ஈவும் மீதியும்

0

கா.சிவா

பெருங்களத்தூரின் நெரிசலைக் கடந்து ஊரப்பாக்கத்திற்குள் நுழைந்தது திருச்சி செல்லும் பேருந்து. அதில் மென்மையான சாய்விருக்கையில் அமர்ந்திருந்த மோகன் வெளியே தெரிந்த வெளிச்சத்தை வெறுமே நோக்கிக் கொண்டிருந்தான். அவன் அலைபேசியில் மனைவி பல்லவியின் அழைப்பு.

“சொல்லும்மா. சாப்டீங்களா”

“நாங்க சாப்பிட்டாச்சு. நீங்க என்ன சாப்பிட்டீங்க. கிளம்பியாச்சா”

“டிபன் சாப்பிட்டேன். பஸ்ல திருச்சிக்கு போயிட்டிருக்கேன். அங்க போனாத்தான் வேலை எப்ப முடியும்னு தெரியும். அங்க போயிட்டு சொல்றேன். மோகனா என்ன பண்றா”

“இப்பத்தான் படுக்கப் போனா. நீங்க வெளியூர் போறீங்கன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் பதட்டமா இருக்கா. மொதப் பிரசவம்ல அப்படித்தான் இருக்கும்”
“இப்படியாகும்னு நெனக்கல. இல்லேன்னா லீவு எடுத்துட்டு கடைசியாக லெட்டர் கொடுத்திருக்கலாம். சனி ஞாயிறு தேவையில்லாம கணக்காகுமேன்னு இன்னைக்கு வேலைக்குப் போனது தப்பாப் போச்சு”
“ஒங்க தங்கச்சிய நான் பாத்துக்கிறேன். நீங்க பயப்படாம போயிட்டு வாங்க”

“சரி … பக்கத்து வீட்டு ரவி ஊர்லேர்ந்து வந்திருக்கான். அதுவேற மனசுக்கு திடுக்னு இருக்கு. கொஞ்சம் கவனமா பத்திரமா இருங்க” என்று கூறி மனதேயில்லாமல் துண்டித்தான்.

சுற்றிலும் பார்த்தான் அலைபேசியில் லயித்த ஓரிருவரைத் தவிர பிறர் சாய்ந்து உறங்க ஆரம்பித்திருந்தனர். மோகன் சாயாமல் இருக்கையின் நுனியில் அமர்ந்து கொண்டிருந்தான். மனதில் இருந்த இனந்தெரியாத பதட்டம் உடலை நிலை கொள்ளாமல் செய்து கொண்டிருந்தது.
பிரசவத்திற்கு மோகனாவை அழைக்கச் சென்றபோது குலதெய்வக் கோவில்களுக்குச் செல்வதற்கும் சடங்குகள் செய்வதற்கும் மூன்று நாட்களாக்கிவிட்ட தங்கையின் மாமியார் மேல் மீண்டும் கோபம் எழுந்தது. இரண்டு நாட்களில் வந்திருந்தால் இந்த நெருக்கடிக்கு அவசியமில்லாமல் போயிருக்கும். ஒரு வாரத்திற்கு பின் காலையில் அலுவலகம் சென்றபோது நிகழ்ந்தது மனதிற்குள் மேலெழுந்து வந்தது.
எப்போதும் இவன் செல்வதற்கு முன்பே அலுவலகத்திற்கு வந்துவிடும் பிரிவு அலுவலர் இருக்கையில் இல்லாததைப் பார்த்தபோதே மனம் எதையோ உணர்ந்து கொண்டது. இவன் தனது உதவிப் பிரிவு அலுவலர் இருக்கைக்குச் சென்றான். எப்போதும் ஒரு கோப்புக்கு மேல் இருக்காத டேபிள் மேல் ஐந்தாறு கோப்புகள் தாறுமாறாகக் கிடந்தன. ஏதோ தவறு நடக்கவிருப்பதை மனம் உறுதியாக நம்ப ஆரம்பித்தது.

கோப்புகளைப் புரட்டிப் பார்த்தான். ஒரு வாரத்திற்கு முன் செயலாளருக்கு சமர்பித்த கோப்புகள் அவர் பார்வைக்குச் செல்லாமல் மேலதிகாரிகளால் திருத்தம் செய்யப்பட்டு இவன் டேபிளில் போடப்பட்டுள்ளன.

திருத்தங்களுடன் அப்படியே செயலாளருக்கு அனுப்பியிருக்கலாம். அதில் எதுவும் தவறில்லை. அல்லது தட்டச்சரிடம் கொடுத்து திருத்தம் மேற்கொண்டு சமர்பித்திருக்கலாம். ஆனால் இரண்டும் செய்யாமல் விடுப்பில் இருக்கும் இவன் டேபிளில் போட்டால் தாமதத்திற்கு இவனே பொறுப்பாக வேண்டும். மேலதிகாரிகள் மேல் வெறுப்பு எழுந்தது. ஒவ்வொரு கோப்பாகப் பார்த்தான். ஒரு கோப்பைத் தவிர பிற கோப்புகளில் மிகச்சிறிய திருத்தங்கள்தான். கெட்ட வார்த்தையொன்று தன்னியல்பாக வெளிவந்தது. அச்சொல் காதில் விழுந்தபின்தான் மீண்டு சுற்றிலும் பார்த்தான் யாராவது கவனித்தார்களா என. யாரும் கவனித்தது போல காட்டிக் கொள்ளவில்லை.

துணைச் செயலாளர் கருணாமூர்த்தி அழைப்பதாக அவர் அலுவலக உதவியாளர் கூறினார். முகத்தில் இருந்த கடுப்பை மாற்றாமலேயே அவர் அறைக்குச் சென்றான்.

“என்ன இத்தனை நாள் லீவு போட்டுட்ட” என்றார்.

“சார், என் தங்கையை டெலிவரிக்காக என் வீட்டுக்கு கூட்டிட்டு வரப்போறேன்னு சொன்னனே”

“சொன்ன. ஒருநாள் ரெண்டு நாள்னு பாத்தா நாலு நாள் எடுத்துக்கிட்ட”

“அவங்க மாமியார் வீட்ல சம்பிரதாயம், குலதெய்வ பூசையின்னு இழுத்துட்டாங்க சார்”

“சரி அது இருக்கட்டும். செகரட்டரிய ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மீட்டிங்குக்கு கூப்பிட்டிருந்தாங்களே அந்த பைல் என்னாச்சு”

“போன வெள்ளிக்கிழமையே அத சப்மிட் பண்ணிட்டனே”

“அத செகரெட்டரி இப்பக் கேட்டாரு. அங்க இருக்கான்னு பாரு”

“சரி சார். என் பிரிவு அலுவலர் இன்னும் வரலையே சார்”

“அவர் லீவுப்பா. அவரோட மாமியார் நேத்து சாயங்காலம் இறந்துட்டாங்களாம். அவர் ஊருக்கு போயிட்டார். அந்தப் பைல் என்னாச்சுன்னு உடனே பாரு”

டேபிளில் இருந்த கோப்புகளில் அதுவும் ஒன்று. ஆஸ்திரேலிய கல்வி நிறுவனம் ஒன்று செயலாளரை சொற்பொழிவாற்ற அழைத்திருக்கிறது. இவர் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றபின் இந்திய ஆட்சிப்பணிக்கு வந்தவர். அந்தக் கடிதத்தில் “அவசரம், உடனே சமர்பிக்கவும்” என்று செயலாளர் எழுதியிருக்கிறார். அதைப் பார்த்துதான் உடனேயே இவன் சமர்பித்திருந்தான். இரண்டு இடங்களில் மிகச்சிறிய இலக்கணப் பிழை. அதற்காக கருணாமூர்த்திதான் திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆனால் அந்தக் கோப்பை கண்ணிலேயே காணாதது போல கேட்கிறார். அதை இப்போது சமர்பித்தால் இன்றைய தேதியில் கையொப்பம் இடவேண்டும். தாமதமாக சமர்பித்ததற்கு இவன்தான் வசவு வாங்க வேண்டும்.

