Thursday, March 28, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்டெல்டா ஊதாரி- 2

டெல்டா ஊதாரி- 2

பேரலைகளின் உறக்கம்

சிவகுமார் முத்தய்யா

குளிக்கரை பாண்டியனை நேற்று கடைவீதியில் பாரத்தேன். ஆள் அடையாளமே தெரியாமல் போய்விட்டிருந்தார். கன்னங்கள் குழி விழுந்து முகமெல்லாம் கருத்துப் போய் கன்றியிருந்தன. பாண்டியனை நான் பார்த்து பத்து வருடங்கள் இருக்கும். இடையில் அவரைப் பார்க்கவில்லை. சென்னையில் அந்தப் பெண்ணோடு சேர்ந்து வாழ்வதாகக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இப்படியான மோசமான நிலையில் அவரைப் பார்க்கையில் ஏனோ வருத்தமாக இருந்தது.

கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி அலைகள் எழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியது. இதில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது. நாகப்பட்டிணமும் வேளாங்கண்ணியும் அதிக பாதிப்பு என்கிறது புள்ளி விவரமும். சுனாமி அலைகள் தாக்கிய அன்று தொடங்கி தொடர்ந்து முன்று நாட்கள் அடிக்கடி பேரலைகள் தோன்றி கரைக்கு வந்தன. இதனையடுத்து கடலோரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். சுனாமியின் கோரத்தாண்டவத்தை நேரில் பார்த்தவர்கள் ஒட்டம் பிடித்து திருவாரூர் பகுதிகளுக்கு அடைக்கலம் தேடி வந்துவிட்டார்கள். அவர்களை அரசுப்பள்ளிகளில் தங்க வைத்து உணவு அளித்தது மாவட்ட நிர்வாகம். அப்படி வந்தவர்களில் ஒருத்தி சாந்தா. அவளது கணவன் சுனாமியில் பலியாகிவிட்டார். தனது ஐந்து வயது மகனை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். அப்போது அங்கே சென்று சின்னச்சின்ன உதவிகள் செய்தவர்களில் பாண்டியனும் ஒருவர். அப்போது அங்கு இருந்த சாந்தாவுக்கு ஆறுதல் சொல்லி அவளது மகனை கவனித்துக் கொண்டார் பாண்டியன். அவளது கணவனைத் தேடி சாந்தா போனபோது அவளுடன் கூட சென்று உதவி புரிந்தார். அவளது கணவர் சடலம் கிடைக்கவில்லை.

நாளடையில் பாண்டியனும் சாந்தாவும் நெருக்கமாகிவிட பாண்டியன் அவளோடு சென்னைக்கு போய்விட்டார். அதற்கு பிறகு இந்த பக்கத்திலேயே அவரைப் பார்க்கவில்லை. கணவனை இழந்து நிற்கும் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த பாண்டியனை பாராட்டாதவர்கள் இல்லை. அப்படிப்பட்டவரை சில நாட்களுக்கு முன்புதான் நான் பார்த்தேன். இதற்கு பிறகான விஷயத்தை இறுதியில் சொல்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள். அப்போது நான் கூட்டுறவு சொசைட்டி ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். சுனாமி முடிந்த எங்கள் பகுதியில் மீன் சாப்பிடுவதையே மக்கள் நிறுத்தியிருந்தனர். அங்கு ஏற்பட்ட மரணங்கள் மற்றும் அழிவுகள் அந்தளவுக்கு மன அழுத்ததை உருவாக்கியிருந்தன. 2006-ஆம் ஆண்டு வாக்கில் முதன்முதலாக நாகப்பட்டிணத்தில் இருந்து சித்ரா என்ற பெண் மீன் வியாபரத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு நாற்பது வயது இருக்கும். அவரது இரண்டு மகன்கள் மற்றும் கணவர் சுனாமியில் இறந்து விட்டார்கள் என்று சொன்னார். அதன் பிறகு சிலர் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். மீன் வியாபாரம் சுமாராக நடப்பதாகச் சொன்னார். நான் காலை ஒன்பது மணிக்கு பஸ் ஸ்டாப்பில் தினமும் பார்ப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் அவரிடம் தான் மீன் வாங்குவேன். அவரிடம் கடல் பற்றியும், மீன் பிடிக்கும் முறை குறித்தும் கேட்பேன் அவரும் என்னிடம் தனக்குத் தெரிந்தவற்றைப் பற்றி சொன்னார்.

