ஜீவன் பென்னி கவிதைகள்

0

1)

விடியல்

சிறிய ஒளிகளை பரப்பும் இந்த தூண்கள்
மிகப்பெரியவை
காண்டா விளக்குகள் அணையும் வரை
பகல் காத்திருக்கிறது
நெருப்பு கண்டுபிக்கப்பட்ட
இரவிற்குப் பிறகு
உலகம் காத்திருப்பதற்குப்
பழகிக்கொண்டது.
இவ்வுலகின் தாமதமான பகல்
பல நுட்பமான சந்தர்ப்பங்களுக்கு
மிக அருகில்
நம்மைக் கொண்டு வந்து
சேர்த்திருக்கிறது
இறுக்கமற்ற ஒலியின் லயத்துடன்

*

2)

அனாதையென்றொரு சொல்

எப்போதும் தன்னாடைகளை கிழித்துக்கொண்டிருக்கும்
அவளுக்கு
பெயரொன்றுமிருக்கிறது
சிறிய மொழியொன்றும்
பேய் சிரிப்பும் அழுகையொன்றும்
ஞாபகங்களின் அழுக்குகள்
படிந்திருக்கும் நகங்களை
நாளெல்லாம் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கும்
அவளுக்கு
இவ்வளவுக்கருகிலிருந்தும் போதுமானதாகயில்லை
இந்த அன்புகள்

*

3)

மீதமிருப்பவை

இவ்வினாவை
ஒரு மெல்லிய கனத்திலிருந்து தான்
உருவாக்கி வைத்திருந்தேன்
மிக இரகசியமாக.
எல்லா விடைகளும் கிடைக்கப்பெற்ற
வாழ்விற்குப் பிறகும்
அந்த வினா
என்
கைகளுக்குள் ளிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக என் கைகள்
துண்டான பிறகும்
மீதியில் அதன் வாசனை
வலியுடன் ஒட்டிக்கொண்டிருந்தது
மீதமிருந்து எது உன்னைத் துன்புறுத்துகிறதோ
அதுவே அசலான வாழ்வு

*

4)

பாதை

பிறகு ஒருபொழுதில்
நீ சாலையினோரத்தில் பூச்செடிகளை
விற்றுக்கொண்டிருந்தாய்
எப்போதோ தவறவிட்ட
ஒரு துண்டு ஒளிரும் வானம்
கொஞ்சம் கொஞ்சமாக
கிடைத்துக்கொண்டிருக்கிற துனக்கு
உன் பாதைகளை உன்னிடம் எது சேர்க்கிறதோ
அதுவே அன்பினாற்றல்

*

5)

கொள்ளை நோய்

கடைசியில் மீந்துவிட்ட வெள்ளைத்துணிகளில்
இன்னும்
சில குழந்தைகளைச் சுற்றலாம்
பிறகு அதன் வலிகளை
தீர்க்கமாகப் புதைத்து
அடையாளத்திற்கென சிறிய செடிகளை
நடலாம்
கைவிடப்பட்ட உயிர்களுக்கென நம்மிடமிருக்கும்
சொற்கள்
அழுகைகளாகிவிட்டன
பிரார்த்தனைகளின் கடைசி சொல்லில்
நாம் வெறுங்கையுடன்
நின்றுகொண்டிருந்த அன்றிரவு
எப்போதும் போலல்லாமல் மிகத்தனிமையாகப்
பிரகாசிக்கின்றன
சில நட்சத்திரங்கள்.

***

ஜீவன் பென்னி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here