தழும்பு

3

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்

டித்துக் கொண்டிருக்கும் காற்றின் திசைக்கு முடிக்கற்றைகள் விலகுவதையும், ஒரு பெரிய காயத்தின் தழும்பு இருக்கும் தடத்தைக் காட்டிக் கொடுப்பதையும் கவனிக்கத் தொடங்கியிருந்தான்.

“நம்பவே முடியல தெரியுமா இப்டி ஒரு விஷயத்த கேள்விப்படுவேன்னு”, அந்தக் குரலில் ஆச்சரியத்தைவிட அதிர்ச்சி மேலெழும்பி இருப்பதைப்போல் தோன்றியது அவனுக்கு. சொல்லின் மீது ஏறும் சொற்கள் மனதின் அடியாழத்தில் உறைந்து கிடக்கும் தழும்பை நிமிண்டி ரத்தக் கசிவை ஏற்படுத்துவதைப் போலவும், நடுங்கும் தன் விரல்களின் வழியே அந்த ரத்தம் வழிந்தோடுவதைப் போலவும் உணரத் தொடங்கினான்.   

***

த்தனை கழுவியும் அகன்றிருக்காத ரத்தவாடையை மீண்டும் மீண்டும் மோந்து பார்த்தான். கழுத்தறுபட்ட ஜீவன் ஒன்று துடித்து அடங்குவதைப் போல், அறுபடுமுன் ஒலித்த குரல் தெளிவாகக் கேட்பதைப்போல் இருந்தது. கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தன்மார்பைத் துளைக்கக் காத்திருக்கும் குண்டுகளை நினைத்தபோது பயம் மேலும் அதிகமானது. “இதான் ஆரம்பமாம். வரிசையா ஏகப்பட்ட என்கவுண்டர் பாக்கி இருக்காம்”. ஒரு சம்பவத்தின் வழியாக மேலும் பல சம்பவங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது ஊர்வாய்.

காட்டுத்தீயின் வேகத்தில் பரவிக் கொண்டிருக்கும் அந்த  தலைப்புச்செய்தியும், அது ஏற்படுத்திய விபரீதத்தையும் அடிவயிற்றில் உணரத் தொடங்கியிருந்தான் கருப்பசாமி. பயமும், பயத்தில் கலங்கிய வயிறும் இதுவரை நான்கு தடவைக்கும் மேல் ஆத்துக்குள் இறக்கிவிட்டிருக்கிறது. இருளைக் கிழித்துக்கொண்டு வரவிருக்கும் போலீஸ் ஜீப்பை உருவகப்படுத்திப் பார்த்தான். வாந்தி வரும்போல் இருந்தது. விழுந்து கிடக்கும் புளியம்பழங்களில் ஒன்றை எடுத்து அவசரமாகக் கடித்தான்.இடைவெளியற்றுப் படர்ந்து கிடக்கும் புளியமரத்து இருளும், மழிக்கப்பட்ட மொட்டைத் தலையின் வழியே ஊடுருவும் குளிர்ச்சியும், உறைந்து கிடக்கும் அச்சத்தை உலரவிடாமல் பார்த்துக்கொண்டன. எப்போது வேண்டுமானாலும் தன்னை ஒரு துப்பாக்கி நெருங்கக்கூடும். அரவமற்ற இருளில் கரிய உருவமாக அமர்ந்திருக்கும் தன்னைச் சுட்டுக் கொல்லக்கூடும் என்றும் நினைத்தான். அவனையுமறியாமல் உதிரத் தொடங்கிய கண்ணீர்த் துளிகள் காற்றின் திசைக்குத் துடித்து அதிர்ந்தன.

“ஏல கருப்பா வீட்டுக்கு போவலியா? அம்மா தேடுதா பாரு” வாய்க்காபாலம் வரைக்கும் நடந்தே வந்திருக்கிறார் மூக்கையா. அப்பாவுக்குப் பெரியப்பா.

“கருப்பா லேய், இப்டியே இருந்தா என்னடே செய்ய? ஊரு கெடக்க நெலைக்கும், அம்ம கெடக்க நெலைக்கும் நீதானடே கூட இருக்கணும். நீயே இங்கன தனியா இருந்தா பொம்பள என்ன செய்வா?” மூக்கையா விடுவதாயில்லை. காதின் ஓரத்தில் பாதி குடித்து மீதமிருந்த பீடியை எடுத்து பற்ற வைத்தார். பற்ற வைக்கும்போது சுருங்கிய கண்களின் ஓரத்தில் கரிசனம் இருப்பதைப்போல் தெரிந்தது.

“வந்தது வந்துட்டேன், கால நனச்சிட்டு வாறன். ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு இங்கயே இரி. காங்காமா போயிறாத. தேடி அலைய முடியாது.  செரியா?”.

“தாயோளி… ஒரு நெலையா கெடக்கானுவாளா. எல்லாம் அப்பன் ஆத்தாவ சொல்லனும். மீச மொளச்ச பின்னயும் குண்டிய தொடச்சி விட்டுட்டே இருந்தா இப்படிதான் கெடப்பானுவோ”, என்றபடி முனங்கிக்கொண்டே புதரினுள் மறையும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான் கருப்பன். பீடியின் கங்கும், புகையும் மறைந்தபோது, தன்னைத்தேடி ஒரு ஜீவன் வந்ததை நினைத்து ஆறுதல் அடைந்தான். அவர் விட்டுச்சென்ற வாசம் பாதுகாப்பைத் தருவதைப்போல் இருந்தது. எப்படியும் பெரியவர் திரும்பிவர அரை மணி நேரமாவது ஆகக்கூடும்.

“அம்மாஆஆஆ…” பெண் குரலா? சிறுவனின் குரலா? என்று பிரித்துப்பார்க்க முடியாத அலறல் சத்தம் அந்தக் குரலில் இருந்தது. கையில் பிடித்திருந்த பொருள் சதையைக் கிழித்து ஆழமாக இறங்குவதையும், விரல்களின் மடிப்புகளை சூடான ரத்தம் நனைப்பதையும் உணர முடிந்தது. இது நடந்து இரண்டு தினங்கள்தான் ஆகின்றன. நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தைச் செய்துவிட்டு, வழக்கமாகப் படுத்துக்கிடக்கும் வாய்க்காபாலத் திண்டில் அடைந்து கிடந்தான் கருப்பன். செய்த செயலின் விபரீதம் அப்போது புரிந்திருக்கவில்லை. அடுத்தநாள் காலை வீட்டினுள் நுழையும்போது தெருவே பரபரப்பாகி இருந்தது.

“ஏல கருப்பா ஊருக்குக் கெழக்கால ஒரு சின்ன பையன வெட்டி கொண்ணுட்டாங்களாம். தொண்டகுழிலயே வெட்டிருக்கான் பாவி. கொன்னது யாருன்னு தெரியலயாம். கண்ட நேரத்துக்கும் வீட்ட விட்டு போவாத என்ன?”அம்மா அவனிடம் தகவலைச் சொன்னபோது பகீரென்று இருந்தது கருப்பனுக்கு. பொருள் தொண்டையில் இறங்கியதைப் போன்ற நினைவு இல்லை. வீசும்போது இருட்டில் தன்னை நெருங்கி வந்தது யார் என்றும் தெரியவில்லை. தன்னை யாரும் பிடித்துவிடக்கூடாது, தனக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயத்தில் பாதுகாப்புணர்வில்தான் பொருளை வீசினான். பொருள் என்றால் கத்திகூட இல்லை. கையில் வைத்திருந்த துருப்பிடித்த ஆக்சா பிளேடு. வீசிய வேகத்தில் எவ்வளவு ஆழமாக வேண்டுமானாலும் இறங்கியிருக்கக்கூடும் என்பதும் உண்மை. இப்போது பதற வைப்பதும் அதுதான்.

