உலகின் அழகிய துயரம்

1

(ஜீவ கரிகாலன்)

காலை சார்ஜ்ஜில் போட்டிருந்த செல்போன் இத்தனை வேகத்தில் தீரும் என அவன் எதிர்பார்க்கவேயில்லை, ஸ்விட்ச் ஆன் செய்ய மறந்துவிட்டிருந்தான். அவனது வாழ்நாளில் தவறிப்போன முதல் செயல் அது. . வாடகைக்காரில் இருந்து இறங்கும்போதே மனம் அழுத்தம்பெற ஆரம்பித்தது. திமிங்கலத்தின் வாயெனத் திறந்துகிடந்த விமானநிலையத்தின் உள்ளே நுழையும் போது அவன் செல்பேசி மரணப்படுக்கையில் வரும் விக்கலைப் போல திக்கிக் கொண்டிருந்தது. வேகவேகமாக செக்-இன் செய்துவிட்டு தனது கடவுச்சீட்டினைக் கையிலெடுத்தபடி அடுத்த கட்ட சோதனைக்குச் சென்றான். சோதனைக்கான இடத்தில் செல்பேசியை ட்ரேயில் போடும் போது அது செத்தேவிட்டது. நீண்ட வரிசையில் அவனும் ட்ராலியில் வைத்திருக்கும் செல்லினைப் பார்த்தபடியே நகர்ந்துகொண்டிருந்தான். அவனது போன் இருந்த தட்டும் மின்மயானத்திற்கு செல்வது போலவே ஸ்கேனரில் நுழைந்தது. ஆனால் அவனுக்கு முன்னர் பதினைந்துபேராவது இருந்தார்கள். ரயில்வே கவுண்ட்டர், ரேஷன் கடையை விட விமானநிலையத்தின் தனிநபர் சோதனைக்கான க்யூ கொடுமையானது என்று அவன் தன் நண்பர்களிடம் சொல்வதுண்டு.. அந்த உரையாடல்கள் நடந்தே பத்தாண்டுகளுக்கும் மேலே இருக்கும். விமானப் பயணம் என்பது அன்றாடங்களில் ஒன்றாக மாறவில்லை என்பது மட்டுமே ஆறுதல். ஆனாலும் எங்காவது பயணித்துக்கொண்டே தான் இருக்கிறான். அது அவனாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வது. நாடறிந்தவன் என்று இவனைச் சொல்லிவிட முடியாது, நாடறிந்த மில்லியனர்கள் பலரும் அறிந்த பிரபலமான பெர்சனல் பாங்க்கர்.

அவனோடு படித்த கல்லூரி நண்பர்கள் வங்கித் தேர்வு எழுதிய காலம். விடாப்பிடியாக தனியார் வங்கியில் தான் வேலைக்குச் சேர வேண்டும் என்று சபதமிட்டுக் கொண்டான். கல்லூரிக்கு சென்ற எல்லா நாட்களிலும் நூலகம் சென்று பொருளாதாரம் குறித்த நாளிதழ்களை மட்டுமாக வாசித்து தன்னை வளர்த்தெடுத்தவன், திட்டமிட்டபடியாக அவன் வாழ்வு கூடவே வந்தபோது. நண்பர்களிடமிருந்தே விலக ஆரம்பித்தான். பெற்றோர்களுக்கு பொருளாதார ரீதியாக உடனிருப்பதைத் தவிர ,பெரிய தூரம் ஒன்றைக் கணக்கிட்டு கடைபிடித்தான். ஏழெட்டு வருடங்களிலேயே வெளிநாட்டு வங்கியில் பணி, மூன்று வருடங்களில் பதவி உயர்வு. அங்கிருந்து வேறொரு நாட்டிற்கு சென்று மிகப்பெரிய தனியார் வங்கி ஒன்றில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றினான். அடுத்த ஐந்து வருடங்களில் வேலையைத் துறந்துவிட்டு, தனியாக ஒரு பெர்சனல் பாங்க்கிங் நிறுவனம் ஆரம்பித்தான். அவனது அனுபவத்தில் கிடைத்த வாடிக்கையாளர்கள் காந்தவிசையில் ஈர்க்கப்படுவதைப்போல இவனைத் தொடர ஆரம்பித்தார்கள். வெவ்வேறு நாடுகளில் உள்ள தமது வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பரிந்துரைப்பது மட்டுமே வேலை. அவனது அலுவலகத்தின் மொத்த வேலையாட்களும் இதற்கான தரவுகளைச் சேமிப்பதற்காக அமர்த்தப்பட்டவர்கள், மற்றபடி உலகின் பல்வேறு கால மண்டலத்திலிருந்தும் இவனது வாடிக்கையாளர்கள் அழைத்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை முக்கியத்துவம் பெற்ற அவனது செல்போன் முதன்முதலாக இப்போது அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

சோதனை முடிந்து உடைகளைச் சரிசெய்தபடி செல்போன் ட்ரேயை தேடிப் பிடித்தான்.. சில்லிட்டிருந்தது. எப்போதும் இப்படி நடந்ததில்லை. சோதனையின் போது ஏற்படும் ஸ்ட்ரெஸ்ஸை ஈடுகட்ட, சோதனை முடிந்ததும் அவனது மனம் ஜானி வாக்கர் பற்றி நினைத்துக்கொண்டிருக்கும். அது, பங்கு வர்த்தகத்தில் வாங்கும் ஆப்ஷன்களைப் போல. அவன் இயல்பு அது. மது அருந்துவதைக் கூட தனது தொழில் மனத்தோடு தான் பார்ப்பான்.

“உடல்தேவைக்கு எதற்கு ஈக்விட்டி மார்க்கெட் போகணும், நமக்கு தான் ஆப்ஷன்கள் இருக்கே” என்பது அவனது பொன்மொழிகளில் ஒன்று. அவனது கடவுச்சீட்டின் முத்திரைகளே சொல்லும் அவனது உடல்தேவைக்காகவும் பலமுறை அவன் பிற தேசங்களுக்கு சென்று வந்ததை. ஆனால் அத்தகைய பயணங்கள் பங்கு வர்த்தகம் போல் ஏற்ற இறக்கத்தோடு அல்லாமல் சீரான இடைவெளியில் அமைந்திருக்கும். பங்கு வர்த்தகம், கமாடிட்டி, ரியல் எஸ்டேட், நலிந்த தொழில் நிறுவனங்களை வாங்குவது தீவுகள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் வாங்கும் ஒரு சிண்டிகேட் நிறுவனத்தில் இவனும் உறுப்பினராகியிருந்தான்.

மத்தியவயதைத் தாண்டியும் இளைஞனைப் போன்றே தோற்றமளிக்கும் அவனுக்கு, அவனது வாழ்க்கை முழுக்க இப்படித்தான் எல்லாவற்றையும் வேறு ஒன்றால் சமன் செய்ய முடியும் என்றொரு தீவிரமான நம்பிக்கை. அதுவொரு சிறிய நகரத்தின் உள்ளூர் விமானநிலையம், விமானநிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு பெரும்பகுதி நிலத்தை வாங்குவதற்கான பேரத்தில் தனது வாடிக்கையாளர் சார்பாக கலந்து கொண்டு திரும்புகிறான். உள்ளூர் விமான நிலையம் என்பதால் நேரே லவுஞ்சில் போய் அமர்ந்து கொள்ள இயலாது, ரயில்நிலைய முன்பதிவு கவுண்ட்டர் போன்ற இரும்பு நாற்காலிகள். குளிரூட்டப்பட்ட அறை, துருப்பிடிக்காத இரும்பு நாற்காலிகள் என்பது மட்டும் தான் வித்தியாசம். அதுவும் கூட மாநகரத்து மெட்ரோ ரயில்நிலையம் என்கிற அளவிற்கு கூட வரவில்லை.

இருக்கையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அவனது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுத்த அசலான ஓவியம் ஒன்றின் பிரதி சுவரில் மாட்டப்பட்டிருந்தது கண்ணில் பட்டது. சமீபத்தில் இதற்கும் முன்னர் மூன்று நான்கு முறை வந்து போனபோதெல்லாம் கண்ணில் மாட்டாமல் இருந்தது ஆச்சரியம் தான்.

தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு கேன்வாசில் ஐந்துக்கு நான்கு அடி என்கிற அளவில் கரும்பச்சை நிற பின்னணி வண்ணத்தில் சோகத்தில் கவிழ்ந்த ஒரு பெண் முகத்தின் கண்ணாடி பிம்பம் வரையப்பட்டிருந்தது அதில் அந்த பிம்பத்தில் Aye Man என்று கையெழுத்திடப்பட்டிருந்து. அந்த ஓவியம் உலகப்புகழ்பெற்ற அயன் மேண்டி என்கிற செயற்கை நுண்ணறிவு வல்லுனரால் அவரது விடுமுறை காலத்தில் வரையப்பெற்ற ஓவியம். அயன் மேண்டியின் புகழினாலே புதிதென எதுவும் சொல்ல முடியாத நுட்பங்களைக் கொண்ட அவ்வோவியம். ‘உலகின் அழகிய துயரம்’ என்று பெயரிடப்பட்டிருந்த அவ்வோவியம் மிகக்குறுகிய காலத்தில் புகழ்பெற்றது.

லண்டனின் புகழ்பெற்ற காலரியில் அந்த ஓவியம் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது, யாரும் எதிர்பாராத அளவு அந்த ஓவியம் கவனம் பெற ஆரம்பித்தது. பத்திரிகைகள் “ஐ-போன் லாஞ்சிற்கு இணையான வரவேற்பு” என்று செய்திகள் வெளியிட்டன. அவ்வோவியம் குறித்த செய்தியும், அந்தப் பெண்ணின் சோகத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கேலரிக்குச் சென்று பார்ப்பவர்கள் வெவ்வேறு காரணங்களை அதில் எழுதி வைக்க ஆரம்பித்தார்கள். க்வோரா, ட்விட்டர் போன்ற தளங்களில் அது பெரியதொரு கவனம் பெற்றது. ஐரோப்பிய கலையுலகில் அவ்வோவியம் பிரபலமடைந்து வருகிறது என்பதை அறிந்தவன், தாய்லாந்து நாட்டு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிபரான ஒரு அமெரிக்க வாடிக்கையாளரின் பெரிய முதலீட்டினை அந்த ஓவியத்திற்கு பரிந்துரைத்தான். ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் விமானநிலையம் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, ஒரு கேலரியில் அவ்வோவியம் பத்திரப்படுத்தப்பட்டது. அந்நகரில் இப்படி ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் பெரும்பணக்காரர்களின் முதலீடாக, கருப்பு பணத்திற்கு மாற்றாக இவ்வாறு பாதுகாக்கப்பட்டு இருக்கும். ஊடகங்களில் வெளியான படங்களைக் கொண்டு ஓவியத்தில் இருக்கும் இத்தனை நுட்பங்கள் எவ்வாறு இந்தியாவில் வைத்து போலி ஒன்று உருவாகியிருக்கும் என்கிற கேள்விகள் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தன. அனுமதியின்றி இவ்வாறான பிரதியை எடுத்து அதுவும் ஒரு விமானநிலையத்தில் வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்பதோடு ஸ்விஸ்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஓவியத்தின் நகல் எப்படி இங்கே கொண்டுவரப்பட்டது, இது அசலான ஓவியமாக இருப்பின் எப்படி கொண்டுவரப்பட்டிருக்கும் என்ற யோசனை இவனை கலவரப்படுத்தியது.
ஓவியம் குறித்து நன்கு யோசித்துப் பார்த்ததில் அது 36க்கு 26 இன்ச் எனும் அளவில் உள்ள ஓவியம் என்று தோன்றியது. விமானநிலையத்தில் இருப்பதோ ஐந்திற்கு நான்கு அளவிலான ஓவியம். மேலும் அந்த ஓவியத்தின் சட்டகம் மரத்தாலானது மட்டுமே என்கிற நினைவும் வந்தது. இங்கே தான் தங்கமூலாம் பூசப்பட்ட சட்டகம், இந்நாட்டு மக்களின் தங்கத்திற்கான ஏக்கம் வெளிப்படுத்தப்பட்டிருந்ததாக தனக்குத்தானே ஏளனம் செய்தான்.

‘அயோக்கியத்தனம்’ என்று மனதில் சொல்லிக்கொண்டே, ஏர்போர்ட் மேனேஜரிடம் சண்டை போட வேண்டும் என்கிற கோபமான உடல்மொழியோடு நகரலானான். எதற்கும் படம்பிடித்து வாடிக்கையாளர்களுக்கும், அந்த ஓவியத்தை விற்பனை செய்த கேலரிக்கும் அனுப்பலாம் எனத் தோன்றியது. ஆனால் செல்பேசியில் உயிரில்லை என்கிற நினைவுவர, அதை சார்ஜ் செய்திட முனைந்தான். எல்லா சார்ஜ் பாய்ண்ட்களும் சார்ஜர்கள் பொருத்தப்பட்டு மறுமுனை கைப்பேசிகளை இணைப்பில் வைத்திருந்தன. அந்த நாள் தனக்கானது இல்லை என்று நினைத்தபடி ஒவ்வொரு சார்ஜிங் பாய்ண்ட்டிலும் நின்று கொண்டிருந்தான். ஒரேயொரு ப்ளக் பாய்ண்ட்டில் சார்ஜர் பொருத்தப்பட்டிருந்தும் கைப்பேசி சரியாகப் பொருத்தப்படாமல் இருந்ததால், அந்த இடத்தைத் தேர்வு செய்தான்.

இதற்கு முன் திருடியதில்லை அல்லது புரோக்கர்கள், முகவர்கள், ஏஜென்சி இல்லாமல் நேரடியாகத் திருடியதில்லை என்கிற எண்ணம் அப்போது அவனுக்கு வந்ததும் அவசியமில்லை தான். இது எப்படி திருட்டாகும் என்கிற ஆறுதலையும் அவன் அகம் சொன்னது. இது க்ரைமின் எல்லைக்குள் வராத ஐந்து முதல் பனிரெண்டு வாட்ஸ் நான்-க்ரைம் தான் என்று தேற்றிக்கொண்டது.

அந்த சார்ஜரை கழற்றி வைத்து இரண்டு நிமிடங்கள் வரை பார்த்துக்கொண்டிருந்தான். யாரும் வரவில்லை, துரிதமாக அந்த துளைகளில் தனது சார்ஜரைப் பொருத்தினான். சார்ஜரைப் பொருத்திவிட்டு, தன் கைப்பேசியையும் இணைத்துவிட்டபின் சற்று ஆசுவாசமடைந்தான். உலகோடு அவனுக்கு இருக்கும் தொடர்பு கைப்பேசி இல்லையெனில் பத்து முதல் இருபது சதவீதம் தான் இருக்கும்.

சில நிமிடங்கள் கரையவும், தன் அருகே ஒரு ஆள் இருப்பதையும் தன்னிடம் பேசுவதற்கும் உணர்ந்தான்.
அந்த நகரத்திற்கும், தேசத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போன்ற ஒரு பெண் நின்றிருந்தாள். நீல வண்ணத்திலும் நீளமான அலங்காரம் செய்யப்பட்ட உடையை அணிந்திருந்த பெண், அவனைப் பார்த்து கையை நீட்டினாள். சற்றும் பரிட்சயமில்லாத ஒருத்தியாகவும் எங்கேயோ சந்தித்தது போன்றும் ஒரு கலவையான உணர்வு அவனுக்கு வந்தது. அவளது தோளில் இருந்து தொங்கும் ஒரு கூடை போன்ற பையில் கங்காருக்குட்டி போல் அவனையே உற்றுநோக்கியபடி ஒரு குழந்தை இருந்தது. அந்த சார்ஜர் அவளுடையது என்று கைநீட்டினாள்.

‘மன்னிக்கனும்’ என்று அவன் போட்டிருந்த சார்ஜரை எடுக்கச்செல்கையில், அவனைத் தடுத்தாள்.
இத்தனை காலமாய் இல்லாத ஒரு சமன்குலைவு அவனுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தது. தடுமாறியபடியே அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். அவளும் தான் பயணிக்கின்ற விமானத்தில் பயணிக்க இருப்பதாகவும், தனியாக வந்திருப்பதாகவும் தெரிந்துகொண்டான். அம்மாநகருக்கு அவள் முதல்முறை வந்ததாகவும், அலுவல் நிமித்தம் வந்து செல்வதாகவும் சொன்னாள். சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் கைப்பேசியினை இப்போது உயிர்ப்பிக்க வேண்டாம் என்றும் நினைத்துக்கொண்டான்.

ஒரு சில நொடிகளிலேயே அவன் கடந்து வந்த தேசங்களின் பெண்களோடு ஒப்பிட்டு அவளை ஒப்பிட்டுக் கொண்டிருந்தான். உலகின் மிகச்சிறந்த அழகிகளின் குழுவிலிருந்து வந்தவள் என்று பட்டம் சூட்டலாம், ஆனால் முகத்தில் ஒரு பாதுகாப்பின்மையும், அச்சமும், கலவரத்தை மறைத்து வைத்திருக்கும் கதிர்வீச்சை உமிழும் கண்களும், பயணத்தால் வந்திருக்கின்ற கடும்வெப்பத்தைத் தாங்காத உதடுகள் தன் ரேகைகளை ஓவியங்களின் textureஐப் போலவே அவனுக்கு உணர்த்த அவள் உக்ரேனியனாக இருக்குமோ என்றும் எண்ணங்கள் பலவிதமாக மனச்சுவற்றில் சாயம்பூசிவிட்டு அதனைச் சுரண்டிக்கொண்டிருந்தது. அவள் ஏதோ தவிப்பில் இருப்பதும், அந்நியப்பட்டு இருப்பதும் உறுதியாக புலனாகியது. அவளது சார்ஜரை தொடாமல் இருந்திருந்தாலும், அவனிடம் இன்று பேசியிருப்பாள் என்று நம்ப ஆரம்பித்தான். பொதுவாக அவன் இப்படி நம்ப ஆரம்பித்தால், அவற்றை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரையாக்குவதை மட்டுமே செய்து வந்தான்.. நீண்ட காலம் கழித்து அவனது தொழிலை முற்றிலுமாக மறந்திருந்த விசேஷ நிமிடங்கள் என்று அவன் தன் அனுபவத்தை பின்னாட்களில் கூறினாலும், யாரும் நம்பப்போவதில்லை..

‘மேலும் ஒரு உதவி’ என்று அவள் கேட்க ஆரம்பிக்கும் முன்னரே, அதற்கு தயாராக இருந்தான். ஆனால் அவள் கேட்டிருந்த உதவி அவன் முற்றிலுமே எதிர்பாராதது, அவன் இத்தனை நாட்களாய் எதற்கு தன்னை ஆட்படுத்தக்கூடாது என்று சொன்னானோ அதுவே அவனது மடியில்.

‘ஒதுங்கிடம் வரை செல்லும் மட்டும் மான்யாவை பார்த்துக்கொள்ள முடியுமா’ என்று அவள் கேட்கையில் தயங்கியபடியே உட்கார்ந்தான்.

‘கொஞ்சம் எழுந்தால் உங்கள் தோள்களில்’ என்று மாட்டிவிட அருகில் வந்தாள்.

கைப்பையில் இருந்த சானடைஸரைக் கொண்டு கைகளை துடைத்துவிட்டு. கைகளை நீட்டி வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அக்குழந்தையை வாங்கும் போது அவளது எட்டு விரல்களை மட்டுமே அழுத்தமாகத் தொட முடிந்தது. அவளது நம்பிக்கையை அந்த ஸ்பரிசம் கெடுத்துவிட்டிருக்காது என்று நம்பினான். அவன் மான்யாவைத் தூக்கும்போது ஒரு மலர்க்கூடையைத் தூக்குவது போல் தான் இருந்தது. அவனைக் கண்டு அது மிரளவில்லை.

“அண்ணே மருமகனை தூக்கிக் கூட பார்க்கமாட்டியா?” என்று தங்கை கேட்டதற்கு, இன்ஃபெக்ஷன் ஆகிடும்லா என்று சொன்னபடி செக்கில் பணம் எழுதிக்கொண்டிருந்தவன் அவன்.

சவுகரியமாக அவன் மடியில் மான்யா அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் என்ன வயசு, எத்தனை மாதக் குழந்தை என்று கூட அவனால் புரிந்துகொள்ள முடியாத அளவு அது அவனது முதல் அனுபவமாக இருந்தது.. அந்த சிறிய நகரத்தின் விமானதளம் இதுபோன்ற பெண்களுக்கு கேர்டேக்கர்களை உதவிக்கு வைக்காதது குறித்து புகாரளிக்க வேண்டும் என்று தோன்றியது.
இத்தனை நேரமாய் அவனை கவனிக்காமல் இருந்தவர்கள், எல்லோருமே அவனைப் பார்ப்பது போல் இருந்தது. அவள் சவுகரியமாக உட்காந்திருந்தாலும், அக்குழந்தையை கீழே போட்டுவிடுவோமோ என்கிற பயமும், மற்றவர்களும் அப்படித்தான் நினைப்பார்களோ என்றும் நினைத்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் தலை சாய்த்தான். இரண்டு பென்னி ஸ்டாக்குகள் போல் சிறிதே தெரியும் பற்கள் கொண்ட வாயிலிருந்து ஒரு முழுமையான சிரிப்பு அவனைப் பார்த்து தலையசைத்து சிரித்தது.

‘ஹோ.ஹோ.. ஸ்வீட் கேர்ள்.. கங்காருக்குட்டி’ என்று உரத்த குரலிலேயே சொன்னான். அவனது குரலின் டெசிபல்களால் திடுக்கிட்டாலும் அவனைப் பார்த்து சிரித்தபடியே இருந்தது.

‘மான்யா என்றால் என்ன’ என்று கைப்பேசி குரல்வழியாக கேட்டுவிட்டு அக்குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அது அவன் நினைத்தது போலவே ரஷ்யப் பெயர், உக்ரேனியர்களும் பயன்படுத்துவார்கள் என்று ஒரு ஆண் குரல் செயலியிலிருந்து ’மான்யா என்றாள் நேசிக்கப்படுபவள்’ என பதிலளித்தது. இப்போதெல்லாம் செயலிகளில் புது வெர்ஷன் வந்தவுடன் ஏற்கனவே இருக்கும் செயலிகளில் ஒலிக்கும் பெண் குரலை ஆண் குரலாக்கிவிடுகிறார்கள். இப்படி ஒரு யோசனையைக் கொடுத்தவன் ஈடாக எவ்வளவு பெற்றிருப்பான் என்று நினைக்கும்போதே, அந்தக் குழந்தை சிணுங்க ஆரம்பித்தது. பக்கத்தில் வேறு ஒரு வயதான ஆள், அவர்களைப் பார்த்து திரும்பி நின்று கொண்டிருந்தான். என்ன வேண்டும் என்று கேட்டதற்கு ‘மான்யா என்றால் போற்றுதலுக்குரியவள், மலர்களால் பூஜிக்கத்தகுந்தவள் என்றும் சொல்லலாம்’ என்றார்.

‘நன்றி ஐயா’

‘நல்லவேளை அது ஒரு உக்ரேனியனாகவே பிறந்தது’ என்றான்.

‘எந்த நிலத்தில் எது தேவையாக இருக்கிறதோ, அதை தான் அவர்கள் பெயரிலாவது வைப்பார்கள்’ என்றார். அவனுக்கு அந்த முதியவரைப் பிடித்துப்போனது. மிக அருமையான மனிதராகவும், நல்ல படித்த மேதையாகவும் இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டான்.

தன் வாழ்வில் அதிகப்படியான அந்நியர்களுடன் பேசிய நாள் என்று கடந்த பத்தாண்டுகளில் அந்நாளை அவன் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடும்.

பதினைந்து நிமிடங்களாகியும் அந்தப் பெண் வாராதது, சிறிதளவு கலவரத்தை ஊட்டியது. குழந்தை அழுதுவிடுமோ என்கிற பயம் வேறு மெதுவாக அதிகரிக்க ஆரம்பித்தது. வெளிநாட்டிலிருந்து வந்தவள், உஷ்ணம் தாங்க முடியாமல் உதடுகள் வெடித்திருந்தது ஞாபகம் வர, அவனாக அவளது வயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டால் தாமதமாக ஆகக்கூடும் என்கிற தற்காலிக நிம்மதியடைந்தான். குழந்தை அதன் உடலைத் திருப்பி அவனது வயிற்றுப்பகுதியில் கைவைத்தது. அதனை முழுமையாகத் தன் வயிற்றில் கிடத்த, அது படுத்துக்கொண்டது. எந்தவித கலவரமும் அடையாமல் கண்களை மூடிக்கொண்டது.

“உண்மையிலேயே அவளுடைய குழந்தைதானா இது?”, “பூ,மலர் என்று கூட பிரித்துவிட முடியாது, இரண்டுமே பூ தான்”
தானும் இப்போது குட்டியைச் சுமக்கும் கங்காருவாய் மாறியதாக உணர்ந்தான். அந்தக் குழந்தையும் எப்படியாகினும் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என டேபிளில் வைக்கப்படும் ஒரு காஷா கிண்ணத்தைப் போல் பொலிவாகவும் நிம்மதியாகவும் சிரித்த முகத்தோடும் கண்களை மூடியிருந்தது. சுற்றி நடக்கின்ற எல்லாவற்றையும் மறந்துவிட்டிருந்தபடி குழந்தையை ரசித்துக்கொண்டிருந்த அவன், திடீரென்று சுதாரித்தவனாக நேரத்தைப் பார்த்தான். விமானம் அருகே செல்லும் ஃபீடர் பேருந்திற்காக மக்கள் க்யூவில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வசதியும் இல்லாத விமானநிலையத்திற்கு சைலண்ட் ஏர்போர்ட் என்கிற பெருமை எதற்கு என்கிற கோபம். ஆனால் அதனை நீட்டிக்க நேரம் இல்லை.

சார்ஜரையும், கைப்பேசியையும் தன் கைப்பையில் போட்டுவிட்டு ஒதுங்கிடம் நோக்கி ஓடினான். அக்குழந்தை சத்தம் போடாமல் அவனையே கட்டிக்கொண்டது. ஒதுங்கிடம் அருகே சென்று ஒரு துப்புரவு பணியாளரை அழைத்து உள்ளே பார்க்கச் சொன்னான்.. ஒரு வெளிநாட்டுப் பெண், மான்யா அம்மா என்றெல்லாம் அழைக்கச் சொன்னான். வெளியே இருந்தே கத்தினான்.

அதற்குள் அவனது பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்தார்கள். வேறு ஏதாவது ஒதுங்கிடம் இருக்கா எனக்கேட்டபோது அவர்கள் விமானநிலையத்தின் மறுமுனையை, மேல்தளத்தில் இரண்டைச் சொன்னார்கள். அவனால் அக்குழந்தையைத் தூக்கியபடி ஓட முடியாது.

முதன்முறையாக அப்போது தன் வயது குறித்தும் எண்ணம் வந்தது. தன் மகள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவள் என்ன வகையான பெண்ணாக இருக்கக்கூடும் என்று அச்சம் வந்தது. முதலில் அமர்ந்த இருக்கை அருகே வந்து, அக்குழந்தையை அதே இருக்கையில் அமர்த்தினான். கையிலிருந்த சிறிய வாட்டர் பாட்டிலை அவளிடம் கொடுத்துவிட்டு நகர்ந்துவிட முனைந்தான். திரும்பிப்பார்க்காமல் செல்லக் கூடியவன் தான். ஆனால், அவனால் குழந்தையைப் பார்க்காமல் திரும்ப முடியவில்லை. அது அழுதால் கூட ஒரு இறுகிய மனம் உருவாகி அவனை அங்கிருந்து நகரும் தெம்பினைக் கொடுத்திருக்கும். அவன் எத்தனை அழுகையை, கெஞ்சலை, வேண்டுகோளை, பச்சாதாபங்களைப் புறந்தள்ளிவிட்டு எஸ்கலேட்டர்களில் ஏறியவன். ஆனால் மான்யாவின் முகத்தில் ஒரு இனத்தின் ஆயிரமாண்டு அச்சத்தின் தொடர்ச்சியை, கலவரத்தை உணர முடிந்தது. அதில் தான் வருங்காலத்தில் சந்திக்க இருக்கின்ற துயரங்களின் தடங்களும் இருந்தன.
வரலாறு குறித்த அவனது ஆர்வம் தன்னை பலவீனமாக்குகிறது என்று புரிந்து கொண்டான். இந்த முறை ஒரு மலர்க்கூடையைப் போலே அவள் எளிதான எடையாக இருக்கவில்லை. அது பொன்னாலான சிற்பம் போன்றே மகிழ்ச்சி தரும் எடையாகவும் இருந்தது. இதுபோல் இதயத்துடிப்பின் மாறுபாடும் முன்பு அவனுக்கு நிகழாத ஒன்று. சிறுவயதில் மனதில் பதிந்த அம்மிக்கொத்து சப்தம், இப்போது தனக்குள்ளேயும் கைக்கடிகாரத்திலுமாய் கேட்டது, உள்ளே கேட்பது சற்று வேகமாகவும் இருந்தது. “ஒருவேளை அவள் விமானத்திற்கு போயிருந்தால்?”

This is our final call என்று சொல்லும்போது.. ‘ஹே’ என்று விமானசேவை அதிகாரிகளை நோக்கி கையசைத்தபடி மான்யாவையும் தூக்கிக்கொண்டு ஓடினான். இவ்வளவு நேரம் அருகில் தான் இருந்திருக்கிறான் என்கிற கோபத்தை கண்களால் காண்பித்த அந்த பெண்.

‘போர்டிங்பாஸ்’ என்று ஒரே அசையாக மாற்றி உச்சரித்தார். அதுதான் அவரது அதிகபட்ச கோபமாக விமானசேவை நிறுவனத்தின் விதிவரம்பிற்குள் இருந்தது.

‘ஸாரி சார். உங்களுக்கு மட்டும் தான் இருக்கு, உங்க மகளுக்கு இல்லை’

‘ஐயோ இவுங்க என் மகள் இல்லை, இவுங்க அம்மா விமானத்துல தன் குழந்தைய விட்டுட்டுப் போயிட்டாங்க’

‘ஸாரி சார். இந்த வாயேஜ்ல ஒரு பாஸ் மட்டும்தான் மீதம். அது உங்களுடையது தான்’

‘ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க, இது எவ்ளோ சின்னக் கொழந்த பாருங்க டாமிட்’

சில நொடிகள் மவுனத்திற்கு பின்னர்.

‘சார் ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க.. போர்டிங் பாஸ் இல்லாம யாரும் உள்ள போக முடியாது. ஃப்ளைட் கிளம்பனும்’

‘சரி உங்க உயரதிகாரிய கூப்பிடுங்க.. குழந்தையோடு ஒருமுறை ஃப்ளைட்ல போய் பார்ப்போம், அவுங்க அம்மா உள்ளே இருந்தாங்க என்றால் கொடுத்துவிடுவோம்.. இந்தக் குழந்தைய எங்கே விட்டுட்டு வர.. அவுங்க ஜஸ்ட் ரெஸ்ட்ரூம் போறேன்னு என்னிடம் கொடுத்துவிட்டுப் போனாங்க’

கோர்வையே இல்லாமல் நா பிறழ அவன் பேசிய யாவற்றையுமே கேட்டுக்கொண்டிருந்தவர்கள். ‘ஸாரி’ என்று மட்டுமே பதிலளித்தார்கள்.

‘நான்கே நான்கு வாசல்கள் உள்ள விமானநிலையம் இது, யாராவது உடன்வாருங்கள் பார்த்துவிடுவோம். இவர்கள் வேற்று நாட்டவர்கள் எங்காவது மாறி போயிருக்கலாம். நாமெல்லாம் மனுஷங்க தானே’ என்று ஆக்ரோஷமாக கத்திவிட. அக்குழந்தையும் அழ ஆரம்பித்தது. உடன் அப்பெண்மணி விமானத்திற்குள் அறிவிப்பு செய்யும்படி வாக்கிடாக்கியில் சொல்லிவிட்டு, விமானநிலைய அதிகாரிகளை வரச்சொன்னார்.

விமானநிலைய அதிகாரியிடம் ஒப்படைக்கச் சொல்வார்கள் என்று அவனும் நம்பினான். குழந்தை அழத்தொடங்கியது. அதிகாரிகளிடம் முறையிட அவனிடம் நிறையவே புகார்கள் இருந்தன. ஆனால் கெஞ்சிக்கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் கேட்ட குறைந்தபட்ச தகவலைக் கூட அவனால் தர இயலவில்லை, அந்தப் பெண்ணின் பெயரென்ன என்ற அடிப்படை கேள்வி அது.

‘நீங்கள் இந்த விமானத்தை தவறவிடுகிறீர்கள். இது சர்வதேச விமான நிலையம் அல்ல. அடுத்த விமானம் நாளைக்கு தான். அதுவும் இந்த சர்வீஸ் வாரம் இருமுறை தான்’ என்று கண்டிப்புடன் சொல்ல. அவன் குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு தயாரானான்.

அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் எப்படி மன்னிப்பு கேட்பது. பாதங்களைத் தொடுவது, நெற்றியில் முத்தமிடுவது, அந்தக் கைகளை எடுத்து முகத்தில் அறைவது, முகத்தில், நெஞ்சில் கால்களில் கைகளில் முகத்தை வைத்து மன்னிப்பிற்காக இறைஞ்சுவது. அது பற்றியிருக்கும் விரல்களுக்குத் தான் எத்தனை வலிமை.

விமான சேவை அதிகாரி அக்குழந்தையை வாங்கி, விமானநிலைய ஊழியரிடம் ஒப்படைத்தார். எமெர்ஜென்சி என்று வாக்கிடாக்கியில் பேசியபடி அக்குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றார். அலட்சியமாக அவர்கள் அக்குழந்தையைக் கையாள்வதாக அவனுக்குத் தோன்றியது. எதற்கும் விமானத்திற்குள் அவளது அன்னை ஒளிந்திருந்தால் ஒரு அறை விட்டு வெளியேற்றலாம் என்று ஒவ்வொரு இருக்கையாகத் தேடினான், அவன் கூடவே ஒருவர். ஒவ்வொருவர் முகமாகத் தேடுகையில் அவன் மீது எப்பவும் கவிழாத இருள் கவியத் தொடங்கியது.

இதுவரை சந்திக்காத தனிமையை உணர்த்துகின்ற பிரிவு அல்லது இத்தனை நாள் ஓடிக்கொண்டிருந்த வாழ்வின் விழுமியங்களை ஒட்டுமொத்தமாக உடைப்பதற்கு ஒரு சிறு கையின் வெப்பம் போதுமாக இருக்கிறது என்பதை உணர்ந்தான். அந்த உணர்வு தான் இருள் என்றால் அது இருளில்லை என்பதை உணர்வான்.

‘இது இருளில்லை கரும்பச்சை வண்ணம்’

சீட்பெல்ட் போடும்படி அருகே வந்து காதினில் சொல்லிச் சென்ற போது அவனுக்கு சட்டெனத் தோன்றியது. விமானம் நிதானத்திற்குச் செல்லும்வரை அமைதியாக இருந்தவன், பையினில் இருக்கும் ஐ பேடினைத் திறந்து, அவுட்லுக் மெசெஞ்சரில் தன் காரியதரிசிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். ஜூரிச்சில் அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த கேலரியிலிருக்கும் ‘உலகின் அழகிய துயரம்’ ஒரு போலியானதாக இருக்கக்கூடும் என்று மின்னஞ்சல் அனுப்பிவைத்தான். மேலும் தாய்லாந்து பயணத்தை ரத்து செய்யவும் அதில் கூறியிருந்தான்.

இன்னொரு மெயிலில் அந்த சிறு விமானநிலையம் புதுப்பிக்கப்படுதல் தொடர்பாக வெளியிட்டிருந்த டெண்டரை மிகக்குறைந்த விலையிலாவது வாங்கிப் புதிப்பித்து தர முடியுமா என்று ஒரு நெருக்கமான வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்தான்.

க்வோரா செயலியில் அந்த ஓவியம் பற்றிய விவாதங்கள் நினைவுக்கு வந்தன, அவனும் கூட அதில் ஒரு காரணம் சொல்லியிருந்தான். தூங்குவதாய் கண்களை மூடி பாவனை செய்தபோது, மான்யா தொட்டுத் தடவிய தன் கன்னங்களில் தங்கம் பூசப்பட்டிருந்ததாகக் காட்சி ஓடியது. குழந்தையை ஒப்படைக்கும்போது ஓவியம் இருந்த சுவர் வெற்றாகக் காட்சியளித்தது ஏன் என்கிற குழப்பம் தீர அவன் சொந்த வீட்டிற்கு பல மாதங்களுக்குப் பிறகு திரும்பச் செல்லக்கூடும். அதுவும் ஆத்மார்த்தமாய்.

***

ஜீவ கரிகாலன் – டிரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா இரு சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர். மின்னஞ்சல்: [email protected], [email protected]

(நன்றி: ஓவியம் – பாஜினவ் செர்ஜெ – ஆர்ட்நவ் ரஷ்யா)

1 COMMENT

 1. #அவன்… #அழகிய துயரம் ஓவியம்…. #மான்யா.. # பயணம்…
  இந்த ஐந்து குறிப்புக்களைக் கொண்டு காலதேச வர்தமானம் கடந்து மிக விருவிருப்பாய் ஒரு கதையைச் சொல்ல முடியுமா? முடியும் எனச் சொல்லி பெயர் இல்லா அந்த மனிதனொடு விமானத்தில் ஒவ்வொரு முகமாய் நம்மையும் தேட வைத்து விடுகிறார் ஆசிரியர்…
  பூக்கூடையின் தாய் எங்கு போனார் எனக் கவலைப்பட, அடுத்த வரிகளில் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தேடினேன்…

  ஓவியத்தில் முகம் கவிழ்த்திருக்கும் பெண் வேறொரு மான்யாவின் தாயாக இருப்பாள் போலும்..
  பூக்குட்டி பிஞ்சை ஏதோ காரணத்திற்காக விட்டுச் சென்ற தாய் வேறு ஒரு ஓவியத்தில் எங்காவது இருக்கக் கூடும்..
  #மிகச்சிறந்த கதை சொல்லி என்பதனை மீண்டும் நிறுபித்து இருக்கிறார் ஓவியர் ஜீவகரிகாலன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here