அந்தத் திருத்தங்களை மேற்கொண்டு பிரிவு அலுவலர் இல்லாததால் நேரடியாக சார்புச் செயலாளரிடம் அவசரம் என்று கூறி கையொப்பம் பெற்றுக்கொண்டு கருணாமூர்த்தியிடம் சென்றான். அதற்குள் இரண்டு முறை தொலைபேசியில் அழைத்துவிட்டார்.

“எவ்ளோ நேரம்பா. செகரட்டரி மறுபடி கேட்டுட்டாரு”

“சார் சின்னக் கரெக்சன்தானே. அப்படியே அனுப்பியிருக்கலாம்ல” அவர் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

அதை காதில் வாங்காமல் கோப்பில் கையொப்பம் இட்டபின் “வா போகலாம்” என்று இவனையும் அழைத்துக் கொண்டு செயலாளரின் அறைக்குச் சென்றார். வெளியே அமர்ந்திருந்த செயலாளரின் தனிச்செயலரிடம் கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தவருடன் இவனும் சென்றான்.

விளக்கொளியைப் பிரதிபலித்த நீண்ட பெரிய டேபிளுக்கு அந்தப்பக்கம் அமர்ந்திருந்த செயலாளர் நிமிர்ந்து எங்களைப் பார்த்தார். பீகார் மாநிலத்தில் பிறந்து, அயராது படித்து இங்கு ஆட்சிப் பணியாற்றுபவர். நல்ல வெளுப்பாக ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்தார். விழிகளில் கோபம் தெரிந்ததும் மோகன் பார்வையை கீழே திருப்ப, அவரின் கையில் இருந்த அந்த ஆஸ்திரேலியக் கல்வி நிறுவனத்தின் நினைவூட்டுக் கடிதம் தெரிந்தது. இதைப் பார்த்தவுடன் தான் முதல் கடிதம் நினைவிற்கு வந்து கேட்டிருக்கிறார்.

கருணாமூர்த்தி கையிலிருந்த கோப்பை வேகமாக வாங்கிப் புரட்டினார். அவர் கையொப்பமிட்ட தேதியைக் சுட்டி “அவசரம் என நான் எழுதி பத்து நாட்கள் ஆகிவிட்டது. செக்சன்ல எல்லோரும் தூங்கறீங்களா” என்று கேட்டார்.

“சாரி சார், மிஸ் பிளேஸ் ஆயிடுச்சு” கருணாமூர்த்தி கூறினார்.

“இந்த சப்ஜெக்ட் பாக்கிறது யாரு”

“இவர் ஏஎஸ்ஒ சார். எஸ்ஓ இன்னைக்கி லீவு சார்”
செயலாளளரின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

“அவரு இன்னைக்குத் தானே லீவு. முன்னாடியே பாக்குறதுக்கென்ன”

“இவரு நாலு நாள் லீவு சார்”

அவர் மோகனை நிமிர்ந்து பார்த்தபோது மோகன் விழிகளைக் கீழிறக்கி உடலை ஒடுக்கிக் கொண்டு நின்றான்.

“அவர் லீவு இவர் லீவுன்னு சொல்றதுக்குத்தான் நீங்க இருக்கீங்களா” என்று கருணாமூர்த்தியைப் பார்த்து கூறிவிட்டு தலையைத் தாழ்த்தி அசைத்தபடி “சோம்பேறிங்க… சோம்பேறிங்க” என்று கூறினார்.

தன் அறையில் நிமிர்ந்து தருக்கியபடி உலவும் கருணாமூர்த்தி இப்போது உடல் ஒடுங்கி சர்க்கஸ் சிங்கத்திடம் கோமாளி போல நடுங்கும் நிலையில் நின்றதைப் பார்த்தபோது மோகனுக்கு லேசாகச் சிரிப்பு வந்தாலும் இவரைவிட பத்து வயதாவது இளையவராக இருப்பவரிடம் இப்படி நிற்பது பரிதாபத்தையும் மெல்லிய ஒவ்வாமையையும் அளித்தது.

ஆஸ்திரேலியா செல்வதற்கு சம்மதம் தெரிவித்து கையொப்பம் இட்டவர் “உடனே பைலை தயார் செய்ங்க. திங்கட்கிழமை வர்றத உறுதி செய்யச் சொல்றாங்க. அதுக்குள்ள சிஎம் ஆபிசுல பர்மிசன் வாங்கணும். முடியலைன்னா எல்லாரையும் தொலைச்சிடுவேன்” என்று உறுமியபடி கோப்பை நீட்டினார்.

வெளியே வந்தவுடன் “மோகன் ஒடனே ரெடி பண்ணுங்க. அமைச்சர் வரைக்கும் கையெழுத்து வாங்கிட்டு கோப்பை சிஎம் ஆபிசுக்கு அனுப்பணும்” என்றார்.

மோகன் கோப்பை தயார் செய்து கருணாமூர்த்தி இரண்டு முறை செய்த திருத்தங்களை மேற்கொண்டு சமர்பித்தபோது செயலாளர் மதிய உணவிற்கு சென்றுவிட்டார். அவரின் தனிச்செயலர் “சார் கோபமாத்தான் போனார். ஏன் பைலை ஒடனே போடமாட்டீங்களா” என அவர் பங்கிற்கு கேட்டார்.

சாப்பிடும்போது பல்லவி அழைத்தாள். “ஏங்க லீவு சொல்லிட்டீங்களா. திங்கட்கிழமை டாக்டர்கிட்ட போகணும்”
“இங்க பெரிய பிரச்சனை. லீவெல்லாம் சொல்ல முடியாது. அத அப்பறம் பாத்துக்கலாம்”

“என்னாச்சுங்க. டல்லா பேசறீங்க”

“நான் அப்பறம் பேசறேன் வை…” என்று துண்டித்தான்.

செயலாளர் வந்து கையொப்பமிட்டவுடன் அக்கோப்புடன் விரைந்து வந்த கருணாமூர்த்தி “மோகன், உடனே அமைச்சர் அலுவலகத்திற்கு போய் இதுல கையெழுத்து வாங்கிட்டு வாங்க. அதுக்குப் பிறகு நோட் வச்சி சிஎம் ஆபிசுல கொடுக்கணும்” என்றார்.

எப்போதும் அமைச்சர் அலுவலகத்திற்கு உதவியாளர்களை அனுப்புவதுதான் வழக்கம். அவசரம் என்பதால் மோகனைப் போகச் சொன்னார். அமைச்சர் அலுவலகத்தில் இவனுக்குத் தெரிந்தவர் யாருமில்லை. அமைச்சரின் சிறப்பு நேர்முக உதவியாளரிடம் சென்றான்.

“சார், கொஞ்சம் அவசரம். செகரட்டரி உடனே கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னார்” என்றான்.

அந்த இடத்தில் இருப்பதால் வரும் கர்வம் மிளிரும் முகத்தை நிமிர்த்தி இவனைப் பார்த்தவர் “உங்களுக்கு அவசரமா இருக்கலாம். ஆனா அமைச்சர் இருக்கணும்ல”

“அமைச்சர் இல்லையா சார்”

“வர்றதாத்தான் சொன்னாங்க. காலையிலேர்ந்து இன்னமும் வர்ல. இதோ… அவசரம்னு இருபத்தஞ்சு பைலுங்க இருக்குது. இதையும் சேர்த்து வைக்கிறேன். அய்யா வந்தவுடனே வாங்கிறலாம்”

மோகனின் முகம் வெளிறியது. “சார்… மணி நாலரை ஆகப்போகுதே. அமைச்சர் வருவாருல்ல” பயத்துடனேயே கேட்டான். ஏதாவது தவறு நடந்தால் கீழ்நிலையில் இருப்பவர்களைத்தான் பகடைக்காயாக்கி வெட்டுவார்கள் என்று சக அலுவலர் கூறியது நினைவுக்கு வந்தது.
அவரின் முகம் கோபத்தில் விரிந்தது. “வருவாருன்னு சொன்னாங்க. நானும் சொல்றேன். கண்டிப்பா வந்துருவாரான்னு ஆளாளுக்கு கேட்டா நான் என்னய்யா பண்றது. வந்தா வாங்கிட்டு போன் பண்றேன். ஒங்க இன்டர்காம் நம்பர பைல் மேல பென்சில்ல எழுதி வச்சிட்டு போ” என்றார் கடுப்பு வெளிபட்ட குரலில். அவர் நெருக்கடி அவருக்கு என்று எண்ணியபடி திரும்பினான் மோகன்.

