அலசல்

0

சைலபதி

ண்பா, நான் சொல்வதை நீ நம்பவில்லை என்பது உன் சிரிப்பில் தெரிகிறது. எப்படிக் காதல் உணர்வை அடைந்தவர்கள் தவிர வேறு யாராலும் விவரிக்க முடியாதோ அதேபோல பயத்தையும் மரணத்தையும் அடைந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு விளக்கவே முடியாது. நான் இன்னும் மரணமடையவில்லை என்பது மட்டும்தான் எனக்கு ஆறுதல். மற்றபடி அந்தக் கணம், அப்போது எனக்குள் எழுந்த நடுக்கம் இன்னும் போகவேயில்லை. வீட்டின் ஓரத்தில் பழைய மரச்சாமான்கள் போட்டிருக்கும் அறையில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் எலியைப் போல அது இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

இரவு அப்போது மணி ஒன்றிருக்கும். லேசாக இருமல் ஆரம்பித்தது. தொண்டையை செருமிக் கொண்டு அப்படியே படுக்க முயன்றேன். ஆனால் அது பயனளிக்கவில்லை. சில நிமிடங்களில் இருமல் அதிகமானது. நேற்றிலிருந்து உள்ளூர ஒரு ஜுரம் இருந்தது. கூடவே தலைவலி வேறு. நான் பொருட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. திமிர், நமக்கெல்லாம் கொரோனா வராது என்னும் திமிர்.

எழுந்துபோய் வாஷ்பேசினில் இருமித்துப்ப முயன்றேன். எச்சில் கூட வரவில்லை. வெறும் வறட்டு இருமல். மீண்டும் படுக்கைக்கு வந்தும் அவஸ்தை குறையவே இல்லை.

நண்பா, ஒன்று சொல்லவா… என் மனைவி, என் இரு பிள்ளைகள், கூடத்தில் படுத்திருக்கும் அம்மா என்று அனைவருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது இரவில் சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துக் கொள்வது. ஆனால், எனது காட்டு இருமலுக்கு அவர்களிடம் சிறு புரளல் கூட இல்லை. என்ன ஆனது இவர்களுக்கு…

நான் சின்னவனாக இருக்கும்போது தாத்தாவுக்கு ரொம்ப முடியவில்லை. பாட்டி பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டாள். தாத்தாவுக்கு லேசாக இழுத்தாலும் விசுக்கென்று எழுந்து அமர்ந்து நெஞ்சை நீவிவிடுவாள். ஒருநாள் பாட்டி அசந்து தூங்கிவிட்டாள். தாத்தா அன்று போய்ச்சேர்ந்தார். பாட்டி அழும்போது, “கண்ணுக்குள்ள வச்சிப் பாத்துக்கிட்டனே, என்னை அசத்திப்போட்டுக் கொண்டு போய்ட்டானே” என்று அழுதாள். அதை நான் மனதில் குறித்துக்கொண்டு பின்னாளில் பாட்டியிடம் கேட்டேன்.

“எம தருமரு வந்தாருன்னா, சாவுறவங்க கண்ணுக்குத் தெரியும். ஆனா அவங்களால வாய் திறந்து சொல்ல முடியாது. கூட இருக்கிறவங்க கண்ணைக் கட்டி அவங்களை மயங்கடிச்சிட்டுத்தான் உசிரைக் கொண்டு போவான்” என்றாள்.

அப்படித்தான் என்னைச் சுற்றியிருக்கிறவர்களை எமன் மயங்கடித்து விட்டான் என்று தோன்றியது. நெஞ்சை அடைப்பது போலத் தோன்றியது. உடலின் சக்தியைத் திரட்டி சமையலறை சென்று வெந்நீர் வைத்துக் குடித்தேன், இதமாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் இருமல் குறைந்தது. அப்படியே வந்து படுக்கையில் படுத்தேன்.