“ஏல வெல்வெட் மூர்த்திய புடுச்சிட்டாங்களாம். அவன் சேக்காளி பூரா பயலுவகிட்டயும் விசாரண நடக்காம். அடங்கி இருல”, மூக்கையா எட்டிப்பார்த்து வாசலில் இருந்தே தகவலைச் சொல்லி விலகியபோது, மறைத்து வைத்திருந்த ஆக்சா பிளேடை ஒரு பேப்பரில் சுற்றி, துருப்பிடித்த அந்த தகரக் கொட்டகையில், ஒட்டுப் போடுவதற்காக அறைந்த எண்ணெய் டின் ஒன்றின் துருத்திய விளிம்பின் வழியாக உள்ளே சொருகினான். அந்த இடத்தில் ஒளிந்திருந்து அது தன்னைப் பாதுகாக்கக்கூடும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. என்ன செய்ய வேண்டும்? பதில் தெரியவில்லை.சிதறிக்கிடக்கும் தவசு மிட்டாயின் வாசத்திலும், நியாயம் கேட்கும் அப்பாவின் வியர்வைத் துளிகளிலும் தனக்கான நியாயங்களைத் தேடினான். எதுவும் சமாதானமாக இல்லை. அம்மை என்ன செய்வாள்? அவளைப் பற்றி ஏன் ஒரு நொடியேனும் யோசிக்கவில்லை?

***

வாய்க்காபாலத்துத் திண்டில், அமர்ந்திருக்கும் திசையில் இருந்து தலையைத் திருப்பினால், தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் சிதை தெரிந்தது. சவுரிக் கூந்தலும் மட்டையும் எரிந்து மேலெழும் புகை அவனிருக்கும் இடம் வரையும் பரவியிருந்தது. இருளில் தன்னெதிரே தெரியும் ஒரே வெளிச்சம் அது மட்டும்தான் என்பதை நினைக்கும்போது வாழ்வே சூன்யமாகிப் போனதைப்போல் இருந்தது. இரண்டு தினங்களுக்கு முன் நடந்த கொலையும், இன்றைக்கு நடந்த என்கவுண்டரும் சொல்லும் செய்தி ஒன்றேயொன்றுதான். அடுத்த இலக்கு தான்தான்.

“இன்ஸ்பெக்டருக்கு சொந்தக்காரன் புள்ளையாம்டே. அதான் இம்புட்டு வேகமாம். இந்த பேதில போவான் அவன் கழுத்துலையா கத்திய வெப்பான். பொசுக்குன்னு போயிட்டான”, தெருவில் எழத்தொடங்கிய சலசலப்பு மீண்டும் வீட்டைவிட்டு வெளியே துரத்தியது. கொலைகளுக்கும் ரத்தத்திற்கும் பழகிய மண்தான் என்றாலும் பட்டப்பகலில் ஊரின் மத்தியில் நடந்த முதல் என்கவுண்டர் இதுதான். அதுவும் கோர்ட் வளாகத்தில். ஊருக்குள் பல கதைகள் கிளைவிட்டு எழும்பத் தொடங்கியிருந்தன. இதுதான் ஆரம்பம் என்ற பேச்சுக் குரல்கள் கேட்டன.

பொதருக்குள் இறங்கிய மூக்கையா இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. ‘அவருகிட்ட சொல்லுவோமா? சவம் இது என்ன செய்யும். பெனாத்தும். வேண்டாம்’ உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்கிக்கொண்டான்.  

கடந்துசெல்லும் வாகனங்களையும், புதருக்குள்ளிருந்து வெளிப்படும் ராப்பூச்சிகளின் சத்தத்தையும் தவிர வேறு எதுவும் கேட்காத வண்ணம் ஊர் அடங்கிப் போயிருந்தது. ஊர் அடங்கிய எட்டு மணிக்கெல்லாம் நள்ளிரவின் சாயத்தை எடுத்துப் பூசிக்கொண்டது காலம்.

வழக்கமாக அரட்டையடிக்கும் இந்தத் திண்டிற்கு இனியும் யாரும் வரப்போவதில்லை. கொத்து வேலை முடிந்து வந்திருக்க வேண்டிய மணியும் முப்புடாதியும் வருவார்களா தெரியவில்லை.மணிக்கு மச்சினன் முறைதான் வெல்வெட் மூர்த்தி. மணியின் மீதும் போலீஸ் கண்ணிருப்பதாகவும்,தவசுக்கு முந்தின இரவில் மணியும், வெல்வெட் மூர்த்தியும் இதே இடத்தில் அமர்ந்து கட்டிங் போட்டதாகவும் முப்புடாதி சொன்னது ஞாபகம் வந்தது.

“ஏம்ல அவன பார்த்தா இப்டி பயப்படுத. உன்னைய திங்கவா போறான்” வெல்வெட் மூர்த்தி குறித்த பேச்சு வரும்போதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொள்வான் கருப்பசாமி.

வெல்வெட் மூர்த்தியுடன் கருப்பசாமிக்கும் பழக்கம்தான் என்றபோதிலும், அவனோடு எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று உள்ளுணர்வு சொன்னது. மணியுடனான சேர்க்கையே அப்பாவுக்குப் பிடித்தமானதில்லை.அப்படியிருக்க, வெல்வெட் மூர்த்தியோடு பேசுவது தெரிந்தால்? அவ்வளவுதான்…!அவனோடு இணைந்து ஒன்றாகக் கபடியாடிய நாளில் இருந்து ஆறேழு கொலைகளைச் செய்துவிட்டு ஏழ்ற என்ற பட்டப்பெயரை வெல்வெட் மூர்த்தி என்று மாற்றிக்கொண்டது வரைக்குமான அத்தனை கதைகளையும் கருப்பன் அறிவான். தனக்கொரு அடையாளம் வேண்டுமென்பதற்காக பொருளின் அடியில் வெல்வெட்டைச் சுற்றிக் கொண்டதால் அந்தப் பெயர் அவனுக்கு.

“ஏண்ணே… கத்திக்கு அடில பளபளன்னு துணிய சுத்திருக்கியே வழுவாது? அதும் வெல்வெட்டு வேற?” ரொம்ப நாளாகக் கேட்க நினைத்த கேள்வி. மூன்று மாதங்களுக்கு முன் இதே திண்டில் அவனருகில் அமர்ந்திருந்தபோது கேட்டுவிட்டான் கருப்பசாமி. அப்போதும் நடுங்கிக்கொண்டுதான் அமர்ந்திருந்தான்.

“புடிதாம்டே முக்கியம். பொருள் இல்ல. கண்ணு பாக்கணும். கைய்யி செய்யணும். சொல்லப்போனா இதுலதான் நல்ல புடிமானம் இருக்கு எனக்கு”, என்று சொல்லிவிட்டுப் பொருளை எடுத்து முத்தம் கொடுத்துக்கொண்டான் வெல்வெட் மூர்த்தி. அதுதான் அவனை கடைசியாகப் பார்த்தது. பேசியது. இனி அவன் இல்லை என்பதை நினைத்தபோது அவன் இல்லாமை உறுத்தவில்லை. உறுத்தியது அனைத்தும் அவன் உடலைத் துளைத்து இறங்கிய அந்த மூன்று குண்டுகள். மூன்றும் மார்பில் பாய்ந்ததாகவும், எட்டடி தள்ளிப்போய் விழுந்தான் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியது மேலும் அச்சத்தைக் கொடுத்தது.

“கருப்பே உம் பிரச்சனைய மச்சாங்கிட்ட சொன்னேன். என்ன செய்யணும்ன்னு கேட்டான். என்ன செய்யணும் சொல்லு. இன்ஸ தூக்கிருவோமா?”, தவசு முடிந்த இரவில், கருப்பசாமியின் நெற்றியில் வழிந்த ரத்தத்தின் தடம் மறைந்திருக்கும் முன் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை வெல்வெட்டிடம் சொல்லியிருந்தான் மணி. தன்னைப்பற்றிய தகவல் இத்தனை சீக்கிரமாய் அவன் காதுக்குப் போகும் என்பதை கருப்பன் அறிந்திருக்கவில்லை.

“ஒன்ன யாரு அவங்கிட்ட சொல்ல சொன்னது. லூசா நீயி?”. அப்போதைக்கு மணியைத் திட்டினாலும் மணி சொன்ன யோசனை நன்றாக இருந்தது. ஆனாலும் இன்ஸ்பெக்டரை பழிவாங்க வேண்டிய செயலை தனியாகத்தான் செய்ய வேண்டும். யாருக்கும் தெரியாமல். மணிக்கும் முப்புடாதிக்கும் ஏன் வெல்வெட் மூர்த்திக்கும் தெரியாமல்.

***

பிரபல ரவுடி வெல்வெட் மூர்த்தி என்கவுண்டரில் சுட்டுக்கொலை. போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது காவல்துறை ஆய்வாளர் தனசேகரன் மற்றும் துணை ஆய்வாளார் முத்துராஜா ஆகியோர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டான்” அத்தனை டீக்கடைகளின் வாசலிலும் மாலைமலரின் இந்த செய்தி மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது. வெல்வெட் மூர்த்தி என்ற இடத்தில் அவன் பெயரை எடுத்துவிட்டு கருப்பசாமி என்ற தன் பெயரைப் பொருத்திப் பார்த்தான். பிரபல என்ற வார்த்தை மட்டும் அந்நியமாகப்பட்டது. சம்பவம் ஒன்றுதான்.

புளியமரத்துக் கிளைகளின் அசைவில் தெரியும் நிலாவும், தலைகீழாகத் தொங்கும் வவ்வால்களும் நிலமையை மேலும் தீவிரப்படுத்தின. கொஞ்சம் அவசரப்பட்டுட்டமோ? சும்மா இருந்திருக்கலாமோ? எங்கருந்து வந்தது அவ்ளோ தைரியம்? யாரிடம் சொல்லிப் புலம்புவது? யாரிடம் ஐடியா கேட்பது?, அடுத்த குறி நாம தானா?

“காவல்துறை ஆய்வாளர் தனசேகர்” அந்தப் பெயரை நினைக்க நினைக்க அந்த முகமும், கைகளை ஓங்கியபடி தன்னை நெருங்கிய கொடூரமான கண்களும் ஞாபகத்திற்கு வந்தன. சிவந்த வாளிப்பான தேகம். கர்லாக் கட்டையைப் போன்ற கைகள். அந்த மாலையில், அந்திக்கருக்கலில், தன் முகத்தில் அறைந்த வலியும், தன்னைத் தூக்கி எறியும்போது, மேசையின் விளிம்பில் பட்டு நெற்றியில் உண்டான ரத்தக்காயமும் அத்தனை எளிதில் மறக்கக்கூடிய ஒன்றில்லை. அதைவிடப் பெரியவலி தன் குடும்பத்தை உருக்குலைத்தது. நடுரோட்டில் தன்னைப்போட்டு அடித்தது. ’அவனல்லா கொன்னுருக்கணும், புளுத்தி பெரிய…’. அந்த முகம் நினைவிலெழும் போதெல்லாம் அவன் மீதிருக்கும் வன்மத்தையும் சேர்த்தே கிளறிவிட்டது.

***

ர் மொத்தமும் ஆடித்தவசுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மாலையில், அம்மா தன்னிடமிருக்கும் அந்த ஒரேயொரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டு தெருவில் இறங்கியபோது ஊருக்கே கல்யாணகளை வந்ததைப்போல் இருந்தது கருப்பனுக்கு.

சங்கரனுக்கும் கோமதிக்கும் நடக்கவிருக்கும் கல்யாணத்தை, ஊரே திரண்டுவந்து ஆசீர்வதித்துக் கொண்டாடும் பெருவிழாவைக் காண அம்மா தயாராகியிருந்தாள். கோலம் போட்டு முடித்த ஒவ்வொரு கால்களும் தவசைக் காண்பதற்கு ஓட்டம் எடுத்துக் கொண்டிருந்தன. ஊரைச் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களும் தெக்குமாசி வீதியில் திரண்டு நிற்கும். கூடிக் களிக்கும். நிற்க இடமோ காற்று புக இடைவெளியோ இல்லாத அளவுக்குக் கூட்டம் மொய்க்கும். உப்பும் மிளகும் கிலோ கணக்கில் விற்றுத் தீரும். தொலைந்துபோன சிறுவர்களை கோமதி பார்த்துக்கொள்வாள் என்றொரு நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ தவசுக் கூட்டத்தில் இதுவரை ஒருபிள்ளைகூட காணாமல் போனதில்லை. போனாலும் திரும்பிவராமல் இருந்ததில்லை.

“ஒனக்கு சங்கருன்னுதான் பேர் வெக்க நினைச்சோம். உங்கப்பாதான் கருப்பசாமின்னு விட்டாரு. சங்கரனுக்கே காவல் எம்புள்ளன்னு சொல்லுவாரு” ஒவ்வொரு தவசின் போதும் அம்மா சொல்வாள்.

“எதுக்கும்மா உப்பும் மொளவும்?” என்றோ கேட்ட கேள்விக்கு, “நம்மகிட்ட பொன்னு இருக்கா பொருளு இருக்கா சாமிக்கு மொய் வைக்க. அதான் உப்பு மொளவு. அத வச்சா சந்தோஷமா வாங்கிப்பாரு சங்கரனாரு”

என்று அவள் சொன்ன வார்த்தை நன்றாக நினைவில் இருக்கிறது. கோமதியின் கழுத்தில் சங்கரனின் தாலி ஏறும்போது ஊரே குலவையிட்டு உப்பையும் மிளகையும் தூக்கி எறியும். உற்சவம் உச்சகட்டத்தை எட்டி இருக்கும். வேட்டுச்சத்தம் வானைப் பிளக்கும். சுற்றியிருக்கும் அத்தனை உயரமான கட்டிடங்களில் இருந்தும் உப்பு மிளகை வாரிவாரி இரைப்பார்கள். குலவையிடும் லட்சக்கணக்கான தலைகளும் உப்பு மிளகாலும், சங்கரன் கோமதியின் சந்தோஷத்தாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். கல்யாணம் முடிந்து கூட்டம் கலையும் வரைக்கும் ஊருக்குள் ஒரு வண்டி நுழைய முடியாது. ஊரின் அத்தனை எல்லைகளும் அடைக்கப்பட்டு மீண்டும் திறப்பதற்கு இரவு எட்டு மணியாகிவிடும்.

தவசு முடிந்து கலையும் கூட்டம்,ஊரின் அத்தனை திசைகளின் வழியாகவும் வெளியேறும். கூடவே கை நிறைய தவசு மிட்டாயையும் வாங்கிவிட்டே நடையைக் கட்டும். வெல்லப்பாகையும் கருப்பட்டிப் பாகையும் கொண்டு செய்யப்படும் அந்த மிட்டாயின் யாவாரம் தவசு அன்றைக்கு மட்டும் மிகப்பெரிய லாபத்தைத் தரும்.

கருப்பசாமியின் அப்பா தயாரித்து விற்கும் தவசு மிட்டாய்க்கென தனிச்சுவை உண்டு. தவசு அல்லாத காலங்களிலும் அவர் கடையில் தவசு மிட்டாய் கிடைக்கும். அதனைத் தேடிவந்து வாங்கிச்செல்ல ஆட்களும் உண்டு.இருந்தாலும் தவசுக் காலத்திற்கென்றே தயாரிக்கும் மிட்டாயில் தனி சுவை ஏறுவதாக அவருக்கொரு நம்பிக்கை. அவர் கடையின் மிட்டாய் தீர்ந்த பிறகே கூட்டம் மற்ற கடைகளைத் தேடி ஓடும். மிட்டாயை அரைத்தபடி ஊரை நோக்கி நடக்கத் தொடங்கும் ஒவ்வொரு வாயிலும் தவசு மிட்டாயின் தேனும் சேர்ந்தே வடியும்.  