இந்த நிலையில் ஒருநாள், நான் காரைக்கால் வானொலி நடத்திய கவியரங்கத்துக்கு நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். நானும் கவிதையோடு சென்று வாசித்து முடித்து விட்டு கிளம்பும்போது ரூ.50 கொடுத்தார். வானொலியில் இருந்து உங்கள் முகவரிக்கு செக் அனுப்பி வைப்பார்கள் என்று சொன்னார். மதியம் மூன்று மணி அளவில் காரைக்காலில் இருந்து நாகப்பட்டிணம் வந்து பேருந்து நிலையத்தில் ஏதாவது சாப்பிடலாம் என்று நடந்தபோது காலியான மீன் அன்னக்கூடையோடு சித்ரா எதிரே வந்தாள். என்னை கண்டதும் வா தம்பி! என்று வாஞ்சையுடன் அழைத்தாள். நானும் காரைக்கால் போனது குறித்து சொன்னேன். கவிதையா? அப்படின்னா என்று வியப்புடன் கேட்டாள். பாட்டு எழுதுவேன் என்று சொன்னேன். அப்படிய்யா என்று கேட்ட அவள் . “நான் நல்லா பாடுவேன். இப்ப புள்ளக்குட்டி புருஷனை இழந்த பிறகு பாட்டே மறந்து போச்சு” என்றாள். அப்போது ஊருக்கு போகும் மினி பஸ் வந்தது. “தம்பி என் வீட்டுக்கு வர்றீய்யா, உனக்கு புடிச்ச மீன் குழம்பு வெச்சு தர்றேன். சாப்பிட்டு தூங்கிட்டு காலம்பற நேரத்தோடு வீட்டுக்கு போயிரலாம்” என்றாள். கடலுக்கு போகலமா? என்றேன். “வா… கூட்டிக்கிட்டு போறேன்” என்றாள்.

சித்ரா உடன் பஸ்சில் ஏறி அமர்ந்தேன். இருபது நிமிடப் பயணம் கடலை ஒட்டிய சாலையில் பஸ் போய் நின்றது. சுனாமி குடியிருப்பில் இறங்கினோம். கடலில் இருந்து குறைந்தது அரை பர்லாங் தொலைவில் கட்டப்பட்டு இருந்தது. தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டிடத்தை கட்டி கொடுத்து இருந்தார்கள். கிழக்கு மேற்காக தெரு குடியிருப்பு அமைத்திருந்தார்கள். புதிதாக இருத்தது. கட்டிட அளவு நானூறு அடியில் இருக்கலாம். நான் அமர்ந்திருந்தேன். அவளுடன் நான் போனதை அந்த வீடுகளில் இருந்தவர்கள் வெறித்துப் பார்த்தார்கள். சிலர் யாரு? என்று விசாரித்தார்கள். உறவுக்கார பையன் என்று சொன்னாள். இது எனக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. கிளம்பிவிடலாம் என்று நினைத்தேன். சித்ரா என்னை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு வெளியே போனாள். நான் குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன். சில நிமிடங்களிலேயே துடிதுடிக்கும் மீன்களோடு வந்தாள். மீன்களை வாசலில் அமர்ந்து சுத்தம் செய்தாள். புறவாசலில் மண்ணினால் மெழுக்கப்பட்ட அடுப்பு இருந்தது. அதில் ஒரு அடுப்பில் சோறும் மறு அடுப்பில் குழம்பும் வைத்தாள். குழம்பின் வாசம் பசியை கிளர்த்தியது. இரவாகியிருந்தன. தட்டில் சோறு போட்டாள். நல்ல பசி பிரமாதமான குழம்பு அத்தனை சுவையாக இருந்தது.

சாப்பிட்டு விட்டு வந்து வீட்டுக்குள் அமர்ந்தோம். நான் வானொலியில் வாசித்த கவிதைகளை படித்துக் காட்டச் சொன்னாள். நான் வாசித்தேன். மிக கவனமாக கேட்டாள். நான் பாடச்சொல்லி வலியுறுத்தினேன். கடலம்மா பாட்டு பாடினாள். அந்த ராகம் எனக்கு பிடித்து போக அந்த ராகத்திலேயே “கண்ணம்மா.. கண்ணம்மா என் கனவு நீயம்மா” என்று பல்லவி தொடங்க பதினான்கு வரிகள் கொண்ட பாடலை எழுதி அவளிடம் படித்துக் காட்டி பாடச் சொன்னேன். அதனைப் புரிந்து நன்றாகப் பாடினாள். மணி பத்து இருக்கும்.

