செல்வசங்கரன் கவிதைகள்

0

கால் மீது கால்

ரு துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலையில்
தனது முந்தைய நிலையை இவ்வுலக உயிர்களை வைத்து
சோதித்துக் கொண்டிருந்தது
முந்தைய நிலையை வழியில் தென்பட்ட ஒருவரிடம் நீட்டியதும்
அவர் மிரண்டு ஒதுங்கினார்
உடனே அதை வைத்து எல்லாரையும் மிரட்ட ஆரம்பித்தது
எல்லாரும் ஒளிந்தார்கள் பம்மினார்கள் ஓடினார்கள்
கட்டிலுக்கடியில் மறைந்திருந்தவனை எழுப்பி திடீரென அவனிடம்
வெடிக்கும் நிலையை எள்ளி நகையாடுகிற வேலையைத் துவக்கியது
வெடிக்கும் நிலை முரட்டுத் தடியன்களை பரம ஞானியாக்கும்
ரசம் போன ஒரு கலை
அதுவொரு சைவ பட்சி காலி டப்பா மொண்ணையான கத்தி
அதை வைத்து ஒன்றையும் கழட்ட முடியாது
வேண்டுமென்றால் பக்த கோடிகளுக்கு வேண்டுமளவிற்கு
புளிச்சோறு ஆக்கித் தட்டலாம்
வெடிக்கும் நிலைக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது
ஆவேசத்தில் ரத்தச் சிவப்பாக இருந்தது வெடிக்கும் நிலை
அருகிருந்த ஒருவனின் நெற்றி நடுவே அது துப்பாக்கியை வைக்க
துப்பாக்கி முனையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்
கால்மீது கால்போட்டு உட்கார்ந்திருந்த முந்தைய நிலை
இதற்குப் பெயர் முந்தைய நிலை என்றது
வெடிக்கும் நிலைக்கு கோபம் மண்டைக்கேறி
மூன்று தோட்டாக்களை ஒன்றன்பின் ஒன்றாக
அவன் நெற்றியில் இறக்கியது
இப்படித்தான் இந்த உலகத்தில் துப்பாக்கிகளுக்கு
பைத்தியம் பிடிக்கிறது
இப்படித்தான் துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலை முன்னால்
இந்த உலகம் மண்டியிட்டுக் கிடக்கிறது


கையோடு வந்த முகம்

முகத்தைக் கழுவும்போது முகம் கையோடு வந்துவிட்டதை
யாரும் நம்பமாட்டேன் என்றார்கள்
எனக்காக எனது முகம் இன்னொருமுறை
கையிலிருந்து முகத்திற்கு போய் திரும்ப கைக்கு வந்து காட்டியது
பாருங்களென கையில் உள்ளதை எடுத்துக் காட்டினாலும்
அது முகமே இல்லையென்றார்கள்
வாங்கிப் பாருங்களென்றாலும் யாரும் கையை நீட்டவில்லை
என் முகத்தை பத்திரமாக உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டேன்
எல்லாரும் விளையாடுவோம் என்றதும் சரியென
எல்லாரும் எல்லாருடைய முகத்தையும் நடுநாயகமாக வைத்து
விளையாட ஆரம்பித்தோம்
முகத்தைப் பார்த்து அணி பிரித்தார்கள்
முகத்தைப் பார்த்து நாற்பத்தைந்து ரன்கள் என்றார்கள்
முகத்தைப் பார்த்து பந்து மட்டை விளிம்பில் பட்டதாக கத்தினார்கள்
முகத்தைப் பார்த்து வெயில் இன்று அதிகமென சடைத்தார்கள்
நாளை விளையாடலாமென எல்லாருடைய முகத்தையும் பார்த்து
எல்லாரும் சொல்லிவிட்டு எல்லாரும் கலைந்து சென்றார்கள்
போகும் அவரவர் முகத்தை அவரவர் பத்திரமாக எடுத்து வீடு சென்றனர்
எல்லாமுமாக இங்கு முகமே உள்ளது
வழியில் என்னுடைய முகம் மாதிரியிருந்த
என்னுடைய கைகளை விரித்து பார்த்துக் கொண்டேன்


அக்குள்ஸ்

கைகளைத் தூக்கச் சொல்லி அக்குள் பளபளப்பில்
தலைமுடியைச் சீவி முகத்தைச் சரி பார்த்தனர்
முகம் சரிவர தெரியவில்லை என்றவர் தலையில் செமத்தியாக
ஒன்று விழுந்தது
அக்குள் மினுமினுப்பையெடுத்து ஒருவர் தன் கூலிங்கிளாஸிற்கு
அதை ஏற்றினார்
அக்குளின் வளைவில் மேலிருந்து கீழே சறுக்கி விளையாடினர்
அக்குளிலேயே முகம் புதைத்துக் கிடந்தவரின் பின்னந்தலையை இழுத்து
எல்லாரும் என்ன செய்கிறோம் நீ என்ன செய்கிறாய் என
ஒருவர் கோபம் கொண்டதில்
அக்குளை நாவால் தேய் தேயென தேய்த்துக் கொண்டிருந்தவரை
பார்த்த பின்னாடி
இரண்டு நல் உள்ளங்களையும் வாழ்க என வாழ்த்தி ஆசி வழங்கினார்
அக்குள் மடிப்பிடையே சிகரெட்டை சொருகிக் காட்டி
சிகரெட்டுகளை வாரி வழங்குகிற வைபோகமும் நடந்தேறியது
அக்குள் பள்ளத்தில் நொங்கு பதநீர் ஊற்றிக் குடித்தனர்
அக்குள் ரோமங்களை வெளியே காட்டாமல் எந்நேரமும்
அந்த இடத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தவர்களை
இப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை
தெருவுக்குள் ஒரே அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தனர்
கேட்டால் அக்குள் தினம் என்கின்றனர்


செல்வசங்கரன் – விருதுநகரைச் சேர்ந்த இவர் அறியப்படாத மலர்-NCBH, பறவை பார்த்தல்-மணல் வீடு, கனிவின் சைஸ்(மணல் வீடு),சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி(மணல் வீடு), கண்ணாடி சத்தம்(காலச்சுவடு) என இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஆதவன் படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here