கருணாமூர்த்தியிடம் விவரத்தைச் சொன்னான். “சிறிது நேரம் கழித்து யாரையாவது அனுப்பி பார்த்துவரச் சொல். இந்த வேலை இன்னைக்கு முடிஞ்சாகணும். இல்லேன்னா செகரெட்டரி ஒன்னச் சும்மா விடமாட்டாரு… பாத்துக்க” என்று கூறியவரை கடும் வசைச்சொல்லால் மனதிற்குள் வைவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாதவனாய் நின்றான். அவன் மனவோட்டத்தை உணர்ந்தவர் “ஏன் நிக்கிற போ… சிஎம் ஆபிசுக்கு அனுப்ப நோட் ரெடி பண்ணு” என்று கூறியபோது அவர் முகம் அவன் மனதிற்குள் கூறிய சொல் என்னவாயிருக்கும் என்று யோசிப்பதைப் போலத் தோன்றியது.

மோகனின் மனதில் பதட்டம் கூடிக் கொண்டே இருந்தது. ஐந்து மணி ஆனவுடன் உதவியாளன் ரமேஷை அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பினான். போன வேகத்தில் திரும்பி வந்தவன் அமைச்சரின் உதவியாளர் “வந்தவுடனே சொல்றேன்னு சொன்னேனே, இப்ப ஏன் வந்தாய்” எனத் திட்டுவதாகச் சொன்னான். ஐந்தரை ஆனபோதும் தொலைபேசி ஒலிக்காததால் கருணாமூர்த்தியிடம் சென்று “அமைச்சரோட உதவியாளர்கிட்ட கேளுங்க சார். நாங்க போனா சரியா பதில் சொல்லாம திட்றாரு” என்றான்.

“ஒரு வேலைக்கும் லாயக்கில்ல. எல்லாத்தையும் நானே பாக்கணும்” என சலிப்புடன் அலைபேசியை எடுத்து அமைச்சரின் உதவியாளரிடம் பேசிய கருணாமூர்த்தியின் முகம் இருண்டதையும் அவர் குரலின் ஒலி குறைந்து வருவதையும் கவனித்தவன் மனதில் தவிப்புக் கூடியது.

அலைபேசியைத் துண்டித்த கருணாமூர்த்தி இவனை உக்கிரமாகப் பார்த்தார்.

“உன்னோட கவனக்குறைவால எவ்ளோ பிரச்சனை பார்”

“சார் நான் என்ன தப்பு செய்தேன். நான்தான் அன்னைக்கே பைலை போட்டுட்டேனே”

“போட்ட சரி. அவசரம்னு சொல்லி உடனேயே கையெழுத்து வாங்கி செகரட்டரி வரைக்கும் அனுப்பி வச்சிருக்கணும்ல. நீ பாட்டுக்க லீவு போட்டுட்டு போயிட்ட. எங்களுக்கு இருக்கிற வேலையில ஒவ்வொன்னையும் ஞாபகம் வச்சுக்க முடியுமா”

“சார்…”

“சால்ஜாப்பு ஒன்னும் சொல்லாத. அமைச்சர் திருச்சிக்கு கெளம்பிட்டாராம். போயி பைலை வாங்கிட்டு வா. என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்” என்று அவர் சொன்னவுடன் வேகமாக அறையைவிட்டு வெளியேறியவன் காதில் விழுமாறு “அவனவன் வேலைய ஒழுங்காப் பாக்காம அடுத்தவனுங்க நிம்மதியவும் கெடுக்கிறானுங்க” என்று கூறினார்.

வெளியே உதவியாளன் ரமேஷ் நின்று கொண்டிருந்தான். “சார் நாங்க இருக்கணுமா…” எனக் கேட்டான். இவன் பிரிவுக்கான தட்டச்சரும் உதவியாளனும் இவனிடம் அனுமதியை பெற்றபின்தான் செல்லவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருக்கிறது. தட்டச்சராகப் பணிபுரியும் சங்கவி, தன் இரண்டு சிறு பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு காஞ்சிபுரத்திலிருந்து தினமும் சென்னை வந்து செல்கிறார். ரமேஷ் அருகிலேயே வசிக்கிறான். அதோடு தட்டச்சராக இருந்து உதவியாளனாக பதவியுயர்வு பெற்றவன். அவசரத்திற்கு உதவுவான் என்பதையெல்லாம் சில விநாடிகளில் எண்ணி, “சங்கவிய போகச் சொல்லிட்டு நீ மட்டும் இரு. நான் அமைச்சர் அலுவலகம் வரை போயிட்டு வந்திர்றேன்” என்று கூறியபடி கிளம்பினான்.

அமைச்சர் அலுவலகத்திலிருந்து கோப்பை வாங்கிக்கொண்டு திரும்பி வரும்போது யதேச்சையாக அலைபேசியை எடுத்துப் பார்த்தபோது பல்லவியின் ஐந்து அழைப்புகள் தவறியிருந்தன. நான்கு மணிக்கு அமைச்சர் அலுவலகத்திற்கு சென்றபோது ஒலியை நிறுத்தியிருந்தான். பல்லவியை அழைத்தான்.

“என்னாச்சு… அஞ்சு தடவ கூப்பிட்டிருக்க”

“ஏதோ பிரச்சனையின்னு சொன்னீங்க. என்னன்னு சொல்லவேயில்லை. எப்படி நிம்மதியா இருக்கமுடியும்”

“சிறிய விசயம். என் கவனக்குறைவால பெரிய சிக்கல்ல வந்து நிக்குது. இப்ப என்ன பண்றதுன்னு புரியாம நிக்கிறோம்…” என்று துவங்கி, தொடர்ந்து முழுவிவரத்தையும் கூறியபடி கருணாமூர்த்தியின் அறையை வந்தடைந்தவுடன் பிறகு அழைப்பதாகக் கூறி துண்டித்து உள்ளே சென்றான்.

கருணாமூர்த்தி தயாராகிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த ஒரு கணத்தில் அவர் திருச்சிக்கு நேராகச் செல்லப் போகிறார் என்று இவனுக்குத் தோன்றியது. என்னதான் தன் கீழ் உள்ளவர்களை காட்டிக் கொடுத்தாலும் முக்கியமான நேரத்தில் பொறுப்பை தான் எடுத்துக்கொண்டு முடிக்கப் போகிறாரே. இவர் பெரிய மனிதன்தான். தான் தங்கைக்கு துணையாக இருக்கச் செல்லலாம் என மோகன் மனதில் லேசாக உற்சாகம் ஊறி காலையிலிருந்து ஏறிக்கொண்டே சென்ற அழுத்தம் சற்று குறைய ஆரம்பித்தது. நிமிர்ந்து இவனைப் பார்த்தவர், “பைலை ஒரு கவர்ல வச்சு ஒன் பேக்ல வச்சுக்கிட்டு உடனே வா”

“என் பேக்லயா சார்…” என திகைத்தான்.

“வேற? நீ செஞ்ச தப்புக்கு நான் போய் அலைய முடியுமா. செகரட்ரிக்கிட்ட பேசினேன். என்ன செய்வீங்களோ தெரியாது ஞாயிற்றுக் கிழமைக்குள்ள சிஎம் ஆபிசுக்கு பைல் போயாகணும்னு சொல்லிட்டார். நான் நமக்குக் கீழ இருக்கிற துறைத்தலைமைக்கிட்ட பேசுனேன். வரச்சொன்னாங்க. என்ன பண்றதுன்னு அங்க போயி முடிவு பண்ணலாம்”.

“சார் என் தங்கை நிறைமாசமா இருக்குது சார். இன்னைக்கு வந்ததே லீவு சொல்றதுக்காகத்தான். நான் வெளியூர் போனா பாத்துக்க யாருமில்ல சார்” குரலில் இருந்த கம்மலை இவனே எதிர்பார்க்கவில்லை.

அவர் முகத்தில் வெறுப்பு தெறித்தது. “சின்னப் புள்ளங்க மாதிரி சாக்கு சொல்லாத. வேலைக்குன்னு வந்துட்டா பொறுப்பா இருக்கணும். ஒன் எஸ்ஓ இருந்திருந்தா அவர போகச் சொல்லலாம். இப்ப நீதான போயாகணும். போ, போயி பேக்க எடுத்துக்கிட்டு வா. ஒடனே கெளம்பணும்”.

