கர்ச்சல்

0

கார்த்திகேயன் புகழேந்தி

ஊரடங்கின்பொழுது சென்னையை வந்தடைந்த பெயர் தெரியாப் பறவைகளையும் விதவிதமான பூச்சிகளையும் இன்ஸ்டாவில் படம்பிடித்துப் போட ஆரம்பித்தார் பிரபல பல் மருத்துவர்.  சிட்டியின் பரபரப்பான இடத்தில் சொந்தமாக ஒரு கிளினிக். தரைத்தளத்தை பேக்கரி வைத்திருந்த ஒரு மலையாளியிடம் வாடகைக்கு விட்டிருந்தார். எப்போதும் முதல் மாடி பால்கனியில் கடை வாசலுக்கு நிகராகக் கூட்டம் மொய்க்கும். அவ்வளவு கைப்பக்குவம்  இருந்தாலும் பணம், பதவி எல்லாம் மரத்துப்போயிருந்தது அவருக்கு. அதற்குக் காரணம் எவ்வளவு நுணுக்கமான அறுவைச்சிகிச்சை எல்லாம் செய்தாலும்  சொந்தபந்தங்களிடையே பல்லு புடுங்குற வேலைதானேன்னு ஒரு எளக்காரம். விசிட்டிங்க் புரஃபஸராப் போன காலேஜ்லையும் சமயத்துல டிபார்ட்மெண்ட் கணக்கு வழக்கெல்லாம் பார்க்க சொல்லிடுவாங்க. ’கோட்டா மட்டும் இல்லன்னா கம்பவுண்டராக்கூட ஆகியிருக்க மாட்டான்’ என்று டாக்டர் தொழில் என்னவோ தங்கள் பரம்பரை சொத்து என்பதுபோல் அவர் காதுபடவே கலாய்ப்பார்கள்.

இந்தக் கொரோனா காலத்துல சாதாரண சளி, இருமல்னாலே கார்ப்பரேஷன் புடிச்சிட்டு போய்டுவானோங்கற பயத்தினாலயோ என்னவோ எவனும் பல்லு வலிக்கிதுன்னு வரவே இல்லை. பேக்கரியின் கூட்டம் கூடியதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். காலேஜும் மூடியாச்சு. அதனால் க்ளினிக்கிற்கு விடுப்பு விட்டுவிட்டார். அப்போதுதான் தன் கல்லூரி காலத்தில் மூட்டை கட்டி வைத்து விட்டிருந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபி கனவு மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது.  தன்னைவிட மகன் பறவைகளப் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டவே அரசு ஊழியரா இருந்து ஓய்வுபெற்ற அவரோட அப்பா மண்டைக்குள் அடிச்ச அதே மணி அவர் மண்டைக்குள்ளும் அடிக்க ஆரம்பித்தது. ’இவனுக்கு ஜூவாலஜி வரும்போல. எப்படியாச்சும் என் மகனை டாக்டராக்கிடணும்.’

ஊரடங்கு தளர்ந்ததும் ஒப்பந்தப்படி அருங்காட்சியகத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். முதலில் அவர் சொல்லும் இடம், பிறகு அவன் சொல்லும் இடம். இதுதான் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம். உள்ளே நுழைந்ததும் அந்த பிரம்மாண்டமான எலும்புக்கூட்டை பார்த்த மகன் மிரட்சியில் அன்னாந்து பார்த்தான். மெல்ல அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு அவரிடம் கேட்டான், “அப்பா! டைனோசர் கறி ருசி எப்படி இருக்கும்? அதோட ஒரு முட்டைய ஆம்லெட் போட்டாலே  நாம ஃபேமிலியோட சாப்பிடலாம்ல?”

மகனுடைய அறிவுப்பசிக்கு தீனிபோட நினைத்து அவனை அங்கு அழைத்து வந்த அப்பாவுக்கு அவன் இப்படியொரு கேள்வியை முதலில் கேட்டதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.

“லெக் பீஸ் கொஞ்சம் பெருசா இருக்கும். மத்தபடி டேஸ்டெல்லாம் அதுவும் கோழிக்கறி மாதிரிதாண்டா இருக்கும். டிராகன் சிக்கன் எல்லாம் சாப்பிட்டு இருக்கல்ல. அந்த பேர் எப்படி வந்துச்சு?” என்று அவர் சொல்லி சமாளித்து விட்டார். 1800களின் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகுதான் டயனோசர்கள் என்ற தனி இனமே பெயரிடப்பட்டது. அதுவரை எல்லாமே டிராகன்கள்தான். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த பறவைகளில் நெருப்புக்கோழிகள் தான் இன்னும் உயிருடன் இருக்கின்றன. அவற்றின் முட்டைகள் தான் இப்போது இருப்பதிலேயே பெரிது. ஆனால் டயனோசர் காலத்தில் பறக்க முடிந்த அவற்றால் இப்போது உடல் எடை காரணமாக வேகமாக ஓடத்தான் முடியுமே தவிர பறக்க முடியாது. அப்படியொரு விசித்திரமான தலைகீழ் பரிணாமம் நெருப்புக்கோழிகளுடையது. அதனால் அவற்றை ரேட்டைட்ஸ் என்றும் சொல்வார்கள். இப்படியாகச் சென்று கொண்டிருந்த தந்தையின் என்ன ஓட்டத்தை சடாரென குறுக்கிட்டு மகன் கேள்வி கேட்டான்.

“ஏன்பா? டயனோசர்தான் செத்துப்போச்சு. இந்த bird, எல்லாம் இன்னும் zooல இருக்கே. அப்புறம் ஏன் Museumல வச்சிருக்காங்க? இவ்ளோ birds இருந்தும் ஏன் national bird peacock இந்த Museumல இல்ல. அப்ப இங்க இருக்கறதெல்லாம் anti national birdடா?”

அப்பாவிற்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இவன் இந்தக் கேள்விகளையெல்லாம் புரிந்துதான் கேட்கிறானா? அல்லது எதேச்சையாகக் கேட்கிறானா? இவனை வெச்சிக்கிட்டு இனி நியூஸ் சேனல் பார்க்கக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மகனுக்கு விளக்க ஆரம்பித்தார்.

”அப்படி இல்லைடா! ஆஸ்ட்ரிச்ல இருந்து குருவி வரைக்கும் இறகிருக்கும் எல்லா உயிரினமும் பறவைகள்தான். அதை அதுங்க பறக்கப் பயன்படுத்துதுங்களா? நீந்தப் பயன்படுத்துதுங்களா? இல்ல தன் இணையைக் கவர பயன்படுத்துதுங்களா? அடைகாக்க மட்டும் பண்படுத்துதுங்களா? இல்ல எதுவுமே வேணான்னு ஒரு இறகைப் பிச்சு தன் காதையே கொடைஞ்சுக்க பயன்படுத்துதுங்களான்னு பார்த்தோம்னா அது அந்தந்த தட்பவெப்பம், உடல்வாகு, சுற்றுச்சூழல் பொருத்து அதுங்க எடுக்க வேண்டிய முடிவு.  அதுல தேசியப் பறவை ஸ்பெஷல். ஏன்னா அதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. இதோ படிச்சுக் காட்றேன் பாரு”

தொடர்ந்து ஆண்ட்ராய்டைத் துழாவி வாசித்துக் காட்டினார்.

’ஒரு தேசியப்பறவை நாடு முழுவதும் காணப்பட வேண்டும், தனித்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாட்டின் பாரம்பரியத்துடன் அதிக தொடர்புடையதாக இருக்க வேண்டும். மன்னராட்சி முடிந்து அரசாங்கங்கள் உலகெங்கும் நிலைப் பெற்றபோது சின்னச் சின்ன இனக் குழுக்களெல்லாம் சேர்ந்து ஒரே தேசிய அடையாளத்தைத் தழுவின. அந்த வரையறையில் தேசிய கீதம், தேசியக் கொடி என்று ஆரம்பித்து தேசிய விலங்கு, தேசியப் பறவைகளும் அடக்கம். கடும் போட்டிக்குப் பிறகு கர்ச்சல் பறவையைக் காட்டிலும் மயிலுக்கே இந்தியாவின் தேசியப் பறவையாகும் அந்தஸ்து அளிக்கப்பட்டது.’

கர்ச்சல் பறவையா? அது எப்படிப்பா இருக்கும்? மயிலைவிட அழகா இருக்குமா?

“அழகு ஒரு அளவுகோள் இல்ல. மயிலுக்கும் இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கும், பாரம்பரியத்துக்கும் உள்ள தொடர்புதான் காரணம். முகலாயர்களின் மயில்வண்ண அரியணைக்கு முன்னால் கண்ணனின் கிரீடத்தை அலங்கரித்த ஒற்றை இறகிற்கு முன்னால் முருகன் சூரபத்மனை வதம் செய்து அது மயிலாகவும், சேவற் கொடியாகவும் மாறிய கதைய அன்னிக்கு பாட்டி சொன்னாங்கல்ல?”

“ஆமா”

“அப்படிதான் பீக்காக் நேஷனல் பேர்ட் ஆச்சு. அதை யாராச்சும் கொண்ணா அவங்கள ஜெயில்ல போட்டுடுவாங்க. அதனாலதான் அது இங்க இல்ல. புரிஞ்சுதா?”

மீதமுள்ள பதப்படுத்தப்பட்ட அரிய வகை விலங்குகளை, பறவைகளை ஒவ்வொன்றாகக் கடந்து செல்லும்பொழுது அவருக்கு மொகலாய மன்னர் பாபரின் டைரிக்குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. பறக்கும் தன்மையும் கொண்டு அதிக சதைப்பிடிப்புடைய ‘The Great Indian Bustard’ என்று அழைக்கப்படும் இந்திய கர்ச்சல் பறவைகளைத் தான் பாபர் போன்ற மன்னர்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். றெக்கையும், தொடையுமாக எதைக் கண்டாலும் வகைதொகை பாராமல் வேட்டையாடி, சமைத்து ருசி பார்த்த அவர் தன் சந்ததிக்கு உதவுமே என்ற நல்ல எண்ணத்தில் எந்தெந்த பறவையின் எந்தெந்த பாகம் அதிக சதைப் பிடிப்பாகவும், ருசியாக இருக்கும் என்று குறிப்பெடுத்து வைத்திருந்தார். கர்ச்சல் வகையறா பறவைகளின் கறி மட்டும் கால் பகுதியானாலும் சரி, மார்புப் பகுதியானாலும் சரி ருசியில் பேதமில்லை என்றது அந்தக் குறிப்பு.

இன்று இந்தியாவில் 500 மயில்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில்தான் கர்ச்சல் பறவைகள் இருக்கின்றன. அவற்றின் இயற்கையான இருப்பிடங்களான புல்தரைகளும், குறுங்காடுகளும் வடமாநிலங்களிலேயே அதிகம் உள்ளன. ஆகவே அவற்றின் இயற்கை இருப்பிடங்களுக்கான புனரமைப்புப் பணிகள் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன (NEET மையங்களைப் போல). நாளை குஜராத், கர்னாடகமும், மஹாராஷ்ட்ராவிலும் இது விரிவாக்கப்படலாம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் குறைவாகவே கர்ச்சில்களுக்கு உள்ளது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் முட்டையிடும்.  அதனால் இன்னும் 5 வருடங்களில் தன் மகன் வளர்ந்து NEET எழுதும் காலத்தில்கூட மயில்களுக்கும், கர்ச்சில்களுக்குமான விகிதம் 1:1 என்று மாறுவது சாத்தியமில்லை.  ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்து அரசு ஆஸ்பத்ரிகளில் வேலை செய்யும் மருத்துவர்களைப்போல மயில்கள் வயல்வெளிகளில் மனிதர்களோடு மனிதர்களாக எல்லா மாநிலங்களிலும் உலாவுகின்றன. அதனால் தான் இன்று இந்தியாவிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட ராஜஸ்தானை விட இரண்டு மடங்கு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர்.

