கானல்

0

நாகராஜன் இறந்துவிட்டார்.

காலையில் விஜயகுமாரின் உறக்கத்தை கலைத்தது அலைபேசியின் ஒலி. வந்திருந்த குறுந்தகவலை வாசித்தார். நிகழ விரும்பாத அல்லது நிகழும் என நினைத்திராத ஒன்றை கண்ணுற்றதைப் போன்ற முகபாவனை. பல் துலக்கிவிட்டு எப்போதும்போல் இளங்காலை வெயில் பாவும் மொட்டை மாடிக்குச் சென்றார். நான்கு மாடி அடுக்ககம் அது. விஜயகுமாரின் வீடு மூன்றாவது தளம். படியேறும் தருணத்திலும் குறுந்தகவலில் இருந்த இரண்டு சொற்களை வாசித்துக்கொண்டே ஏறினார். மொட்டை மாடியில் உள்ளுறைந்திருக்கும் மென்சோகத்தைப் பிரதிபலிக்கும் மங்கலான சூரியன். சுவரில் சாய்ந்து நின்றுகொண்டார். வீட்டின் எதிர்ப்புறம், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து தென்படும் மலையைப் பார்த்தார். எப்போதும் பார்ப்பதை விட மிகப்பிரம்மாண்டமாய் காட்சியளித்தது.

முகத்தில் சோகம் தன்னை விஸ்தரித்துக்கொள்ளத் துவங்கியது. தனக்கு குறுந்தகவல் அனுப்பிய நபரை அழைத்தார்.

“என் பேரு விஜயகுமார். நாகராஜனுக்கு..”

“கேள்விப்பட்டேன்”

“எப்படி? என்ன ஆச்சு ?”

“அட்ரெஸ்?”

மலையின் பின்புறத்திலிருந்து சூரியன் மேலேறியது. உஷ்ணம் அதிகரிக்க அறைக்கு கீழிறங்கினார். நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட புகைப்படமும் அதில் மனைவியின் சிரிப்பும் ஆசுவாசப்படுத்தியது. மாசேறிக்கிடந்த அறையை கவனித்தார். ஒருவார காலம் பயன்படுத்திய துணிகள் துவைப்பதற்காக அறையின் மூலையில் குவிந்து கிடந்தன. அதை இடறிய வண்ணம் படுக்கையறைக்குள் நுழைந்தார். சுத்தமாக விரிக்கப்பட்டிருந்த மெத்தையுடன் கூடிய கட்டிலைப் பார்த்தார். ஆற்றாமையுடனான பார்வை அது. கீழே முந்தைய இரவு படுத்துறங்கிய பாயைச்சுருட்டி அறைக்கதவின் பின்புறம் சாய்த்தார்.

குறுந்தகவலில் வந்திருந்த நாகராஜன் எனும் பெயரிடப்பட்ட முகவரி விஜயகுமாருக்கு பல நினைவுகளைக் கிளறியது. ஹரிகாந்த் சேட்டிடம் வேலைக்குச் சேர்ந்த தினங்கள் ஞாபகத்தில் எழுந்தன. பெரியப்பா சுந்தரேசன் ஈரோட்டில் மயில்கண்டு வேட்டிக்கான வணிகத்தில் இருப்பவர். அவர் சிபாரிசில் வேலையற்று இருந்த விஜயகுமாருக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஜமக்காள வியாபாரத்தில் செழித்த லாபம் கண்டிருந்த ஹரிகாந்த்திடம் கணக்கர் வேலை கிடைத்தது. படித்த பி.காமிற்கு வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவிலான வேலைதான் என விஜயகுமாரும் சேர்ந்து கொண்டார்.

ஹரிகாந்த் வாளிப்பான மனிதர். முந்திரியின் நிறம். பரம்பரை பரம்பரையாக துணி சம்மந்தமான வணிகத்தில் இருப்பவர். தலைமுறையின் ஏதோ ஒரு கிளையில் சேலத்தில் கால் பதித்திருக்கின்றனர். பின் ராஜஸ்தானத்திலிருந்து தருவிக்கப்படும் ஜமக்காளங்களை சேலத்து துணிக்கடைகளில் மொத்தமாக வியாபாரம் செய்வது தொடங்கிற்று. ஹரிகாந்த் இன்னுமொரு படி மேலேறி சேலத்தில் நெய்யப்படும் சுடிதாருக்கான துணிகளை வடக்கிற்கு ஏற்றுமதி செய்தார். அதற்கான தொடக்கத்தில் பணிக்கு ஆட்கள் கூடுதலாகத் தேவைப்பட்டனர். அப்போதே விஜயகுமாருக்கு ஹரிகாந்த்துடன் அறிமுகம் ஏற்பட்டது.

ஹரிகாந்த் கஞ்சர். ஊதிய உயர்வு எனும் சொல்லிற்கே இடமில்லை. ஆனால் அங்கு பணி செய்த ஐந்து ஆண்டுகளிலும் விழாக்காலங்களில் துணி, இனிப்பு, பலகாரங்கள், பின் ஆண்டிற்கு ஒருமுறை என்று எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட ஒரே போனஸ் பட்டுவாடா. ஆனால் ஒவ்வொரு ஆளுக்கும் ஐந்தாளுக்கு நிகரான கடுமையான பணி.

நிறைய இடங்களுக்கு ஏற்றுமதியும் பல்வேறு முறைகளில் இறக்குமதியும் நிலவியதால் கணக்கு வழக்கு பார்ப்பதில் விஜயகுமாருக்கு எப்போதும் தாமதம். பணி கிடைத்த ஓராண்டில் திருமணம் நிகழ்ந்தது. நான்கு நாட்கள் விடுப்பு. பணி திரும்பும்போது ஒவ்வொரு நாளும் நான்கு நாட்களுக்கான பணிச்சுமை இருந்தது. வீடு திரும்ப ஏற்படும் தாமதம் கூடியது. விஜயகுமாரின் தாமதத்தை மனைவியும் பழகிக்கொண்டார். அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளை  நினைவிலிருந்து கடந்து சென்றார்.

நினைவின் ஓட்டத்தை இடைவெட்டியது குறுந்தகவலின் ஒலி. நாகராஜனின் இறுதிச்சடங்கிற்கான தகவல் வந்திருந்தது. பலருக்கு அனுப்பும்போது தனக்கும் அனுப்பியிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டார்.

மனைவியின் புடைவைகளுக்கு அடியிலிருந்து தபால் கவர் ஒன்றை எடுத்தார். உள்ளே செல்லுபடியாகும் நூற்றி நாற்பத்தி ஐந்து நூறு ரூபாய் தாள்கள். மேலுறையின் மீது நாகராஜனுக்கு எனும் நினைவூட்டல். அதை மீண்டும் மனைவியின் புகைப்பட்டத்திற்கு அடியில் சமர்ப்பணத்தைப் போன்று வைத்தார். அந்த செயல் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணங்களற்று செய்ய விரும்பும் செயல்.

முழுதும் அழுக்கு நீங்காத துவைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டார். கண்ணாடியில் பிரதிபலித்த முகம் வயதை கூட்டிக்காட்டியது. முகத்தில் சின்னச்சின்ன சுருக்கங்கள் தோன்றியிருந்தன. பாதி தலைமயிர் நரையேறியிருந்தது. கண்கள் எப்போதும்போல் சிவந்திருந்தன. பணியின் களைப்பில் கண்கள் சிவந்திருக்கும்போது சொல்லப்படும் மனைவியின் சொற்களை நினைவுபடுத்திக் கொண்டார்.

“உங்க கண்ணு எப்பவுமே செவந்து இருக்கு. வயசாளிமாரி. எதையோ செய்ய தவறிட்ட பயம் எப்பவும் கண்ணுல தெரியுது. ஆனா அழகா இருக்கு”

நிலைக்கண்ணாடியிடம் சின்னதாக புன்முறுவலிட்டார். பதிநான்காயிரத்து ஐநூறு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார். நினைவின் அடையாளமாய் நாகராஜன் எனப் பெயரிடப்பட்ட மேலுறையை சட்டைப்பையில் மடித்து வைத்தார். மனைவின் புகைப்படத்திடம் விடைபெற்றார். குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கன் தெரு நோக்கி புறப்பட்டார்.

நினைவின் சுழலில் ஷேர் ஆட்டோ ஊர்வது போலிருந்தது. நாகராஜன் ஹரிகாந்த்திடம் ஜமக்காள வணிக காலத்திலிருந்தே பணிபுரிபவன். எப்போதும் புன்சிரிப்பு படர்ந்த முகம். லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளையும் குடோன்களில் இறக்கி வைக்கப்படும் சரக்குகளையும் மேற்பார்வையிடும் பணி. சரக்குகளின் கணக்கு சரிபார்க்க செல்லும் நேரங்களில் நாகராஜனுக்கும் விஜயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாகராஜன் ஆறு வயதிலிருந்தே உழைப்பவன். பவானிக்கு அருகில் சொந்த ஊர். நாகராஜனுக்கே துல்லியமாக நினைவிலில்லை. அப்பா குடிகாரர். எப்படியோ பிழைத்துக் கொள்ளட்டும் என கைவிடப்பட்ட வாழ்க்கை வாய்க்கப்பட்டவன். செவ்வாய்பேட்டை, லீ பஜார், பூ மார்க்கெட், அக்ரஹாரம் என கூலிவேலை பார்க்காத இடங்களே இல்லை. கூலிவேலையில் கிடைத்ததைவிட இருமடங்கு ஊதியத்துடன் ஹரிகாந்த் பணியில் சேர்த்துக்கொண்டார். காலப்போக்கில் தீவிர விசுவாசி. தொழிலில் நேர்மை. அதேநேரம் ஹரிகாந்திடம் நிரந்தர இடம்.

நாகராஜனுக்கு நினைவுகூறும் திறன் அதிகம். ஒருநாள் முழுக்க வந்துபோகும் சரக்குகளின் தகவலை துல்லியமாக ஒப்பிப்பான். விஜயகுமார் ஒவ்வொரு முறையும் பாராட்டுவார். ஒருமுறை காரணத்தையும் கேட்டார்.

“சொமதான் சார் என் ஒலகம். அதுல கணக்கு மட்டுந்தான் வச்சுக்க முடியும். பட்டுவாடா செய்ய முடியாதே!”

திருமணமாகி விஜயகுமாருக்கு இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. மனைவி கருவுற்றிருந்தார். அந்த சமயத்தில் பணிக்கு காலையில் சீக்கிரம் வந்து மாலையில் விரைவாக வீடு திரும்ப அனுமதி கேட்டிருந்தார். பிரசவிக்கும் நேரம் வந்தது. கர்ப்ப காலத்தில் மனைவின் உடல் நிறைய உபாதைகளுக்கு உள்ளானது. சரியான ஊட்டச்சத்து இன்றி சூம்பிய உடல். கர்ப்பகால சர்க்கரையும் சேர்ந்து கொண்டது. பிரசவிக்கும் நேரம் நெருங்குகையில் சுகப்பிரசவம் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் அறிவித்தனர். முன்பணம் கட்டக்கூட விஜயகுமாரிடம் சத்து இல்லை. ஹரிகாந்த்தும் ராஜஸ்தான் சென்றிருந்த நேரம். ஹரிகாந்த்தின் மேலாளரைத் தேடி குடோனிற்கு சென்றார். அப்போது எதிர்ப்பட்ட நாகராஜன் மகிழ்வான முகத்துடன் ஆணா பெண்ணா என விசாரித்தான். சுருங்கிய முகத்துடன் முழு விஷயத்தையும் பகிரர்ந்தார். சற்றும் யோசிக்காமல் அரிசிப்பாளையத்தில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்து சென்று தேவை என்று சொல்லிய பதிநான்காயிரத்து ஐநூறு ரூபாயையும் கையளித்தான்.

“எனக்கு புள்ள குட்டி இல்ல சார். இப்போதைக்கு பிரயோஜனம் இல்லாத பணம். நீங்க பயன்படுத்துங்க. பாத்துக்கலாம்.”

மருத்துவமனை திரும்பிய உடனேயே அப்பணம் பயனற்றது என்பதை அறிந்து கொண்டார். இரண்டு வாரங்கள் பணிக்கு திரும்பவில்லை. பணி திரும்பியவுடன் நாகராஜன் சரக்கு சம்மந்தமாக ராஜஸ்தான் சென்றிருப்பதை அறிந்தார். ஊர் திரும்பியவுடன் பணத்தை திருப்பி அளித்துவிடலாம் என நம்பிக்கை கொண்டார். யதார்த்தத்தில் அதற்கு பிறகு நாகராஜனை அவர் சந்திக்கவேயில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மல்லூருக்கு அருகில் சிறுதொழில் நிறுவனமொன்றின் காசாளராக பணிமாற்றம் செய்துகொண்டு விஜயகுமார் சென்றுவிட்டார். அதற்கு பின்பும் தன் பழைய நிறுவனத்தில் தெரிந்தவர்கள் வழியே நாகராஜனைப் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறார். ராஜஸ்தான் சென்ற நாகராஜன் திரும்பவில்லை எனும் தகவல் சிலமுறையும், பணியை விட்டே நீங்கிவிட்டான் எனும் தகவல் சிலமுறையும் கிடைத்தது. தனக்கு பணம் கையளித்த வீட்டிற்கும் சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்திருக்கிறார். ராஜஸ்தான் சென்றிருந்த தகவலை அவர்களில் சிலர் அறிந்திருந்தனர். மேலும் இடையில் ஒரே ஒருமுறை வந்து வீட்டை காலிசெய்து சென்றுவிட்டான் எனும் தகவலே மிஞ்சியது

ஷேர் ஆட்டோ ஸ்ரீரங்கன் தெருமுனையில் நின்றது. நிறைய பேர் அத்தெருவை நிறைத்து நடந்து சென்று கொண்டிருந்தனர். மரணத்தை அறிவிக்கும் பறையோசை தெருவை நிறைத்தது. ஆங்காங்கே மக்கள் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர்.

தெருமுனையிலிருந்து ஏழாவது வீடு. சிறிய இல்லம். வாசலில் நிறைய சைக்கிள்கள். நாகராஜனின் உடல் நடுவீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்ததை விட உடல் பூசியிருந்தது. நாகராஜனின் தலைமாட்டில் முக்காடிட்டு வடஇந்தியப் பெண்ணொருத்தி தலையில் கைவைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள். மடியில் நான்கு வயதையொத்த சிறுவன். யாரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துகொள்வது என்று தெரியாமல் விஜயகுமார் முழித்தார். குறுந்தகவல் அனுப்பிய நபரை மீண்டும் அழைத்தார். வாசலில் வந்து இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

“எனக்கு உங்கள யாருன்னு தெரிலங்க. நான் நாகராஜானுக்கு நாலு வருஷமா பிரண்டு. உங்கள பத்தி எதுவும் சொன்னதா நியாவகம் இல்ல”

பின் தனக்கு தகவல் அனுப்பியதன் பின்னணியை சந்தேகித்தார். முன் நின்று கொண்டிருந்தவரே பேச்சைத் தொடர்ந்தார்.

“அவர் போன்ல இருக்குற எல்லா நம்பருக்கும் தகவல் அனுப்புனேன்.”

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கும் நாகராஜனுக்கும் இடையில் இருந்த தொடர்பை விளக்கினார். பதினான்காயிரத்து ஐநூறு ரூபாய் குறித்த தகவலை பகிரலாமா எனும் எண்ணம் கிளம்பும் தருணங்களில் திக்கினார். பேச்சை இடைவெட்டிக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். சுவரில் சாய்ந்த வண்ணம் நாகராஜனைப் பார்த்தவாறு மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவரவர்களுக்கு தெரிந்த நாகராஜனின் வாழக்கையை புதிய முகவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். சிலவற்றை ஒட்டுக்கேட்டார். மனம் லயிக்கவில்லை. வீட்டைச்சுற்றி கவனித்தார். மனைவியுடன் ராஜஸ்தானில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை கவனித்தார். நாகராஜனின் சிரித்த முகம் பாக்கெட்டில் இருந்த பதினான்காயிரத்து ஐநூறு ரூபாயை நினைவூட்டியது.

பதினான்காயிரத்து ஐநூறு ரூபாய் பெரிய தொகை இல்லையா? நாகராஜனுக்கு அந்த தொகை தேவைப்படவேயில்லையா? ராஜஸ்தானிலிருந்து திரும்பவில்லை எனும் தகவலுடன் என் தேடலை நிறுத்திக்கொண்டது எவ்வளவு பெரிய தவறு! என் சோம்பேறித்தனம்தான் இத்தனை அருகாமையில் இருக்கும் நாகராஜனை அடையாளம் காணவியலாமல் தடுத்ததா? சோம்பேறித்தனமா அல்லது மனைவியின் நினைவை தக்கவைத்துக்கொள்ள நான் கைக்கொண்ட கைப்பாவைதான் இந்தத் தொகையா? இத்தனை நாட்களைக் கடத்திவிட்டு இப்போது அடைக்க விரும்பும் பணம் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலை அடையவா அல்லது நியாயவானாக நிரூபித்துக் கொள்ளவா? ஆனால் யாரிடமிருந்து விடுதலை அல்லது யாருக்கு என் நிரூபணம்?  அங்கு நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அர்த்தமற்ற கேள்விகளுடன் பாக்கெட்டில் கனம் கூடியதாய் உணர்ந்தார். யாரேனும் இறந்த குடும்பத்திற்காக பணம் கொடுக்கிறார்களா என நோட்டம்விட்டார். அதற்கான சாயல் வீட்டினுள் எங்கும் எதிர்ப்படவில்லை.

கைவசம் இருக்கும் பணத்தை வீட்டிற்குள் எங்கேனும் பதுக்கி வைத்துவிடலாமா என்றும் சிந்தித்தார். மறுகணமே யாரேனும் எடுத்துவிடுவார்களோ என்று ஐயப்பட்டார். குழந்தைக்கு உண்டியல் சேமிக்கும் பழக்கம் இருந்திருந்தால் அதில் யாருமறியாமல் போட்டுவிடலாம் என்று கற்பனை செய்தார். நாகராஜனை கிடத்தியிருந்த அறையில் அதற்கொப்ப பொருள் எதையும் இனங்காண முடியவில்லை. மரண வீட்டில் ஏதேனும் செலவினங்கள் தெரிந்தால் அதனை அளித்து தன் கனத்தை குறைக்கலாம் எனத்தேடினார். நிகழும் செலவினங்களை அறிய முடியாதவண்ணம் யாரோ ஒருவர் அதை சரிக்கட்டிக் கொண்டிருந்தனர். விசாரிக்க வந்த துக்கத்தை மறந்து கடனடைக்கும் வழிமுறைகளை தேடினார். பைத்தியம் பிடித்தாற்போன்று கண்கள் வீட்டைச்சுற்றி உலாவின. நாகராஜனை வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிடலாமா எனும் எண்ணத்தை சுயவெறுப்புடன் கைவிட்டார். கைவசம் இருக்கும் பணத்தாள்களை விட்டெறிந்துவிட்டு யார் கைக்கும் அகப்படாமல் ஓட விரும்பும் மனம். தன்னைக் கடனாளி ஆக்கிவிட்டு அதை யாரிடமும் சொல்லாமல் பிரிந்ததை எண்ணி நாகராஜனின் மீதான கோபம். இதனை திருப்பி அடைக்காவிட்டால் யாருக்கு நஷ்டம் எனும் புதிர் நிரம்பிய கேள்வி. அனைத்தும் சிந்தனைக்குள் குடைந்தன. லாப நஷ்டங்களுக்கு அப்பால் கனம் நிரம்பிய தொகை அது. பெரும் குழப்பத்திற்குள் ஆழ்ந்து கையறுநிலையில்  நாகராஜனைப் பார்த்தார். ஏக்கம் நிரம்பிய கண்கள் கசிந்தன.

நாகராஜனின் பிணத்தை இடுகாட்டிற்கு ஏற்றிச்செல்லும் வரையில் அவ்வீட்டில் இருந்தார். கடனடைப்பதற்கான சாத்தியங்களைத் தேடும் முயற்சியில் அடுக்கடுக்கான தோல்விகள். இடையிடையே தன் செயல்களுக்கான அர்த்தம் தேடும் மனதை சபித்தார். எதற்குதான் அர்த்தம் இருக்கிறது எனும் சிந்தனை இடைவெட்டியது. அர்த்தம் எனும் சொல்லின் சிந்தனை அந்த நொடி வரையிலான வாழ்க்கையை அர்த்தமிழக்கச் செய்தது. தோல்வியின் சாயலைச் சுமந்தவராய் வீடு திரும்பினார்.

இரவு கவியத் தொடங்கியிருந்தது. நகரம் வெளிச்சத்தால் தன்னை நிரப்பிக்கொண்டது. வீட்டின் அருகாமையில் இருக்கும் மலை எப்போதையும் விட பேருருவம்  அடைந்ததாய் உணர்ந்தார். ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய உடன் மலையைப் பார்த்தவண்ணம் சிலைபோல நின்றார். நாகராஜனின் நினைவு மலைக்கு இணையாக மனதில் குவிந்தது. அழுகை அடக்கவியலாத விதத்தில் வெளியேறியது. வேகமாக நடந்து வீட்டிற்குள் தன்னை அடைத்துக் கொண்டார். தேம்பித்தேம்பி அழுதார்.

பத்து மணிவாக்கில் குளித்து புத்துணர்ச்சியடைந்தார். எதையோ நினைவு கொண்டவராய் மொட்டை மாடிக்கு சென்றார். இருளின் வழியே மலையைப் பார்க்க முயன்றார். இடைவெட்டாய் மனைவியின் நினைவு. அன்று காலை மனைவியின் புகைப்படத்திற்கு வைக்க மறந்த ரோஜாவின் நினைவும் உடன் எழுந்தது. பிரீட்ஜில் இருந்த கடைசி ரோஜாவை புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும் ஆணியில் வைத்தார். உடுத்தியிருந்த அனைத்து உடைகளையும் களைந்தார். அனுதினமும் சுத்தப்படுத்தி மட்டுமே வைக்கும் மெத்தையின் மையத்தில் படுத்தார். தலைமாட்டில் நாகராஜனுக்கு கொடுக்க வேண்டிய பதினான்காயிரத்து ஐநூறு ரூபாயை வைத்தார். மார்பின் மீது கைகளை கோர்த்துக்கொண்டு விஜயகுமார் கண்ணயர்ந்தார்.

கிருஷ்ணமூர்த்தி
[email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here