Friday, April 19, 2024
Homeசினிமாஅமெரிக்க கனவு

அமெரிக்க கனவு

அமெரிக்க கனவு

 – பாலசுப்ரமணியன்.
Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி  இல்லை.இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு
2. Wikileaksல் வெளியான அமெரிக்க தகவல் இரகசியங்கள்
3. அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார மந்த நிலைஇதன் மூலம் சோவியத் ரஷ்யாவிற்குப்  பின் உலகை ஒற்றைக் குடைக்குக் கீழ் கொண்டுவரும் அமெரிக்க கனவு பெரும் பின்னடைவை சந்தித்தது.  ஆனாலும் இன்றும் அமெரிக்காவும் அதன் நகரங்களின் பெயர்களும் அந்நாட்டிற்கான விசாவும் இந்தியா போன்ற நாடுகளில் ஈர்ப்பு மிக்கதாக இருக்கக் காரணம் இந்நாடுகள் அமெரிக்காவை நகல் செய்து அதற்கொரு அசல்தன்மையை(Originality) உருவாக்குகின்றன.  அமெரிக்க வழிதான் செழிப்பிற்கான பாதை என்கிற தோற்றத்தை இந்த நகலாக்கம் ஒரு நம்பிக்கையாக மாற்றிவிட்டது.

ஐரோப்பிய முதலாளித்துவ அரசுகளின் சமூக ஜனநாயக கொள்கைகளின் மாதிரிகளைக் கூட பின்பற்ற முயலாத வண்ணம் ஐரோப்பிய அரசுகளே அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.

முதலாளித்துவம் 3.0 இந்தியா மற்றும் சீனாவில் நம்பிக்கையையும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிர்வையும் உருவாக்கி இன்று வரையிலும் மீட்பின்றி சந்தையெனும் கர்த்தாவின் இன்னொரு அதிசயத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவம் 3.0 முக்கிய குணாம்சங்களில் ஒன்றான நிச்சயமற்ற நிலைமை  தனிமனித வாழ்வு மட்டுமின்றி, பொருட்களின் வாழ்வு மற்றும் நிறுவனங்களின் வாழ்வையுமே அன்றாட சவாலாக மாற்றியது.  இம்மூன்றின் பெருக்க வடிவமான நாடுகளின் அரசுகள் கூட இந்நிலைமைக்கு எதிர்வினையாக குடிமக்களின், சுற்றுச் சூழலின் அடிப்படை கட்டமைப்புகளைக் குலைத்து வெளிப்படுத்துகின்றன.  மத்திய தர வர்க்கத்தின் பொருளீட்டு சக்தியை அதன் சொத்து மதிப்புகளை உயர்த்துவதற்கான விதிகளைத் தவிர  எதன் பொருட்டும் சிந்திக்கத் தயராகாத மூளையாக, நலத்திட்டங்களை ஒரு சுமையாகவும் அத்திட்டங்களால் பயன் பெறும் குடிமக்கள் தொகுதியினை முன்னேற்றத்திற்கு தடையாகவும் கட்டமைக்கின்றன.

இந்தியா எப்போதுமே நெருக்கடியில் வாழ்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பல தேசங்கள், வர்க்கங்கள் உண்டு. ஆகையால் அமெரிக்காவை நகல் செய்யும் இந்தியாவின் நெருக்கடிக்கு ஏனைய இந்தியா கொடுக்கும் விலை மிக அதிகம்.

பூர்வ குடிகளை ஒழித்து ஐரோப்பிய உபரிகள் ஒரு அமெரிக்காவை உருவாக்கினர் என்றால் இந்தியா அதன் பூர்வ குடிகளையே (பழங்குடிகள், வறிய தொழிலாளர்கள், விவசாயிகள்) ஒழித்து உருவாக்கும் அமெரிக்க நகல் அதன் குறியீட்டு வீழ்ச்சிக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.

 

பாலசுப்ரமணியன்

http://sadhukkam.blogspot.in/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular