்’ கதையைக் குறிப்பிட்டு எந்த எழுத்தாளனுக்கும் சளைத்த கதையல்ல என்றான். அவன் சொன்ன பிறகு தான் அக்கதையை வாசித்தேன். நல்ல கதை. நான் லக்ஷ்மியிடம் எதிர்பார்த்தது நல்ல கதையை மட்டுமல்ல. என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகனின் ‘டார்த்தினியம்’ இன்னொரு எழுத்தாளனால் எழுதிவிடக் கூடியது தான். ஆனால் ‘திசைகளின் நடுவே’ சிறுகதையோ ‘மடமோ’ அப்படியல்ல. கி.ராவின் ‘நிலைநிறுத்தலோ’, கோணங்கியின் ‘கருப்பு ரயிலோ’ இன்னொரு எழுத்தாளனால் எழுதுவதற்கு சாத்தியமில்லை. அவை அந்த எழுத்தாளர்களின் பிரத்யேகமான மன உலகால் கட்டமைக்கப்பட்ட தனித்துவமானக் கதைகள். நான் லக்ஷ்மியிடம் எதிர்பார்ப்பது அதைத்தான். “இன்னொரு எழுத்தாளனால எழுதிர முடியாத கதைகள எழுதுயா சரவணா”.

***

சித்ரன், இவரது முதல் நூல் “கனாத்திரமுறைத்த காதைகள்” நல்ல கவனம் பெற்ற நூல். முதல் சிறுகதைத் தொகுப்பிற்கான ‘க.சீ.சிவகுமார் நினைவு விருதை’ வென்றது. அவரது மின்னஞ்சல் முகவரி – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here