கார்குழலி கவிதைகள்

0

பெருந்தொற்று காலம்

ஓயாமல் இயங்கிக் கொண்டிருந்த
நகரம் விக்கித்து நிற்கிறது.

வேலையில்லாமல் உலாத்தும் நாய்கள்
வெறிச்சோடிய வீதிகளில்
கருத்த நிழல்களைக் காணாத போதும்
மருண்டு ஓடி
கதவடைத்த கட்டிடங்களின்
வாசலில் ஒதுங்குகின்றன.

தீப்பெட்டி வீடுகளில்
அடைந்து கிடக்கும்
குடும்பங்களின் பெருமூச்சை
மீண்டும் மீண்டும் உள்வாங்கி
உலைக்களமாகக் கொதிக்கின்றன
அறைகளின் சுவர்கள்.

மூடப்பட்ட தேநீர் கடையின்
வாயிலை நோக்கி நகரும் கால்களை
திசை திருப்பி
கைத்துப்பாக்கியை நினைவூட்டும்
வெப்பமானியை ஏந்தியபடி
அடுக்கக வளாகத்துள் நுழைகிறாள்
மாநகராட்சி ஊழியை

நகரத்தின் இதயம் தீனமாகவாவது
துடித்துக்கொண்டு இருப்பதைச்
சாட்சியம் கூறுகின்றன
உச்சி மாடியில் படபடக்கும் துணிகள்

துருவேறிய ஜன்னல் கம்பிகளின் வழியே
கண்களைச் சுழற்றி
வீதியுலா போகும் சிறுமி
பட்டாம்பூச்சிகளிடம் கதை பேசுகிறாள்

கனச்சதுர பெட்டிகளை
முதுகில் தாங்கிய
ஆரஞ்சு பச்சை வண்ண மனிதப் புள்ளிகள்
சக்கரக் கால்களோடு
சாலைகளில் உருளுகின்றன

சாம்பல் போர்வை படர்ந்த
மருத்துவமனை வளாகத்தில்
நடைபயிலும் குழந்தை
பொக்கைவாய்ச் சிரிப்போடு
தாயின் கண்ணீரைத் துடைக்கிறது.

பசுமை அடர்ந்த கிளையில்
தத்தியபடி கூவுகிறது குயிலொன்று

வேம்பு அரும்புகள்
வெண் நட்சத்திரமாக
வெடித்துப் பூக்கின்றன.

*

தாயம் விழுமா

சுழற்றிப் போடுகையில்
சிலீரென்று தரையில் மோதி
உருண்டோடும் சோழியில்
இருக்கிறது எதிர்காலம்.

வாதையின் பீதி
முறுக்கிப் பிழிகையில்
மூச்சு முட்டும்
காலத்தின் சுவாசம்

மெல்லப் பரவும்
கரிய மேகத்தின்
நிழல் படரா
மூலையொன்றைத் தேடி
ஓடும் கால்கள்

நெஞ்சை அடைக்கும்
இரும்புக் குண்டு
உடல் முழுதும் உருள்கையில்
முகத்தில் படரும்
அச்சத்தின் ரேகை

அடிவயிற்றின்
சுருக்கவிழா முடிச்சின் வலியில்
ஊற்றாகப் பெருகி
வழியும் கண்ணீர்

ஓசையின்றி வாய்வழியே
வெடித்துச் சிதறும்
அவலத்தின் பெரும் ஓலம்

பேரலை வீசும்
விதியின் கடலில்
சிக்கிப் பதறும்
நெஞ்சமெனும் துரும்பு

எப்படியும்
வாழ்க்கை விட்டெறியும்
சோழியில் விழக்கூடிய
தாயத்தில்தானே
ஒளிந்திருக்கிறது
வெளிச்சத்தின் நம்பிக்கை

***

கார்குழலி, சென்னையில் வசித்து வருகிறார். இணையவழிக் கற்றல் துறையில் பணிபுரிந்து வருகிறார். கவிதைகள் எழுதுவதுடன் தொடர்ந்து குழந்தைகளுக்கான நூல்கள், மொழிபெயர்ப்பு என இயங்கி வருகிறார். அத்துடன் தமது துறை சார்ந்த கட்டுரைகளோடு வெவ்வேறு கட்டுரைகளை பல்வேறு இதழில் எழுதி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here