ஜான் சுந்தர் கவிதைகள்

0

தேவகுமாரன் ஒரு சல்லிப்பயல் – யோவான் மதுரையிலிருந்து எழுதிய சுவிஷேசம்

ஆத்தாளும் மயனுமா,
சாராயத்த காச்சிப்புட்டு….
ஏழவீட்டு கலியாணமுனு
சாக்கு சொன்ன சல்லிப்பய…
பொம்பள சகவாசமும்
ருசுவாயிப்போச்சு…..
தைலந்தேக்க ஒருத்தி,
இந்தா..ஏட்டையா முன்னாலயே
மொகந்தொடைச்சா இன்னொருத்தி
வேசியளுக்கு ஜாமீனா நின்ன பய,
கோயில் தெருக்கடய ஒடச்சி
தலமறவா திரிஞ்சவந்தேன்…
அவுக அப்பன் சொத்தாம்ல?
காடு மலை கொகையெல்லாம்
ரகசிய கூட்டம் போட்டா
நக்ஸலைட்டுன்னு சொல்லாம
கொஞ்சுவாய்ங்களாக்கும்?

அவெங் கூட்டாளிப்பயக,
வாரண்டு கொண்டுவந்த
போலீசுக்காரன் காதை
அறுத்துப்புட்டாய்ங்கம்மா….
சும்மா வுடுமா கெவுருமெண்டு?
வேற ஒரு கேசுல சோடனையப்பண்ணி
திருட்டுப்பயலுவலோட
தொங்க விட்டாய்ங்க…

செத்தானா பாவி ?
ஆயிரம் வருஷமா
அழகுபெத்தபுள்ளயா
இங்ஙனயே திர்ராம்யா…
செத்த ஆள ஏன்டா
சாகவிட மாட்றீயண்டு
எவனக்கேட்டாலும்
என்னா சொல்றாய்ங்க…. தெரிமா?
‘சல்லிப்பய ஒரு மகத்தான மனுஷன்’றாக

***

தீக்குச்சி

தேநீர் பொழுதில்
நீளும் குச்சியில்
ஓரிதழ் தாமரை
அதை கும்பிட்டுக்கொள்
சிகரெட்டே.

000

தீக்குச்சி
ஒரு கன்னிப்பையன்
ஆவி தீரத்தீர
காற்றில் எழுதுகிறது
தண்ணெனக் குளிர்ந்த
கருந்துளையை.

000

பெட்டி
தன்னிடம் சொன்னதை
அப்படியே
கைமாற்றிவிட்டுப் போனது
குச்சி.
சிகரெட்டால்
அதை
ஜீரணிக்கவே
முடியவில்லை.

***

ஜான் சுந்தர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here