சாம்பல் புள்ளி

1

கவிதைக்காரன் இளங்கோ

யானம்.

அதன் ஒற்றைப் பெரிய காம்பவுண்டுக்குள் இடுகாடும் சுடுகாடும் இடது வலதாகப் பிரிந்திருந்தது. வலது பக்கம் சற்றே உயரமான இடத்தில் சிமெண்ட் கூரை பாவிய ஐந்து எரிமேடைகள், நீளவாக்காக அடுத்தடுத்து வரிசை கணக்கில் சுடலையாக அமைக்கப்பட்டிருந்தன. இடது பக்கமாக கல்லறைகளும், அவற்றுக்கிடையே வளர்ந்து மண்டிக்கிடந்த செடிகளும் தென்பட்டன. ஆடுகள் சில அவற்றை மென்றுகொண்டு நின்றிருந்தன. காம்பௌண்ட் கேட்டிலிருந்து ஐம்பதாவது மீட்டரில் பாதையை ஒட்டியபடியே சிறிய அறையுள்ள கட்டிடம் ஒன்று அலுவலகமாக இயங்கியது. இறந்தவர்களின் விபரங்களைக் கொடுத்துப் பணம் கட்டி முன்னதாக பதிந்துகொள்ள வேண்டும். புதைப்பது, எரிப்பது என்பதைப் பொருத்து நேரம் ஒதுக்கப்படும். பொதுவாகவே, சுடுகாட்டுக்குள் தேர் நுழைந்ததும் எக்காரணம் கொண்டும் பிணம் வந்து காத்து நிற்கக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பார்கள்.

வசதி படைத்தவர்களுக்குத்தான் கல்லறைகள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன. அவர்கள் மண்ணுக்குள் போன பிறகும் அந்த இடத்தைப் பிடித்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிறர் அடக்கம் செய்யப்பட்டால், உடன் பாலோடு முடிந்து போகும் கதை. உடல் புதைந்த மண்மேட்டில் புல் முளைத்து அவற்றை ஆடுகள் மேய்ந்து, பிறகு அவ்வப்போது விழுகிற ஃபுட்-பால் உதைகளோடு மண்மேடு சமன் ஆகி அது தரையாகி அதில் செடிகள் முளைத்து இடத்தின் அடையாளம் தொலைந்து போகும்.

இடப்பக்கக் கல்லறைகளின் ஊடே வண்டிப்பாதை ஒன்று வளைந்தும் நீண்டும் படுத்துக் கிடந்தது. அதையும் தாண்டி சிறிய மணல் பரப்பு விரிந்திருந்தது. அங்கே பையன்கள் ஃபுட்-பால் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த மணல் பரப்பை ஒட்டின காம்பௌண்ட் சுவரின் ஒரு பகுதியில் பெரிய துளை செய்யப்பட்டிருந்தது. இடித்து உடைத்து கற்களைப் பெயர்த்து போட்ட ஒழுங்கற்ற துளை. அதன் வழியே அந்தப்பக்கத் தெருவும் அதிலுள்ள டீ-கடைகளும் பெட்டிக்கடைகளும் பார்வைக்குத் தென்பட்டன.

ஃபுட்-பால் விளையாடும் பையன்களுக்கு இடையூறு செய்யாமல் அவர்களினும் சிறிய வயதுள்ள பெண்பிள்ளைகள் மற்றும் ஒத்தாசை செய்யும் பொடியன்கள் சிறு கும்பலாக செடிகளின் ஓரமாய் வேறொரு பக்கமாக உட்கார்ந்து சொப்பு சாமான்கள் அடுக்கி சோறாக்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சோறு என்றால், காய்ந்த இலைகள், மரப்பட்டைகள், சிறிய கற்கள் என வகை பிரித்துவைத்துக் கொண்டார்கள். அதில் ஏதோ ஒன்று சோறு. மற்றவை பொரியல் பதார்த்தங்கள். மற்றும் ஓர் அரைவட்டக் குடுவையில் முக்கால்வாசி நிரம்பிய தண்ணீர். அதுதான் குழம்பாகப் போகிறது.

“இன்னிக்கு என்னா கொயம்பு பண்லாம்?”