கதவு திறந்து வைத்து கொண்டுதான் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது நாற்பது வயது இருக்கும் ஒரு ஆள் போதையில் வந்து வாசலில் நின்று, “ஏய் சித்ரா… யார் அவன்? நான் வந்து கதவை தட்டுன்னா கத்தி ஊரை கூட்டுற… இப்படி பப்ளிக்கா ஒருத்தனை கொண்டு வச்சிக்கிட்டு கூத்து அடிக்கிறீயா” என்று கத்தினான்.

பயத்தில் நான் மிரண்டு போனேன்.

சித்ரா, கலைந்த கூந்தலை முடிந்து கொண்டு, “ஏய் மாரியாத சொல்றேன் போய்டு. அப்பறம் நான் மனுஷியா இருக்கமாட்டேன்”
எனக்கு பயத்தில் தொண்டை அடைப்பது போலிருந்தது. என்ன நடக்குமோ என்ற பயம். சித்ரா கடுமையாக சீறினாள். “அவனுக்கு என் புள்ள வயசுடா நாயே” என்று சொல்லிக்கொண்டே கையில் அரிவாள்மனையை எடுத்துக்கொண்டு போனாள். அக்கம் பக்கத்து பெண்கள் வந்து, “அவளுக்கு நீயா சோறு போடுறே. அவளுக்குன்னு யாருமில்ல. யாரனாலும் அழைச்சிக்கிட்டு வருவா, நீ போடா… என்று திட்டினார்கள். அவன் கருவிக்கொண்டே போய்விட்டான். நான் உடனே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். சித்ரா என்னிடம் கெஞ்சினாள். அழுதாள். நான் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்திருந்தேன்.

ஒரு வாரம் சித்ரா மீன் வியாபாரத்துக்கு வரவில்லை. அவள் மீன் விற்கும் இடத்தில் அவளைக் காணாது சங்கடத்துடன் சென்றுவந்து கொண்டிருந்தேன். வாரக்கடைசியில் ஞாயிறு சைக்கிளில் போனேன். சித்ரா கடை போட்டிருந்தாள். அவளைப் பார்த்த உடன் அவளிடம் சென்று நலம் விசாரித்தேன். அவள் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அவளது கழுத்தில் புதிய தாலிக்கயிறு தொங்கி கொண்டிருந்தது. அதிர்ச்சியில் அவளைப் பார்த்தேன்.

“வேற வழியில்லை தம்பி, யாவராம் பாத்துட்டு போயி ராவுல நிம்மதி தூங்க முடியல. கண்ட பயலும் ஓறவு மொறை சொல்லிக்கிட்டு வந்து கதவ தட்டுறான். அன்னக்கி நடந்துச்சு பாத்தியே, அதான் மீன் மார்க்கெட்ல வேலைப் பாக்குற ராமர்ன்னு ஒருத்தரு ரொம்ப நாள சொல்லிட்டு இருந்தாரு. கல்யாணம் கட்டிக்கிட்டு சேர்ந்து வாழலாமுன்னு. நாலு பேரு முன்னிலையில தாலி கட்டச் சொல்லி வீட்டுக்கு கூட்டியந்துட்டேன். இனிமே நீ யாருக்கும் பயப்படாம என் வீட்டுக்கு வந்து எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கலாம்” என்றாள். வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

அதன் பிறகு அந்த வேலையை துறந்து விட்டு, சென்னைக்கு வந்து விட்டேன். திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் அந்தியில் போடப்படும் பழைய புத்தகக் கடைகளில் ஏதாவது உருப்படியான புத்தகங்கள் பாதி விலையில் கிடைக்குமா? என்று ஒருநாள் தேடியபோது ‘கடலும் கிழவனும்’ என்ற சிறு புத்தகம் ஒன்று என் பார்வையில் சிக்கியது. அந்தப் புத்தகத்தின் அட்டைகள் கிழிந்து போயிருந்தன. முதல் பக்கத்தில் சிறுசிறு கோடுகள் போடப்பட்டிருந்தன. எடுத்துப் பார்த்த போதுதான் அது மொழிபெயர்ப்பு என்பதை அறிந்துக் கொண்டேன். ‘ஹேமிங்வே’ என்ற பெயர் சிறியதாகவும், மொழிப்பெயர்ப்பாளர் பெயர் பெரிதாகவும் புத்தக மையத்தில் இருந்தது.

இராயப்பேட்டையில் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சில நாட்கள் கழித்து ‘கடலும் கிழவனும்’ எனும் நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்.

