Thursday, March 28, 2024
Homesliderநிவாரணம்

நிவாரணம்

கலைச்செல்வி

ள்ளிக்கு அரைதினம் விடுப்பு எடுத்து வருமாறு அம்மா கூறியிருந்தது ஐந்தாம் வகுப்பு படிக்கும் அட்சயாவுக்கு நினைவுக்கு வர, ஆசிரியையிடம் ஓடினாள். அம்மா வரச்சொன்னதாக அட்சயா கூறியபோது உடனே அனுமதி கொடுத்து விட்டு உணவு டப்பாவை எடுத்து மேசை மீது வைத்தார். அட்சயா புத்தகப்பையை முதுகில் சுமந்து கொண்டு நடந்து வெளியேறுவது தெரிய, ‘பாவம்’ என்பது போல முணுமுணுத்துக் கொண்டாள். வீட்டுக்கு வந்தபோது அம்மா கிளம்பி நின்றிருந்தாள். இவளைக் கண்டதும் “சாப்டீயாடீ..” என்றாள். இருவரும் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினர். மதிய வெயிலில் கண்களை சுருக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினர். அம்மாவின் கையிலிருந்த நெகிழிப்பையில் அவர்கள் வினவக்கூடிய சான்றுகள், மற்றும் சான்றிதழும் இருந்தன. மதிய நேரமென்பதால் பேருந்தில் கூட்டநெரிசல் இல்லாமலிருந்தது. ரவிக்கையின் மேற்புறத்தில் கை விட்டு பணப்பையை எடுத்து, அதிலிருந்த தாளொன்றை உருவி கையால் தேய்த்து, நடத்துநரிடம் பேருந்துச்சீட்டு வாங்கிக் கொண்டாள்.

அவர்கள் அங்கு போய் சேர்ந்தபோது கூட்டம் வந்திருக்கவில்லை. அவள் அந்த மண்டபத்தில் மேடை அலங்காரம் செய்து கொண்டிருந்தவரிடம் விசாரித்துக் கொண்டு அவரை அணுகினாள். அவர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று தோதாக ஒரு பதவியைப் பெற்றவர். அவர்தான் அவளை இந்த அரங்கிற்கு வரவழைத்திருந்தார். அவள் கணவனின் இறப்புக்கு தலைமையை அழைத்து வந்ததும் அவர்தான். சொல்லப்போனால், அந்நேரத்தில் கட்சிக்கு அதுமாதிரியான இறப்பு தேவைப்பட்டிருந்தது.  இவளைப் பார்த்து கனிவுடன் சிரித்து “மக தானே.. அன்னைக்குப் பாத்தேன்..” என்றார். மகள் “ஆமா சார்..” என்றாள். “சாப்டீயாம்மா..?” என்றார் பொதுப்படையாக. “ஆச்சு சார்..” கேன் டீ வைத்திருந்தவரிடம் “இங்க ரெண்டு டீ குடுய்யா..” என்றார் அவர். வெள்ளை வேட்டியின் கரை அவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியை சொன்னது. வெள்ளைச்சட்டையின் பையில், தலைவரின் படம் வெளியே தெரியுமாறு வைத்திருந்தார். அவர் நகர்ந்து விட, அவர்கள் இருவரும் அந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளுக்கும் சுவற்றுக்கும் நடுவிலிருந்த இடத்தில் நின்று கொண்டனர். நேரமாக ஆக நாற்காலிகள் நிறையத் தொடங்கின. வந்தவர்களின் கவனம் சம்பந்தமின்றி நின்றிருந்த இருவர் மீதும் ஒரு கணம் பட்டு நகர்ந்தது. சமீபத்தில் செய்தித்தாளில் பார்த்த முகம் என்பதாலோ அல்லது கட்சித்தலைவரின் கவனம் அவர்களின் மீது விழுந்ததாலோ அதில் சிலருக்கு இவர்களை அடையாளம் தெரிந்திருக்கலாம். யாரோ ஒருவர் ”நல்லாருக்கியாம்மா..” என்றபோது “இருக்கோம் சார்..” என்றாள். வெள்ளைவேட்டிக்காரர் அவரை அழைத்ததாக சேதி வர மகளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

“இங்க பாருங்கம்மா.. தலைவர் வந்துகிட்டேயிருக்காரு.. பெரியாளுங்கல்லாம் பேசி முடிச்ச பிற்பாடு ஒங்களை கூப்டுறோம்… அதுவரைக்கும் பொறுமையா ஒக்காந்திருக்கணும்…” என்றார் வெள்ளை வேட்டிக்காரரின் பக்கத்திலிருந்த நபரொருவர்.

அவள் தலையாட்டினாள். வெள்ளைவேட்டிக்காரர் ”மேடையேறும்போது பாப்பாவெல்லாம் கூட்டீட்டு போயிடாதம்மா..” என்றார். “பாப்பா.. நீ போயீ வெளில நின்னுக்க.. அம்மா வந்துரும்..” என்ற அந்த நபர் “நா சொல்றதை கவனமா கேட்டுக்கம்மா.. வருசயா சேர் போட்டுருக்குல்ல.. அதுல நடுசென்டர்ல தலைவரு ஒக்காந்திருப்பாரு.. மேடையில ஒங்க வீட்டுக்காரரு பேரை சொல்லும்போது இதோ இப்டி பீச்சாங்கை பக்கமா மேடையில ஏறுணும். தலைவர் எந்திரிச்சு நின்னு உதவிய வழங்கும் போது கால்ல வுளுவுணும்.. ஞாபகம் வச்சுக்க.. பீச்சாங்கை பக்கம் ஏறி சோத்தாங்கை பக்கமா எறங்கணும் புரியுதா..?” என்றார். அவள் எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக சரியென்று தலையாட்ட “அங்கபோயீ இப்டி தலையெல்லாம் ஆட்டிக்கிட்டு நிக்கக் கூடாதும்மா… உதவிய வாங்கின பிற்பாடு ரொம்ப நன்றிங்கய்யான்னு கையெடுத்து கும்புடுணும் கேட்டுக்க..” என்றார் மற்றொருவர். “ஒன் வீட்டுக்காரங்க பேரு நாச்சிமுத்துதானம்மா..?” என்றார் அந்த வெள்ளை வேட்டிக்காரர். அவள் ஆமோதிப்பாக தலையசைத்தாள்.

கூட்டம் பெருகிக் கொண்டே போனபோது அவள், அவர்கள் கண்களில் தென்படாது போய்விடுமோ என்ற எண்ணத்தில் மேடைக்கு சற்று முன்பாகவே தோது பார்த்து நின்று கொண்டாள்.  தேநீர் நிரம்பிய கப்புகள் தாம்பாளம் ஒன்றில் இருக்கைக்கு இருக்கை நகர்ந்து கொண்டிருந்தது. சலசலப்பாக கிடந்த மண்டபம், திடீரென்று சப்தமிழக்க, ஆரவாரங்களுக்கும், வாழ்த்தொலிகளுக்கும் மத்தியில் தலைவர் இதழ்களைப் பிரித்த வண்ணம் கைகளைக் கூப்பியபடியே மேலேறினார்.

கூட்டம் “தலைவா..” என்று உணர்ச்சிவயப்பட, அவர், தனது இருக்கையின் அருகே வந்து நின்று கூட்டத்தை நேருக்குநேர் பார்த்து கைகளை தலைக்கு மேல் தூக்கி வணங்கி, உடலை முப்புறமும் திருப்பினார். அன்று கதறிக் கொண்டிருந்த தன்னை சமாதானப்படுத்தியது இத்தனை பெரிய ஆளா.. என்பது போல வியந்து பார்த்தாள் அவள். அதற்கேற்ப, ஒலிபெருக்கியைப் பிடித்த ஒவ்வொருவரும் அவர் பெருமைகளைப் பேசிக் கொண்டே போக, எப்படியோ அவர்களின் பேச்சை நிறுத்தி, தலைவருக்கான நேரத்தை ஒதுக்கித் தந்தபோது அவள் உடல் முறுக்கி நிமிர்ந்தது. எந்நேரமும் தான் அழைக்கப்படலாம். ஒவ்வொருவராக ஒலிபெருக்கியை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்க, இறுதியாக தலைவர் பேச எழுந்தார். அவர் தனக்குத்தானே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்திலிருந்து சலசலப்பு தோன்றியது. என்னென்னமோ சொன்னார்கள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவள் தலைவரையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அந்நேரம் இடப்புற மேடையில் தாவியேறிய காவலர்கள் அவரை சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றபோது, அவர் திரும்பி வருவார் என்றே அவள் எண்ணிக் கொண்டிருந்தாள்.