“அப்பா இங்க பாருங்க. டைகர் மட்டும் இருக்கு. அதுவும் நேஷனல் அனிமல்தானே?”

மகன் தன்னை மடக்க நினைப்பதை ரசித்தார்.

”முடிஞ்ச அளவுக்கு எல்லாவிதமான ஜீவராசிகளின் இயற்கையான வாழ்விடங்களை புனரமைத்துக்கொடுக்க வேண்டிய தார்மீகக்கடமை நமக்கு இருக்கு. ஏன்னா அதோட எடத்ததான் நாம ஆக்ரமிச்சிருக்கோம். சில மிருகம் காட்டைவிட்டு வந்து நம்மோட வாழப்பழகிடுச்சு. நாம கொரோனாவோட வாழப் பழகின மாதிரி. ஆனா எல்லா விலங்கும், பறவையும் இதச் செய்ய முடியாது. அதனால சிங்கம் காட்டுக்கே ராஜான்னாலும், விலாசம் மாறி அது நாட்டுக்குள்ள வந்தா மனுஷந்தான் அதோட ராஜா. ஜீவகாருண்யத்தோட, தற்காப்புதான் முதல்ல. அதுனால அடிச்சிட்டு அத அருங்காட்சியகத்து அனுப்பிடுவான். அப்படிதான் இந்த புலி இங்க வந்திருக்கும்.”

“அப்ப வைல்ட் அனிமல்ஸோட டொமெஸ்டிக் அனிமல்ஸ்தான் நல்லது. இல்லப்பா?”

”எல்லாத்தையும் நமக்கு சாதகமா இருக்கான்னே பார்க்குறது தப்பு.  இப்போ நீ டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்த்தா புலி மானை வேட்டையாடுறது, பறவை பூச்சிகளை திண்றது மாதிரியான காட்சியத்தான் காட்டுவாங்க. அது இயற்கையா உருவான உணவுச்சங்கிலி. ஆனா எப்படி பூச்சிங்க மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய்யும், பறவைகள் பழங்களையுண்டு அதன் மிச்சமான விதைகளை தன் எச்சத்தின் மூலம் பரப்பி காடுகள் உண்டாக்கும்னு எல்லாம் அவங்களால காட்ட முடியாது. காட்டு விலங்குங்கதான் வரப்போகும் தொற்றுகளையும், பேரிடர்களையும் முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகை உயிர் நீக்கும் அல்லது இடம் பெயரும்.  நாம வாழ பறவைங்க எவ்வளோ முக்கியம்னு எந்திரன் படத்துல பார்த்தல்ல?”

“ஆமாப்பா. அதுலேர்ந்துதான் நான் செல்ஃபோன்ல ஆங்ரி பேர்ட் விளையாடுறதயே கொறச்சுட்டேன். பேர்ட்ஸ் இருந்தா வெட்டுக்கிளி வந்து வயல சாப்டிருக்காதுல்ல. பேட்ட சைனால சமைக்காம சாப்டதுனாலதானே கொரோனா வந்துச்சு?”

”கரெக்ட். மனிஷனுக்கு இரையாவதைத் தவிர்த்து அதுங்களுக்குன்னு தனித்தனி பொறுப்புகளும் இயற்கையிலேயே இருக்கு. மத்தபடி சாப்பிடணும்னா அதுக்கு ஆடு, கோழி மாதிரி பிராய்லர்தான். புரிஞ்சுதா?”

கோழிகளும், காகங்களும் இன்று உலகெங்கிலும் ஒரேமாதிரி காணப்பட்டாலும் மரபு சார்ந்து சில நாடுகளின் தேசியப்பறவை அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றன. மனிதனை அண்டி வாழ்வதைத் தவிர்க்க காகங்கள் போகும் இடத்தில் எல்லாம் கிடைத்ததை உண்டு, இருக்கும் இடத்தில் வாழும் தன்மையை உருவாக்கிக் கொண்டன. கூலித் தொழிலாளிகளைப் போல. ஆனால் கோழிகள் தாமாக இடம் பெயரவில்லை. பொறியியல் படித்தவர்களைப்போல் அவை இந்திய துணை கண்டத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு அரசுகளால் எடுத்துச்சென்று இனப்பெருக்கம் செய்யப்பட்டவை. சூரியனின் உறவாய் விடியலை அறிவிக்கும் கடவுளின் தூதுவனாய்ப் பல நாடுகளில் சேவலை வழிபடுகிறார்கள். ஜல்லிக்கட்டைப் போலவே சேவற் சண்டைகளுக்கும்  நம் வாழ்வியலுக்கும் தொடர்பு இருக்கிறது. பெயர்ந்த இடத்திலெல்லாம் தன் போர் குணத்திற்காக பெயர் போன சேவல்கள் தைரியத்தின் அடையாளங்களாக, தங்கள் தேசிய இனத்தின் வீரியத்தின் குறியீடாகக் கருதப்பட்டன.

கோழிகளின் அண்டி வாழும் தன்மையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த மனிதன் கற்றுக்கொண்டான். மரபணுக்களை மாற்றுவதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தேடி வரும் தீவனத்தைத் தின்று கொழுக்கும் விதமும், ஒரு நாளின் இரவு பகல் நீலத்தைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் முட்டையிடும் விதமும் கோழைகளாக அவற்றை வடிவமைத்தான். நாட்டுக் கோழிகளின், சேவல்களின் தனித்தன்மையை மெல்ல மெல்ல மழுங்கடித்துத்தான் பிராய்லரை உலகமயமாக்கலின் சின்னமாக மனிதன் மாற்றினான். நாமக்கல், ராசிபுரம் எல்லாம் இனி பிராயிலர்களுக்குத் தான். தமிழகத்திற்குப் போட்டியாக வங்காளத்தில், கல்யாணியில் மிகப்பெரிய பண்ணை தயாராகி வருகிறது. உலகமயமாக்கலின் சின்னமான சேவற் கொடியில் பட்டொளி வீசும் சாவைகள் பயந்த சுபாவம் கொண்டவை, காயடிக்கப்பட்டவை, அடிமை வாழ்க்கையின் மொத்த உருவம்.

“அப்பா! ரொம்ப  நாள் ஆச்சு! போகும்போது நம்ம கடைக்குப் போய்ட்டு போவமா?”

ஆமாம் இல்லை என்றெல்லாம் சொல்லாமல் அப்பா மையமாகத் தலையை ஆட்டினார். மகனிடம் விளக்க முடியாத அரசியல் விவரணைகளை அமைதியாக அசைபோட ஆரம்பித்தார். இன்றைய ஆட்சியாளர்கள் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை எள்ளல் செய்கின்றனர். மயிலுக்கு போர்த்திய பேகனைப் பகடி செய்கின்றனர். ஒரு புறாவிற்கு இந்த அக்கப்போரா என்று சிபி சக்கரவர்தியை பார்த்துச் சிரிக்கின்றனர். ஆனால் வேட்டைப் பிரியரான பாபரைக் காட்டுமிராண்டியாக சித்தரிக்கும் மானுடப் பதர்கள் மனுநீதி சோழனை மட்டும் சிறந்த பக்தனாக ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்?

தேசிய சின்னங்கள் எல்லாவற்றின் தகுதியும் மாற்றியமைக்கப்படும் காலம் வெகுதூரம் இல்லை என்பது அவர் கணிப்பு. இந்தியாவின் பாரம்பரியத்திற்கும் மயில்களின் தமிழ் தொன்மங்களுக்கும் இருக்கும் தொடர்பை மறக்கடித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இனமான சேவல்களைவிட உலகத்தரமான பிராயிலர்களின் சந்தையாக தமிழகத்தையும், வங்காளத்தையும் ஆக்க நினைக்கிறார்கள். அதிக சதைப்பிடிப்புடன் கூடிய பறக்கும் திறனுக்கு அதிக மதிப்பெண் கொடுத்து ஒருநாள் கர்ச்சல் பறவை போட்டியின்றி தேசியப் பறவையாக அறிவிக்கப்படலாம். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் இன்று கர்ச்சல் பறவைகள் இல்லவே இல்லை என்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படலாம்.

கட்டிட வாசலில் காரை நிறுத்தியதும் கதவைத் திறந்துகொண்டு நேராக பேக்கரியின் பின்பக்க சூளையை நோக்கி ஓடினான். முன்பக்கம் கடை மூடியிருந்தாலும் முதல் ஈடின் வாசனை வாவா என்றது. “ஏட்டா! ரெண்டு சிக்கன் க்ராய்ஸாண்ட்” என்றான் பரவசமாக.

வெள்ளை ஏப்ரனுடன்  பிரசவ வார்டிலிருந்து குழந்தையைத் தூக்கி வருவதுபோல் ஒரு பொட்டலத்தை ஏந்தி வெளியே வந்த ஆண்டனி ஏட்டன் அவன் கண்களுக்கு தேவதையாகத் தெரிந்தார்.

தான் அணியப்போகும் வெள்ளை அங்கி கோட்டா? ஏப்ரனா? என்பதை அவன் தீர்மானிக்கட்டும். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தர்றதுதான் என் கடமை. நல்லாப் படிச்சு மெரிட்ல வந்தான்னா முதல் மாடி, இல்லைன்னா இருக்கவே இருக்கு தரைத்தளம். நான் ஆசைப்பட்டதயும் செய்யாம எங்க அப்பா ஆசப்பட்டதயும் செய்யாம இப்படி கிணறக்காத்த பூதம் மாதிரி வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்றிருந்த அவருக்கு நல்லவேளையாக இந்திய பல் மருத்துவ சபைக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கும் இடையே ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தது பெரிய ஆறுதல். அதன்படி பல் மருத்துவர்கள் நேரடி சிகிச்சை அல்லாத வேலைகளைக் கொரோனா வார்டுகளில் செய்யலாம். இது சுய பச்சாதாபத்திற்கான நேரமல்ல. ஆத்ம திருப்திக்காகவாது நம்மாலான வேலைகளைச் செய்ய வேண்டும். அதுவரை க்ளினிக் பூட்டியபடியே இருக்கட்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தார். அதுதான் கிடைத்த வாய்ப்பிற்கு தான் செலுத்தும் நன்றிக்கடன் என்பது அவருக்குத் தெரியும். மருத்துவம் என்பது போட்ட முதலீட்டைத் திரும்பி சம்பாதிக்கும் தொழில் அல்ல. பண்ணையாரைப் போல், தர்மகத்தாவைப் போல் அது ஒரு பதவியும் அல்ல. அது ஒரு மனநிலை. அதுதான் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்குச் சொல்லித் தரப்படும் முதல் பாடம். தமிழ்நாட்டில் தான் சேவை செய்வேன் என்ற பிரமாணம் எடுத்துக் கொள்பவர்களுக்கு தான் மேற்படிப்பிற்கே பரிந்துரை கிடைக்கும். 

தேசியப் பறவையாக கர்ச்சல் பறவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற தகவலை அரசுப் பதிவேட்டிலிருந்து அப்பா சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்தது. மயிலா? கர்ச்சலா?ன்னு வாக்குவாதம் முடிவுக்கு வரவே இல்லை. கடைசியா ஒருத்தர் எழுந்து “எல்லாம் சரிதான். ஒன்னு ஒசத்தி, இன்னொன்னு மட்டம்னு சொல்லல. ஆனா உலக அரகில் ‘The Great Indian Bustard’ –  உச்சரிப்பிலோ, எழுத்திலோ கொஞ்சம் பிசகினாலும் அது எவ்வளவு சங்கடம்னு யோசிக்க வேண்டியதா இருக்கு”ன்னு கொளுத்திப் போட்டுட்டு உட்கார்ந்துவிட்டார். பாடப் புத்தகங்களை மாற்றி எழுதுகையில் அதை மட்டும் அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுப்பது நல்லது என்று தோன்றவே சிரித்துக் கொண்டார்.

***

கார்த்திகேயன் புகழேந்தி – வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தின் நிறுவனர். ஆசிரியர் தொடர்புக்கு [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here