அது மழைச்சாரலும், குளிரும் அடர்ந்து நிரம்பிய இரவு. இரண்டுமணி நேரத்தில் நாவலைப் படித்து முடித்து விட்டேன். ஆனால் அன்று இரவு முழுவதும் சிறு தூக்கம் கூட இல்லை. ஒரு போர்வையை போத்திக்கொண்டு, சாரலாய் பெய்யும் மழையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். “நாவலின் சுருக்கம் இதுதான் – கடலுக்கு செல்லும் கிழவன் எப்படியாவது பெரிய மீனை பிடித்து வரவேண்டும் என்ற வேட்கையோடு கடலில் அலைந்து ஒரு மீனை பிடித்து விடுகிறான். அப்போது மீனுக்கும் – கிழவனுக்கும் இடையே வாழ்வா? – சாவா? என போட்டி ஏற்படுகிறது. பிறகு பிடித்த ‘மீனை’ பெரும் திமிங்கலத்திடமிருந்து காப்பாற்றும்படியான நெருக்கடிநிலை உருவாக, மீன் மீது ஒரு கழிவிறக்கம் கிழவனுக்கு உருவாகிறது! பெரும் போராட்டங்களுக்கு பிறகு பிடித்த மீன் இறுதியாக முழுமையாக கிடைக்காமல் போக கிழவன் விரக்தியோடு கரை திரும்புவான். இதுதான் இன்றைய வரையிலான கடலோடிகளின் துன்பம் நிறைந்த வரலாறு. உலகின் வேறு நிலத்தின் பரதவர்களை விட தமிழக மீனவர்களே மிகவும் வேதனைக்குரியவர்கள்.

அன்று இலங்கையில் தமிழனுக்கும், சிங்காளவனுக்கும் பகைமை ஏற்பட்டு பெரும் போர் ஏற்பட்ட பிறகு, தமிழக மீனவர்களின் வாழ்க்கையில் துயர அலைகள் சீற்றத்துடன் அடிக்கத் தொடங்கிவிட்டது. எல்லை தாண்டிச் சென்றார்கள் என்ற காரணத்தில் பல ஆயிரம் மீனவர்கள் கைது சம்பவங்களும், துப்பாக்கி சூடும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இன்று வரை அரசு அமைப்புகளால் அதற்கான தீர்வு இன்னும் எட்டப்படவில்லை. அன்றைய ஒன்றிய அரசுகளும் இன்றைய மோடி தலைமையிலான அரசாங்கமும் ராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் காட்டும் அக்கறையை மீனவர்களின் பிரச்சினையில் காட்டவில்லை. ஏதோ ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதில் சிறிதும் வெளிப்படைத் தன்மை இருக்காது. கைது செய்த சிலரை மீட்டு வருவார்கள். அதன் பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடரும். கைது நடவடிக்கை இருக்கும் இது தான் இன்றுவரை நடக்கும் காட்சி. இதற்கு கச்சத்தீவை மீட்டால்தான் பிரச்சனை தீரும் என்பார்கள்.

இன்று நமது வாழ்வில் ‘மீன் உணவு’ என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. கரையில் உட்கார்ந்து கொண்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மால் அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பற்றியும் கடல் அலைகளின் வழியே நிகழ்த்தும் சாகசத்தையும் அறிய முடியாது. ஒருபோதும் அவர்கள் அதனை அறிவித்துக் கொள்வது இல்லை.

நெய்தல் இலக்கியங்கள் என்கிற வகைமையில் பெரிய படைப்பிலக்கியங்கள் உருவாகவில்லை. ஐந்து திணைகளில் ஒன்றாக குறிக்கப்பட்டாலும் பரதவ மக்களின் வாழ்வியல் சிக்கல்கள் பெரும் அளவில் பண்டை காலத்தில் பதிவு பெறவில்லை. தற்கால இலக்கியங்களில் சில பதிவுகள் சற்று ஆறுதல் தருகின்றன.

சென்னைத் தொடங்கி இராமேஸ்வரம் வரைக்குமான கடலோர கிராமங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்கள் எண்ணிக்கை மற்ற கிராமங்களை ஒப்பிடுகையில் மிக குறைவு. காரணம், கடலுக்குச் சென்று மீன் பிடித்து திரும்புவது மிகப்பெரிய போராட்டம், கடலில் பருவ நிலை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்கிறார்கள் மீனவர்கள். மற்றொன்று கடலில் ஒரு கட்டத்துக்கு மேல் நீளஅகலங்கள், திசைகள், எல்லைகள் அவ்வளவு சீக்கிரத்தில் பிடிபடாதவை. கரையிலிருந்து நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டால், பரந்த நீர்பரப்பு ஒரே மாதிரியாக தெரியும். சூரியனின் உதயம் மறைவு வைத்து எல்லையை குறைத்துவிட முடியாது. அதேபோல காற்று திசைகள் உள்வாடு, வெளிவாடு உள்ளே பாயும் நீரின் போக்கு மிக நிபுணத்துவம் மிக்க அனுபவம் நிறைந்த கடலோடிகளால் மட்டுமே அறிய முடியும்.