மறுநாள் அட்சயாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவள் வெள்ளைவேட்டிக்காரின் கட்சி அலுவலகத்துக்குச் சென்றாள். அங்கிருந்த காவலாளி “அய்யா சென்னைக்கு போயிருக்காரும்மா..” என்றார், இவளை அடையாளம் தெரிந்தவராக. பிறகு இரண்டொரு முறை சென்று பார்த்தபோதும் அவர் சென்னையிலிருந்து திரும்பியிருக்கவில்லை. “சாப்பாட்டுக்கு ஒண்ணும் பெரச்சனையில்லையே..” என்றார் அந்தக் காவலாளி. பிறகு இவளின் பதிலை எதிர்பார்க்காமலேயே “போறவேங்க போயி சேந்துடுவாங்க.. இருக்கறவங்க பாடுதான் திண்டாட்டமா போவுது… அய்யா அடுத்தவாரம் வந்துடுவாரு.. வந்து பாரும்மா…” என்றார். “வந்துடுவாருள்ள..” என்றாள். அவள் முகத்தை ஆராய்ந்தவராக “நல்ல மனுசம்மா… அவராதான் இந்த விசயத்த தலைவர் காதுக்கு கொண்டுட்டு போயீ அந்த குடும்பத்துக்கு எதாது பண்ணும்னு சொன்னாரு…” என்றார். ஆனால் அண்டைவீட்டுக்கார தாத்தா “எலக்சன் வருதுள்ள… அதான் சாவு வூட்ல பூந்துக்கிட்டு அத்த செய்றேன்.. இத்த செய்றேன்னு வாக்குறுதியா அள்ளி வுடுறானுங்க.. செய்ற பயலுவோன்னா அன்னைக்கேல்ல செஞ்சுருக்குணும்.. அவனுங்களுக்கு வுட்ட ஆச்சிய புடிக்கணும்.. போட்டாவுக்கு போஸ் குடுத்து பேப்பர்ல டிவில போட்டு வௌம்பரம் தேடிக்குணும்.. வேறென்ன…  த்த்தாரி பயலுவோ..” என்றார். அவள், அவரைப் பார்த்தபோது “நா பொதுவாதான் பேசறன்… ஒன் புருசன அந்த கணக்கில கொண்டாரல தாயீ…” என்றார்.

இம்முறை வெள்ளைச்சட்டைக்காரரை பார்க்க முடிந்தது. எல்லா நாளுமே அவர் வெள்ளைச்சட்டையே அணிந்திருந்தார். இரண்டு சட்டைகளை வைத்துக் கொண்டு துவைத்து துவைத்து அணிந்துக் கொள்வாரோ..? இன்று அவரிடம் தனது கஷ்டங்களை சொல்லி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். “ரெண்டு தடவ வந்துட்டு போனேங்கய்யா..” என்றாள். “ஒண்ணும் கவலப்படாதம்மா… அன்னைக்கு கூட்டத்தில ஏதோ கசமுசா ஆயி பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதால கூட்டத்த முடிக்க வேண்டியதாப் போச்சு… கூடிய சீக்கிரம் வர்றதா தலைவரு சொல்லியிருக்காரு… அன்னைக்கு செஞ்சுடலாம்…” என்றபடியே அவர் நகர்ந்து விட, இவள் கிளம்ப வேண்டியதாயிற்று. கந்தசாமியிடம் வாங்கிய கடன் இந்த மாதத்தோடு, ஒரு வருடத்தை கடந்து விடும். கூட்டுவட்டி போடுவதற்குள் அதை அடைத்து விட வேண்டும். மாரிசாமி, இந்த நிவாரண உதவியை நம்பிதான் வீட்டு ஒத்தியை நீட்டி விட சம்மதித்திருந்தார். அவள் வீட்டுக்கு வருவதற்குள் அட்சயா சோற்றை வடித்து விட்டிருந்தாள். பசி நிறைந்த வயிறு அதிகளவு உள்வாங்கிக் கொண்டது. அறுவடைக் காலம் நெருங்கிவிட்டதென்பதால் இனி உழவுக்கூலி வேண்டி ஆளனுப்புவார்கள். அட்சயா ஆறாம் வகுப்புக்கு வெளிபள்ளிக்குத்தான் சென்றாக வேண்டும். அதற்கு சைக்கிள் தேவைப்படலாம். கூலிக்காசை மிச்சம் பிடிக்க வேண்டும். அந்த நேரத்தில்தான் தலைவர் இந்தப் பக்கம் வருவதாக ஏதோ சேதி காதில் விழ, வயக்காட்டிலிருந்து இவள் நேராகவே கட்சி அலுவலகம் சென்றாள். வேறு ஒரு வெள்ளை வேட்டிக்காரர் அங்கிருந்தார்.

அவரும் வெள்ளைச்சட்டைக்காரருடன் இருப்பவர்தான். “தலைவரு வாராருன்னு கேள்விப்பட்டேங்கய்யா… அதான் நாவகப்படுத்திட்டு போலான்னு வந்தேன்…” என்றாள். “எளவு வீட்ல சொன்ன உறுதிமொழிதானே.. எல்லாம் நெனப்பு இருக்கும்மா… தலைவரு கட்டாயம் நெறவேத்திடுவாரு… எலக்ஷன் நேரம்… ஆளுங்கட்சிக்காரங்க நாம எப்போ அசருவோம்னு பாத்துக்கிட்டு திரியிறான்.. பண்ணி வச்சிருக்க ஊழல் அப்புடீ..” அவளிடம் அரசியல் பேசினார். பிறகு  ”கவலப்படாதம்மா… பிரச்சாரத்துக்கு தலைவர் வந்துதானே ஆவுணும்.. அப்ப கேட்டு வாங்கிடுவோம்..” என்றார். அவள் கிளம்பியபோது ”மறக்காம நம்ப கட்சிக்கு ஓட்டு போட்டுடும்மா…” என்றார்.

தலைவர் வருகை உறுதியானதிலிருந்து ஊர்கள் பரபரத்தன. நோட்டிசுகளும், நகரத்தில் இருப்பது போன்று சுவரொட்டிகளும் விளம்பரப் பதாகைகளும் கட்சிக் கொடிகளும் தோரணங்களும் கட்டப்பட்டு ஊரே கலகலத்திருந்தது. அவள் சோற்றை வடித்து விடும்போது கயிற்றுக்கட்டிலின் தொங்கலில் நார் போல அமர்ந்திருந்த தாத்தா “இருந்து குடுத்தானோ இல்லியோ செத்து குடுக்கிறான் ஒம் புருசன்.. எப்டியோ வெடிஞ்சா செரி…” என்றார். “இந்த தடவ இவிங்கதான் செயிப்பாங்கன்னு பேசிக்கிறாவோ…?” என்றாள் தாத்தாவின் மனைவி. “நமக்கென்ன…? எவேன் கூடுதலா காசு குடுக்கிறானோ அவனுக்கு ஓட்ட குத்திட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்..” என்றார். அந்த மெல்லிய தேகத்துக்கே கயிற்றுக்கட்டில் தரை வரை தொங்கியது.

அந்த ஊரை தொட்டுக் கொண்டு செல்வது போன்று தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பேச்சு அடிப்பட்டது. சரியாக மாலை நான்கு பதினைந்துக்கு அவர் அந்த ஊருக்கு வந்து விடுவாராம். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பதினைந்து நிமிடங்கள் தோன்றுவாராம். அப்போது நிவாரண உதவிகள் அளிப்பதாகவும் திட்டமாம்.  சரியாக இருபதாம் நிமிடத்தில் அந்த ஊரை விட்டுக் கிளம்பி விடுவார் என்று அவள் கட்சி அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அவளை இரண்டு மணிக்கெல்லாம் மேடை இருக்குமிடத்துக்கு வந்து விடுமாறு கூறியனுப்பினர். அன்றும் அட்சயா பள்ளியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அம்மாவுக்கு துணையாக வந்திருந்தாள். மேடை இருந்த மைதானத்தைச் சுற்றி தொண்டர்கள் கூட்டம் அலையலையாய் நின்றிருந்தது. அவை பேரிரைச்சலாக மாறியபோது, அவள் தலையை நீட்டி என்னவென்று செவிகளால் துழாவினாள். தலைவர் வந்து விட்டாராம். வரும்வழியில் மாரியப்பன் டீக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி, கண்ணாடி கிளாஸில் டீ வாங்கிக் குடிப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கூவினர். டீக்கடையருகேதான் அவள் வீடுமிருந்தது. தலைவரைப் பார்க்க வந்த கூட்டம் இங்கிருப்பதா..? அங்கு செல்வதா..? என அங்குமிங்குமாக அலைமோதியது.