கருப்பசாமி கல்லூரியில் சேர்ந்த முதல் வருடத்தில் வரும் ஆடித்தவசு இது. அவனைப் படிக்க வைப்பதற்கென பெரிய செலவுகள் இல்லையென்றாலும், ‘மீச மொளச்ச பையன் கேட்டத வாங்கித்தர முடியல’, என்ற வருத்தத்தால் இந்த முறை மிட்டாயை கொஞ்சம் கூடுதலாகவே தயாரித்திருந்தார் கருப்பனின் அப்பா. இரண்டு இல்லை மூன்று பங்கு தயாரித்தாலும் முப்பது நிமிடத்தில் விற்றுவிடும் ஐட்டம்தான் என்றாலும் ஆள் வைத்து மிட்டாய் தயாரிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தில்லை. அதனால் சக்தியை மீறி களத்தில் இறங்கமாட்டார். பாகு காய்ச்ச தனி பலம் வேண்டும். அதை உருட்டித் திரட்டும் பக்குவம் தெரிய வேண்டும். கொஞ்சம் சூடு காட்டினாலும் அடிபிடித்துப் பசையாகிவிடும் அல்லது தண்ணி கட்டிவிடும். அம்மாவைக்கூட கிட்டத்தில் விடமாட்டார். தவசுப்பாகு அவருக்குப் பிள்ளையைப் போல. சங்கரனாருக்குச் செய்து தரும் நேரடிப் பலகாரம். அது கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். கொதிக்கும் சட்டியில் கோலமிடுவதைப் போல மாவை சுற்றியெடுக்கும் பக்குவத்தை மட்டும் அம்மாவுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். சூட்டோடு பொரிந்து மேலெழும்பும் மிட்டாயை அப்படியே கருப்பட்டி பாகினுள் அமுக்கி, தேன் அதன் கருப்பைக்குள் இறங்கிவிட்டது என்ற நம்பிக்கை வரும்வரையிலும் மிட்டாயை அமிழ்த்திப் பிடித்திருப்பார். கருப்பெட்டி, மண்டவெல்ல மிட்டாய்கள் மட்டுமே அந்த வீட்டில் இருந்து வெளியில் இறங்கும் தவசுப் பலகாரங்கள். வெள்ளைநிறம் கொண்ட சீனிப்பாகு மிட்டாயை அவர் என்றைக்குமே செய்ததில்லை.

பட்டுச்சேலை கட்டி அம்மா தெருவில் இறங்கியபோது, தள்ளுவண்டி நிறைய வெல்ல மிட்டாயையும் கருப்பட்டி மிட்டாயையும் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் அப்பாவும் பிள்ளையும். இன்னும் பத்து நிமிடத்தில் கடைக்கு முன் இருக்கும் இரும்பு டேபிளில் அடுக்கப்பட்டிருக்கும். சூட்டின் வெதுவெதுப்பு குறைந்திருக்காத அந்த மிட்டாயைக் கிட்டத்தட்ட பத்து உருளைகளாக உருட்டியிருந்தார். ஒவ்வொரு உருளையும் பத்து கிலோ இருக்கும். நூறு கிலோ மிட்டாயை தனியாளாகக் காய்ச்சிய கம்பீரம், மிட்டாய் உருளைகளை வண்டியில் அடுக்கும்போது தெரிந்தது. பார்ப்பதற்கு அவர்தான் நிஜ கருப்பனைப்போல் இருந்தார்.

“எப்பா என்ன பண்ணப் போற இந்த யாவரத்த வச்சி”, என்றான் கருப்பன். இதுதான் வேண்டுமென்று கேட்கும் பக்குவம் அவனுக்கு வந்திருக்கவில்லை. வீட்டுக்கு ஒரு கலர் டிவி வாங்க வேண்டுமென்பது அம்மையின் விருப்பம். கருப்பு வெள்ளையாகத் தெரியும் அந்த டிவியில் சத்தமே கேட்பதில்லை. போதாக்குறைக்குக் கோடு விழுகிறது. எத்தனையோ நாளாகக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாள். அப்பா தான் மசியவில்லை. “ஏல ஒங்கையாட்ட டிவி வேணும்ன்னு கேளுல. பொழுதன்னிக்கும் கடையில நிக்க ஆளுக்கு நாம படுத கஷ்டம் தெரியுமா என்ன?”, முன்னெப்போதோ சொன்னது கருப்பனின் ஞாபகத்திற்கு வந்தது.

“இன்னொரு லாலா கட போடுவமாடே? நீ நிக்கியா?”, என்று அப்பா கேட்டபோது அம்மாவைப் பார்த்து சிரித்தான். கதவை ஓங்கிச் சாத்திக்கொண்டு தெருவில் இறங்கிய அம்மாவின் கருத்த முகம் மேலும் சிவந்து கருப்பதை அப்பனும் மகனும் கவனிக்காமல் இல்லை. “அம்மைக்கு எதோ கோவம் போல. ஒன்ன இஞ்சிநிரிங் படிக்க வெக்கலன்னு கோவம். என்ன செய்ய, என்னால எட்டாப்பு கூட தான்ட முடியல. நீ காலேஜ் போறியே, அதுவே சாதனதானடே. கடையெல்லாம் வேணாம். நான் பாத்துக்கிறேன். இந்த வெக்க என்னோட போவட்டும். நீ மெட்ராஸுக்கு போ. இல்ல பாய்மாருகூட சேர்ந்து அரபு நாட்டுக்கு போ. தும்பமெல்லாம் என்னோட போவட்டும்…”, சொல்லிவிட்டுப் பெருமூச்சு விட்டார். சாயங்காலத்து ஆடிக்காத்து, மலையில் இருந்து இறங்கி, தகரங்களின் மீது தடதடத்து ஓடும் குரங்குக்கூட்டத்தை போலச் சத்தம் எழுப்பியபடி வீசத்தொடங்கி இருந்தது. கோலங்களின் உட்புற வளைவுகளில் தேங்கிநின்ற கலர்பொடிகள் மேலெழும்பி ஜாலம் காட்டின.

தன் கடையைத் தாண்டி சிந்திக்கும் பக்குவம் என்றைக்குமே அப்பாவுக்கு  வந்ததில்லை. வீட்டில் இருக்கும் கொஞ்சநேரத்திலும் அடுத்த நாளுக்கான பலகாரம் என்ன என்ற யோசனையில்தான், சிட்டையை எடுத்துக் குறிப்பெடுப்பார். அடுத்து என்ன என்பதை யோசித்துக் கொண்டிருப்பார்.  முதலுக்கு மேல் வரும் லாபம் கண்ணுக்குத் தெரியாத காத்தாக கரைந்து கொண்டிருக்கிறதே தவிர, தூர்ந்துவிழும் தகரத்தை மாற்றுவதற்குக்கூட காசாகத் தங்கவில்லை. இந்தக் கேள்விக்கு மட்டும் அவருக்கு பதில் கிடைத்ததேயில்லை. “இந்தக் காசுக்கு ஒரு நல்ல கலரு டிவி வாங்குவோம் செரியா”, உருளையை மேஜையில் அடுக்கி, ஊது பத்தியைக் கொளுத்திக்கொண்டே அப்பா சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது.

“பழைய டிவிய கடைல வச்சிருவோம். சிவாட்ட சொன்னா ஓசிக்கே கேபிளு தருவான். இல்ல பத்து ரூவா கொறச்சு பேசிப்போம். பூ கட்டும்போது உத்து உத்து பாக்கா, அந்த கருமத்துல ஒண்ணும் தெரியமாட்டக்கி. என்ன செய்ய. ஒங்கம்ம வாங்கி வந்த வரம் அப்டி. கதவ சாத்தும்போது சத்தத கேட்டியா?”, சிரித்துக் கொண்டே அப்பா சொன்ன வார்த்தைகளை அம்மா கேட்டிருந்தால் அதைவிட அதிகம் சிரித்திருப்பாள். அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்வார்களா என்ற சந்தேகம் அவனுக்கு நெடுநாளாக உண்டு. சாலையின் விளிம்பில் அண்டை கொடுத்து நிறுத்திய இரும்பு டேபிளின் காலில், சப்படை ஓடு ஒன்றைச் சொருகியபோது அதன் ஆட்டம் நின்றிருந்தது. இரண்டு மூன்றுமுறை ஆட்டிப் பார்த்து நிலையாக நிற்கிறதா என்பதை உறுதிசெய்து கொண்டான் கருப்பன்.

