அந்தக் காலத்தில் வாகனங்கள் இருந்தன

0

குமாரநந்தன்

ன்றிரவு தொலை மெய்நிகர் உரையாடலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறான் மிச். அவனுக்காக வீட்டில் ஒரு புராதன மியூசியத்தைக் கொண்டுவர வேண்டும் என நினைத்தவனாய் உலகின் மியூசியங்களுக்குள் சென்று பார்வையிட ஆரம்பித்தான் மயங்.

வெளியே ஏதோ சத்தம் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு போய் பார்க்கலாமா என யோசித்தான். சட்டென அப்படி யோசித்துவிட்ட தன்னுடைய மடத்தனத்தை நினைத்து வியந்து போனான். அவன் பிறந்ததில் இருந்து இதுவரை இந்த வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. கதவு என்பது வீட்டின் ஒரு சம்பிரதாயம் தான். அப்படி இருக்கும்போது இப்போது அவனுக்கு எப்படி கதவைத் திறந்துகொண்டு போகும் யோசனை வந்தது என வியப்பாய் இருந்தது. இன்று தனக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டான்.

வெளியில் போக யாருக்குமே அனுமதி இல்லை. இங்கே அனுமதி என்பது விஷயம் அல்ல. வெளியே போனால் அவன் இந்த உலகத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டுவிடுவான். தன்னுடைய அசிரத்தையை நினைத்து வருந்தியவனாக கேமரா பதிவுகளை இயக்கிப் பார்த்தான். வாசலை ஒட்டியிருந்த காட்டின் ஊடாக புலி ஒன்று நிதானமாக நடந்து சென்று கொண்டிருந்தது. ஓ இந்தப் புலிகளின் தொல்லை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று நினைத்தவனாய் அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான்.

அவன் மனைவி, மகன், அம்மா எல்லோரும் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தங்களை ஹைட் செய்து கொண்டிருப்பதால் வீட்டில் யாருமே இல்லாததைப் போல வெறுமையான அமைதி நிலவியது. இதே வீட்டில் ஷமின் தன்னுடைய இசைக்கருவியில் விண்ணதிர இசை முழக்கிக் கொண்டிருப்பான் என்பதை நினைக்கும்போது மயங்குக்கு சிரிப்பாய் வந்தது. தன் யூகம் சரிதானா என்பதைப் பார்த்துக் கொள்ள ஷமினின் ஹைடை நீக்கினான். விநாடி நேரத்திற்குள் வீடே இடிந்து விழுவதைப் போன்ற ஆரவாரமான இசை அறையை நிறைத்தது. ஷமின் தன் அறையில் நடன அசைவுகளில் மெய் மறந்திருந்தான். மயங் மீண்டும் அவனை ஹைட் செய்தான். நல்லவேளை ஏடாகூடமாய் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் திறக்க முடியாத அளவுக்கு லாக் செய்து கொண்டிருப்பான் ஷமின். இந்தக் காலத்துப் பிள்ளைகள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ? என நினைத்துக் கொண்டவனாய் வேலையை தொடர்ந்தான்.

இரவு சொன்னபடியே மிச் உரையாடலுக்கு வந்து காத்திருந்தான். மயங் வீட்டை மறைத்திருந்த பாஸ்வேர்டை அவனுக்கு திறந்துவிட்டான்.

மிச் வீட்டுக்குள் தோன்றினான். பிரான்சின் புராதன மியூசியத்தின் உள் அரங்கைப் போல மாற்றியிருந்த அந்த அறையைப் பார்த்து அவன் புன்னகை மேலும் விரிந்தது.

” வெரி நைஸ் இங்க நாம பேசறது ரொம்ப இதமா இருக்கும் இல்ல என்றான். “

“ஆமாம் ” என்றபடி அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.

மயங் ” உன் கை ஏன் இவ்வளவு சூடா இருக்கு. “

“தெரியல அப்புறமா செக் பண்ணிக்கறேன்.”

” மயங்.. நான் என் வீட்லதான் இருக்கேன். ஆனா உன் வீட்லயும் இருக்கேன். உன்னைத் தொடுறேன். அப்போ நான் எங்க இருக்கேன் சொல்லு பார்ப்போம். “

” சாமி வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா உன் தத்துவ விசாரத்த ” என குறும்பாய் சலித்துக் கொண்டவனாய் நீ ஏதாவது சாப்பிடுகிறாயா? என்றான்.

” இங்க இத்தாலியின் புராதன உணவான பீட்சாவை சாப்பிடறதுதான் சரியானதா இருக்கும் நான் எனக்கு இப்ப அதைத்தான் ஆடர் பண்ணப்போறேன். “

” அப்போ நானும் சீனாவின் புராதன பண்டமான செஸ்வான் நூடுல்சை ஆடர் பண்ணிக்கிறேன் ” என்று சிரித்துக் கொண்டே சீனாவின் பிரசித்தி பெற்ற உணவகத்தில் ஆர்டர் செய்து விட்டு மெஷினை தயார் செய்து வைத்தான் மயங்.

வேலை, உடல் நலம், சமீபத்தில் பார்த்த விஷயங்கள் என பேசிக்கொண்டிருந்த மிச் திடீரென ஒரு படத்தைக் காட்டி இது என்னவாயிருக்கும் சொல்லு பார்க்கலாம் என்றான். அவன் சிரிப்பில் அத்தனை குறும்பு.
மயங்கிற்கு சத்தியமாய் அது என்னவென்றே தெரியவில்லை. ஏதோ வினோதமான வடிவத்தில் அந்த இயந்திரம் இருந்தது. “என்ன இது ஏதாவது அயல்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரமா?”
மிச் வெடித்துச் சிரித்தான்.

” இது அயல் கிரக இயந்திரம் இல்லை. நம்ம பூமியை சேர்ந்த இயந்திரம்தான் “

” ஆமாம் இதையும் பார் ” என இன்னும் விநோதமான சிரிப்பூட்டக் கூடிய அதே போன்ற பல படங்களைக் காட்டினான் மிச்.

அந்த வடிவங்களைப் பார்க்க என்னவென்றே தெரியவில்லை மயங்குக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

” நம்ம பூர்வகுடிகள் விசித்திரமானவர்கள் அவர்கள் இதையெல்லாம் பயன்படுத்தி என்னதான் செய்திருப்பார்கள் ” என ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டான்.

” நண்பா இவை கார், பஸ், லாரி, வேன், ஆட்டோ பிளைட் எனப்படும் வாகனங்கள் “

” வாகனங்களா அப்படியென்றால்? “

” இதன் மூலம் மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்றார்கள். “

” வாட் ” மயங் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்தான். அவன் உடல் நடுங்கியது மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்றார்களா? என்ன ஒரு பயங்கர காலம் நினைக்கவே கொடூரமாய் இருக்கிறது. பாவம் மக்கள் அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா?.

” ஆமாம் நீ இதையெல்லாம் எப்படி தெரிந்து கொண்டாய்? நீ சொல்வது உண்மைதானா அல்லது நீயே எதையாவது இட்டுகட்டி தயாரித்துக் கொண்டு வந்து கதை விடுகிறாயா? ” என அவனை சந்தேகமாகப் பார்த்தான் மயங்.

மிச் இதை எதிர்பார்க்கவில்லை. ” நண்பா என்ன திடீர்னு இப்படி சொல்லிட்ட. உனக்குத்தான் தெரியுமே நான் ஒரு பழங்கால ஆராய்ச்சியாளன். பலப்பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பதிவுகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென இந்த விஷயம் தட்டுப்பட்டது. “

” உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த வாகனங்கள் எல்லாம் போக வர உலகம் முழுவதும் பல கோடி மைல்களுக்கு சாலைகள் போட்டிருக்கிறார்கள் நம் மூதாதையர்கள். பயப்படாத இதெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னாடி. “

சுற்றும் தலையை பிடித்துக் கொண்டான் மயங். ” சாலைகள் என்றால் எப்படி இருக்கும்? அதற்கும் இந்த வாகனங்களுக்கும் என்ன சம்பந்தம்? ” என்றான்.

மிச் சிரித்துக் கொண்டே ஒரு வீடியோவை இயக்கினான். அதில் சாலைகள் அதில் விரையும் வாகனங்கள் மற்றும் அதில் அமர்ந்திருக்கும் மக்கள் என ஒரு புராதன காலத்தின் காட்சிகள் அந்த அறையில் நிறைய ஆரம்பித்தன.

பல டன் எடையுள்ள அந்த இயந்திரங்கள் கர்ணகொடூரமாய் சப்தம் எழுப்பியபடி அதி வேகமாய் நகர்வதைக் கண்டு மயங் அலறினான்.

” நண்பனே தயவு செய்து அதை நிறுத்திவிடு. என்னவொரு காட்டுமிராண்டித்தனமான காலம். மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா? “

” ஆமாம் நண்பனே. இதோ என்னுடைய பீட்சா வந்துவிட்டது. உன்னுடைய ஆர்டர் வந்துவிட்டதா பார் ” என்றான். மிஷினில் நூடுல்ஸ் வந்து கொண்டிருந்தது.

மயங்கிற்கு இன்னும் குழப்பம் விலகவில்லை. மனிதர்கள் எதற்காகத்தான் அப்படி வாகனங்களில் வெளியே போனார்கள் என்றான் பரிதாபமாய்.

” தெரியவில்லை நண்பா இனிமேல்தான் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் வேலை இடங்களுக்கு, கேளிக்கைகளுக்கு, உணவகங்களுக்குப் போயிருக்கலாம். “

“அப்போது உலகத்தில் இந்த அளவுக்கு வைரஸ்களின் ஆதிக்கம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன் ” என்றான் மிச். அவன் பீட்சாவை சாப்பிட ஆரம்பித்திருந்தான்.

மயங் வெளியில் செல்வதைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கதவைத் திறந்தாலே முடிவற்று விரிந்திருக்கும் காடு. அதில் சில நூறு அடிகள் சென்றதும் வைரஸ்கள் உடலைப் பற்றிக் கொள்ளும். உடல் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நினைக்கும் போதே உடல் நடுங்கியது.

இப்போது எங்கேயாவது போக வேண்டும் என்றால் ஒரு சுவிட்சைத் தட்டிவிட்டு படுத்துக் கொண்டால் போதும் உடல் செல் இணைப்புகள் பிரிக்கப்பட்டு நோட்ஸ்படி எங்கே போக வேண்டுமோ அங்கே அனுப்பப்பட்டு மீண்டும் அங்கே உருவாக்கப்பட்டுவிடும். ஆனால் அது உடல் ரீதியான இணைவுக்கு மட்டும் தான். வேறு எதற்கும் யாரும் எங்கேயும் போகத் தேவை இல்லை

உடல் செல்களை சிதைக்கும் வைரஸ்களை உருவாக்கும் வேலையை தீயவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். இன்று காற்றில் நிறைந்திருப்பது அந்த வைரஸ்கள் தான். அரசாங்கமும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டது. ஒரு வைரஸை அழித்தால் இன்னொரு வைரஸ் அதை அழித்தால் இன்னொன்று இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது.

ஒருவேளை மனிதன் இப்படி வைரஸ்களை உருவாக்கி காற்றை நச்சாக்காத சமயத்தில் மனிதர்கள் வெளியே சென்று நடமாடியிருக்கக் கூடும். அவர்களிடம் இப்போது இருப்பது போல எல்லாவற்றையும் தன்னிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் கருவிகள் இருந்திருக்காது.

” ஹலோ மயங்.. என்ன யோசனையில மூழ்கிட்ட. எதையும் நம்ப முடியல இல்ல. இதுக்கே இப்படி ஆயிட்ட அந்தக் காலத்தில சினிமான்னு ஒண்ணு இருந்தது அதைப் பத்தி சொன்னா நீ இன்னும் குழம்பிப் போயிடுவ ” என சிரித்தான் மித்.

மயங் அவனை அச்சத்துடன் பார்த்தான். இன்னும் இவன் என்னென்ன பூதத்தை கிளப்பிவிடப் போகிறான்.
பதிவு செய்யப்பட்ட காட்சிகள் திரையில் ஓடும். அதுக்குப் பேர்தான் சினிமா. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஏன் திரையில் ஓட வேண்டும் எப்படி யோசித்துப் பார்த்தும் மயங்கால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

மிச் அவனுடைய யோசனையைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான். அவனை இன்னும் பீதியூட்டிப் பார்க்க நினைத்தவனாய், ” மயங் இதுக்கே நீ இப்படி யோசிச்சா எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப நாம பேசிகிட்டிருக்கோமே தமிழ் இதுக்கு வரி வடிவம் இருக்கு அதை நாம எழுத்தா எழுத முடியும் தெரியுமா? “
எழுத்து வரி வடிவம்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

” மிச் நீ பெரிய ஆராய்ச்சியாளன் தான் ஒத்துக்கறேன். இப்படி புரியாத பழைய விஷயங்களைப் பேசி என்னைக் கொல்லாத. இந்த மியூசியம் பேக்ரவுண்ட் இருக்கற வரைக்கும் நீ இப்படித்தான் பேசிக்கிட்டிருப்ப. இப்ப பிரபலமா இருக்கிற செயற்கை உலகம் கான்செப்ட்டுக்கு இந்த பேக்ரவுண்ட்டை மாத்திக்கறேன் ஒரு நிமிஷம் இரு ” என சொல்லிக் கொண்டே கம்ப்யூட்டர் பட்டன்களைத் தட்ட ஆரம்பித்தான் மயங்.

மிச் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். மயங்க்கின் கோட் நேர்த்தியாக இருந்தது. இதை அவனே டிசைன் செய்தானா இல்லை அவன் மகன் ஷமின் செய்தானா என கேட்க நினைத்தான். இந்த உடைகள் எல்லாம் உண்மையில்லை. மயங் உண்மையில் இப்போது நிர்வாணமாய் தான் இருப்பான். அவனுக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. இன்று ஐந்து நிமிடத்தில் கம்ப்யூட்டரில் டிசைன் செய்து நாம் அணிந்திருப்பதாய் காட்டப்படும் இந்த உடைகள் எல்லாம் பழங்காலத்தில் மாதக்கணக்கான கடும் உழைப்பில் உண்மையிலேயே தயாரிக்கப்பட்டன என இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என மிச் யோசித்துக் கொண்டிருந்தான்.

***

குமாரநந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here