உறங்கக் கண்ணை மூடினால், நான் மரணித்துக் கிடப்பதுபோலக் காட்சி தோன்றியது. பக்கத்தில் திலகாவும் பிள்ளைகளும் அழுது கொண்டிருக்கிறார்கள். அம்மா வாசலில் யாரையோ கட்டிக் கொண்டு அழுகிறாள். அப்போது ஒருவன் டை கட்டிக்கொண்டு உள்ளே வருகிறான். ‘யார் திலகா’ என்று விசாரிக்கிறான்… பின்பு திலகாவிடம் வந்து, “உங்க வீட்டுக்காரர் எங்க பேங்க்ல 5 லட்சம் பர்சனல் லோன் வாங்கியிருந்தார். அதில் இன்னும் 4 லட்சம் அடைக்கப்படவில்லை. நீங்கள்தான் சட்டப்படி அவரின் வாரிசு என்பதால் கடனை உங்கள் பெயருக்கு மாற்றிவிட்டோம்’ என்று சொல்லி கொஞ்சம் கத்தைப் பேப்பரை அவளிடம் தந்துவிட்டு நகர்ந்தான்.

திலகாவுக்கு அழுகை நின்றுவிட்டது. என் உடலையே உற்றுப் பார்த்தாள். என் நண்பன் என்பதால் உன்னை நோக்கி, “அண்ணா 5 லட்சம் வாங்கி இந்த மனுஷன் என்னண்ணா செய்தார்?” என்றாள்.

நீ மிகவும் நல்லவனாயிற்றே.. “தெரியலைம்மா.. ஒருவேளை மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கலாம்” என்கிறாய்.

“ ஐயோ எதுவுமே சொல்லாம இப்படி என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டாரே.. நான் என்ன செய்வேன், கடனைக் கட்டுவனா, இல்லை பிள்ளைகளை வளர்ப்பேனா.. ” என்று சத்தம் போட்டபடி என் நெஞ்சில் ஓங்கி ஓர் அடி அடித்து அழுதாள். உண்மையாக நெஞ்சில் அடித்தது போல் வலிக்கவே தூக்கம் கலைந்து விட்டது. அதன்பின் இந்த நிமிடம்வரை உறங்கவேயில்லை.

நண்பா, எனக்கு கொரோனா இருக்குமோ என்கிற சந்தேகம் இப்போது வலுவாகி விட்டது. அதற்கு முன்பு நான் என்ன செய்வது… ஒருவேளை பரிசோதனையில் உறுதியாகி விட்டால் தனிமைப்படுத்தி விடுவார்கள். இப்பொழுதெல்லாம் அனுமதித்த ஒருமணி நேரத்தில் இறந்து விடுகிறார்களாம். அதனால் உறுதியான பின்பு இவற்றை எல்லாம் ஆசுவாசமாகப் பேச முடியாது. நான் உன்னிடம் என் கணக்கு வழக்குகளைச் சொல்கிறேன். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நீ அதை அவளிடம் பக்குவமாகச் சொல்லிவிடு. கொஞ்சம் அதிர்ச்சி அடைவாள். நானே சொல்லலாம். ஆனால் அடுத்த கணத்திலிருந்து அவள் இரக்கமற்றவளாக மாறிவிடக் கூடும். அதற்காக யாருக்குமே தெரியாமல் மறைத்து வைத்து இந்த கொரோனா போலக் கடைசி நொடியில் பிரச்னைகள் அதிகமாகிக் கழுத்தைப் பிடிக்கக் கூடாது. அதனால்தான் உன்னிடம் சொல்கிறேன். என்ன சொல்கிறாய்… ஏதாவது சொல் நண்பா.”

*

“நண்பா, உன்னை நான் என்னவோ நினைத்தேன். ஆனால் நீ, உண்மையை சந்திக்க தைரியமில்லாதவனாக இருக்கிறாய். வாழ்க்கையை உறவுகளை நீ எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறாய் நண்பா… உனக்காக உன்னுடன் வாழ்ந்து உனக்கான வாரிசுகளைப் பெற்றவள் அவள்… அவளிடம் உண்மையை மறைக்க வேண்டும் என்கிற உன் எண்ணமே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

உண்மையில் எனக்கும் இதேபோன்று சில பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதை நான் உன்னிடமோ இல்லை வேறு யாரிடமோ சொல்லப் போவதில்லை. காரணம் அவ்வாறு சொன்னால் நான் என் மனைவியை என் தோழியை எனக்காக வாழ்பவளை அவமதித்ததாக ஆகிவிடும். இதைச் சொல்கிற போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உண்மையில் இவற்றையெல்லாம் நான் இதற்கு முன்பு சிந்திக்கவேயில்லை. நீ பேசுகிறபோதுதான் இந்த ஞானோதயமும் தோன்றியது. மனைவியானவளிடம் தைரியமாகத் தன் வரவு செலவுகளை ஒப்புவிப்பவன் யார்?