“கறிக் கொயம்பு”

கேள்வி கேட்ட சசிக்கு பெரிய ஒற்றை ஜடை பின்னல் இருந்தது. அதன் முடிவில் முடிச்சிட்டிருந்த ஊதாநிறப் பட்டாம்பூச்சி ரிப்பன் முன்பக்க தோள் வழியே நழுவி ஸ்டைலாக ஆடியது. அதைப் பார்த்தபடியே பதில் சொன்ன பொடியனுக்கு கறிக்குழம்பின் நினைவில் வாயில் எச்சில் ஊறியது. மற்ற பொடிசுகள் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்தனர். அவள் தன்னுடைய பாவாடை பாக்கெட்டில் இருந்து கற்றையாக மடித்து வைத்திருந்த காகிதங்களை எடுத்து துண்டு துண்டாகக் கிழித்து அதில் பாதியை அவனிடம் நீட்டினாள்.

“இந்தாடா திமிங்கலம் கறியை நல்லா தண்ணில அல்சி எட்த்தா”

சசி தன் வயதொத்த இன்னொருத்தியிடம் திரும்பினாள். மீதிக் காகிதங்களை அவளிடம் நீட்டினாள்.

“ஏய் புவி! இத்த வர்த்தெடுக்கணும். நல்லா மசாலால பொரட்டி குடு”

அந்த புவியும் திமிங்கலமும் இருந்த இடத்திலிருந்து எழுந்து ஆளுக்கு ஒருபக்கமாக சற்றுத் தள்ளிப்போய் குந்திக்கொண்டார்கள். இவள் கேட்டதைப் போல அவற்றை தயார் செய்து எடுத்து வருகின்ற பாவ்லா இதுமாதிரியான விளையாட்டுக்களில் மிக முக்கியமானவை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். மற்றவர்களுக்கும் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. எல்லோருமே பிஸியாக இருந்தார்கள்.

திமிங்கலம் அந்தத் துண்டுக்காகிதங்களை கொண்டுவந்து அவளிடம் நீட்டினான். அவற்றை அவன் நன்கு கசக்கி கொண்டு வந்திருந்தான். இவன் வந்துவிட்டதைப் பார்த்துவிட்ட புவியும் எழுந்து வந்துவிட்டாள். அவளிடமிருந்த துண்டுக்காகிதங்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டன.

“நல்லா அல்சிட்டேன்கா”

“சூப்பர்டா திமிங்கலம். புவி! அவன்ட்ட வாங்கி கொயம்பு தண்ணில முக்கி நல்லா கெளரி வுட்றி. டேய்! அந்த செடியாண்ட ஒரு குச்சி கீது பார். அத்த எடு”

“எதுக்குக்கா?”

“கொயம்ப ஒங்க ஆயாவா கிண்டுவாங்க?”

மற்ற பொடிசுகள் கொல்லென்று சிரித்தன. அதில் ஒருத்தி தன் சிரிப்பையே ‘ப்ப்ப்ர்ர்ர்ர்ர்..’ எனச் சத்தமாக எழுப்பினாள். ‘ம்ம்’ என அதட்டினாள் சசி. கப்சிப் என்று அடங்கினார்கள். வேலையில் மும்முரம் கூடியது.

புவி, திமிங்கலத்திடமிருந்து வாங்கிய துண்டு காகிதங்களை அந்த அரைவட்டக் குடுவைத் தண்ணீருக்குள் முக்கினாள். திமிங்கலம் செடிப்பக்கமிருந்து எடுத்து நீட்டிய சிறிய குச்சியையும் வாங்கிக்கொண்டு இப்போது குடுவை நீருக்குள் முக்கிய காகிதத்துண்டுகளை மெல்ல பதமாகக் கிண்டத் தொடங்கினாள். மற்ற பொடிசுகள் ஆர்வத்துடன் எழுந்து நின்று தத்தம் உடலைப் பாதியாகக் குறுக்கி, முழங்காலில் கைகளை ஊன்றி குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். தொலைவில் இருந்து பார்க்கும்போது கூடி நின்று ரகசியம் பேசுவது போலவே இருந்தது.

புவி, தண்ணீர் சிந்திவிடாமல் கிண்டக்கிண்ட அந்த அரைவட்டக் குடுவை இடவலமாய் அசைந்தது. அது எப்போதோ மண்ணுக்குள்ளிருந்து மேலே வந்துவிட்ட எவரோ ஒருவரின் மண்டை ஓட்டின் ஒரு பகுதி என்பது அந்தக் குழந்தைகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிண்டுவதற்கு பயன்பட்ட குச்சியும் ஏதோ ஒரு எலும்புத்துண்டு தான் என்பதைக்கூட அவர்கள் தெரிந்து என்ன ஆகப் போகிறது?

உச்சி நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த சூரியன் பாரபட்சமின்றி அந்த ஒட்டுமொத்த சுடுகாட்டின் மீதும் பரவியிருந்தது.

*

சித்திரை மாதத்தின் மதிய நேரம் என்பதால் உச்சி வெயிலில் மொத்தமும் வெளுத்துப் போய் தோற்றமளித்தது.

உயிருள்ள கோழிகளை விற்பனை செய்யும் கோழி மார்கெட்டின் அவ்விடம் பெரிய கிட்டங்கி போல இருந்தது. வகிடு எடுத்தது மாதிரியான அகன்ற சிமெண்ட் பாதையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் வலைக்கூண்டுகளுக்குள் அடைப்பட்டிருக்கும் கோழிகளின் ‘கொக்.. கொக்..’ எனக் கொக்கரிக்கும் சப்தம் சன்னமாய் ஒலித்தபடியே இருந்தது. நாட்டுக்கோழிகள் குறைவாக இருந்தன. சிவப்புநிறக் கொண்டைகள் பருத்திருந்த சேவல்கள் தனித்தனி கூண்டுகளுக்குள் அச்சமற்று திமிரோடு நின்றிருந்தன. ‘கறிக்கோழி’ என்றழைக்கப்படும் பிராய்லர் கோழிகள் ஊட்டமான எடையுடன், நீண்ட ஒற்றை கூண்டுக்குள் நெருக்கியடித்து அடைக்கப்பட்டிருந்தன.

கோழிகளை ஏற்றி டெலிவரிக்கு எடுத்துப் போகும் பெரிய டெம்போ வண்டிகள் ஒன்றிரண்டு சற்றுத்தள்ளி காம்பௌண்டு சுவரோரம் வரிசையாக நின்றிருந்தன. மெல்லிய கம்பிகளால் ஆன இரும்பு வலைக்கூண்டுகள் அவற்றில் அடுக்கடுக்காகப் பொருத்தப்பட்டிருந்தன. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த மதிய நேரம் இங்கே சற்று வெறிச்சோடி கிடக்கிறது.

காற்றில் கவுச்சி வாடை பலமாக வீசிக்கொண்டிருந்தது.

ஒருவன் சைக்கிள் ஹாண்டில்-பாரின் இரண்டு பக்கமும் கோழிகளைக் கயிற்றில் கட்டி தலைகீழாய் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். அவற்றின் கால்கள் மொத்தமும் சேர்த்து பிளாஸ்டிக் டேக் போடப்பட்டிருந்தன. விலைபேசி வியாபாரம் முடித்ததுமே அவை உணவுக்கானப் பண்டமாக பாவிக்கப்பட்டு விடுகின்றன. தழைகீழாய் தொங்குவதால் அவற்றின் கொக்கரிக்கும் ஒலி பலகீனப்பட்டு வித்தியாசமாய் இருந்தது. அடுத்தடுத்து விசேஷங்களைக் கொண்டாடும் மனிதப் பழக்கம் ஆதார உணவை விருப்ப உணவுக்கான காரணங்களோடு பிணைத்துக் கொள்கிறது.

எது எப்படி இருந்தால் என்ன! உயிர் என்றால் ஒருமுறை விட்டுத்தான் ஆக வேண்டும்.

“சாவு வூடா?”

“ஆமாண்ணே. கருப்பு கோழி ஒன்னு”

“கருப்புக்குத்தான்பா எப்பவும் டிமாண்டே. சாம்ப புள்ளி போட்டது ஒன்னு இருக்குது. வோணுமா?”

வந்திருந்த இரண்டு பையன்களும் சற்று தயங்கினார்கள்.

“ரோசனை பண்ணாத தம்பி. அதெல்லாம் முன்னோ. இப்போ, நாட்டுக்கோயி கெடைக்கறதே பெருசு. அல்லாருக்கும் தெரியும். சாங்கியம் பண்றவங்கோ அட்ஜஸ்ட் பண்ணிக்கினு சடங்கு பண்ணுவாங்கோ. வோணும்னா போனு போட்டு கேட்டுப்பாரு”

“ஒங்களுக்கு தெரியாததா. கொடுங்கண்ணே”

அவன், எழுந்து பின்பக்கமிருந்த கூண்டுகளைக் கடந்து உள்ளே நகர்ந்தான். இப்போது அவன் நின்ற இடத்திலிருந்து ஒரு கொக்கரிப்புச் சத்தம் ஓங்கி ஒலித்தது. சிறகுகளை படபடவென அடித்துத் துடித்த சாம்பல் புள்ளி போட்ட நாட்டுக்கோழி ஒன்றை கொண்டு வந்தான். அதன் கால்களை ஒன்றிணைத்து ஒரு சிறிய சணல் துண்டைக் கொண்டு சுற்றி முடிச்சிட்டான். அதன் மருண்ட விழிகள் கருமை நிறத்தில் பளபளத்தன. அதன் கொண்டை சிகப்பு அடர்த்தியாக இருந்தது. தடித்த மனித காதின் பருமனுக்கு இருந்த அக்கொண்டை, வேறொரு சேவலின் தலையிலிருந்து பிய்த்து ஒட்ட வைத்தது போல இருந்தது.

“சேவல் மாதிரியே இருக்குண்ணே”

“சிலது அப்டிதான்பா எப்பவாச்சும் ஊர் நாட்லருந்து வர்ற லோடு மேல கும்பல்ல வந்துரும். எம்புள்ள காத்தால இத்த பாத்துட்டு வளக்கலாம்பான்னு ஒரே அழ. வளத்துத்தான கறிகோயிக்குன்னு அனுப்ச்சு வுட்ருக்காங்கோ. சின்ன பையனுக்கு எப்டி புரிய வக்கறது? ஒவ்வொன்னா வளக்க ஆரம்பிச்சா பொழப்ப எப்டி ஓட்றது?”

பணம் கை மாறியது. கோழியை வாங்கிக் கொண்டார்கள்.

“செத்தது ஆம்பள ஆளா பொம்பள ஆளா தம்பி?” அவன் பரிவுடன் கேட்டான்.

“என் அத்தை”

“வயசானவங்களா?”

“இல்லண்ணே”

“அச்சச்சோ! மாமா இருக்குறாரா?”

“ஆமாண்ணே”

“அச்சச்சோ. அந்தம்மா ஆத்மா நிம்மதியா இருக்கும் தம்பி. சனி பொணம் . தனிப்பொணமா அனுப்பி வைக்கக் கூடாது. அவங்களுக்காகவே இந்த சாம்ப கோயி வந்திருக்கு போல. அடக்கமா? எரிப்பா?”

“எரிப்புண்ணே”

“போய் நல்லபடியா அனுப்பி வையிங்கோ”

அவன் கோழியை மடியில் வைத்துக்கொள்ள, மற்றவன் பைக்கை கிளப்பினான்.

*

லமான சங்கு சத்தம் ஒன்று நீண்டு முழங்கியது. வெயில் இறங்கத் தொடங்கிய பொழுது. பாலத்தின் மீது தேர் ஏறும்போதே கீழே இதன் கடைசி வளைவில் சாவு மேளம் நன்றாக கேட்டது. தாளத்துக்கு ஏற்றார் போல இளவட்டங்கள் சிலர் ஆடிக்கொண்டு வந்தார்கள். பத்தடிக்கு ஒரு பட்டாசு கொளுத்தப்பட்டது. வந்த பாதைதோறும் உதிரி மலர்கள் வாரி இறைக்கப்பட்டன.

டீ-கடையை ஒட்டிய பெட்டிக்கடையில் தீப்பெட்டி வாங்க வந்திருந்த திமிங்கலம் ஆவலோடு பாலத்தை நோக்கி தன் பார்வையைத் திருப்பினான். அணிந்திருந்த கால்-டவுசர் இடுப்பிலிருந்து இறங்காமல் இருக்க இறுக்கிப் பிடித்திருந்த அரைஞாண்கயிறு பெல்ட் போல பயன்பட்டிருந்தது. ஒருகையில் தீப்பெட்டியை வைத்துக்கொண்டு இங்கு சன்னமாகக் கேட்ட தாளத்திற்கு இடுப்பை அசைத்து அசைத்து ஆட்டம் காட்டினான். பெட்டிக்கடைக்கு அடுத்ததாக இருந்த சைக்கிள் கடை காதர், ஒரு சைக்கிள் டியூப்புக்கு பஞ்சர் ஒட்டி மரக்கட்டையில் வைத்து அழுந்தத் தேய்த்தபடியே..

“டேய் திமிங்கலம்.. வத்திப்பட்டிதான வாங்க வந்த. ஒங்கம்மா தூக்கிப்போட்டு மெரிக்க போறா பாரு. சாவு டான்ஸு ஆடுற”

திரும்பி காதரைப் பார்த்து வெட்கமாகச் சிரித்த திமிங்கலத்துக்கு அஞ்சரை வயதுதான் ஆகிறது. பொடி உருவம் கொண்டிருந்தான். நாலு வயசுதான் சொல்லலாம் போல இருந்தான். அவனுடைய இயற்பெயர் சுந்தரம். எப்படியோ திமிங்கலம் என்ற பட்டப்பெயர் வந்து ஒட்டிக்கொண்டது. வெறுங்கையை காற்றில் ஆக்சிலேட்டர் கொடுத்து திருகி அங்கிருந்து வண்டியைக் கிளப்பி ‘ட்டுர்ர்ர்ர்ர்..’ என்றபடி எடுத்தான் ஓட்டம். தன் குடிசையை நெருங்கும்போதே..

“யம்மோவ்..! யம்மோவ்..!” என்று அலறினான்.

மீனாட்சி, அம்மியில் துவையல் அரைத்துக் கொண்டிருந்தவள் கடுப்பாகிவிட்டாள்.

“அட்ச்சீ சனியனே! ஏன் கத்தற? ஜவ்வு கீயிது”

அவனுக்கு அவளிடத்தில் பயமெல்லாம் கிடையாது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் கிரிக்கெட் விளையாடி சகாக்களோடு சண்டையாகி மூக்கை உடைத்துக்கொண்டு வந்தவனுக்கு ஸ்பூனைத் திருப்பி வைத்து நெருப்பில் வாட்டி தொடையில் ஓர் இழுப்பு இழுத்து வைத்திருந்தாள். ஒரு அலறு அலறினான். அதோடு சரி. பிறகு அசரவேயில்லை. அடிவாங்கி வாங்கி, அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அவனைவிட்டு விலகிக் கொண்டிருந்தது. அந்தப்பகுதி ஜனங்களுக்கு அவன் மீனாட்சியிடம் வாங்குகிற அடி என்பது பிரபலம்.

‘அடிய வாங்கிக்கினு கோட்டான் மாறி நிக்கிது பாரு. ஆளாக்கு சைஸ்ல இருந்துக்கினு இன்னா அடம்பாத்தியா இதுக்கு!?’

டுர்ர்ர்ர்ர்… வண்டி அவளருகில் நெருங்கி வந்து நின்றது. அணைந்தது. தீப்பெட்டியை உள்ளே அடுப்பு பக்கத்தில் வைத்துவிட்டு ஓடி வந்தவன் அவளைப் பின்னாலிருந்து எக்கி கட்டிக்கொண்டான். அவள் காதருகே குனிந்து ரகசிய குரலில் சொன்னான்.

“தேரு வருதும்மா. இந்த ஒருவாட்டி மட்டும் வளத்துக்கவா?”

நன்கு அரைப்பட்டிருந்த துவையலில் இருந்து கொஞ்சம் வழித்தெடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டாள். பாசத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

“நீ முதல்ல கெட்டிக்காரனா புட்ச்சா. அப்பாலே பாக்கலாம்”

“ஊஹும்… நீ இப்ப சொல்லு. சொன்னாதான்”

“என்னாடா கொஞ்சுற? எனுக்கு உனுக்குன்னு அல்லாரும்தான் பறப்பானுங்கோ. எவன்கிட்டயாவது அடிகிடி வாங்கின்னு வந்து நின்னியோ.. அவ்ளோதான்… தொலச்சி கட்ருவேன்”

“இந்த தபா நான் வளக்கத்தான் போறேன் பாரு”

ஓடிவிட்டான். எதற்கெடுத்தாலும் ஓட்டம்தான். அவனுடைய அந்த ஆவேசமான ஓட்டம் குறித்து முன்பிருந்த பெருமிதம் இப்போது மீனாட்சியிடம் இருப்பதில்லை. பக்கத்தில் ரயில்வே டிராக் எல்லாம் இருக்கிறது. திமிங்கலம் தன் அம்மாவுக்கு பயத்தை உண்டு பண்ணவும் தவறுவதில்லை.

மீண்டும் அதே டீ-கடை முன்னே மூச்சிரைக்க வந்து நின்று கொண்டான். இப்போது, தேர் உள்ரோட்டின் வளைவில் திரும்பிக் கொண்டிருந்தது. டீ-கடையை கடக்கும்போது முழுமையாக மஞ்சள் பூசிய முகமும் அதன் நெற்றியில் இடப்பட்டிருந்த வட்டமான குங்குமத் திலகமும் பளிச்சென தெரிந்தது. மாடிப் பால்கனியில் நின்றபடி, சுடுகாட்டுக்கு போகும் அந்தச்சாவை வேடிக்கைப் பார்த்தவர்கள் ‘உச்’ கொட்டினார்கள்.

பாடை கட்டிய மூங்கில் கழியின் ஒரு மூலையில் கோழியொன்று தலைகீழாய் கட்டித் தொங்கவிடப்பட்டிருப்பதை பார்த்தான் திமிங்கலம். உடல் முழுவதும் சாம்பல் புள்ளிகள் போட்டிருக்கும் அக்கோழியின் சிகப்பு நிறக்கொண்டை சாதாரண அளவை விடப் பெரியதாக இருந்ததும் அவனைக் கவர்ந்து விட்டது. கோழியும் நல்ல ஊட்டமாக இருந்தது. அதன் மருண்ட விழிகளை அருகில் சென்று பார்க்க விரும்பினான். கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொண்டான். சாவைப் பின்தொடர்ந்தான். அவனைப் போலவே வேறுசில பொடியன்களும் ஊடே ஆங்காங்கே வந்து சேர்ந்து கொண்டார்கள். அருகருகே இல்லாமல், கலந்து கிடந்தார்கள். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கறிக்குழம்புக்கு ஒவ்வொருவனும் ஐடியா பண்ணிக் கொண்டு வந்திருக்கிறான்கள்.

ஆனால், திமிங்கலத்துக்கோ அதைப் பிடித்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே இரட்டிப்பானது. போட்டியும் பலமாக இருந்ததை நினைத்து அவனுக்குள் லேசாக ஒரு கலக்கமும் உண்டாயிற்று. போன மாதம் அரும்பாடுபட்டு பிடித்துவந்த ஒரு கோழியை, ஐந்தே நாளில் அவனுடைய அம்மா, அத்திப்பட்டிலிருந்து வந்திருந்த அவனுடைய மாமாவுக்கு விருந்தாக்கிவிட்டிருந்தாள். திமிங்கலம் ஒருவாய் கூட சாப்பிட மாட்டேன் என்றுவிட்டான். அழுகையோடு அடியும் மிதியும் சேர்ந்தே கிடைத்தது.

இம்முறை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும்.

*

தேர் சுடுகாட்டுக்குள் நுழையும்போதே மேளதாளம் அடங்கிப் போய்.. சங்கு ஊதப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடிமகனின் பாடும் குரல் மட்டுமே காடெங்கும் கணீரென ஒலித்தது. பட்டினத்தாரின் செய்யுள் வரிகள் ஒரு ராக இழுவையோடு பாடப்பாட ஊர்வலமாய் வந்தவர்களின் கனத்த நெஞ்சு இன்னும் கனம் கூடிப் போயிற்று.

உற்றார் அழுது அலுத்தார், உறன் முறையார் சுட்டலுத்தார்;
பெற்று அலுத்தார் தாயார்; பிறந்து அலுத்தேன்
பூரணமே…

எரிமேடை அருகே பாடை இறக்கப்படும் முன்பே, பாடையில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த சாவுக்கோழி கட்டவிழ்த்து விடப்பட்டது. அது பயந்து அலறிப் பறந்து போய் இடப்பக்க கல்லறை ஒன்றின் மீதிறங்கி இறக்கைகளை படபடவென அடித்துக் கொண்டு நின்றது. நம்ப முடியாமல், தன்னைச் சுமந்து வந்த மனிதர்களைச் சற்றுநேரம் பார்த்துவிட்டு சாவகாசமாய் செடிகளுக்குள் இறங்கி மேயத் தொடங்கியது. அப்போது ஒரு கல்லறையின் மறைவில் இருந்து சட்டென வெளிப்பட்ட திமிங்கலம் அதை அமுக்கிப் பிடித்தான். அடித்தது லக்கி ப்ரைஸ். மற்ற சிறுவர்கள் ஏமாந்து போனார்கள். இன்றைய அதிர்ஷ்டம் திமிங்கலத்துக்கு என்று முடிவுசெய்து கொண்டார்கள். அவனருகில் மெல்ல வந்து அந்தக் கோழியைத் தொட்டுத்தடவிக் கொடுத்தார்கள். அது திமிறியது. பறந்துவிட வேண்டும் என்கிற எத்தனிப்பில் சிறகைப் படபடவென விசிறி பார்த்தது. முடியவில்லை.

