Thursday, April 18, 2024

கர்ண நாதம்

கர்ண நாதம்
(ஸ்ரீதர் நாராயணன் எழுதிய அம்மாவின் பதில்கள் குறித்து அம்பை எழுதிய மதிப்புரை)

பெரும் ஓசையுடன் ஒன்று கிளம்பும்போது கொஞ்சம் பின்வாங்கவேண்டியிருக்கிறது. அந்த ஓசையை உள்வாங்க. அந்த ஓசையுடன் வருவதைச் செவிமடுக்க. அதில் கலந்திருப்பதைப் புரிந்துகொள்ள. அதில் இழைந்துவரும் ஒலிநயங்களை வேறுபடுத்திப் பொருள்கொள்ள. அப்படிச் செய்யாவிட்டால் அது வெறும் ஓசையாகவே நின்றுவிடும். ஸ்ரீதரின் கதைகளில் ஏகப்பட்ட ஓசை. விடாத பேச்சொலி. சொற்களின் பிரவாகம். நகர வாழ்க்கை மற்றும் புறநகர் வாழ்க்கையின் நடைமுறை ஓசைகள். விடாது ஒலித்து சேதிகள் வருவதைச் சொல்லும் கைபேசி; ஏழரையைக் கூட்டுபவர்கள் பேச்சொலி; சாபமிடும் பெண்களின் ஆங்கார ஒலி; ஒப்பாரி ஒலி; லாரியும் பேருந்துகளும் ஆட்டோக்களும் தடம் புரண்டு ஓடும் சத்தம்; சிகரெட் பற்றவைக்கும் மென்னொலி; தழுதழுத்துப் பேசும் ஒலி; கேவல் ஒலி; தெருவோரம் போய் பிளாட்பார க்ரில்லைப் பிடித்துக்கொண்டு ஓங்கரித்தபடி வரும் வாந்தி ஒலி; கல்யாணத்தில் எல்லோரும் பேசும் சளசளவென்ற பேச்சு; வாள்வாள் என்று அழும் பிறந்த குழந்தையின் அழுகையொலி; பூஜைச் சடங்கொலி; நெல்லைத் தமிழில் ஏச்சுப்பேச்சு; கண்ணாடித் தம்ளர்களில் ஃப்ரூட் மிக்சர் ஊற்றும் ஒலி; நார்மடி உடுத்தி வெடுக்வெடுக்கென்று பேசும் சரசம்மா பாட்டியின் பேச்சொலி; அவளைப் பற்றியே விடாமல் பேசும் அவள் வயதான மகனின் புலம்பலொலி; பலரால் சித்திரவதை செய்யப்படும் ஒருவனின் அலறல்கள்; இறந்த மகனின் சடலத்தைத் தேடிப்போய் அவன் சடலம் கிடைக்காதலால் எழும்பும் ஒரு தாயின் ஓங்கியெழும் அழுகையொலி. இப்படித் தொடர்ந்து வந்து தாக்கும் சத்தங்கள். சற்றுத் தடுமாறிப்போகும்போது பச்சைப்பசேல் என்ற புல்லில் மறைந்து கிடக்கும் பச்சைப் பாம்பு கண்ணில் படுவதுபோல் கதைகளினூடே ஓடும் மௌனத்தின் தடங்கள் கண்ணில் படுகின்றன. அந்தத் தடங்களில் நடக்கும்போது மெல்ல மெல்ல ஒவ்வொரு கதையும் விரிந்துகொண்டேபோய் எட்ட முடியாத வெளிகளுக்கு இட்டுச்செல்கிறது. எல்லா ஒலியையும் உள்ளடக்கிக்கொண்டு ஒலிக்காமல் கிடக்கும் வெளிகள். அந்த வெளிகளில் நின்றுகொண்டுதான் ஸ்ரீதர் கதை சொல்கிறார்.

சுதந்திரமான தாயின் பல பதில்களைத் தன்னுள் புதைத்துவைத்திருக்கும் மகன். எட்வர்ட் மூங்க்கின் ஒலியில்லாத ”ஓலம்” ஓவியத்தின் பௌதிக உண்மையாய் அவன் வாழ்வு. செயற்கை ஃபைபர் காலில் மறைந்துள்ள ஜன்மக் கணக்கு. தரகு பேசப்படும் தனத்தின் பேச்சு எழும்ப வகையில்லா மௌனம். உற்றுக் கேட்பவர்கள் செவிகளுக்கு மட்டுமே கேட்கும் உடைத்துக்கொண்டு வரும் வெள்ளத்தில் கலந்திருக்கும் பல ஓசைகள். பூவாசம் முகர முடியாத ஒருவனின் முரட்டுத்தனமும் அவன் மனைவியின் உடலில் உள்ள சிகரெட் சூட்டுத் தழும்புகளும் அழிக்கமுடியாதபடி அவளுள்ளே மறைந்திருக்கும் பேசப்படாத காதல். இருபதாண்டுகளுக்குப் பின் மொட்டாய்க் கிடக்கும் கனிவை யதார்த்த உலகின் நடவடிக்கைகளில் பூட்டி வைக்கும் மௌனம். பத்திரிகை திருடும் கள்ளம். பழங்கால வீட்டின் ஓர் உள் அறையின் மூலையில் பல ஆண்டுகளாக கடன் சிட்டையுடன் விழுந்து கிடக்கும் அடகு வைத்த சவரப் பெட்டி; அத்துடன் பேச்சற்றுப்போன ஒரு கிழவர். இழவு வீட்டில் பதினான்கு வயதில் விதவையான நார்மடி உடுத்திய பெயரற்றுப்போய் விட்ட சரசம்மா பாட்டியைப் பற்றிப் பலரும் பேசும்போது கொடுங்களூர் ரெவென்யூ ஆபீஸில் தாழம்பூவில் மல்லிகைச் சரம் கோர்த்துப் பூ தைத்த பின்னலுடன் இருக்கும் அவள் பதினான்கு வயது புகைப்படத்தைத் தன் பர்ஸில் எப்போதும் வைத்திருக்கும் ஒருவனின் அமுங்கிப்போன காதல். இத்தனை மௌனங்களையும் நத்தைக்குள் இருக்கும் முத்துபோல் சுமந்துகொண்டு கடலாழத்தில் வைக்கும் கதைகள்.

இந்தக் கதைகளின் மௌனத்தில் அன்றாட வாழ்க்கையை உரக்கவும் மெல்லவும் பேசியபடி நகர்பவர்கள் சாதாரண மனுஷிகள்; ஆண்கள். எந்த அசாதாரணத் தன்மையும் இல்லாத, பேருந்திலும் ரயிலிலும் கடைகண்ணிகளிலும் ஓட்டல்களிலும் திருவிழாக்களிலும் திருமணங்களிலும் வீட்டில் செய்யும் வைபவச் சடங்குகளிலும் அன்றாடம் நாம் பார்க்கும் சாதாரண நபர்கள். குடிகாரக் கணவனின் பொறாமையையும் சொல்லம்புகளையும் தாங்கமுடியாமல் அவளுடன் வரும் தேர்வைச் செய்யமுடியாத பதிமூன்று வயதுப் பையனை விட்டுவிட்டுத் தைரியமாக வெளியே வந்து தனக்கென்று ஒரு வாழ்வு அமைத்துக்கொண்டு எல்லோர் வாய்க்கும் அவலாகி மெல்லப்படும் கல்யாணி சாரங்கன் உலகெங்கும் உண்டு. அவர்கள் கதைகள் அவர்கள் தரப்பிலிருந்து அவர்கள் மகன்களால் அநேகமாய்க் கூறப்படுவதில்லை. இரு மனைவிகளை மணந்த ஒருவர் விட்டுச் செல்லும் ஜன்மக் கணக்கை இரு சகோதர்கள் வெளிப்படையாகப் பேசாமலேயே தீர்த்துக்கொள்ளும் சிகரெட் புகை கப்பிய கதையில் வரும் துரையும் குமரப்பெருமாளும் போர்டுகள் எழுப்பும் வேலையின் உரத்த உரையாடல்களும் உத்தரவுகளும் வசவுகளும் விழும் இடத்தில் இருப்பவர்கள்தாம். சாபமிடும் பெண்களும் புரோட்டாக் கடைகளும் ஆஃபாயில் ஆர்டர்களும் ரௌடிகளும் சூழ்ந்த அவர்கள் வாழ்வில் எல்லாவற்றையும் ஆறப்போடச்சொல்லும் விடாமல் புகைபிடிக்கும் தயாளன்களும் இருப்பதுதான் விசேஷம்.

சேட்டு ஒருவர் நடத்தும் ஆயத்த உடைகள் விற்கப்படும் கடையில் வேலை செய்யும் ஒரு பெண்ணும் அவள் பெற்றோர்களும் வாழ்க்கையில் எவ்வளவு உரிமைப் போராட்டம் செய்ய முடியும்? சேட்டு அந்தப் பெண்ணை உடல்ரீதியாக உபயோகித்துக்கொண்டால் அவள் டாக்டரிடம் கூட்டிப்போகப்படுவாள். அவளுக்கு ஒன்றும் ஆகாது. அவள் தரகு பேசப்படும் ஒரு பண்டம். கிடைக்கக்கூடியது ஐம்பதாயிரம் ரூபாயும் அப்பாவுக்கு வேலையும் வெகு தூரத்தில் இருக்க ஒரு வீடும் அவள் வேலை போய்விடாது என்ற உறுதிமொழியும் கூடவே ஒரு தயார் உடைப் பொட்டலுமும்தான். இதைத் தெரிந்துகொண்டும் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கும் சரியான அரசு வேலை கிடைக்காத கருணாகரன்களும் இருப்பதுதான் ஏதோ வகையில் வாழ்க்கையின் கொந்தளிப்புகளைச் சமனப்படுத்துகிறது. காளான்களாக முளைத்திருக்கும் கணினி மற்றும் ஜெராக்ஸ் கடைகளில் புத்தக அட்டை, பக்க வடிவமைப்பு கற்றுக்கொண்ட மாலினி ஏமாந்துபோனபோதுகூட அவள் ஏமாற்றியவனைப் பார்த்து இரண்டு வார்த்தை கேட்கத் துரைப்பாக்கம்வரை தன்னுடன் வர அழைப்பது வழவழப் பக்கங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டு, அம்மாவின் வசவுகளைக் கேட்டுக்கொண்டு, வேலையில்லாமல் ஊர்சுற்றும் காசியைத்தான். அவளுக்கு வேறு கதியில்லை. கண்ணகி மாதிரி அவளால் நீதி கேட்கவும் முடியாது. காசி கூறுவதுபோல் “பஜாரி மாதிரி” செருப்பால் அடிக்கத்தான் முடியும் அவளால். தெருவோரத்தில் வாந்தி எடுக்கும்போது அதை அருவருப்புடன் பார்ப்பதும் அந்தக் காசிதான். ஆனால் அவளை வீடுவரை கொண்டுவிடும் அளவு அவனிடம் பரிவு இருக்கிறது. அவள் தோழமையுடனும் நன்றியுடனும் அவனைப் பார்த்துப் அரைப்புன்னகை செய்யலாம். ஆனால் அந்தப் புன்னகைக்கு எதிர்காலம் கிடையாது. மனத்தினுள் உள்ள ஆற்றாமையும் ஆத்திரமும் அழுகையும் உடைந்து வெள்ளமாய் வெளியே வரும்போது அந்த ஓசையும் மாலினிக்கு மட்டுமானதுதான். கதையின் முடிவில் அவனுடைய அம்மா மாலினியுடன் கல்யாணப் பேச்சை எடுக்கும்போது அவளுக்கு வெடுக்கென்று பதில் கூறிவிட்டு “ஒரே கசகசன்னு இருக்கு” என்று கூறிவிட்டுக் குளிக்கப்போகும் காசிதான் சராசரி ஆண். இவ்வளவையும் கூறும் கதையின் உடைநீர் ஓசை, கதையில் வரும் ஒரு பாத்திரத்தின் அன்றைய மனம் உடைந்து வெள்ளம் பெருகும் ஓசை மட்டும் இல்லை. அது யதார்த்த வாழ்க்கையின் அன்றாடக் கசடுகளையும் கழிவுகளையும் அவலங்களையும் அவமானங்களையும் சேர்த்துக்கொண்டு வரும் வெள்ளத்தின் ஓசை. செவி இருப்பதாலேயே கேட்டுவிடும் என்று கூறமுடியாத ஓசை.

பூ வாசமாய் ஒரு சின்னப் பையனின் மனத்தில் நிலைத்துவிடும் ஒரு டீச்சர் அவன் மனத்திலாவது தான் “கறை படாதவளாய்” இருக்கவேண்டும் என்று அவன் வளர்ந்தபின் அவனிடம் கூறுவது கண்ணில் படாத மெல்லிய பட்டு இழையாய் அவர்கள் உறவு இருப்பதைக் காட்டும் கணம். அகஸ்மாத்தாக இசைக்கருவி ஒன்றில் கைபட்டு அதிலிருந்து கிளம்பும் கலவையான ஒசைபோல் எழுந்து மறையும் கணம் அது. கதையின் வெகு ஆழத்தில், சிகரெட் நாற்றத்தின் இடையே புறங்கைச் சூட்டுத் தழும்புகளை மீறி வெண்தாமரையிதழில் டயமண்ட் பதித்த மோதிரத்துடன் மின்னிக்கொண்டு கிடப்பது. மேலே எல்லோரும் பார்த்துப் பூபோட்டுக் கும்பிடுவது படுக்கப்போட்ட பெரிய கல்தான். பாதாளியம்மன் இருப்பது சாலையின் கீழே.

ருமைத் தாத்தா ஒருவர். பாப்பாவின் செல்லத் தாத்தா. அவள் மனம் முழுவதும் வியாபித்திருப்பவர். பாப்பாவின் குழந்தைப் பருவ நினைவுகளில் முக்கியமானவர். வட்ட்டிக்கடை வைத்திருக்கும் தாத்தா. தாத்தாவுடன் ஒன்றிவரும் பிம்பம் தாத்தாவுக்கு வழக்கமாக சவரம் செய்ய வரும் இன்னொரு கிழவர் வேலு. ஏழை. பாட்டியிடம் பழந்துணி கேட்பவர். மிகவும் வயதானதால் வருவதை நிறுத்தியவர். தாத்தா சாகக் கிடக்கிறார் வெளுத்துப்போன தலைமுடியும் மழிக்காத முகமுமாய். முகம் மழிக்கத் தேவையானவற்றைத் தேடத் தொடங்கும்போது நல்ல கூர்மையான கத்தி கிடைக்கிறது. அத்துடன் வேலுவின் சவர டப்பாவும். கூடவே முப்பது ரூபாய் முதலும் 12 ரூபாய் வட்டிக்குமான முறியடிக்கப்பட்ட சிட்டை. இப்படித்தான் வீழ்கிறார்கள் குழந்தைகள் மனத்தில் விச்வரூபத்தில் இருக்கும் சில பெரியவர்கள். கதை தாத்தாவைப் பற்றியது அல்ல. அந்தச் சிட்டை பாப்பாவின் மனத்தைத் தைத்து அதில் அவர் சிறுத்துப்போவதைக் குறித்தது.

கான்சருக்குப் பின்னால் வந்த மறதி நோயுடன் போராட வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் நினைவுகூர்ந்து, விடாமல் பேசும் பெண். ”இது என்னடா பாவம் செஞ்சது? நாந்தான் ஏழு ஜென்ம பாவத்துக்கும் இப்படி கீமோ சோமோன்னு வெந்துபோறேன். இதையும் சேர்த்து என்னோட சுழல்ல அழுத்தி சாகடிச்சுருவேன் போலிருக்கே? எதாச்சும் சினிமா படத்துல வர்ற மாதிரி ஒரே நைட்ல ‘ட்க்’னு ப்ரக்னென்ட்டா ஆயி குழந்தை பெத்து இது கைல கொடுத்திட்டு அப்புறமா செத்து போயிடறேண்டா. புள்ளைங்கன்னா அவ்ளோ இஷ்டம்ப்பா இதுக்கு” என்று தன் கணவன் பற்றிக் கூறித் தாயாக ஆசைப்படும் பெண்ணும் அவளுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு முதியவளும். இவர்களுடன் கதையில் கண்ணுக்குத் தெரியாத வேர்ப்பகுதில் இருப்பது பள்ளிப் பருவத்தில் பொங்கல் வாழ்த்து அனுப்பி பச்சை மையில் கையெழுத்திட்ட ஒருவன் மனத்தின் காதல்போன்ற இளக்கம்.

பதினான்கு வயதில் வயிற்றில் எட்டுமாதப் பிள்ளையுடன் விதவையானவள் வேறு மாதிரித் தாய். நார்மடி உடுத்தியிருப்பவள் பெயர் என்னவோ சரசம்மா. ஆனால் ஒரு காலகட்டத்தில் ஊருக்கே பாட்டியம்மா. ”ஊரையே வறுத்து வாயில் போட்டுக்கொள்ளும் சாமர்த்தியம்” உள்ளவள். சொத்து விவகாரம், ஆண்டிபோல் வாழும் மகன், குழந்தைக்காக ஆசைப்படும் பேத்தி, “டோப்” சாப்பிடும் மருமகன், அவளிடம் பலமுறை “துன்னூறு” வாங்கியிருப்பதைக் கூறி அவள் எவ்வளவு பெரிய ஆத்மா என்று பேசும் ஒரு கடைக்காரர் இவர்களுக்கு சரசம்மாவை நார்மடிப் பாட்டியாகத்தான் தெரியும். ஆனால் கதையில் நேரிடையாக வராமல் எங்கோ கொடுங்களூரில் இருக்கும் ஒருவர்தான் அவளைப் பதினான்கு வயதுக் குமரியாக நீள் முடியுடன் பூ தைத்த பின்னலுடன் பார்த்த ஒரே நபர். அந்தப் பதினான்கு வயதுப் பெண்ணை வாழ்க்கை என்ன செய்தது என்பதுதான் கதை. அவளைப் பதினான்கு வயதுப் பெண்ணாகவே தன்னுள் இருத்திக்கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றியதும்.
திடலில் கடைகளில் முறைவாசல் செய்து தண்ணீர் பிடித்துவைக்கும் வேலை செய்யும் செந்தாழை இன்னொரு தாய். ரௌடிக் கும்பலில் இருக்கும் ஐட்டங்காரனின் தாய். ஏதோ அடிதடி சண்டையில் அவன் கொலைசெய்யப்பட்டுவிட்டான். அவள் அவன் உடலை அடையாளம் காட்ட வேண்டும். போலீஸ்காரருடன் ஆட்டோவில் போகும் வழியில் பச்சைப்பட்டு கட்டி நிற்கும் மந்தையம்மனுக்குக் கற்பூரம் ஏற்றி அவளிடம் கண்ணால் சொல்லிக் குமுறவேண்டும். கட்டைவிரல் சூம்பிய மகனின் குழந்தைப்பருவத்தை நினைவுகூரவேண்டும். இப்போது ஐட்டங்காரனானதை நினைத்துப் புழுங்கவேண்டும். உடல்கள் கிடத்தப்பட்டிருக்கின்றன பிணக்கிடங்கில் நாற்றமடித்தபடி. இன்னும் ஒரே ஒரு உடல்தான் அடையாளப்படுத்தப்படவில்லை யாராலும். பச்சைப் போர்வை போர்த்திய உடல். போர்வையைத் திறப்பதற்கு முன்பே அழுகை. திறந்தபின்னும் ஓங்கிக் குரலெடுத்து அது அவள் மகன் இல்லை என்று நிம்மதியில் அழுகை. அது அவள் மகனாக இல்லையே என்ற நினைப்பில் அழுகை. இப்போதுதான் நல்ல வார்த்தை அவனைப் பற்றி இரண்டு கேட்டிருந்தாள். இனி திரும்பவும் ஐட்டங்காரன் அம்மாதான். இன்னும் யாரும் வந்து பார்த்திராத யார் பெற்ற மகனோ என்ற இரக்கத்தில் அழுகை. இவ்வளவும் கலந்த அழுகை. எத்தனையோ அம்மாக்களை நினைவுபடுத்தும் அழுகை.

இத்தனையும் “உடைத்துப்போட்ட வெண்டைக்காய் மாதிரி இருப்பார்”, “ஓணானுக்கு உறை மாட்டிவிட்ட மாதிரி”, “தரத்துக்கு ஏற்ற தரகு வடியலுக்கு ஏற்ற விறகு”, “பொத்தி வச்ச பொண்ணு”, “குத்த வச்ச பொண்ணு”, போன்ற அன்றாட மொழியில் நுணுக்கமாக எழுதப்பட்ட கதைகள். எல்லாக் கதைகளிலும் அவற்றின் போக்கு ஆச்சரியத்தை அளிக்கும் அல்லது உலுக்கிவிடும் முடிவு வரப்போகிறது என்று சூசகமாக காட்டிவிடுவது உண்மைதான். ஆனால் அது எப்படிப்பட்ட ஆச்சரியம் எப்படிப்பட்ட அதிர்ச்சி என்பது கதை முடிவில்தான் தெரிகிறது. அது ஒருவகையில் கதை சொல்பவரின் வெற்றிதான்.

ஸ்ரீதரின் கதைகள் வாழ்க்கையின் மிதந்துபோகும் பல கணங்களையும் அவற்றில் தொக்கியிருக்கும் உறவுகளையும் அவற்றினுள் உள்ள ஒலிகளையும் மௌனங்களையும் சுமந்துகொண்டு இருக்கின்றன. படிக்க படிக்க அவை அனைத்தும் எழும்பி வந்து மெல்ல மெல்ல செவியைத் துளைக்கும் கர்ணநாதம்போல் அதிர ஆரம்பிக்கின்றன.

அம்பை
மும்பாய், 6 டிசம்பர், 2019

***
அம்பை – சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். மும்பையில் வசித்துவரும் இவர். ஸ்பேரோ எனும் சமூக அமைப்பின் நிறுவனர். பனிரெண்டுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. 1966லிருந்து இன்று வரை உற்சாகத்துடன் எழுதி வருகிறார். அண்மையில் இவர் படைப்புகளின் தாக்கம் பெற்ற திரை ஆக்கங்கள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular