தயாஜி குறுங்கதைகள்

0

நீதி

    நிச்சயம் இந்த மரணத்திற்கு நீதி வேண்டும். வாசகங்கள் பொருந்திய பதாகைகள். கூச்சல். குறைந்தது இருபது பேராவது இருக்கும். சாலையை மறைத்திருந்தார்கள். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பாலனுக்கு நியாயம் வேண்டும்.

                      அதனை மறைக்க சிலர் போலி நாடகம் போடுகிறார்கள் எனவும் ஆளுக்கு ஆள் முகநூலில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு பக்கம் பத்திரிகைகள் இறந்தவர் தொடர்பான செய்திகளை சேகரிக்கிறார்கள். “என்னதான் பொறுக்கியா இருந்தாலும் தண்டனை கொடு , சாவடிக்க நீ யாரு..?” என எங்கோ மூலையில் யாரோ யாரிடமோ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

சூழல் பரபரப்பானது, நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்தும் கூடியும் விளையாட்டு காட்டியது.

   பாக்கியத்திற்கு வெளிவர முடியவில்லை. மனமில்லை. படுத்தவாறே அழுதுக்கொண்டு கடவுளின் நீதிக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

                அவள் கையில் , மனிதர்களால் நீதி கிடைக்காத தன் ஒரே மகளின் புகைப்படமும் அருகில் அவளது உதிரம் பட்ட பாவாடையும் இருக்கிறது.

***

சட்டம் தன் கடமையை செய்யும்

     அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய் போடப்பட்ட திட்டம். அலாரம் அடிக்கும் நேரத்திற்கும் காவல் துறையினர் வருவதற்குமான நிமிடங்கள் வரை மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருந்தது.  அதற்கு, இன்னும் ஐந்து நிமிடம் முப்பத்தாறு வினாடிகள் ஆகும்.

    ஆளுக்கு ஆள், கட்டியிருக்கும் கைகடிகாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டே துப்பாக்கியில் வாடிக்கையாளர்களை குறிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒருமாத கால கண்காணிப்பில், வங்கி கொள்ளை பற்றிய தமிழ் ஆங்கில மற்ற மொழி தெரியாத குறும்படங்கள் முதல் பெரும்படங்கள் வரை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

    இன்னும் சரியாக ஒரு நிமிடம் இருக்கிறது. வினாடி முள் முப்பதைக் காட்டியவுடன் வெளியேறிட வேண்டும். எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு போதும். முக்கியம் மாட்டிக் கொள்ளக் கூடாது.
காவல் அதிகாரிகளைக் குழப்புவதற்கு இன்னொரு திட்டமும் போட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே வண்டியை வங்கிக்கு எதிரில் நிறுத்திவிட வேண்டும். காலையில் ஆளுக்கு ஒரு வழியில் வங்கியிருக்கும் வட்டார கடைகளில் வந்துவிட வேண்டும். எல்லா தகவல்களும் புலனத்தில் நொடிக்கு நொடி பகிரப்பட்டுக் கொண்டே இருந்தன.

    உணவு நேரம் முடிந்ததும் வங்கிக்குள் நுழைய வேண்டும். அதுவும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர வேண்டும்.

    உண்ட களைப்பில் சிலருக்கு மண்டை ஓடியிருக்கும்.  ஆக அவர்கள் நிலைமையை புரிந்துக்கொள்வதற்கு முன்னமாக தப்பிக்கலாம்.

    நால்வரும் திட்டமிட்டபடி ஒவ்வொன்றாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். காரில் பதற்றத்துடன் யாரும் உட்கார விரும்பவில்லை. துளியும் சந்தேகம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னமே; கார் தகுந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. ஓடி வந்த வேகத்தில் காரில் ஏற வேண்டும், சாவியைத் சொருக வேண்டும், கார் காற்றாக பறக்க வேண்டும்.

    என்ன ஒரு அறிவுப்பூர்வமான யோசனை. தமிழ்ப்படங்களில் கூட இப்படியான அறிவாளி திருடன்கள் இருக்கவில்லை.

    முப்பதாவது வினாடியை காட்டியது கைகடிகாரம். பணத்துடன் ஓடினார்கள். வாசலை தாண்டினார்கள்.

அதிர்ச்சி.

நின்றார்கள்.

    நேற்றே நிறுத்தி வைத்த வாகனத்தில் பார்க்கிங் டிக்கட் இல்லாததால் சக்கரத்தை ஒருவர் பூட்டி முடித்து எழுந்துக்கொண்டிருந்தார்.

***

– தயாஜி, மலேசியாவில் வசிக்கிறார். தொடர்ந்து கதைகள், நூல் விமர்சனம் என இயங்கி வருகிறார். இவரது வலைப்பூ – https://tayagvellairoja.blogspot.com , இவரது மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here