கல்யாணம் முடிந்து தவசுக்கூட்டம் கலையத் தொடங்கிய நேரத்தில்,  எதிர்பார்த்ததை விடவும் அதிகமான கூட்டம் கடையை நெருக்கி அடைத்துக் கொண்டு முண்டத்தொடங்கியது. ஒவ்வொரு தவசுக்கும் நிகழும் காட்சிதான் இது என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. எப்படியும் சில நிமிடங்களில் யாவாரத்தை முடித்துவிடலாம் என்ற மும்மரத்தில் இருந்தார் கருப்பனின் அப்பா. மிட்டாயை எடுத்து அளவு போட்டுப் பொட்டலம் போடும் வேலையை அப்பா பார்த்துக்கொள்ள, காசை வாங்கித் தகர டப்பாவில் போடும் வேலை கருப்பனுக்கு. பெரும்பாலும் கை அளவுதான். மிட்டாயின் நீளத்தை வைத்தே எத்தனை கிராம் என்பதை அளந்துவிடுவார். அளவு கூடுமே தவிர குறையாது. இது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தெரிந்த சேதி. ருசி பார்க்கும் சாக்கில் பிய்த்து வாயில் போடும் கணக்கு சங்கரனுக்கு. யாவாரம் சூடுபிடிக்கத் தொடங்கி பத்து நிமிடம்கூட கடந்திருக்கவில்லை. தவசுக்கு எட்டிப் பார்த்த தூறல் கூட  அடங்கியிருக்கவில்லை. அதற்குமுன் ஊரின் அத்தனை எல்லைகளையும் வாகனப் போக்குவரத்திற்காகத் திறந்துவிட்டிருந்தார்கள் வட்டார அதிகாரிகள்.

“அதுக்குள்ள என்னாச்சு இந்த பேதில போவானுங்களுக்கு. எப்பயும் எட்டு மணிக்குதான தொறப்பான். இன்னிக்கு என்ன ஏழு மணிக்கே?”, என்றபடி பெருமூச்சுவிட்டார் கருப்பனின் அப்பா. விடாமல் அடித்துக் கொண்டிருக்கும் காற்று எழுப்பி வரும் புழுதி மிட்டாயில் படிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவனமும் அவரிடம் இருந்தது. இதற்கிடையே கூட்டத்தில் புகுந்த கழுதைகளாய் கனைக்கத் தொடங்கியிருந்தன வாகனங்கள். வழிகேட்டு,விடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன .மிட்டாய் வாங்கும் அவசரத்திலும் விற்கும் அவசரத்திலும் கூட்டத்தை ஒழுங்கு செய்யும் எண்ணம் யாருக்கும் வந்திருக்கவில்லை. “புது பவுசால்லா இருக்கு இந்நேரத்துக்கு பஸ்ஸு வாறது”, என்று பேசிக்கொண்ட கூட்டத்தின் சலசலப்பு விடாது எழும்பிய ஹார்ன் சத்ததிற்குள் மறைந்துபோனது. மிட்டாயை வாங்காமல் நகர்ந்து செல்லும் எண்ணம் யாருக்கும் வந்திருக்கவில்லை. சாலை கொஞ்சம் கொஞ்சமாக குழப்பமாகிக்கொண்டிருந்த கணத்தில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. என்னவென்று நிதானிக்கும்முன் வந்துபோன சூறைக்காற்றைப் போல முடிந்தும் போயிருந்தது.

“செருக்கியுள்ளய ஒங்கப்பன் வீட்டு ரோடால இது? ரோட்டு மேல கடைய போட்டு தும்பத் கொடுக்காணுவ ஒப்பனவோழிய”, என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு கடையாக நெருங்கி அடித்து நொறுக்கத் தொடங்கினார் ஊருக்குப் புதிதாக மாற்றலாகி வந்திருக்கும் அந்தப் புது ஆய்வாளர் தனசேகரன். நடப்பது என்னவென்று நிதானித்துச் சுதாரிக்கும் முன் கருப்பனின் கடையையும் நெருங்கி இருந்தார். அடிக்கும் காத்தின் வேகத்தில் சூறையாடத் தொடங்கினார்.

“சார் சார் வேணாம் சார். பூராம் மிட்டாய் சார். தரையில பட்டா ஒண்ணத்துக்கும் ஆவாம போயிரும் சார். ரெண்டு நிமிஷம் சார். எடுத்து வச்சிருதேன் சார்”, என்று அப்பன் போட்ட எந்த சாரையும் அந்த புது சார் மதிக்கவில்லை. உச்சத்தில் ஏறிய அதிகாரம் காலில் இறங்க, ஒவ்வொரு பொருளாக மிதித்து தள்ளிவிடத் தொடங்கினார் – காக்கி உடையினுள் புகுந்து களமாடிக் கொண்டிருக்கும் அந்த புது இன்ஸ்பெக்டர். ஒரேயொரு உருளையையேனும் காப்பாற்றிவிட முடியாதா என்ற கெஞ்சல் கருப்பனின் அப்பாவிடம் முந்திக்கொண்டு நின்றது. எவ்வளவு கெஞ்சியும் காதில் வாங்காது அடுக்கி வைக்கப்பட்ட அத்தனை உருளைகளையும் நடுரோட்டில் உருட்டிவிட்டார் இன்ஸ்பெக்டர் தனசேகர்.தேங்கி நிற்கும் வாகனங்களை அதன்மீது ஏறிச்செல்லும்படி கட்டளையிட்டார்.கரும்பைப் பிழிந்து சக்கையாக்குவதைப் போல, தேன் நிறைந்த மிட்டாய்கள் ஒவ்வொன்றும் சக்கரங்களின் வேகத்திற்குப் பலியாவதை தவசுக்கு வந்த மக்களால் வேடிக்கை பார்க்க முடிந்ததே தவிர கேள்வி கேட்க முடியவில்லை. கருப்பட்டியின் வாசமும் இஞ்சியின் வாசமும் அரைபட்டுக் கடந்துபோன வண்டியின் மீதங்களாக காற்றில் பரவத்தொடங்கின. ஒரு வாரத்து உழைப்பை ஒரு குடும்பத்துக் கனவைச் சிதைத்து எறிந்த அந்த மிருகத்தைக் கட்டுபடுத்தும் வழி தெரியாமல் இன்ஸ்பெக்டரின் குறுக்கே பாய்ந்தார் கருப்பனின் அப்பா.

சங்கரனுக்கிட்ட பிரசாதம் சாலையில் உருக்குலைவது தாங்காமல் கோவத்தில் அரற்றினார். அழுதும் கெஞ்சியும் காலில் விழ முயன்று தடுக்கவும் நினைத்த கருப்பனின் அப்பாவை அடிப்பதற்காகப் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர் தனசேகரன். வெறியேறிய மிருகத்தின் அடி தன் அப்பாவின் மேல் பட்டுவிடக் கூடாதென குறுக்கேப் புகுந்த கருப்பனைத் தூக்கிவீசியதில், ஏற்கனவே இன்ஸ்பெக்டரின் காலில் மிதிபட்டு உருக்குலைந்து கிடந்த இரும்பு டேபிளில், கருப்பனின் தலை மோதி நெற்றி தெறித்து ரத்தம் சிதறியது. வீசிய வேகத்தில் அவன் கையில் வைத்திருந்த டப்பா தெறித்ததில் அதிலிருந்த பணமும் காசும் எங்கெங்கோ  பறந்தன. இனி நடப்பது எதனோடும் தனக்குச் சம்மதம் இல்லை என்பதைப்போல அந்தக் கணத்தில் அப்படியே மயங்கிச் சரிந்தான் கருப்பசாமி.

***

வசு முடிந்த இரண்டாவது நாளில் வீட்டைவிட்டுத் தொலைந்துபோன அப்பா, மூன்று நாட்கள் கழித்துத்தான் வீட்டினுள் நுழைந்தார். அதுவரை அவர் மீது படிந்திருந்த கம்பீரம் காணாமல் போயிருந்தது. முகம் முழுக்க வெறியும், வெறியை வெளிப்படுத்த இயலாத ஆற்றாமையும் மட்டுமே துயரமாக மிஞ்சி நின்றது. கசக்கி வீசப்பட்ட காகிதமாக அம்மையின் முன் வந்து நின்றவர், அவள் முகத்தைப் பார்க்கும் வலுவை மொத்தமாக இழந்திருந்தார். கண்கள் சுழல மிட்டாய் சுடும் தகரக்கொட்டகையை வெறிக்க வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். எத்தனை முயன்றும் அவர் கவனத்தை மடைமாற்றுவது இயலாத காரியமாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் எஞ்சி நிற்கும் மிட்டாய் வாசனை அவரை மேலும் வெறியேற்றி இருக்க வேண்டும். எந்த அடுப்பில் மிட்டாய் காய்ச்சினாரோ அதே அடுப்பில் சூடத்தை ஏற்றிச் சத்தியம் செய்தார், “இனி ஜென்மத்துக்கும் மிட்டாய் செய்ய மாட்டேன்”, என. சத்தியம் செய்த கணத்தில் உடைந்து அழுதார். அதுவரை அடக்கிவைத்த அழுகை பெரும் ஓலமென நகரமெங்கும் பரவியது. தெருவே திரண்டு வந்து சாட்சி கொடுத்தது அப்பாவின் சத்தியத்திற்கு. அப்பா வந்தால் போதுமென்ற நிறைவுக்கு மத்தியில் – தவசு மிட்டாயோ, அப்பா செய்த சத்தியமோ அத்தனைப்  பெரிய இழப்பாகத் தெரியவில்லை. ஒரு பெரிய துன்பத்தை அதைவிடப் பெரிய துன்பமே இல்லாமல் ஆக்குகிறது இல்லையா?எது பெரிய இழப்பு?எது பெரிய வலி?

எத்தனைப் பெரிய சத்தியம் அப்பா செய்தது. அப்பன் சத்தியம் செய்த அதே நாளில் கருப்பனும் ஒரு சத்தியத்தைச் செய்தான். “இன்ஸ்பெக்டரைப் பழி வாங்குவது”, என்று.

எண்ணெய் டின் அறுப்பதற்காக அப்பா பயன்படுத்தும் ஆக்சா பிளேடை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டரின் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான் கருப்பசாமி. இன்ஸ்பெக்டரின் வீடு இருக்கும் திசையை தற்செயலான உரையாடலில் முப்புடாதி சொன்னது கைகொடுக்கிறது. ஊரில் இருந்து நாலு கிலோமீட்டர் என்றாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்திருந்தான். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக வயக்காட்டின் வழியே செல்லும் பாதையைச் தேர்வு செய்தான். சூரியன் மறையும் இருளிலும் தெக்கே கம்பீரமாக எழுந்து நிற்கும் மலை தைரியத்தைக் கொடுத்தது.

கருக்கலில் ஆரம்பித்த நடை முழுவதுமாக இருட்டிவிட்டபோது முடிவுக்கு வந்தது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் வெளியே நிற்கும் இன்ஸ்பெக்டரின் பைக்கின் ஒயரை பலவீனப்படுத்துவதுதான் திட்டம். எப்படிச் செய்யவேண்டும் என்பதை மணி சொல்லக் கேட்டிருக்கிறான்.காலையில் பைக்கை எடுத்தால் வலச முக்குக்கு முன் கண்டிப்பாக அறுந்து கீழே விழவேண்டும். சேதாரத்தைப் பற்றிக் கவலையில்லை. பழி தீர்க்கவேண்டும். பைக்கின் பகுமானங்களை மணி சொல்லியிருக்கிறான். எந்த ஒயரை அறுப்பது என்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்தாலும் இரண்டு மூன்று ஒயரை சேர்த்தே அறுப்பது என்று முடிவு செய்திருந்தான்.

கருப்பசாமியின் வாசத்தை மோப்பம் பிடித்த ஒன்றிரண்டு தெருநாய்களும் அவனைக் கண்டும் காணாமல் போனது நிம்மதியாக இருந்தது. என்னவானாலும் அப்பாவின் முகத்தை மட்டும் நினைவில் நிறுத்திக்கொண்டான்.அப்பன் செய்த சத்தியம் சாதாரணமானது அல்ல. தவசு மிட்டாயில் தன் உயிரைக் கலந்திருக்கிறார். அப்பனின் உயிரில் கைவைத்தவனை சும்மா விடுவது நியாயமா? கருக்கல் நள்ளிரவோடு கூடும் வரை காத்திருந்தவன், சுவர் ஏறிக்குதித்து, வண்டியை நெருங்கிவிட்டிருந்தான். வளர்பிறையின் வெளிச்சம் மேகத்தில் மறைந்தும் மறையாமலும் வெளியேறிக் கொண்டிருந்தது. தென்னை மரங்களின் வழியாக வீசும் காற்று பேய்க்குரல் எழுப்பிக் கொண்டிருந்தது. காவல் என்று எழுதிய அந்த வண்டியின் முன்பக்க சக்கரத்தின் இடதுபக்கம் குந்தவைத்து உக்கார்ந்தவன், பையில் மறைத்து வைத்திருந்த ஆக்சாவை எடுத்து அறுக்கத் தொடங்கினான். அவன் எதிர்பார்த்ததைப்போல அத்தனை எளிதாக இருக்கவில்லை அந்த சம்பவம். ஒரு குறிப்பிட்ட நிமிடத்திற்குப் பின் கைவலி எடுக்க ஆரம்பித்ததே தவிர கம்பி அறுபடுவதைப்போல் தெரியவில்லை. முடிந்த மட்டிலும் கையின் வேகத்தை அதிகப்படுத்தினான். முடியவில்லை. தான் செய்து கொண்டிருக்கும் செயலின் அபத்தம் அப்போதுதான் உறைக்கத் தொடங்கியது. அந்த அபத்தம் கூடுதல் எரிச்சலை உருவாக்கியது. இந்நேரத்தில் கரிய நிழலாக, பெருத்த பூதமாக தனக்கருகில் இருந்த சுவற்றில் அசையும் தன் நிழலைக் கவனிக்கத் தவறி இருந்தான் கருப்பன். அந்த இரவிலும் குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது. அவசரமாக ஒன்றுக்கு வருவதைப்போல் இருந்தது.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்பதும் யாரோ அவனை நெருங்கி வருவதும் தெரிந்தது. சுவரேறிக் குதித்துத்தப்பி ஓட முயன்ற கணத்தில் யாரோ ஒருவரின் கைகள் தன் மீது படுவதும், அதுவரைக்கும் கம்பியில் கொடுத்த அழுத்தத்தைப் பலங்கொண்ட மட்டும் ஒரு உடலில் வீசியதையும் அதன் ரத்தம் தெறித்து “அம்மாஆஆஆ”, என்று அலறியதையும் மின்னல் வேகத்தில் கடந்திருந்தான். மனதில் இருந்த வெறுப்பு மொத்தமாக வடிந்து பயம் அப்பிக்கொண்டது. எந்தவொரு விஷயத்திற்காக வெல்வெட் மூர்த்தியை வெறுத்தானோ, எந்தவொரு செயலை எக்காரணம் கொண்டும் செய்துவிடக்கூடாது என்று பயந்தானோ அதே காரியத்தைத் தானும் செய்ய நேர்ந்ததை நினைத்தபோது விரல்களின் வழியே வடிந்த ரத்தம் தன்னைச் சுற்றிலும் நிறைந்து தன்னை அதில் பிடித்து முக்குவதைப்போல் இருந்தது.

வந்த பாதையின் வழியே மூச்சிரைக்க ஓடத்தொடங்கினான் கருப்பன். தப்பிக்கும் உணர்வில் தடயம் குறித்த எந்த சிந்தனையும் எழுந்திருக்கவில்லை. வரப்புகளின் வழி விழுந்தடித்து, நீர் குறைந்து ஓடிய வலுக்காம்பாறையில் குதித்து வாய்க்காபாலத் திண்டை அடைந்தபோது முழுவதுமாகத் தளர்ந்திருந்தான்.

“ஏல கருப்பா ஊருக்குக் கிழக்கால ஒரு சின்ன பையன வெட்டி கொண்ணுட்டாங்களாம். தொண்ட குழிலையே வெட்டிருக்கான்”, மூக்கையா சொன்னபோதுதான் முந்தைய இரவில் தான் செய்த மடத்தனமான காரியமும், அதன்பின் சிதறிய தடயங்களும் நினைவில் வந்துபோனது. பைக்குள் மறைந்துகிடந்த ஆக்சா பிளேடை எடுத்து அவசரவசரமாக மறைத்ததும் அப்போதுதான். அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரலாக இருக்கக்கூடும் என்று நினைத்திருந்தான். கூர்முனை உள்ளே இறங்கும்போது பிளேடின் வீச்சு வளைவதைப் போல் தோன்றியது. உடலின் வேறு எதோ ஒரு பாதுகாப்பான பாகமாக இருக்கூடும் என்று நினைத்தான். எந்தவொரு இரவிலும் இப்படியொரு செயலைச் செய்ததில்லை என்பதால் எத்தனை முயன்றும் ஒரு முழுவடிவமாக அந்த சம்பவத்தை அவனால் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஒரு கொலையைச் செய்துவிட்டு இத்தனை சாவகாசமாக அமர்ந்திருக்கும் தன்னை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கே பயமாக இருந்தது. அப்பா மீண்டும் வீட்டைவிட்டுக்  காணாமல் போயிருக்கிறார் என்ற தகவல் மேலும் அச்சத்தைக் கொடுத்தது. வெறிபிடித்த ஒற்றை மிருகத்தின் கோரப்பற்கள் தன்னை இன்னும் துரத்துவதைக் கண்டு வெருண்டான்.