அதே போல வடகொண்டல், தென்கொண்டல் என்று காலச் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் காற்று வீசும் திசையை வைத்து சூழலை கணிப்பார்கள். மிக மெல்லிய சாரல் காற்று வடக்கு முகமாய் வீசினால் சூறைக்காற்று அடிக்கும் என்பது உள்ளிட்ட நுட்பமான கணிப்புகள் அவர்களுக்கு தெரியும். புயல் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நடுக்கடலின் அமைதியில் நீரில் ஏற்படும் சலனங்கள், உள்ளே நீருக்குள் நடக்கும் மாற்றங்கள் போன்றவை பற்றி அறிவதற்கு நிறைய அனுபவம் தேவை.
இதனைத் தவிரவும் உடல்வலிமை ஒவ்வொரு ‘மீனவனுக்கும்’ மிக அவசியம். அதை விடவும் அலைகளில் நீச்சலடித்து பாய்மரப் படகை போல மிதந்து செல்லும் நுணுக்கம் தெரிய வேண்டும். எந்தப் பகுதியில் எந்தக்காலச் சூழலில் எந்த வகையான மீன்கள் வலையில் மாட்டும் என அறிய வேண்டும். இதை விடவும் மீன் கிடைக்காத நாட்களிலும், இயற்கைச் சீற்றங்களிலும் தளராத நம்பிக்கை வேண்டும். இத்தகைய திறன்கள் கொண்ட மீனவர்கள் தான் கடலுக்கு சென்று உயிருடன் திரும்பி வருகிறார்கள். சமீப காலங்களில், அதாவது சுனாமிக்குப் பிறகு என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

கடல் என்னும் பரந்த நீர்ப்பரப்புக்குள் மனிதன் தனது அறிவையும், திறமையையும் செலுத்தி போருக்கு செல்லும் ஒரு வீரனைப்போல வாழ்வா சாவா என்ற நிலைமை புரியாது செல்கிறான். ‘கடல் வீரன்’ என்ற ‘விக்டர் ஹியூகோ’ எழுதிய நாவலில் கடல் பயணங்களில் உள்ள இழப்புகளும், துயரங்களும் ஒரு மீன் வேட்டையாடும் வீரனாக தனது பயணத்தை தொடங்கும் ஒருவனின் கதை. கடற்கொள்ளையர்கள் மற்றும் கடல் கொந்தளிப்புகள், சீற்றங்கள், அதன் ஊடே வாழ்வைத்தேடி பயணம் என்பது அது வாழ்தலுக்கான உத்வேகமாக மாறியிருக்கிறது என்பதை விவரிக்கிறது.

இவற்றையெல்லாம் தாண்டி தனது வீரத்தைச் செலுத்தி மீன்களை வேட்டையாடிக்கொண்டு கரைக்கு வருவதாக பல விஷயங்களையும் ‘கடல்பாடு’களையும் விவரித்து இருப்பார். நாவலின் 36-ம் அத்தியாயத்தில் ஒரு இடத்தில் இப்படி எழுதியிருப்பார். “வஞ்சகர்களின் முத்தமே துரோகத்தனத்தின் முதல் படியாகும். கடலின் போக்கே அத்தகையதுதான். கடலின் புன்முறுவல் நம்ப முடியாத பெண்களை போன்றது”, கடல் குறித்து அவருக்கு இருந்த கோபமான எண்ணத்தை இந்த வரிகள் சுட்டுகின்றன. கடலுக்கு செல்பவர்களை ‘கடலோடிகள்’ என்கிற வழக்கும், 16-ம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டு விட்டது. கடல் எல்லை கடந்து மீன் பிடிக்க செல்லும் போராட்டங்களை எல்லாம் தாண்டி, நாடு பிடிக்க செல்ல ஐரோப்பியா நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் பல வழிகளில் முயன்றனர். அப்படித்தான் கொலம்பஸ் கண்டுபிடித்த நாடாக அமெரிக்கா சொல்லப்படுகிறது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் கடல் மார்க்கமாகவே இந்தியாவுக்குள் புகுந்தனர். இது ஆதிக்க வரலாற்றின் சரித்திரம்.

இந்தியாவில், தமிழக கடலோடிகளின் வாழ்க்கை, கடலுக்கும் அவர்களுக்குமான இணைப்பு என்பது அகம், புறம் என நெருக்கடி சார்ந்தது. ஒரு நாளைக்கு கடலுக்கு செல்லும் மீனவனுக்கு எப்போது எந்த வகையில் ஆபத்தும், ஏமாற்றமும் வரும் என்று எவராலும் கணிக்க முடியாது.

மழைக்காலங்கள் தரும் சிக்கல், கடலோர கிராமங்களில் அநேக மீனவனுக்கு சொந்தமாக ஒரு படகு கிடையாது. கிராமத்தில் நூறு பேர் என்றால், 50 பேருக்கு படகு, வலை மற்றும் வசதிகள். அதுவும் எல்லா பருவத்திலும் மீன் கிடைத்து விடாது.

ஒரு நாளைக்கு ஒரு படகில் ஐந்து பேர் கொண்ட குழு 500 லிட்டர் டீசல், உணவுகள், திசையின் சூழல் என புரிந்து மீன் பிடிக்கக் கிளம்பினால், குறைந்தது திரும்பி வர 4 நாட்கள் ஆகலாம். இந்த நாட்களிலும், இரவு பகல் உறங்காது வலையை விரித்துப் போட்டு வள்ளத்தின் சுக்கனை இழுத்து நிறுத்தி மீன்பிடியில் ஈடுபட வேண்டும். இந்த நான்கு நாட்களில் ஐந்து பேர் சம்பளம், உணவுச்செலவு, மற்றும் டீசலுக்கு சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் செலவு ஆகும். இதற்கு தேவயான மீனை முதலில் பிடித்தாக வேண்டும். அதுவே சமயங்களில் கிடைக்காமல் போகும். மீன் போதிய பாடு கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக, எல்லைக் கடந்து போனால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை. துப்பாக்கிசூடு, ஜெயிலில் அடைப்பு, பொய் வழக்குகள் என 1983-ல் தொடங்கி இலங்கை கடல் எல்லையைத் தாண்டிச்சென்ற வகையில் பல ஆயிரம் மரணங்கள் நடந்து இருக்கிறது. இலங்கை தமிழர் மீனவப்பிரச்சினை மட்டும் இன்னும் அணையாத தீயாக எரிந்துக் கொண்டிருப்பதற்கு பின்னால் உறைந்திருக்கும் உண்மைகள் அரசியல் சதிராட்டத்தின் நுட்பமான கண்ணிகளில் பின்னப்பட்டவை.

சென்னை தொடங்கி தனுஷ்கோடி வரை அறுகோண வடிவில் கடல்புறத்து கிராமங்களில் ஒவ்வொரு கிராம மக்களும் தனித்துவம் பொருந்தியவர்கள். மீன் பிடித்தலில் ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித்த அடையாளம் இருக்கும். சில கிராமங்களில் துடுப்பு வலித்து கடலுக்கு செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் உண்டு. அவர்கள் வலைவிரிக்கும் திறனும், நுட்பமும் அவர்களுக்கு உரித்தானது. மற்ற கிராமத்தினர் அதனை பின்பற்ற முடியாது. அதே போல குறிப்பிட்ட ஒரு மீன் வகையைப் பிடிப்பதினாலேயே திறன் பெற்றவர்களாக இருப்பார்கள். ராமேஸ்வரம் பகுதியில் சில குறிப்பிட்ட கிராமங்கள் சுறா வேட்டைக்கு செல்வதை கௌரவமாக நினைப்பார்கள். மற்ற மீன்பிடியை விட லாபம் நிறைந்த தொழில் சுறா வேட்டை என்பது அவர்களின் கருத்து.

சுறாவேட்டை மற்ற மீன்பிடியை போல அல்ல. காரணம் தப்பினால் மரணம். சுறா வேட்டைக்கு என்று தூண்டில் போட்டு சுறா வேட்டையாடுவது உலகில் எந்த மீனவ சமூகத்திலும் இல்லாத புதிய தொழிற்நுட்பம் அதற்கு பேர் பெற்றவர்கள் தமிழக மீனவர்கள். சுறாவை இவர்களில் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒவ்வொரு பெயரிட்டு அழைப்பார்கள். வேளா இழுப்பா, கொம்பன், வரிப்புலியின் உழுவை இதில் வரிப்புலியனும், கொம்பனும் தான் மூர்க்கமும், முரட்டுத்தனமும் கொண்டது.

கடலோர கிராமங்களுக்கு தனித்த அடையாளம் உண்டு. நூறு வருடங்களில் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் அழிவுற்று இருக்கின்றன. அதே பண்டைய சிலப்பதிகாரம் நடைபெற்றதாக சொல்லப்படும் காலத்தில் சோழர்களின் துறைமுகம் பூம்புகார் –தரங்கம்பாடி பகுதியில் அமைந்திருந்ததாக சமீபகால ஆய்வுகள் சொல்கின்றன. காவேரிப் பூம்பட்டிணம் என்று அழைக்கப்பட்ட அந்த பகுதி கடற்கோள் மூலம் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனை சமீபத்திய அமெரிக்க ஆய்வுகள் உறுதி செய்து இருக்கின்றன. கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, பர்மா என்று சென்று போரில் வென்று வெற்றி கண்ட வரலாறுகள் நம்மிடம் உண்டு. கடல் கடந்து படைக்கலம் கண்ட சரித்திரம் அது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரும் புயலில் தமிழகத்தின் தென்புற ஊரான நான்கு புறமும் கடல் சூழ்ந்த தனுஷ்கோடி என்கிற ஊரை கடல் கொண்டு போனது. அங்கேதான் அரிச்சல் முனை என்கிற ஒரு புண்ணிய ஸ்தலம் கூட இருந்தது. இன்றும் கூட சொந்த மண்ணை விட்டு வெளியே வர விரும்பாத மீனவ மக்கள் தனுஷ்கோடியிலே ஒவ்வொரு நாளையும், மிகுந்த பிரச்சனையோடு எதிர்கொள்கிறார்கள்.

ஊரில் உள்ள மற்றவர்களோடு சபதம் போட்டுக்கொண்டு, தனிமனிதனாக கடலுக்கு போய் ‘சுறா’ வேட்டையாடி வந்த குடும்பங்களுக்கு ‘சுறாபிடி’ குடும்பம் என்ற பட்டபெயரும் உண்டு. அதேபோல தூத்துக்குடியில் சில கிராமங்கள் முத்துக்குளிப்பதில் பெரும் பெயர் பெற்றவை. அவர்கள் குடும்பத்துக்கு முத்துக்குளி பாஹவதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இவர்கள் கடலுக்கு சென்று ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்து இருக்கிறார்கள். நடுக்கடலில் எந்த ஒரு பாதுகாப்புக் கருவிகளும் இல்லாமல் உள் நீச்சலடித்து அடியாழம் வரை சென்று மூழ்கி முத்தெடுத்து அபாரத் திறன் பெற்றவர்கள் இன்றும் கூட தூத்துக்குடி ஒட்டிய கிராமத்தில் இருக்கிறார்கள்.

வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதில் அபாரத் திறன் கொண்டவர்கள். மழை, புயல் போன்ற காலங்களில் கூட அஞ்சாத திறமைசாலிகள். கடலுக்கும் அவர்களுக்குமான பயணம் இடைவிடாத அலைகளை போல தொடர்ந்து கொண்டிருப்பவை.

எப்போதேனும் கடலுக்குச் செல்லும் மீனவன் புயல் காலத்திலோ, கடும் கடல் சீற்றத்திலோ, படகு கவிழ்ந்து விட்டால் சீறும் அலையோடு கடும் எதிர் நீச்சலைப் போட்டு மூன்று நாள் நான்கு நாள் என்று கடலிலே மிதந்து உயிரைக் காத்துக் கொள்வதும் உண்டு, அல்லது எல்லா உயிர் போராட்டங்களுக்கு பிறகு தனது உயிரை கடலோடு கரைத்துக் கொள்வதும் உண்டு.

ஆனாலும் ஒருபோதும் மீனவன் கடலைப் பழிப்பதோ, சபிப்பதோ கிடையாது. கடலை அன்னையாக, காக்கும் கடவுளாக, கடல் மாதாவாக, வாரி வாரி வழங்கும் பெரும் வள்ளலாகவே கடலோடிகள் நினைக்கிறார்கள். சுனாமிப் பேரலை வந்த காலத்தில் கூட பலியான ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக, அழுத மீனவர்கள், கடல் மீது கோபம் கொள்ளவில்லை. அது அவர்களின் சுபாவம். கடல் சார்ந்த தங்களுடைய வாழ்க்கையை தகவமைத்து கொண்ட அவர்கள் அதனைத் தாண்டி வெளியே வர விரும்பாதவர்கள்.