“என்னாடா? இந்தவாட்டியாச்சும் வளக்க வுடுமா ஒங்கம்மா?”

“அதெல்லாம் வுடும்”

பேசிக்கொண்டே செடிகளுக்கு ஊடே நடந்து கொண்டிருந்தார்கள். கீழே கிடந்த நீளமான ஒரு சணலை எடுத்துப் பிரித்துக் கொடுத்தான் ஒருவன். திமிங்கலம் அதன் கால்களில் ஒன்றை வாகாக உயர்த்திப் பிடித்தான். இன்னொருவன் அதில் முடிச்சிட்டுக் கட்டினான். இனி கையை விட்டு நழுவி ஓடினாலும் கயிறைப் பிடித்துவிடலாம்.

“டேய் திமிங்கலம்! சப்போஸ் கொயம்பு வச்சிட்டாங்கன்னா.. நீ திங்காட்டியும் எங்களையாவது கூப்புட்றா. சனி பொணத்தோட வந்த கோயி செம்ம ருசியா இருக்குன்டா”

இன்னொருவன் வெறுப்பேற்றினான். கோபத்தில் அவனை எத்திவிடத் துரத்தினான் திமிங்கலம். கோழி கை நழுவியது. சட்டென விடுதலை பெற்ற கோழி செடிகளுக்கு மேலாகச் சிறகை விசிறி பறந்தது. சிறிய சணல் கயிறு என்பதால் சுதாரித்துப் பிடிப்பதற்குள் தூரப்போயிற்று. பதட்டத்தோடு அதைத் துரத்திப் போனான் திமிங்கலம். மற்ற பையன்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் எட்ட நின்றுகொண்டு கைதட்டி உற்சாகத்தில் கொட்டமடித்தார்கள்.

“ஹோ.. ஹோ.. தோத்தா கோழி.. போறான் பாரு.. தோத்தா கோழி..”

*
“மாமே! மாட்டிக்கிச்சிறா.. தேடிவந்த மவராசி” என்றபடி இளித்தான் தாஸ். சற்று தொலைவில் வேறொரு கல்லறையில் உட்கார்ந்தபடி தம்மடித்துக் கொண்டிருந்த மருது பதிலுக்கு சிரித்து வைத்தான்.

“ஏய் மச்சி! இன்னொரு குவாட்டரு இல்ல.. ஆஃப்பு தேத்து.. செம்ம நாட்டுக்கோயி.. வேற ஒர்த்தனும் வரக்கூடாது.. சுட்டு வறுக்கறோம். மஜா பண்றோம். இன்னிக்கி நம்ப ஒன்டித்தான்” என்று தாஸ் சொல்லி முடிக்கும்போது..

மூச்சிரைக்க ஓடி வந்திருந்தான் திமிங்கலம்.

“இன்னாடா?”

“ண்ணா.. ண்ணா..! என் கோயிண்ணா எனுக்கு வோணும்ணா.. குட்த்துருண்ணா”

“ஏய்! குஸ்மி திமிங்கலம். ஒன் பேர சொல்லச் சொல்லுடா. இந்த கோயி கண்டி ஒன் பேர கரெக்டா சொல்லிச்சின்னு வையேன்.. பட்டா இது உன் கோயிதான். இல்லாட்டி என்னுது” என்றுவிட்டு பான்பராக் பற்களைக் காட்டி பகபகவெனச் சிரித்தான். பிராந்தி வாடை குப்பென்று அடித்தது.

“ண்ணா.. இத்த வளக்கப் போறண்ணா. எங்கம்மா கூட ஒத்துக்கிச்சிண்ணா ப்ளீஸ்ண்ணா குட்த்துருண்ணா”

“இந்த தபா கறி அண்ணனுக்கு. ஒங்கம்மாவுக்கு கெடையாது. ஓகே? நீ கெளம்பு?”

அவன் அழத் தொடங்குபவனைப் போல முகம் கோணினான். தொலைவில் இருந்த மருது இந்தக் கூத்தைப் பார்த்தபடி இன்னும் சிரித்துக் கொண்டிருந்தான்.

“தேரு சந்துமொனை திரும்போசரமே பார்த்துட்டேண்ணா.. இது என் கோயிண்ணா.. குட்த்துருண்ணா. கஷ்டப்பட்டு புட்ச்சேண்ணா”

“டேய்! சொன்னா புரியாதா ஒனக்கு? சனி பொணத்தோட வந்த கோயிடா. உன்னிய மாறி சின்ன புள்ளிங்கோ இத்த தின்னவும் கூடாது, வளக்கவும் கூடாது. பெரியவங்க சொல்றம்ல கேட்டுக்கோ.. ஓடு ஓடே.. குட் பாய்ல ஓடு? நாளைக்கு கிரிக்கெட்ல என் டீம்ல உன்னிய சேத்துக்கறேன். ஓகே? இப்ப கெளம்பே”

இப்போது அழுதுவிட்டான். உடைத்துக்கொண்டு ஓவென குரல் உயர்ந்தது.

“திமிங்கலம்.. காண்டாக்குற நீ. மவனே!”

மருது இப்போது இறங்கி இவர்களிடத்தில் வந்தான். தாஸின் கையில் இருந்த கோழியை பட்டென்று பிடுங்கினான்.

“அட்ச்சீ குடு.. சின்ன புள்ளிய அய வக்கிற? ஓசி காஜி. டோமரு பையா”

“டேய் டாபரு.. இன்னிக்கும் கட சால்னாவத்தான் நக்கணுமா நானு?”

“சர்தான் மூடு. இந்தாடா திமிங்கலம், ஒன் கோயி.. நல்லா சூப்பரா வளக்கணும் சரியா? இது சண்ட செய்யும் போலடா.. பாத்தாலே டக்கரா கீது. உஷாரா பாத்துக்கோ.. குப்பத்தொட்டில மேய வுடு. கூடயே நில்லு. வூட்ல கட்டிப்போடு. சுடுகாட்ல வுட்ராத. இந்த டாபர் மாமா சுட்டு தின்றுவான்.. இல்ல மாமே?”

தாஸ் கடுப்பாகி மருதுவை முறைத்தான். பிறகு திமிங்கலத்தைப் பார்த்தான். அவன் கையில் இருந்த அந்தக் கோழியைப் பார்த்தான். அதற்கு மேல் திமிங்கலம் அங்கே நிற்கவில்லை. அனுமதி கிடைத்துவிட்டது. ஓட்டமெடுத்தான். அவனுடைய கூட்டாளிகளோடு இணைந்து கொண்டான். அவர்கள், அவனோடு கதையளந்து கொண்டே நடந்தார்கள்.

சாம்பல் புள்ளி போட்ட அந்தக் கோழியின் கருவிழி மணிகளில் வெயில்பட்டு மினுங்க மினுங்க, அதன் சிவந்த கொண்டை திமிங்கலத்தின் நடைத்துள்ளலின் தாளகதியோடு சேர்ந்து கொண்டது.

எரிமேடையில் எரிந்து கொண்டிருந்த சிதையிலிருந்து கிளம்பிய கரும்புகை அதன் கூரையில் மோதி வழிந்து வான் நோக்கி சுருண்டு கொண்டிருந்தது. சாவுக்கு வந்தவர்கள் முற்றிலும் போய்விட்டிருந்தார்கள். வெட்டியான், கையில் பெரிய கழியைப் பிடித்துக்கொண்டு சிதையையே சற்று நேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவர் நீர்தொட்டி இருந்த இடம் நோக்கி மெல்ல இறங்கிப் போனார்.

அந்தப் பெண்பிணம் தனியாகவே வெந்து கொண்டிருந்தது.

***

கவிதைக்காரன் இளங்கோ – மூன்று கவிதைத்தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு சினிமா கட்டுரை நூல் ஆகியன வெளிவந்துள்ளன. அண்மையில் ஏழு பூட்டுக்கள் எனும் நாவல் வெளிவந்துள்ளது

1 COMMENT

  1. பெண் பிணம் தனியாக வெந்துகொண்டிருந்தது
    என்ற முடிவிலிருந்து பயணப்படுகிற மனம் சாம்பல் புள்ளி என்ற தலைப்பைச் சுமந்துகொண்ட அலைகிற கணத்தில், திமிலங்கத்தின் நடைத்துள்ளலை ஒரு கடலின் கரையிலிருந்து இன்னொரு கடல் நோக்கி பயணப்படுகிற கோழியின் இருப்பை மனம் இருக்கிருந்தே காட்சிபடுத்துகிறது.

    நல்லாயிருக்கு அண்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here