நட்சத்திரங்களை இழக்கும் கடல்

0

நாராயணி சுப்ரமணியன்

குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள்.

பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செழித்து வளரக்கூடியவை. இவற்றின் வளர்ச்சி விகிதம் அதிவேகமானது. ஒரு கெல்ப் பாசியின் சராசரி உயரம் 200 அடி… அதிகபட்சமாக இவை 250 அடி வரை கூட வளரக்கூடிய இயல்புடையவை. சில கடற்பகுதிகளில், கடலின் தரையிலிருந்து கிளம்பி, மேற்பரப்பு வரை இவை நீள்கின்றன. சில சமயங்களில் சூரிய ஒளியைக் கூட விழுங்கிவிடக்கூடிய இந்த அடர்க்காடுகளில், கடல்நாய், ஊதா கடற்பரட்டை, சூரியகாந்தி கடல் நட்சத்திரம், செம்மறித்தலை மீன், கல்மீன் என நமக்கு அதிகம் பரிச்சயமில்லாத பல உயிரிகள் வசிக்கின்றன.

சூரியகாந்தி நட்சத்திரங்களின் பேரழிவு

சூரியகாந்தி நட்சத்திர மீன் (Sunflower star அல்லது sunstar) என்பது, இந்தக் கெல்ப் காடுகளில் பார்க்கிற இடத்திலெல்லாம் காணக்கிடைக்கும் உயிரியாக ஒரு காலத்தில் இருந்தது. ஒரு சைக்கிள் சக்கரத்தைப் போன்ற சுற்றளவு கொண்ட இந்தக் கடல் நட்சத்திரத்துக்கு சராசரியாக 16 முதல் 24 கைகள் வரை இருக்கும். கெல்ப் காடுகளில் டைவிங் செய்பவர்களைப் பொறுத்தவரை, சூரியகாந்தி நட்சத்திரங்களைப் பார்ப்பது என்பது, காட்டுக்குள் செல்பவர்கள் குரங்குகளைப் பார்ப்பதுபோன்ற சாதாரண நிகழ்வு.

2013ம் ஆண்டு எல்லாவற்றையும் மாற்றியமைத்தது. வடகிழக்கு பசிபிக் கடலில், ப்ளாப் (Blob) என்று அழைக்கப்பட்ட ஒரு கடல் வெப்பமாதல் நிகழ்வு ஏற்பட்டது. கடல்நீரின் சராசரி வெப்பநிலை இரண்டு முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. மூன்று ஆண்டுகள், அதாவது கிட்டத்தட்ட 2015ம் ஆண்டின் இறுதி வரை இது தொடர்ந்தது.

இந்த காலகட்டத்தில், அதிக வெப்பநிலை காரணமாக வைரஸ் ஒன்று சூரியகாந்தி நட்சத்திரங்களைத் தாக்கியது. சூரியகாந்தி நட்சத்திரங்கள் சுருங்கின, கைகளை இழந்தன, அப்படியே கரைந்து காணாமல் போயின! Sea star wasting disease என்று இதற்குப் பெயரிடப்பட்டது. சூரியகாந்தி நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது ஒரு கடுமையான கொள்ளை நோய் எனலாம். இந்த நோயால் கெல்ப் காடுகளில் வசித்த 5.75 பில்லியன் சூரிய நட்சத்திரங்கள் அழிந்தன என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். கொள்ளை நோய் முடிவுற்றபோது 90.6% நட்சத்திரங்கள் இறந்திருந்தன, வெறும் 9.4% கடல் நட்சத்திரங்கள் மட்டுமே மீதமிருந்தன.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள்

கடல் நட்சத்திரங்களை வைரஸ்கள் தாக்குவது இது முதல் முறையல்ல. 72 வருடங்களுக்கு முன்னால் டெஸ்மோவரைஸ் தாக்குதல் ஏற்பட்டது. 1978ல் சூரியகாந்தி நட்சத்திரங்கள் வைரஸால் தாக்கப்பட்டன. கடல்நீரின் வெப்பத்தை அதிகரிக்கும் எல் நினோ நிகழ்வுகளின் போது (1980, 1997) வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக இந்தத் தாக்குதல்களின்போதெல்லாம், இலையுதிர்காலத்தோடு தொற்று குறைந்துவிடும். நீரின் வெப்பநிலை குறையும்போது வைரஸ் வீரியம் இழந்துவிடும். ஆனால், 2013ல் ஏற்பட்ட ப்ளாப் நிகழ்வால், நீரின் வெப்பநிலை குறையாமலேயே இருந்திருக்கிறது. வைரஸ்கள் முழு வீரியத்தோடு சூரியகாந்தி நட்சத்திரங்களை அழித்துவிட்டன.