கருணாமூர்த்தியின் காரில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த துறை தலைமையகத்திற்கு செல்ல அரைமணி நேரமாகிவிட்டது. மூன்று மாடிக்கட்டத்தின் முன் இரண்டு ஜீப்கள் நின்று கொண்டிருந்தன. அதில் ஒன்றில் தன்னை அனுப்புவார்கள் என்று மோகனுக்குத் தோன்றிய போதும், கருணாமூர்த்தி என்ன பேசியிருக்கிறார் எனத் தெரியாமல் எதையும் யோசிக்க வேண்டாமென இவன் முடிவு செய்தான்.

உள்ளே சென்று மேலாளரின் அறைக்குள் நுழைந்தார்கள். தலையின் கால்பகுதியில் மிச்சமிருந்த கருமை மிளிரும் முடியினை படிய வாரி, வெள்ளி பிரேமில் பதித்த கண்ணாடி அணிந்திருந்தார். தன் முன்னிருந்த கணினியில் ஆழ்ந்திருப்பது போன்ற பாவனையில் இருந்தவர் இவர்களை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் வரச்சொல்வது போல லேசாக அசைத்தார். தங்கள் அலுவலகத்திற்கு வரும்போது அவரிடம் வெளிப்படும் போலிப்பணிவு மோகனின் நினைவுக்கு வந்தது. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தபோது கருணாமூர்த்தியின் மிடுக்கு சற்று குழைந்திருந்தது. அடுத்த ஏரியாவிற்குள் நுழையும்போது தன் கால்களுக்குள் வாலை நுழைத்து பம்மியபடி செல்லும் நாய் தன் ஏரியாவில் வாலை நிமிர்த்திக் கொண்டு திமிறி நிற்கும் சித்திரத்தை மனதிலிருந்து வேகமாகத் தள்ளினான்.

“சொல்லுங்க சார்…” என்று மேலாளர் கருணாமூர்த்தியைப் பார்த்து கேட்டபோது இவர் ஒருகணம் திகைத்தார்.

“அதுதான் போன்ல சொன்னனே சார். அமைச்சர்கிட்ட கையெழுத்து வாங்க திருச்சி வரைக்கும் போகணும்னு”

“ஓ… அதுவா சார்… திருச்சி ஆபிசுல பேசிட்டேன். அங்கே காலையில அஞ்சு மணிக்கெல்லாம் டிரைவரோட வண்டி தயாரா இருக்கும். ஆனா, இங்க எங்ககிட்ட வண்டியேதும் ப்ரீயா இல்ல. பஸ்ல போயிட்டு வந்து பில் கொடுத்தீங்கன்னா ரீ பே பண்ணிடறோம்”

கருணாமூர்த்தி குழப்பத்துடன் என்னை நோக்கிவிட்டு “வெளியே ரெண்டு வண்டி நிற்கிறதே” என்றார்.

“ஒரு வண்டி எனக்கு. இன்னொன்னு எங்க செகரட்டரிக்கு ரிசர்வ். அவரு எப்ப வேணாக் கேப்பாரு. இல்லைன்னு சொன்னா டென்சன் ஆகிடுவார்”

மோகனை நோக்கி “என்ன பண்ணலாம். பஸ்ல போயிட்டு வந்திடறீங்களா” எனக் கேட்டார்.

“சார், என்கிட்ட பணமில்லை” என கடுப்புடன் கூறினான்.

மேலாளரை நோக்கி “சார் பணம் கொடுங்க. போயிட்டு வந்திட்டு பில் கொடுத்திடுவார்” என்றார்.

வண்டி வேண்டுமென உறுதியாக நிற்காமல் பேருந்தில் செல்ல ஒப்புக் கொண்டதில் உண்டான உவகையை மறைத்தபடி “அப்படியெல்லாம் கொடுக்கிறதில்ல… சரி அதிகாரி கேக்கறப்ப மறுக்க முடியல” என்றபடி லேசான இளிப்புடன் மேசையின் இழுப்பறையைத் திறந்து “இது என்னோட பணம்தான். பில் கொடுத்த பின்னாடிதான் என்னால எடுத்துக்க முடியும்” என்றார்.

கருணாமூர்த்தி மோகனிடம் “வெளிய தண்ணி இருக்கு பாரு. கொஞ்சம் எடுத்துக்கிட்டு வாயேன்” என்றார்.

மோகன் வெளியே வந்து தண்ணீர் கேனில் இருந்து, ஒரு குவளையில் நீர் பிடித்துக் கொண்டு சென்றான். வாங்கி ஒரு மிடறு குடித்தபின் வைத்துவிட்டு இவனை வெளியே வருமாறு சைகை காட்டியபடி வெளியேறினார். அறைக்கு வெளியே வந்தவுடன் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை மட்டும் இவனிடம் நீட்டி “இதை வைத்துக் கொள்” என்றவரின் முகத்தில் ஒருவித நிறைவு தெரிந்தது. பணத்தை வாங்கிக் கொண்ட மோகனின் முகத்தில் வெளிப்பட்ட அதிருப்தியையும் குரோதத்தையும் கண்டவர் “உன்னோட கவனக்குறைவுக்கு நான் வந்து இவன்கிட்டலாம் நிக்க வேண்டியிருக்கு. கெடச்ச வரைக்கும் லாபம்னு போய் வேலைய முடிச்சுட்டு வா” என்று முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு கூறினார். மோகனின் மனம் ஒருகணம் மலத்தில் உழலும் புழுவைக் கண்டது போன்ற அசூசை அடைந்ததில் உடலில் மெல்லிய விதிர்ப்பெழுந்தது.

சில விநாடிகளில் மீண்டு தன்னைத் தொகுத்துக் கொண்ட மோகன், கருணாமூர்த்தியிடம் அமைச்சருடன் உள்ள உதவியாளரின் தொடர்பு எண்ணையும், உள்ளே சென்று மேலாளரிடமிருந்து காலையில் வரவிருக்கும் திருச்சி ஓட்டுநரின் அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டான். கருணாமூர்த்தி தன் காரிலேயே இவனை கோயம்பேட்டில் இறக்கிவிட்டுச் சென்றார். காரில் வரும்போதே மோகனாவிடமும் பல்லவியிடமும் விவரத்தைக் கூறினான். இருவருமே சற்று பயந்துதான் பேசினார்கள். “இன்னைக்கி ஒரு நைட்டு இருந்திடுங்க. நாளைக்கி சாயந்திரம் வந்துடுறேன்” என்று தைரியம் கூறினாலும் இவனுக்குள்ளும் அச்சம் இருக்கத்தான் செய்தது.

*

பேருந்து, விழுப்புரம் பேருந்து நிலையத்தினுள் நுழைந்து நின்றது. அதுவரை தூங்காமல் பூட்டப்பட்ட வில் போலவே பதட்டத்துடன் அமர்ந்திருத்தவன் கீழே இறங்கினான். கால்களை ஊன்றியபோது நடுங்கியது. பேரொலியுடன் கானா பாடல் ஒலித்துக் கொண்டிருந்த கடைக்கு அருகிலிருந்த கடையில் பால் வாங்கி அருந்தினான். நன்றாக வற்றி ஏடுகளுடன் இருந்த பால் ருசியாகவே தெரிந்தது. மனதில் அலுவலக மனிதர்களை எண்ண எண்ண பெருகி வந்த கோபம் வெறுப்பாக மாறி தொடர்ந்து ஏனிப்படி இருக்கிறார்கள் என்று மாய்ந்தபோது ஒருவித சலிப்பாக உருமாறியது. இப்போது இந்த நள்ளிரவில் லேசான குளிரில் இதமாக பாலருந்தியபடி யோசிக்கும்போது அவர்கள் மேல் பரிதாபம் தோன்றியது. “எத்தனை எளிய மனிதர்கள். இவர்கள் எப்போதாவது மீள்வார்களா. மீள வேண்டுமென அவர்களுக்கு தோன்றுமா. அய்யோ பாவம்” என்பதாக எண்ணம் ஓடியது. ஓட்டுநர் பேருந்தில் ஏறியதும் இவனும் ஏறி நன்றாக சாய்ந்து அமர்ந்தான். சில நிமிடங்களுக்குள்ளேயே உறங்கிவிட்டான்.

*

காலை ஐந்து மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் மோகன் ஓட்டுநரை அழைத்தான்.

“சார், வெளியதான் நிக்கிறேன்”

வண்டி அடையாளத்தைக் கேட்டுக் கொண்டு வண்டிக்குச் சென்றான். சுத்தமாக துடைக்கப்பட்ட வெண்ணிற பொலிரோ பளபளத்தது. அருகில் நின்று வணக்கம் சொன்னவனுக்கு முப்பது வயதிருக்கும். பழைய உடைகளை சுத்தமாக துவைத்து அயர்ன் செய்திருந்தான். அவன் முகத்தில் அப்பாவித்தனமும் இயல்பான பணிவும் தெரிந்தது. அவன் தோற்றத்தை கண்டதுமே அவனை அணைத்துக் கொள்ள வேண்டுமென மனதில் ஒரு வாஞ்சை தோன்றியது.

“ஒங்க பேரென்ன”

“குணசேகரன்… குணான்னு கூப்பிடுவாங்க சார்”

“நல்ல பேரு. எங்க ஊருல இந்தப் பேருல ஒரு அண்ணன் இருந்தாரு. என் மேல அவருக்கு ரொம்ப பாசம்”

இதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் லேசாக முறுவலித்தான் குணா.

“இப்ப நான் குளிக்கணும். அப்புறம் சாப்பிட்டுட்டு முக்கொம்பு போகணும்”

“குளிக்கிறதுக்கு ஏதாவது ஓட்டலுக்குப் போகலாமா சார்”

“ஓட்டலுக்கல்லாம் போற அளவுக்கு பணமில்ல. உங்க ஆபிசுல வசதியில்லையா”

“கழிவறைதான் இருக்கு. கொஞ்சம் பெருசாவே இருக்கும். பரவாயில்லையா சார்”

“எனக்கு அதுபோதும். ஒரு துண்டு மட்டும் வாங்கிட்டு வந்திரு. குளிச்சிட்டு இதே உடையத்தான் திரும்பவும் போட்டுக்கணும்” என்று நூறு ரூபாயை குணாவிடம் கொடுத்தான்.

குணா நகர்ந்தவுடன் பல்லவியை அழைத்தான். ஒருமுறை முழுதாக ஒலித்து அடங்கியது. மனதில் லேசாக பதற்றம் தோன்றியது. மறுமுறை ஒலித்து முடியப்போகும் கணத்தில் அழைப்பை ஏற்றாள்.

“என்னம்மா ஆச்சு. தூங்கிட்டு இருந்தியா”

சில விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு “ஆமாங்க… இப்பதான் எழுந்தேன்” என்றாள்.

அவள் குரலில் சுரத்தே இல்லை. தயங்கியபடி பேசியதாகத் தோன்றியது.

“மோகனா பயப்படாம நல்லாத் தூங்குனாளா. இப்ப எழுந்துட்டாளா”

“ஆங்… இன்னும் எழலங்க. நீங்க தூங்குனீங்களா. டயர்டா இருக்கற மாதிரி தெரியுது”

துண்டுடன் வந்த குணா செல்லலாமா என சைகையில் கேட்டான். இவன் ஆமோதிப்புடன் தலையசைத்துவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான்.

“கொஞ்ச நேரம் தூங்கினேன். இனிமே குளிச்சுட்டு அமைச்சரைப் பாக்கப் போகணும். எப்படியும் நைட் வந்திருவேன். எதையும் நெனச்சு கவலப்படாம இருங்க. நான் பாத்துக்கிட்டு சொல்றேன்” என்று துண்டித்தான்.

“நல்ல துண்டா இருக்கே. நூறு ரூபாய்க்கே கொடுத்தானா” குணாவிடம் கேட்டான்.

“கொஞ்சம் அதிகம்தான் சார். பரவாயில்லேன்னு வாங்கிட்டேன்”

“நான் எவ்ளோ தரணும்” என்றபடி பையில் கைவிட்டான் மோகன்.

“அட பரவாயில்ல சார். அதிகமா இல்ல” என்று குணா கூறியபோதே அவன் அலைபேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றவன் “ம்ம்… சொல்லு… இப்பதான் ஆபிசுக்கு போறோம். அங்க சார் குளிச்சவுடனே முக்கொம்பு போகணும்… ம்ம்… ச்சரி பாக்கறேன். சரீஈஈ… வை வை” என்று துண்டித்தான்.

பிரதான சாலையிலிருந்து சிறிய சாலைக்குள் நுழைந்து ஒரு இரண்டு மாடி கட்டத்தின் முன் வண்டியை நிறுத்திய குணா “இதுதான் சார் எங்க ஆபீஸ்” என்றபடி இறங்கினான். கட்டடத்தின் முன் இரண்டு அசோகா மரங்களும் ஒரு வேப்ப மரமும் நின்றன. வேப்ப மரத்தின் கீழ் வெண்திட்டுகளாக பறவை எச்சங்கள் பரவியிருந்தன.

வாயிலின் அருகே நின்று கொண்டிருந்த சீருடை அணிந்திருந்த பாதுகாவலர் வணக்கம் கூறினார். குணா முன்னால் நடக்க மோகன் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். வரவேற்பறையை ஒட்டியிருந்த மேலாளரின் அறைக் கதவை குணா திறந்தபோது, மோகன்

“மேனேஜர் அறையை ஏன் திறக்கறீங்க” எனக் கேட்டான்.

“இங்கதான் சார் சுத்தமா இருக்கும். போயி குளிச்சுட்டு வந்திருங்க சார்”

“அவரு ஏதாவது சொல்லப் போறாரு”

“தெரிஞ்சாத்தானே கத்துவாரு. பத்து மணிக்கு மேலதான் வருவாரு. அதுக்குள்ள காஞ்சிடுமே சார்”

சாதாரணமாக வெளி ஆட்களிடம் தங்கள் உயரதிகாரிகளைப் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். இவனிடம் பேசியதிலிருந்து அவனும் தன்னை அணுக்கமானவனாக உணர்வதாக மோகனுக்குத் தோன்றியது. செயலாளர் ஒருவாரம் விடுப்பில் இருக்கும்போதும் அவர் அறைக்குள் அனுமதிக்காத செயலரின் உதவியாளரை எண்ணியபடி, இந்தப் பதிலை ஏற்றுக்கொண்ட பாவனையில் தலையசைத்து உள்ளே நுழைந்தான் மோகன்.

*

சத்திரம் பேருந்து நிலையத்தைக் கடந்து கரூர் செல்லும் சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது. அமைச்சருடன் இருப்பவரிடம் மோகன் பேசியபோது முக்கொம்பில் சென்று காத்திருக்குமாறு கூறினார்.

கருணாமூர்த்தி அழைத்தார்.

“வணக்கம் சார்… முக்கொம்புக்கு போயிட்டு இருக்கோம்”

“எத்தனை மணிக்கு பஸ்லேர்ந்து எறங்குன. இப்பதான் போயிட்டு இருக்கேன்னு சொல்ற”

“ஆபிசுலேயே குளிச்சிட்டு காபி குடிச்சிட்டு கெளம்பினேன் சார்”

“எதையாவது சாக்கு சொல்லிக்கிட்டு, நீ போறதுக்குள்ள அமைச்சர் வேற எங்காவது போயிட்டா பின்னாடியே போவியா”

“அமைச்சர் கூட இருக்கறவர்கிட்ட இப்பதான் பேசினேன். இன்னும் வரலையாம். அங்க போயி காத்திருக்கச் சொன்னார்”

“என்னவாவது பண்ணு. இன்னைக்குள்ள கையெழுத்து வாங்கிட்டு வந்து சேரனும். இல்லேன்னா செகரட்ரிக்கிட்டேருந்து நீ தப்பிக்க முடியாது பாத்துக்க. நானெல்லாம் சப்போட் பண்ணனுவேன்னு எதிர்பாக்காத”

மோகன் அலைபேசியை அணைத்தபோது குணா அலைபேசியில் முன்பு போலவே கெஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தான். இது மூன்றாவது தடவை. விசயம் என்னவென்று மோகனால் யூகிக்க முடியவில்லை.