அவள் அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மேடைக்கருகே சென்று நின்று கொண்டாள். அப்போதுதான் வெள்ளை வேட்டிக்காரரோ, வெள்ளைச்சட்டைக்காரரோ கட்சி அலுவலர்களோ அவளைப் பார்த்து விட முடியும். தலைவர், வண்டியில் ஏறாமல், கால்நடையாக வீதியில் நடந்து வருகிறாராம். அப்படியாயின், இங்கு வர எப்படியும் அரை மணி நேரமாவது ஆகி விடும். அங்கிருந்த வீடொன்றில் நுழைந்து, பழைய சோற்றை பிசைந்துருட்டி உள்ளங்கையில் வைக்கச் சொல்லி ஆசையோடு உண்டதாக சேதி பரவியது.  டீக்கடைக்கார மாரியப்பன் பின்னோடே வந்து சூடான பஜ்ஜியை  நீட்ட, அவர் அங்கு நடமாடவியலாது படுத்திருந்த பாட்டிக்கு ஊட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஒளியில், பாட்டி கண்கள் கூசி மூடிக் கொண்டாராம். “பொறவு காருங்கெல்லாம் எங்க விறுவிறுப்பா போவுது..?” என்றாள். “தலைவர் கௌம்பிட்டாராம்.. ஆரத்தி தாம்பாளத்த எடுத்துக்கிட்டு பொம்பளையாளுங்க கூட்டம் நவுர மாட்டேனுடுச்சு.. நாலு எடம் போறவரு இங்கேயே நின்னுக்கிட்டிருந்தா கதைக்காவுமா… ஆளுக்கு நூறு ரூபா தட்டுல போட்டுடுன்னு கச்சியாளுங்கட்ட சொல்லீட்டு அவரு கௌம்பீட்டாரு…” அதன்பிறகு ஒருநாள் அவள் கட்சி அலுவலகம் சென்று அங்கிருந்தவரிடம் விலாவாரியாகக் கூற, அவர் உடனே யாருக்கோ அலைபேசினார். பேசப் பேச அவர் முகம் மலர்ந்தது போலிருந்தது. “ஒண்ணும் பெரச்சனையில்ல.. ஒதவி வீடு தேடி வந்துடும்…” என்றார்.

தேர்தல் நெருங்க நெருங்க ஊர் இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. நியாயவிலைக்கடையிலும் வயக்காட்டு கூலியோடும் வைத்து பணப்பட்டுவாடா நடந்தது. திடீர் காதுகுத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு கறி விருந்தும் தொடர்ந்து குடிவிருந்தும் அமர்க்களப்பட்டன. அவள் வீட்டில் ஒரே ஓட்டு மட்டுமேயிருந்தது. சிறியதாக குக்கர் ஒன்று அவளுக்குக் கிடைத்தது. இளைஞர்கள் திண்ணைகளை விடுத்து விட்டு இறக்கைகளைக் கட்டிக் கொண்டும் புதர்க்காடுகளில் கால்பரப்பிக் கொண்டுமாக பரபரத்துக் கிடந்தனர். வெள்ளை வேட்டியும் வெள்ளைச்சட்டைகளுமாக கட்சி அலுவலகமும் பரபரப்பிலாழ்ந்தது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், இனி நிவாரண உதவிகள் அளிக்க அனுமதிக்கமாட்டார்கள் என கட்சி அலுவலகத்தில் சொன்னார்கள். அட்சயாவுக்கு முதலில் நல்லதாக இரண்டு துணிமணிகள் வாங்க வேண்டும். அவளுக்கும்தான். கட்சி அலுவலகத்துக்கு அலைவதற்காகவாவது வேண்டும். ஆனால் உதவி கிடைத்ததற்குப் பிறகு அங்கு போக வேண்டிய தேவை ஏன் எழ போகிறது? அலுமினிய சோற்றுப்பானையொன்று புதிதாக வாங்க வேண்டும். கதவின் வழியாக காற்று உள்ளே நுழைந்து உடலின் வியர்வையை வழித்துக் கொண்டு போக, இவள் கதவை நோக்கி உடலை திருப்பிக் கொண்டாள். அதற்குள் அட்சயா உறங்கி விட்டிருந்தாள். அதைப் பார்த்தபோது அவளுக்கும் உறக்கம் வந்தது. கதவை சார்த்தி விட்டு மகளை நோக்கி மேசை மின்விசிறியைத் திருப்பி வைத்து விட்டுப் படுத்தபோது, கதவின் ஓட்டை வழியே பிடிவாதமாக நட்சத்திரமொன்று எட்டிப் பார்த்து கண் சிமிட்டியது.

தேர்தல் முடிவுகள் வந்திருந்தன. இம்முறை எதிர்க்கட்சிக்கு ஆளும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. வெள்ளை சட்டைக்காரரின் மைத்துனருக்கு மந்திரிப்பதவி கிடைக்கும் என்று ஊருக்குள் பேச்சு அடிபட்டது. “மச்சினன் மந்திரியாயிட்டா இவரே ஆன மாதிரிதான்… ஒரு நடை கட்சியாபீஸ் போய் பாத்துட்டு வந்துரு…” என்று ஊர் சொல்லும்முன்பாகவே, இவள் இரண்டு முறை கட்சி அலுவலகத்திற்கு நடந்திருந்தாள். கட்சி அலுவலகம் முன்னால் பந்தல் போடப்பட்டு, நீர்மோர், தேநீர், குளிர்பானம் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. புதிது புதிதாக நிறைய ஆட்கள் அங்கிருந்தனர். அவளை அடையாளங்கண்டு கொண்ட காவலாளி “அய்யாவ நாளைக்கு பத்து மணிக்கா வந்து பாரும்மா..” என்றார். அவள் அதை அனுசரித்து மதியமாக அட்சயாவையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றாள்.

வெகுநேரமாக வெளியே நின்றிருந்த அவளை யாரோ விசாரித்தார்கள். அவள் விஷயத்தைக் கூற, சீட்டு எழுதித் தருமாறு கூறினார்கள். அட்சயா, பெயர் என்றிருந்த இடத்தில் அம்மாவின் பெயரையும், நோக்கம் என்றிருந்த இடத்தில் நிவாரண உதவி என்றும் எழுதிக் கொடுத்தாள். ஆளுயர எடுப்புச் சாப்பாட்டு கேரியரொன்று தூக்கமுடியாத கனத்தோடு உள்ளே போனது. நெடுநேரமாகியும் அவளை யாரும் அழைக்கவில்லை. அங்கிருந்த செம்பருத்தியும் பவளமல்லியும் அதிக ஊட்டத்தில் மரமாக மாறியிருந்தன. வேம்பின் தாழ்ந்த கிளைகளிலிருந்து பழவாசம் வீசியது. நிறைய வெள்ளைவேட்டிச் சட்டைகள் உள்ளே வருவதும் பந்தலில் நின்று பேசுவதுமாக இருந்தனர். அவள் மகளோடு அங்கேயே நின்றிருந்தாள். திடீரென்று வேட்டியின் பின்பக்க நுனியை கெந்தி அதைக் கையால் பிடித்தவாறு வெள்ளை வேட்டிக்காரர் வெளியே வர இவள் விறுவிறுப்பாக முன்னேறி அவரிடம் சென்றாள்.  அவர் இவளைப் பார்த்து நெற்றியை சுருக்கியபோது அவள் நிவாரண உதவி என்றாள். “ஒண்ணும் பிரச்சனையில்லம்மா.. ஏற்பாடு பண்ணிடுலாம்…” என்றார் அவர்.

அவர்கள் மரத்தோரம் வைத்திருந்த சான்றுகள் அடங்கிய நெகிழிப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். குதியாட்டம்போல போட்டுக் கொண்டு பின்னால் வந்த அட்சயா, அங்கு உதிர்ந்துகிடந்த வேம்பின் பழங்கள் நாலைந்தை போகிறபோக்கில் குனிந்து கையியெடுத்துக் கொண்டாள். பந்தலுக்கு வெளியே வெயில் கடுமையாக ஒளிர்ந்தது. அவள் ”இத்த என்னாத்துக்குடி பொறுக்கியாந்தே…” என்றபடியே மகளின் கையிலிருந்த பழமொன்றை நாசிக்கருகே கொண்டு சென்று “நல்லா வாசமடிக்குது..” என்றாள்.

***

கலைச்செல்வி – எட்டுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார், இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட சில முக்கிய விருதுகள் வாங்கியுள்ளார். தொடர்புக்கு – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular