கம்யூன்

0

அகில் குமார்

வன் வானம் என்கிற வெட்ட வெளியை விரும்புகின்றவன். இந்த மால் அதற்கு அந்நியமான ஒன்றாக அவனுக்குத் தோன்றியது. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது. அவன் திரும்பி தர்ஷனைப் பார்த்தான். தரைதள அரங்கில் நடக்கும் கலை நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே தர்ஷன் முகுந்துடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். இந்த முறையும் வேலை கிடைக்கவில்லையென்ற விரக்தி அவர்களிடமிருந்து முழுமையாக கரையேறிவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. அவர்களை பார்க்க பார்க்க அவனுள்ளும் மகிழ்ச்சி திரும்ப ஆரம்பித்தது.

மெல்ல அவன் அந்த மாலின் மூன்றாம் தளத்தில் நடக்க ஆரம்பித்தான். சத்தமெழுப்பும் ஷூக்களை அணிந்தவாறு நடைபயிலும் சிறு குழந்தைகள், தாத்தாவோடு சேர்ந்து ஃபன் கேம்ஸ்  விளையாடும் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், காஸ்மெட்டிக் கடைகளை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்க இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக் தீட்டி காட்சிப் பொருளாக்கப்பட்டுள்ள பெண்களெனும் உயிருள்ள பொம்மைகள், தனது தலைமுடிக்குள் இரு கைவிரல்களையும் நுழைத்து மசாஜ் செய்துகொண்டிருக்கும் பெண்ணிடம் அவள் ஸ்பரிசத்தின் உணர்வு உடலெங்கும் பரவ தனக்குத் தேவையான ஹேர் ஸ்டைலை சொல்லிக்கொண்டிக்கும் இளம் ஆண்கள், தனக்குப் பிடித்த சட்டையை காதலன் மேல், தோழன் மேல், அண்ணன் மேல் வைத்துப் பார்க்கும் இளம்பெண்கள், இந்தமுறை கடந்த முறையைவிட நீண்டதொரு, சிறந்ததொரு முத்தத்தைத் தந்துவிட வேண்டுமென்ற தவிப்பில் சினிமா தியேட்டரின் வாசலில் செக்யூரிட்டிகளின் பரிசோதனைகளுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் ஜோடிகள், தண்ணீர் பாட்டிலைத் தொட்டால் அதற்கும் பில்லைப் போடுவதற்காய் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஹோட்டல் சப்ளையர்கள், இவர்கள் எல்லோரையும்விட அதிகமாக,  வெளியுலகின் வெயில் தாங்காமல் ஏர் கண்டிஷனரில் சுகிக்கலாம் என்ற முடிவோடு வந்து, தொடையோடு முடிந்துவிடுகிற ஸ்கர்ட் அணிந்த பெண்களின் முழங்கால் மூட்டு எப்படி கொஞ்சம்கூட கருமை அண்டாமல் இருக்கிறதென ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் ஆண்கள். இவர்கள் அனைவரையும் அவன் பார்த்தான்.

திடீரென அவன் உள்ளத்தில் வெறுமையும், வெறுப்பும் படர ஆரம்பித்தது. தர்ஷன் போன்றவர்கள் எதற்காக வேலை தேடி வரவேண்டும்? இன்னும் தலைமுறைகளுக்கு கைவசமிருக்கப் போகிற சொத்துள்ள அவனுக்கு வேலையின் அவசியம் என்ன? சொல்லிக் கொள்வதற்காக ஒரு வேலை. ஆனால் இவனைப் போன்றவர்கள் பறித்தெடுத்துக் கொள்வது தன்னைப் போன்ற ஒருவனின் பங்கை. அந்த நொடியில் முகுந்த் மீது அவனுக்கு அன்பு பெருகியது.

சிரித்துக் கொண்டே தன்னை நெருங்கும் தர்ஷனையும், முகுந்தையும் அவன் கண்டான். முகுந்த் மீதான அவனது அன்பில் கொஞ்சம் பரிதாபமும் இணைவதை அவன் உணர்ந்தான்.

“இங்க என்னடா பண்ற சரண்”

“இல்ல.. சும்மா அப்படியே நடந்து வந்தேன்”

“ஓ.. நீ இன்னும் அந்த விரக்தில இருந்து வெளிய வரலியா.. இந்த வேலை இல்லைனா இன்னொரு வேலை. விடேன்டா”

“உனக்கு என்னடா தர்ஷன்? உன்ன மாதிரியா நான்”

“ஓக்கே..கூல்… பேய் வீடு போலாமா?”

“இந்த வாழ்க்கையே ஒரு பேய் வீடு மாதிரிதான் இருக்கு.. வேறென்னத்த ஸ்பெஷலான இன்னொரு பேய் வீடு”

“அது வீடு மாதிரியான ஒரு செட் அப். ஃபுல் இருட்டு. உள்ள ஒரு மனுஷன் பேய் வேஷம் போட்டு நம்மளத் தொரத்துவான். நாம அந்த வீட்ல இருந்து தப்பிச்சு வெளிய வரணும்”

“ஓ”

“யெஸ், போலாமா?”

“எவ்ளோ”

“ஒருத்தருக்கு எய்ட்டி ருபீஸ்”

“எய்ட்டி ருபீஸை இதுக்காக வேஸ்ட் பண்ண முடியாது. என்ன யூஸ்?”

“ஒரு எக்ஸ்பிரீயன்ஸ்”

“எனக்கந்த எக்ஸ்பிரீயன்ஸே வேணாம். தினம் தினம் நான் இங்க அனுபவிக்கறதுதான் அது”

“முகுந்த் தாண்டா ஆசப்பட்டான். பணத்தைப் பத்தி பிரச்சனையில்ல. நான் போட்டுக்கறேன்”

“எங்கிட்ட பணம் இல்லைனு நான் உன்கிட்ட சொன்னனா”

“இப்போ எதுக்கு இப்டி கோபப்படற? வேணாம்னா வேணாம்”

“டேய் போலாமேடா சரண்” என்றான் முகுந்த். கொஞ்சமாக தணிந்த சரண் ” சரி போவோம்” என்றான்.

அந்த மாலின் இரண்டாம் தளத்திலிருந்த கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த “ஹாரர் ஹவுஸ்” என்ற வார்த்தையை அவர்கள் வாசித்தார்கள். மூவரும் ஒன்றாக உள்நுழைந்தார்கள்.

“இவ்ளோதானா ஒரு பயமும் இல்ல” என்றான் முகுந்த். ஹா, ஹா, ஹா என்று உரக்கச் சிரித்து “வா பேயே வா” என்று கூவினான் தர்ஷன். எண்பது ரூபாயும் வீணாகி விட்டதாக நினைத்து கவலை கொண்டான் சரண்.

சுமார் இரு நிமிடங்கள் நீண்ட அந்த உற்சாக கூச்சல்களின் ஊடே, அந்த குகை போன்ற அறையின் இருட்டு மெல்ல மெல்ல உக்கிரமடைந்து, அடர்த்தி கூடுவதை திடீரென அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் உள்நுழைந்த கதவு சடாரென சாத்தப்படும் ஓசையை அவர்கள் கேட்டார்கள். இருட்டு அதிகரிக்க அதிகரிக்க அந்த அறையில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியைக் காட்டும் மினுங்கும் அம்புக்குறிகளை அவர்கள் கண்டார்கள். “ஹா, ஹா, ஹா” என்று ஒரு பெண் குரல் ஆக்ரோஷிப்பதை அவர்கள் கேட்டார்கள்.

சலங்கை ஒலி தங்களை நெருங்குவதை அவர்கள் உணர்ந்தார்கள். “உங்க கிட்ட தாண்டா வரேன்” என்று உரக்கக் கூவிக்கொண்டே ஒரு பெண் அவர்களை நோக்கி ஓடி வருவதை அவர்கள் அறிந்தார்கள். விதைத்த உடனே வானளாவ உயர்ந்துவிட்ட மரமென அச்சம் அவர்களில் படிப்படியாகவன்றி உடனடியாக எழுந்தது. முகுந்த், தர்ஷனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். சரண் தனியாக நின்றான். அவர்கள் அந்த அம்புக்குறிகளை பார்த்துக்கொண்டே ஓட ஆரம்பித்தார்கள்.

மூவரும் நேராக ஓடி வலப்பக்கம் திரும்பினார்கள். அங்கிருந்து முகுந்தும், தர்ஷனும் வேகமாக ஓடினார்கள். சரண் தனித்து விடப்பட்டான். தப்பிக்க வழிகளில்லாத அறையில் தான் மாட்டிக்கொண்டதாகவும், தன் வாழ்வு இன்றோடு முடிந்து விட்டதாகவும் சரண் நினைத்தான். “டேய் ப்ளீஸ்டா, என்னைக் காப்பாத்துங்கடா. எங்கடா இருக்கீங்க.. ப்ளீஸ் வாங்கடா.. பயமா இருக்குடா” என்று சரண் கதறினான். “உன்னக் கொல்லப் போறண்டா, உன் ரத்தம் குடிக்கப் போறேன்” என்ற பெண் கர்ஜனையையும், சலங்கை ஒலியையும் அவன் மிக மிக அருகில் கேட்டான். “மயிரு என் கைல கிடைச்சா நீ செத்தடி” என்று சரண் கோபமாக கத்தினான். பதிலுக்கு அந்தப் பெண் குரல் ஏளனமாக சிரித்தது. “டேய் அகெயின் நேரா ஓடி ஃலெப்ட் திரும்புடா சரண்” என தர்ஷன் கத்தினான்.

சரண் எழுந்து ஓட ஆரம்பித்தான்.

திடீரென வழிகாட்டும் அம்புக்குறிகளில் இருந்த வெளிச்சம் அணைந்தது. எது பேய், எது மனிதன் என்று அறியாவண்ணம் அவர்கள் நிலைகுலைந்து தவித்தார்கள். ஒவ்வொருவரையும் சந்தேகத்தோடு பார்த்தார்கள்.

தன் கைகளில் பிணைந்திருந்த முகுந்தின் கைகளை தர்ஷன் தன்னிலிருந்து விடுவிக்க முயன்றான். “என்னை விட்டுட்டுப் போனா, உங்களைக் கொன்றுவேன்டா” என முகுந்த் தர்ஷனின் கழுத்தை ஒரு கையால் முறுக்கினான். மறுகையால் சரணின் கழுத்தையும் முறுக்கினான். சரணுக்கு மூச்சு முட்டியது. முகுந்தின் நகம் கீறி தர்ஷனின் கழுத்திலிருந்து ரத்தம் கசிந்தது. அணைந்திருந்த மின்னும் அம்புக்குறிகள் மீண்டும் ஒளிகொண்டன. தர்ஷன் தனது முழு சக்தியையும் திரட்டி முகுந்தை தன்னிலிருந்து விடுவித்து ஓடினான். “வந்துண்டேண்டா” என்ற பெண் பேய்க்குரல் ஒலித்தபோது சரணும், முகுந்தும் திரும்பிப் பார்த்தார்கள்.

உடலெங்கும் சிறிய மின்னும் விளக்குகள் பொருத்திய உடையில், நாக்கு வெளித்தள்ளிய, கோரைப் பற்களுள்ள, தலைவிரிகோல உருவமொன்று கையில் சாட்டையோடு நிற்பதை அவர்கள் கண்டார்கள். முகுந்த் சரணை அந்த உருவத்தை நோக்கித் தள்ளிவிட்டு கண்மண் தெரியாமல் ஓட ஆரம்பித்தான். அந்த சாட்டை மெதுவாக சரணைத் தீண்டியது. அவனும் எழுந்து ஓட ஆரம்பித்தான். பல இளம்பெண்களின் சிரிப்பொலியும், கொலுசொலியும் அந்த வீட்டை நிறைத்தன.

முகுந்தை பின்தொடர்ந்து ஓடிய சரணுக்கு எக்ஸிட் என்று எழுதியிருக்கும் கதவு தெரிந்தது. எக்ஸிட்க்கு மிக அருகில் முகுந்த் கீழே விழுந்தான். அவனைத் தாண்டி ஓடிய சரண் கதவைத் திறந்து வெளியேறினான். சாட்டை அடி முகுந்தின் முதுகில் விழுந்தது. வலியற்ற அந்த அடி பயத்தை மட்டும் விளைவித்தது. கடைசியாக அவன் வெளியேறி “தண்ணீர், தண்ணீர்” என்று கதறினான். கழிவறையிலிருந்து வெளிவந்த தர்ஷன் அவர்கள் இருவரையும் அருகிலிருந்த கே.எஃப்.சி-யை நோக்கி தள்ளிக்கொண்டு போனான்.

தர்ஷன் சிக்கன் பர்கரும், லெமன் மொயித்தோவும் வாங்கி வந்தான். பர்கரைப் பிடித்த சரணின் கைகள் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவன் நடுக்கத்தை கவனித்த முகுந்த் பர்கரை பிடுங்கி அவன் ஒரு கடி கடித்துவிட்டு சரண் வாயில் பர்கரை வைத்துவிட்டான். குடிப்பதற்கு ஏதுவாக மொயித்தோ குவளையை சரண் வாயருகே கொண்டுசென்று “நிஜமா பேய் வந்த மாதிரியே இருந்துச்சுல்ல” என்றான் முகுந்த்.

மூவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்தார்கள். கழுத்து எரிச்சல் அதிகமாவதை தர்ஷன் உணர்ந்தான்.

அகில் குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here