“குணா ஏதாவது பிரச்சனையா”

“அப்படி ஒன்னுமில்ல சார்”

“அவசியம் இல்லாமயா இத்தனை தடவ கூப்பிடறாங்க. நான் வந்ததால எதுவும் கஷ்டமா”

“என் அக்கா பொண்ணுக்கு நாளைக்கி கன்னியாகுமரியில காதுகுத்து. எங்க அம்மா அப்பாகூட போறதுக்கு பஸ்ல ரிசர்வ் பண்ணியிருக்கேன். சனி ஞாயிறுதானேன்னு நானும் ஆபிசுல எதுவும் சொல்லல. நேத்து நைட்டு நீங்க வர்றீங்க… ஒங்க வேல முடியிற வரைக்கும் ஒங்களோட இருக்கணும்னு மேனேஜர் சொல்லிட்டு போனைக் கட் பண்ணிட்டாரு. அடுத்தவங்களுக்கும் வாய் இருக்குன்னு அவரு நினைக்க மாட்டாரு. அதே மாதிரி அவருக்கும் காது இருக்குங்கிறத மறந்திட்டாரு. நாம சொல்றத கேக்கவே மாட்டாரு. சொல்றத சொல்லிட்டு வச்சிருவாரு”

“வேற டிரைவர் யாரும் இல்லையா”

“ராமன்னு ஒருத்தர் இருக்கார். ஆனா, அவர் நேத்து சாயந்திரமே மதுரைக்கு கெளம்பிட்டார். நீங்களும் அவசர வேலையா வந்திருக்கீங்க. கூட இருந்துதானே ஆவணும். நீங்க போங்க நான் எப்படியாவது வந்தர்றேன்னு சொன்னாலும் புரியாம கூப்பிட்டுக்கிட்டே இருக்கா. அப்பா அம்மா கொஞ்சம் ஒடம்புக்கு முடியாதவங்க”

குணா கூறியதைக் கேட்டதும் பல்லவி நினைவு மனதில் எழ, மோகன் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தான். பல்லவி காலையில் சரியாக பேசாததற்கு ஏதாவது காரணம் இருக்குமா என்று எண்ணம் ஓடியது.

முக்கொம்பு வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டி நின்றது. கீழே இறங்கிய மோகன், இறங்கப்போன குணாவைத் தடுத்து “நீ கிளம்பு குணா. அப்பா அம்மாகூடப் போய் தாய்மாமனா நின்னு விசேசத்தை நல்லபடியா நடத்து”

“பரவாயில்ல சார். ஒங்க வேலை முடிஞ்சதும் போகலாம்” தயங்கியபடியே கூறினான்.

“அமைச்சர் எப்ப வருவார்னு தெரியல. நான் இருந்து வாங்கிக்கிட்டு போறேன். ஒன் மேனேஜர்கிட்ட நானேதான் அனுப்புனேன்னு சொல்றேன். பயப்படாம போயிட்டு வா” என்று தோளில் மெல்ல தட்டிக் கொடுத்தான். பெரும் தயக்கத்துடனும் இயலாமையுடனும் கிளம்பினான் குணா.

ஒருபுறம் காவிரியாகவும் இன்னொரு புறம் கொள்ளிடமாகவும் காவிரியைப் பிரிக்கும் இடம்தான் முக்கொம்பு. மோகன் காவிரிப் பாலத்தின் மேல் நடந்து, நடுவில் இருந்த தங்கும் விடுதிக்கு சென்று அமைச்சர் வந்துவிட்டாரா எனக் கேட்டான். இன்னும் வரவில்லை. எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். காவிரியை இரண்டாகப் பகுக்கும் முனைக்குச் சென்று நின்றான். நீரின் குளுமை மேனியை சிலிர்க்க வைத்தது. தடுப்புச் சுவரின் கம்பியை பிடித்தபடி ஓடும் நீரையே பார்த்தான். மனதில் இருந்த கவலை பதட்டமெல்லாம் மெதுவாக கரைந்து வழிந்தோடியது. நீர் என்னவெல்லாம் செய்கிறது. அனைத்தையும் தொடுகிறது, வருடுகிறது அணைக்கிறது, தழுவுகிறது… சற்று வேகம் கூடும் போது இறுக்கத்தை அதிகரித்து கரைக்க ஆரம்பிக்கிறது. கரைவதின் கவனமின்றி கரைதலில் திளைக்கின்றன அனைத்தும். எத்தனை சுகம்… கரைவதில், கரைந்தழிவதில். தான் கரைப்பதை அதனால் தன் நிறமும் குணமும் மாறுவதை அறியாமல் ஓடும் நீர், சிறுபொழுதில் தன்னுடன் கலந்து வருவதை, தொடர்ந்து சுமந்து செல்லாமல் அப்படியே கைவிட்டுச் செல்கிறது. கரைப்பதன் கர்வமின்றி சுமக்கும் பாரமின்றி எத்தனை சுதந்திரமாய் பாய்ந்து செல்லும் நீருக்குத்தான் எத்தனை துடிப்பு, எத்தனை துள்ளல். தொடும் அனைத்தையும் மலர வைத்தபடி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. நீரைப் போல வாழமுடித்தவன் பாக்கியசாலி… எண்ணங்கள் எங்கெங்கோ சென்று கொண்டிருக்க நீரின் குளுமை மாறி மெல்லிய வெம்மையாக உடலைத் தழுவியதும் சுயநினைவிற்கு வந்தவன் மறுபடி விடுதிக்கு சென்றான். அமைச்சர் வந்ததற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. மனதோடு உடலிலும் சோர்வு தோன்றியது. காலையிலிருந்து காபி மட்டுமே குடித்திருந்தான். அருகில் உணவு எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை. இருந்த ஒரே கடையில் ஒரு பன்னை கடித்தபடி டீயை உறிஞ்சியபோது கருணாமூர்த்தி அழைத்தார். “என்ன சார்” என்று கடுப்பு குரலில் தெரியும் வண்ணம் கேட்டான். “என்னாச்சு”

“காத்திட்டிருக்கேன்… பனிரெண்டு மணியாச்சு. காலையிலேர்ந்து எதுவும் சாப்பிடக்கூட இல்ல”

“நானென்ன பண்றது. நீ பண்ணுன தப்பு”

“சார் மரியாதைக்காக பாக்குறேன். இன்னொரு தடவ இப்படி சொல்லாதீங்க. போட்டுவச்ச பைல ஒழுங்கா கவனிக்காம இருந்துட்டு என்னயவே கொற சொல்லிட்டிருக்கீங்க. போன வைங்க. கையெழுத்து வாங்குன ஒடனே வந்து சேர்றேன்”

“சரி… சரி… பாத்துக்கிட்டு வா” என்ற குரலில் திகைப்பும் குழைவும் தொனித்தது.

விடுதிக்கு முன்புறம் வேட்டி கட்டிய சிலர் வேகமாக நடந்தார்கள். அமைச்சர் வந்துவிட்டதை உணர்ந்து அங்கே சென்றான். இரண்டு பேர் இருபுறமும் நடக்க அமைச்சர் வந்தார். மோகன் வணங்கினான்.

அமைச்சரும் வணங்கியபடியே உள்ளே சென்றார். அமைச்சரின் அருகில் சென்றவர்களில் படித்த கலை முகத்தில் தெரிந்தவரின் அருகில் சென்று,

“வணக்கம் சார்… நான் சென்னையிலேர்ந்து வர்றேன். போன்ல கூட பேசினேனே”

.”மோகன் நீங்கதானா… பைலைக் கொடுங்க” என்று வாங்கிக் கொண்டவர் இவனையும் உடன் அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றார்.

படுக்கையில் அமர்ந்தபடி, நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் நிமிர்ந்து பார்த்தார்.

“ஐயா… அவசர பைலாம். கையெழுத்து வாங்க வந்திருக்கார்”

மோகனை நோக்கித் திரும்பியவர், “என்ன பைல் இது”

“எங்க செகரெட்டரி ஆஸ்திரேலிய போறதுக்கு அனுமதி கேக்கறது சார்”

“மக்கள் சம்பந்தமானதுன்னா நாளைக்கி பாத்துகலாம்னு இருப்பீங்க. செகரெட்டரி பைல்னா திருச்சி வரைக்கும் வருவீங்க” எனக் கேலிச்சிரிப்புடன் கூறியபடியே கையெழுத்திட்டவர் “ஒன்னுதானே” எனக் கேட்டார். “ஆமாங்கய்யா” என உதவியாளர் கூறியபோதே மோகன் “நன்றிங்க சார்” என கை கூப்பினான். “சரி பத்திரமா போங்க” என்று கூறியபடி அருகிலிருந்தவர்களை நோக்கினார். மோகன் வெளியே வந்தான்.

  • மோகன் கோயம்பேட்டிலிருந்து ஆட்டோவில் வந்து வீட்டை அடையும் போது நள்ளிரவு ஆகிவிட்டது. வீடு வெளியே பூட்டப்பட்டிருந்தது. பேருந்தில் வரும்போதே பல்லவியிடம் அலைபேசியில் விபரத்தைக் கூறினான். “வேலை முடிந்ததல்லவா நல்லது. வீட்டுக்கு வாங்க. எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்” என அவள் கூறியபோதே ஒரு நெருடலாக இருந்தது. தனியே விட்டுச் சென்றதற்கான சிறுகோபமாக இருக்கும் என நினைத்தான். இப்போது வீடு பூட்டியிருப்பதைக் கண்டவுடன் என்னவாயிருக்கும் என்ற பயத்துடன் தன்னிடம் ஒன்றும் கூறாதவள் மேல் சினமும் எழுந்தது. நள்ளிரவில் யாரிடம் விசாரிப்பது என்று சுற்றிலும் நோக்கியபோது இவன் வருவதற்காக காத்திருந்தவன் போல பக்கத்து வீட்டு ரவி தயக்கமான மெல்லிய முறுவலுடன் இவனை நோக்கி வந்தான்.

பி.காம் படித்திருந்தாலும் சரியான பணியமையாததால் ரவி அவன் பெற்றோரை அனுப்பி மோகனாவை பெண் கேட்டபோது மறுத்துவிட்டு, வேலூரில் மாப்பிள்ளை பார்த்து தங்கையை மணமுடித்தான் மோகன். ஆறு மாதங்களுக்கு முன் பெங்களூரில் வேலை கிடைத்துச் சென்றவன் இரண்டு நாட்களுக்கு முன்தான் திரும்பியிருந்தான். பல்லவியையும் மோகனாவையும் தனியாக வீட்டில் விட்டுச் செல்லவேண்டிய சூழலில் ரவி பழைய நினைப்பில் பழிவாங்க ஏதேனும் செய்வானோ என மனம் பதைத்தது. இப்போது வீடு வெளியே பூட்டியிருக்க இந்நள்ளிரவு நேரத்தில் சிரித்தபடி இவன் வருவதைக் கண்டதும் மோகனின் சிந்தனை ஒருகணம் நிலைகுலைந்தது. தன்னை ஒதுக்கி வேறொருவனை மணந்து அவன் வாரிசை சுமந்து நிற்பவளைக் கண்டு எழுந்த ஆங்காரத்தில் ஏதாவது செய்துவிட்டானா… சில வினாடிகளில் மனம் உருவாக்கிய அச்சம் புதைமணலினுள் மாட்டிய பிராணி உள்ளமிழ்வதுபோல வேறெதையும் சிந்திக்கவிடாமல் உள்ளிழுத்தது.

“சார் வீட்டுச்சாவி என்கிட்ட இருக்குது” என்று நீட்டியவனை ஏதேதோ எண்ணங்கள் குழம்பிச்சூழ, எதுவும் புரியாமல், எதையும் கேட்க முடியாத திணறலுடன் நோக்கினார்.

“சார் ஒன்னும் பயப்படாதீங்க. உங்க தங்கைக்கு ஆண் கொழந்தை பிறந்திருக்கு. ரெண்டு பேரும் நல்லாயிருக்காங்க” என்றவனின் முகம் களங்கமற்று மலர்ந்திருந்தது.

தான் கேட்ட வார்த்தைகளை முழுக்க உள்வாங்க முடியாமல் திகைத்தான். தான் எதிர்பார்த்த மிரட்டும் வஞ்சகச் சொற்களுக்குப் பதிலாக மிக மகிழ்ச்சியான வார்த்தைகளை கேட்டவுடன் சித்தம் கலங்க, கண்ணீர் வழிய அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். வெறுப்பின் உச்சத்தில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சில கணங்களில் நன்றியுடன் கை தொழுதான். அச்சூழலில் என்ன செய்ய வேண்டுமென்றே புரியாமல் சில நிமிடங்கள் இருவரும் அவரவர் நிலையிலேயே இருந்தனர். ரவிதான் முதலில் தன்னிலை மீண்டான்.

“சார் எழுந்திருங்க. டிபன் வாங்கி வச்சிருக்கேன். நீங்க சாப்பிடுங்க. நான் எல்லா விபரத்தையும் சொல்றேன்”

“பல்லவி ஏன் என்கிட்ட சொல்லலை”

“வெள்ளிக் கெழம காலையிலேர்ந்து பதட்டமாவே இருக்கிறவர் இதைச் சொன்னா நேரா ஆஸ்பிடல் வந்திருவாரு. இன்னைக்கும் தூங்க மாட்டாரு. வீட்டுக்கு வந்து தூங்கிட்டு காலையில வந்து கொழந்தையப் பாக்கட்டும்னு சொன்னாங்க”

“கணவனின் கிறுக்குத்தனத்தை எப்படி சரியாக கணித்து அதற்கு தகுந்த முடிவுகளை உடனேயே எடுக்கிறாள்” என்று வியந்தபடி கதவைத் திறந்தான் மோகன்.

“சனிக்கெழம காலையில கழிவறைக்குப் போறதுக்காக எழுந்தப்ப ஒங்க வீட்ல லைட் எரிஞ்சத பாத்தேன். கூடவே வலியில முனகுற சத்தமும் கேட்டுச்சு. ஒடனே பதறிப்போயி வந்தேன். வயித்த வலிக்குதுன்னு ஒங்க தங்கை துடிச்சது. பல்லவி அக்கா என்கிட்ட ஒரு காரு புக் பண்ணுப்பா ஒடனே ஆஸ்பிடல் போகணும்னு அழுதாங்க”

ரவி சொல்ல கண்கள் கலங்க கேட்டுக் கொண்டிருந்தான் மோகன்.

“காருல அமிஞ்சிக்கரை ஹண்டே ஆஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போனோம். நீர்க்கொடம் ஒடஞ்சி தண்ணியெல்லாம் வெளியாயிட்டதா சொன்னாங்க. ஆனா வலியில ஒங்க தங்கை துடிச்சுக்கிட்டே இருந்தாங்க. சுகப்பிரசவம் ஆகுதான்னு பாப்போம்னு சாயந்திரம் வரைக்கும் பாத்தாங்க. ஆகல. இதுக்குமேல சிக்கல் ஆனாலும் ஆயிடும்னு சிசேரியன் பண்ணினாங்க. ஆண் கொழந்த நல்லபடியா பொறந்திருக்குன்னு எட்டு மணிக்குச் சொன்னாங்க”

“ஒங்க தங்கையோட வீட்டுக்காரங்களுக்கெல்லாம் அப்பவே விசயத்த சொல்லியாச்சு. ஒங்களுக்கு தெரிஞ்சா பதட்டமாவீங்க. தெரிஞ்சாலும் அங்கேயிருந்து நீங்க செய்றதுக்கு எதுவும் இல்லேன்னுதான் பல்லவி அக்கா சொல்லலை. சாவிய என்கிட்ட கொடுத்து அனுப்புனாங்க. நைட்ல வரவேண்டாம். காலையில வந்தாப் போதும்னு சொல்லச் சொன்னாங்க” என்று முடித்தான் ரவி. அவன் கைகளைப் பிடித்த மோகன் தன் கண்களில் ஒற்றிக்கொண்ட போது சில கண்ணீர் துளிகள் அவன் விரல்களை தழுவி நழுவியோடியது.

“வீடு பூட்டியிருக்கு. இவங்க வீட்ல இல்ல. நீ சிரிச்சபடி வர்ற. இதப் பாத்தப்ப… இனி சொல்றதுக்கென்ன. ஒரு கணம் ஒன்னால அவங்களுக்கு ஏதாவது தீங்கு நடந்திருக்குமோன்னு பயந்துட்டேன் தெரியுமா”

ரவி எதுவும் சொல்லாமல் தலை குனிந்திருந்தான்.

“ஒனக்கு எங்கமேல கோபம் எதுவும் இல்லையா”

தலையை மெல்ல ஆட்டியபடி “இருந்துச்சு உங்க மேல. அப்பவே கொல்லணும்னு தோணிச்சு. ஆனா யோசிச்சு பாத்தப்ப ஒங்க தங்கை நல்லாயிருக்கனும்னுதானே நீங்களும் நெனச்சீங்க. நான் நெனச்சதும் அவளை சந்தோசமா வச்சுக்கணும்னுதானே. அவ எங்கிட்ட இருக்கிறதவிட வேற எடத்துல சந்தோசமா இருப்பான்னா இருக்கட்டுமே. நான் விரும்புனதும் அதத்தானே” இரு சொட்டு விழி நீர் சிந்தியது. அவன் அருகில் சென்ற மோகன் நின்றபடியே ரவியை அணைத்துக் கொண்டபோது உடலும் மனமும் நெகிழ்ந்திருந்தது.

*

திங்கட்கிழமை. மாலை நான்கு மணியைக் காட்டிய சுவர் கடிகாரத்திற்கருகில் வாயில் கை வைத்து ஸ்ஸ்ஸ்…. எனச் சொல்லும் குழந்தையின் படம் ஒட்டப்பட்டிருந்தது. இரண்டரை மணிக்கு செகரெட்டரியின் நேர்முக உதவியாளர் இவனை அழைத்து சிஎம் அலுவலகத்திற்குச் சென்று கோப்பு என்னவாயிற்றென பார்த்து வருமாறு செகரட்டரி கூறியதாகக் கூறினார். முதல்வர் அலுவலகத்தின் சார்புச் செயலாளரின் அறையில் காத்திருந்த மோகனுக்கு இந்தக் குழந்தையின் படம் தங்கை மோகனாவின் நினைவிற்கு இட்டுச்சென்றது.

மருத்துவமனையில் படுத்திருந்த மோகனாவின் கருத்த முகம் வெளுத்திருந்தது. வெள்ளைத் துணியில் பொதிந்தது போல இரு கை விரல்களையும் இறுக்கியபடி மெல் இமைகளை மூடி குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. மின்விசிறிக் காற்று சற்று அழுத்தமாகப் பட்டபோது மேனி விதிர்த்தது… இவனைப் பார்த்தவுடன் செல்லக் கோபத்துடன் லேசாகச் சிணுங்கிய மோகனா இவன் தன் கைகளால் அவள் நெற்றியை ஆதுரத்துடன் தொட்டு மேல் நோக்கி மெல்ல நீவியபோது மெல்லிய கேவலுடன் கண்ணீர் உகுத்தாள்.

“மன்னிச்சுடுமா… இந்த நேரத்துல ஒன்கூட இருக்க முடியாமப் போச்சு… ரொம்ப வலிச்சுச்சா”

“பரவாயில்லண்ணா. நீ வேணும்னு போகலயே. இக்கட்டான நெலமையிலதானே போன”

இவர்களின் அரவணைப்பை சற்று தூரத்திலிருந்து நோக்கிய பல்லவி தன் விழிநீரை கீழே விழாமல் புறங்கையால் துடைத்தாள்.

திருச்சியிலிருந்து கிளம்பி வீட்டை அடைந்தபோது மனம் அடைந்த பதட்டத்தை இப்போது எண்ணியபோது மெல்லிய புன்னகையும் ஆசுவாசமும் தோன்றியது. இவன் முகத்தை நோக்கியவாறு உள்ளே வந்த சார்புச்செயலாளர் கண்ணய்யா “ஒரே மகிழ்ச்சியா இருக்குற மாதிரி தெரியுது” என்று கூறியவாறு அமர்ந்தார்.

இவன் எழுந்து நின்று “அப்படியெல்லாம் இல்ல சார்” என்றான்.

“உக்காருப்பா… என்ன விசயம்” கண்ணய்யா சில நேரங்களைத் தவிர பொதுவாக விளையாட்டாய் புன்னகையுடன் பேசக்கூடியவர்.

“எங்க செகரட்டரி பைல் என்னாச்சுன்னு பாக்கச் சொன்னாங்க சார்”

“நேத்து கொடுத்ததா”

“ஆமா சார். சனிக்கெழம திருச்சிக்குப் போயி அமைச்சர்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வந்து, நேத்து ஆபிசுக்கு வந்து நோட் ரெடி பண்ணி, செகரட்டரி வீட்டுக்குப் போயி கையெழுத்து வாங்கிட்டு வந்து இங்கே கொடுத்தேன் சார்” மூச்சு வாங்காமல் கூறியவனை முறுவலுடன் நோக்கியவரின் முகத்தில் மெல்லிய வருத்தம் தெரிந்தது.

“நேத்து பத்து பைல் சிஎம் செகரட்டரிக்கு அனுப்பினோம். அதுல எட்டு பைல் கையெழுத்தாகி வந்திருச்சு. வராத ரெண்டுல உங்க செகரட்டரியோடதும் ஒன்னு” என்றபடி புன்னகைத்தார். அந்தப் புன்னகைக்கு செகரெட்டரியின் விருப்பம் ஏற்கப்படவில்லை என்று அர்த்தம்.

“சரி சார். நன்றி சார்” என்றவாறு எழுந்தான்.

“என்னப்பா முகம் சட்டுனு இருண்டுருச்சு. இதெல்லாம் இப்படித்தான். சரி வா பாக்கலாம்” என்ற வார்த்தைகளில் மெல்லிய மயிலிறகின் வருடலை உணர்ந்தான்.

கருணாமூர்த்தியுடன் செகரெட்டரியின் அறைக்குள் நுழைந்தான். நிமிர்ந்து பார்த்தவரின் விழிகள் விபரத்தை அறியும் ஆர்வமின்றி வெறுமையாய் இருந்தது. அதை கவனிக்காமல் இவன் “சார் அந்தப் பைல்…” எனத் தொடங்க அதைக் கண்டு கொள்ளாமல் “தேனி கலெக்டர் மூலமா ஒரு ப்ரொப்போசல் வந்துச்சே அது என்னாச்சு”

மோகனுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாததால் வெறுமனே நின்றான்.
“வெள்ளிக் கெழமதான் சார் வந்துச்சு. இப்போ ரெடி பண்ணிடறேன் சார்” எனக் கருணாமூர்த்தி குழைவுடன் கூறியபடி இவனை முறைத்தார்.

“சரி, சீக்கிரம் கொண்டு வாங்க. அவர் போன் பண்ணி என்ன ஸ்டேஜ்ன்னு கேக்கறார்” என்று அழுத்தமாகக் கூறியதும் வெளியே வந்தார்கள்.

“மோகன் அந்த தேனிக் கலெக்டரோட லெட்டர் தபால்ல இருக்கும். ஒடனே போட்டுக் கொண்டுட்டு வாங்க” என்றார் கருணாமூர்த்தி.

மோகன் அலுவலக அறைக்குச் செல்லாமல் தேநீர் கடையை நோக்கிச் சென்றான். இரண்டு நாட்களாக பட்ட உடல் அலைவுகளுக்கு மனதின் உலைச்சல்களுக்கு, அடைந்த பதட்டங்களுக்கு என்னதான் பொருள். இந்த சந்திரனும் பூமியும் சூரியனும் ஏன் மொத்த பிரபஞ்சமும் தலைசுற்றச் சுழல்வதற்கு ஏதேனும் அர்த்தம் இருக்கக்கூடுமா அல்லது அதுவும் பொருளற்றதுதானா கேள்விகள் எழஎழ தலையில் வெம்மையேறியது. அப்போது ஓர் அழைப்பு வர எடுத்துப் பார்த்தான். குணா அழைத்தான். வெம்பிச் சுருங்கியிருந்த இவன் முகம் ஒருவித நிறைவில் மெல்லப் பூரிக்க ஆரம்பித்தது.

***


கா.சிவா
[email protected]

    "

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here