’இப்போ என்ன செய்யணும்?’ ’யாருகிட்டயாச்சும் பேசணுமா?’ என்னென்னவோ நினைத்துக் கொண்டிருந்தவன் பயத்திலும், வெருண்டு ஓடிவந்த அலுப்பிலும் அப்படியே தூங்கிப்போனான். மீண்டும் எழுந்தபோது “ஏல வெல்வெட் மூர்த்திய புடுச்சிட்டாங்களாம். அவன் சேக்காளி பூரா பயலுவகிட்டயும் விசாரண நடக்காம்”, மூக்கையாவின் குரல் வாசற்புறத்தில் இருந்து உள்ளே நுழைவது கேட்டது.

***

டந்து செல்லும் ஒவ்வொரு வாகனமும் தன்னைத்தேடி வந்து விலகிச் செல்வதைப்போல் எழும் உணர்வுகளை அடக்க முடியாமல், தன் மீது பட்டுத் திரும்பும் வெளிச்சத்தையும் அதன்பின் ஏற்படும் இருளையும் பதற்றத்தோடு அணுகிக் கொண்டிருந்தான் கருப்பசாமி. இன்ஸ்பெக்டர் தனசேகர் தூக்கி எறிந்ததில் ஆழமாக இறங்கிய வெட்டுக்காயம் ஆறு தையல் வரைக்கும் இழுத்துச் சென்றிருந்தது. ரத்தப்போக்கும் அதிகம். கட்டுப்போடுவதற்காகத் தலைமயிரைக்  கொஞ்சமாகச் சிரைத்தது முகத்தின் கோரத்தை அதிகமாகக் காட்டியதால் முழுவதையும் வழித்துவிடும்படி செய்துவிட்டார் மூக்கையா. மூன்று நாட்களுக்கு முன் தையலைப்பிரித்து மறுதையல் போடும்போது மேலும் ஒருமுறை மழித்தார்கள்.

நெற்றியின் இடதுபுறத்தில் உருவாகியிருக்கும் புதிய தடம் துருத்திக் கொண்டிருந்தது. மெதுவாக அதைத் தடவிப்பார்த்தான். எவ்வித உணர்வும் இல்லாமல் ஒரு மேடுபோல் ஒட்டிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு.

“போட்டது போலீஸ்காரன் சொந்தக்காரன, சும்மாவா விடுவாவ. அதான் கோர்ட்லையே போட்டான் பாத்தியா. எழவு தவசு முடிஞ்சா நல்லது நடக்கும்ன்னு சொல்லுவாவ, இதென்ன கருமம் எளவு மேல எளவா விழுதுன்னு தெரியல”, இடுப்பில் மடித்து வைத்த அடுத்த பீடியை உருவிக்கொண்டே மேலேறி வந்தார் மூக்கையா.

“மூக்கையா அந்த போலீஸ் வீட்டு வர போயிட்டு வருவோமா?” அவன் கேட்டது மூக்கையாவின் காதில் விழும்முன், அந்தப் பகுதியைக் கடந்து சென்ற மணல் லாரியின் ஒலி உறங்கிக்கொண்டிருந்த வவ்வால்களை பதறியெழச் செய்தது. “என்னடே?”, என்று கேட்டபோது, மற்றுமொருமுறை அவரிடம் அதைக்கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.

கையில் பைசா எதுவும் எடுத்துச் சென்றிருக்கவில்லை. கழுத்தில் கட்டியிருந்த கயிறு அப்படியேதான் இருக்கிறது. அணிந்து சென்ற சட்டையின் பித்தான்களை எண்ணிப் பார்த்தான் எதுவும் சிதறி இருக்கவில்லை. வேறென்ன தடயம் இருக்க முடியும்? கைரேகை. அதுவொன்றுதான் பதற்றத்தை அதிகரித்தபடி இருக்கிறது. ஆடி மாதத்தில் பொதுவாக மழை பெய்வதில்லை. பனியும் கொட்டுவதில்லை. ரேகையை எடுத்திருப்பார்களா? ஏதாவது நாய் ஒண்ணுக்கிருந்து அழித்தால்தான் உண்டு. அந்தத் தெருவின் எதாவது ஒரு நாய் தனக்கு உதவக்கூடாதா? கண்களை இறுக்க மூடி அங்கிருந்த ஒரு நாயை வேண்டினான். இருக்காது. இந்நேரம் தடயத்தை எடுத்திருப்பார்கள். நாளை காலை தன் கையில் மாட்டப்படும் விலங்கை இப்போதே உருவகப்படுத்திப் பார்த்தான்.தன் அப்பனின் முன்னிருக்கும் ஒரே நம்பிக்கையும் சுக்குநூறாக உடைவதைக் காட்சியாகக் காணத் தொடங்கினான்.

***

ண்களைத் திறந்த நிலையில் பேயறைந்தவனைப்போல் இருந்தவனை உலுக்கி, “என்ன கருப்ஸ் ரொம்ப ஆழமான சிந்தனபோல. வாங்க எந்திச்சிப் போவோம். ஊரப் பத்தி யாராவது பேசுனா போதுமே உக்காந்த இடம் தெரியாம யோசிக்க ஆரம்பிச்சிருவீங்க. மீட்டிங் அட்டன் பண்ண போறமா இல்ல போஸ்ட்போனா?”, கேள்விமேல் கேள்வி கேட்ட விஜய்கணேஷ் சிந்தனையைக் கலைத்திருந்தான்.

எதிரில் உயர்ந்து நின்ற கட்டிடத்தின் வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருந்தன. ஐநூறு அடி உயரத்திற்குக் கட்டப்படும் அந்தத் தூணின் உச்சியில் முதலாளியின் ஹெலிஹாப்டரை இறக்க இருக்கிறார்களாம். அதன் அடியில் அமர்ந்திருந்தபோதுதான் அந்த உரையாடல் ஆரம்பித்தது. டீமில் புதிதாக சேர்ந்திருந்த அன்வரும் மகேஷும் அந்த மாலை நேரத்து வாக்கிங்கில் மேலும் இருவராக இணைந்திருந்தார்கள். டீமினுள் யார் புதிதாக சேர்ந்தாலும் அவர்களையும் தங்களோடு இணைத்துக்கொண்டு, அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், தங்களையும் அந்தக்கூட்டத்தில் ஒருவன் என்ற குழு மனப்பான்மையை புதியவர்கள் மனதில் அதிகப்படுத்தவும் கருப்பசாமி மேற்கொள்ளும் பயிற்சி இது. அந்த நடைப்பயிற்சியின் இடையில்தான் மகேஷ் அந்த கேள்வியைக் கேட்டிருந்தான்.

“கருப்ஸ் நீங்களும் நானும் ஒரே ஊர்ன்னு எதிர்பார்க்கவே இல்ல தெரியுமா. இவ்ளோ பெரிய கம்பெனில, நம்ம ஊர்க்காரர, அதும் அவரே என்னோட டீம் லீடராவும் இருப்பாருன்னு யோசிச்சுக்கூடப் பார்க்கல. செம்ம ஹேப்பி”, என்றான். மகேஷ் குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள முயன்ற இடத்தில்தான் அவன் இன்ஸ்பெக்டர் தனசேகரிடம் வந்து நின்றான். தான் அவருடைய ஒரே பிள்ளை என்பதையும் இப்போது அவர் மாவட்ட எஸ்.பி என்பதையும் பெருமையாகக் கூறினான். முகத்தில் இருந்த ராஜகளையில் தனசேகரைக் கண்டுகொண்டதும் அப்போதுதான். அந்த உரையாடல் எப்படி ஆரம்பித்து எப்படி நகர்ந்து எப்படி வெல்வெட் மூர்த்தி வரைக்கும் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அவன் சொன்ன தகவல் உள்ளுக்குள் மிகப்பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தான் கருப்பசாமி.

