“கம்பெனி”

6

ஆத்மார்த்தி

1
அவன் மெல்ல தெருமுனையில் வந்து கொண்டிருக்கும் போதே அந்த இடம் லேசாக பரபரப்பானது. கம்பெனி கம்பெனி என்று தங்களுக்குள் முணு முணுத்துக் கொண்டார்கள். நம்பமுடியாத அதீதமான பதற்றத்தோடு பணப்பையை தன் உடம்புக்கும் கரத்துக்கும் இடையே இறுக்கிக்கொண்டு வந்துசேர வேண்டிய பேருந்துக்காக வெளியூர் பஸ் ஸ்டாண்டில் காத்து கிடக்கிற வெள்ளந்தி மனிதனைப்போல தன்னோடு ஒரு பையை இறுக்கிக்கொண்டு அந்த இடத்தை அடைந்தான் அவன். மழை எப்படி ஒரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளுமோ அப்படித்தான் நிழலும் தனக்கான இடங்களை உடமைப்படுத்திக் கொள்ளும்.

தன்னுடைய எதாஸ்தானம் வந்தடைந்த உடனே அவன் நின்றான். மரத்தின் அடியில் வளைத்து வளைத்து பட்டியக்கற்களால் ஒரு மேடை. ஊர் மந்தையில் மரத்தைச் சுற்றி மேடை என்பது யார் தொடங்கிய ஆகமமோ அங்கேயும் தப்பாமல் இருந்தது. எப்போதும் எங்கேயும் செல்லாமல் மந்தையில் வீற்றிருக்க மன்னவர்கள் இருந்தார்கள். அவ்வப்போது கூடிக் குறைந்தார்களே தவிர இல்லாமற் போனதே இல்லை. அரசியல் பேசி அடித்துக் கொண்டவர்கள் குடித்து விட்டுக் கிறங்கியவர்கள். ஆடுபுலி ஆட்டம் விளையாடி வென்று தோற்றவர்கள். பேசாமல் இருந்து கோப ரோஷ விரதங்களை மேற்கொண்டவர்கள். வெற்றிலை பாக்குப் போட்டு எச்சில் துப்ப இடம் தேடி எழுந்து சென்று திரும்பியவர்கள். அந்த இடத்தைப் பொதுவில் வைத்துத் தங்களது காலத்தை மெல்ல செலவழித்து இறந்து போய்க் கொண்டிருந்தார்கள். மரமே நிழலாக மந்தையே நிலமாக மனிதர்களை அரவணைத்துக் கொண்டிருந்தது. மரத்தின் ஆதுரம் ஊரைக் குழந்தையாக்கி முதுகில் தட்டி உறங்கப் பண்ணுகிற அன்னை வேலையாகவே இருந்தது.

அவன் பையைத் தரையில் வைத்தான். தன் கைகளை உயர்த்தி நெடுக விரித்து சோம்பல் முறிக்கிற பாவனையில் சொடக்கு விட்டான். கால்களை உதறினான். அவனுடைய ஆடை அணிதல்களில் காணப்பட்ட ஒழுங்கின்மை அவனுடைய கலைந்த மனதைப் பறைசாற்றியது. இரண்டொரு இடங்களில் பொத்தலான சட்டை நிறம் தப்பிய பேண்ட் நேர்த்தியை வரவழைத்து விடுகிற அவனது பிடிவாதமும் சேர்த்தே தெரிந்தது. பெல்டுக்குப் பதிலாக சணல் கயிற்றைக் கட்டி முடிச்சிட்டிருந்தான். அந்தக் கயிறு மாத்திரம் இல்லை என்றால் அது சர்வ தேச அணிதல் தரம் தான். நின்று கொண்டிருக்கிற இடத்தை வேப்பங்குலையால் பெருக்க ஆரம்பித்தான். வெறி கொண்டு சவுக்கால் விளாசப் பட்டவனின் முதுகைப் போல் மணல் வரிகள் தோன்றலாயின. அவற்றைக் குறுக்குவெட்டில் பெருக்கிக் கலைத்தான். தன் பையின் மேற்புறத்தில் இருந்து பெரிய உரச்சாக்கு ஒன்றை எடுத்து உதறி அதனைத் தரையில் விரித்து அமர்ந்து கொண்டான்.

தன் பையிலிருந்து ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைக்க ஆரம்பித்தான். விதவிதமான அட்டைகள், டப்பாக்கள், ஓடாத ரேடியோ ஒன்று, உடைந்த கடிகாரம் ஒன்று, நாலைந்து ரிஸ்ட் வாட்சுகள், விதவிதமான பூட்டுக்கள், சாவிகள், ஸ்பானர்கள் ,நாலைந்து களிம்பு டப்பாக்கள், பழைய எவரடி பேட்டரிகள், அமிர்தாஞ்சன் குடுவைகள், பல்லாங்குழி ஆடப் பயன்படுமல்லவா அந்த மஞ்சாடி முத்துக்கள், சிகரட் அட்டைகள், கட்டுக்கட்டாய் பழைய லாட்டரி டிக்கட்டுக்கள் என அந்தப் பையிலிருந்து எடுத்து அவன் அடுக்கி முடிக்க இருபது நிமிடங்கள் அடுக்கி முடித்த அடுத்த கணம் ஆர்வ மேலிட அவனது விரிப்புக்கு முன்பாக வந்து நின்று என்ன என்று பார்க்கத் தொடங்கினர். ஒருவர் வெளியூர்வாசி போலும் அவரை நோக்கி நிமிர்ந்தான்.

“என்ன ஸார் வேணும்…நம்ம கிட்டே எல்லாமே நயமான க்வாலிட்டி ஒண்ணாம் கிளாஸ் தரம். எல்லாமே கம்பெனி ஐடம்ஸ் மட்டுந்தான். நான் இந்த ரெண்டாம் நம்பர் அட்டு ஐட்டங்களைக் கையால கூட தொடுறதே இல்லை. நம்பி வாங்கலாம் நீங்க. எனக்கு இந்த ஊரெல்லாம் கஸ்டமர்ஸ் தான். வாங்கிட்டுப் போயிட்டு ஒருவேளை” (இங்கே நிறுத்துகிறான்) “ஒருவேளை க்வாலிட்டில ப்ராப்ளம்னாலோ அல்லது மனசு திருப்தி இல்லைன்னாலோ ஜஸ்ட் நீங்க அப்டியே ரிடர்ன் செய்திரலாம். நீங்க எந்த சங்கோஜமும் படத்தேவையில்லை வந்து பணத்தை வாபஸ் பண்ணிக்கலாம் அல்லது பொருளாக் கூட மாத்திக்கலாம். நீங்க பணம் செலவழிக்கிறவர் உங்களோட மனத்திருப்தி தான் ஸார் எனக்கு முக்கியம்”

லாட்டரி டிக்கட்டுக் கற்றையைக் காட்டி ‘இதெல்லாம் ஒன் இயர் காரண்டி’ சிகரட் அட்டைகளைக் காட்டி ‘இதெல்லாம் ரெண்டு வருஷம் காரண்டி’ களிம்பு டப்பா ஒன்றை பொத்தினாற் போல் எடுத்தவன் ‘இது த்ரீ இயர்ஸ் ரீப்ளேஸ்மெண்ட் வாரண்டி ஐட்டம் சார் நம்பி வாங்கலாம் நீங்க” என்று மூன்றையும் ஒரு கொத்தாக்கி அவர் முன் நீட்டினான்.

அவன் காட்டிய மூன்று பொருட்களின் இடையே நிலவிய சமனின்மை மற்றும் அவற்றின் இடையிலான பொது வினோதம் இரண்டும் ஒருசேரத் தாக்க அதுவரை தான் ஏதோ புதிய வகை கடையின் முன் நின்று கொண்டிருப்பதாகவே எண்ணிக் கொண்டிருந்த அந்த மனிதர் சுற்றிலும் அப்போது தான் பார்க்க ஆரம்பித்தார். அவரையே கண் மாறாமல் பார்த்திருந்த பின்புல மனிதர்கள் சட் சட்டென்று முகம் திருப்பிக் கொண்டதும் கூடுதலாகக் கிலியானார்.” உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இங்க பலரும் நம்ம கடை கஸ்டமர்ஸ் தான். கேட்டு வேணா பாருங்க” என்று தன் முதுகுக்குப் பின்னால் இருந்தவர்களில் தனக்கு சாதக சாட்சியாக யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கவனித்தபடி வந்தவன் குரியகோஸின் முகத்தில் நிலைத்துப் புன்னகை புரிந்தான். அவருக்குப் புரிந்து விட்டது. தன் முகத்தைப் பொதுவான மலர்தல் ஒன்றில் நிலைக்கச் செய்தவர் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாற் போல் அதே புன்னகையைத் திருப்பித் தந்தார்.

“குரியகோஸ் மாமா…நீங்க சொல்லுங்க.. போனவாரம் ஒரு மாடல் எடுத்தீங்கல்ல..எப்டி இருக்குதுன்னு சொல்லுங்க” என்று அவரிடம் கேட்க
“அதுக்கென்ன சொல்லிட்டாப் போவுது மாப்ளே…” என்றவர் தொடர்ந்த மலர்தலோடு புதிய மனிதரிடம் “நம்பி வாங்கலாங்க…இந்த ஊரே மாப்ளையோட கஸ்டமர்கள் தான். வெலை முன்னப்பின்ன இருந்தாக் கூட பேசிக்கலாம், பாருங்க” என்றார். அந்தப் புதியவர் லேசாக ஆசுவாசம் ஆனாற் போலத் தெரிந்தது. குரியகோஸ் அவரைக் காப்பாற்றும் பொருட்டோடு “மாப்ளே மூனையும் அவரிட்ட நீட்டாதீய…எது என்னான்னு வெளங்குனாத் தானே அவரால ஒரு முடிவுக்கு வரமுடியும்?” என்றதும் தனக்குத் தேவையான பாதை கிடைத்த மிரண்டலையும் ஆட்டுக்குட்டி போலாகி அந்தக் களிம்பு டப்பாவை சுட்டிக்காட்டி “இதென்ன விலை?” என்றார்

“இதா சோனி எரிக்ஸன். நல்ல மாடல் பேட்டரி நாலு நாளைக்குத் தாங்கும். வெயிட்டும் ரொம்பக் கம்மி தான். பேக்ரவுண்டு லைட்டிங் மூணு நாலு கலர்ல மாத்திக்கலாம். ரெண்டாயிரத்து எண்ணூறு ரூவா..நீங்க ரெண்டு ஏழு தந்தாப் போதும்” என்றான்.

இந்த சீனுக்கு அவர் குரியகோஸின் முகத்தைப் பார்க்க அவர் தன் பர்ஸில் இருந்து ஏடிஎம் கார்டை எடுத்து ஆட்டி விட்டு மறுபடி தன் பைக்குள் போட்டுக் கொண்டார். புதிய மனிதர் உடனே ” சரிங்க ஸார் நா போயி ஏ.டி.எம்ல காசெடுத்துட்டு வந்துர்றேன்” என்றதும் “அட நீங்க என்ன ஸார் நம்ம கடையிலயே ஸ்வைப்பிங் மிஷின் இருக்குல்ல?” என்று ஏடி.எம்கார்டைக் கேட்டு வாங்கி லாட்டரிக் கட்டு மீது வைத்து ஒரு சில மணித்துளிகள் வெயிட் செய்தவன் “எப்பப் பார்த்தாலும் லைன் கிடைக்காது.. என்னத்தை சொல்ல எங்கன பார்த்தாலும் குழப்பம் தான்” என்றவாறே “ஆச்சு ஸார்.. இந்தாங்க” என்று கார்டோடு ஒரு சிகரட் அட்டையை எடுத்துக் கொடுத்தான்.

“இதுல பில்லு இருக்குது. இது காரண்டி கார்டு எல்லா ஊர்லயும் சோனிக்கு சர்வீஸ் செண்டர்ஸ் இருக்கு பயப்படாதீங்க” என்று தன் முன் இருந்த பொருட்களில் நாலைந்தை எடுத்து இடம் மாற்ற ஆரம்பித்தான். அந்த மனிதர் தன் கையில் இருக்கிற களிம்பு டப்பாவை வெறித்தபடியே நகர்ந்து மரத்தைத் தாண்டி நிற்பதைப் பார்த்த குரியகோஸ் தன்னிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்த பவுன்ராஸிடம் “இருய்யா வந்துர்றேன்” என்று மரத்தினடியில் இருந்து குதித்திறங்கி அந்தப் புதியவரை நெருங்கினார்.

“பெரிய கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை. நாலஞ்சு தொழிலு நாப்பது வேலைக்காரங்கன்னு பெரிசா ஓங்கிட்டு வந்தவன் தொழில்ல நட்டமாகி இப்டி ஆயிட்டான். இன்னமும் தான் பெரிசா தொழில் பண்ணிட்டிருக்கிறதாத் தான் நம்புறான். நாங்க எல்லாம் பழகின விளையாட்டா அவனை அனுசரிச்சி நடந்துக்குவம். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் இப்பிடி உக்காந்திருந்துட்டு கெளம்பிடுவான். உங்களை மாதிரி வெளியாளுக வர்றப்ப தான் எப்பனாச்சும் முன்னப்பின்ன ஆயிடுது. இவனைப் பார்த்துக்கிடுறதுக்குன்னு ஒருத்தனை வேலைக்குப் போட்டுப் பார்த்தாங்க..அவனையும் அடிச்சு திருப்பிட்டான். அதுனால இவம்பக்கத்துல இருக்கிறதில்லை. எங்கனயாச்சும் இருப்பான்” என்று சுற்றிப் பார்க்க தூரத்து டீக்கடையில் பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த அவினாசி குரியகோஸைப் பார்த்ததும் டீக்ளாஸோடு கையை உயர்த்தி வணக்கம் வைத்தான்.

புதிய மனிதர் உடம்பு லேசாய் நடுங்கிற்று. தன் கையில் இருந்த களிம்பு டப்பாவைக் காட்டி “இதென்னங்க பண்றது” என்றார் அவர் குரல் கம்மி இருந்தது. “நல்லா நடிச்சீங்க.. எதுனா முன்னப் பின்னப் பேசிருந்தீங்கன்னா இன்னேரத்துக் கெல்லாம் நீங்க ஓடிட்டிருப்பீங்க.. இந்த இடமே ரணகளமாயிட்டிருக்கும்” என்றார். சாதாரணமாகத் தான் சொன்னாரே ஒழிய புதியவரின் முகத்தில் நீர் முத்துக்கள் இன்னும் அதிகரித்ததைப் பார்த்து “இந்தக் களிம்பு டப்பால என்னங்க இருக்குது,.? தூக்கி எறிஞ்சிருங்க. அவன் பார்வைல இது இன்னைக்கு சோனி எரிக்ஸன் செல்ஃபோனு. நாளைக்கி இதையே வேற பண்டமாப் பாப்பான். மனசு ஒரே ஒரு கண்ணாடியா இருந்தா தெரியுறதுல தெளிவிருக்கும். இவனுக்கு சுக்குநூறா நொறுங்கிட்டிருக்கு, அதான் தன்னையும் வருத்திக்கிட்டு மத்தவங்களையும் வருத்துறான்”. மீண்டும் தன் திசை நோக்கித் திரும்பினார்.

அந்த மனிதர் களிம்பு டப்பாவை பூப்போல ஒரு ஓரத்தில் நழுவ விட்டார். அடுத்து வந்த பேருந்து அது எந்த எண் எங்கே செல்கிறது என்பதை(க்)கூட பாராமல் ஏறி அமர்ந்தார். அடுத்த ஸீட்டில் அமர்ந்திருப்பவன் செல்ஃபோனில் தாழ்ந்த ஸ்தாயியில் சொல்லிக் கொண்டிருந்தான் “மறக்க முடியுமா…செமை கம்பெனி ” பேருந்து நகர்ந்தது.


2
நல்ல மழைக்குப் பின் மறுவெயில் அப்போது தான் ஆரம்பித்தது. வழக்கமான முகங்களில் பாதி காணவில்லை. தென்பட்டவர்களும் ஈரப்பதத்தைத் தாள வொண்ணாமல் அவ்வப்போது நடுக்கமுற்றனர்.

முத்துராக்கு கத்திக்கொண்டே கடந்து சென்றாள். “கம்பெனில எனக்குத் தெரியாம லோன் எதும் தரக்கூடாதுன்னு எத்தினியோ சொல்லிருந்தும் இவனாப் போயி காச வாங்கிக் குடிக்கப் போயிட்டான். இவந்தான் கேட்டா அந்தக் குமாஸ்தாவுமா காசைக் கையில தர்றது..? இவனுக்கு குவார்டர் அடிச்சதுமே கர்ண மனசு பூத்துக்குமே சொளையா இருவதாயிரம் ரூவாயைத் தொலைச்சிட்டு வந்திருக்கானே அய்யோ நா எங்க போயி சொல்லுவேன்..? நானெல்லாம் எப்பிடிப் பொழைக்கிறது இவங்கூடக் கூட்டாப் பொழச்சி ரெண்டு பிள்ளைய வேற பெத்திட்டனே இன்னிக்கு வரட்டும் அவனைப் பொளந்துட்டுத் தான் மறுவேலை” அவிழ்ந்த கூந்தலை முடிந்து கொண்டு அதுவரை நகர்ந்த திசைக்கெதிரான வேறொரு திசையில் சென்றாள்.

குரியகோஸூம் மூர்த்தியும் தங்களுக்குள் எதையோ பேசினபடி வந்து சேர்ந்தார்கள். சைக்கிளில் டீ விற்கிற அவயத்தான் ஒரு காலை ஊன்றியபடியே “மாமா டீ” என்றான். முதலில் அவன் விளித்ததைக் கவனிக்காத மூர்த்திக்கு மெல்லத்தான் அவன் குரல் கேட்டது. ஜாபர் கடையில் பட்டறை கழுவிக் கவிழ்த்திருந்ததை கண்ணோட்டம் விட்டவர் தன்னைச் சுற்றி நிறைய ஆட்கள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு “ரெண்டு” என்றார். அவன் சைக்கிளை ஸ்டாண்ட் இட்டு ரெண்டு பேருக்கும் சில்வர் தம்ளரைத் தந்தான்.” எலே ப்ளாஸ்டிக் கப் வர்றதில்லையாக்கும்?” என்றபடியே வந்து சேர்ந்தார் சேகர். “தடை பண்ணிப்பிட்டாகல்ல…அதுக்கப்பறமும் கேக்குறேளே யாரு அபராதம் கட்டுவா.? நான் பொழைக்கிறதே நூறுக்கும் எரனூறுக்கும் இதில பத்தாயிரம் ரூவாயாக்கும் ஃபைனு தெரியுமா?” என்றபடியே கணக்குப் பார்த்து காசு வாங்கிக் கொண்டு கிளம்பினான்.

சென்றவன் அரைவட்டம் அடித்து திரும்பி வந்து வரிசையாக அமர்ந்திருந்தோரிடம் பொதுவாக “ப்ளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி பண்ற பெரிய பெரிய மெஷினெல்லாம் பல லட்சம் கடனாகி தொழில் பண்ணின பலர் வாயில எள்ளுந்தண்ணியும் தான் வடிச்சிக்கிறானுவ தெரியும்லா..? இந்த மாதிரி தடை செய்ற மவராசனெல்லாம் அதுனால உடனே அழியுற பல குடும்பங்களைக் கருத்துல எடுக்கிறதேயில்லை. எதாவும் இருக்கட்டுமே மொதல்ல அனுமதிச்சிட்டு அப்பறம் தடைன்னு பண்றப்போ அதுல முதலீடாகி கெடக்குற பணத்துக்கு எதுனா ஏற்பாடு செய்யணுமில்லா..? இதென்ன அரசாங்கம் தயார் பண்ற ராக்கெட்டு வியாபாரமா நாலஞ்சி கடல்ல வுளுந்தாலும் பரவாயில்லைன்னு அடுத்ததை நோக்க..? நம்ம பரணி மாதிரி இன்னும் எத்தனை பேர் மந்தையில கடை விரிக்கக் காத்திருக்கானோ யாரை நொந்துக்கன்னே தெரியலைல்லா..?”

அடுத்த வார்த்தைக்கு அவன் அங்கு இல்லை. நிற்கவும் மாட்டான். கூடுதலாக ஒரு சொல்கூடச் சொல்லாதவன் அவயத்தான். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தான். ரப்பர் தொழிலில் ஏற்பட்ட முடக்கம் அவன் வேலை பார்த்த ரப்பர் கம்பெனியை மூடி விட்டார்கள். மெல்ல மெல்ல உழைத்து அப்போது தான் மேடேறிய பலரும் மறுபடி வேறொரு வரிசையில் இன்னும் பல புதியவர்களின் முதுகுகளைத் தாண்டி நிற்க நேர்ந்தபோது நிலைகுலைந்தார்கள். இருபத்தி எட்டு வருஷ சர்வீஸ் ஒரே நாளில் மண்ணாய்ப் போனதும் அவயத்தான் சைக்கிளில் டீ விற்க ஆரம்பித்தான். “நாலு வடைகளையும் சேர்த்து விற்கலாம்ல, உனக்கும் எதுனா கூடக் கிடைக்குமே?” என்று கேட்டால் “வேணாம் மாமா அது இன்னொருத்தனுக்குப் பொழைக்கிற வாய்ப்பைத் தருது நாம கெடுக்கப்படாது. காத்தோ நீரோ உள்ளதைப் பகிர்ந்தா போதும். மண்ணோ நெருப்போ அவனவனுக்கு உண்டானது நிச்சயம் கிடைச்சிருமில்லா?” என்றபடி அசட்டையாய் சிரிப்பான்.

“இவன் பரணின்னு யாரைச் சொல்லுதான்?” என்ற மூர்த்தியிடம் “நீ ஒரு செத்த சவம்வே…அதான் நெதமும் இங்கன வந்து ஆகாவளியெல்லாம் பரப்பிக் கடை வைப்பானல்லோ பெரிய வீட்டு முத்தையாவோட ரெண்டாவது மவன். நேத்துக்கூட வந்தான். இன்னைக்கித் தான் காங்கலை ” என்ற சேகரனிடம் “இல்லையப்பா அவன் சுத்தவாதி கடையை ஒலந்த தரையில தான் விரிப்பான். ஈரம் அவனுக்கு ஆவறதில்ல..மழை சுத்தரவா நின்னு வெயிலடிக்கிற வரைக்கும் வர மாட்டான். அதென்னவோ தன் கால்ல கூட தண்ணி பட்றக் கூடாது அவனுக்கு” என்றவர் விடாமல் பைத்தியத்துக்கு எதுக்குப் பக்கம் பக்கமா சாதகம் என்றார் மூர்த்தி.

குரியகோசின் நெற்றி சுருங்குவதைக் கண்டபடியே “அண்ணாச்சிக்கு பரணி மேல தனி பாசம்” என்ற சேகரின் கருத்தை ஆமோதிக்கிறவராய் செருமிக்கொண்டு தொடங்கினார் குரியகோஸ் “இல்லையா பின்னே ஆறாவதுலேருந்து பத்து வரைக்கும் அஞ்சு வருசம் என் கிளாஸ்ல படிச்சவன். பணக்காரப் பசங்களுக்குன்னு நாம நம்பிட்டிருந்த பல விஷயம் அவங்கிட்ட கண்டதில்லே. அவன்தான் வகுப்புல மொதல் ஸ்டூடண்டு. காலேஜூ மதுரையிலயும் அப்பறம் பெங்களூர்லயும் படிச்சான். படிக்கிறப்பவே “ஆனி லீவர் இண்டர்னேசனல்” கம்பெனில ஏரியா மேனேஜரா கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைச்சது. கண் நெறஞ்ச பொண்ணைக் காதலிச்சு கலியாணம் பண்ணிக்கிட்டான். ஊரே திரும்பிப் பார்க்குறாப்ல நாலு ஊர்ல பிஸினஸ் பண்ணான். பல கம்பெனிகள்லயும் இவனுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. நிறைய்ய பணம் புரண்டது. என்ன எளவெடுத்த கம்பெனி ஸ்கீமோ என்னவோ முதலீடு பண்ணினது முச்சூடும் தோத்துப் போனதில புத்தி பேதலிச்சிட்டுது.

சற்றே நிறுத்தினவர் “கட்டுனவ இனி உன் கூட வாழ்றதில்லென்னு கொழந்தையைக் கையில எடுத்துட்டு அப்பன் வீட்டுக்குப் போயிட்டா. இப்பத் தன் கொழந்தையைக் கூட அவனுக்கு அடையாளம் தெரியாமப் போச்சு. இந்த மரத்தடி அவனோட கம்பெனி. நாம எல்லாரும் அவனோட கஸ்டமர்ஸ். தெனம் ஒரு திரை தெனம் தெனம் புதுக்கதை. அவனா அடங்குற வரைக்கும் ஆர்ப்பரிக்கிறதை நிறுத்த முடியாது. அது அவனோட குறையில்லை-பிரச்சினை. ஊர்ல கம்பீரமா வளைய வந்தவனை கட்டிப் போட்டுக் கொடுமைப்படுத்தவா முடியும்..? அதான் வீட்ல ஆள் போட்டு வெளிய அனுப்புதாங்க.. இவனும் பெருவாரி ட்ரபுள் பண்றதில்லை. எப்பனாச்சும் தான் மீறுவான். அது தாங்கவொண்ணாம இருக்கும்”

தன் காரை ஸ்டைலாக ஓட்டிக்கொண்டு அங்கே வந்தான் ஜெபா, குரியகோஸின் மூன்றாவது மகன். கண்ணாடியை இறக்கிப் புன்னகைத்தவன் இறங்கி வந்து சமீபித்து “டாடி நான் கெளம்பிட்டேன். மே மாசம் வரேன்” என்று தரை எனவும் பாராமல் அவரது பாதம் தொட்டு வணக்கம் வைத்தான். பேசி அனுப்பி விட்டு இன்னமும் முந்தைய கணத்தின் நெகிழ்தல் குறையாமல் விரிந்த இதழ்களோடு இருந்தார்.

“அண்ணாச்சியோட மூணாவது மகன்லா இவன்?” என்றார் அற்புதசாமி. அவர் வந்ததையே அப்போதுதான் கவனித்த மூர்த்தி “ஆமா… மூத்தவன் ப்ரின்ஸூ டெல்லில வேலை ரெண்டாமத்தவன் எபி லண்டன்ல இருக்கான். இவன் ஜெபா மூணாவது மகன் அமெரிக்கா” என்றார். தான் சொன்னது சரி தானே என்றாற் போல் குரியகோஸைப் பார்த்தவரிடம் சரியே என அவரும் ஆமோதித்தது ரசமாக இருந்தது. குரியகோஸ் தன் ஜிப்பாவிலிருந்து புளிப்பு மிட்டாய் ஒன்றைத் தன் வாயில் போட்டுக் கொண்டவர் பொதுவாக மூர்த்தியிடம் நாலைந்தைக் கொடுத்தார்.

ஜெபா எஸ் க்யூ எஸ் கம்பெனில வேலை பார்க்குறான். லச்சக்கணக்கில சம்பளம் என்று கூடுதல் தகவல் ஒன்றை சொன்ன மூர்த்தியைப் பார்த்தபடியே “வர்சத்துக்கு ஒன்னரைக் கோடி சம்பளம்” என்றார் குரியகோஸ் “அது மட்டுமில்லவே எல்லாமே கம்பெனி செலவு தான் வீடு, காரு, சாப்பாடு, போக வர டிக்கட்டுன்னு எல்லாமே தந்துருவாங்க தெரியும்லா” என்றார் சேகர் அற்புதசாமி வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார். “அடுத்து எப்ப வருவாப்டி எனக் கேட்டதற்கு நெனச்சப்பல்லாம் வந்துட்டுப் போவான். பெரிய பதவி” என்றார் மூர்த்தி.

குரியகோஸ் செல்லில் அழைப்பு வர எடுத்துக்கொண்டு இறங்கிப் போனார்

“ஏய் அற்புதசாமி அந்தப் பய கம்பெனி என்னெல்லாம் தருதுன்னு தெரியுமாவே.? தண்ணி அடிச்சாக் கூட கம்பெனி செலவாம்லா ஆக்ச்சுவல்ஸோ என்னமோ பேராம் அதுனால தலைக்கு முக்கா ரூவாய்க்கி எண்ணை வாங்கினாக் கூட கம்பென்னி செலவு தானாம் தெரிஞ்சுக்க” அவர் வாய் பிளந்தது மூடவே இல்லை.

“என் கதை மணக்கவா செய்யிதி..? என்னோட மவன் கொரியர் கம்பெனில வேலை பார்த்தவன். டெலிவரி தரப்போனப்ப ஆக்சிடெண்ட் ஆகி காலு முறிஞ்சிட்டது. உக்காந்து பாக்குதாப்ல எதுனா வேலை தரச்சொல்லி நடையா நடக்குறான். கெடச்ச பாடில்ல கோர்ட்ல கேஸ் நடத்தினா கெடைக்கும்னு வக்கீலைப் பார்க்கப் போயிட்டு வந்தேன் நேத்து”

அதென்ன கம்பெனி என்ற சேகரிடம் அவர் பேரைச் சொன்னதும் இவர் வேறொரு பேரைச் சொல்லி அந்தக் கம்பெனியா இருந்தா இன்னேரத்துக்கு வேற வேலை தந்திருப்பான். இதுல கொஞ்சம் கஷ்டம் தான். மனசை விடாதேயும் கேஸை நடத்தினா கெடைச்சிடும்” என்றதும் அற்புதசாமிக்கு பாரம் கூடினாற் போலாகி எதுவும் சொல்லாமல் இறங்கி நடக்கலானார்.

குரியகோஸ் திரும்பினவர் “என்ன அற்புதம் கெளம்பிட்டானா ?” என்றதும் “என்னமோ சோலி இருக்குதாம்னு வெரசாக் கெளம்பிட்டார்” என்று மட்டும் சொன்னார் மூர்த்தி.

முற்றிலுமாக மழை நின்று மறுபடி வெப்பம் தெரியத் தொடங்கி இருந்தது. தூரத்தில் மாதா ஏஜன்ஸீஸ் அடைத்திருக்க அதன் வாசலுக்கு சற்றுத்தள்ளி மூன்று பேர் ஒரு மஞ்சளும் ரோஸூம் மாறி மாறி கட்டங்களை நிரப்பின பெரிய குடை ஒன்றை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தின் சித்திரத்தில் கூடுதல் தோன்றலாக அந்தக் குடை உண்டாகத் தொடங்கிற்று. குழாய்களை இணைத்து இணைத்து ஒரு டேபிள் இரண்டு நாற்காலிகள் பின்னால் சரமாய்த் தொங்கும் பேனர் என வண்ணமயமாக மாபெரும் நிரந்தரத்தைப் போன்ற தோற்றத்தோடு நிரம்பின பொய்கள். அங்கே நின்று கொண்டிருந்தவர்கள் குட்டியானை வேனுக்குள் சென்று ஆடை மாற்றி கம்பெனி யூனிஃபார்ம்களோடு வந்தார்கள். மூவரைத் தவிர ஒருவன் ட்ரைவர் போலும் அவன் இன்னமும் சாதா உடையிலேயே இருந்தவன் வண்டியை தூரத்து நிழல் ஒன்றைத் தேடிப் போனான்.

பொடிமட்டை என்று அழைக்கப்படுகிற மூசா மெகானிக் கடை சிப்பந்தியை விசிலடித்து அழைத்தார் சேகர். “இன்னம் சின்னப் புள்ளையாட்டம் சீட்டியடிச்சிட்டிருக்கீரு” என்று செல்லமாய்க் கடிந்து கொண்டே மந்தையில் மீண்டும் ஏறி மேடையில் அமர்ந்தார் குரியகோஸ். “என்ன டீ வாங்கியாரவா” என்று தயாராய் கைகளைத் தட்டிக்கொண்டு வந்தான் அழகு “எலே பொடிமட்டை மாதா கடை மின்னாடி எவனோ கொடைய விரிச்சிட்டு நிக்கான் பாரு… அவங்கிட்டே போயி என்ன விவரம்னு ஃபுல் டீடெய்லும் கேட்டுட்டு வரணும் தெரியுமா?” என்றனுப்பினார். மறுபேச்சுப் பேசாமல் திரும்பினான்.

சற்றைக்கெல்லாம் ரெண்டு மூன்று பேம்ப்லட்களோடு திரும்பினான். அதைப் புரட்டுவதற்குள் “கட்டடம் கட்டுற கம்பெனியாம். ராக்கோட்டை விலக்குல மூணு கிலோமீட்டர்ல “இந்திரபுரி”ன்னு 400 வீடுகள் கட்றாகளாம். எல்லா வசதியும் உள்ளக்கவே வருதாம். மத்த வெவரம்லாம் இந்த பேப்பர்ல இருக்குதாம் என்றபடியே மறுபடி தன் கடை நோக்கிச் சென்றான். குரியகோஸூக்கு மீண்டும் மீண்டும் வீட்டில் இருந்து ஃபோன் வந்த வண்ணம் இருந்தது. “எலே மக பிள்ள பேத்தி எதுக்கோ அழுதிட்டே இருக்காளாம் நா கெளம்புறப்பவே அளுதா இன்னம் சரியாவலை. நா போயி ஆரத்திபுரத்துல டாக்டர்ட்ட கூட்டிப் போயிட்டு வரேன்” என்று இறங்கி வேஷ்டியை அவிழ்த்து இறுக்கிக் கொண்டவர் ‘வந்துர்றேன்’ என்றவாறே சக்தி ஸ்டோர்ஸ் வாசலில் நின்ற தன் புல்லட்டைக் கிளப்பிக் கொண்டு போனார்.

3

அடுத்த ரெண்டு நாட்கள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. மரத்தடி ஒன்று கூடுதலின் நடுநாயகம் குரியகோஸ் தான். அவர் வராத தினங்களில் மற்ற யார்க்கும் சந்திப்பு எடுபடாது. எல்லா இடங்களிலுமே அப்படி ஒரு மனித மையம் இருக்கத்தான் செய்யும். மூர்த்தியோ சேகரனோ எந்த விதத்திலும் காசு பணத்தில் குரியகோஸை விட கம்மியானவர்கள் இல்லை. மூர்த்திக்கு மாவு அரவை மில் இருக்கிறது. மூத்த மகன் தலையெடுக்கும் வரை அவர் சுமந்தது தான் அந்தத் தொழில்பாரம். இப்போது மகன் பார்த்துக் கொள்கிறான். மூர்த்தி அவ்வப்போது சென்று கணக்குப் பார்ப்பார். மற்ற நேரமெல்லாம் ஒன்று இந்த மரத்தடி அல்லது வாசியார்புரத்தில் எலக்ட்ரிக் சாமான் ஸ்பேர் கடை வைத்திருக்கும் ரத்தினம் அவரது க்ளாஸ்மேட் அங்கே போய் உட்கார்ந்து விட்டு வருவார்.

இந்த இரட்டைச்சாலை அவருக்கு ஒருவிதமான நிம்மதியைத் தந்தது. ரத்தினம் கடையைப் பொறுத்தவரை அங்கே செல்லும் பொழுது மூர்த்தி தான் பெரியாள் என்ற தினுசாக இருக்கும். அவர் பேச்சை யாரும் மிகுந்தொலிப்பதில்லை. அவர் அங்கே உட்காரும் போதே கால் மீது கால் போட்டு அமர்வார். எப்போதாவது கத்திரி சிகரட் பிடிப்பார். இல்லாவிட்டால் வெற்றிலை பாக்கு. மரத்தடியில் ஒருவராகவும் ரத்தினம் கடையில் இன்னொருவராகவும் டபுள் ஆக்ட் இன்பத்தில் திளைப்பார் மூர்த்தி.

சேகரனுக்குத் தொழில் பெரிய பால் பண்ணை. கறந்த பாலைக் கொட்டத்து வாசலிலேயே வந்து சொஸைட்டிக்காரர்கள் வாங்கிச் சென்று விடுவார்கள். வீட்டுப் புழக்கத்துக்கு மட்டும் என இரண்டு மாடுகள் தனியே கறப்பதை வைத்துக் கொள்வார். அவரிடமும் காசு பணத்துக்குக் குறைவே இருப்பதில்லை. ஆனாலும் மேற்சொன்ன மூர்த்தியின் இன்னொரு முகம் தான் சேகரனும். குரியகோஸின் ஆகிருதி அப்படி. எல்லாரையும் தனக்குக் கீழாக்கி வளைத்துக் குறுக்கி விடுவார். என்ன ஒன்று அதை யாருமே அறியாமல் செய்து விடுவது தான். உட்கார்ந்து பல தினுசாய் யோசிப்பவருக்கு மட்டும் தான் அது புரியவே செய்யும்.

தன் புல்லட் சப்தம் மிக வந்து சேர்ந்தார் குரியகோஸ் அவர் வந்தபிறகு தான் களை கட்டியது. இன்றைக்கு ஆறேழு பேர் வரை கூட்டம். என்னென்னவோ கேள்வி கேட்க குரியகோஸூம் மனம் லேசாகி விட்டுக்கு மேல் விட்டு அடித்துக் கொண்டிருந்தார். சட்டென்று ஞாபகம் வந்தவராய் “சேகரா…நம்ம வீட்டுக்கு நாளையிலேருந்து உம்பண்ணையிலேருந்து காலிட்டர் பால் சப்ளை செய்துரணும்டே என்ன செய்வியா?” என்றார். அதற்கு அவர் லேசாக யோசிப்பதைப் பார்த்து “என்னடே யோசிக்கிறே?” என்று நேரம் தராமல் கேட்க “அண்ணாச்சி மொத்தமா சொஸைட்டிக்காரங்க வந்து வாங்கிட்டு போயிடறாங்க கான்றாக்டு அவகளக் கேக்கணும்” என்றதும் “சரி நா வேற ஏற்பாடு செய்துக்கிடுறேன்”

சேகரன் கிளம்பிப் போகும் போது அவர் முதுகையே வெறித்தார். “மக பிள்ள பேத்திக்கு வயிறு ரொம்ப படுத்திட்டு மூர்த்தி. என்னமோ கம்பெனி தயாரிப்பு பால்பவுடர் அவளுக்கு ஒத்துக்கிடவே இல்லை போல.. பொறந்ததிலேருந்து இதைக் குடுக்காத, அதைக் குடுக்காதன்னு டாக்டரோட மல்லுக்கு நிக்கவே செரியாய்ருக்குன்னா பாத்துக்கிடேன். அதான் நேத்து டாக்டர் பசும்பாலே குடுங்கன்னு சொல்லி அனுப்பிட்டான். நம்ம வீடுகள்ல பாக்கெட் பாலு தானே இப்பல்லாம். அதும் நித்தம் ஒரு கம்பெனி பாக்கெட்டு வருது நாம எதையும் கொள்ளலாம் கொழந்தைக்கினு வர்றப்ப அப்டி செய்யக் கூடாதில்லா..? அதான் இந்தப் பய என்னடன்னா சேகரன் சொஸைட்டிக்குத் தான் விப்பானா..? நமக்கு ரெண்டு ஆளாக்கு தந்தாக் கொறையாய்ருமா.. எத்தினி பழக்கம் எங்கிட்டயே மூஞ்சில அடிச்சு சொல்லிப்புட்டான் பாரேன்?” என்றவர் “செரி செரி நீ அவங்கிட்ட எதையும் சொல்ல வேணாம் என்ன வெளங்குதா?” என்றபடியே மீண்டும் சகஜமானார்.

எதிரே ரியல் எஸ்டேட் கம்பெனி நிழற்குடை இன்றும் இருந்தது. அன்றைக்கு வந்த பையன்களில் ஒருவன் மட்டும் மாறி புதியவன் வந்திருந்தான். அவன் ஏற்கனவே இந்த ஊருக்குப் பலமுறை வந்தவனாம். அதனால் அனுபவத்தின் அடிப்படையில் அவனை இன்றைக்கு அனுப்பியிருக்கிறார்களாம். இதையெல்லாம் அவனே சற்று முன்பு மரத்தடிக்கு வந்து நிழலில் நின்று டீ குடித்தபடி யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். மறுபடி சென்று உற்சாகமாக வருவோர் போவோரிடம் நோட்டிஸ் வினியோகித்தவன் குரல் சற்றைக்கெல்லாம் தடித்து ஒலிப்பதைக் கண்ட குரியகோஸ் “எலே
அங்க என்ன சத்தம் சண்டையான்னு பாருடே பொடிமட்டை” என்றார். குறிப்பறிந்து சாலையின் அந்தப் பக்கம் சென்று திரும்பிய பொடி மட்டை “அய்யோ அய்யோ” என்றான் வடிவேலு குரலில். “சொல்லிட்டு சிரிடா” என்று அதட்டினார் மூர்த்தி

“இல்லை மாமா அந்த மஞ்ச பனியன் போட்ட ஆளு இப்ப ரியல் எஸ்டேட் கம்பெனி சார்பா நோட்டீஸ் குடுக்கிறாப்ள இல்லையா அவரு போன மாசம் வேற ஒரு சூரிய காந்தி எண்ணெய்க் கம்பெனிக்காக இதே இடத்துல குடையை நட்டு ஒண்ணு வாங்குனா ஒண்ணு ஃப்ரீன்னு வித்தாப்ளயாம். அந்த எண்ணெய் ஒத்துக்கிடாம மந்திரமூர்த்தி அண்ணனுக்கு வயித்து நோவாப் போச்சாம். கம்பெனி அட்ரஸ்ல கேக்கலாம்னு பார்த்தா அது வட இந்தியால தயாராகுது. கடைல வாங்கிருந்தா திருப்பி ரிடர்ன் குடுத்திருக்கலாம் இப்பிடி வீதில வாங்கிட்டு வந்து உசுர வாங்குறீயளேன்னு வீட்ல ஒரே சண்டையாம். அத்தாச்சி அன்னைக்கு டின்னு கட்டுன ஆத்திரத்தை எல்லாம் இன்னைக்கு அதே பய்யன் வேற கம்பெனி விளம்பரத்துக்கு நோட்டீஸ் தர்றதைப் பார்த்ததும் மந்திரத்துக்கு சொல்லொணாக் கடுப்பாய்டிச்சி”.. சிரித்துக் கொண்டு “எண்ணெய வாங்கிட்டு பாதிக்காசு குடுறான்னு கேட்டா அவன் பாவம் நித்தம் ஒரு கம்பெனிக்கு வேலை பார்க்குறவன் எப்பிடி திருப்பித் தருவான். போதும் போதும்னு ஆயிட்டது போங்க..”

“அப்பறம் எப்பிடி சமாதானம் ஆனாப்டி என்று கேட்ட மூர்த்தியிடம் இதென்ன உலக யுத்தமா மந்திரமூர்த்தி ஒரு வெளங்காத பய. ஓனரையில்ல சட்டையப் பிடிக்கணும்..?” என்றார் குரியகோஸ் “அட என்னங்க நீங்க முதலாளி எல்லாம் இப்ப வடக்கஸ்தன். அவனை நாம நெருங்கமுடியாது. அவன் வானத்துல பறப்பான். வீதியில அவன் கால் படாது கேட்டேளா..? அவனையெல்லாம் நாம வாழ்க்கையில ஒருதடவை கூடப் பார்க்கவே முடியாது. நாமல்லாம் அவனை நெனைச்சிட்டே வாழ்ந்துட்டுப் போணும். தட்ஸ் ஆல் வாத்தியாரே நீரும் நம்ம நடேசன் மாதிரி இருக்கப் பழகிக்கும்” என்று சிரித்தபடி கடந்து போனார் சாமிக்கண்ணு.

ஆளாளுக்குப் பேசினார்கள் கட்சி கட்டிப் பிரிந்து நின்றார்கள்

நோட்டீஸ் குடுத்தவனால நிலத்தோட வில்லங்கத்துக்கு ஜவாப் சொல்ல முடியுமா? போன மாசம் எண்ணெய் வித்தவனை இன்னைக்கு திரும்பக் குடுன்னு கேட்டா என்னய்யா நியாயம்? அவன் கையில இருந்த நோட்டீசை எல்லாம் பிடுங்கி எண்ணைய வச்சிட்டு காசு திருப்பிக் குடுன்னு கேட்குறதெல்லாம் அராஜகமில்லே..?

இப்போது அந்த இடம் வேறொரு வெம்மைக்குப் பழக்கமாகிக் கொண்டிருந்தது. யார் யாரோ வேடிக்கை பார்க்க அருகே வந்து நின்றுகொண்டிருந்தார்கள். கொஞ்சம் காற்றுக் குறைவோ என்னவோ லேசாய் வியர்த்தது குரியகோஸூக்கு. நடேசன் எப்போதும் எதிராடிப் பேசுகிறவரில்லை. ஆனால் ரத்தக்கொதி உள்ளவர். எதையாவது தனக்கு நிகழ்கிறது என நம்பினார் என்றால் அதன் பின் பேயாட்டம் ஆடுவார். அவரைப் பார்த்துக்கொண்டே பொடிமட்டை “வக்கு இருந்தா எண்ணெய்க் கம்பெனி முதலாளி சட்டையைப் பிடிச்சி இழுத்துருக்கலாம்ல” என்று பொருத்தமில்லாமல் மீண்டும் எடுத்தான். அது என்னவோ தனக்கு விடுக்கப் பட்ட அம்பு எனப் புரிந்து கொண்டார் நடேசன்.

“நானெல்லாம் QVS கம்பெனியில கிளார்க்கா சேர்ந்தன்னிக்கி எனக்கு பதினெட்டு வயசு. நாப்பது வருஷம் ஒரே சீட்டுல வேலை பார்த்தாக் கூடப் போதும்னு இருந்தேன். படிப்படியா முன்னேறி ஒரு கட்டத்துல சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் அக்கவுண்ட்ஸ் அப்டின்ற போஸ்ட்ல உக்கார்ந்தேன். எனக்குக் கீழே அன்னிக்கு எண்பத்து மூணு பேர் வேலை பார்த்தாங்க.. என் கம்பெனி தான் எனக்குக் கடவுள். இதோ ரிடையர் ஆனப்புறம் கூட மூனு வருஷம் எக்ஸ்டென்ஷன் தந்தாங்க. போதும் போதும்ன்ற அளவு எனக்கு உயரத்தைக் குடுத்தது என் கம்பெனி தான். நான் அதுமேல வச்சது விஸ்வாசம். அது என்மேல வச்சது கருணை. என்கூட வேலை பார்த்த பட்டாபிராமன்ற அசிஸ்டெண்ட் மேனேஜர் ஹார்ட் அட்டாக்ல பொட்டுன்னு போயிட்டான். உடனே கம்பெனி அவன் குடும்பத்துல ஒருத்தருக்கு நிரந்தரமா வேலை தந்துது. பட்டாபியோட ரெண்டாவது ஸன் இப்போ சீனியர் மெஷின் டூல்ஸ் இஞ்சினியரா அஹமதாபாத்ல வேலை பார்க்கறான். எல்லா முதலாளியுமே கெட்டவங்கன்னு சொல்றது ஒரு ஃபேஷனாப் போய்ட்டது”

நடேசனுக்கு உதடுகள் துடித்தன. அவர் கையில் கட்டி இருப்பது விலை மதிப்புள்ள கடிகாரம் மட்டுமல்ல. 25 ஆம் வருட சர்வீஸைப் பாராட்டி கம்பெனி அணிவித்த பட்டயம். அதெப்படி எல்லா முதலாளியும் கெட்டவர்களாக இருக்க முடியும்..?

4

மழையைப் புரிந்து கொள்வது சிரமம். அடுத்த வினாடி என்னவாக மாறும் என்று தெரியவே தெரியாது. வருட வருடங்களாய் அது தன்னிஷ்டத்துக்கு வந்து போகிறது. பருவம் தப்பாத மழைக்குத் தனி நன்றி சொல்லலாம். தப்பே இல்லை. அந்த வருடம் சொல் பிசகாமல் பெய்து கொண்டிருந்தது மழை. பெரியவீட்டில் இருந்து அவினாசி மட்டும் சைக்கிளில் வந்து ஜாபர் கடையில் டீ வாங்க நின்று கொண்டிருந்தான். “எங்கவே கம்பெனியக் காணம்?” என்று கேட்டதும் “இண்டோர்லயே கடை நடத்றான் கிறுக்குப் பய. மாடியை விட்டு கீழ கூட வர்றதில்ல. மழை முடியுமட்டும் இதான் ஸீன். மழை வாழ்க” சீட்டியடித்தபடி கிளம்பி மறைந்தான். குரியகோஸ் மந்தைக்கு வந்தும் ரெண்டு மூணு நாட்கள் ஆகின. மூர்த்தி இங்கே வரப்பிடிக்காமல் ரத்தினம் கடைக்குப் போகலாம் என்று மழைக்குத் தப்பி ஆட்டோவில் கிளம்பினார். வழியில் சுந்தரமும் சேகரனும் பேசிக் கொண்டிருக்க சேகரனைத் தன்னோடு அழைத்துப் போனார்.

“குரியகோஸ் தனக்குன்னு ஆழாக்குப் பால் கேட்டப்ப நீ மறுத்திருக்கப் படாதில்லடே” என்றதற்கு தயாராக இருந்த பதிலை சொன்னார் சேகரன்.
“இந்தாரு மூர்த்தி நம்ம பழக்க வழக்கம் வேறவே… இது கம்பெனி விஷயமல்லா.. சொசைட்டின்ற பேர்ல பால் கம்பெனி ஒண்ணு தான் கொள்முதல் செய்யிதி. நாங்க ரீடெயில் செய்யப்படாது. என் வீட்டுக்கு எடுத்து வச்சிக்கிடலாம். மத்தபடி வியாபாரமாப் பண்ணக் கூடாது. இத எழுதி கையொப்பமிட்டிருக்கம்லா.. மீறமுடியுமா தாயும் பிள்ளையும் ஒண்ணுன்னாலும் வாயும் வயிறும் வேறலா.. .எல்லா பேரும் பாக்கெட் பாலுக்கு மாறினப்புறம் தானடே என்னைய மாதிரி பண்ணை ஓனருங்க கம்பெனிகளை நாடினோம்.. இப்ப வந்து ஆளாக்கு பால் குடுன்னு கேக்குறதை நிறுவ முடியுமா..? இவாள்ட்ட நல்ல பேர் எடுக்கத்தான் ஆசை. மொத்தப் பாலையும் யார் வேணா மாத்திக்கிடட்டும். ஆளாக்கு தர்றது ஆகாவளி”

சிறிய மௌனத்திற்கப்பால் “செரி உண்ட்ட நான் இதைச் சொன்னேன்னு சொல்லாதிரு போதும்” என்று மட்டும் சொன்னார் மூர்த்தி. அன்றைக்கு ரத்தினம் கடையிலும் இருக்க ஒப்பாமல் சீக்கிரமே திரும்பி விட்டார்கள் .

மழை அடித்து வலுத்தது. அடுத்த இருபது மணிநேரங்கள் மழையின் பிடியில் மண் இருந்தது. மறுநாள் எப்போது புலர்ந்ததெனத் தெரியாமல் வெளியே வந்த சனமெல்லாம் ஊர் மந்தையில் மரம் சாய்ந்து கிடப்பதைப் பார்தது உச்சுக் கொட்டியபடி சுற்றிப் போய்க் கொண்டிருந்தனர். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. பிரசிடெண்ட் எம்.எல்.ஏவிடம் கேட்கவேண்டும் என்று ஃபோன் செய்தார். வனத்துறை பொதுப்பணித் துறை என நாலைந்து துறை சார்ந்த ஆபீசர்கள் வர ஆரம்பித்திருந்தார்கள். இனி இதனை எழுப்பி நிற்க வைப்பது அசாத்தியம் என்று தெரிந்த பிறகு முறிந்த மரத்தை முற்றிலுமாக நீக்கி விடுவதே சிறப்பு என்ற முடிவுக்கு வந்தனர். இரண்டு தினங்கள் கடுமையாக முயற்சி செய்ததில் அப்படி ஒரு மரம் இருந்த தடமே தெரியாமல் இடமே புதிய தோற்றத்துக்கு மாறி இருந்தது.

எதிரே மைதானத்தின் வெளிச்சுற்றுச் சுவரை ஒட்டிக் கட்டுவதாக இருந்த யூனியன் ஆஃபீஸூக்கான கட்டிடத்தை இனி இந்தப் பக்கம் மரம் இருந்த இடத்தில் கட்டலாம் என்பதாக ஏகமனதாக அடுத்த வாரமே பூமி பூஜை என்று ஊர்க்கூட்டத்தில் முடிவானது. அந்த வாரம் முழுக்க குரியகோஸ் வரவே இல்லை. தான் வராவிட்டால் தன்னைத்தேடித் தனது வீட்டுக்கு யாரும் வருவதை எப்போதோ தடுத்திருந்தார்.

பொடிமட்டை ஜாபர் கடை மாஸ்டரிடம் “அரைப் பார்சல் என் கணக்கில்லே இது கம்பெனி டீ” என்று சப்தமாகக் கேட்டான். குரியகோஸ் மூசா கடைக்கு பேசினதாகப் பொடிமட்டை சொன்ன போதுதான் அவர் ஊரில் இருக்கிறார் என்று தெரிந்தது.

குரியகோஸ் மீண்டும் மந்தைக்கு வந்த போது வேற்றூருக்கு வந்தாற் போல் இருந்தது. மூசா கடைக்கும் ஜாபர் டீக்கடைக்கும் இடையே நாலு இரும்பு சேர்கள் போடப்பட்டிருந்தன. அதில் இரண்டில் அமர்ந்து எப்போதும் போலப் பேசிக் கொண்டிருந்தார்கள் சேகரனும் மூர்த்தியும் இவர் வந்ததும் வாங்க வாங்க அண்ணாச்சி என்று எழுந்து மரியாதை செய்தனர். அரை மணிநேரம் கூட ஆகவில்லை. குரியகோஸூக்கு உட்கார இருப்புக் கொள்ளவில்லை. முன்பிலாத வெயில் காற்றின் வரத்துக் குன்றியது வேறு சதா வியர்த்து ஊற்றியது.

நடேசனும் சொக்கரும் தூரத்தில் ஏதோ மும்முரமாய் விவாதித்தபடி இருக்க குரியகோஸ் தாழ்ந்த குரலில் “எடே மூர்த்தி. இனி இந்த இடம் சரிப்படாது. நீ ஒரு கடைக்கிப் போவயே வாசியார்புரத்தில அதென்னது ரத்தினம் எலக்ட்ரிகல்ஸா..? பகல்ல அங்கன வேணா போயிக்குவமா இனிமேட்டு?” என்றார். எங்கோ பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி “இப்பல்லாம் ரத்தினத்தோட பொஞ்சாதியும் மச்சினனும் கடைக்கித் தொணைக்கி வந்துர்றாக அண்ணாச்சி.. அவ்விடம் செரிப்படது” என்றார். சேகரனுக்கு வேறொரு உண்மை தெரியும். ஆனாலும் சொல்ல முடியாதல்லவா?

வெக்கையில் ஊறிய உடையை விரல்களால் நகர்த்தினபடியே குரியகோஸ் “செரித்தாண்டே அப்ப பொழுது சாய்ஞ்சப்புறம் வேணா இங்கன பார்க்கலாம்” என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மூர்த்தி கிளம்பிப் போனதும் சேகரனுக்குத் தானும் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்றாகி
“என்ன அண்ணாச்சி பெலமாயிட்டு சிந்தனை” என்றார்.

ஒரு கணம் யோசித்த குரியகோஸ் தீர்மானமாகி கடசி மவன் ஜெபா அன்னைக்குப் பார்த்தீயள்ல…அஞ்சாறு வருஷமா இவங்கை ஓங்கி இருந்திச்சி கம்பெனில. என்ன நடந்ததோ போன வருசம் இவன் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லைன்னு சமீபத்துல கம்பெனில இடம் மாத்திருக்கானுக. எவ்வளவோ உளச்சிக் கொட்டினதெல்லாம் மறந்துட்டானுகளேன்னு மனக்கஷ்டம் இவன் இடத்துக்கு வேற ஒரு ஜெர்மன்காரன் வந்திருக்கான் போல. இந்தப் பய காக்கடுதாசி எழுதி நீட்டிட்டு வந்துட்டான். ஐஞ்சு நா முன்னாடி எதோ மருந்தைக் கலக்கி குடிச்சிட்டான் போல.. ஐசீயூல இருந்தவன் இப்பம் தேறிட்டான். இருந்தாலும் பழையபடி குரல் ஏறிக் கேட்க மாட்டேங்குதாம். மருமக அழுதிட்டே ஃபோன் செய்தா. அதாம்டே வெளிய வரவே பிடிக்கலை.

முகத்தை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டபடி இது இல்லாட்டி வேற வேலை. .இல்லாட்டிக் கூட சம்பாதிச்சது வரைக்கும் போதும்னு இங்கன வந்து ஒண்ணுமண்ணா இருந்தாப் பத்தாதா? “விட்டதப் பிடிச்சிட்டுத்தான் வீட்டுக்கு வருவேன்னு சொன்னானாம். கிறுக்குப் பய” என்றவர் தழுதழுத்த குரலில் “இது உங்கிட்டே சொல்றேன். நீ வெளிப்படுத்திடாத என்ன?” என்று எழுந்து கொண்டார்

தூரத்தில் மரம் வெட்டப்பட்ட இடத்தில் அதன் எச்சங்கள் கிடந்தன. சைக்கிளை அவினாசி ஓட்ட பின்னால் அமர்ந்து வந்த பரணி குதித்து இறங்கினான். மரம் இருந்த தடத்தில் பையைத் தலைகீழாக்கி அதனுள் இருந்த சகல சாமான்களையும் கொட்டினான். முடிவாக அந்தப் பையையும் வேறு திசையில் எறிந்தவன் உதடுகளை ஈரம் பண்ணிக் கொண்டு சுற்றிலும் பார்த்தான். வாகாக ஒரு வேப்பங்குலையைக் கையில் எடுத்து தரையை ஓங்கி அடிக்க ஆரம்பித்தான். “கம்பெனி…எலேய் கம்பெனி…எச்சிக்… கலை…நாயே…. கம்பெனி…ச்சீய்த் தூ….”

இன்னமும் அடித்துக் கொண்டே இருக்க அதைக் கவனியாத முகபாவத்தோடு எதிர்ப்புறம் இருந்த தன் புல்லட்டை நோக்கி நடந்து சென்றார் குரியகோஸ்.

**

(ஆத்மார்த்தி – 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார், தற்பொழுது மதுரையில் வசித்து வருகிறார். தொடர்புக்கு – [email protected])

6 COMMENTS

 1. நாவலுக்கான விவரனைகள் போல பல இடங்களில் எழுத்து நடை இருப்பது உவப்பாக இல்லை. மேலும் நாவலென்றாலுமே சில விவரனைகள் அயற்சியளிக்கும் அல்லவா ?! கதை நிகவுக்கு வெளியே எனும்போது
  அது தற்குறிப்பேற்றுவதாக மட்டும் அமைகிறது. உதாரணத்திற்கு அந்த மேடை குறித்த ஆகமம், அடுத்து இறந்து போகிறார்கள்… போன்றவை., ஆனால் அன்புச் சகோதரர் ஒரு எழுத்து இராட்சன். அதில் அவர் தன்னையே தான் ஆட்கொள்ளவிடுவார் என்பதும் அழகான ஒன்றுதான். 😀

 2. மிகவும் யதார்த்தமான கதை. சூரியகோஸ் பெயர் புதுமை

 3. //அந்த மனிதர் களிம்பு டப்பாவை பூப்போல ஒரு ஓரத்தில் நழுவ விட்டார்.// 👏 🙂

 4. மழை எப்படி ஒரு இடத்தைத் தனதாக்கிக் கொள்ளுமோ அப்படித்தான் நிழலும் தனக்கான இடங்களை உடமைப்படுத்திக் கொள்ளும்। // 💜

  “கொரோனா காலத்து கதைகள் ”கம்பெனி” என்னும் ஆத்மார்த்தியின் கதை…

  சமகாலத்தில் எழுதியதாகினும் இக்கதையின் பேசுபொருள் எல்லா காலத்திற்கும் பொருந்தும்.💜

  கம்பெனி எனும் ஒரு வார்த்தை கொண்டு சமூகம் வணிகம் சகவாசம் எனும் அத்தனையையும் எழுதிச்செல்லுகிறார் ஆத்மார்த்தி!

  இக்கதை பயணிக்கத் தொடங்கும் இடமும் முடிவடையும் இடமும் ஒன்றாகினும் வாழ்வில் நிரந்தரம் என்பது எதுவுமில்லை என்பதையும் காலம் மனித வாழ்வை ஒரு சீட்டுக்கட்டினை அடுக்கி ஆடுவதுபோல் கலைத்தாடுகிறது என்பதையும் அழகாக சொல்லிச் செல்கிறார்.💜

  சிறுகதை தான் மனச்சிறகு விரித்து நம்மை வெகு தொலைவு கூட்டிச் செல்கின்றது.💜

 5. ஒரு மரத்தடியில் அமர்ந்து நல்ல கதை கேட்டது போல் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here