கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

1

லும்பர்கள்-2

ஈர ஜெர்கின்..
*
பாழ் முகம் தரித்த கருநிற நீரில்
பாதங்களோடு இழுபடுகின்றன நகரின் ஜல்லி பெயர்ந்த முதுகுத் தண்டுவடங்கள்
கழன்று மிதந்தோடும் ரப்பர் செருப்புகளின்
பாதை
வேறெங்கோ சுழித்துக்கொண்டு
கசடுகளை கைப்பிடித்து குதூகலிக்கிறது
மழை சொட்டும் சிறுவட்ட அலைகளின் விளிம்பில்
விரலளவு தவளைக் குஞ்சுகளின் குதியாட்டம்
நீந்துவதும் சொற்பத் தரை மேட்டில் துள்ளுவதுமான
ரெட்டை வாழ்வின் சாத்தியங்களாகி
நெளியும் மனித பிம்பங்களுடைய போக்கின் மீதொலிக்கிறது
சின்னஞ் சிறிய கர்ர்ர்ர்ரரக்க்
திரும்பிப் பார்
அப்பனே
இன்னுமொரு கர்ர்ர்ரரரக்க்க்

*

அப்படியும் கூட..

பேயாட்ட காற்றெதுவும் இல்லை
பெரும்பேச்சின் தொடர் ஊதலில் காதுவிடைத்த நாய்கள்
போன மழைக்கு மீந்த இடிபாடுகளுக்குள் பதுங்கின
சிறுபாலத்தையும் மூழ்கச் செய்தபடி புரண்டோடும் கழிவுகளை கரைமீறி
திருப்பிவிட்ட இன்னுமொரு நகரம்
வேறொரு திசையை காபந்து பண்ணிக்கொள்கிறது
தற்காப்பென அளந்து
பெருவிரலில் தொடங்கி மெல்ல இடுப்புவரை உயரும் நீர்மட்டத்தை
முடிவு செய்திருக்கிறார்கள் யார்யாரோ எவ்வெப்போதோ
முன்னுதாரணங்களை நகைமுரண்களை புள்ளிவிபரங்களோடு
சூடம் ஏற்றி திறந்துவிட்ட கனஅடிகள்
அஞ்சாயிரம்
பத்தாயிரம்
பதினஞ்சாயிரம்
நடுவிலே ஒரே ஒரு பிம்பிலிக்கா பிலாப்பி

*

Survival of the Fittest..

நுண்ணுயிர்களின் பிழைப்புவாதம் குறித்து மணிக்கணக்கில்
பேசிக்கொண்டிருந்தோம் நள்ளிரவில் அலைபேசியில்
அவசரமாய் மூத்திரம் பெய்ய உள் படியிறங்கி பாத்ரூமுக்குள் நுழையும் பொருட்டு
கதவைத் திறந்தால் பாத்ரூமே பெய்துகொண்டிருந்தது
வெளிச்சாக்கடையை
கரப்பான்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டின் மூடிகளை
ஆராய்ந்தபடி நீண்ட மீசைகளைக் கொண்டு எதிர்காலத்தை அளந்தபடி
பூரான்களுக்கு நீச்சல் தெரிந்திருக்கிறது
முனைக்கு தலா ஒரு தலையுள்ள மண்புழுக்களின் முடிவுகள் எப்போதும் குழப்பம் மிக்கவை;
அதனாலென்ன டைல்ஸ் சுவற்றின் பூக்காம்புகளை பற்றிக்கொண்டு நெளிந்தபடி நக்கல் செய்கின்றன
ஃபிரஷ்ஷாக பொரிந்துவிட்ட முட்டைகளின் தயவில் நம்பமுடியாத அளவில்
இத்துனூண்டு தவளைக் குஞ்சுகள்; தவளைக் குஞ்சுகள்
வெளியே மழை ஓங்கி பெய்தால் பதிலுக்கு உள்ளே சாக்கடையை பெய்கிறது பாத்ரூம்
சிலந்திகள் மொத்தமும் உட்கூரைகளில் மேலும் மேலும் நூலாம்படையை
உற்பத்தி செய்கின்றன; பல்லிகளின் உருளும் சாம்பல் விழிகளில் நம்பிக்கை இழந்த சிலந்திகள்
அர்த்தம் நலிந்த கொசு பேட்டை மின்சாரம் சப்ளை தொலையவிருக்கும் ஹோல்டரில்
பத்திரமாக சொருகி வைக்க வேண்டும் முதலில்;
கொலையெல்லாம் பிறகு

*

சரி சரி போங்க ஸார்..

சாலை விளிம்புகளில் பொக்லைன்கள் வாரிக்கொட்டிய சாக்கடைக் கசடுகளை
ஏளனமாக பார்த்தபடி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது கூவம்
அதை அள்ளிக்கொண்டு போக ஆறு டயர்கள் உள்ள மஞ்சள் பூதங்கள் வரப்போவதில்லை
அடுத்த மழையில் கசடுகள் தாமே கரைந்து மீண்டும் தன்னிடமே வந்துவிடும் என
நதி அறிந்து வைத்திருக்கிறது ஐம்பதாண்டு காலமாக
கரோனாவின் சம்பிரதாய முகம் அணிந்த மாஸ்க்குகள் பார்வையிடுகின்றன
மூன்று லேயரில் சீராக வடிகட்டப்படும் மூச்சில் கலந்திருக்கிறது
சமூக அம்சத்தின் மேடு பள்ளங்கள்
மற்றபடி அறிக்கைகள் நலத்திட்டங்கள் கவனப்படுத்தல்கள் மீடியா பிளிறல்கள்
சர்வே அலறல்கள் கூடவே போர்க்கால நடவடிக்கைகள் நடவடிக்கைகள் நடவடிக்கைகள்;
பல்டி அடிக்கும் வேடிக்கைகள்

*

கிளிஷே அல்லாத கிளிஷே..

இழப்பின் துயரில் எஞ்சும் முன்பகலை மோதி திறக்கும் மனத்தின் சாம்பல்நிற கண்கள் யாசிக்கின்றன
நிம்மதியை
தூக்கத்தை
ஊறி நசிந்த நம்பிக்கையை
பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் உண்மைகளை
மினுக்கி மினுக்கி இருண்டுகொள்ளும் குழல் விளக்கின் பழுப்பு நிறத்தை
வந்துவிட்டார்கள் க்ளோரின் பொடிகளைத் தூவியும் டெங்கு எச்சரிக்கையை குதப்பியும்
ஓர் இரவின் பொருட்டு நழுவிட வாய்ப்பற்ற கனவுத் துருத்திகளை மூடிக்கொள்கின்றன
நாசிவழியில் மூளைக்கு ஏறும் க்ளோரின் பொடிகள்
‘ஜல்தியா மாஸ்கை போடு சார்’ ‘ஜல்தியா மாஸ்கை போடு சார்”

*

அதாவது..

நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம் பின்பற்றும்படி
நாங்கள் பின்பற்றப்பட்டோம் அறிவுறுத்தும்படி
பின் நாங்கள் பட்டோம்
உறுத்தும் அறிவு
பற்றும்படி

*

சமூக இடைவெளியின் ஏரி வாயா.. குளத்து வாயா..

இடைவெளிகளில் ஈரம் சொட்ட கழிவு நாற்றத்துடன் குறி விறைத்திருக்கும் சமூகத்தை
ஏன் அவ்வப்போது விசிட் அடித்து ஆட்டிப்பார்க்கிறீர்கள் ஐயன்மாரே
வெள்ளுடுப்பின் ஓரங்களில் பறக்கிறது பாரும் கோட்டையில் கொடி கட்டின கரை
சந்துகளில் நீங்கள் புதுரோடு போடுகிறீர்களோ இல்லையோ தயவுசெய்து
நிறைய ஸ்பீடு பிரேக்கரையாவது கட்டி வையுங்கள்
அடுத்த கனமழைக்கு பத்திரமாக அவற்றில் ஆங்காங்கே ஏறி நின்றுகொள்வோம் ஐயன்மாரே

*

தொல்நிலை..

திடுமென்ற இடி பளீரென்ற மின்னல்வெட்டு; இதற்கெல்லாம் அறுந்து விழுந்துவிட மாட்டேன்
தேவைப்பட்டால் மொத்தமாக சாய்ந்துவிடுவேன் என்கிற நம்பிக்கை அளிக்கிற
மின்கம்பத்தின் அருகே இடுப்பில் ஒரு கையூன்றி நிற்கிறான் சிறுகூந்தல் வளர்க்கும் கவிஞன்
இதமான சிகரட்டின் நுனி கங்கு ஒளிர்கிறது இருட்டில்
அணைந்துவிடுகிற ஒவ்வொரு இழுப்புக்கும் க்ளிக்குகிறான் ஊதா நிற லைட்டரை
‘ஒரு வார்த்தைய தான் வந்து தொலைஞ்சா என்ன சனியனே’
சுண்டி எறிந்த கோபத்தில் நத்தையின் வீட்டுக்கூரையை மினுக்கென வெளிச்சமாக்கி புதருக்குள்
மாயமாகிறது வார்த்தை

*

அம்மா சத்தியம்..

கெட்டுப் போய்விடாமல் ரீ-சைக்ளிங் பிளாஸ்டிக் பைகளில் சிரத்தையாக ஒளித்து வைத்திருக்கும்
எங்கள் காய்கறிகளை குளிரூட்டி காபந்து செய்கிற குளிர்சாதனப்பெட்டியின் மீது
சத்தியம் செய்துகொடுங்கள்
சந்தைகளின் பெருக்கத்துக்குரிய உத்திரவாதத்திற்கு இன்னும் இன்னும்
கன்னங்கரேலென அதே தரத்தில் சாக்கடைகளை உற்பத்தி செய்வோம் என
சத்தியம் செய்துகொடுங்கள்

*

Mammals..

மல்டிபிள் காம்புள்ள பன்றி ஒரு பாலூட்டி; சாக்கடை போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள நாய் ஒரு பாலூட்டி; தெருவின் இருள்மூலை போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள பூனை ஒரு பாலூட்டி; கைவிடப்பட்ட எதுவும் போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள எருமை ஒரு பாலூட்டி; கழிவுச் சதுப்பு போக்கிடம்
ரெட்டை காம்புள்ள பாலூட்டி ஒரு பழைய காடு;
குருதி ருசி மறவா உறுமல் சத்தம் ஓய்ந்திடா பழங்காடு

***

கவிதைக்காரன் இளங்கோ
[email protected]
சென்னை.

1 COMMENT

  1. முகமூடி தரிக்காத குரல் பத்தும் கண்ணில் நிறுத்துகிறது காலத்தை..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here