கடந்த இருபது ஆண்டுகளில் மீனவக் குடும்பங்களில் பல்வேறு காரணங்களால் பெரிய அளவில் உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று, கடலில் கலந்து விடும் கடலோடிகளின் குடும்பம் கரையில் இங்கே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கடலோடியின் மனைவி தன் குழந்தைகளைக் காக்க மீன்கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்ற தெருத்தெருவாக அலைந்து கொண்டிருக்கிறாள். கணவனை இழந்த துயரங்கள், அவர்களை வலிக்கச் செய்தாலும் குழந்தைகள் தன் வயிறு என்கிற விஷயங்களுக்காக இடைவிடாத வாழ்க்கைப் போராட்டத்தை கரையில் நடத்துகிறார்கள். தினந்தோறும் மீன் கூடையோடு வலம் வரும் ஒவ்வொரு மீனவப் பெண்ணின் வாழ்விலும் ரணம் நிரம்பிய வாழ்க்கை கதை இருக்கிறது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம். அதிகாலையிலே அவர்களுக்கான வாழ்க்கைப் போராட்டத்தை தொடங்கி விடுகிறார்கள். கடற்கரைக்கு சென்று, மீன் வாங்கி பஸ் பிடித்து காலை 7 மணிக்குள்ளேயே வியாபாரத்தைத் தொடங்குகிறார்கள். இப்படியாகத்தான் இந்த உழைப்பு வீராங்கனைகள் கரையிலும் தங்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்கிறார்கள்.

மீனவ வாழ்க்கைக்கு அரசு தரும் சலுகைகளை தாண்டி, ஒவ்வொரு மீனவ குடும்பத்துக்கும், அரசுக்காப்பீட்டு தொகையை தானே செலுத்த வேண்டும். பொதுவாக மீனவர்கள், முரட்டுக்குணம், நெகிழ்வு தன்மையும் சம அளவில் கொண்டவர்கள், உயிர் குறித்த பயம் இல்லாதவர்கள். அதுவே அவர்கள் பலவீனம். ஆகவே அந்த சமூகத்தின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

பொதுவாக மீனவ கிராமங்கள் கடற்கரையை ஒட்டியே அமைந்திருப்பவை. நெடுங்காலத்திலிருந்து கடலின் ஓசையைக் கேட்டு வாழ்ந்து பழகியவர்கள், இயற்கை சீற்றங்கள், சுனாமிப் பேரலைகள் போன்றவை கடந்த காலங்களில் நடந்தும் கூட அதற்கு சிறிதும் அஞ்சாதவர்கள். அதனால் மீண்டும் கடற்கரையிலே வாழ்கிறார்கள்.

சுனாமி பாதிப்புக்கு அரசு மூலம் கட்டித்தரப்பட்ட ‘வீடுகளில்’ போதிய தரம் இல்லை. மற்றொன்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவை அமையவில்லை என்று மீனவச்சங்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். வலைகள், டீசல் போன்றவை சலுகை விலையால் வழங்கப்படுகின்றன. இது மட்டும் போதாது. வங்கிகள் கடனுதவி அளிக்க வேண்டும் என்பது அவர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

கடலோடிகளின் வாழ்க்கை கடலிலும் சரி, கரையிலும் சரி அவ்வளவு சுபிட்சமாக இல்லை. சிலர் தங்களது வாரிசுகளை, வேறு பணிக்கு திருப்பிவிட நினைக்கிறார்கள். காரணம், போதிய பாதுகாப்பு இல்லை. இது உண்மைதான். மீன் உணவாக மட்டுமல்ல உயிர்காக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அது தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மீனவ சமூகத்தை காக்க வேண்டியது நமது கடமை.

சரி பாண்டியன் விஷயத்துக்கு வருவோம். சுனாமியால் கணவனை இழந்து நின்ற சாந்தாவை ஏற்றுகொண்ட அவளோடு சென்னையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த வருடம் மெரினா கடற்கரைக்கு அவளோடு போயிருக்கிறார். இவர்களைப் பார்த்து ஒரு ஆள் வந்து நெருங்கி, சாந்தாவை அழைத்து இருக்கிறான். அவனை அடையாளம் கண்ட அவள் கண்டிக்கொண்டு அழ அவளது மகனும் அப்பாவைக் கண்ட மகிழ்வில் சந்தோஷத்தில் குதிக்க பாண்டியன் பின்வாங்கி கடற்கரையில் இருந்து நடக்கத் தொடங்கிவிட்டராம். ஆனால் அந்த விரிகுடா கடலின் பேரோசை மட்டும் இன்னும் கேட்டு கொண்டிருப்பதாக கலங்கிய கண்களுடன் சொன்னார்.

***

சிவகுமார் முத்தய்யா

நெற்களஞ்சியமான கீழத்தஞ்சை திருவாரூர்- தண்டலைச் சேர்ந்தவர். விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதி வருகிறார். மருத நிலம் குறித்த கதையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதை, கவிதை, கட்டுரை என இது வரை ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் – [email protected]


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular