தனியொருத்தி

0

வேல்விழி முகில்நிலா

றுபடியும், என்னுடைய பெயர் ஒலிபெருக்கியில் ஏலம் விடப்படுகிறது. பதிவு, விளக்கமளிப்பு, ஒத்துழைப்பு, கிளியரிங், குழு விசாரணை, தனிப்பட்ட விசாரணை என என்னென்னவோ இழவுக்காரணங்களைச் சொல்லி ஒருநாள் தவறாமல் அரங்கேற்றப்படுகின்ற கூத்து தான். என்னோடு சேர்ந்து இன்னும் நூற்றியெழுபத்து ஒன்பது பேருக்கும் இந்த சாபம் நிச்சயிக்கப்பட்டது தான் என்றாலும் எப்போது அது முடியும் என்பதைத்தான் யாராலும் எதிர்வுகூறவே முடியவில்லை. கொதிக்கின்ற எண்ணெய்சட்டியிலிருந்து தப்பி எரிகின்ற அடுப்பிற்குள் விழுகிற கதையாய், மாதக்கணக்காக கிடந்து அழுந்திய அந்த நரகக்குழியில் இருந்து தப்பித்து வெளியில் போய் விழுந்து துலைப்பதற்கிடையில் ஆயிரம் எமகிராதகர்களை அவர்களின் குகைவாயிலிலேயே போய் வணக்கம் வைக்கவேண்டியிருந்தது.

அது பல்கலைக்கழக மாணவர்களிற்கான தனிப்பட்டவிசாரணை நாள். திங்கட்கிழமையானாலே எப்படா கூப்பிடுவார்கள் என்று எல்லோரும் ~லவுட்ஸ்பீக்கர்~ அறிவிப்புகளிலேயே காதை வைத்திருப்போம். “பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கின்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு புதிதாக செல்ல தெரிவான மாணவர்கள் அனைவரும், முகாம் எல்லைப்பகுதியிலுள்ள புலனாய்வு விசாரணைக்கூடத்திற்கு முன்பாக உடனடியாக வரவும்” – அறிவிப்பு வரும். இந்த முறை அனுப்பப்படுகின்ற பெயர் பட்டியலில் எங்களது பெயர் வந்துவிடாதா, அடுத்தமுறை பட்டியலில் எங்களது பெயர் இருந்துவிடாதா என ஏங்கிக்கிடந்த எல்லோரும் அடுத்த நொடி விழுந்தடித்துக்கொண்டு விசாரணைக்கூடத்திற்கு ஓடுவோம்.

முகாம் எல்லைக்கு சற்று ஒதுக்குப்புறமாக தனித்திருக்கும் விசாரணைக்கூடத்திற்கு, ஜி8, 189 ஆம் இலக்க ‘ரென்ற்றிலிருக்கின்ற’ நான் என்னதான் ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் வந்தால்க்கூட எப்படியும் அரைமணித்தியாலயமாவது கண்டிப்பாக ஆகும். எச் 11, 316 ஆம் ‘நம்பர் ரென்ற்றில’  இருக்கின்ற கலைமதி வருவதற்கு அதற்குமேல் இன்னும் இருபது இருபத்தைந்து நிமிடங்கள் எடுக்கும்.

வவுனியாவின் ஒதுக்குப்புறமாக இருக்கின்ற செட்டிக்குளம். நடுக்காட்டினை வெட்டி பல கிலோமீற்றர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாம். இலங்கையின் உள்நாட்டுயுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இந்த நாட்களில் தமிழ் மக்களுக்காய் உலகம் வரையறுத்த மேய்ச்சல் பட்டி. ~யுனிசெப்~ என்ற பெயரைப்போத்திக்கொண்டு வெள்ளை தரப்பாளில் பல்லைக்காட்டியபடி லட்சக்கணக்கில் முளைத்திருக்கின்றன திடீர்க்குடில்கள். ஆங்கில எழுத்தில் ஏயில் தொடங்கி கே  வரைக்குமான நிரல்களில், கணித இலக்கம் ஒன்றில் தொடங்கி 21, 22 சிலவேளைகளில் 23 வரைக்குமான நிரைகள். அவை ஒவ்வொன்றும் குறுக்கறுத்து உருவாக்கும் சற்சதுரப்பெட்டிகளில் எழுநூறு எண்ணூறு குட்டிக்குட்டி ரென்ற்றுகள். அத்தனையையும் சுற்றி மூச்சுவராமல் இறுக்கி மூடிய முட்கம்பிவேலிகள்.

காலில் செருப்புக்கூட இல்லாமல் நடந்து, ஒவ்வொரு தடையாகக்கடந்து, இடையிடையே நிக்கின்ற ஒவ்வொரு பச்சைப்பிசாசுக்கும் பதில் சொல்லி விசாரணைக்கூடத்தை தொடுவதற்குள் எங்களது பெயர்களை ஆறேழு தடவை ஏலம் விட்டுவிடுவார் ஒலிபெருக்கியில் அறிவிப்பவர்.

“கலைமதி கோபால், ரமேஸ் கிருஸ்ணா, கோமதி ராசைய்யா, அமுதினி பாலசிங்கம், குயிலினி குமரேசன் ஆகியோர் உடனடியாக விசாரணைக்கூடத்திற்கு வரவும்”

மற்றைய முகாம்களைவிட நான் இருக்கும் இடத்திற்கு தனிச்சிறப்பு இருக்கிறது. கொள்ளளவிலும் சரி, பரப்பளவிலும் சரி, பாதுகாப்பு என்று சொல்லப்படுகின்ற பாசிச கெடுபிடிகளிலும் சரி, கொள்ளை நோய்களிலும் கொலை இறப்புகளிலும் சரி, கடத்தப்படுவதும் காணாமல் ஆக்கப்படுவதிலும் சரி வலயம் நான்கு முகாமென்றாலே பல்லை நெருமிக்கொண்டு கல்லைத்தூக்கும் அளவுக்கு கட்டறுந்து கிடக்கிறது காலம். காரணம், அவர்கள் கடைசிவரை முள்ளிவாய்க்காலில் காத்துக்கொண்டிருந்தவர்கள். ஆனால் அந்த வைராக்கியம், அது ஒன்று போதாதா அவர்களிற்கு..?

ஒவ்வொரு முறையும் அறிவிப்புக்கேட்ட அடுத்த செக்கனே காற்று வேகத்தில் புறப்பட்டு, அந்த காட்டுவெக்கையிலும் மனிச புழுக்கத்திலும் வெந்து சாம்பலாகி, சரியாக நான் விசாரணைக்கூடத்தின் வேலிக்கரையை நெருங்கும்நேரம் பார்த்து வெளியே வருவான் அந்த விசாரணை அதிகாரி. அன்று விசாரித்தவர்கள் போக மிச்சப்பேரைப்பார்த்து ”நான் பிஸி. அப்புறமா ஒங்கள கூப்பிடுறது’ என்று கொச்சைத்தமிழில் சொல்லி ஒரேதாக திருப்பி அனுப்பிவிடுவான். பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகிறது என்பது போல அவன் விளையாடும் இந்த விளையாட்டில் ஒவ்வொரு முறையும் என் கால்கள் தேய்ந்துகொண்டிருந்தன, கூடவே எதிர்காலம் பின்னுக்குத் தள்ளித்தள்ளி போய்க்கொண்டேயிருந்தது. என்னைப்போல இன்னும் எத்தனையோ பேர்க்கும்.

இன்று காலையிலிருந்து இப்போது நான் வந்திருப்பது இது நான்காவது முறை. இதற்கு முன்னைய மூன்று முறையும் ஓரிருவரை உள்ளே அழைத்து தனிப்பட்ட விசாரணையை முடித்துவிட்டு மற்றவர்களை வழமை போலவே ”ஒங்கள அப்புறம் கூப்பிடுறது” என்று பழைய பல்லவியையே பாடி திருப்பி அனுப்பிவிட்டிருந்தான். ஒவ்வொருமுறையும் திரும்பிப்போகும் போது கால் விண்விண்ணென்று வலித்தது. ஒரு வேளை திரும்பவும் கூப்பிடுவானோ தெரியாது படுபாவி. இங்கு எங்கேயாவது நின்று கொஞ்சம் காத்திருந்துபார்க்கலாமா என்று கூட தோன்றுவதுண்டு. ஆனால், நெருப்பெரிக்கும் சூரியனும், ஒரு நிழல் கூட இல்லாத சாபமும் சேர்ந்து வேர்த்து களைத்து மறுபடி திரும்ப நடக்கச்சொல்லும். பாவப்பழியாக வீட்டை நெருங்குகையில் ஈயத்தை கரைத்து காதில் ஊற்றியது போல மறுபடி காற்றோடு வந்து சேரும் அந்த கட்டளை. அது அறிவிப்போ அல்லது அழைப்போ அல்ல, அடாவடி தான். ஆதிக்கக்கட்டளை தான்.

அவனுக்கு மனநலக்குறைவு ஏதும் இருக்குமோ என்று கூட நான் பலதடவைகள் யோசித்துப்பாத்திருக்கிறேன். இல்லையென்றால் அப்படி  என்னத்தை தான் அவன் அதன் மூலம் சாதிக்கப்பார்க்கின்றான். அதிலென்ன மட்டமான ஒரு மகிழ்ச்சி. ஒருவேளை அவன் சொல்வதுபோல  உண்மையாகவே வேலையாகக்கூட இருக்கக்கூடுமோ..? ஆனால் இன்றைய நாளுக்கான அவனது பொறுப்பே எங்களைப்பற்றியது தானே. அதை சரியாக செய்யவில்லையென்றால் அதிகார துஸ்பிரயோகம் அல்லவா அது. இதையெல்லாம் விட, தனது அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டித்தான் இந்த திருவிளையாடல்களைச் செய்கிறானோ..?  என்று எனக்குத்தான் ஆயிரம் குழப்பங்கள் இருந்ததே தவிர, கலைமதி மிக தெளிவாக இருந்தாள். இப்போது மட்டுமல்ல, அவள் எப்போதுமே அப்படித்தான்.

 “ஒருவேளை அவனுக்கு தாழ்வுமனப்பான்மையா இருக்குமோ, கலை..?”

ஒரு நாள் அவன் ஆடிய அலைக்கழிப்பு நாடகம் தாங்காமல் நான் கேட்ட கேள்விக்கு அவளிடமிருந்து தெளிவாக வெளிவந்தது ஒரு பதில்.

“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் அவனுக்கு ஒண்டுமில்லை குயில். எல்லாம் திமிர். அவனென்ன செய்தாலும் நாங்கள் எங்கட வேலை முடியோணுமெண்டா அவனுக்கு அடங்கிப்போய்த்தான் ஆகவேணுமெண்டுற திமிர். என்ன சொன்னாலும் எதிர்த்து ஒரு கதை சொல்லாமல் தலையை தலையை ஆட்டிற்று வாயப்பொத்திக்  கொண்டிருக்கோணுமெண்டுற எதேச்சதிகாரம். இன்னும் வடிவா உனக்கு சொல்லுற எண்டால், அவன் ஆடுற ஆட்டத்தையெல்லாம் அமைதியா பாத்துக்கொண்டிருக்க வேண்டிய அடிமையள் நாங்களெண்டுறது தான் அவன்ர புத்தி. அதுக்கு தோதா எங்கட கழிசடையள் ரெண்டொண்டும் அவன்ர காலுக்கயே கிடக்குதுகள் எல்லோ. பிறகு அவன் என்ன செய்வான். வெண்ட புத்தி. அதுவும் இத்தினை சனத்தை சாக்கொண்டு வெண்ட புத்தியெல்லோ. சும்மாவே இருக்கும்.”

அவள் அமைதியாக தொடங்கி ஆத்திரமாக முடித்திருந்தாள். எத்தனை நாளாய் இறுக்கி இறுக்கி கட்டி வைத்திருந்தாளோ. மனதில் மறைத்து வைத்திருந்த கோப மூட்டையை ஒரே மூச்சில் படபடவென கொட்டித் தீர்த்தாள். அவள் சொன்னதில் கொஞ்சம் உண்மையிருப்பதாய் பட்டாலும் அவள் பேசிய வேகத்தை பார்த்த எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது.

 “ஏய் கொஞ்சம் சத்தத்தை குறைச்சுக்கதை. அக்கம் பக்கத்தில நிக்கிறவங்களில ஆரவன் அவனின்ர ஆக்கள் எண்டு தெரியாது. பிறகு பெரிய பிரச்சினையாப்போயிடும்..”

நான் சொன்னது அவள் மனதில் ஒரு சின்ன குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பட்டென பேச்சை நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தாள். அக்கம் பக்கத்தில் ஆண்கள் என்று யாரும் இல்லை. பெண்களையும் நம்ப முடியாதுதான் என்றாலும் இந்த விடயத்தில் ஆண்களின் விகிதம் தான் அதிகமாகவிருந்தது. விசாரணைக்கூட பின்வளவிலேயே எத்தனை தமிழ் ஆண்களைப்பார்க்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு சிகரெட்டுக்கும், சின்னதொரு சாராயப்போத்தலிற்கும், நானும் ரவுடிதான் ரானும் ரவுடிதான் என்று மற்றவரை மேய்க்கின்ற மவுசுக்காகவும் இளம்பெடியள் எல்லாம் அவன் காலுக்குள்ளே கிடந்து அரைபடுவதை எத்தனைமுறை கண்கூடாக சாட்சியாக்கமுடிந்தது. எது எப்படியிருந்தாலும் இப்போது அவள் பேசியது எவர் காதிலும் விழுந்திருக்கக்கூடாதென்று அன்று முழுவதிலும் அடுத்து வந்த நாட்களிலும் பயந்துகொண்டே இருந்தோம். கடவுள் புண்ணியத்தில் அபபடி எதுவும் நடக்கவில்லை.

மூன்று முறை இடைவழியில் முடிந்தும் கூட, இப்போது நான்காவது முறையாகவும் எங்கள் நகர்வலம் ஆரம்பித்திருந்தது. தனிப்பட்ட விசாரணைக்காக பிரத்தியேகமான இடத்திற்கு தான் அவன் கூட்டிப்போவான். அது இன்னஇடம் என்று எந்தவொரு முன்னறிவிப்பெல்லாம் இல்லை.  ஆனால், வழமையான இடத்தில் நடைபெறாது என்பது மட்டும் தான் இவ்வளவு நாள் அனுபவத்தில் எங்களுக்கு தெரிந்திருப்பது. அவன் இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் நாங்கள் அசைய வேண்டியது மட்டும் தான் எங்களது வேலை. அவன் ஆட்டுவிப்பான், நாங்கள் ஆடவேண்டும். அவ்வளவு தான்.

மொத்தமாக நூற்றியெழுபத்தொன்பது பேர். முன்வரிசையில் ஏற்கனவே கம்பஸில் படித்துக்கொண்டிருந்த அண்ணாக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். அது கூட ஆண்டு வாரியாகத்தான். கடைசி வருடம் படிப்பவர்கள் முதல். அவர்களிற்கு பின்னால் மூன்றாம் வருடத்தில் இருப்பவர்கள். இரண்டாம் வருடம் படிப்பவர்கள் அவர்களிற்கு பின்னால். ஏற்கனவே முதலாம் வருடத்தில் படித்துக்கொண்டிருப்பவர்கள் கடைசியில். அவர்களிற்கு கட்டாக்கடைசியாக நாங்கள் –  புதுமுக மாணவர்கள் போகவேண்டும். இந்த வரிசை ஒழுங்குகூட அவன் ஏற்படுத்தியது தான்.

என்னோடும் கலையோடும் சேர்த்து மொத்தம் நாற்பத்துமூன்று பேர் புகுமுக மாணவர்கள் நின்றிருந்தோம். வரிசையின் முன்பக்கத்தில் நிற்பவர்கள் திரும்புகின்ற பக்கங்களிற்கேற்ப கடைசியில் நின்றிருந்த நாங்கள் திரும்பவேண்டும். நன்கு தின்று கொழுத்துப்பருத்த மலைப்பாம்பொன்று அசைவது போல சென்றுகொண்டிருந்தது வரிசை. அந்தப்பாம்பின் பாவப்பட்ட வால் போல நாங்கள் அங்கும் இங்குமாக பின்னால் அரைந்துகொண்டிருந்தோம்.

“கலைமதி கோபால், ரமேஸ் கிருஸ்ணா, கோமதி ராசைய்யா, அமுதினி பாலசிங்கம், குயிலினி குமரேசன் ஆகியோர் உடனடியாக விசாரணைக்கூடத்திற்கு வரவும்”

ஒலிபெருக்கி மறுபடி அலறியது.

“என்னடி இவங்களுக்கு. நாளும் பொழுதும் எங்கட பேரை சொல்லிச்சொல்லியே பினாத்துறாங்கள்” வட்டக்கச்சிக்காரியொருத்தி அலுத்துக் கொண்டாள். அவள் பெயரும் அந்த பட்டியலில் இருந்தது.

“உன்ரெ பேர சொல்லுறாங்கள். சரி பரவாயில்லை. வழமையாவே நீ அங்கயிருந்து வர நேரம் செல்லுறது தானே. அது தான் வாய்ப்பாடு மாதிரி நெடுக சொல்லிச்சொல்லி பழகிட்டாங்கள் போல. ஆனா, இதில பி புளொக்கில இருக்கிற என்ர பேரயும் எல்லே போறபோக்கில எடுத்துவிடுறாங்கள்..”

அறிவிப்பு வந்ததும் பெரும்பாலும் முதல் ஆளாய் விசாரணைக்கூடத்துக்கு வந்து நிற்பவள் அமுதினி தான். எங்களது கூட்டத்திலேயே கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு தெரிவான ஒரேயொருத்தி. நல்ல நீளத்தலை முடியும் பூனைக்கண்களுமாக பார்க்க நல்லாய் கருகருவென்றிருப்பாள். அவளது குடில் இங்கிருந்து இரண்டாவது நிரலில் இருப்பதால் பெரிதாக நேரம் செல்லாது. ஆனாலும் ஏனோ அடிக்கடி அவள் பெயரும் காற்றில் அசைந்தாடி வரும்.

“அட அதுகூடப்பரவாயில்லை, ஒவ்வொருமுறையும் நான் வெளிக்கிட்டு இங்க வந்தாப்பிறகும் இவங்கள் லவுட்ஸ்பீக்கரில என்ர பேர சொல்லி தேவாரம்பாடித்துலைக்கிறாங்கள். நான் திரும்பி வீட்ட போக, இவ்வளவு நேரமும் எங்க போட்டு வாறாய்? அங்க அவங்கள் உன்ர பேர திரும்ப திரும்ப கூப்பிடுறாங்கள் எண்டு பாட்டி ஒரே பேச்சு. நான் இங்க வாறெண்டு கிழவிட்ட பொய் சொல்லிற்று ஆரோ பெட்டய பாத்திற்று வாறனாம் எண்டு புறுபுறுக்குது மனிசி. இப்ப பாரன், திரும்பி நான் வீட்ட போகவும் இதே கதையை பாடப்போகுது கிழவி. அதின்ர அவசரத்துக்கு நான் எந்தப்பெட்டய பிடிக்கிறது, ஆண்டவா”

ஆயிரத்தில் ஒருவன் போல எங்கள் புகுமுக மாணவர்குழுவில் இருக்கின்ற ஒரேயொரு ஆண் ரமேஸ், பாட்டியின் கதையை சொல்லி உண்மையாக கவலைப்படுவது போலவே நடிக்கவும் பின்னுக்கு நின்றிருந்த மொத்தக்கூட்டமும் கொல்லென்று சிரித்தது.

அந்த ராட்சத பூதத்தின் தலைமையில் அசைந்துகொண்டிருந்து பாம்பின் தலை சட்டென்று நின்றிருந்தது போல. அது தெரியாமல் சிரித்துக்களைத்து தன்பாட்டில் போய், முன்னுக்கு நின்றவர்கள் மேல் மோதி பொத்தென்று சிதறி விழுந்தது பின்னுக்கிருந்த வால்த்துண்டு. கை காலில் ஒட்டிய மண்துகளைத் துடைத்துக்கொண்டு ஒவ்வொருவராக எழுந்து மறுபடி ஒட்டிக்கொண்டோம். ஆனால், அந்த பாம்பு அசைய மறுத்தது. ஆணிவைத்து அடித்து இறுக்கியது போல அப்படியே நின்றது. போதாக்குறைக்கு முன்னுக்கிருந்தவர்களின் கண்கள் எல்லாம் இப்போ பின்பக்கமாய் திரும்பி எங்களின் மேல் குத்திட்டு மலங்க மலங்க முழித்தன. ஏதோ இசகுப்பிசகாக நடந்துவிட்டது என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அல்லது அந்த வேதாளம் மறுபடி முருங்கைமரம் ஏறிவிட்டதோ என்னவோ.

என்னவென்றே தெரியாமல் குழப்பத்தில் ஊறியிருந்த எங்கள் கண்களை நார்நாராய் கிழித்தெறிந்தது அந்த ராட்சதக்குரல்.

“ஏ.. யாரு.. யாரு சிறிச்சது..?” – பதிலில்லை.

“பின்னாடி ஒங்களில யாறு என்ன பாத்து சிறிச்சது..?”

போச்சுடா. இன்று இன்னொரு கூத்து நடக்கப்போகிறது. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதே. ஆனாலும் இவனைப்பார்த்து யார் சிரித்தார்கள். நான் திரும்பி திரும்பி முன்னும் பின்னும் பார்த்தேன். யாரும் கண்ணிமைப்பதாகக்கூட இல்லை. எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்.

“யாறு சிறிச்சது..? எதுக்கு சிறிச்சது..? சொள்ளலேன்னா யாறும் வெளிலே போமாட்டிங்கே. என்னோட சைன் இல்லாமே ஒறுத்தறுக்கும் கிளியறிங் றிப்போட் போகாதெ. கம்பஸ் ந. டிகிரி ந. யாறு சிறிச்சது..? சொல்லுறது..?”

அவன் கண்களில் நெருப்பெரித்துக்கொண்டு சொல்லால் வெடித்தான். சுட்டுவிரலை நீட்டி நீட்டி அச்சுறுத்தும் தோரணையில் சிங்களத்திலும் ஏதேதோ பேசித்துப்பினான். ”என்னை என்ன படிக்காதவன் எண்டு நினைச்சிங்களாடா..? நானும் கம்பஸில படிச்சவன் தன்டா” என்று என்னென்னவோ எல்லாம் சொல்லி இழவெடுத்துக்கொண்டிருந்தான். கறுப்புப்பேயொன்று கலவரம்பிடித்து தாம் தூம் என்று ஆடுவது போல இருந்தது அவனது தோற்றம்.

சிரிச்சது ஒரு குற்றமா..? அதுவும் ரமேஸ் சொன்ன கதைக்கு யாராக இருந்தாலும் சிரிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம். அதுவும் அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒலிபெருக்கி மறுபடி மறுபடி அவன் பேரை படித்துக்கொண்டிருக்க வேறு செய்ததே. எப்படி சிரிக்காமல் இருப்பதாம். ஆனாலும், இப்போது பிரச்சினை அதுவல்ல. அந்த கோடாலிக்காம்பு தன்னை இவர்கள் கேலிசெய்தார்கள் என்று முத்திரை குத்திவிட்டது. அந்த முடிந்த முடிவில் இருந்து இனி அது ஒரு துளியும் பின்வாங்கப்போவதில்லை. ஒருவேளை ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி திரும்பவும் விளையாட்டுக்காட்ட நினைத்தவனிற்கு இது ஒரு வாய்ப்பாக போய்விட்டதோ.

அவன் விடாப்பிடியாக கத்திக்கொண்டே இருந்தான். சிரித்தது யாரென்று சொல்லென்று வெருட்டிக்கொண்டிருந்தான். மொத்தமாக எல்லோரும் தான் சிரித்திருந்தோம். ஆனாலும், யாருக்கும் அவனுக்கு பதில் சொல்ல தெம்பிருக்கவில்லை. கொஞ்ச நேரம் கத்திவிட்டு கோபம் தணிந்ததும் விட்டுவிடுவான் என்று நினைத்தோம். நினைத்ததற்கு மாறாக அவன் இழவெடுத்துக் கொண்டிருந்தான். உச்சி வெயில் வேறு மண்டையில் குட்டிக்கொண்டிருந்தது. வேர்வை வழிந்து சட்டை நனைந்து கொண்டிருந்தது. இது எதையுமே சட்டை செய்யாமல் அவன் தான் பிடித்த முயலுக்கு ஒன்றே முக்கால் கால் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருந்தான். யாரும் வாய் திறக்காமல் இது இப்போதைக்கு முடிகின்ற பிரச்சினையில்லை என்பது எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது.

“யாறு சிறிச்சது..? என்னேய பாத்து யாறு சிறிச்சது..?” அவன் அதே வரியை சுருதி பிசகாமல் உச்சஸ்தாயியில் உருட்டிக் கொண்டிருந்தான்.

“நாங்கள் உங்கள பாத்து சிரிக்கயில்லை. நாங்கள் இங்க நிக்கிறம். ஆனால், லவுட்ஸ்பீக்கரில எங்கட பேரக்கூப்பிடுறாங்கள். அதக்கேட்டு தான் கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள். உங்கள பாத்து சிரிக்கேல்லை.”

திடீரென என் பின்னிருந்து முளைத்தது ஒரு குரல். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆரிந்த லூசு, நேரகாலம் தெரியாமல் அவனுக்கு பேச்சுக் கொடுப்பது..? பளாரென்று ஒரு அறை விட்டால் என்ன என்று அந்தரித்தது கை. அவசரமாய் திரும்பிப்பார்த்தேன். கலைமதி, இறுக்கமான முகமும் தெளிவான குரலுமாக நின்றிருந்தாள்.

”ஏய் உனக்கென்ன பைத்தியமே..? அவனே அம்மிக்கல்லில விழுந்த உப்புக்கல்லாட்டம் கரகரத்துக் கொண்டிருக்கிறான். நீ வேற அவனுக்கு எடுத்துக் குடுத்துக்கொண்டு.. பேசாம இரு”

நான் அவளைப்பார்த்து முணுமுணுத்து முடிப்பதற்குள் விசயம் கைமீறிப் போய்விட்டது. விபரீதமாகியும் விட்டது.

”நீ தான.. இப்ப பேசினது நீ தான.”

குரலிலும் பார்வையிலும் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு பாய்ந்து விழுந்து வந்து அவளை கடித்துக்குதறத் தொடங்கினான் அவன். உள்ளே, பயம் என் ஈரக்குலையை அறுத்து வறை செய்து கொண்டிருந்தது. முன்பின் தெரியாத முரட்டு ஆசாமிகளை காணும் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாயின் இடுப்பில் தாவியேறும் பிள்ளையாய் நாக்கு மேலண்ணத்தில் போய் கெட்டியாக ஒட்டிக் கொண்டிருந்தது. மூச்சு விட அச்சமாக இருந்தது. சந்தம் தவறி பேயாடத் தொடங்கியது உள்ளிருந்த இதயம். அதன் உதைப்புச்சத்தமோ எந்த ஆற்றுப்படுத்தலுக்கும் அடங்காமல் வரவர உக்கிரமாகத்தொடங்கியது.

சிரித்தது அவள் மட்டுமல்ல, நாங்களும் கூடத்தான். ஆனால், அந்த நேரம் எங்கள் ஒருவரின் குரலும் அவளோடு கூட்டுச்சேர்ந்து நிக்கவில்லை. உண்மையைச் சொல்லப் போனால் யாருக்கும் அதற்கு தைரியமில்லை, எனக்கும் கூட. இவளொருத்தி இடக்குமடக்காக விழுந்துவிட்டாள் என்பதற்காக நாமும் அந்த முதலையின் வாயில் போய் கிடந்துகொண்டு ஏலுமானால் என்னை விழுங்கிப்பார் என்று அதை எரிச்சலூட்ட வேண்டுமா என்ன..? 

நட்ட நடு வீதியில் எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாமல் அம்போ என்று விட்டுவிட்டோம். அவள் மட்டும் தனியொருத்தியாக அத்தனை வசவுகளையும் வாங்கிக் கொண்டிருந்தாள். அதற்காக அவள் வருந்தவும் இல்லை ; மற்றவர்களை காட்டிக் கொடுக்கவும் இல்லை. வேண்டுமென்றால் ஒருவரின் பெயர் தவறாமல் அவளால் எல்லோரையும் வரிசை கட்டி நிற்கவைத்து வடிவு பார்த்திருக்க முடியும். ஆனால், செய்யவில்லை.

காச்சு மூச்சென்று கத்தி, தலையால் தெறித்து விழுந்து, வார்த்தையில் எச்சில் நிரப்பி வகைதொகையின்றி ஊத்திக்கழுவி, இன்னும் பிறக்காத மொழியிலெல்லாம் அர்ச்சனை செய்து, அந்த உருப்படாத மனதை இறுக்கியிறுக்கி ஆத்திரக் குப்பையால் அமத்தி, அதன்பின்னும் குறையாத கோபத்தில் பற்களை நெறுமியபடியே அவளைப்பாத்து ”ஒன் பேர் யென்ன..?” என்றான் அவன்.

”கலைமதி” ஒற்றைச்சொல்லாய் நலிந்திருந்தது அவள் பதில்.

”பாத்துக்கிறன், நீ எப்படி கம்பசுக்கு போவாய்ன்னு பாத்துக்கிறன். கிளியறிங் றிப்போட் நானு தானெ எழுதணும். நா சொன்னாத்தா லிஸ்ட்ல ஒன் பேரே வறும். யாறு சொன்னாலும் ஒனக்கு கம்பஸ் இல்லே.”

அவன் வார்த்தையால் வெடித்து பார்வையால் வறுத்துக் கொண்டு எல்லோரையும் கலைத்து விட்டான். விசாரணை அரைவாசி வழியிலேயே உருக்குலைந்து போயிற்று. இது  ஒன்றும் புதிதில்லை, வழமையானது தான் என்றாலும் இன்று கலைமதியின் நிலை தான் எல்லோரையும் கலங்கடித்திருந்தது. உண்மையைச்  சொல்லப்போனால் அவளுக்காக கவலைப்படக்கூட எனக்குத் தகுதியில்லை. எங்களைக்காப்பாற்ற வெள்ளத்தில் கால் வைத்தவளை நயவஞ்சகமாய் நட்டாத்தில் வைத்து வெட்டிவிட்ட மாதிரியல்லவா நாங்கள் நடந்து கொண்டுவிட்டோம். சேர்ந்து செய்த ஒரு குற்றத்துக்காக, அது குற்றம் கூட இல்லை, அவளை தன்னந்தனியே அல்லவா அந்த குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நிற்க வைத்து அவளுக்கெதிராய் தண்டனையெழுதப்படவும் காரணமாயிருந்து விட்டோம். இவ்வளவு சுயநலத்தையும் காவிக்கொண்டா நான் இத்தனை நாளாக சுத்தித் திரிந்திருக்கிறேன். சுயநலமுமில்லை, சந்தர்ப்பவாதம். அவள் செய்த செயலில் எனக்கும் பங்கிருந்தும், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லையென்பது மாதிரி எத்தனை அபாரமாய் நடித்திருக்கிறேன். நினைக்க நினைக்க குற்றவுணர்ச்சியில் நான் குறுகிக்கொண்டிருந்தேன்.

”நொய்” என்றபடி தற்காலிக மலக்கூடங்களை மொய்த்துக்கிடக்கும் இலையான்கள் போல எப்போதும் ஒருவித சத்தத்துடன் சனங்களால் பிசுபிசுத்துக் கிடக்கும் அந்த முகாம் முழுதும் திடீரென அந்நியமாகிவிட்டது போல தோன்றியது. அவளும் நானும் வெறும் அரையடி இடைவெளியில் நடந்து கொண்டிருந்தோமானாலும் அண்டம் முழுதும் விரியுமளவுக்கு மௌனத்தால் நிறைந்து வழிந்தது நேரம். மனசை மறைத்து பெரும்பாறையொன்று ஏறியிருந்தது. அவளோடு பேச வேண்டும் போல தோன்றியது. ஆனால், பேச்சு வரவில்லை. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை.

”இவனுக்கு அப்பிடி என்ன தான் வேணுமெண்டு தெரியேல்லை. முரடன்.”

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடநேரமாக உறைந்து போயிருந்த காலத்தை அவள் தான் கலைத்தாள்.

”கலை, சொறி கலை. நீ தனிய பேச்சு வேண்டவேண்டியதாப்போச்சு. நானும் தான் சிரிச்சது எண்டு சொல்லோணும் போலத்தான் இருந்தது. ஆனா, அவன் கத்துற கத்தை பாக்க பயமாயிருந்தது. அது தான்ரி சொல்லேல. கோபப்படாதை என..”

என் கேவலம் கெட்ட செயலுக்கு ஒரு விளக்கவுரை வேறு கொடுத்தேன் நான். அவள் அதைக் கண்டுகொள்ளவேயில்லை.

”அதில்லையடி. அவனுக்கு ஏன் இவ்வளவு கோபமெண்டு தான் யோசிக்கிறன். அவன் முதல் கத்தும்போதே இண்டைக்கு விசாரணையில்லை எண்டு எனக்கு தெரிஞ்சுபோச்சு. இத சாட்டா வைச்சு ஏதோ பிளான் பண்ணுறான் எண்டு கண்டுபிடிச்சிட்டன். எங்களால பாவம் முன்னுக்கு நிண்ட அண்ணாக்களும் பாதிக்கப்படப்போயினம் எண்டுட்டு தான், நான் தான் சிரிச்சது எண்டு சொன்னன். ஆனா, ஏனெண்டு சொன்னா விட்டுடுவான் எண்டு தான் நினைச்சன். பாத்தா, அவன் ஒரு பெரிய பிரகண்டமே எடுத்துப்போட்டான். விசரன்..”

அந்த அசாதாரண நேரத்தில் நாங்கள் அவளோடு கைகோர்க்கவில்லை என்பதைக்கூட அவள் கண்டுகொள்ளவில்லை. மாறாக, அவனது குணாதிசயம் மற்றும் அவன் நடந்துகொண்ட விதம் பற்றியே ஆராய்ந்துகொண்டிருந்தாள். பேசாமல் மருத்துவத்துறைக்கு பதிலாக அவள் மனவளத்துறையை தெரிவுசெய்திருக்கலாம் போல இருந்தது அவளது ஆராய்ச்சிகள். பேசிக்கொண்டே வந்ததில் வீடு வந்ததை கவனிக்கவில்லை.  “சரி, வீடு வந்திற்று நீ போ. நான் போட்டு வாறன்” என்றபடி அவள் தொடர்ந்து நடக்க, நான் குடில் பக்கமாக கால்களைத் திருப்பினேன்.

அடுத்தடுத்த நாட்களில் எந்த அறிவிப்பும் வரவில்லை. அவ்வளவு தானா..? அவன் சொன்னது போல எல்லாத்தையும் கிடப்பில் போட்டுவிட்டானா என்று மனம் அலைக்கழியத் தொடங்கியது. ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, மொத்தம் எட்டு நாட்கள் ஆகிவிட்டது. எந்தவொரு அசுமாத்தமும் இல்லை. ஒருவேளை மறந்து விட்டானோ. யாராவது போய் கேட்டுவந்தால் நல்லாயிருக்கும் போல தோன்றியது. ஆனால், யார் போவார்கள்…?

ஒன்பதாம் நாள்… வந்துவிட்டது, அறிவிப்பு வந்துவிட்டது. இருந்த கடிதங்கள், விண்ணப்பப்படிவங்கள், அடையாள உறுதிப்படுத்தல்கள் எல்லாவற்றையும் பொறுக்கியெடுத்துக்கொண்டு விழுந்தடித்து ஓடினேன். கிட்டத்தட்ட எல்லோரும் வந்துவிட்டிருந்தார்கள், கலைமதி உட்பட. மறுபடி ஒரு வரிசை. மறுபடி ஒரு ஊர்வலம். மறுபடி கடைசியில் நாங்கள். இம்முறையும் யாரும் யாரையும் நிமிர்ந்து கூடப்பார்க்கவில்லை. கால்விரல் நகங்களின் வெள்ளைநுனியில் ஒட்டியிருந்தது கருவிழிகள்.

ஆறேழு நாளாக எல்லாம் கிடப்பில் கிடந்ததாலோ என்னவோ அவன் வேலையில் கொஞ்சம் பிஸியாய் இருந்தான். காலையில் தொடங்கிய விசாரணை மதியத்தை கடந்து மாலையை தொட்டிருந்தது. நூறு மீற்றர் இடைவெளியில் வரிசையை நிறுத்தி விட்டிருந்தான்.  அதற்கு அப்பாலுள்ள ஒரு சிறு கட்டடத்தில் தான் விசாரணையை நடந்து கொண்டிருந்தது. அங்கே விசாரணை முடிந்தவர்கள் இங்கிருப்பவர்களை தொடர்பு கொள்ளாமலேயே பின்பக்கமாக வெளியேற வேண்டும். அத்தனை இறுக்கமான பாதுகாப்பு.

ஒவ்வொருவாராக வெளியேற வெளியேற இங்கிருக்கின்ற எங்கள் வரிசையில் ஆட்கள் குறைந்துகொண்டு வந்தார்கள். பொழுதும் கருக்கலாகி இருளத்தொடங்கிவிட்டது. கடைசியாக நானும் கலைமதியும் குந்திக்கொண்டிருக்கிறோம்.

“கலை, பயப்படாதை. இவ்வளவு நாளில அவன் உன்ரை பேர மறந்து போயிருப்பான். அடுத்ததா நீ போ. பிறகு நான் போறன்”

அவள் என் ஆலோசனையை கேட்கவில்லை.

“இல்ல குயில். நீ போ. நான் கடைசியாப் போறன்..”ஒரு சின்னப் பயம் அவள் குரலில் இறங்கியிருந்தது. நாங்கள் பேசித்தீர்ப்பதற்கிடையில், எங்களிற்கு முன் போன ரமேஸ் விசாரணைக்கூடத்தின் பின்பக்க வழியாக வெளியேறுவது தெரிந்தது. அப்படியென்றால், இப்போது அடுத்த ஆள் போகவேண்டும் என்பது அர்த்தம்.

“குயில், நீ போ. எதுக்கும் நான் கடைசியாவே போறன், நீ போ.”

பயப்பட்டாளோ அல்லது தான் முதலில் போய் எல்லாக்காரியத்தையும் கெடுத்துவிடவேண்டாம் என்று நினைத்தாளோ தெரியாது. என்னை அனுப்பினாள்.

“சரி, அப்ப நான் போறன். ஆனா, விசாரணை முடிஞ்சதும் அந்த சாப்பாட்டு ரென்ற்றுக்கு பக்கதில வெயிட் பண்ணுறன் வா என..” என்றுவிட்டு எனது உடமைகளோடு எழும்பி போனேன்.

கதவை திறந்து மண்டபத்தின் உள்நுழைந்தேன். யாரையும் காணவில்லை. அறை வெறுமையாக இருந்தது. நான்கு பக்கமும் அடைத்து கட்டப்பட்டிருந்த அந்த சிறு கட்டடம் இருள் மண்டியிருந்தது. அதன் ஒரு பக்க சுவரோரமாக இன்னொரு கதவு தென்பட்டது. திறக்கலாமா வேண்டாமா என்று சந்தேகமாகவிருந்தது. சிங்கத்தின் குகையில் சிக்கிய ஆட்டுக்குட்டிபோல அலமலந்தது மனது. கையை வைத்து தள்ளப் போனேன், எதற்கும் அதற்கு முன் ஒரு முறை தட்டிப்பார் என்று எச்சரித்தது அறிவு. ஆனால், அதற்கு தேவையிருக்கவில்லை “உள்ள வாறது” கதவிற்கு அப்பாலிருந்து வெளியில் வந்தது ஒரு முரட்டுக்குரல்.

அந்த தகர கதவை தள்ளிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு ஓரமாக மேசையொன்றின் பின்பக்கமாக சாய்ந்தபடி யாரோ இருப்பது மங்கலாகத் தெரிந்தது. யாரோ என்ன யாரோ, அவன் தான். இடமும் வலமுமாய் இரண்டு கொப்பிகள் கிடந்தன. மேசையின் முன்பக்கம் இன்னொரு கதிரை இருந்தது. தயங்கித்தயங்கி கிட்டப்போய் அமர்ந்தேன். சிகரெட் நாற்றம் முகத்தில் அறைந்தது.

என்னென்னவோ கேள்விகள் கேட்டான். பதிலென்ற பெயரில் நான் ஏதோ புசத்தியிருந்தேன், இப்போது சரியாக ஞாபகமில்லை. அவற்றை கறுப்பு பேனாவால் எழுதினான். முக்கியம் என்று அவனுக்கு தோன்றிய விடயங்களை அவ்வப்போது சிவப்பு பேனாவால் அடையாளமிட்டு வைத்தான். எல்லாம் முடிந்து பின்கதவைத் திறக்கும் போது ஒரு குண்டைத் தூக்கி தலையில் போட்டான். ”கம்பசுக்கு போனதுக்கு அப்புறமாவு ஆமிக்கு வேலை செய்து தறேலுமா”.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரே முழுசாட்டமாக இருந்தது. என் முழியை பார்த்து இது சரிவராது என்று நினைத்தானோ அல்லது நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்பதாலோ ”ஒண்ணும் பிரச்சினையில்லே, வேணாம். இன்னுங் எத்தினை பேர் இருக்காங்க வெளீலே..” என்று கதையை மாற்றினான். எனக்கு தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் போல இருந்தது.”ஓராள் தான்” என்றபடி மூடியிருந்த கதவைத்திறந்து கொண்டு வெளியில் பாய்ந்தேன். ஒரு பெரும் சுழலில் இருந்து தப்பியது போல இருந்தது. நேரே நடந்து கலைமதிக்கு சொன்ன ‘சாப்பாட்டு ரென்ற்’ பக்கமாக காத்துக்கொண்டு நின்றேன்.

இனி கலைமதிக்கும் விசாரணை முடிந்துவிட்டால் போதும். இந்த பொல்லாத நரகத்திலிருந்து தப்பிவிடலாம். இப்போது அவள் உள்ளே போயிருப்பாள். இன்னும் சிறிது நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும். “என்ர அம்மாளாச்சி நான் மட்டும் இங்கயிருந்து வெளியில போட்டன் எண்டால் உனக்கு நாலு பெட்டி கற்பூரம் கொளுத்துவன். ”

இருபது இருபத்தைந்து நிமிடங்கள் கடந்துபோயிற்று. அவள் வருவதாய்க்காணோம். எனக்கெல்லாம் பத்து நிமிடத்தில் விசாரணை முடிந்துவிட்டது. சரி, அவளுக்கு ஐந்தாறு நிமிடங்கள் கூடக்குறைய எடுத்தாலும் கூட இத்தனைக்கு வந்திருக்கவேண்டுமே. ஏன் வரவில்லலை. அந்தரித்தது மனசு. மெத்தப்படித்த மூளை இதுதான் நேரமென்று ஏதேதோ எல்லாம் எச்சரிக்கத்தொடங்கியது.

அவள் வரவேண்டிய பக்கமாக திரும்பி திரும்பி பார்த்தேன். ம்கூம், ஆளைக்காணவில்லை. கருக்கல் மங்கி இருள் வேறு வந்துவிட்டிருந்தது. இருந்தும், அவள் வரவில்லை. ஒருவேளை வேறு பாதையால் போயிருப்பாளோ, ஆனால், எனக்கு சொல்லாமல் அப்படி போகமாட்டாளே. அடிவயிற்றில் பயம் நின்று தாம் தூம் என்று குதித்துக்கொண்டிருந்தது.

தூரத்தில் ஒரு உருவம் வருகிறது. பார்த்தால் அவள் போலத்தான் இருக்கிறது. இவ்வளவு நேரமும் கிடந்து அலைபாய்ந்து மனது அப்பாடா என பெருமூச்சு விட்டது. முன்னூறு வியாக்கியானம் சொல்லி முழுசிக்கொண்டிருந்த மூளை கூட, ஆயிற்று.. எல்லாம் ஆயிற்று என்று ஆறுதல்ப்பட்டது. சின்னதாக சிரிக்கக்கூட முடிந்தது என்னால்.

அது கலை தான். தள்ளாடித்தள்ளாடி நடந்து வந்து பக்கத்தில் நிற்கிறாள். வென்ற நிம்மதியோ தோற்ற பயமோ அவள் கண்களில் இல்லை. அது சுரத்தில்லாமல் சுருங்கிக்கிடந்தது.

“என்ன கலை. விசாரணை பிரச்சினையில்லாம முடிஞ்சுது தானே..”

நான் கேட்ட கேள்விக்கு ஒரு பதிலுமில்லை. மறுபடியும் கேட்டேன். ம்கூம், எந்த அசுமாத்தமும் இல்லை. “வாயில என்ன புட்டுக்கட்டியா வைச்சிருக்கிறாய்..? ஏதாவது சொல்லன்” என்றபடி அவள் தாடையை பிடித்து ஆட்டினேன். கையில் ஏதோ பிசுபிசுத்தது. எடுத்து கண்களிற்கு கிட்டவாக கொண்டுசென்று உற்றுப்பார்த்தேன். இரத்தம்.

“என்னதிது.. ” பதறியடித்துக் கொண்டு அவள் மேவாயைத்திருப்பி வடிவாகக் கவனித்தேன். உதட்டின் ஓரத்தில் இரத்தம் வழிந்து காய்ந்திருந்தது. அங்கங்கு காயம் பட்டு வீங்கியிருந்தது உதடு.

“கலை, உன்னத்தான். என்னதிது..” பதிலில்லை.

அவள் உதட்டு காயத்தை கைகளால் மெலிதாகத் தடவினேன்.

“ஆ.. வலிக்குது. கையை எடு” பட்டென்று திரும்பினாள் அவள்.

 “என்ன நடந்தது..? பயமா இருக்கு கலை. ஏதாவது சொல்லு” – நான் அழத்தொடங்கினேன்.

 “முதலில அழுகிறத நிப்பாட்டு. சும்மா சும்மா அழுது ஊரக்கூட்டாத. இப்ப என்ன உனக்கு சொல்லவேணும். நான் சொல்லி உனக்கு விழங்குறத விட உன்ர கேள்வியிலயே உனக்கு தெளிவா விளங்கிற்று எண்டு தெரியுது. அது தான். அதே தான். இத என்ர வாயால வேற நான் சொல்லவேணுமே..”

அவள் என்னதான் அழவேண்டாம் என்று சொன்னாலும் அதை தவிர வேறு என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை.

 “ஐயோ.. இப்ப என்னடி செய்யுறது..? அம்மாக்களிட்ட போய் என்னெண்டு சொல்லுறது..? எங்களால தான் எல்லாம் எண்டு தான் பேசப்போகுதுகள் சனமெல்லாம்..” மழையில் நனைந்த காக்காக்குருவி போல நடுங்கிக்கொண்டிருந்தேன் நான்.

நான் சொன்னதும் தான் தாமதம், என்னை எரித்துவிடுவது போல பார்த்தாள் அவள். பிறகு கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள். எங்களைக்சுற்றி இருள் அடர்ந்து செறிந்து கொண்டிருந்தது. திடீரென என்ன நினைத்தாளோ தெரியாது, கையிலிருந்து ஆவணங்களிலிருந்து பல்கலைக்கழக விண்ணப்பப் படிவத்தை தெரிந்து எடுத்தாள். அடுத்த கணம், அது ஆயிரம் துண்டுகளாகி காற்றில் அசைந்து ஆடியபடி நிலத்தை நோக்கி கீழிறங்கிக் கொண்டிருந்தது. ஒருவேளை அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று பயமாகவிருந்தது.

“ஏய் லூசாடி நீ. இருக்கிற பிரச்சினை காணாதெண்டு அதயும் ஏன்ரி கிழிச்சனி. இனி எப்பிடி யுனிவெசிற்றிக்கு போவாய்..? விசரி. உன்னத்தான்ரி, அதுகளை கிழிச்சிப்போட்டு பிறகென்னண்டு கம்பசுக்குப்போவாய்..?”

“கம்பஸ் முக்கியம் தான். ஆனால்,அதுக்கு முதல் எனக்கு இன்னொரு முக்கியமான வேலையிருக்கு.”

இப்போதும் தெளிவாக இறுக்கமாக வெளிவந்தது அவள் குரல். என்ன சொல்கிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்தோடு நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தேன். அவளது குட்டிக்கண்களில் இருபெரும் தணல்க் கிடங்குகள் இருளைக்கிழித்தபடி எரிந்து கொண்டிருந்தன.

***

வேல்விழி முகில்நிலா, ஈழத்தில் உள்ள மணலாறு ஊரைச் சேர்ந்த இவர், தற்பொழுது Sheffield Hallam பல்கலைகழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார். ‘பட்டது’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here