இது ஒரு வேத வசனம் போல எனக்குள் கேட்கிறது. நாம் ஏன் அதைச் செய்யவில்லை. இதுதான் நாம் நம் உறவுகளுக்குத் தரும் மரியாதையா… உன் அந்தரங்கங்களை அவள் அறியாமல் அவற்றை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொண்டாய் என்று அறிந்தாலே நாளை அவள் உன் படத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்… ஒருவேளை திலகா நல்லவளாய் இருக்கலாம், ஆனால் என் மனைவி அப்படியில்லை. உயிரோடு இருந்தால் என்னையோ இல்லையென்றால் என் படத்தையோ துவம்சம் செய்துவிடுவாள்.

அதனால் நான் இப்போதே முடிவு செய்துவிட்டேன். இன்றே அவளுடன் என் வரவு செலவுகளைச் சொல்லப் போகிறேன். அவள் அடித்தாலும் சரி வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் தீர்மானம். நீ முதலில் டெஸ்டுக்குக் கொடுத்துவிட்டு வா. அதன்பின் திலகாவை அமரவைத்துப் பேசு. அவள் புரிந்து கொள்வாள். நீ ஒன்றும் ஊதாரியில்லை. அவ்வப்போது குடிப்பாய் என்பதைத் தவிரக் குடிகாரனும் இல்லை. பங்குச்சந்தையில் நீ செய்த முதலீடுகள் பாதாளத்துக்குப் போனதனால் முட்டாள் என்று சொல்லிவிட முடியுமா… எல்லாம் விதி.

நண்பர்களிடம் வாங்கியிருக்கும் கடன்கள், வங்கிக் கடன், நெருப்பு என்றால் சுடாது. ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் கிடைக்கும் தொகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றை அவளுக்கு விவரி. அவள் கோபப்படலாம், அழலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும்விட நாம் கண் மூடும்போது, பாரமில்லாமல்… என்ன அப்படிப் பார்க்கிறாய்… கண்மூட என்றால் கண்மூடிவிடவா போகிறோம். ஒரு பேச்சுக்கு… அப்படிப் பார்க்காதே, நான் எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.

போ, டெஸ்ட் எடு… மனைவியிடம் பேசு. நானும் பேசுகிறேன்.”

*

தைரியமானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் எவ்வளவு கோழையாய் இருக்கிறோம். மனதுக்குள் மகேஷ் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது.

இந்நேரம் மகேஷ் பரிசோதனை செய்திருக்கலாம். வீட்டுக்கு வந்து மனைவியிடம் பேச ஆரம்பித்திருப்பான். திலகா எப்படி எதிர்வினையாற்றுகிறாளோ…

மகேஷ் சொல்லியிருப்பான். அப்போது நான்… அவனுக்கு அறிவுரை சொல்லிவிட்டு நாம் அதைப் பின்பற்றாமல் இருந்தால் எப்படி…

மனைவி இருக்கும் அறைக்குப் போனேன். அறையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் ஹாலுக்குப் போங்க… டிவில தர்பார் போடுறான்” என்றதும் அவர்கள் சிட்டாய்ப் பறந்தார்கள். நான் அறையின் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டேன்.

”ஏங்க, என்ன இது, பட்டப்பகல்ல… பசங்க வீட்டுல இருக்கு… சொன்னாக் கேளுங்க…”

மறுப்பவளைப் போன்ற சொற்களோடும் நெகிழும் பாவனைகளோடும் பேசிய மனைவியைப் பார்த்ததும், ஒரு கணம் மனம் சபலம் அடைந்தது. சொல்ல வந்ததை விட்டுவிட்டுப் பேசாமல்…

சே, என்ன நினைப்பு… மகேஷ் மனதில் தோன்றி ‘அடேய்… என்னை மாட்டி விட்டுட்டு நீ மட்டும்…’ என்று மிரட்டுவதுபோல் தோன்றியது.

“ஐயோ அப்படியில்லப்பா… நான் உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும், நான் சொல்லப் போறதக் கேட்டு நீ என்னைத் தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. நான் பேசியாகணும்…”

அடுத்த அரைமணி நேரம் மின்விசிறி சுழன்றதா என்று தெரியவில்லை. உடல் நன்கு வியர்த்துக் கொட்டியது. ஆனாலும் எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆசுவாசம் மனதில் இருந்தது. அடிகூட விழ வாய்ப்பிருக்கிறது. எதற்கும் தயாராக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அமைதியில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மனம் லேசானது. அந்த கணம் இனி எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையும் தோன்றியது. அது என் மேல் உள்ள நம்பிக்கையில் இல்லை. என் எதிரே உட்கார்ந்திருப்பவள் மேல் உள்ள நம்பிக்கை.

அவள் ஆதரவாகக் கட்டிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள். பின்பு ‘எல்லாம் பார்த்துக்கலாம், கவலைப்படாதீங்க’ என்றாள். அடுத்து

“உங்க ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகளைக் கொடுங்க…”

தந்தேன்.

அதை அவள் புடவைகளுக்கு நடுவே திணித்தாள். எந்தப் புடவைக்கு நடுவில் என்று கவனிக்கும் முன்பு பீரோவை மூடினாள். கணினியில் அமர்ந்து “உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டு சொல்லுங்க”

சொன்னேன்.

உள் நுழைந்து வேறு பாஸ்வேர்டு மாற்றினாள். நான் நல்லவனாக அதைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டேன். மொபைலில் இருந்த வேலட்டுகளின் பின் எண்களை மாற்றினாள். பின்பு,

“இதோ பாருங்க, இதெல்லாம் எனக்காக இல்லை, நம்ம குடும்பத்துக்காக… ஒரு இரண்டு வருஷம் சிக்கனமா இருந்தா உங்க பிரச்னை எல்லாம் முடிஞ்சிடும். சோ கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணுங்க” என்று சொல்லி மீண்டும் அணைத்தாள்.

அடிவிழாமல் போனது மகிழ்ச்சிதான் என்றாலும் இனி எல்லாவற்றுக்கும் கை ஏந்த வேண்டும் என்றபோது தான் மீண்டும் கண்கள் வியர்த்தன.

சரி எப்படியோ நல்லது நடந்தால் சரி. இந்நேரம் மகேஷும் டெஸ்ட்க்கு கொடுத்து விட்டு வந்து திலகாவிடம் பேசியிருப்பான். திலகா என்ன சொன்னாளோ…

ஆர்வத்தில் மகேஷுக்கு போன் அடித்தேன். கட் செய்தான். மீண்டும் அழைத்தேன் கட் செய்தான். சரி டென்ஷனாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

மறுநாள் அவனே போன் செய்தான். “மச்சான் கொரோனா ரிசல்ட் வந்துருச்சுடா, நெகட்டிவ்” என்றான் புன்னகையோடு.

“அது சரிடா, திலகா கிட்ட பேசுனியா…”

“மச்சான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, இருமல் வந்தப்போ வந்த பயத்தவிட திலகாகிட்ட சொல்லணும்னு நினைக்கிறப்போ வர்ற பயம் அதிகமாயிருக்குடா. அதுதான் நெகெட்டிவ் வந்திருச்சில்ல. பார்த்துக்கலாம். நீயும் ஏதும் உளறி வைக்காத” என்று சொல்லி போனைக் கட் செய்தான்.

“அடேய் கொரோனா, அநாவசியமாக என் வாழ்வோடு விளையாடி விட்டாயே…”.

***

சைலபதி – இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதழாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்க அரசு இருது, சுஜாதா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் படைப்புகளுக்கு கிடைத்துள்ளன. தொடர்புக்கு – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here