“எஸ்.பி ஆகணும்ன்றது அப்பாவோட கனவு. என்னையும் போலீஸ்ல சேர சொன்னாரு. நாந்தான்”, என்றபடி தன் முகத்தின் மீதிருந்த தழும்பைத் தடவினான்.

“எனக்கும் ஆசதான். ஆனா அம்மா விடல”, என்றான்.“நம்பவே முடியல தெரியுமா இப்டி ஒரு விஷயத்த கேள்விப்படுவேன்னு”, என்பதை மீண்டுமொருமுறை அழுத்தமாகக் கூறினான் மகேஷ்.

தன்னுடைய அப்பாவுக்கு இருந்ததெல்லாம் ஒரேயொரு ஆசைதான். அம்மைக்குக் கலர் டிவி வாங்கித்தர வேண்டும் என்பது. அந்த ஆசையைக்கூட, எங்கே வாய்விட்டுச் சொன்னால் நிறைவேற்ற முடியாதோ என்று பொத்திப்பொத்திதான் வைத்திருந்தார். எத்தனை கம்பீரமான மனிதன்? எத்தனை கனவுகள் அந்த முகத்தில்? தன் மீது விழுந்த ஒரே அடியில் உருக்குலைந்துபோனதும், செய்த சத்தியத்திற்காகத் தன் லாலா கடையை மூடிவிட்டு, ரயில்வே பிளாட்பார்மில் டீ கேனைத் தூக்கிக்கொண்டு அலைந்ததும்தான் அவருக்குக் கிடைத்த பதவி உயர்வு இல்லையா? முட்டிக்கொண்டு எழும்பிய கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் கருப்பசாமி.

கருப்பசாமியின் நெற்றியின் ஓரத்தில் இருக்கும் அந்தப் பெரிய தழும்பு குறித்து கேட்டபோது, மகேஷ் தன்னுடைய நெற்றியின் வலது ஓரத்திலும் அதேபோல் ஒரு தழும்பு இருப்பதைக் காட்டினான். அந்த இரவில் அவனுக்கு நிகழ்ந்த விபரீதம் குறித்துக் கதைகதையாகக் கூறினான். நல்ல ஆழமான வெட்டு. அதைத் தொட்டுப்பார்க்க நினைத்தான் கருப்பசாமி. அதன் வழியே பெருக்கெடுத்து ஓடிய ரத்தத்தின் சுவடை தன் விரல்களில் தேடிப்பார்த்தான். எந்தத் தழும்பும் எப்போதும் ஆறுவதில்லை. கொஞ்சம் நோண்டினாலும் ரத்தம் கசியும் ஊற்றுகளாகத் தங்களை உருமாற்றிக்கொண்டே காய்ந்துபோய்க் கிடக்கின்றன என்பதை ஒவ்வொருமுறையும் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறான் கருப்பசாமி, மிட்டாய் வாசம் வீசும் அப்பனையும், அப்பனைத் தொலைத்த அம்மையையும் காணும்போதெல்லாம்.

***

ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன், தென்காசியைச் சேர்ந்த இவர் தற்சமயம் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அண்மையில் ‘தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்’ எனும் திரைப்படங்கள் குறித்த கட்டுரை நூல் வெளியானது. தொடர்புக்கு – [email protected]

3 COMMENTS

 1. கதைநிகழும் களமான சங்கரன்கோயிலும், அதன் ஆடிமாதத் தபசும் என் சின்ன வயசு ஞாபகங்களில் மாவிளக்கு ருசியோடு பதிந்திருக்கின்றன. கூட்டத்துக்கு மத்தியில் தரதரவென கையைப் பிடித்துக்கொண்டு அக்காளையும் என்னையும் இழுத்துச் செல்லும் பெரியம்மை விழாவ்இன் கடேசிநாளில் சப்பரம் பார்த்து முடித்ததும் ஒருபெட்டிக் கருப்பட்டி முட்டாய் வாங்கித்தர ஊர்வந்து சேரும் முன் அதைக் கையொழுகத் தின்று தீர்த்தால்தான் ஆச்சு.

  சங்கரன்கோயில் என்றதும், அந்த மஞ்சள் காரை பூசின விமானமும், கோயிலின் உத்திரத்தில் வெள்ளை யானையின் கால்களை விழுங்கும் முதலையை, கருடனில் ஏறிவந்து கொன்றழிக்கும் மகாவிஷ்ணு சித்திரமும், புத்துமண்ணும், உப்பும் மிளகும் தெறித்துப் பறக்கும் காட்சியும் கண்விட்டு அகலவில்லை. இன்றைக்கும் பெரியம்மை நோய்நொடி கண்டவருக்கு முதலில் சங்கரலிங்கனார்கோயில் புத்துமண்ணைத்தான் முதலில் பூசிவிட்டபடியிருக்கும்.

  சங்கரனா, நாராயணனா என்று சண்டையிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் சங்கரநாராயணன் எனக் காட்சி தரும் சப்பரக் கோலத்தைக் காணச் சுத்துப்பட்டு ஊர்களில் இருந்து கிளம்பிவரும் மக்கள் பெருக்கம் இன்றுவரைத் தீர்ந்தபாடில்லை. செல்லம்மாள் பாரதி கூட பயணக்கட்டுரை ஒன்றில் தன் சங்கரன்கோயில் பயணத்தை எழுதி இருக்கிறார்.

  நண்பர், சீனிவாசன் பாலகிருஷ்ணன் எழுதி நான் வாசிக்கிற முதல் சிறுகதை இதுதான். வாழ்த்துகள் நண்பா.
  உங்களின் பேச்சுவழக்கிலமைந்த உரையாடல்களை ரசித்தேன்.
  பிறகு ஆடித்தபசை ஞாபகப்படுத்தி நாக்கில் கருப்படித்தேன் ஊற வைத்ததற்கும் சேர்த்து நன்றி. ஆனால், இவையெதுவும் கைகொடுத்த அளவிற்கு கதாபாத்திரங்களும் கலர்டீவியும் இன்பெக்டரைக் கொல்லும் வரைக்கும் செல்லும் காரணமும் கைகொடுக்கவில்லை கதைகுள் என்பது கொஞ்சம் ஏமாற்றந்தான். அங்கங்கு பலவீனமாக நகர்ந்து, அதே பலவீனங்களோடு கதை முடிக்கப் பட்டதாக உண்ர்ந்தேன்.

 2. அருமை. எனக்குப் பிடித்திருந்தது. நேர்த்தியான விவரிப்பும் முடிவும் சிறப்பாகவே இருந்தது. ஜெயமோகனின் சாயல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது. ஆனால் சுவாரசியத்திற்கும் குறைவில்லை. சீனு எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வாழ்த்துகள்.
  கார்த்திக் புகழேந்தி சொல்வது போல இன்ஸ்பெக்டரை கொல்வது நோக்கமாக கூறப் படவில்லை. பழிவாங்கவே முயற்சிக்கப்பட்டதால் காரணம் பொருத்தமாகவே உள்ளது. எனக்கு தெரிந்த லேசான வார்த்தைத் தடுமாற்றம், கூர்ந்து கவனித்தால் மட்டுமேதெரிகிற சிறு பிழையாக இருந்தது.
  //அதுவரைக்கும் கம்பியில் கொடுத்த அழுத்தத்தைப் பலங்கொண்ட மட்டும் ஒரு உடலில் வீசியதையும்// இங்கு வீசியதற்கு பதிலாக செலுத்தியதற்கு என்பது பொருத்தமாக இருக்கும் . இப்படி எல்லாமா பாக்கறதுன்னு கேக்கப் படாது.

 3. சங்கரன்கோயில் என்றதுமே எனது நண்பன் பெருஞ்செல்வன் ஞாபகம் வந்தது… ராஜபாளையம் (அன்று பாலிடெக்னிக்) கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, அங்கு சென்று வந்த இனிய நினைவுகளும் ஞாபகம் வந்தது…

  எப்போது நம் இந்தியாவிற்கு வருவீர்கள்…? திரையுலகம் காத்திருக்கிறது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here