திட்டமிட்டு பெய்த மழை

2

மழை நீண்டுத் தணிந்த
முன்னிரவில் நடக்கிறோம்
ஒரு குடையில்….

ஈரத்தைப் பொசுக்கி வெளியேறும்
உன் தோள்களின் சுகந்தம்
விரகத்தின் காம்புகளை
உரசத்தான் செய்கிறது
உரையாடல்களில் மதியிருந்த போதும் ..

தற்காலிகமாய்க் குவிந்த
மழைப் பள்ளங்களுக்காகவும்,
இடரும் சிறு கற்களுக்காகவும்,
பரஸ்பரம் கரம் பற்றுகிறோம்.
(அவை
நமக்காகவே உருவாக்கப் பட்டிருந்தன)
வெப்பத்தின் மீட்சிகள்
விரைந்து கடக்கின்றன
உணர்ந்தும் உணராதவை போல்…

குடைக்கான நன்றியைப் பெருக்கிக் கொண்டே
அரவணைக்கிறாய்,
மாளாத வெப்பத்தில் திறக்கின்றன
நாணத்தின் அவிழாத முடிச்சுகள்-
அனைத்தும் ….

கூர்முனைக் கத்தியின் சீற்றத்தோடு
நெருங்கும் சீரற்ற சுவாசக்காற்று
உழுது கிளர்ந்தது
ஆழ்நிலத்துப் பெருங்காட்டை,
விவரிப்பில் அடங்காத
ஈரத்தின் வாசனை
விரவிப் பெருகியது…..

குளிரைப் பொருளாக்கி
தேநீருக்கு ஒதுங்கினோம்.
நீ
இதழ்வெளி பதிந்து
அருந்திய கோப்பையின்
விளிம்புகள் சுவைத்த போது
ஒரு துளி மதுவிருந்தது…..

வெகுதூரம் பயணத்திற்கான
வழியனுப்புதல் போல்
கனத்த இதயத்துடனான என்னைத்
தனித்தனுப்பிய போது
விஷமு மிருந்தது …

சிறு புற்கள் மீதமரும்
பனித்துளியாய்,
மயிர்க் காம்பில் உதிர்ந்து விழும்
மழைத் துளியைப் பருகிக் கொண்டே
கடந்து விடுகிறோம்
நிலமற்ற சொல்லோடும்
பொருளற்ற ஆமோதித்த லோடும்….

அமுதாய்ச் சொரியும் மாரிக்காலம்
அலையாய் தகித்தும்
அயர்ந்து உன் தோள்களில் சாயாமலேயே
மறைந்து விடுகிறது
நீ என்னை
வீடு வரை சேர்ப்பித்த
நெடும் பயணம்…..

உறங்காத மனத்தின் இரவெங்கும்
பெருவெள்ளம்……

–(பாலா இளம்பிறை)

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here