சூழல்சார் மாறுபாடுகள்

கெல்ப் காடுகளைப் பொறுத்தவரை, சூரியகாந்தி நட்சத்திரங்களே ஊதா கடற்பரட்டைகளுக்கு (Purple sea urchins) எதிராக இயங்கும் வேட்டையாடிகள். கடல் நாய்கள் (Sea otters) கடற்பரட்டைகளை உண்கின்றன என்றாலும், அவை அளவில் பெரிய கடற்பரட்டைகளை மட்டுமே தேடித் தேடி உண்ணும் இயல்புடையவை. சூரியகாந்தி நட்சத்திரங்களின் வேட்டை, சிறிய கடற்பரட்டைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தது. வைரஸ் தொற்றால் சூரியகாந்தி நட்சத்திரங்கள் இறந்தபின்பு, கடற்பரட்டைகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்தது. சூரியகாந்திகளைத் தாக்கிய கொள்ளை நோயின் முடிவில், கடற்பரட்டைகளின் எண்ணிக்கை 166%, அதாவது கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்திருந்து.

கெல்ப் காடுகளில் வசிக்கும் கடற்பரட்டைகள், கெல்ப் பாசிகளை விரும்பி உண்ணும் இயல்புடையவை. கடற்பரட்டைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெருவெடிப்பால், கெல்ப் காடுகள் வேகமாக அழிந்தன, சூரியகாந்திகள் இறந்தபிறகு, கெல்ப் காடுகளின் அழிவு விகிதம் 30 சதவிகிதம் அதிகரித்தது.

கடற்பரட்டைப் பாலைவனங்கள்

வேட்டையாடி விலங்குகள் எதுவுமற்ற நிலையில், கடற்பரட்டைகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது கடினம். இவை மிகவும் கடினமான சூழலையும் தாங்கக்கூடிய விலங்குகள். இரை கிடைக்காமல் இவை தொடர்ந்து பசியில் வாடும்போது, இவற்றின் தாடை மற்றும் பற்களில் உள்ள கால்சைட் சத்து அதிகரித்து, தாடைகள் கூடுதல் வலுப்பெறுகின்றன என்கிறது ஒரு ஆய்வு (). ஆக, பட்டினியால் இவற்றின் வலு அதிகரிக்கவே செய்யும். தவிர, பசியில் இருக்கும் கடற்பரட்டைகள், நடத்தையிலும் கடும் மூர்க்கத்தை வெளிப்படுத்துகின்றன. வலுவேறிய பற்களால் பவளப்பாசிகளையும் நத்தை ஓடுகளையும் கூட சுரண்டி உண்ணத் தொடங்குகின்றன. உண்டு வேகமாக வளர்கின்றன.கெல்ப் பாசிகளைத் தேடித் தேடி அழித்தொழிக்கின்றன. கடற்பரட்டைகள் ஒரு கெல்ப் காட்டை ஆக்கிரமித்து அதை வேரோடு அழிப்பதை Time lapse காணொலியில் பார்த்தால் அவற்றின் வீரியம் நமக்குப் புலப்படும்.

கெல்ப் காடுகள் அழியத் தொடங்கிய சில நாட்களிலேயே, கடற்பரட்டைகள் மட்டுமே நிரம்பிய பாலைவனமாக (Urchin barren) அந்த இடம் மாறிவிடுகிறது. உயிர்ச்சத்துக்கள் மிகவும் குறைவான இடம் இது. இங்கு உயிரிகளால் வசிக்க முடியாது. இதை வாழிடம் என்றுகூட சரியாக சொல்லிவிடமுடியாது என்பதே நிதர்சனம். கடற்பரட்டைப் பாலைவனங்கள் எதையும் தாங்கும் திறன் கொண்டவை. ஒரு கெல்ப் காடு கடற்பரட்டைப் பாலைவனமாக மாறிவிட்டால், திரும்ப அந்த இடத்தில் பாசிகள் முளைப்பது கடினம். ஜப்பானின் ஹொக்கெய்டோ பகுதியில் 80 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கடற்பரட்டைப் பாலைவனம், எந்த மாற்றமுமின்றி இப்போதும் அப்படியே இருக்கிறது!

சிறு வெளிச்சம்

சூரியகாந்தி நட்சத்திரங்களை இழந்து தவித்துக்கொண்டிருந்த  கெல்ப் காடுகளுக்கு சிறு வெளிச்சம் அளிப்பவையாக இருக்கின்றன சில சமீபத்திய ஆய்வுகள். 2020ல் சூரியகாந்திக் கடல் நட்சத்திரங்கள் மிக வேகமாக அழிந்துவரக்கூடிய உயிரினங்கள் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிறகு இதற்குத் தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அறிவியலாளர்களின் கவனம் இந்த உயிரிகள்மேல் விழுந்தது.

2021ன் தொடக்கத்தில், அமெரிக்காவின் சான் ஜுவான் தீவு ஆய்வகத்தைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள்,  இந்த நட்சத்திரங்களை ஆய்வகத்திலேயே இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். புதிதாகப் பிறந்துள்ள இந்தக் கடல் நட்சத்திரங்கள், வெப்பம் அதிகமான நீரிலும் நன்கு வாழக்கூடியவை என்பது கூடுதல் மகிழ்ச்சி. அதிவேகமாக அழிந்துவரும் விலங்குகள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு மீண்டும் இயற்கை வாழிடங்களில் விடப்படுவது வழக்கம். இயற்கை சூழலுக்கு சென்றபின்பு வழக்கமான இனப்பெருக்க சுழற்சியின்மூலம் எண்ணிக்கை பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு இருக்கிறது. ஆய்வின் முதற்கட்ட முடிவுகள், எதிர்காலத்தில் கடல் நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் இவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

முகட்டுக்கல்லாக விளங்கும் உயிரிகள்

சூழலியலில், முகட்டுக்கல் உயிரிகள் (Keystone species) என்ற ஒரு கருத்தாக்கம் உண்டு. ஒரு கட்டிட வளைவில் இருந்து முகட்டுக்கல்லை நீக்கிவிட்டால் எப்படி அந்த வளைவே நிலைகுலையுமோ, முகட்டுக்கல் உயிரிகள் அழிந்துவிட்டால் அந்த சூழலே தடுமாறி சீர்குலையும். 1969ல் ராபர்ட் பெய்ன் என்கிற அறிவியலாளர், கடல் நட்சத்திரங்களை முன்வைத்தே இந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார். பொதுவாக முக்கிய விலங்குகள் என்று நாம் கருதும் பல பெருவிலங்குகளோடு ஒப்பிடும்போது, கடல் நட்சத்திரங்கள் சாதாரணமானவையாகத் தெரியலாம். ஆனால், கெல்ப் காடுகள் மட்டுமல்லாமல் பல வாழிடங்களில் அவைதான் அடிப்படை உயிரிகள். அவை அழிக்கப்பட்டால் சீட்டுக் கட்டு கோபுரத்தைப் போல சூழலே நிலைகுலைந்துவிடும். கடல் நட்சத்திரங்கள் அழிந்ததால் மட்டிக்கிளிஞ்சல்கள் அதிகரித்து, மற்ற விலங்குகள் அடியோடு அழிந்த பல நிகழ்வுகள் உண்டு.

வடகிழக்குப் பசிபிக் கடலில் சூரியகாந்தி நட்சத்திரங்களுக்கு இப்போது ஏற்பட்டிருப்பது குறுகிய இடத்துக்குள் ஒரு அழிவு மட்டுமே (Local extinction). இதுபோன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்த கடற்பகுதிகளிலும் ஏற்பட்டால் கடலில் எத்தனை பகுதிகள் பாலைவனங்களாக மாறும் என்று தெரியவில்லை. உலகளாவிய கடல்நட்சத்திர அழிவு கடல்சூழலை எப்படிவேண்டுமானாலும் பாதிக்கலாம்.

கடல்நீரின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பதால் பவளப்பாறைகளுக்கும் கடல் பாலூட்டிகளுக்கும் வைரஸ் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்று பல ஆய்வுகள் சுட்டுகின்றன. பசிபிக் பெருங்கடலின் ப்ளாப் வெப்ப நிகழ்வு அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து வரத் துவங்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலனாகாத வகையில் பாதிக்கப்படுகிறது கடல் சூழல்.

பொதுவாக, வணிக ரீதியாக எதாவது ஒரு மதிப்பு இருக்கும் விலங்குகளின்மீதே அதிகமான வெளிச்சம் இருக்கும். சூரியகாந்திக் கடல் நட்சத்திரங்களை ஆய்வகத்தில் வளர்க்கலாம் என்ற யோசனை வந்தபோது, அதன் வளர்ச்சிநிலைகள் பற்றிய எந்த ஆய்வுமே முன்னோடியாக இருக்கவில்லை. “வணிக மதிப்பில்லாத உயிரிகள் என்பதால் இதன்மீது எந்த முந்தைய ஆய்வும் நிகழ்த்தப்படவில்லை” என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். அறிவியல் ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாம் காட்டும் பாரபட்சத்துக்கும் ஒரு சான்றாக நிற்கிறது இந்த நிகழ்வு.

கடல் நட்சத்திரங்கள் இல்லாமல் கடலே இருண்டுபோகும் என்றெல்லாம் எழுதலாம்தான். ஆனால் தூரத்தில் இருக்கிற கடல் இருட்டானால் நாம் கவலைப்படுவோமா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

தரவுகள்

  1. Levitan DR, 1991, Skeletal changes in the test and jaws of the sea urchin Diadema antillarum in response to food limitation, Marine Biology.
  2. Konar B et al, 2019, Wasting disease and static enviromental variables drive sea star assemblages in the Northern Gulf of Alaska, Journal of Experimental Marine Biology and Ecology.
  3. Gravem, SA et al, 2021, Pycnopodia helianthoides (amended version of 2020 assessment). The IUCN Red List of Threatened Species 2021.

***

நாராயணி சுப்ரமணியன், கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: [email protected]om

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here