தொடர்

அடையாறு ஆற்றின் எக்காளம்

 பாலசுப்ரமணியன் பொன்ராஜ் [caption id="attachment_3358" align="aligncenter" width="300"] Artist : Joseph Cross[/caption]       இரு வருட...

அகரமுதல்வன் கவிதைகள்

 

 

அகரமுதல்வன் கவிதைகள்

 

குருகுவின் மேல்விழும் பூமியின் மழைத்துளியாய்
குறைவிலா உன் கருங்குழல் மீதென் முத்தம்
உவமினிலிறந்த பித்த வடிவு கொண்டு
மிகு காதல் மேவிய பெருங்கடலே
உன் கால் பெருவிரலிரண்டும்
மலர்க்கழல்கள்
அதனைத் தொட்டுருகி அண்டத்தின்
சோதியில் மாய்வேன்
கலந்தெழும் சலமுகத்தில் மீன்களின் கண்கள்
என் நெஞ்சத்தில் மின்னி
உன் அலையில் பாய்ந்த
நீச்சலின் இச்சையே
ஆழக்கடல் ரகசியம்
சடையாளே!
நீர் அளையும் நீர்ச் சுழலில்
நான் அலையும் தாகத்தில்
ஊனுக்குள் உறைகிறது இரத்தம்
பலமுறை பலமுறை
கனலும் இன்னிசையாய்
உதட்டின் மீதொரு கரி நகரும்
அதை அடக்கும்
அதன் தந்தம் முறிக்கும்
பேருயிரின் காமத்தில்
நீயொரு குயிற் பிள்ளாய்
நானொரு கரிகாலன்
பூங்கொன்றை சூடி
உன்னைத் தீண்டும் பொழுது
எம் கடலில்
சிப்பியைப் போல அறை கனன்றது.

*******

 

துகள் துகளாய் மின்னுகிற ஒரு கிரகம் நீ

குமிழ்களுக்குள் நிரம்பிய காற்றை

சட்டென உடைக்கும்

உன் கூத்திடும் விழிகளை

ஒரு பவுர்ணமி நாளில் ஒளித்து வை

நரம்புகளின் கனிமங்களில் எழும்பும் இனிப்பை

கைக்குட்டையில் முடித்து

கைப் பையில் சேமி

ஒளி பாயும் உன் மூக்கிலிருந்து

மூக்குத்தியை நீக்கி

பகலாயிருக்கும் பூமிக்கு குத்து

உன் மார்பின் வியர்வை

வனச் சுனையின் பால்ய வாசம்

அதிலிருந்து அகாலத்தின் துர்நாற்றம் மாய்கிறது

காலம் கரையும் பதைபதைப்பு

உன் கழுத்தின் வியர்வையில் காட்சிதருகிறது

சரிந்திருக்கும் விரகம் உந்தி உடல் மீதேறி

பிரபஞ்சத்தின் மூடல்களை தட்டுகிறது

நீர் வழிந்துகொண்டிருக்கும்

காதலின் தாழியைப் போல

என்னில் புதையும் உன்னை

வளங்கள் கொழித்து விதையாக்குகிறேன்

என்னைக் காமம் மூடி

காதலாய்  மீட்கும் விசை மூச்சில்

உன் அபிநயங்களின் வாசம்

பூத கணமாய் என்னைச் சூழ்ந்து

கூடியது

கூடியது.

*******

 

கனவேகிப் புகும் சவலையின் மேன்மை

மாருதம் மாய்ந்த இரவை ஒத்தது

நித்திலத்தின் குதுகுதுப்பில்

வெந்நீர் வாய் திறந்த கோரத்தின் சாடை

சந்திப்பின் பின் நாம் பிரிவது

கிளியேயுன் மாயத்தில் நுகர்வித்த

முந்நீர் யாவும் முத்தத்தில் ஊறியவை

பாவகங்கள் பற்றி அள்ளூறும் காதலின்

வாய்விட்டலறும் நெக்கொலியில்

எய்யாது பன்மலர் மலரும்

ஆராது அசையாது பெருகும்

உன் கூடத்தின் விக்குதல்

இறங்குகின்ற காலத்தின் நெளிவில்

என்னை நீ தீர்த்தமாக்கினாய்

வார்புனல் ஊறும் நிலமென

என்னுடல் அணுவாய் அணுவாய்

ஆனந்தம் பெருத்தது

சகியே போற்றி

உன் தாகமே போற்றி

எனதுடலே போற்றி

போற்றி போற்றி போற்றி

******

 

 

முத்தமிடும் ஸ்மைலிகள்

 - ரமேஷ் ரக்சன்

“என்னை மாதிரி ஒரு சோம்பேறி இந்த உலகத்துலேயே கிடையாது” என்று நீ சொன்னதும், “செக்ஸ்ல கூடவா?” என்று எள்ளலாக நான் கேட்டிருக்கக் கூடாது.

மைதிலிக்கு, எப்போதிருந்து தன் புன்னகை பிடிக்காமல் போனது என்று தெரிந்து கொண்ட தேதியை எதன் பொருட்டும் எண்ணத்திலிருந்து மழுங்கடிக்கச் செய்ய முடியவில்லை. தாமதமானதற்குக் காரணம் சொல்லிக் கொண்டிருந்தான். சென்னை சிட்டிக்குள் ஆக்சிலரேட்டரை முன்னும் பின்னுமாக திருகித் திருகி வலித்துப் போன மணிக்கட்டை இடது கையால் பிடித்துக் கொண்டு விரல்கள் மூடியபடி இட வலமாக வட்டம் போட்டுக் கொண்டேதான் காபி கடைக்குள் நுழைந்தான். ஒரு மாலில் இருக்கும் காபிக்கடை அல்லது “காஃபி டே”. உர்ர்ர்ர்ர் என்று இருப்பவளைச் சமாதானம் செய்பவனாய் உள்ளங்கைக்குள் சுற்றியிருந்த கைக்குட்டையை அவிழ்த்து, இந்த நிறம் வேண்டாமென்று அவள் மறுத்த ஹெல்மெட்டிற்குள் கைக் குட்டையை வைத்துவிட்டு, உதட்டுக் குவியல் போலத் தன் ஐ விரல்களைக் குவித்து அவளின் சுண்டுவிரலைப் பற்றி, எழுப்பிவிட்ட பிறகும் தூங்கியதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு.

“ஷர்ட் கூட நான் சொன்னத போடல” மைதிலி பார்த்துக் கொண்டிருந்த திசையில் இருந்த காதல் ஜோடி அவள் கண்களுக்குத் தெரியாத அளவிற்கு தன் கண்களுக்குள் கோபத்தை சுழல விட்டிருந்தாள். அவன் முகபாவனை கெஞ்சல் தொனியில் இருக்கிறதா, கொஞ்சல் தொனியில் இருக்கிறதா என்று தற்செயலாய் திரும்புவது போல முகத்தைப் பார்க்கும்போது, “எதுக்கு இப்படிச்சொன்ன? வா ப்ரூப் பண்றேன்” மைதிலி வாங்கிக் கொடுத்த மூன்று கீ செயின்களுக்கு நடுவே தொங்கும் சாவியை எடுத்தான் பிரபு. மூடியபடி இருந்த கையை எடுக்கவிடாமல் அவன் மொளி அழுந்த மேசையோடு அழுத்திப் பிடித்தாள் மைதிலி.

கிஃப்ட் ரேப்பர்களில் விருப்பம் இல்லாதவன் பிரபு. பெரு விரல்களின் அழுத்தத்தில் இருந்து ஒவ்வொரு பேப்பராக விடுவித்தாள். வெற்று டைரி என்று உறுதி செய்தவள், “இத என்னனுடா புரிஞ்சிக்கிறது” என்று பேசியபடியே பெயராவது எழுதியிருக்கிறானா? மனதிற்குள் முணுமுணுத்தபடியே முதல் பக்கத்திலிருந்து  புரட்டியவள் பொறி தட்டியவளாய் தன் பிறந்தநாள் பக்கத்தை வேகமாகப் புரட்டினாள். அந்தப் பேப்பர் மட்டும் விடுபட்டிருந்தது.

“ஐடியாமணி யாரு என்றாள்… சாரி சாரி இனி பேச மாட்டேன்” என்று மழலைப் புன்னகையில் அவனை வென்றுவிட்டிருந்தாள். அப்படித்தான் நினைத்திருந்தாள்.

நாம் சந்தித்துக் கொள்ளும் சொச்ச நேரத்தில் அப்பா அம்மா எப்படி இருக்காங்க? அம்மா கிட்ட பேசினியா? என்ற கேள்வி கூடக் கேட்கக்கூடாது என்ற கண்டிசன் இருந்தது மைதிலிக்கும் பிரபுவிற்கும் நடுவில். மெளனம்கூட இருக்குமே தவிர வேறு யாரைப் பற்றியும் பேசிவிடக்கூடாது என்று தீர்மானமாய் அவளையும் வைத்திருந்தான். மைதிலியை வந்தடைந்ததும் அலைபேசியை ஃப்ளைட் மோடில் போட்டுவிடுவான். அவளுக்கு வரும் அழைப்பைக் கூட, தன் பார்வையாலையே எடுக்கவிடாமல் செய்துவிடுவான். வீட்டிலிருந்து என்றால் “அப்றமா பேசுறேன்”.

 மெனு கார்டை மைதிலி பக்கம் பிரபு திருப்பிய விதத்தில் விளையாட்டாகச் சொன்னது விபரீதமாகிப் போனதை நினைத்து உள்ளுக்குள் நொந்து கொண்டாள். மன்னிப்புக் கேட்டால் இன்னும் பெரிதாக ஊதிவிடுவான் என்பது மைதிலிக்கு ஒன்றும் தெரியாதது இல்லை. “கிஸ் மீ” என்று மைதிலி தான் கேட்டிருக்கிறாள். கோபத்தை வெளிப்படுத்த தெரிந்த அளவுக்கு தன் காதலை, தேவையை, அன்பை வெளிப்படுத்தத் தெரியாவன் என்பதை, ஐந்துவருடக் காதலில், முதல் ஆறு மாதத்திலேயே புரிந்து கொண்டாள்.

பிரபுவைப் பழக்குதல், மைதிலிக்குக் கொஞ்சம் சிரமான காரியமாகப்பட்டது. தன்னைச் சோதிக்கவிட அனுமதிக்காத அளவிற்கு அவனுக்கு ஏற்ப பழகிக் கொண்டாள். பின் அதுவே அன்றாடமாகிவிட்டது.

மைதிலி தன் கைகளில் அடுக்கியிருந்த வளையல்களில் ஒன்றைக் கழற்றி அவன் முன் சுழலவிட்டாள். அவன் தேர்வு செய்த சிகப்பு நிறத்திற்கு, சிகப்பு நிறத்திற்குள்ளே வேறு ஒரு பெயர் இருந்தது. நிறம் பிரபுவின் தேர்வு. சுடிதாரும், சுடிதாருக்கு ஏற்றச் சிகப்பு நிற வளையலும். எதிலும் கவனம் செலுத்தாதவனாய் காட்டிக் கொண்டான். காபி நிறமும், மஞ்சள் நிற விளக்குகளும் அடர்த்தியாய் நிறைந்த அந்தக் கண்ணாடி அறையில் சிகப்பு நிறம் எடுபடாமல் போயிருந்தது.

தன் முதுகை நிமிர்த்தி “டேய்” என்று அதட்டிப் பார்த்தாள். “ஷோல்டர் பின் ரிமூவ் பண்ணிட்டு ஷால ரெண்டு பக்கமும் போடு” என்று சிரிக்க முயன்று தோற்றான் பிரபு. மைதிலி விரும்பி உண்ணும் சூடான கேக்கும், கூடவே நுரையில் வரைந்த இதயம் தாங்கிய காபி கோப்பையையும், மேஜையில் வைக்கும் ஓசை கேட்காது வைத்துச் சென்றான் ஒருவன். பிரபுவைப் போலவே மைதிலிக்கும் காபியின் கசப்பு பிடிக்கும். மணி பார்க்கத் தோன்றிய எண்ணத்தை தவிர்த்துக் கொண்டான் பிரபு.

இதயங்களால் நிறைந்த கண்ணாடிக்கதவை பிரபு திறந்து வரும்போது இரு கைநீட்டி கட்டிப்பிடித்து, எதிர் எதிரே அமர்ந்து கொள்வது போன்ற பிம்பம் காபியின் கசப்போடு தொண்டையில் உருண்டு உருண்டு இறங்கிக் கொண்டிருந்தது. இரண்டு கைகளாலும் கோப்பையை ஏந்தி காபி குடித்துக் கொண்டிருந்தாள். கைக் கடிகாரத்தைப் பார்ப்பதை கவனித்தவள, தன் அண்ணனின் ஆன்லைன் ஆர்டர் மூலம் வந்த சர்ப்பரைஸ் கிஃப்ட் என்றாள்.

“உங்க அண்ணிக்கு பயந்தா ஆன்லைன் ஆர்டர்”?

பிரபுவின் காபி ஆறிக்கொண்டிருந்தது.

இரு உதடுகளையும் உள் பக்கமாய் மடித்து கசப்பின் மிச்சச் சுவையையும் விட்டுவைக்காமல் சுவைத்துவிட்டு, தான் கொண்டுவந்திருந்த பர்சில் இருந்து பிரபு வாங்கிக்கொடுத்த வாட்சைக் கொடுத்து மைதிலி கை நீட்டினாள். கழிப்பறை செல்வதாய் எழுந்து சென்றான் பிரபு. பிறந்த நாள் வாழ்த்தாகத்தான் இருக்கும். எதற்கும் மெசேஜ் யாருடையது என எடுத்துப்பார்க்கத் தயங்கியபடி ஒருமுறை திரும்பிப்பார்த்தாள். கண்ணுக்கெட்டும் தூரம்வரை பிரபு இல்லை.

“ஹெல்மெட்ட சீட்டுக்கு கீழ வச்சிக்க சாயங்காலம் ரூம் கிட்ட வந்து வாங்கிக்கிறேன். என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. கிளம்பிட்டேன்”

மைதிலி ஃபோன் பேசும்போது சத்தமாக சிரிப்பதை தவிர்த்திருந்தாள். பிரபு, மைதிலி பிறந்த நாளில் எழுந்து சென்ற அன்றிலிருந்து, அடுத்த சந்திப்பு நிகழுவதற்காகப் பேசிச் சிரித்த இரவில் தான், எரிச்சல் அடைவதை உணர்ந்தாள் மைதிலி. அந்த மெளனத்தை அனுமதித்தாள். மொபைல் ஹோம் ஸ்க்ரீனை, அழைப்பைத் துண்டிக்காமல் இடவலமாய் மூன்று பக்கங்களையும் மாற்றிக் கொண்டிருந்தாள். ஷேர் இட் ஆப் மூலம் பிரபு இன்ஸ்டால் செய்து கொடுத்த டெலிகிராமில் தான் காண்டக்ட் லிஸ்டில் டெலிகிராமில் இருப்பவர்களை ப்ளாக் செய்தது போக பிரபுவும் மைதிலியும் மட்டுமே.

“கட் பண்ணவும் முடியாம பேசவும் முடியாம, எதுக்குடா இந்த பைத்தியக்காரண காதலிச்சோம்னு யோசிச்சிட்டு இருக்கியா?”

“நீ செல்லப்பேர சொல்லிக் கூப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சுன்னு தெரியுமா உனக்கு”

-விசும்பல்

மைதிலியின் தோழியிடம் “ஹெல்மெட்டை கொடுத்துவிடு” என்றனுப்பிய குறுஞ்செய்திக்குப் பிறகு, எதுவாக இருந்தாலும் மைதிலிக்கு அழைத்துதான் பேசியிருக்கிறானே தவிர அவளோடு மெசேஜில் உரையாட அனுமதிக்கவில்லை. ஏதோ ஒரு விதத்தில் மைதிலியின் குரல் பிரபுவிற்குத் தேவையாக இருந்தது. வலியைக் கடத்துவதாக இருந்தாலும் தேவையாய் இருந்தது அவனுக்கு. இது தான் பிரபு பழகியது. மைதிலியின் குரல் அவளின் உச்சக்கட்ட கோபமாகவோ, மனுசனா நீ எனும் வெறுப்பாகவோ, விசும்பலாகவோ தேவை.

-அது ஒரு அடிக்சன். எஸ் ஐயம் இன்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட பின் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்வான். எஸ் ஐ நீட் இட். பலி கொடுக்குற ஆட்டோட இரத்தத்தைச் சாமியாடி குடிக்கிற மாதிரி. விரும்பியோ விரும்பாமலோ. பிரபுவிற்கு அவனது குரல் அவனைப் புதிதாக அறிமுகப்படுத்திய இரவில் தான் மைதிலியையும் கொன்றுவிட்டு தானும் செத்துப்போய் விடலாமா என்று யோசித்தான். Mad on You என்று குறுஞ்செய்தி அனுப்பினான் பிரபு. கூடவே ஒரு இதயம், முத்தமிடும் ஸ்மைலி.

என்றுமில்லாத விசித்திர பயம் மைதிலியை தொற்றிக் கொண்டது. காதலின் தொடக்கத்தில் அனுப்பிய நோக்கியா போன் குறுஞ்செய்திகளை எக்செலில் கன்வெர்ட் செய்து வைத்திருந்த மொத்த மெசேஜில் பிரபுவின் அன்பை பைத்தியக்காரத் தனத்தை, ஒப்புக்கொடுக்க முன் வந்ததை, மன்னிப்பு கேட்டிருக்கும் விதத்தை, ஒரு முத்தத்தை அடைய விரும்பிய விதத்தை, இனிய இரவு சொல்லி தோற்று, நீண்து கொண்டே போன தொடர் செய்திகளை, நூறு மெசேஜ் கணக்கிற்காக 160 எழுத்துக்களையும் ஒரு மெசேஜில் அடக்க முனைந்திருக்கும் பேராசை, பேச்சை நீட்டிக்க வேண்டுமென்ற தவிப்பு, அவளுக்கான வர்ணங்களை அப்படியான குறுஞ்செய்திகளை பில்டர் செய்து பிரபுவிற்கு மெயில் அனுப்பி வைத்தாள்.

Send this message without a subject or text in the body?

மைதிலிக்குள் கேட்டுக்கொண்டிருந்த குரல், அவள் அனுமதிக்காக எல்லாம் காத்திருக்கவில்லை. அந்தக் குரலை தடுப்பதற்காக வாய்விட்டு எதை எதையோ பேசிப்பார்த்தாள். பாட்டுப்பாடிப் பார்த்தாள். அந்தக் குரல் தான் வென்றது.

“எனக்கு தெரிஞ்சி இந்த 5 வருசத்துல நம்ம பண்ணினது, நம்மனு எப்படி முடிவுக்கு வரத்து? நான் பண்ணின ரெண்டே தப்பு. உன்ன, நம்மோட காதல மீட்டெடுக்கத்தான் இந்த மெசேஜ் எல்லாம் எடுத்து படிச்சேன். உன்மேல இருக்கிற தீவிரம் குறைஞ்சிட்டதா தான் தோணுது. சம்பிரதாயம். ஏதோ ஒரு பாண்டிங். கண்ணுக்குத்தெரியாத ஒரு செயின். செயின்னு எப்டி சொல்றது? விலங்கு. விலங்குனு உணர வச்சது நீயா நானா?”

“என்னோட காதல் குருட்டுத்தனமான காதல்னு நீ அடையாளம் காட்டினதுல இருந்து தான் வீரியம் கம்மியாகிடுச்சி. இல்லனா அந்த நிமிசமே முடிஞ்சிருச்சி. யார் தப்பு?”

தன்னை ஒரு சர்கஸ் கோமாளி போன்று உணர்ந்தாள் மைதிலி.

உள்ளங்கை வியர்வை, பிசுபிசுப்பு என்கின்ற மனநிலையை எட்டியும் கூட கோர்த்த கைகளை விடாது நடந்துகொண்டே இருந்தார்கள் மைதிலியும் பிரபுவும். விவேகானந்தர் இல்லத்திற்கும் கண்ணகி சிலைக்குமான இடைவெளியை திரும்பிச் செல்வதற்கு ஆட்டோ தேவையாய் இருந்தது இருவருக்கும். இருவருமே விரும்பி உடுத்திக்கொண்ட மெளனம்.

ஆட்டோவில் வைத்துதான் பிரபு பேசினான். பைக் சாவியில் கிடந்த மூன்று கீ செயின், அது வாங்கிக் கொடுத்த காரணம், அப்போதைய பேச்சுக்கள், சந்திப்பு நிகழ்ந்த இடங்கள், மங்கலாகத் தெரியும் ஒரு முதியவரின் பார்வை போல நினைவூட்டிக் கொண்டிருந்தான். தன் பைக் சாவியையும் கையில் கொடுத்தாள் மைதிலி. ஐந்து சம்பவங்கள். ஐந்து கதைகள். பிரபுவின் கால் பெருவிலைப் பார்த்தாள். ஆட்டோ டிரைவர் இருக்கைக்குப் பின் கால் தூக்கி வைத்திருந்தான் பிரபு.

தன் பிடியிலிருந்து பிரபு தளர்வை உணர்ந்தாள் மைதிலி. தனக்கு யாருமே இல்லாத உணர்வு மேலோங்குவதை உணர்ந்தவளாய், ஆடுதொடையை அழுந்தப்பிடித்து நான் உன் கூடத்தான் இருக்கிறேன் என்பது போன்ற செய்தியை, செயலில் கடத்த முயன்றாள் மைதிலி. இருவருக்குமே குரல் தேவையற்று இருந்தது. உடல் துடித்து, மழைக்கால புழுக்கம் போல மைதிலிக்கு நசநசத்தது. ஆடைகளை கிழித்தெறிய வேண்டும் போலிருந்தது அவளுக்கு.

“இரு நானே கொடுக்கிறேன்” என்று பிடிவாதமாய் மீட்டரை கட் செய்தாள் மைதிலி. பைக் இருக்கைக்குக் கீழ் இருந்த பர்சிலிருந்து பணம் எடுத்துக் கொடுக்கும்வரை ஆட்டோக்காரன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். பிரபுவும் தான்.

கட்டிவிடாமல் விட்டுச்சென்ற வாட்சை எடுத்து மீண்டும் கையை நீட்டினாள் மைதிலி. பூனைக்குட்டியை வருடிக் கொடுப்பதைப்போல மென் அழுத்தத்தில் அவள் கைப்பற்றி கைக்கடிகாரத்தை கட்டிவிட்டான் பிரபு.

“வண்டலூர்ல அந்த சிங்கத்த பார்த்து நீ சொன்னது ஞாபகம் இருக்கா?” மைதிலியைப் பார்த்து கேட்டான். இருவர் சார்பாகவும் சிரித்து வைத்தாள். அதில் ஒரு பைத்தியக்காரத் தனம் வெளிப்பட்டிருக்கும் என்று மைதிலி நம்பினாள். மைதிலி கேட்டுக் கொண்டதன்படி, பிரபு கிளம்பிச் சென்றான். சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் அறை நோக்கி நகர்ந்தாள்.

“உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே”

பிரபுவின் குரலில் இந்த ஒருவரி மட்டும் ரிப்பீட் மோடில் அறைக்கு வரும்வரை கண்ணீராகவும், ஸ்பீடா மீட்டரில் ஏறி இறங்கும் வேகத்தின் முள்ளாகவும், ஒரு விபத்திற்காக ஏங்கித் தோற்றிருந்தது.

பிரபு அடியோடு வெறுத்த வாட்சப்பில், “இனிமேல் நாம பேசிக்கவோ பாத்துக்கவோ வேண்டாம் பிரபு. டேக் கேர்.” என்று அனுப்பிவிட்டு அறையில் இருந்த ஷிவானியை கண்கள் பொங்கிநிற்க, புன்னகைத்தாள்.

காதலிக்கான தயக்கத்தோடு, இருட்டில் ஷிவானி கை நீட்ட, “நீ ரெண்டு வருசமா ஆசைப்பட்ட மைதிலி” என்று மெத்தையில் அமர்ந்திருந்த ஷிவானியின் முன் சற்று உடல் மடித்து அணைக்கையில் ஷிவானி உதட்டில் தட்டுப்படுவது ஏதுவென புரியாமலில்லை.

விசும்பல்…

 - ரமேஷ் ரக்சன்

நீராவிச் சிற்பம்

 

fec1868435b9ab6b37f0e19ac91ed34f

நீராவிச் சிற்பம்

காற்றில்கூடிய அழுத்தம் ஈரப்பதம்
என்னை முன்பொரு நாள் ஈரமாக்கிய
பெருமழைபோல் கிடையாது இது
சூடான
இந்த நீராவியின் அலைகளில்
சிற்பங்கள் செய்பவனை எனக்கு தெரியும்
அவற்றில் வண்ணங்கள் சேர்த்தாலும்
விலைபோனவுடன் தாமே கரைந்தும்போயின
அவை இப்போது இல்லையெனினும்
இருந்தது என்பதால் எல்லோரும்
சுற்றி நின்று ரசித்தார்கள்
அவன் வனைபவற்றில் பிறைசூடியவனின்
நகத்தடம் பதியும்
ஒற்றைக்காலில் சுழன்று அவன்
வெற்றுக்கரங்களால் சிற்பம் செய்வது
மாயை
இப்போது அவன் ஆடுவது ஏதோவொரு
மேற்கத்திய நடனம்
வேர்வை துடைக்க வந்திறங்கிய
மென்வஸ்து ஒன்று துடைத்தெரிந்தபின்
நீலம் பாரித்துக்கிடந்தது
காற்றில்கூடிய அழுத்தம்
மூச்சடைக்கவில்லை
மூச்சிலேறி உள்ளே பயணித்தது

-நாக பிரகாஷ்

nagaprakash@outlook.com

இப்படி நேருமென யாருக்கும் தெரியாது.

 

-வ.கீரா

1

பெங்களூரின் நடுமத்தி அந்த இடம். வானம் பற்றி எறிந்து அணைந்த நிலையில் புகைமூட்டமாக இருண்டிருந்தது. அதன் வெண்ணிறங்கள் புகையோடு கலந்து பசையாக நிலமெங்கும் தொங்கிக் கொண்டிருந்தது பனி.சாலையோர தூங்கு மூஞ்சி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, பனியில் நனைந்து அந்தரத்தில் தனித்தனியே நின்றிருந்தன வெண்ணிற நிழல் போல. நிலமெங்கும்  பனியின் கவிழ்ப்பு படர்ந்திருந்தது.வாகனங்களில் வருவோர் போவோரும் அதிர்ந்து பார்த்துச் சென்றார்கள். திடுதிப்பென நடந்ததால் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை.பல வண்டிகள் என்ன செய்வதென தெரியாமல் குவிந்து பின் கிடைத்த வழியில் ஒதுங்கி திட்டியபடியே சென்றார்கள், சிலர் மஞ்சளில். பல வண்ணக்கோடுகள் வரைந்த அந்த லாரியை சுற்றி வந்தார்கள்.கிளினர் பலகையை விட்டு தொப்பென குதித்தோடிய மூர்த்தி லாரிக்கு அடியில் வேகமாக உடம்பை தளர்த்தி படுத்தான்.அவனுக்கு புரிந்து விட்டது. இது எளிதான பிரச்சனையில்லை. லாரியின் கீயர்பாக்ஸ் துண்டாக தரையில் விழுந்து வண்டியின் நகர்வுக்கு ஏற்ப பத்து அடி துரம் தார்ச்சாலையை கிழித்து உழுதபடி தார்க் கட்டிகளோடு மோதி திகைத்து நின்றிருக்கிறது.அவ்வளவுதான்.

ஓசூரிலிருந்து வட மாநிலங்களுக்குச் செல்ல லாரிகள்,  இளங்கருமை புகுந்த பெங்களுரின் தூங்குமூஞ்சி மரங்கள் இலையுதிர்த்து பரவிக்கிடக்கும் உள்சாலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். ஞாயிறுகளில் கூட வாகன நெரிசலில் விழிப்பிதுங்கும் பல சாலைகளற்ற இந்த நகரத்தில், ராஜஸ்தானிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அறுக்கப்பட்ட நீள நீளமாக மார்பிள்களை ஏற்றியபடி 5 நாட்களை கடந்து வந்த “தென் பாண்டியன்” தனது செயலை இழந்து விட்டது. இந்த லாரிக்கு வைத்த பெயர் “தென் பாண்டியன்”. வண்டிக்கு குலப் பெயர் ஒன்றுண்டு. முப்பத்ததைந்து ஆயிரம் எடை பொருட்களை சுமக்கும் “டாரஸ்” என்கிற பத்துச் சக்கரம் பூட்டிய தேர். இதன் பாகன் ஒட்டுனர் ராமசாமி, வெள்ளை கெளபாய் குள்ளாயை ஒரு பக்கம் மடக்கி தலையில் இருத்தியிருந்த கர்நாடக காவலரிடம் வகையாக சிக்கியிருந்தான். அவர் ஒடி வந்த வேகத்தில் தொப்பையும் தொப்பியும் கழண்டு விழுந்துவிடலாம் எனத் தோன்றியது. இடுப்பு பெல்ட்டை இருமுறை இறுக்கிக் கொண்டபடியே ராமசாமியிடம் ஆவேசமாக கத்திக்கொண்டிருந்தார்.ராமசாமி ஓட்டுனர் இருக்கையை விட்டு இறங்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் “சார்..சார்..சார்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். மூர்த்தி பதட்டமாக ராமசாமியை தேடி ஓடி வந்தான்.

“ராமா. கீர் பாக்ஸ் எறங்கிடுச்சு”

“அய்யோ”

ராமசாமி தலையில் கை வைத்ததை பார்த்து  காவலரே தனது வேகத்தைச் சுருக்கிக் கொண்டார்.

பொதுவாக இந்தியாவின் எந்த பாகத்திற்கும் லாரிகள் சுமையேற்றி செல்லும் வழியுண்டு. வடமாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா வண்டிகள் மதராசி காடியாகவும், ஆட்கள் மதராசிகளாகவும் தான் தெரிவார்கள். இந்த மதராசி காடிவாலாக்கள் பஞ்சாபியர்களைத் தவிர்த்து அனைத்து இந்தியபாக மக்களாலும் வெறுக்கப்பட வேண்டியவர்கள். இராவண மிருகங்கள் என்பதான மனநிலையே இருக்கும். இந்த கணக்கு தென் இந்திய பகுதிகளுக்கு. ஆனால் டிஎன் என்கிற எண் கொண்ட வண்டிகள் என்றால் கன்னடர்களால், குறிப்பாக கர்நாடக காவல்துறை, ஆர்.டி.ஓ க்களால் கேவலமாக நடத்தப்படுவது, மிகக் கடுமையாக அடிப்பது, பெரும் பணத்தை கறப்பது என்பதான மனநிலை படிமமாக படர்ந்திருந்தது. ஆனால் இந்தக் கர்நாடக காவலர் அப்படியில்லை. உடனடியாக பணியில் இறங்கினார். பின்னால் அலறும் பலவகை வண்டிகளின் எரிச்சலான ஒலியெழுப்புதலும் கூடுதல் காரணமாக இருக்கலாம். அது கொஞ்சம் பள்ளத்தை நோக்கிய சாலையாக இருந்ததால் வேலை சுலபமானது.

மூர்த்தி வண்டியின் கேபினிலில் ஏறி தார்ப்பாயை கட்டும் கயிற்றையும் வண்டிச்சக்கரம் கழட்டும் இரும்பு கடப்பாரையையும் எடுத்துக் கொண்டு வண்டிக்கு அடியில் மீண்டும் அடியில் பாய்ந்தான். மூர்த்தியின் பதட்டத்தை  கவனித்தபடி நோஞ்சானாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் உடன் வந்து கைக் குடுத்தான்.வண்டியின் அடிப்பகுதி செம்மண் படிந்து இரத்தம் காய்ந்து வெடிப்பு விட்டது போல அங்கங்கே உடைந்துவண்டியின் அடிப்பாகங்கள் தெரிந்தன. ஆல்மட்டி டேம் கட்டுகிற இடத்தினருகில் தான் கிட்டதட்ட நூறு கிலோ மீட்டருக்கு மேல் தார்ச் சாலை செம்மண் கோடாக நீண்டிருந்ததை நினைவுக்கு கொண்டு வந்தான் மூர்த்தி.

வண்டியின் வேக அளவை கூட்ட,குறைக்க பயன்படும் விசையின் தொடக்கம் லாரியின் கேபினில் இருந்தாலும் அது பல்வேறு அடுக்குகளைக் கடந்து லாரியின் அடிப்பகுதியில் முதுகெழும்பைப் போல குழலாக நீண்டு பின் சக்கரத்தை இணைக்கும் தண்டில் மனித குண்டியை போல சட்டியாக குமிழ்ந்து கிடக்கும் கோளத்தில் தான் விசை மாற்றியின் இணைப்பு இருக்கும் அந்த கோளத்தின் உள் பகுதியில் இயந்திரங்கள் ஓட்டுனர் இருக்கையில் இருந்து விசையை மாற்றும் பொழுது கோளத்தின் இயந்திரங்கள் அதன் வேகத்தை ஏற்றி இறக்கி சக்கரத்தை வேகப்படுத்தவும் குறைக்கவும் செய்யும். அந்த இடத்தில் தான் தண்டு வடம் கோளத்தின் உள்ளிருக்கும் பாகங்களை இழுத்து தரையில் போட்டிருந்தது. நோஞ்சான் மனிதன் அடியில் அமர்ந்து பலம் கொண்டு கடப்பாரையால் கீர் ராடை நிமிர்த்தித் தூக்க, அதை வடக்கயிறு கொண்டு காலால் உந்தி வெறி கொண்டு இழுத்துக் கட்டினான் மூர்த்தி.

தரையில் இருந்து தண்டு வடம் சற்றே மேழெழுந்து நிற்க, அவசரமாக ராமசாமி வண்டியை இறுக்கி பிடித்து நகரவிடாமல் வைத்திருக்கும் காற்று  விசையை விலக்கி , தடையில் காலை மேலே தூக்க, வண்டி லேசாக குலுங்கியது. வண்டியை ஒட்டி வேடிக்கை பார்த்த கும்பலை பின்னால் இருந்து தள்ளச் சொன்னார் காவலர். வண்டி பள்ளத்தில் மெதுவாக நகர, ஒடிப்பானை இடது பக்கம் ஒடிக்க, வண்டி மெல்ல யானை தன் முகத்தை திருப்பி கடைக்குள் இருக்கும் வியபாரியிடம் பிச்சையெடுப்பது போல நடைபாதையோரம் நகர்ந்தது.

“வரலாம்..வரலாம்..ரைட்..”

இடது பக்கமிருந்து சொல்லிக் கொண்டு வந்த மூர்த்தி “ரைட்ல ஒடி..ரைட்ல ஒடி..” எனக் கத்த, தேரை நிலைக்கு கொண்டுவந்தான் ராமசாமி. கூடியிருந்த கூட்டம் மலையை முடியைக்கொண்டு இழுத்தது போல ஆரவாரித்தது.காவலர் வெற்றிப் பெருமிதத்துடன் ராமசாமியை கீழே இறக்கினார். ராமசாமிக்கு புரிந்தது. காவலர் மக்களைக் கலைந்து போகும்படி சொல்லிவிட்டு, ராமசாமியை ஏற இறங்கப் பார்க்க, ராமசாமி அவரை வண்டியின் முன் பக்கம் சாடை காட்டி அழைத்து, இருநூறு ரூபாயைத் திணித்தான். காவலர் சட்டென வாங்கி பேண்ட்டில் வைத்துக் கொண்டே கிளம்பினார்.

“ஓய்..இரைவரு..பெத்த ஆபிசரு..கம்மிங்..கம்மிங்…நீரு கோயிங்..கோயிங்…ஆவுனா,..”

ராமசாமிக்குத்  தலைவலிக்க ஆரம்பித்தது.ஜெய்ப்பூரிலிருந்து இந்த நடை வந்ததிலிருந்தே பிரச்சனைதான். பின்னத்தி வெளிச்சக்கரம் இரண்டு முறை ஆணியடித்து வழியில் வேலையைக் காட்டி விட்டது. உபரி சக்கரத்தைக் கழட்டி மாட்டி லாரியை கிளப்பி வந்தது பாடென்றால், மகாராட்டிரா சிற்றூரில் நாகாவிற்கு** போக்கு காட்டி ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கப் போய், பின்னால் விரட்டி வந்த ஆள் ஊரின் அடுத்த எல்லையில் மடக்கி தர்மஅடி கொடுத்ததுமில்லாமல் நூறு ரூபாயை பிடுங்கிவிட்டார்கள் வீர சிவாஜியின் மிச்ச சொச்சங்கள். இப்பொழுது லாரியின் கீர்பாக்ஸ் .தொல்லை. தொல்லை மேல் தொல்லை

ராமசாமி குழம்பிக் கிடந்தான். மூர்த்தியை வண்டியில் இருக்க சொல்லி விட்டு ,நாமக்கல்லில் இருக்கும் முதலாளிக்கு வாடகை தொலைபேசி கடையில் இருந்து பேசி,விசயத்தை சொன்னான். முதலாளி ”ஓத்தாம்பாட்டை” அள்ளிவீசினார்.

வழக்கமாக டாரஸ்  லாரி ஏற்றும் எடை என்பது 16 டன் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் சட்டமிருந்தது. வடக்கே வண்டி போய் வர, ஒரு நடைக்கு  பதினைந்திலிருந்து பதினேழு நாட்களாகும். லோடு கிடைக்காவிட்டால் இன்னும் குடுதல் நாட்கள் கூட ஆகலாம்.பதினாறு டன் எடை ஏற்றினால் வழியில், பாலம், நாகா, ஆர்டிஓ, ஒவ்வொரு மாநில எல்லை, இடையில் காவலருக்கு அழுதது போக,ஏற்ற இறக்கமான டீசல் விற்பனை, பஞ்சர்,டிரைவர்,கிளினர் பேட்டா,லாரி புக்கிங் அலுவலக கமிசன்,லோக்கல் டிரைவர் பேட்டா,பாரம் ஏற்றுக் கூலி இறக்குக் கூலி,வண்டிக்கு ஒரு நடைக்கு ஒரு முறை செய்யப்படும் மேலோட்டமான சர்வீஸ், டயர் தேய்மானம் என அனைத்தையும் கணக்கில் கொண்டால் உழுதவன் கணக்கு தான் இந்த மோட்டார் தொழிலிலும்.தெரியாத பிசாசுக்கு பதில் தெரிந்த பேயே மேல் என்று தான் இந்த தொழில் ஓடிக்கொண்டிருகிறது.எப்பொழுதாவது விபத்து ஒன்று நிகழ்ந்தால் இந்தச்சிறு முதலாளிகள் தலையில்தான் துண்டு விழும். அதனாலேயே பல முதலாளிகள் வண்டி நாமக்கல்லினுடையது என்றாலும் ஹரியானா போக்குவரத்தில் முழு இந்தியா பதிவெண்ணை வாங்குவார்கள். ஹரியானா பதிவெண் என்றால் இருபத்தியெட்டு டன் வரை எடை ஏற்றிக் கொள்ள அனுமதி உண்டு. ஆனாலும் வண்டி தமிழ்நாட்டினுடையது என அதன் தோற்றம் அடையாளம் காட்டும்.

லாரிகளில் ஒவ்வொரு மாநிலமும் தன்னுடைய அடையாளத்தைக் கொண்டிருக்கும். லாரிகளின் தனித்துவம், பண்பாடு, கலாச்சாரம், மற்றும் எடை ஏற்றிக்கொள்ளும் அளவு கூட தேசிய இன மனதோடுதான் இருக்கும். ஹரியானா பதிவெண்ணுக்கு இருபத்தியெட்டு டன் ஏற்றும் நிலை இருந்தாலும் முதலாளிகளின் பேராசை ஓய்வதுமில்லை. ஒரே நாளில் உழைப்பால் உயரும் உத்தமர் கதைகள் அவர்கள் நிறையக் கேட்டிருப்பார்கள் போல. முத்பத்தியிரண்டு டன்னிலிருந்து முத்தியாறு டன் வரை ஏற்றி வரும்படி ஓட்டுனர்களிடம் அடம் பிடிப்பார்கள். இந்த அதிக கொள்ளளவு ஏற்றும் பொழுது வண்டி திணறும்,சில மாநில எல்லைகளில் தொந்தரவாகும்,கூடுதல் எடைக்கு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரை கறக்கவும் சில ஆர்டிஓ -க்கள் முயல்வார்கள். இதனால் சில மாநில எல்லைகளில் குறுக்கு வழியாக மாநில எல்லையை கடந்து வரும் சாகச நிகழ்வுகளும் இடம் பெறும்.

இத்தனையும் கடந்துதான் இந்த ஓட்டுனர் வாழ்க்கை.முதலாளியின் வழக்கமான இந்த திட்டுகள் பலகிப் போன ஒன்றுதான். ஆனால் கீர்பாக்ஸ் இறங்கியிருப்பது பெரும் செலவு பிடிக்கிற வேலை. மெக்கானிக் வந்து சரி செய்தாலும் நாமக்கல் சென்றதும் மீண்டும் கழட்டி மாட்டும் வேலையில் மூன்று நாட்களை தின்றுவிடும்.பட்டறையில் பேசி விட்டு வருவதாகவும் பத்து நிமிடம் கழித்து பேசும்படி முதலாளி சொல்லி விட்டு தொலைப்பேசியை வைத்து விட்டார். இப்பொழுது போல அந்த நாட்களில் அழைபேசிகள் இல்லை.

ராமசாமிக்கு பசி கண்ணை அடைத்தது.விடியற்காலை தாவணிக்கரை சின்னாற்றில் குளித்துவிட்டு,  தமிழர் கடையில் அடுக்கிய இட்லி, கரைந்து காற்றில் வெளியேறி விட்டது. அவ்வப்பொழுது குடித்த தேநீரும் தீர்ந்து நாவறண்டுக் கிடந்தது.பெங்களூரை தாண்டிப் போய் சாப்பிடலாம் என நினைத்து வண்டியை அடிச்சி விரட்டியும் 28 டன் எடையை “ஹ்ம்ம்..ஹ்ம்ம்..”என அரைத்து தேய்த்தபடி வண்டி உருண்டதும்,பெங்களூரின் உலகலாவிய நெரிசல் மாலை ஐந்து மணியை தின்று,ராமசாமியின் வயிற்றையும் செரிக்கடித்திருந்தது.

தொலைபேசிக்கடைக்கு அருகில் இருந்த தேநீர்க் கடையில் ஒரு பன்னையும் தேநீரையும் வாங்கி ,களைப்பை போக்க முயன்று கொண்டிருந்தவன் தன்னை யாரோ கவனிப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க,எதிரே வெண்ணையை உருட்டி தேனில் குழைத்து உருவம் நெய்தது போல ஒரு பெண் முறைத்தபடி நின்றிருந்தாள். அவள் முகத்தில் அந்நேரத்தில் சட்டி வைத்து வடை பொரித்து விடலாம்.அவ்வளவு கொதி நிலை. அழுக்கும்,கரியும் புரண்டு கிடந்த கைலியும்,காலர் கருப்பேறி பலநாள் ஆன சட்டையும் போட்டு, பரட்டைத் தலையுடன் நின்று வேகமாக முழுங்கிக் கொண்டிருந்த ராமசாமியை அவள் பைத்தியக்காரன் என பார்த்திருக்கக் கூடும். நடைபாதையில் நின்றிருந்த அவனை எப்படி நகரச் சொல்வது எனத் தெரியாமல் விழி பிதுங்க பத்திரகாளியாகி  நின்றிருந்தாள் அவள்.

ராமசாமி சட்டென நிமிர்ந்தவன் பதறி “க்கியா” என்றான். அவளுக்கு எதுவும் புரியவில்லை.அவளது கைகள் தானாகவே அவளது மூக்கை பிடித்துக் கொள்ள,ராமசாமி பதறி விட்டான்..

“ம்மோவ்..இது..கரி..காடி..மே..”

அவன் முடிக்கவில்லை.அவள் சட்டென கீழ் பகுதியில் இறங்கி ஓடி விட்டாள்.போகும்போது திரும்பி திரும்பிப் பார்த்தபடி பதட்டமாக ஓடினாள் அவள். ராமசாமிக்குப் புரிந்தது.சுற்றிப் பார்த்தான். எல்லோரும் தன்னையே பார்ப்பது போலிருந்தது. தாங்க முடியவில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்து தொலைப்பேசிக் கடையின் அருகில் சென்று எல்லோரின் பார்வையிலிருந்து முகத்தை மறைத்துக் கொள்ள முயன்றான்.

அழுக்கு லுங்கியும்,கரியுடலும் அவனுக்கு மோட்டார் தொழிலுக்கு வந்த பொழுது புதுசு. மலைக்கடை கிரசர்க்காரன் கிட்ட அடமானத்துக்கு மூன்றாயிரம் வாங்கி,கேணி மோட்டு நெஞ்சுமுட்டி மூத்த மகள் திருமணத்துக்கு சீரு செஞ்சது போக இரண்டு பன்னிக் குட்டி வாங்கி, ஆயித் தோப்புல விட்டுப்புட்டு,அரசு பாக்கெட் சாராயத்தை புருசனும் பொண்டாட்டியுமா இராப்பகலா குடிச்சதுல, குடல் வெந்து செத்துப் போனார் ராமசாமியின் அப்பா கூறார் சின்னான். ஆயித் தோப்புல ஊரார் பேண்டத பன்னித் திங்கும். திங்கற பன்னிக்குட்டிய மேச்சுக்கிட்டு, பன்னி விட்டை பொறுக்கி, எரு சேத்து வித்துக்கிட்டிருந்த ராமசாமியின் அம்மா கொசவட்டை , வேற வழியில்லாம கிரசர்க்காரன் கடனுக்கு, பன்னிக்குட்டியையும், எட்டு வண்டி பன்னி விட்டையையும் வித்துக் கொடுத்தார். வித்தும் தேறாம கடன் கழிக்க,கல்லுடைக்க போனார். குன்னுமேட்டு தெருவுல பாதி பேரு இப்படித்தான். கிரசர்காரன் கிட்ட கல்லுடைக்க போய் கடன் அடைச்ச பாடில்லை. பன்னிக் குடிசையை விட கொஞ்சம் உயமான குடிசைதான் குன்னு மேட்டுத் தெருவுல எல்லா வீடும். அம்மா  கொசவட்டை கல்லுடைக்க காலையில போனா நட்சத்திரம் பன்னிக்குட்டையில விழுகுற நேரத்துலதான் வருவார் .அசதிக்கு தக்க பாக்கெட்  சாராயமும் உண்டு.

பள்ளிக்குடம்னா ராமசாமிக்கு உயிர். எக்கேடு கெட்டாலும் பள்ளிக்கூடம் மட்டும் போகாம இருக்க மாட்டான். அதிலயும் சோத்துக்கு வழியில்லன்னாலும் பக்கோசு கடையில் “ரீகல் சொட்டு நீலம்” வாங்கி,பள்ளிக்கூடம் போட்டுக்கிட்டு போறவெள்ளை சட்டையை நீலம் போட்டு  “சொட்டு நீலம் டோய். ரீகல் சொட்டு நீலம் டோய்..” பாட்டெடுத்து கைரேகையெல்லாம் ஊதாவாக பள்ளிக்கு போவான் ராமசாமி. சட்டையில் பொத்தானுக்கு பதில் ஊக்கு குத்தியிருப்பாங்கறது வேற விசயம். அவ்ளோ சுத்தக்காரன்.

பன்னிக்குடிசையும்,பன்னிக்கூண்டும் நம்மள விட்டு போவனும்னா நல்லா படிக்கணும்னு சொன்ன அம்மா கொசவட்டையும் பத்தாம் வகுப்பை தொடும்பொழுது போய்ச் சேர, தம்பி இரண்டு பேருக்கும் வேற ஆளில்லை.திசை நாப்பதா இருக்கு, கல்லுடைக்கத்தான் போவனும்னு முடிவு செஞ்சப்பதான் மாக்கான் கைக் கொடுத்தார் அவனுக்கு. பேருதான் மாக்கான். ஆனா அந்த ஊருலயே கொஞ்சம் விவரமா பேசுறவரு அவருதான். அவரையும் பள்ளத்தெரு பொண்ண காதலிச்சு கட்டிக்கிட்டதுக்காக ஊரை விட்டு தள்ளி வச்சிருந்தாங்க அவரு உறமுறையை சேர்ந்தவங்க. ஆனாலும் மனுசன் கல்லு மாதிரி .இதே ஊர்லதான் இருப்பேன். இங்கதான் எம்புள்ள வளரும்னு நெஞ்ச நிமித்தி நின்னாரு மாக்கான்.

“என் கூட கிளினரா வாடா..உன் தம்பிங்க படிக்கட்டும்..படிப்பை வீட லாரி உனக்கு நல்லா சோறு போடும்”

மாக்கான் தான் ராமசாமியை நாமக்கல் கூட்டிட்டு வந்தார்.  ராமசாமி கிளினராக ஓடியபொழுதே அவனுக்கு பெரும் சங்கடமா இருந்தது இந்த அழுக்குதான்.அவன் அழுக்கை விட்டு ஓடனும்னு ஓடினாலும் அது விடாம அவன தொரத்துது. ராமசாமியும் குளிச்சி சுத்த பத்தமாதான் இருப்பான். என்ன குளிச்சாலும் வண்டியில ஏறி உட்காந்ததுமே அழுக்கு தானா..ஏறிக்கும்.ஆரம்பத்துல கொஞ்சம் வேதனைப்பட்டாலும் பழகிடுச்சி. இப்ப லாரிக்கு அவந்தான் டிரைவர்.காசுப் புழக்கம் நல்லா கையில புரளுது.ஆனா அழுக்கு அவன் கூடவே இருக்கு.

அந்த பொண்ணு பார்த்த பார்வை அவன் நெஞ்சை தச்சிடுச்சி. முள் தொண்டையில் சிக்கி விட்டது.

முதலாளி நாமக்கல்லில் இருந்து எதிர் வண்டியில் மெக்கானிக்கை அனுப்புவதாக சொல்லி அவர்களை காத்திருக்கும் படி சொல்லி விட்டார். மெக்காணிக் வந்து சேர்கிற வரை இங்குதான் என்பது புரிந்து விட்டது. மூர்த்திக்கு இரண்டு பன்வாங்கிக் கொண்டு போனான். மூர்த்தி அதற்குள் வண்டியின் முன்னும் பின்னும் பத்தடி தள்ளி கல் வைத்து வண்டியின் சூழலை சாலைப் பயணிகளுக்கு புரியும்படி உணர்த்தியிருந்தான். ராமசாமி தனது அழுக்கு சட்டைகளில் நல்லதை தேடித் தேடிப் பார்த்தான்.கிடைத்த இடத்தில் உடனே துவைத்து வைத்திருந்தாலும் மீண்டும் தானே கரியாகிவிடுகின்றன. எல்லாம் ஒன்று போலவே இருந்தது. தேநீர்க் கடை வழிமறிப்பில் நின்ற அவளின் நீள மூக்கு ஏனோ அவனை இம்சை செய்தது.

இரவுச் சாப்பாட்டுக்கு ராமசாமி போக வில்லை.மூர்த்தியை சாப்பிட்டு விட்டு ஏதாவது வாங்கி வரச் சொல்லிவிட்டான். வண்டியின் கேபினில் ஏறி தார்ப்பாய்க்கு மேல் படுத்து கடும்குளிரை போர்த்திக் கொண்டுவிழித்துக்கிடந்தான். அவனுள்ளத்தில் சிவகாமி வந்து போனாள். அவன் தெருவில் வசிக்கும் கருத்த பெருங்கண்ணி அவள். பணிரெண்டாவது படிக்கிறாள்.ராமசாமி ஒரு முறை ஸ்ரீநகரிலிருந்து ஆப்பிள் ஏற்றி திருச்சிக்கு வந்தான். வரும்வழியில் ஆலத்தூர்கேட்டை சொந்த ஊரான செட்டிக்குளத்திற்கு வண்டியை விட்டான். தெரு சில்வண்டுகள் லாரியைக் கண்டு மொய்த்துக் கிடக்க,பெருசுகள் வேடிக்கைப் பார்க்க, கிணற்றிலிருந்து நீர் இறைத்து வந்த சிவகாமியின் கற்றாழைக் கண், ராமசாமி சிறுவர்களுக்கு கொடுத்த ஆப்பிளையும் ராமசாமியையும் பார்த்தது.ராமசாமியின் கண்கள் சிரிக்க,சிவகாமியின் கண்ணிழுத்துக் கொள்ள, ஆப்பிள் கன்னிப் போய் விட்டது. ராமசாமியும் மடங்கி கிடந்தான் அவள் பார்வையில்.அவள் தான் அவனை இந்த பனிக் குளியலில் மிதக்க விட்டிருந்தாள்.

மூர்த்தி வாங்கி வைத்திருந்த சாப்பாடு அப்படியே இருந்தது. குளிர் தெளித்த வாசலில் புள்ளிக்கோலமாக துளிகள் படர்ந்திருந்தன. ராமசாமியின் முகம் விரைத்து கிடந்த தார்ப்பாய்க்குள் அழுந்திக் கிடந்தது.

பன்றிகள் மூஞ்சை நீட்டிக்கொண்டு, அடர்ந்த கூர்முடிகளை சிலிர்த்தபடி வந்து முகத்தை ஆவேசமாக நக்கியபடி இருந்தது. அதன் கோரைப் பற்கள் ராமசாமியின் தாடையை தாங்கிப் பிடித்திருந்தது. நாக்கு சுழன்றபடி இருக்க, அந்த கூர் மூக்குப் பெண் அவன் முகத்தில் காறித் துப்பி,முரட்டுக் கண்களை அவன் உடலெங்கும் வீசினாள். அவை ஒன்று பலவாகி, அவன் உடலெங்கும் ஈக்களைப் போல மொய்த்து அழுக்குச் சட்டையை தின்று, அவன் அழுக்கு உடலைத் தின்று சதை, நரம்பு, குடல், குடலிலிருந்த பன்னையும் ஆவேசத்தோடு தின்று கொண்டிருந்தது.

மூர்த்தி ராமசாமியை எழுப்பினான். மெக்கானிக் ஒரு உதவியாளனோடு வந்திருந்தான். வேர்வையோடு மெக்கானிக் லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தான். சாலையின் இரைச்சல் கணக்கற்ற ஓநாயாய்களின் பெருங்குரலாக நீண்டு அந்த சாலையில் வழிந்தோடியது.முதல் நாள் அதே நேரத்தில் சரியாக கீர் பாக்சை தூக்கி மாட்டினான் மெக்கானிக் சிவா. வேர்வையும் அழுக்கும் அனைவரையும் நாராக்கி இருந்தது. பெரும் களைப்பு அனைவரின் முகத்திலும் வழிந்தோடியது. ஓசூருக்கு முன்பிருக்கும் கர்நாடக எல்லையில் வண்டி நடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு மூர்த்தி ஓடினான். வண்டி சில கிலோ மீட்டர்கள் எரும்புச்சாரியாக ஊர்ந்து கொண்டிருந்தன. எல்லைக் கணக்காளரிடம் வண்டி எண் சொல்லி பதிவு போட்டு, அவர்களுக்கான வரும்படியை அளித்து விட்டு மூர்த்தி மெல்ல ஊர்ந்த வண்டியில் தொத்தி ஏறினான். ராமசாமி ஆவேசம் வந்ததைப் போல தமிழ் நாட்டு எல்லைக்கு குறுக்கு வழி சாலையான இராயக்கோட்டை வழியே செலுத்தினான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளாத அந்த அசந்த பொழுதில் சாலையின் புளிய மர மறைவிலிருந்து மோகினி வெளிப்பட்டாள். மாய மோகினிதான்.ராமசாமி அடித்த பிரேக்கில் அனைவரின் தூக்கமும் வண்டிக்கு வெளியே வீசப்பட்டது.

அகண்ட கண். அவள் சிவந்த வெற்றிலையை துப்பினாள். மெக்கானிக் உறுதியாக சொல்லிவிட்டான்.மெக்கானிக்குகளுக்கு மோகினிகள் அமைவது சிரமம். நேரம் காலமற்று மெக்கானிக்குகள் இரும்போடு பிணைந்திருப்பார்கள். எப்பொழுதாவது வெளியில் வந்தால் தான் உண்டு.சில நேரங்களில் உடல் சூட்டைப் போக்க ஆந்திரா செல்லும் வண்டிகளில் பயணித்து மோகினிகளிடம் வெப்பம்  வெளியேற்றுவார்கள். இந்த சாலையோர ஆந்திர மோகினிகள் பெரும்பாலும் இவர்களின் கரி படிந்த, வெளியேறவே முடியாத இந்தக் கருமையை அவர்கள் உள்ளன்போடு ஏற்றுக் கொள்வார்கள். உழைப்பவர்களின் வியர்வையில் குளித்து குளிப்பாட்டுவார்கள். கருமையை அள்ளி ஊடலோடும் கூடி களித்து இந்த உழைப்பாளிகளின் எண்ணம் ஏற்றுவார்கள். மோகினி வண்டிக்குள் ஏறி அமர்ந்து தேவ உலகம் பயணிக்கத் துவங்கினாள். வண்டியின் கேபினின் மெத்தையில் பின்பக்கமாக இருந்து மெக்கானிக்கின் கை அவளது உடலில் கரப்பானாக ஊர்ந்தது. பழுத்து தடித்து, கருப்பேறிய மெக்கானிக்கின் கை ஊர்வை அவள் செல்லமாக நெளித்து சிரித்தாள்.

ராமசாமி வண்டியோட்டியபடி அவளிடம் கேட்டான்.

“உம் பேரென்ன..”

“சிலுக்கு”

“எந்தூரு..?”

“மேலெருந்து வந்தா ரெண்டு மலை பிரியும்..மலைக்கு இடையில ரோடு போகும்…”

ராமசாமியின் மனக் கிடங்கில் எரிச்சல் சாணியாக அடித்தது. அவனது மனமெங்கும் நீள மூக்கு கீறியபடியே இருந்தது.

“..ஏய்..ஊரைக் கேட்டா கதை அளக்கிற..”

“யோவ்..கேளுய்யா..ரோடு போய் முட்டுற இடம் தொப்புளூர்..”

மெக்கானிக் முனகியபடி..

“அப்புறம்..”

“தொப்புளூருக்கு கீழ எந்தூரு…குழியூருதான்…யோவ்…கதை கேட்டது போதும் அந்த மரத்துக்கிட்ட நிறுத்து…”

மெக்கானிக் அவசரப் பட்டான். ராமசாமி அவள் முகத்தில் தன் முகத்தை தேய்த்தான். அவள் ராமசாமி சட்டையை பிடித்து இழுத்துப் போனாள். எல்லோரும் பதறி நின்றார்கள். மெக்கானிக்கின் கால் வழியே வெப்பம் பரவி ராமசாமியும் மோகினியும் போன திசையை தேடி அலைந்தது.

மரங்கள் மறைத்த வனம் அது. எந்த பறவைகளும்,விலங்குகளும் இடம் பெறாத வறண்ட பாலை மர வனம்.ராமசாமி அவளையே பார்த்தான். அவள் விருவிருவென அவனை இழுத்தாள். அவள் மூக்கு கூர்ந்திருந்தது.வெற்றிலைச் சிவந்து உதடு வெளித் தள்ளிக் கிடந்தது. பன்றிகள் மூஞ்சை நக்கின.அவள் மூக்கு கூர்ந்திருந்தது. பன்றிகள் முடியை சிலிர்த்தன.அவள் முறைத்தபடி நின்றிருந்தாள்.அவள் முகத்தில் ஒரு அசூயை படர்ந்து அவன் உடலை ஊடுருவியது.ராமசாமி அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் இழுத்தாள் வெறியோடு. நாக்கைக் கடித்தபடி அவள் மீது ஏறினான். அவள் ஆவேசமாக அவனை அணைத்தாள். இறுக்கி எழும்புகள் முறிந்துவிழுந்தன. அவனது தசையை, நரம்பை, குடலை, ஈக்களாக அவளது கண்கள் மொய்த்தன.

பன்றி, கிரசர் முதலாளி, அம்மா, சிவகாமி..அவள்..அவள்…பெங்களூரில் முறைத்த நீள் மூக்கு முகம்.அந்த முகம்…

ராமசாமி உடலை வளைத்து முருக்கேற்றினான். காலத்தின் அழுக்குகள் அவன் மீது கவிழ்ந்து அவனை மூழ்கடித்தன. பழமும் பாலும் பிசைந்து கொழகொழவென அவன் பிடறியில் ஊற்றி வழிய வழிய, உடலை தேய்த்து கரியை, நீல வண்ணத்தை, பச்சை திரவத்தை,வழித்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவன் செல்லாத கோயிலின்  மந்திரங்கள் ஓதிக் கொண்டிருக்கும் குரல்களின் தீர்க்கம் ராமசாமியின் நகங்களினூடாக அவனது ஆன்மாவை கிழித்து வீசிக்கொண்டிருந்தன. ராமசாமியின் மேற்பற்களிலிருந்து இரு பற்கள் நீண்டன, மோகினியினிடையில் ஏறி அமர்ந்து நீண்ட நாக்குகளைக் கொண்டு ராமசாமி அவளது தேகத்தை நக்கத் தொடங்கினான். அவள் திணறி,திமிற வெறியோடு சொரசொரப்பான நாக்கினால் அவளின் தசைகளை ஒரே சுழட்டில் பிய்த்தெடுத்தான். மோகினி  அதிர்ந்து போனாள். அவள் மூர்க்கமான மனிதர்களை சந்தித்தவள் தான். உச்சமான அனுபவங்களை தாங்கிப் பழகியவள்தான். ஆனாலும் இது  குரூரம். அவளதுவாயிலிருந்து வெற்றிலை இரத்தமாக வழிய வழிய அவள் அலறத் துவங்கினாள. பலம் கொண்டு அவனை எட்டித் தள்ளி காடே அதிர இருளில் கதறியபடி உடைகளேதுமற்று அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.

மெக்கானிக்கும், உதவியாளனும் மூர்த்தியும் வேகமாக அலறல் வந்த திசையில் ஓடி வந்தார்கள் . ராமசாமி நின்று கொண்டிருந்தான். அவனது முகம் சாந்தமாகியிருந்தது. எல்லாக் காலத்தின் அழுக்குகளையும் துடைத்துவிட்டிருந்தான். தனது உடலை பார்த்தான் கருமை ஒரு பூரிப்போடு கிளர்ந்து அவனை பார்த்து சிரித்தது.

“டேய்..ராமா இப்படிப் பண்ணிட்டியேடா…இனிமே. .நான் என்னடா பண்ணுவேன்…எந்த சந்துலடா வச்சுக்கறது…அப்படி அவ ஓடுற அளவுக்கு அவள என்னடா பண்ணுன… பாவம்டா..இது..”

மெக்கானிக் கேட்டுக் கொண்டேயிருந்தான்.நிதானமாக நடந்து சென்று லாரியில் ஏறி அமர்ந்து, ஹாரன் அடிக்க ஆரம்பித்தான் ராமசாமி.

 ***

(நாகா என்பது ஊராரால் தடுப்பு வைத்துவரும் வண்டிகளை நிறுத்தி பணம் வசூலிக்கும் முறை)

- வ.கீரா

தொடர்புக்கு : keeraaiyakkunar@gmail.com

காற்றாடியின் நிழல்

காற்றாடியின் நிழல், நஞ்சை நடுவதற்கு தொளி அடித்துமுடித்து நீர் தேக்கி விட்டிருக்கும் வயலில் விழத்தொடங்கியது எப்போதிருந்து என்பது நினைவுக்கு வர மறுக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திற்குள் இருந்து கொண்டு கன்னியாகுமரிக்குக் கொஞ்சம் பக்கத்தில் இருப்பவன் நான். யாரேனும் திருநெல்வேலியில் எங்கே என்றால் சிலருக்கு ஐ.எஸ்.ஆர்.ஓ, அது தெரியாதவர்களுக்கு, “முப்பந்தல் கேள்வி பட்டதில்லையா? ஆசியாவிலேயே அதிக காற்றாடி உள்ள இடம்: அதற்கு முன்னாடி.” இப்படிப் பதில் சொல்லித் திரிந்திருக்கிறேன்.

முதல் பத்தி எழுதி முடித்ததுமே, கல்விச்சூழல், அரசு, சமுதாயம், என்று எல்லோரையும் குறை சொல்லச் சொல்கிறது மனது..

பனிக்காலத்தில் மடிந்து கிடக்கும் கதிர், வரப்பில் பூத்துக்கிடக்கும் பனி. செம்மண்ணும் வண்டலும் தென்னந்தோப்பிற்குள் கலந்து கிடக்கும் வாய்க்காலில் உணரும் ஈரம், மண்வெட்டியில் மினுங்கும் சில்வர் நிறம். என்னவெல்லாமோ நினைவுக்கு வருகிறது.

திருநெல்வேலிக்கான மொழியை வீம்புக்கென்றே விட்டுக் கொடுக்காமல் பேசும் இந்தச் சென்னையில், சென்னை எனக்கொரு வனாந்திரமாக தெரிவதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை. அலுவலகத்தில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஊருக்குப் போக ஆசையாக இருக்கிறது என்று. சொந்தபந்தம் விட்டுப்போய் இன்னார் மகன் என்று சொன்னாலும் அடையாளம் காணமுடியாதொரு வாழ்விற்குள் நுழைந்துவிட்ட பின்பு பத்து நாட்கள் யார் வீட்டில் இருந்துவிட்டு திரும்ப முடியும்?

“ஊர்ல ஒரு நாலு ஏக்கர் நிலம் இருந்திருந்தா நான் ஏன் சார் இங்க வந்து கஷ்டப்படப் போறேன்” என்று படித்ததற்கு நொந்து கொண்டிருந்தான். நானும் அதே மனநிலை கொண்டவன் தான்.

நிலமிருந்தும் விவசாயத்தின் மீது ஒரு மிரட்சியை, பயத்தை விதைத்த வெள்ளந்தித் தகப்பனுக்கு மகனாய், அதே வேளையில் தன் மண்ணை விட்டுக்கொடுக்க முடியாமல் பொழுதுக்கும் கலப்பையை இறக்கிப்பார்க்கும் ஒரு விவசாயியாய், நெஞ்சுமுடி நரைக்கத் தொடங்கிவிட்டபோதும் நீட்டித்துக் கொண்டிருக்கும் அதே தகப்பனின் மகனாய் இருப்பதே இப்போதைய ஒரே ஆறுதல்.

இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சமென “6 இஞ், 610அடி” ஆழம். போர் போடப்பட்ட அன்றே தென்னந் தோப்பிற்குள் எந்த சலனமும் இன்றி தன்னைத்தானே மண் தன்னை மூடிக்கொண்டது. “கடனே” என்று தோட்டத்திற்கு காலையில் எழுந்து சென்ற காலத்தில் நான் மிகவும் உடைந்துபோனது அன்று தான்.

ராட்சத காற்றாடியின் றெக்கை சுற்றிக்கொண்டிருக்கும்போதே, தன் பிடியிலிருந்து விலகி ஊருக்குள் வந்து விழுவது போன்று எத்தனையோ நாள் காட்சி வந்திருக்கிறது.

வராண்டாவில் நடக்கையில் எல்லா கதவுகளிலும் பூட்டு தொங்குவதைப் பார்க்கும் போது, மலைக்கு மேயச்செல்லும் மாடுகளின் புழுதி வாசனை நினைவுக்கு வருகிறது. ஆமாம் இப்போதைய தார்ச்சாலையை பியித்தெறிந்துவிட்டு நினைவுக்கு வருகிறது.

வண்டல் மண் நிறைந்த ஆற்றில் மூட்டு அளவிற்கு ஆழம் தோண்டி, கானும் பொங்கலுக்காக முந்தைய நாள் இரவில் வாங்கி வைக்கும் பியர் பாட்டில்களும், மறுநாள் காலையில் சுண்ணாம்புப் பையில், பாட்டில்கள் மோதிக்கொள்வது சத்தமின்றி தெரு வழியே மலையேறும் காட்சியும் பொங்கல் என்பதால் நினைவுகளின் இடுக்குகளில் துணைக்குச் சேர்ந்து கொள்கிறது.

என்ன செய்வது? எல்லோரிடமும் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

புளியந்தோப்பிற்கு நடுவே, பனைமரக் காட்டிற்குள்ளிருந்து விடலியில் வெட்டிவந்த பனையோலை மடல் விரித்து குவித்துப் போட்டிருந்த சிக்கன் வறுவலும், உறவுமுறை, வயது மூப்பு பாராமல் பாரபட்சமின்றி உருண்டு எழும் கபடி விளையாட்டும், என் நாசியை தொந்தரவு செய்கிறது.

நான் முந்தி, நீ முந்தி என்று வேகமாய் சைக்கிள் ஓட்டவேண்டும் போல இருக்கிறது.

கழிவறையில் இருக்கும்போது மட்டுமே முட்டி மடங்க வாய்ப்பு கிடைக்கும் இந்த வாழ்வை வைத்துக்கொண்டு…

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

-ரமேஷ் ரக்சன்

வையாசி 19 – நாவல் பகுதி

கம்போங் புருவாஸ் –எஸ்ட்டேட் செப்பாங்

இன்பா சுப்ரமணியன்

photos 3

கம்போங் புருவாஸ் ஒரு ஆழ்ந்த அமைதியில் ஒறைஞ்சு போனது. வண்டுக சத்தம் மட்டும் கேக்குது .மொத நா ராவு பெராக்ல தொரைமாருக இருக்க மிட்லான்ஸ், க்ரீன்லன் தோட்டத்துலேருந்து நாப்பது பேர புடிச்சு போயிட்டாய்ங்களாம் பாலம் கட்ட,  பாத போடன்னு. சனங்க ஒட்டுக்க பயந்து போய் கெடக்குக.

தோட்டத்துல வேல செஞ்சாலும் கூலி ஒழுங்கா குடுக்குறதில்ல. இப்ப புள்ள ஒரு பக்கம் , புருசன் ஒரு பக்கமின்னு வெகு குடும்பங்க செதறிப் போச்சி.

மூனாஞ் சாமம் தொடங்கவும் மெதுவா எல்லாச் சனமும் தொங்கல்ல இருக்க அசாப்பு கொட்டகை பக்கத்துல வந்தாக. ( ரப்பர் பாலை ஷீட்டாக தயாரிக்குமிடம் )

கிராணி அழகு மெதுவா மலாயில பேசத் தொடங்குனாரு.

“நம்ம தோட்டத்துல இப்ப சுமார் அறுவது பேரு தமிழவுக, மலாய், சீனம்ன்னு கலந்துருக்கம் . ஒடனே நாம இங்கருந்து தப்பிச்சாகனும் .இல்லன்னா ஆளுக்கொரு பக்கமா நம்மள புடிச்சுட்டு போயிருவான் வெள்ளையன்”

சீனக் கிழவன் ஓயி கேட்டாரு, “மொத்தமா எல்லாரும் போனா அடுத்து விடிய அவனுக்கு தெரிஞ்சா, என்னாகும் லா? இங்கிட்டு அம்பது மயிலு அங்கிட்டு அம்பது மயிலுல ஆளுகள வச்சு புடிச்சுப்புடுவாம் லா? ”

“ நெசந்தா. அதுக்கு தா நமக்கு இங்க பக்கத்துல இருக்க அப்துல்லா பாயும், நம்ம பெராக் சையதும் உதவுரதா சொல்லிருக்காக.”

“எ ப்படி?”

“ ஒரு லோறீ எப்பவும் ஆள் புடிச்சு வடக்க கொண்டு போகுதாம்.அந்த லோறீ டிரைவர் தா நம்ம சையது பாய். ஒரு ராவுக்கு மட்டும் நம்ம எல்லாரையும் அதுல புடிச்சு போறது போல சித்தியவான் தாண்டி விட்டுட்டு வந்துருவாக.”

“ ரோசன நல்லாருக்கு அல்கு. மாட்டுனா அவஞ் செத்தானே? ”

“ ராவுக்குள்ள அவெந் திரும்பி இங்கயே வந்துருவாங் அபாங் ”

“ஆனாலும் என்ன சித்தியவான் அமக்கு முப்பத்தஞ்சு நாப்பது கல்லு தூரந்தானே? ’’

“அதுக்கென்ன செய்ய? இது சின்னாங்கான்ன வேலயில்ல. அதுக்குள்ள அம்ம அங்கிட்டு இருக்க காடுகளுக்குள்ள மறஞ்சுக்கனும். மருவடி ராவுல நடக்கத் துவங்கனும்”

“ கிராணி அண்ணே, நல்ல ஏற்பாடு தா.. என்னமோ சித்தியவான்ல இல்லாம இன்னுங் கொஞ்சம் தள்ளி விடச் சொல்லுங்கண்ணே. புன்னியமாப் போகும்’’

சலீம் எந்திரிச்சு பேசத்துவங்குனாரு. சலீம் கொஞ்சம் அனுபவ சாலி.பட்டாளத்துல வேல பாத்தவுக. எடது கை யுத்தத்துல போச்சு. அரசாங்கம் கொஞ்சம் நட்ட ஈடு குடுத்து வீட்டுக்கு அனுப்பிருச்சு. அதுல இங்க புருவாசுக்கே வந்து இருந்துட்டாரு.

“நம்ம கிராணி அருமயான வழி செஞ்சுருக்காக. நமக்கு பேச நேரமில்ல. அசாப்பு கொட்டகயில தண்டனைக்காக அடைச்சு வச்சுருக்க நம்ம வேலுவையும், சாமிப்பிள்ளயையும், நாளைக்கி சரியா சங்கு ஊதுன அரை மணியில பூட்ட ஒடச்சு தொறந்துருவோம். மொதல் பாராக்காரங் போன ஒடனே லோறீ தயாரா இருக்கும். முக்கியமானதுகள எடுத்துக்குங்க. ஒரே கூட்டமா அறுவது பேரும் போறது நல்லது இல்ல. இருவது இருவது பேரா தெலுக் இந்தான், கம்போங் குவந்தான், புக்கிட் ப்ளிம்பிங்ன்னு அங்கங்க இறக்கி விடுவாக. வயசானவுக கொஞ்சம் தள்ளிப் போயி இறங்கிக்குங்க. காசு கையில வச்சுட்டு அங்கங்க கொஞ்சம் ஏதோ வண்டி வாகனம் புடிச்சு தள்ளி போயிடுங்க.எப்பிடியாவது லங்காட் போய் சேந்துட்டிங்கன்னா  அப்புறம் நிம்மதியா இருக்கலாம்”

“ தெரிமா கசி அபாங். இதுக்கு மேல பேசி நேரத்த வீனாக்க வேனாம் ” கிம் சொன்னா…

அங்க போட்டி, சண்டை சச்சரவு எதுவுமில்ல. எல்லாரும் அமைதியா கலஞ்சாக. இது வெவரத்த அசாப்பு கொட்டகயில அடஞ்சு கெடக்க வேலுவுக்கும், சாமிப் பிள்ளைக்கும் சொல்லிட்டு, கொஞ்சம் அவிச்ச மரவள்ளிக் கிழங்கும், கிச்சாங்கும், தண்ணி தாகத்துக்குரெண்டு தக்காளியும் குடுத்துட்டு வந்தாரு லிம்.

மலாய்க்காரக, சீனத்துச் சனங்க, தமிழ் ஆளுகன்னு எல்லாருமே ஒத்துமையா இருந்த எடம் அது .

வெள்ளைக்கார தோட்டம் அது.மார்ட்டின்னு ஒரு மொரடன் தாம் அங்க கங்கானி. அவன் கொடுமை நாளுக்கு நாள் அதிகரிச்சுது ஒரு பக்கம்.மறு பக்கம் ரோடு போட, பாலங்கட்டன்னு ஆளுகள புடிக்கிறதுன்னு வரவும், அழகுவும், சலீமும் சேர்ந்து இப்படி ஒரு ஏர்பாடு செஞ்சாக.

பேச்சரவமில்லாம மெதுவாக் கலையுது சனம் .

ஆளுக்கு ஒரு பை. கிம் மெதுவா சத்தமில்லாம சேகரிக்கத்துவங்குனா.கொய்னிய எடுத்து மொதல்ல வச்சா. ஓஓ மாரியோ , நல்லபடியா எல்லாரும் தப்பிக்கனுமே, கூடவேருந்து ஒதவு தாயேன்னு சொல்லி ஒரு துணியில சுத்தி பையில வச்சா.

அடுத்து, இந்தக் குளிருக்கு, காட்டு வழிப் பாதைன்னு அதுக்கு வேண்டியத தேடுனா. மீசைக்காரந் தைலம், கோடாலித் தைலம், மீசைக்காரன் மருந்துப் பொடி, கத்தி, முள்ளு குத்துனா எடுக்கச் சாமனம், மங்குப் போகனி, பேட்றி வெளக்கு, சவுக்காரம், பல்லுப் பொடி, அதோட ரெண்டு உடுப்பு, ஒரு சின்னக் கம்பிளி துப்பட்டி. அதுக்குள்ள லீயும் , பாண்டியனும் அவுகளுக்கு தேவையானத எடுத்து வச்சாக. ஆளுக்கொரு கொடை.

“மா, பயப்படாத. எப்படியோ, இந்த வெள்ளைக்காரங்க கிட்டேந்து தப்பிக்கனும்.”

“அது சரி. காடுகள்ல நெறய காட்டுகாறக இருக்காங்க. அவுகட்ட சிக்காம இருக்கனும். காட்டு வழி பிரயானம், பூச்சி பொட்டு தாக்காம இருக்கனும்”.

யோசனயில ஆழ்ந்து இருக்கயிலே மெதுவா விடியுது. இன்னைக்கு பதட்டமில்லாம வேலை செய்யனும். கங்கானித் தொரை எதையும் கண்டு பிடிக்காம இருக்கனும். நெனப்பு ஒரு கட்டுக்குள்ள இல்ல.

காமாச்சி சட்டில கொஞ்சம் களியும், கருவாடும் கொண்டாந்து குடுத்தா. “கிம், நேரமாச்சு.இதச் சாபிட்டு வேலைக்கு போ.நா எப்பிடியாவது கல்லுப்பு வாங்கியாந்து வைக்கிறேன். ”

“ க்கா, உப்பு எங்கிட்ட இருக்கு க்கா. எங்க அக்கா போன வாரம் ரெண்டு பை உப்பு குடுத்துச்சு. அது எதுக்கு?”

“ ராவுல காடு கரையில படுத்தா , கொஞ்சம் உப்பு தூவிட்டு படுத்தா பூச்சி பொட்டு வராது. உப்பு வாடைக்கு விச ஜந்து அண்டாது’’

“ நல்ல வேள. யாது வந்துச்சு. இருக்குக்கா, இருவது இருவது பேரா எறக்கி விடுவாகளாம். நீங்க என்னோட இருங்க. என்னய விட்டுப் போகாதீங்க.”

ஒருதர் கைய்ய ஒருத புடிச்சு கண்ணு கலங்குனாக. கிம்மோட பருத்த ஒடல் குலுங்குது.

“சரி, நீ கெளம்பு. நேரமாச்சு. ஈசன் வச்சபடி நடக்கும்..யாருக்கு எங்க வித்திச்சுருக்கோ காத்தும் தண்ணியும்? இன்னுமெத்தன நாளோ இந்த பூமில? இன்னும் எங்கெங்க புலம் பெயரனுமோ?”

“க்கா, இப்படி பேசாதீங்க” வார்தயில்லாம காமாச்சிய கட்டிப்புடிச்சு அழுதா கிம். லீ கண்ணு கலங்க அம்மாவையும் காமாச்சியையும் அனைச்சுக்கிட்டு நின்னான். பெத்தது கிம், வளத்தது என்னவோ காமாச்சி தாம்…

விடிய மொதச் சங்கு ஊதிருச்சு. சனங்க அவுக்கு அவுக்குன்னு ஓடுது. ராப்பூரா ரோசனையும், சாமாஞ் செட்டு கட்டி முடியவுமா முழிச்சுருந்தது சமைக்கக் கொள்ள நேரமில்லாம வரக் காப்பியக் குடிச்சுட்டு, மரவள்ளிக் கிழங்க எடுத்துக்கிட்டு ஓடுதுக.

கிம் உளிப்பைய எடுக்காம பெரிய ஒடம்ப தூக்கிட்டு வேகமா நடக்குறா. ஆறு மணிச் சங்கு ஊதிருச்சு.  பெரட்டுக் களத்துல செக் ரோல் குறிக்கிறாரு கங்கானித் துரை .

“எங்க உளிப் பை?”

கிம்முக்கு அப்ப தா யாது வருது.அய்யோ பதட்டத்துல வீட்டுல வச்சுட்டு வந்துட்டோமே? திட்டி போடுவானே?

“சயா மாஃகன் சயா மிண்ட்டா மாஃ.. ஜன் கன் மாரா..’’

“போ திரும்ப. அரை நாள் திட்டி.சம்பளம் இல்ல. உடனே எடுத்து வந்தா அரை நாள் சம்பளம்.இல்லன்னா அதுவுமில்ல.”

“அய்யா ஒரு நாள் திட்டி குடுங்க. மேலுக்கு முடியல” ஒடம்ப வளைச்சு கும்பிடு போட்டு கேட்டா கிம்.

பூட்ஸ் காலால ஒரே எத்து எத்தினான் கங்காணி.

ஓமாரியோன்னு அலறி கீழே சுருண்டு விழுந்தா கிம்.அல்லாவேன்னு கத்திட்டு ஓடி வந்தா மைமூன். பக்கத்துல நின்ன எல்லாரும் ஓடி வர, மொகம் செவக்க அழுதபடி எழுந்திருச்சா கிம்.அக்கம் பக்கம் இருந்த எல்லாரும் வரவும் ஒரே சத்தம்.காலையிலேந்து பதட்டமாருந்த லீ கோவத்துல பொங்கிட்டான். கையில இருந்த காண்டா கம்பக் கொண்டு கங்கானியத் தாக்கப் போக, சலீம் வந்தாரு. மொகம் இறுகிப் போயி இருந்துச்சு. நாளைய திட்டம் கெட்டுப் போகக்கூடாதுன்னு நெனைச்சாரு .

“எல்லாரும் அமைதியா கலைஞ்சு போங்க. போயி வேலயப் பாருங்க. க்கா! என் உளிப் பைய்ய நீங்க வாங்கிக்கங்க. நா போயி எடுத்துக்கிறேன்.’’ கிம்முக்கு தம் பைய்யக் குடுத்தாரு.

“ஹேய்ய்ய்ய்  இவனச் சும்மா விடக் கூடாது. பொம்பிளையாளுகள காலால எத்துறவன கால ஒடிக்கனும். எடுடா காண்டா கம்ப” கோவம் அடங்காம லீ கத்துறான்.

“இவனுங்களுக்கு பாடம் புகட்டனும். போதும் இந்த அடிமை வாழ்க்கை. மத்த ஆளுங்க தோட்டத்துல இருக்கவுக கொஞ்சம் மரியாதையோடு இருக்காக. நம்ம இப்படி மானங்கெட்ட பொழப்பு பொழைக்கக் கூடாது.’’  பழனி ஆங்காரமா கத்த, தொரை பழனிய ஓங்கி ஒரு அரை விட்டான்.

அவ்வளவுதான். சனம் கொந்தளிச்சுருச்சு. சனங்க ஒரே சத்தம். சலீம் கண்ணக் காட்டி ஒவ்வொருதரையா கலைச்சு விடுரார். அவரு நோக்கம் புரிஞ்சவுக கலஞ்சு போக பழனிய புடிச்சு அசாப்பு கொட்டகயில தண்டனைக்கு அடைச்சாரு கங்காணி.

பதறாம வேலை செய்ய நெனைச்சும் இப்படி குளருபடி நடக்குதேன்னு

கிராணி அழகுக்கு மனசுச் சங்கடமாப் போச்சு. எதையும் காட்டாம தோட்டத்துக்குள்ள போயிட்டாரு. அன்னய பொழுது ஒரு பேச்சு இல்ல, சனம் மதியம் சாப்பிடக் கூட கூடி உக்காரல. எல்லாருக்கும் ஒரே கோவமும், ஏலாமையும், ராத்திரி தப்பிக்கிறது சரியா நடக்குமாங்குற நெனைப்புமா வேல ஓடுது..

வேலை முடியவும் சனங்க போக்க கவனிச்ச மாதிரி பாராப் போட்டான் கங்கானி.

கிராணி அழகு மொகம் என்ன சொல்லுது, அவுக சனங்களுக்கு ஆதரவா இருக்கா இல்ல , தனக்கு ஆதரவா இருக்கான்னு நோட்டமிட்டான் வெள்ளைக்கார தொரை.

எதையும் காட்டிக்காம, பால் கொண்டாந்து குடுத்தவுகட்ட நிறுத்து பால் வாங்கி, கணக்கு போட்டு, அசாப்பு கொட்டகைக்கு அனுப்பிட்டு, கங்கானிட்ட சொல்லிட்டு கெளம்புனாரு அழகு.

“அல்கு, என்ன மென் டல்லாருக்க?”

“வேதன தொர. பெண்கள நாங்க மதிக்கிறவுங்க. நீங்க அப்படி ஒதஞ்சது ரொம்ப தப்பு.”

“நா சீனச்சிய தான ஒதஞ்சேன்? நீ யேன் பீல் ஆகுற? ”

“இங்க எல்லாரும் ஒரு குடும்பம் போல இருக்கோம் தொர. இதுல சீனச்சி , தமிழ், மலாய்ன்னு வித்யாசமில்ல.  சரி நா வரென்.”

“அசாப்புல ருக்க அந்த வேலு, சாமிப்பிள்ள ரெண்டு பேரையும் தொறந்து விடு அல்கு. இந்த நாய் பல்னி நாலு நாள் போடு உள்ள. கூப்பிடு சலீம்ம”

சலீம் போயி வேலுவையும், சாமிப்பிள்ளயையும் தொறந்து விட்டுட்டு வந்தாரு.சனங்க எல்லாம் லயம் வீட்டுக்கு போயிருச்சு.

எல்லாம் தயாரா வச்சுட்டு சனங்க நிக்கி.ஆளுக்கு ஒரு பைன்னு சொன்னாலும், ஆளுக்கு ரெண்டு பை சேத்து வச்சுருந்தாக.

கிம் ஒரு கித்தான் பைல கருப்பட்டி, கோதுமை, ரெண்டு மங்குச் சட்டி, ரெண்டு கரண்டி.அவிச்ச மரவள்ளி, எல்லாம் சேத்து வச்சா.

ஆகாயத்துல பூ பூத்துருச்சு. தேய்பிறை பவர்ணை .சின்னக் கீத்தா தேய்ஞ்சு சோகமா ஒளி சிந்துது.

மொதல் பாரா போரான் ஒரு வெள்ளைக்காரன்.. விசில் சத்தம் தேய்ஞ்சு ஓயுது .

அவன் தலை மேட்டுல தெக்கால மரையவும் சனங்க மெதுவா வெளியே வருது.

அழகு அங்க வராரு. சட்டை போட்டு சராய் போட்டு கையில பை வச்சுட்டு, அவரு நிக்க அவரு மகளும் பொண்டாட்டியும் கூட வராக. சலீம் வந்து சேர ஒவ்வொருதரா வெரசா வந்து சேருராக. எல்லார் மொகத்துலயும் ஒரு பயமும் , பரபரப்பும், எல்லாத்தையும் இப்படி விட்டு போறோமென்னு கவலையும் குழப்பமா இருந்துச்சு.

“எல்லாரும் தயாரா? எதுக்கும் தயாரா இருங்க. நம்ம நோக்கம் இவைங்கள எதுத்து சண்டை போடுறது இல்ல. நம்ம தப்பிக்கனும் அம்புட்டுதெங். ’’ அழகு மெதுவாச் சொல்லவும், காமாச்சி அக்கா சொல்லுது.

“எதுன்னாலும் பாப்போம் அழகண்ணே.அடிமையா இங்க வாழ்றத விட சாவது எம்புட்டோ மேல்.நம்ம கைய்யில வேலை இருக்கு. யேதோ , மத்த ஆளுகட்டயாவது கையில கால்ல விழுந்து , வேலை செய்வோம். இனி ஒரு காலும் வெள்ளைக்காரனுக்கு வேலை செய்யப் பிடாது’’ வீரமா சொல்லவும் சனம் ஆமோதிச்சுது.

வண்டி வெளக்குப் போடாம இருட்டுல நிப்பாட்டிட்டு மரத்துக்கு பின்னாடி நின்னாம் சையது.சலீம் போயி வண்டி வந்ததப் பாத்துட்டு, சையது எங்கன்னு பாக்க, மரத்துப் பின்ன நின்னவம் வெளியே எட்டிப் பாக்க, கைய்ய ஒசத்திக் காட்டுனாம். மத்தவுகளுக்கு வரச் சொல்லி சொல்ல, எல்லாரும் பூன போல பதுங்கி அரவமில்லாம வரவும், போயி லோறீல ஏறுனாக.அங்க ரெண்டு சின்ன மரப்படி போட்டு பொம்பிளை ஆளுகள ஏத்தி விட்டாக இளவட்டங்க. பின்னாடி ஆம்பிளையாளுக ஏறவும், மொத்ச் சாமத்துல வண்டி கெளம்புச்சு.

மைமூன் மக அம்புட்டு பேரழகி. ஒருத கண்ணு படாம வச்சுருந்தா .அவ புருசன் செத்தப்ப அது சின்னப் புள்ள. இப்ப வளந்து கொமரியா இருந்துச்சு.மைமூன் துப்பட்டி போட்டு மகள மூடி மூடி வச்சா.பொம்பிளையாளுக எல்லாம் உள் பக்கமாருக்க, ஆம்பிளையாளுக முன் பக்கமா இருந்தாக.

நீ என்னோட இரு, நா ஒன்னோட இருக்கன்னு கொஞ்சம் கொஞ்சமா செட்டு சேந்தாக. அதுவும் எல்லாம் கலந்த ஒரு கூட்டமாவே இருந்துச்சு. காமாச்சி, கிம், சலீம், கிம் மகன் ரெண்டு பேரு, அழகு குடும்பம், மைமூன் குடும்பம், ஒன்னாக் கடைசீல எறங்குறதுன்னு முடிவு செஞ்சாக.

என்னையும் சேத்துக்கங்கப்பா, என்னால நடக்க முடியாது, ரஹமத் பாய் கையெடுத்துக் கும்பிட்டாரு.

“பாய், தைரியமா இருங்க. எங்க கூடவே இருங்க. எல்லா முடியாதவுங்களுமா புக்கிட் ப்ளெம்மிங்ல இறங்குவோம். அங்கேர்ந்து அடுத்த வழி பாப்பாம்.’’

ஒவ்வொருத மனசும் ரொம்பப் பதட்டமா இருந்துச்சு. புலனால உணர முடியாத எல்லாமும் பயமாவெ இருந்துச்சு. பதட்டமும், குளிருமா நெருக்கி அடிச்சு உக்காந்துருந்தாக.

மொதல்ல  தெலுக் இந்தான். லோறீ நிண்ட வொடன ,கொஞ்சம் இளவட்டமா இருக்கவுகள இறக்கி விட்டார் சலீம். ஒவ்வொருத கையிலும் முப்பது வெள்ளி குடுத்தாரு.

ஆச்சரியமா பாத்தாக எல்லாரும். நன்றி பாய் ரொம்ப நன்றின்னு கண் கலங்கி கையெடுத்து சனம் கும்பிட விருட்டுன்னு வண்டி கிளம்பவும் மெல்லிசா அழுகச் சத்தம் கேக்க ஆரம்பிச்சது.தெளியுரதுக்குள்ள மிச்சம் இருந்தவுக எல்லாருக்கும் முப்பது முப்பது வெள்ளியக் குடுத்தார் சலீம் பாய்.

மெதுவா அழகு கேட்டார் “ பாய் ஏது பணம்? ”

“அண்ணே, எங்கிட்ட இருந்த கொஞ்சம் சேமிப்பு, அரசு எனக்கு கை போனப்ப குடுத்த நட்ட ஈடு , கொஞ்ச எஞ் சம்சாரம் வச்சுட்டு போன நகைய வித்துட்டேன். என்னமோ, ஒன்னா இருந்தோம்.இனி பாப்பமோ இல்லையோ? எப்படியோ யாருக்கோ ஒதவட்டும்”. மாஷாஹ் அல்லாஹ்ன்னு சொல்லி ஆகயத்த நோக்கி கை காட்டுனார்.

ஒவ்வொரு குழுவா இறக்கி விட்டு புக்கிட் ரோட்டான்ல மிச்சமிருந்தவுகள இறக்கி விட்டான் சையத். வண்டிலேர்ந்து குதிச்சு கீழே இறங்குனான் .

அவன் கைய்ய புடிச்சு நன்றி சொன்னாரு அழகு.

“அண்ணே , இங்க இப்பிடியே காட்டுக்குள்ள போயிருங்க.  நா கெளம்புறேன்’’

“இந்தாப்பா, இத வச்சுக்க. தோதா கொஞ்சம் வெள்ளிக்கி எண்ணை ஊத்திரு. உசுரப் பணயம் வச்சு எங்கள கொண்டாந்து விட்டுருக்க. பத்திரமா போயிரு அய்யா.. ஒன்னய அந்த ஆண்டவன் காப்பாத்தட்டும்.”

சையது கையில ஒரு அம்பது வெள்ளி குடுத்தாரு சலீம். “என் சகோதரனே… இன்ஷாஹ் அல்லாஹ் சந்திப்போம். அல்லாஹ் ஒனக்கு எப்பவும் நன்னமையக் கொடுக்கட்டும்’”

இருந்த அரசு பணம், சேமிப்பு, எல்லாத்தையும் தன் குடும்பத்துக்காக குடுத்த பெரிய நிம்மதி அவர் மொகத்துல. வண்டி சட்டுன்னு மறையவும் அந்த மூனாஞ் சாம இருட்டுல காட்டுக்குள்ள நடக்க ஆரம்பிச்சாக. விடிய ஏதோ ஒரு கம்போங்க சேந்து அங்க இருந்து அப்படியே போகனும். எங்க போகனும்? அது தெரியல..

கொஞ்சம் நடக்கையிலே காலுல காட்டு முள்ளு குத்துது. ஆன்னு சத்தம் வர ஸ்ஸ்ன்னு குரல அடக்க சலீம் குரல் குடுக்க வலியோட கெந்தி நடக்குறாக .குத்துனது முள்ளா இல்ல வேறயா இருக்கமாக்கான்னு மைமூன் கேக்க , முள்ளாதா இருக்கும். பயப்படாம கடவுள நெனைச்சுக்கிட்டு வா. விடிஞ்சு வெளிச்சத்துல முள்ளப் பாத்து எடுப்பம்ன்னு காமாச்சிக்கா சொல்ல அமைதியா நடக்குறாக. சப்பாத்து வாங்கக்கூட ஒருதருக்கும் நேரமில்ல.

ராவும் பகலும் நடக்க , போற போக்குல இருக்க ஆத்துல குளிச்சு, அங்கங்க கெடைச்சதுகள திண்டு நடந்தவுக நாலாம் நாள் நடக்குறாக. அந்தி சாயவும் மைமூன் வயித்தப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டா. உதிரம் பெருக கையில இருந்த துணிகள வச்சு சமாளிக்க முடியாம தடுமாறிப் போனா.

ரத்த வாடைக்கு துர் மிருகம் ஏதும் வந்துருமோன்னு பயம் வந்துருச்சு எல்லாருக்கும்.இந்தப் பக்கம் எது தனியாருக தோட்டமுன்னு அடையாளம் கான முடியல.

ஒரு எடத்துல கல் உப்ப சுத்தி கொஞ்சம் போட்டுட்டு அங்க பொம்பிளைக கொஞ்சம் படுக்கச் சொன்னாக.

“அக்கா, என்னால முடியல. நீங்கல்லாம் போங்க. நா விடிஞ்சு எப்படியோ பாத்துக்கறேன். எம்மகள மட்டும் கூட்டி போங்க.‘’ வலியும் இயலாமயுமா அழுகுறா.. மககாரிக்கு அம்மாவ தேத்த வழி தெரியாம ஊட சேந்து அழுகுறா.

“அடி.. அழுகய நிப்பாட்டு. வலியும் உதிரமும் பொம்பிளைக்கு என்ன புதுசா?? இது என்ன வராத வியாதியா? ரெண்டு நாளு கொட்டுனா தனால நிக்கிம். இதுக்குப் போயி அழுதுகிட்டு. இரு நடக்க முடியலைன்ன அதுக்கு ஏதும் வழி பாப்பம்.”

ஒரு தோட்டத்துல போயி வேலை கேப்பது போல சலீம் போயி சாரிக்கிராரு. மழை சடசடன்னு புடிக்கிது. கொடயப் புடிச்சுட்டு எல்லாரும் இருந்தாலும், தாக்குப் புடிக்க முடியல.. பக்கத்துல இருக்க காட்டுல ஒதுங்க எடமே இல்லை. எல்லாம் நனைஞ்சு வெடவெடத்து தொடைக்கக் கூட துணி இல்லாம தொப்பலமா இருந்தாக .கொண்டாந்தது எல்லாம் நனைஞ்சுது. ஒரு சிலரு கித்தான் பையில வச்சுருந்தது மட்டும் அப்படியே இருந்துச்சு.

லீ எங்கோ போயி கொஞ்சம் சாக்கு சேகாரம் செஞ்சான். கிம் அதக் கொஞ்சம் கழுத்துப் பகுதிய வட்டமா வெட்டி எடுத்துட்டு, அப்படியே அத ஒரு அங்கி போல அனியக் குடுக்க, அத போட்டுக்கிட்டாக பொம்பிளைக. ஈரத்துண்டை இருக புழிஞ்சு ஒதறி அதக் கட்டுனாக ஆம்பிள்ளைக.

மழை ஓயவும் அங்க தெரிஞ்ச ஒரு குடிசைக்குப் போயி ஒண்ட இடம் கேப்பம்.மைமூனுக்கு ஏதும் செய்ய முடியுமான்னு பாப்பம்ன்னு கிம் சொன்னா.

கூதல் தாங்கல. அந்தக் காட்டுல எங்கோ தூரத்துல செந்நாய்க ஊளையிடுது. அந்தச் சத்தம் ரொம்ப அச்சத்தக் குடுத்துச்சு.அழகு பொண்டாட்டிக்கு கூதல் தாங்காம பல்லு கடிக்க ஒதடு வெட வெடன்னு நடுங்குது. சத்தவடத்துல யாரு யாரப் பாக்குறதுன்னு தெரியாம இருக்கையில காமாச்சியக்கா வலிப்பு வந்து விழுகுறா. கிம் க்கா க்கான்னு கதறித் துடிக்க, ஒரு தரம் வலிப்பு நிக்க அடுத்து அடுத்துன்னு நாலு வலிப்பு வர மூளை வெடிச்சது போல மூக்கு வாய் வழியே ரத்தம் கொட்ட, நினைவு வராமலே அப்படியே உசுரு அடங்குச்சு. அதிர்ந்து போனாக எல்லாரும்..

ஆத்தாடீ…. இந்த மழையில, இந்தக் காட்டுல எப்படி எங்க என்ன செய்யுறது??

சலீம் தான் அமைதியா இருந்தாரு, எல்லாரும் அமைதியா இருங்க. எப்படியும் மழை நிக்கனும். அதுக்கு பிறகு தகனத்துக்கு ஏதொ ஒரு வழி செய்வோம்…

அழுகவும் திராணி இல்லாம அப்படியே ஒறஞ்சு அங்கயே இருந்தாக. கொஞ்சம் எட்ட ஒரு ரூமா தெரிஞ்சுது.வெளில பரஞ்சால ஆளுக பொழங்குறது போல தோட்ட வேல செய்யும் சாமாங்கிய இருந்துச்சு. கிம் மெதுவா அந்தக் குடிச வீட்ட நோக்கிப் போனா.

விடியல. குடிசை வீட்டச் சுத்தி கொஞ்சம் தோட்டம் இருந்துச்சு.கொஞ்சம் தள்ளி வயல். ஓ.. விவசாயி போல. பாப்பொம்ன்னு மெதுவா கதவத் தட்டுனா.

கொஞ்ச நேரம் பதில் இல்ல. திரும்பத் தட்டுனா.ஒரு வேள வீட்டுல யாருமில்லயோ?

“ யாங் அடாலாஹ் பஹாவா? ” ( யார் அது ?)

“சயா மெமெர்லுகன் பண்டுஅன் ( எனக்கு உதவி வேணும் )

பெண் குரல் கேட்டதும் வெளியே எட்டிப் பார்த்தார் ஒரு நடுத்தர வயது மலாய்க்காரர். அவருக்கு பின்னால் ஒரு தமிழ்ப் பெண்.குண்டா ஒரு சீனப் பொம்பிள நிப்பதப் பாத்ததும் வெளியே வந்தாக.

“ யாரும்மா? ”

“அம்மா, எம் பேரு கிம்.எங்க கூட வந்த அம்மா செத்துட்டாங்க வலிப்பு வந்து. கொஞ்சமுதவுங்க ” அழுகயும் விக்கலும்பாதி வார்த்தையுமா சொல்லவும் அவ கை காட்டிய திசையில அரையிருட்டுல மேலும் கொஞ்சம் பெண்கள் ஆண்கள் எல்லாரும் நிக்கிறது தெரிஞ்சுது.

வெரசா எட்டிப் போட்டு அங்க அவுக ரெண்டு பேரும் நடக்க , அந்தாளு பொண்டாட்டியும் கூட போச்சி.

புதுசா ரெண்டு பேர கிம் கூட்டி வரத பாத்து சலீம் முன்னாடி வந்தாரு.வந்தவர்ட்ட சலீம் விபரம் சொல்லச் சொல்ல சந்தெகம் தீர நிதானமா சொன்னாரு.

“எம் பேர் சாலேரஹமட்.இது எம் சம்சாரம்.நாங்க இங்க கொஞ்சம் இடம் வச்சு விவசாயம் செய்யிறோம்.இங்க வெள்ளையங்க தொல்ல இல்ல. மொதல்ல வாங்க எல்லாரும்.அந்தம்மாக்கு கிரியை செய்வோம்ன்னு சொல்லவும், கிம் கால்ல விழுந்தா.

“தெரிமா கசி அபாங் தெரிமா கசி”

பொம்பிளைக எல்லாம் அந்த குடிசைக்குப் போக ஆம்பிளைக அங்க கொட்டகை பக்கம் இருந்த காஞ்ச விறகு கொண்டு கடைசிக் காரியத்த செய்ய ஆயத்தம் செஞ்சாக.

அழகு கொள்ளி வைக்க பேரு ஊரு தெரியாக் காட்டுல காமாச்சியக்கா நாலு நா சொதந்திரமா இருந்துட்டு, தம் இறுதி யாத்திரைய தொடங்குனாக.

அக்கா போட்டுருந்த தோடு, மோதிரம், பையில வச்சு இருந்த பணம் எல்லாம் சலீம்ட்ட குடுத்தாரு அழகு.

“அய்யா, நீங்க வச்சுக்கங்க. ஒங்கட்ட இருக்கட்டும். ஒரு அவசரம்ன்ன ஒதவும்.”

“இல்ல பாய்.நா குடும்பஸ்த்தன். நீங்க ஒபகாரி.ஒங்கட்ட இருக்கட்டும்.’’

அத கையில வாங்குன பாய் ஒடனே அதுல இருந்த தோட எடுத்து சாலே ரஹமட் கையில குடுத்தாரு.

“அடாடா..இது ஒங்கட்ட இருக்கட்டும். நீங்களே வச்சுக்கங்க. உங்க பிரயாணத்துக்கு உதவும்’’

“இங்கேர்ந்து இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு அய்யா கம்போங்.?’’

“இது காஜாஞ் பக்கத்துல வந்துட்டீங்க. இங்கருந்து ஒரு இருவது மைலு போனா எஸ்ட்டேட் செப்பாங். நா ஊர விட்டு இங்க இருக்கன் ’’

“இங்க ஏதும் வேல இருக்குமா?”

“ஆண்டவங் குடுத்த நிலமிருக்கு. சதுப்பு நெலக் காடு தாங் .இருந்தாலும் கையில திறமை இருந்தா வெவசாயம் செய்யலாம்.பக்கத்துல குடுச போட்டுக்குங்க. ஒரு குடும்பமா இருப்பம். இந்தக் காட்டுப் பக்கம் வெள்ளையங்க வர இன்னும் காலமாகும்”

சலீமும் அழகுவும் கலந்து பேச அந்தக் காட்டிலேயே கொஞ்சக் காலம் இருப்பதுன்னு முடிவு செஞ்சு ஆளுக்கொரு குடிசை போடத் தேவயானதுகள காட்டுல தேடத் தொடங்க  கரு மேகம் வெலகி வெயில் மொகங் காட்டுது .

காமாச்சியக்கா ஒடல் திகு திகுன்னு எரியுது. காமாச்சியக்கா கையிலேயே வளந்த லீ சிதைக்கு பக்கத்திலேயே கண்ணீரோட உக்காந்து இருக்கான்..

மைமூனுக்கு மாத்து துணி குடுத்து குடிக்கக் சூடா கஞ்சி வச்சுக் குடுக்க வாடுன உசுரு துளுக்குது..

ஒதவிக்கு கை இல்லாம காட்டுல அல்லாடும் போது ஒதவிக்கி கிடைக்கிற கை சாமி கைதாம்… கிம் சொல்ல, மைமூன் மக தொழுகையத் தொடங்குறா.

சையத் என்ன ஆகியிருப்பானோன்னு கவலை ஒரு பக்கம் இருந்தாலும் சலீம் அமைதியா அடுத்து தப்பிக்க உபாயம் தேடிட்டு இருந்தார்.

இந்த எடம் இன்னும் எம்ம்புட்டு நாளுக்கோ…..

- இன்பா சுப்ரமணியன்

5394_10153313448888587_8437626892111730702_n

***

(விரைவில் யாவரும் பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் நாவலான “வையாசி 19”லிருந்து எடுக்கப்பட்ட பகுதி இது)